ithayamnanaikirathey-22

IN_profile pic-7dadb517

ithayamnanaikirathey-22

இதயம் நனைகிறதே…

அத்தியாயம் – 22

கைகள் நடுங்க இதயா சட்டென்று அமர்ந்தாள். அவள் கண்கள் இருட்டி கொண்டு வந்தது.

அவள் மாற்றத்தை, வாட்டத்தை கண்டு கொண்டான் விஷ்வா. அவள் வருத்தம் அவனை பாதிக்கத்தான் செய்தது.  ஆனால், அதை தாண்டி அவனுள் கோபம் கனன்றது.

‘இவளுக்கு எதுக்கு இத்தனை பிடிவாதம்’ அவன் அவளை கடுப்பாக பார்த்தான்.

‘எனக்கு மைசுர் பாக் கொடுத்தா என்ன? என் கௌரவத்தை விட்டுட்டு தானே நான் கேட்குறேன். இவ கொஞ்சம் இறங்கி வந்தா என்ன? இந்த திமிர், இந்த அழுத்தம், இந்த பிடிவாதம்…’ மேலும் திட்ட தோன்றினாலும் குழந்தைகளையும் மனைவியையும் ஒரு சேர பார்த்தான் விஷ்வா.

“அம்மா…” அஜய் தன் தாயின் கைகளை பிடித்து கொண்டு அருகே நின்றான். அந்த மைசூர் பாக் டப்பா, அதன் முக்கியத்துவத்தை இழந்து ஓரமாக இடம் பெயர்ந்துவிட்டது.

“மாம், ஆர் யு ஒகே?”என்று தியா தன் தாயின் கன்னம் தொட்டு கேட்க, இதயாவின் கண்கள் கலங்கியது.

“எனக்கு ஒண்ணுமில்லை. எல்லாரும் கிளம்புங்க, கார் டிரைவ் போகணுமுன்னு சொன்னீங்களே. போகலாம்” அவள் கூற, குழந்தைகள் ஆர்வமாக அவர்கள் அறை நோக்கி ஓடினர்.

அவள் முன் நாற்காலியை இழுத்து போட்டு அமர்ந்தான் விஷ்வா.

அவள் படக்கென்று எழுந்து கொண்டு, தன் தலையை குனிந்து கொண்டாள்.

அவனும் எழுந்து அவள் கன்னங்களை பிடித்து, அவள் முகத்தை உயர்த்தினான்.

“இதயா” அவன் மனதை வெளிப்படுத்தி, அவள் மனதை தொடும் அழைப்பு. அவள் கண்களில் இருசொட்டு கண்ணீர்.

“நான் சொன்னதை செஞ்சா உன் கவுரம் குறைஞ்சி போய்டுமா?” நினைத்ததை  கேட்டுவிட்ட விஷ்வாவின் குரல் கோபத்தை வெளிப்படுத்தியது.

“எனக்கு பிடிக்கலை” இதயா அழுத்தமாக சொன்னாள்.

“என்னய்யா இல்லை நான் செய்ய சொன்னதையா?” அவன் வருத்தத்தோடு கேட்டான்.

“நாம சண்டை போட கூடாதுன்னு தீர்மானம் பண்ணிருக்கோம். அதனலா தான் நான் அமைதியா இருக்கேன்” இதயா முறுக்கி கொள்ள, “சண்டை போட வேண்டாமுன்னு தான் சொன்னேன். பேச வேண்டாமுன்னு சொல்லலை. இப்படி முரண்டு பிடிக்க சொல்லலை” அவனும் முடிவோடு பேசினான்.

“எதுவும் சரியாகாது விஷ்வா. நீ செஞ்சது, என் மனசில் பசுமரத்தாணி போல பதிஞ்சிருக்கு” அவள் பிடிவாதமாக கூற, “நீ செஞ்சேதெல்லாம் ஞாபகம் இல்லையோ?” அவன் இடக்காக கேட்டான்.

“நீ தானே விஷ்வா தப்பு பண்ணின. சொன்ன வார்த்தையை காப்பாத்தமால் போனது நீ. பேச்சு மாறியது  நீ. என் கனவை மதிக்காமல் போனது நீ.” அவள் வெடிக்க, “ஒத்துக்குறேன், நான் தப்பு பண்ணினேன். ஆனால், நம்ம பிரிவுக்கு முழு காரணமும் நீ. சண்டையை பெருசாக்கினது நீ.” அவன் அவளை குற்றம் சாட்டினான்.

