ithayamnanaikirathey-18

IN_profile pic

ithayamnanaikirathey-18

இதயம் நனைகிறதே…

அத்தியாயம் – 18

அஜயின் எதிர்பார்ப்புக்கு ஏற்ப, பட்டென்று அண்ணன் என்று அழைக்க முடியாமலும் ஏற்றுக்கொள்ளவும் முடியாமல் மறுப்பாக தலை அசைத்தாள் தியா. அஜய் தோள்களை குலுக்கி கொண்டு, மேலே சென்று படுத்துவிட்டான்.

தியா பொம்மையை கட்டிக்கொண்டு படுத்து கொள்ள, “கிரீச்… கிரீச்…” என்ற எலியின் சத்தமும் தொடர தான் செய்தது. அஜய் மேலே சென்றுவிட்டாலும், அவன் கவனம் தியாவிடமே இருந்தது.

“அம்மா… அம்மா…” முனங்கி கொண்டே படுத்திருக்க, “அப்படி பயமா இருந்தா அம்மா கிட்ட போக வேண்டியது தானே?” என்று கீழே எட்டி பார்த்து எரிந்து விழுந்தான் அஜய் .

“நீ என்கிட்ட வந்து படுக்கலை. ஸோ, மைண்ட் யுவர் வர்ட்ஸ்.” என்று எழுந்து மேலே பார்த்து ஆள் காட்டி விரலை வைத்து அவனை மிரட்டினாள் தியா.

‘மைண்ட் யுவர் வார்டஸா?’ என்று எண்ணி, “போடி.” என்று அஜய் தலை அசைத்து கூறினான்.

“டீ சொல்லாத.” அவள் மேலே எட்டி அவன் தலையில் “நங்…”  என்று அடித்தாள்.

அவன் கீழே குதித்து, அவள் கைகளை இறுக பற்றினான். “நா திருப்பி அடிச்சா நீ தாங்க மாட்ட. ஸோ, சும்மா விடுறேன். நீ அடிச்சதை நான் அம்மா கிட்ட நாளைக்கு மார்னிங் சொல்றேன்” என்று மிரட்டிவிட்டு மேல சென்றான்.

தியா கோபமாக படுத்து கொண்டாள்.

அஜய், தூக்கம் வராமல் புரண்டு படுத்தான். நேரம், செல்ல செல்ல தியாவின், விசும்பல் சத்தம் மட்டுமே கேட்க, அஜய் மனம் தாளாமல் இறங்கி வந்தான்.

தியாவோ மெல்லிய குரலில், “அம்மா, அண்ணா என்னை போடி சொல்லிட்டான். பேட் பாய். ஐ ஹேட் ஹிம்.” என்று மீண்டும் மீண்டும் விசும்ப, அஜயின் காதில், ‘அண்ணா…’ என்ற சொல்லை தவிர வேறு எதுவும் கேட்கவில்லை.

அவன் முகத்தில் புன்னகை. தங்கையின் தலை முடியை வருடி விளையாடினான்.

அவன் பட்டு கன்னத்தை தொட்டு கொஞ்சினான். அண்ணனின் தொடுகையில், தியா முழித்து கொண்டு எழுந்து அமர்ந்தாள். “சாரி சொல்ல வந்தியா?” தன் கோலிக்குண்டு கண்களை உருட்டி புருவம் உயர்த்தினாள்.

இப்பொழுது அஜய்க்கு சிரிப்பு வந்தது. ‘தூக்கத்துல அண்ணன்னு கூப்பிடுவா? முழிச்சா சாரி சொல்ல சொல்லுவாளா?’ மறுப்பாக தலை அசைத்தான் அஜய்.

“உன் கூட படுக்க வந்தேன்.” அஜய் கூற, “நான் தான் உன்னை அண்ணன்னு கூப்பிடலியே?” தியா கேட்க, அவள் தூக்கத்தில் அழைத்ததை எண்ணி  அஜய் புன்னகைத்து கொண்டான்.

“பரவால்லை…” அவன் பெருமிதமாக கூற, “நீ பயப்படுறல்ல? நான் உன் கூடவே படுக்கறேன்.” அஜய் கூற, “குட் அண்ணா” அவள் அவன் தோள் மீது கை போட்டு கொண்டாள்.

