ithayamnanaikirathey-20
ithayamnanaikirathey-20
இதயம் நனைகிறதே…
அத்தியாயம் – 20
தியா, குட்டி புயலென செயல்பட தன் மகளின் செயலில் மெய்மறந்து நின்றான் விஷ்வா.
வகுப்பு முடிந்ததும் தன் மகளின் முன்னே சென்று அமர்ந்தான். தியாவை இறுக்கி அணைக்க உந்திய கைகளை அவளை மெலிதாக இழுத்து அவன் பக்கம் சரித்து கொள்வதோடு நிறுத்திக்கொண்டான். மனைவியிடம் காட்டும் உரிமையை கூட, மகள் மீது காட்ட அவனுக்கு பயம்.
“இது கராத்தேவா?” என்று எதுவும் அறியாதவன் போல் கேட்டான்.
“இல்ல, இது டெக்வாண்டோ” என்று அவனிடமிருந்து விலகி நின்று கொண்டாள்.
“ஓ… என்ன வித்தியாசம்?” அவன் பேச்சை வளர்க்க, “இது கொரியன் மார்ஷியல் ஆர்ட்ஸ்” என்றாள்.
“எனக்கு கொரியன் ட்ராமா தானே தெரியும்” அவன் கூற, “எனக்கு அதெல்லாம் தெரியாது.” மிடுக்காகவே கூறினாள் தியா.
தந்தை மகளின் பேச்சை தாயும் மகனும் வேடிக்கை பார்த்து கொண்டிருந்தனர். பேச்சு சற்று நேரம் நீடித்து கொண்டிருந்தது.
“எனக்கு கராத்தே தெரியும். வா, நீயும் நானும் சண்டை போடலாம்” என்று தன் மகளின் பூ போன்ற தேகம் தீண்ட ஆசைப்பட்டு விளையாட்டாகவே அழைத்தான் விஷ்வா.
“விஷ்வா, இது என்ன முட்டாள்தனமான விளையாட்டு?” இடைபுகுந்தாள் இதயா.
“வி ஷால் ஃபைட்” தியா கைகளை மடக்கி கொண்டு தந்தை முன் தயாராக நின்றாள்.
அஜய் மெளனமாக வேடிக்கை மட்டுமே பார்த்துக் கொண்டிருக்க, “இதயா நீ ஒதுங்கு” விஷ்வா ஆணையிட அவள் இவர்களை முறைத்து கொண்டே ஒதுங்கி கொண்டாள்.
இருவரும் மோதிக்கொள்ள தயாராக, விஷ்வா மோதுவது போல் பாசாங்கு செய்ய, தியா பிஞ்சு கரங்களால் விஷ்வாவிடம் மோதி கொண்டிருந்தாள்.
சிலவற்றை தடுத்து கொண்டும், சிலவற்றை வாங்கி கொண்டும் விஷ்வா தியாவிடம் பேச்சை வளர்த்துக் கொண்டிருந்தான்.
“உனக்கு இவ்வளவு டெக்வாண்டோ தெரியுதே? அப்ப ஏன் எலியை பார்த்து பயப்படுற ?” விஷ்வா வம்பிழுத்தான்.
“எலிக்கு டெக்வாண்டோ தெரியாதே. அது தான்” அசட்டையாக தோள்களை குலுக்கினாள் தியா.
அவள் பதிலில் மற்ற மூவரும் குலுங்கி குலுங்கி சிரித்தனர்.
“இதை எதுக்கு கத்துக்குற?” அவன் சாதரணமாத்தான் கேட்டான். “நீங்க, இனி என் அம்மாவை தனியா விட்டுட்டு போனா, என் அண்ணாவை கூட்டிட்டு போனா இப்படி பன்ச் பண்ண தான்.” என்று கூறிக்கொண்டு அவன் நெஞ்சின் பக்கம் ஒரு குத்து குத்தினாள் தியா.
தியாவின் கைகள் அவனை வருடுவது போல் தான் இருந்தது. ஆனால், அவள் வார்த்தைகள் கூர்வாள் கொண்டு தாக்கியது.
‘விஷ்வா வருத்தப்படுவானோ’ என்று இதயா பதற, விஷ்வா ஸ்தம்பித்து நின்றுவிட்டான்.
“தி….” என்று தன் மகளை இதயா கோபமாக அழைக்க எத்தனிக்க, “இதயா” அவன் தன் அழுத்தமான அழைப்பில் தன் மனையாளை அடக்கி விட்டான்.