“பார்த்தியா, பேசினா சண்டை தான் வருது. அதுக்கு தான் நான் பேசலை. நான் உன்கிட்ட சண்டை போட கூடாதுன்னு நினைக்குறேன்.” இதயாவின் குரல் கம்மலாக ஒலித்தது.

“நீ சண்டை போட கூடாதுன்னு மட்டும் நினைக்கலை இதயா. என் மேல அன்பா இருக்கணும்னு நினைக்குற. என் மேல உனக்கு பாசம் இருக்கு. நான் கேட்கறதை செய்யணும்னு உன் மனசு துடிக்குது.” அவன் பேசி கொண்டே போக, “அப்படி எல்லாம் இல்லை” அவள் மறுப்பு தெரிவித்தாள்.

மைசூர் பாக்கை அவள் முன்னே நீட்டி, “இதை யாருக்காக செஞ்ச?” அவன் கேட்க, அவளிடம் மௌனம். உண்மையை ஒத்துக்கொள்ள அவள் தன்மானம் இடம் கொடுக்கவில்லை.

மைசுர்பாக்கை கீழே வைத்துவிட்டு, “அன்பு, பாசம், காதல், அக்கறை எல்லாம் இருக்கும் இதயா. அதோட, உனக்கு கொழுப்பும், திமிரும், பிடிவாதமும் இருக்கு.” என்று கோபம் கொண்டான் விஷ்வா.

“இத்தனையும் இருக்குன்னு தெரிஞ்சி தானே என்னை வேண்டாமுன்னு விட்டுட்டு போன? அப்புறம் எதுக்கு என்னை தேடி வந்த?” இதயா கோபமாக கேட்டாள்.

‘திரும்பவும் முதலில் இருந்தா?’ விஷ்வா கடுப்பாக உணர்ந்தான்.

அவளை தன்னோடு வேகமாக இழுக்க, இதயா தடுமாறினாள். தடுமாறியவளை, இடையோடு அணைத்து அவள் முகம் நோக்கி குனிந்தான்.

அவன் நெருங்குகையில், அவள் கண்கள் பதட்டத்தில் சாசர் போல்  விரிந்தது. அவன் அவள் காதோரம் நெருங்க, அவன் மூச்சு காற்றில், அவள் தோடு அசைந்தது. இதயா, விலகி செல்ல துடிக்க, அவளை விலகவிடாமல் அவன் பிடிமானம் இறுகியது.

“இன்னமும், உன் பார்வையில் நான் மயங்கி தான் டீ போறேன். உன் விழியின் அழகில் கிறங்கி தான் தொலையறேன்” அவன் கோபம் போல கூற முயற்சித்து உல்லாசமாக கூறினான்.

இதயாவுக்கு அவனின் இத்தகைய நெருக்கத்தில் வார்த்தைகள் வரவில்லை. அவள் இமைகள் படபடத்தது. அவள் உதடுகள் பதட்டத்தில் துடித்தன.

அவன் கைகள் யாரின் அனுமதியும்யின்றி அவள் தேகத்தில் உரிமையை நிலை நாட்டி கொள்ள ஆரம்பித்தது.

“என்னை விடு விஷ்வா” தன்னை நிலை செய்து கொண்டு, அவள் பேச ஆரம்பித்தாள்.

“நீ செஞ்ச தப்புக்கு ஆறு வருஷ பிரிவு தண்டனை. தண்டனை உனக்கு மட்டும் இல்லை, எனக்கும் தான். நான் செஞ்ச தப்புக்கும் சேர்த்து.” அவன் நிறுத்த, அவள் புருவங்கள் சுருங்கியது.

அவன் வலது கைகளால், அவள் புருவத்தை நீவினான். அவள் முகத்தை திருப்பி கொண்டாள்.

 “என் மேலும் தப்பு இருக்கிறதால தான், இத்தனை நாள் பொறுமையா இருந்தேன். நீயா, சரிப்பட்டு வருவேன்னு” அவள் காதோரம் கிசுகிசுத்து அவள் முகத்தை தன் பக்கம் திருப்பினான்.