அஜய் அவள் மீது கைபோட, தியா அவன் மீது கைபோட இருவரும் உறங்கிவிட்டனர்.

அறையில் குறுக்கும் நெடுக்கும் நடந்து கொண்டிருந்த விஷ்வா, மனம் உந்த குழந்தைகள் அறை நோக்கி நடந்தான். அங்கே அவன் கண்ட காட்சியில் அவன் இதயம் பணிந்தது.

விறுவிறுவென்று அறைக்கு சென்றான். “இதயா… இதயா…” தூங்குவது போல் பாசாங்கு செய்து கொண்டிருப்பவளை எழுப்பினான்.

சலிப்பாக எழுந்த இதயா, “விஷ்வா, உனக்கு என்ன பிரச்சனை? நான் தான் சொல்லிட்டேன்னிலை காதல் இருக்குன்னு?” என்று கடுப்பாக கேட்டாள்.

‘இவ எதுக்கு இப்ப இதை சொல்றா?’ விஷ்வா சிந்திக்க, “லவ் பண்ண எல்லாரும் கல்யாணம் பண்றதில்லை. கல்யாணம் பண்ற எல்லாரும் சேர்ந்து வாழறதில்லை. சேர்ந்து வாழணும்னு கட்டாயமில்லை.” இதயா பொரிந்து தள்ளினாள்.

“நாம்ம, கருத்து ஒத்து வராம பிரிஞ்சிட்டோம். இத்தனை வருஷம் எங்க போன நீ? இப்படி பல வருஷம் கடந்து ஏன் என் தூக்கத்தை கெடுக்குற?” என்று தூக்கமே முக்கியம் போல் கேட்டாள் இதயா.

“தியா…” என்று விஷ்வா பேச அரம்பிக்க, “தியாவுக்கு என்ன?” என்று பதறிக்கொண்டு அவர்கள் அறை நோக்கி ஓடினாள்.

‘நான் முக்கியம் இல்லை. என் பேச்சு முக்கியமில்லை. தியான்னா ஓட வேண்டியது.’ அவன் கறுவிக் கொண்டான்.

அங்கு அவள் கண்ட காட்சியில் அவள் உடல் நடுங்கியது. ‘இது நல்லதுக்கா? இல்லை…’ அவளால் மேலும் சிந்திக்க முடியவில்லை.

மெல்ல நடந்து வந்து மெத்தையில் படுத்தாள். அவள் உடல் இன்னும் நடுங்கி கொண்டு தான் இருந்தது.

அவள் கைகளை தொட்டு சமாதானம் செய்ய முயல மெத்தையில் சரேலென்று விலகி சுவரோடு சாய்ந்து அமர்ந்தாள் இதயா.

“இதயா” அவன் குரலில் வலி, “நான் தோத்துட்டேன் விஷ்வா. முழுசா தோத்துட்டேன். உனக்காக என் வாழ்க்கையை தொலைச்சேன். அஜய்க்காக என் வாழ்க்கையை தொலைச்சேன். இப்ப தியாவுக்காக என் சுயமரியாதையை இழந்து நான் உன் கூட வர போறேன்.” அவள் குரலில் அவன் வலியை விட அதீத வலி இருந்தது.

“நீ நினைச்சதை வந்த கொஞ்ச நாளில் சாதிச்சிகிட்ட தானே?” அவள் பிதற்ற, “நான் உனக்காக வந்தேன் இதயா” அவன் ஏக்கமாக கூறினான்.

“இத்தனை வருஷம் கழிச்சா?” அவள் நக்கலாக கேட்க, “மூணு வருஷமா விசா கிடைக்கல இதயா. மத்தவங்களுக்கு விசாவில் இருக்கிற கஷ்டம் புரியாது. உனக்குமா?” அவன் குரல் தழுதழுத்தது.

“முதல், நாலு வருஷம் செத்தா கிடந்த?” அவள் காட்டமாக கேட்டாள்.  “அதுல, முதல் வருஷம் சேர்த்தி கிடையாது. நான் உன்னை பார்க்க வந்தேன்.” அவன்  வருத்தத்தோடு தன் கோபத்தையும், தன் தவறுகளையும் கழித்து கொண்டிருந்தான்.