‘நான் ஒரு குருவி கூட்டை என் அவசர புத்தியால் சிதைத்து விட்டேன்.’ அவன் கண்கள் கலங்கியது.
“ம்… ஃபைட். இல்லைனா நீங்க தோத்து போய்ட்டிங்க.” தியா விஷ்வாவிடம் கூற, “உண்மை தான் தியா. நான் தோத்து போய்ட்டேன்” தளர்வோடு சோபாவில் சாய்ந்து கொண்டான் விஷ்வா.
“தட்’ஸ் ஒகே. நான் உங்களுக்கு சொல்லி தரேன்.” தியா அவன் முன் இடுப்பில் கைவைத்து கூற, ‘நான் இங்க வந்த நாளிலிருந்து நீ எனக்கு நிறைய சொல்லி தர’ மனதில் எண்ணியபடி, “ஒகே தியா டீல்.” என்று கூறி புன்னகைத்தான் விஷ்வா.
நாட்கள் அதன் போக்கில் வீட்டுக்குள்ளே நகர , அன்று இரவு பன்னிரண்டு மணி.
“டொம்” என்று பலூன் வெடிக்கும் சத்தம். தியா, அஜய் இருவரும் ஹாலுக்கு வர அங்கு மெழுகுவர்த்திகள் எரிந்தன. ஆங்காங்கே ‘ஹாப்பி பர்த்டே’ என்ற வாசகத்தோடு ஹீலியம் பலூன். ரேடியம் வெளிச்சத்தில் சில நட்சத்திரங்கள். அந்த இடமே வண்ணமயமாக காட்சி அளித்தது.
அஜயின் முன் அவள் செய்த ஸ்பைடர்மேன் கேக்கை நீட்டி “ஹாப்பி பர்த்டே அஜய்” இதயா கூற, அஜயின் கண்களில் அத்தனை சந்தோசம்.
“நீங்களே பண்ணிங்களா?”அஜய் கேட்க, இதயா ‘ஆம்…’ என்பது போல் தலையாட்டினாள்.
“ஹாப்பி பர்த்டே அண்ணா. லவ் யு சோ மச். பர்த்டே கார்டு நீ தூங்கின பிறகு நானே பண்ணினேன்” தியா நீட்ட, “தேங்க்ஸ் தியா” தன் தங்கையை கட்டிக் கொண்டே கூறினான் அஜய்.
“கொரோனா, அதுனால எந்த கிஃப்ட்டும் ஆர்டர் பண்ணலை அஜய்” இதயா மன்னிப்பு கோரும் குரலில் கூற, “அது தான் இவ்வளவு சூப்பரா கேக் செஞ்சிருக்கீங்களே” அஜய் கூற, இதயாவின் முகத்தில் ஒரு புன்னகை.
“அப்புறம் பேசுங்க. கேக் கட் பண்ணி சாப்பிடலாம்” காரியத்தில் கண்ணாக நின்றாள் தியா.
விஷ்வா மூவரையும் பார்த்து புன்னகைத்தான். அஜய் கேக் வெட்டி எடுத்து முதல் துண்டை தங்கைக்கு ஊட்டினான். அடுத்து துண்டை எடுத்து அவன் தர்மசங்கடமாக விழிக்க, “அப்பாக்கு கொடு” இதயா கூற, தந்தையிடம் நீட்டினான் அஜய்.
“அப்பா உனக்கு எந்த கிஃப்ட்டும் வாங்கலை டா” கேக்கை அவன் கையிலிருந்து வாங்கி மகனுக்கு ஊட்டியபடி விஷ்வா கூற, “இந்த பர்த்டேக்கு அம்மா, தியாவை குடுத்துருக்கீங்களே அப்பா” அஜய் பட்டென்று கூறினான். விஷ்வா இதயாவை அர்த்தம் பொதிந்த பார்வை பார்த்தான்.
பல வருடங்களுக்கு பின் மகனின் பிறந்தநாளுக்கு அவனுடன் இருக்கிறள். இதயா சற்று மௌன நிலையில் இருந்தாள்.
தன் தாயிடம் கேக் துண்டை நீட்டினான் அஜய். இதயா, கண்ணீர் மல்க தன் வாயை திறக்க, கேக்கை ஊட்டிவிட்டுவிட்டு, “தேங்க யு ஸோ மச் அம்மா.” என்று அழுத்தமாக கூறிக்கொண்டு தன் தாயை கட்டிக் கொண்டான் அஜய்.