அவன் முகத்தில் குறும்பு புன்னகை எட்டி பார்த்தது.

அந்த புன்னகையில் அவள் மனம் மயங்க, அவள் அறிவோ அவன் செய்ய போகும் செய்கையை படம் பிடித்து காட்டியது.

“விஷ்வா வேண்டாம்” அவள் குரல் பதட்டத்தில் தோய்ந்து ஒலித்தது.

தன்னை தன் மனைவி கண்டுகொண்டதில், அவன் முகத்தில் பெருமை கூத்தாடியது.

“நீ எதையும் மறக்கலை இதயா” அவன் குரலில் உல்லாசம், கேலி, கோபம் என அனைத்தும் மறந்து காதல் காதல் காதல் மட்டுமே!

“நான் வேணுமின்னு கேட்டதை நீ செஞ்சியா இதயா?” அவன் அவளை கேள்வியோடு பார்த்தான்.

“அதுக்கு?” அவள் கடுப்போடு கேட்க, “நீ சொல்றதை மட்டும் நான் ஏன் கேட்கணும் இதயா?” அவன் குரலில் இப்பொழுது கேலி வழிந்து ஓடியது.

அவன் கைவளைவுக்குள் அவள் நெளிந்து கொண்டு கேள்விகளை அடுக்க ஆரம்பித்தாள்.

“அதுவும் இதுவும் ஒன்னா விஷ்வா? நீ என்ன…” அவள் பேசி கொண்டிருக்கையில் அவன் இடைமறித்தான்.

“அதுவும் இதுவும் ஒன்னு தான். நான் வேணும்ன்னு கேட்டு நீ தரலை. நீ வேண்டாமுன்னு சொன்னாலும், நான் தருவேன்” அவளை மேலே பேச விடமால், அவள் இதழ்களை தனதாக்கினான் விஷ்வா.

அவன் மென்மையில், அவன் காதலில், அவன் தீண்டலில், அவன் உரிமையில் தோற்று போகும் எண்ணம் மேலோங்கினாலும், கரைந்து போனாள் இதயா.

‘பல வருடங்களுக்கு பின்…’ என்று இருவருக்கும் ஒரே நினைவே அலைமோதியது.

இருவரும் உலகை மறந்த நொடிகளில், “அம்மா…” என்ற தியாவின் அழைப்பில் சட்டென்று விலகி கொண்டனர்.

இதயா, விலகி ஓட எத்தனிக்க, “தியா வேணுமுன்னா வருவா. இல்லை, நீ போகமாலே அவ வேலையை அவ முடிச்சிப்பா.” அவன் இதயாவை தன் கைப்பிடிக்குள் நிறுத்தினான்.

சில நொடிகளுக்கு முன் நடந்தது நினைவு வர, மற்ற எண்ணங்கள் பின்னோக்கி சென்று தோல்வி உணர்வே இதயாவை சூழுந்து கொண்டது.

அவள் கண்கள் கலங்க, அவனை நிமிர்ந்து பார்த்தாள்.

“மைசூர் பாக்கை விட இது தித்திப்பா இருக்கு. நீ தரலை. நான் எடுத்துகிட்டேன்.” அவன் அழுத்தமாக கூறி கண்சிமிட்டினான்.

இதயாவின் விழி இரண்டு சொட்டு கண்ணீரை வெளிப்படுத்தியது.

அவள் நீரை கைகளில் ஏந்தி கொண்டான் விஷ்வா. “விஷ்வா, நல்ல காதலனா இருக்கலாம். ஆனால், நல்ல கணவன் கிடையாது. அதை நீ தான் சொன்ன. இனி, உன் புருஷன் பொறுமையா இருக்க மாட்டான்.” அவன் உறுதியாக கூறினான்.

“பொறுமையா இருந்து உன்கிட்ட ஒரு பிரயோஜனம் இல்லை இதயா. நீ கொஞ்சம் கூட மாறலை. சண்டை போடலையேயொழிய, நீ மனசு மாறவே மாட்டேங்குற?” அவன் சிலிர்த்து கொண்டான்.

அவனை புருவம் உயர்த்தி பார்த்து, “நானும், அவ்வளவு நல்ல மனைவி கிடையாது விஷ்வா. கொலையும் செய்வாள் பத்தினி.” என்று இதயா தன்  ஆள் காட்டி விரலை உயர்த்தி மிரட்டினாள்.