“நீ பேசின லட்சணத்தை நான் சொல்லட்டுமா?” அவள் கேட்க, “நீ நடந்துக்கிட்ட லட்சணத்தை நானும் சொல்லுவேன்.” அவனும் நக்கலாகவே கூறினான்.

“அதுக்கு தான் மூணு வருஷமா என்னை தேடி வரலியா?” அவளும் நக்கலாகவே கேட்டு, “மூணு வருசத்துக்கு அப்புறம் என்ன திடீர் அக்கறை? அப்புறம் மூணு வருஷம் நொண்டி சாக்கு கதை?” அவள் உதட்டை சுழித்து கேட்டுவிட்டு, இடையில் தலையணையை அடுக்கிவிட்டு அவன் பதிலை எதிர்பார்க்காமல் படுத்துவிட்டாள்.

தலையணைக்கு இடையில் இருந்த இடைவெளியில் அவன் தெரிய, ‘நினைக்க கூடாது… நினைக்க கூடாது…’ என்று அவள் உருப்போட்டு கொண்டாலும், ‘காதல் சுரங்கம்… ரொமான்டிக் டன்னல்…’ என்ற வார்த்தை அவள் காதில் மீண்டும் மீண்டும் ஒலித்தது.

அவனும் அதே மெத்தையில் படுத்துக் கொண்டான். அவர்களுக்கு இடையில் பல தலையணைகள் பாலம் போல். தடுப்பு சுவர் போல் என்றும் கூறலாம். அந்த தலையணைகள் இடையில் சின்ன சின்ன ஓட்டைகள். ‘காதல் சுரங்கம்… ரொமான்டிக் டன்னல்…’ அவன் காதில் இனிய கானமாக ஒலித்தது அந்த வார்தைகள்.

‘காதல் சுரங்கம்… ரொமான்டிக் டன்னல்…’ இந்த வார்த்தைகள் அவனை கடந்த காலத்திற்கு அழைத்து சென்றது. அவனும் விரும்பியே பயணித்தான் அவன் நினைவலைகளோடு.

அன்று தான் அவர்களின் முதல் சண்டை. இதயா நீலவான நிறத்தில் நைட் கவுன் அணிந்தபடி வாசல் அருகே  குறுக்கும் நெடுக்குமாக நடந்து கொண்டிருந்தாள். மணி இரவு பன்னிரெண்டடை தாண்டி இருந்தது.

மழை ச்சோவென்று கொட்டி கொண்டிருந்தது. விஷ்வா மெதுவாக சாவி கொண்டு கதவை திறக்க எத்தனிக்க, கதவு தானாக திறந்து கொண்டது.

“ஒய் இதயா… இந்த மாமனுக்காக நீ இன்னும் தூங்கலியா? நான் உன்னை தூங்க சொன்னேன் தானே?” விஷ்வாவின் குரலில் கேலி வழிந்து ஓடியது.

சொட்டச் சொட்ட நனைதிருந்த அவனை அவள் முறைத்து கொண்டு உள்ளே செல்ல, அவன் அவளை புன்னகையோடு பின்னே தொடர்ந்தான்.

“அம்மா தூங்கிட்டாங்களா?” அவன் வினவ,  “பாவம் அத்தை இவ்வளவு நேரம் உங்களுக்காக முழிச்சிருந்துட்டு நான் சொன்னேன்னு,  கொஞ்சம் முன்னாடி தான் தூங்க போனாங்க.” அவள் குரல் சிடுசிடுத்தது.

“திட்டு விழுந்துச்சா?” என்று விஷ்வா அவள் தோள் தொட்டு திருப்ப, “என்னை தொடாதீங்க.” அவள் முறுக்கி கொள்ள, அவன் தலை சிலுப்பினான்.

அவன் தலை சிலுப்பலில் நீர் முத்துக்கள் அவள் தேகத்திற்கு இடம் மாற, அவன் அந்த நீர் முத்துக்களை, “உப்…” என ஊதினான்.

நீரின் குளிரும், அவன் சுவாசக்காற்றின் வெப்பமும் அவளை ஏதேதோ செய்ய, “என்னை தொடாதன்னு சொன்னேன்.” அவள் சிலுப்பிக்கொண்டாள்.