‘அம்மா…’ அவ்வப்பொழுது அஜய் மென்மையாக அழைப்பான் தான். ஆனால், இத்தனை அழுத்தமாக, உரிமையாக அவன் அழைத்தது இதயாவை மெய் சிலிர்க்க செய்தது.
மகன் தன்னை நெருங்குவதற்காக காத்திருந்த இதயா, மகனின் நெருக்கத்தில், “அஜய்….” அவனை தன்னோடு அணைத்து தலை கோதினாள்.
அவனை முதல் முறையாக குழந்தையாக தன் மார்போடு அணைத்த பொழுது ஏற்பட்ட பரவசம், இன்றும் அவனை அணைக்கையில் அவள் உடலில் மின்சாரம் போல் பாய்ந்தது.
இதயாவின் உடல் நடுங்க, “அம்மா…” இப்பொழுது பாசத்தோடு, உரிமையோடு தன் தாயை அஜய் தழுவ, “அஜய்…” அவளுக்கு வார்த்தைகள் வரவில்லை. கண்ணீரே பெருகியது.
‘அம்மா…’ பல வருடங்களுக்கு முன், இது போல் அவன் கடைசியாக அழைத்தது நினைவு வர, அவள் கண்களில் நீர் முத்துக்கள் அவள் கன்னம் தொட்டு கழுத்தை தீண்டி அவள் மனதையும் பாரமாய் அழுத்தியது. கண்ணீர் மட்டுமல்ல. அவள் நினைவலைகளும். அவள் வாழ்வை திசைமாற்றிய நினைவலைகள்.
“இதயா” விஷ்வாவின் அழைப்பில் மெல்லிய இருளில் தன் பளபளத்த கண்களை மறைத்து கொண்டு குழந்தைகளுக்கு தட்டில் கேக் வைத்து கொடுத்தாள்.
“அம்மா கேக் சூப்பர்” தியா, அஜய் இருவரும் கூற, “இது என்னடா சூப்பர். உங்க அம்மா மைசூர் பாக் செஞ்சான்னு வை. அப்படியே அது கரஞ்சி போகும். கடை மைசூர் பாக் தோத்து போகும்” விஷ்வா இதயாவின் சூழ்நிலை புரிந்து அவளை சமன் செய்ய விரும்பினான்.
‘மைசூர் பாக்’ அந்த நாளை நினைவுபடுத்த, “படுப்போமா?” இதயா கேட்க, “எல்லாரும் பிரஷ் பண்ணிட்டு படுங்க. கேக் சாப்பிட்டுருக்கோம்” தியா பெரிய மனுஷி போல் கூற, “வாண்டு…” விஷ்வா முணுமுணுத்துக் கொண்டே அவர்களை தொடர்ந்தான்.
படுக்கையறைக்குள் சென்றதும், “நாளைக்கி மைசூர் பாக் செய்யறீயா இதயா?” அவனும் பழைய நினைவுகளோடு கேட்க, “நான் அன்னைக்கு அப்புறம் மைசூர் பாக் செய்றதே இல்லை விஷ்வா” ஏக்கத்தோடு கூறினாள் இதயா.
“பழசு வேண்டாமே இதயா” அவன் கூற, “வேண்டாமுன்னு தான் நானும் நினைக்குறேன்” அவள் வருத்தத்தோடு கூறிக்கொண்டே படுத்தாள்.
‘அம்மா…’ என்ற அஜயின் அழைப்பு அவள் காதில் இனிய நாதமாக ஒலித்தாலும், அவள் இழந்த அம்மா என்ற இத்தனை வருட அழைப்புகளும் அவளை வாட்டியது.
‘மைசூர் பாக்….’ அந்த நாளில் தானே அதை கடைசியாக செய்தாள். எத்தனை இனிமையாக ஆரம்பித்த நாள். அவள் கண்களில் கண்ணீர். அவள் எண்ணவோட்டம் அவள் வாழ்வு சரிய ஆரம்பித்த நாளை நோக்கி பயணித்தது.
தடுக்க நினைத்தும் அவள் எண்ணமும் நிற்கவில்லை. அவள் கண்ணீரும் கட்டுப்படவில்லை. கடந்த காலத்தை நோக்கி பயனித்தது.