அவளை சட்டென்று இழுத்து, அவள் கைகளை பின்னோடு திருப்பினான் விஷ்வா. “வலிக்குது விஷ்வா.” அவள் விழிகளில் நீர் கோர்த்து கொண்டது.

“எனக்கும் வலிக்குது டீ. இதைவிட அதிகமாக வலிச்சுது.” அவன் கண்களிலும் நீர் கோர்த்து கொண்டது.

“உன்னை ரெண்டு வருஷம் கூட பிரிய கூடாதுன்னு நினைச்ச என்னை, உன் திமிரால இத்தனை வருஷம் பிரிய வச்சிட்டியே?” அவன் குரலில் கோபம்.

அவள் கண்களில் நீர் வழிய, அவன் நீர் முத்துக்களும் அவள் கன்னம் தொட்டு அவள் நீரோடு சேர்ந்து கொண்டது.

“இன்னமும், உன் திமிரு அடங்கவே இல்லை. நான் மைசூர் பாக் கேட்டதும் கொடுத்தா, உனக்கு என்ன இழுக்கு வந்திரும்?” அவன் கர்ஜித்தான்.

அவள் விழி நீர் பட்டுதெறித்து அவன் மார்பை தொட்டது. அவன் இதயம் நனைத்தது. அவன் பிடி தளர்ந்தது.

“நான் அப்படி என்ன டீ பெருசா தப்பு பண்ணினேன்? குடிச்சேனா? உன்னை அடிச்சேனா? வேறு பொண்ணை மனசால் தொட்டேன்னா? உன் பிறந்த வீட்டை அவமதிச்சேனா? உன்னை கஷ்டப்படுத்தினேனா? எனக்கு எதுக்கு டீ இவ்வளவு பெரிய தண்டனை?” அவன் சுவரில் சாய்ந்து அவள் முகத்தை வலது கையில் ஏந்தி, அவள் விழி பார்த்து கேள்விகளை தொடுத்தான்.

இதயா இப்பொழுது தடுமாறினாள்.  அவள் வருத்தங்கள், அவள் ஏமாற்றங்கள் அவளுக்கு நியாயமாக இருப்பது போல், அவன் வருத்தங்களும் அவளுக்கு நியாயத்தை கற்பித்தன.

கணவனின் வருத்தம் என்பதாலா? இல்லை இத்தனை வருட பிரிவின் வலி கற்று தந்த பாடமா? இல்லை வயது தந்த பக்குவமா? அவள் அறியவில்லை.

இதயா எதிர்த்து பேசவுமில்லை.

“நீங்க இன்னும் கிளம்பலியா?” கேட்டு கொண்டே அஜய் வர, இருவரும் கிளம்பினர்.

நால்வரும் காரில் கிளம்பினார். குழந்தைகள் இருவரும் பின்னே ஏறிக் கொண்டனர்.

விஷ்வா, அவர்கள் அருகே செல்ல, “நாங்களே சீட்ல உட்கார்ந்து, பெல்ட் போட்டுப்போம். வி டோன்’ட் வாண்ட் எனி ஹெல்ப்” தியா அமர்ந்து கொண்டே கூறினாள்.

‘அப்படியே  அம்மைய மாதிரி. இருங்க, உங்க ரெண்டு பேருக்கும் வைக்குறேன் வெட்டு. இனி விஷ்வாவின் பாதை சிங்க பாதை தான்.’ மனதிற்குள் சூளுரைத்து கொண்டான்.

 இதயா, காரின் முன் பக்கம் நின்று கொண்டிருந்தாள். அவள் முகம் சற்று வாடியிருக்க, ‘சாரி சொல்லி சமாதானம் செய்வோமா?’ சிங்கம் போல் சீறு கொண்டு அவன் இதயம், மனைவியின் வாடிய முகத்தில், புலி போல் பதுங்க எண்ணியது. இன்னும் நெருங்கினால், பூனை ஆகிவிடும் என்று அவன் அறிவு அவனுக்கு படம்பிடித்து காட்ட, தன்னை நிதானப்படுத்தி கொண்டான் விஷ்வா.