“என்னை பார். என் அழகை பார்ன்னு ஓர் டிரஸ் போட்டுட்டு என்னை தொடாதன்னு சொன்னா என்னடி அர்த்தம்.” அவன் கைகள் எல்லை மீற, “முதலில் குளிச்சிட்டு வாங்க. இப்படியே இருந்தா உடம்புக்கு ஒத்துக்காது.” அவள் சிடுசிடுத்தாள்.

“குளிச்சிட்டு வந்து தொடலாமா?” அவன் அதுவே தீவிரம் என்பது போல் சந்தேகம் கேட்க, “பேச்சை மாத்தாதீங்க.” அவள் முறுக்கி கொண்டு சமையலறை நோக்கி சென்றாள்.

அவன் குளித்துவிட்டு வர, அவள் அவனுக்கு பழங்களும், பாலும் கொடுத்தாள்.

“நீங்க என்ன சாப்டீங்க?” அவன் கேட்க, “சப்பாத்தி, டால்” அவள் கூற, “எனக்கும் அதையே வைக்க வேண்டியது தானே?” அவன் தன் தலையை துவட்டி கொண்டே கேட்டான்.

“ராத்திரி நேரம் இதுவே குடுக்க கூடாது. நான் தான் பாவம் பார்த்து கொடுக்கறேன். அத்தையும், மாமாவும் உங்களுக்கு செம்ம திட்டு. அத்தை பாவம். ரொம்ப பயந்துட்டாங்க” அவள் பேசிக்கொண்டே போக, அவன் “ம்…” கொட்டினான்.

“சரி வா படுக்கலாம்.” அவன் சிறிது நேரம் கழித்து அழைக்க, “நீ போ. நான் வரலை” இதயா முறுக்கி கொண்டாள்.

அவன் அவளை அலேக்காக தூக்கினான். “இப்படி எல்லாம் என்கிட்ட கோபப்பட முடியாது. இதயா என்னைக்கும் விஷ்வா கைக்குள்ள தான்” அவன் சிரிக்க, அவள் பிடிமானத்திற்கு அவன் தோள்களில் கைகளை மாலையாக கோர்த்துக் கொண்டாள் இதயா.

 அவள் கைகளில் நீர் துளிகள் விழ,  “விஷ்வா, நீ சரியா தலை துவட்டவே இல்லை” அவள் கடிந்து கொள்ள, தன் பரந்த மார்பில் இருந்த நீல நிற துவலையை காட்டியபடி, ‘நீ துவட்டு’ என்பது போல அவன் ஆணையிட்டான்.

‘இப்படியே வா?’ அவள் கண்கள் சிணுங்க, கன்னங்களோ செம்மையுற்றது.

சிவந்த கன்னங்களை ரசித்தபடி, ‘ஆம்…’ அவன் தலை அசைக்க, அங்கு வார்த்தைகளை தாண்டிய உணர்வுகள் சம்பாஷித்து கொண்டன.

‘முடியாது…’ அவள் தன் தலையை இருபுறமும் அசைத்து மறுக்க, ‘இறக்கி விடமாட்டேன்.’ அவனும் மிரட்டினான்.

அவள் துவட்ட… அவன் ரசிக்க… அவள் சிவக்க… அவன் சிரிக்க…

“இளைய நிலா பொழிகிறதே

இதயம் வரை நனைகிறதே…”

 

அவன் அவள் முகம் பார்த்து பாட, அவள் தன் கண்களை இறுக மூடிக்கொண்டாள்.

 

“முகிலெடுத்து முகம் துடைத்து விடியும் வரும் நடை பழகும்

வான வீதியில் மேக ஊர்வலம்…”

 

 அவன் தன் முகத்தின் நீர் முத்துக்களை அவள் முகம் நோக்கி நீட்ட, அவள் தன் விரல்கள் கொண்டு நீர் முத்துக்களை மறைய செய்ய, அவள் கண்களோ பல உணர்வுகளை வெளிப்படுத்தியது.

“காணும்போதிலே ஆறுதல் தரும்

பருவ மகள் விழிகளிலே கனவு வரும்…”

 

அவன் அவள் விழிகளின் உணர்வுகளை உள்வாங்கி கொண்டே உல்லாசமாக பாடினான்.