“போகிறேன் நான் போகிறேன்
உலகம் சதுரம் என்றே இருந்தேன்
சுவர்கள் என்று பின்பே அறிந்தேன்
உலகின் விளிம்பை உரசும் பயணம் போகிறேன்
என் பலம் மூடிய இருளைத் தேடி எரிப்பவளாகிறேன்
ஓர் சூரியன் ஜோதியில் தீயை வளர்த்திட போகிறேன்
போகிறேன் நான் போகிறேன்”
பாடலை முணுமுணுத்து கொண்டே அவள் மைசூர் பாக் செய்து முடித்திருந்தாள்.
‘விஷ்வாவுக்கு இப்படி செஞ்சா தான் பிடிக்கும்.’ மைசூர் பாக் வில்லைகளை வெட்டி எடுத்து, வைத்து கொண்டே அவள் முகத்தில் புன்னகை.
“என்ன இதயா ரொம்ப சந்தோஷமா இருக்க?” செல்வநாயகி கேட்க, ‘அத்தை கிட்ட சொல்லுவோமா?’ அவள் எண்ண, ‘இல்லை முதலில் விஷ்வா கிட்ட தான் சொல்லணும்.’
“ஆமா, அத்தை. இந்தாங்க மைசூர் பாக் எடுத்துக்கோங்க.” அவள் நீட்டினாள்.
“இதை வாயில் போட்டுட்டா, வேற பேச்சு ஏது? மாமாவுக்கும் கொடு” அவர் கூற, “ம்மா… எனக்கு…” கைகளை நீட்டினான் இரண்டு வயது அஜய்.
“உனக்கு இல்லாமலா…” அவன் நீட்ட, அஜய்யும் மைசூர் பாக்கை சப்பு கொட்டி சாப்பிட ஆரம்பித்திருந்தான்.
அப்பொழுது விஷ்வா அலுவலகத்திலிருந்து உள்ளே நுழைய, தன் மனைவியை பார்த்து புருவம் உயர்த்த, இதயா கண்சிமிட்டினாள்.
‘அறைக்கு வா…’ அவன் கண்களால் செய்கை செய்தான்.
இதயா, அஜய்யை கவனித்து விட்டே அறைக்குள் சென்றாள். அதற்குள் விஷ்வா குளித்து வெள்ளை பனியன், ஷார்ட்ஸ்க்கு மாறி இருந்தான்.
“என்ன விஷயம்? மேடம் ரொம்ப சந்தோஷமா இருக்கீங்க?” என்று விஷ்வா கேட்க, “நீயே கண்டுபிடி…” அவன் தோளில் கைகளை மாலையாக்கி கொண்டு தொங்கினாள் இதயா.
அவன் கைகள் அவள் இடையை சுற்றி வளைத்தது. “என்ன விஷயம்?” அவன் அவளிடம் இழைந்தபடி கேட்க, “நீ கண்டுபிடி, மூணு ச்சான்ஸ் தான் உனக்கு” அவள் சட்டம் பேசினாள்.
“உன் ப்ராஜெக்ட் டீமில் உனக்கு ப்ரோமோஷன்” அவன் கூற, அவள் அவன் கன்னத்தில் இதழ் பதிக்க, “கண்டுபிடிச்சிட்டேன்னா?” இல்லாத காலரை அவன் உயர்த்தினான்.
“தப்பு…” இதயா நாக்கை துருத்தினாள். “இதயா ரொம்ப சந்தோஷமா இருக்க போல? தப்பா சொன்னா கூட பரிசு கிடைக்குதே?” அவன் கண் சிமிட்டினான்.
அவள் முகத்தில் வெட்க புன்னகை.
“ஆனால், நான் சரியா சொல்லுவேன் இந்த தடவை.” இதயாவை ஒரு சுற்று சுற்றி தன் மேல் சாய்த்து கொண்டு, “அஜய்க்கு தம்பியோ, தங்கையோ ரெடி” அவன் அவள் கழுத்தில் முகம் புதைத்து காதோரமாக கிசுகிசுத்தான்.
அவள் முன்னே திரும்பி, அவன் தலையில் தட்டி, “தப்பு…” என்று கூறினாள்.
“உனக்கு நான் எதுக்கு இவ்வளவு சந்தோஷப்படுவேன்னு கூட தெரியலையா?” அவள் இப்பொழுது கோபமாக விலகி செல்ல எத்தனிக்க, “ஒய்… நான் சொல்றேன். டீமில் நல்லா பண்றவங்களுக்கு ஆன்சைட் ட்ரைனிங் குடுப்பாங்களே, அதுக்கு நீ செலக்ட் ஆகியிருக்க” அவன் மூளையை கசக்கி கூற, அவள் இன்னும் விலகி நின்று கொண்டாள்.