‘சாரி, சொல்லுவேன். உடனே, இதயா நீ செஞ்ச எந்த செயலுக்கு சாரின்னு இடக்கு பேசுவா. எந்த சமாதானமும் தேவை இல்லை.’ தனக்கு தானே முடிவு செய்து கொண்டான் விஷ்வா.

இதயா, காரின் முன் பக்கம் ஏறினாள்.  தியாவும், அஜயும் வளவளத்து கொண்டே வந்தனர்.

இதயா, கண்மூடி அந்த பயணத்தை அனுபவித்தாள். ‘எனக்கு கார் ஓட்ட பிடிக்கும் தான். இருந்தாலும், விஷ்வா ஓட்ட, பின்னே குழந்தைகள் பேசுவதை கேட்டபடி வருவதில் எத்தனை சுகம்’ அவள் மனம் அசைபோட்டு கொண்டிருந்தது.

விஷ்வா, தன் கவனத்தை சாலையில் இருந்து மனைவியிடம் திருப்ப, அவளின் நிம்மதி கலந்த முகம் அவனை தென்றலாய் வருடியது.

அவன் முழு கவனமும் மனைவியின் பக்கம் திரும்ப, அவன் கார் சற்று வேகம் குறைந்தது. அப்பொழுது மற்றோரு கார் அவர்கள் சென்று கொண்டிருந்த இடத்திற்கு மாற, விஷ்வா சட்டென்று வேகத்தை குறைக்க, அனைவரும் சற்று தடுமாறினர்.

“எங்க அம்மா, இதை விட நல்லா ஓட்டுவாங்க. இப்படி எல்லாம் சடன் பிரேக் போட மாட்டாங்க.” தியா பட்டென்று கூறினாள்.

“உங்க அம்மாவே ஒட்டட்டும்” விஷ்வா, வண்டியை அருகே இருந்த ஒரு வளாகத்தில் நிறுத்திவிட்டு, இதயாவை ஓட்ட சொல்லி பின்னே அமர்ந்து கொண்டான்.  இத்தனை நாட்களில், அவன் காருக்கு அவளுக்கு இன்சூரன்ஸ் எடுத்திருந்தான்.

விஷ்வாவுக்கு, தியாவை இடித்து கொண்டு அமர ஒரு பொன்னான வாய்ப்பு.

அஜயிடம் பேசுவதற்கு இடைஞ்சலாக அமர்ந்திக்கும் விஷ்வாவை தியா முறைத்து கொண்டே வந்தாள்.

கார் சென்று கொண்டே இருந்தது. “எங்க போற இதயா?” கார் தொலைதூரம் செல்ல விஷ்வா கேள்வியை தொடுத்தான்.

 “சொல்றேன்…” கார் வேகம் எடுத்தது.

பல நிமிடங்கள் பயணத்திற்கு பின், அந்த கார் ஒரு கல்லூரிக்கு முன் நின்றது.

கொரோனவால், கல்லூரி மூடி இருக்க, அங்கு யாருமில்லை. கார் பார்க்கிங் இல் காரை நிறுத்திவிட்டு, அந்த கட்டிடத்தின் முன் இறங்கினாள் இதயா.

விஷ்வாவும் இறங்கி கொண்டான். இதயாவின் அருகே செல்ல, “என் கனவில் ஓரளவுக்கு நான் ஜெயித்த இடம் இது தான். இன்னும் முழுசா முடியலை. ஆனால், ஜெய்த்துவிடுவேன்.” என்று அவனை மேலிருந்து கீழ்வரை பார்த்தபடி கம்பீரமாக  கூறினாள் இதயா.

“என் மனைவி கனவில் ஜெயிச்சது சந்தோசம் தான். பெருமை தான். ஆனால், என் மனைவி வாழ்க்கையில் தோத்துட்டா” அவன் குரலில் வருத்தம் தொற்றி கொண்டது.

“விஷ்வா” அவள் கர்ஜிக்க, “நீ வாழ்க்கையில் தோற்கலைன்னு சொல்லு. நீ வாழ்க்கையில் ஜெயிச்சிட்டேன்னு சொல்லு.” அவன் அவளிடம் சவாலிட்டு, அவள் விழிகளை பார்த்தபடி அவள் சொல்லுக்காக காத்திருந்தான்.

இதயம் நனையும்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!