இனிமையாக கடந்து நிமிடங்களுக்கு பின்னே அவன் அவளை இறக்கிவிட்டான்.

“நான் இன்னும் கோபமா தான் இருக்கேன்” அவள் விலக எத்தனிக்க, அவன் அவளை அவன் பக்கம் இழுத்து, “ஹைலி ரொமான்டிக்” என்று கூறி கலகலவென்று சிரித்தான்.

“தொம்… தொம்…” என்று நடந்து, அவர்களுக்கு இடையில் தலையணையை வைத்துவிட்டு படுத்து கொண்டாள் இதயா.

“இதயா இது என்ன?” அவன் பதறினான்.

“ஹ்ம்ம்…  பாலம்… இங்கிலீஷில் சொன்னா பிரிட்ஜ். நான் உன் மேல கோபமா இருக்கேன். நமக்கு சண்டை” அவள் கறாராக கூறினாள்.

“அப்ப, கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி நடந்தது?” அவள் முக சிவப்பை அவன் நினைவு கூற, “அப்பவும் கோபம் தான்.” அவள் உறுதியாக கூறிக்கொண்டு படுத்துவிட்டாள்.

அந்த தலையணைகளுக்கு இடையில் சின்ன சின்ன ஓட்டைகள்.

அவன், அவளை அந்த ஓட்டைகள் வழியாக பார்க்க, அவளும் அவனை பார்த்துக் கொண்டுதான் இருந்தாள்.

‘என்ன பார்வை?’ என்ற கேள்வியோடு.

“இதயா, இந்த ஓட்டையை பார்த்தா எனக்கு டன்னல் மாதிரி இருக்கு. அதுவும் ரொமான்டிக் டன்னல். காதல் சுரங்கம் மாதிரி இருக்கு” அவன் கூற, “ம்… இருக்கும்… இருக்கும்…” அவள் கடுப்பாகவே கூறினாள்.

“நீ தலையணை வைத்தாலும், இந்த சுரங்கம் உன் காதல் சுவாசத்தை தான் சொல்லுது. உன் பார்வை அன்பை மட்டும் தான் வெளிப்படுத்து. இது பாலம் இல்லை. காதல் சுரங்கம், ரொமான்டிக் டன்னல்” அவன் கூற, அவளுள் புன்னகையே எட்டி பார்த்தது.

ஆனால், மறைத்து கொண்டாள் அவன் அறியாதவாறு.

அவன் எழுந்து அமர்ந்து கொண்டு கெஞ்சலாக, கொஞ்சலாக தலையணைகளை விலக்க சொல்லி அவளை மிரட்டினான். ‘இதை அவன் தூக்கி போட முடியாதா? இருந்தாலும், என் சொல்லுக்காக காத்திருப்பான் என் விஷ்வா.’ பெருமிதத்தோடு தலையணைகளை விலக்கினாள்.

அவள் தலையணைகளை விலக்கிய மறுநிமிடம், அணைப்பு அவனதாயிற்று.

“என்ன இதயா கோபம்?” அவன் அவள் தலை கோதி கேட்க, “நைட் ஷோ பார்த்துட்டு பைக்ல வராதன்னு சொன்னா நீ கேட்கறதில்லை விஷ்வா. இன்னைக்கு, பயங்கர இடி மழை வேற. நான் பயந்துட்டேன். நீ வர வரைக்கும் எனக்கு படபடப்பாவே இருந்துச்சு.” அவள் அவன் மார்பில் சாய்ந்து படுத்து கொண்டு விசும்பினாள்.

இன்றும் அதே விசும்பல் சத்தம். அதே போல் தலையணைகள். அதே போல் சுரங்கம். டன்னல்.

விஷ்வா திரும்பி படுத்தான். இதயாவின் விசும்பல் சத்தம் அவன் இதயத்தை தொட்டது.

‘இன்றும், நான் அவளை தூக்கினேன். ஆனால், என் இதயா என் கைகளுக்குள் இல்லை.’ அவன் இதயம் அரற்றியது.