“நீ விஷயத்தை கண்டுபிடிக்கலை. உனக்கு என் மேல் அக்கறையே இல்லை.” அவள் கடுப்பாக கூறினாள்.
“இதயா, இதெல்லாம் ஓவர். இந்த ஒரு விஷயத்தை வச்சி நீ இப்படி எல்லாம் சொல்ல கூடாது.” அவள் விலகினாலும், அவன் அவளை கைவளைவுக்குள் கொண்டு வந்து கூறினான்.
“நான் சந்தோஷமா இருக்கேன். ஆனால், உன் மேல் கோபமாவும் இருக்கேன். ஸோ உனக்கு ஸ்வீட் பனிஷ்மென்ட்.” அவள் அவன் வாயில் மைசுர் பாக்கை திணித்தபடி கண்சிமிட்டலோடு கூறினாள்.
“மைசுர் பாக் செம்ம உன்ன மாதிரி” அவன் பல பொருள் பட கூறினான்.
“டேய்…” அவள் பற்களை நறநறக்க, “ட்ரு இதயா” அவன் அவளை அருகே இழுத்து சத்தியம் செய்தான். அருகாமைக்கு ஒரு சாக்கு!
“என்னை எங்கயாவது கூட்டிட்டு போ.” அவள் செல்லம் கொஞ்ச, “நாளைக்கு ஆஃபீஸ் இருக்கு இதயா” அவன் கெஞ்ச, அவள் முகம் சுழித்தாள்.
“நீ கேட்டு இல்லாமலா?” அவன் சமாதானம் செய்ய, இருவரும் வெளியே கிளம்பினர். அஜய், பாட்டி தாத்தாவோடு தங்கிவிட்டான்.
கார் தொலைதூரம் செல்ல, “எங்க போறோம் விஷ்வா?” அவள் சந்தேகமாக கேட்க, “நீ தானே கூட்டிட்டு போக சொன்ன?” அவனும் சீட்டியடித்தபடி கூறினான்.
“டேய்… நான் விளையாட்டா தான் சொன்னேன். நான் விஷயத்தை சொல்லிடுறேன். நீ வண்டியை திருப்பு. அத்தை, மாமா தேடுவாங்க” அவள் பதற, “எல்லாம் சொல்லியாச்சு.” அவன் கண் அடித்தான்.
அவன் கார் சற்று நேரத்தில் பீச் ரிஸார்ட் முன் நின்றது.
“இங்க எதுக்கு வந்திருக்கோம்?” இதயா, அவனை சந்தேக கண்களோடு பார்க்க, “உஷ்…” அவள் இதழ்கள் மீது அவன் தன் ஆள் காட்டிவிரலை வைத்தான்.
சிறிது நேரத்தில், அவர்கள் கடற்கரையை ஒட்டிய அறைக்கு வந்தனர். “ப்ரைவெட் பீச்சா விஷ்வா?” அவள் கேட்க, அவளை கைகளில் ஏந்திக் கொண்டு கடற்கரைக்கு வந்து நீரில் தள்ளினான் விஷ்வா.
“டேய், நான் சொல்லிடுறேன். நீ விஷயத்தை கேளு. இப்படி எல்லாம் தள்ளாத” அவள் சிணுங்கினாள். எழுந்து, அவனை இழுக்க அவனும் நீரில் சரிந்தான்.
அவன் தோள்களை அவள் பிடிமானத்திற்கு பிடிக்க, அவள் நீல நிற சேலை, அந்த இருளிலும் அவள் அங்க வடிவை தெளிவாக படம்பிடித்து காட்டியது.
நிலவொளியில் அவள் தேகம் மின்ன, யாருமில்லா தனிமையை அவன் ரசிக்க ஆரம்பித்தான்.
நீர் அலைகள் அவர்களை மென்மையாக தீண்டி சென்றது. இருள் சுழுந்த இரவு அவர்களுக்கு ஏகாந்தத்தை உணர்த்த ஆரம்பித்தது.
பாவம் அவர்கள் அறியவில்லை, அது அவர்களின் விடியா இரவின் ஆரம்பம் என்று.
இதயம் நனையும்…