இதயா திரும்பி படுத்தாள். தலையணைக்கு இடையில் இருக்கும் சின்ன சின்ன ஓட்டைகள் அவள் கண்ணில் பட, ‘இவை காதல் சுரங்கமா? ஐஸ் இட் எ ரொமான்டிக் டன்னல்?’ அவள் மனதில் ஏக்கம் நிறைந்த கேள்விகள்.

‘அந்த முதல் சண்டைக்கு பின் எத்தனை சண்டைகள்? இது போல் எத்தனை தலையணைகளை தகர்த்து எரிந்திருக்கிறேன்? ஆனால், இன்று என்னால் முன்பு போல் இதயாவை சமாதானம் செய்ய முடியுமா? அவள் என் காதலில் உருகி கரைவாளா?’ அவன் மனதில் ஏக்கம் நிறைந்த கேள்விகள்.

‘என் விஷ்வா… என் விஷ்வா…’ பழைய நினைவுகள் அவளையும் சூழ்ந்ததன் அடையாளமாக, அவள் மனம் அரற்றியது.

‘என்னால் முன்பு போல் விஷ்வாவின் அன்பில் கரைந்து உருக முடியுமா?’ அந்த இரவில், தனிமையில், அவன் அருகாமையில் அவள் உள்ளம் ஏங்கி துடித்தது.

இத்தனை வருட பிரிவை அவள் அறிவு சுட்டி காட்டியது.

“இளைய நிலா பொழிகிறதே…

இதயம் வரை நனைகிறதே…”  அவன் குரல் கரகரப்போடு ஒலித்தது.

அவள் இதயம் நனைந்தது. ‘ஐயோ, அவன் காதலில் கரைந்து உருகி விடுவேனோ’ என்று அவள் மனம் பதறி துடித்தது.

“முகிலினங்கள் அலைகிறதே என் முகவரிகள் தொலைந்தனவோ

முகவரிகள் தவறியதால் அழுதிடுமோ  அது என் மனமோ…  அது மழையோ…” 

 

அவன் குரல் தழும்பி அழுதது.

“தப்பா பாடாத விஷ்வா.” அவள் கர்ஜித்தாள்.

“இளைய நிலா பொழிகிறதே…

இதயம் வரை நனைகிறதே…” 

 

அவன் அழுத்தமாக பாடினான்.

“பாடாதன்னு சொல்றேன்ல.” அவள் எழுந்து அமர, “நான் தப்பா பாடுறது பிரச்சனையா? இல்லை நான் பாடுறதே பிரச்சனையா?” அவன் கேட்க, “நீயே ஒரு பிரச்சனை” அவள் கடுப்படித்தாள்.

அவன் எழுந்து அமர்ந்தான். இடையில் தடுப்பு சுவர் போல் தலையணைகள். அதை விலக்க சொல்ல அவனுக்கு தைரியமில்லை. ஆனால், அவன் கேட்க நினைப்பதையும் கேட்காமலும் இருக்க முடியவில்லை.

“நான் நல்லவன் இல்லையா இதயா? நான் ஒரு நல்ல கணவன் இல்லையா இதயா?” அவன் தவிப்போடு கேட்டான்.

அவன் மேல் அவள் கொண்ட அன்பு அவனை எடுத்தெறிந்து பேச அனுமதிக்கவில்லை. அதே நேரம் மனைவியாய் அவள் பட்ட வேதனைகள் அவளை இசைந்து போகவும்விடவில்லை.

‘மனைவி என்றால்  மதிகெட்டு, மரியாதை இழந்து வாழ வேண்டியவளா?’ என்ற எண்ணங்கள் தோன்ற, காதலை இதயத்தோடு அழுத்தி, அன்பை மனதோடு செலுத்தி, உணர்வுகளை உள்ளத்தோடு நிறுத்தி அவள் அதரங்கள் உண்மையை கூறின.

அவள் கூறிய பதிலில் அவன் இதயம் நனைத்தது. அவன் கண்கள் கசிந்தது. ஒரு ஓரத்தில் புன்னகையும் எட்டி பார்த்தது.

அவள் இதயம் வலித்தது. அவள் கண்களின் கண்ணீரை அவன் அறியாவண்ணம் மறைக்க குப்புற படுத்து கொண்டாள் இதயா. 

இதயம் நனையும்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!