ithayamnanaikirathey-27

IN_profile pic-821f668c

இதயம் நனைகிறதே…

அத்தியாயம் – 27

இதயா, விஷ்வா இருவரும் வீட்டிற்குள் நுழைய குழந்தைகளின் பேச்சு சத்தத்தில் விஷ்வா, இதயாவின் கைகளை பிடித்து சுவரோடு சாய்ந்து அமைதியாக  இருக்கும் படி செய்கை காட்டினான்.

அவன் செய்கையில், அவளும் அவன் அருகே சாய்ந்து கொண்டு,’என்ன?’ என்று விழி உயர்த்தினாள்.

“என்ன தான் பேசுறாங்கன்னு கேட்போம்?” அவன் அவள் செவியோரமாய் கிசுகிசுத்தான். அவன் விளையாட்டாகவே கூற, அவன் விளையாட்டுக்கு அவளும் இசைந்தாள்.

“அஜய் அண்ணா, நான் உன் கூட சண்டை” என்று முகம் சுருக்கினாள் தியா.

“ஏன் தியா?” அஜய் பரிதாபமாக வினவ, “நீ எனக்கு அண்ணா தானே? ஏன் மெனி டேஸ் நீ என்னை பார்க்க வரவே இல்லை? யு டோன்’ட் லவ் மீ?” தியா அவன் முன் நின்று கைகளை அசைத்து அசைத்து கேட்டாள்.

விஷ்வா, இதயா இருவருக்கும் ‘பக்…’ என்று இருந்தது. அவர்கள் இருவரும் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துக் கொண்டனர்.

“தியா, நம்ம அம்மா அப்பா டைவோர்ஸ்ட். அது தான் நான் உன்னை பார்க்க வரலை” என்று அஜய் கூற, “அப்படின்னா ?” என்று தியா பட்டென்று கேட்டாள்.

இதயா, வேகமாக முன்னே செல்ல அவளை வழிமறித்து நின்றான் விஷ்வா.

“என்ன தான் பேசுறாங்கன்னு கேட்போம்” அவன் உறுதியாக சின்ன குரலில் கூற, “இந்த விஷபரீட்சை எல்லாம் வேண்டாம் விஷ்வா. தியா எக்குத்தப்பா பேசுவா” இதயா பதறினாள்.

“குழந்தைகளுக்கு என்ன தான் தெரியுதுன்னு பார்த்திருவோம் இதயா” அவர்கள் கிசுகிசுத்து கொண்டனர்.

அஜய் மௌனம் காக்க, “டைவர்ஸ்ன்னா?” தியா அஜயிடம் தன் குட்டி முகத்தை கேள்வியாக உயர்த்தினாள்.

“இது தெரியாம தான், எங்க அம்மா சிங்கிள் சிங்கிள் அப்படின்னு சொன்னியா?” என்று அஜய் அவளை கிடுக்கு பிடியாக பிடித்தான்.

“சிங்கில்ன்னா, அம்மா மட்டும் தான் இருக்காங்க. அப்பா இல்லைனு அர்த்தம். அது எனக்கு தெரியும்” என்று தியா அவள்  குட்டி ஃபிராக் அசைய, அசைந்து கொண்டே பேசினாள்.

“அது தான் டைவோர்ஸ். உன் கூட அப்பா இல்லை. என் கூட அம்மா இல்லை. போத் சிங்கள் தான் டைவர்ஸ்” என்று அஜய் விளக்கம் கொடுத்தான்.

“தென் வொய் இப்ப வந்தீங்க?” என்று தியா கண்களை சிமிட்டி சிமிட்டி கேட்டாள்.

“அது, கொரோனா டைமில் அம்மா கஷ்டப்படுவாங்க. நாம ஹெல்ப் பண்ண போகணுமுன்னு அப்பா சொன்னாங்க” அஜய் சோகமாக கூறினான்.

“அப்ப, நீ கொரோனா முடிஞ்சதும் போயிருவியா?” என்று தியா அவன் கன்னம் பிடித்து கேட்க, அஜய் உதட்டை பிதுக்கினான்.

அவன் கன்னத்தில் பட்டென்று அடித்தாள் தியா. “என்ன அமைதியா இருக்க? அதெல்லாம் போக மாட்டேன்னு சொல்லு.” தியா அவனிடம் கோபித்து கொண்டாள்.

“தெரியலியே” அஜய் கூற,  “நான் யார் கூட விளையாடுவேன்? என் ஃபிரென்ட் ஷீலூ, ஜெனி எல்லாம் நான் கேட்டா எதுவுமே குடுக்க மாட்டங்க. நான் சொன்னதெல்லாம் கேட்கவே மாட்டாங்க. நீ தான், எனக்கு எல்லாம் கொடுக்குற… நான் என்ன சொன்னாலும் கேட்குற. நான் அடிச்சா கூட அம்மா கிட்ட சொல்லி குடுக்க மாட்டேங்குற.” தியா உதட்டை பிதுக்கினாள்.

அஜய் மௌனிக்க, “எனக்கு உன்னை தேடுமில்லை? உனக்கு என்னை தேடாதா?” என்று தியா கேள்விகளை அடுக்கினாள்.

“எனக்கும் உன்னை தேடும். நீயும் தான் நான் என்ன வேலை சொன்னாலும் செய்யுற. என்கிட்டே அழகா பேசிட்டே இருக்க. ஆனால், அப்பா என்ன சொல்லுவாங்கன்னு தெரியலியே. எனக்கு அம்மாவையும் ரொம்ப தேடும்” அஜய் கண் கலங்கினான்.

“அம்மா, இந்த லாக்டவுனில் பிட்ஸா, கேக், குக்கீஸ், மைசூர்பாக், டிபன் அப்படின்னு நிறைய ஐடெம்ஸ் எவ்வளவு சூப்பரா செஞ்சி குடுத்தாங்க. அப்பா, கொத்து தோசைன்னு சொல்லி பிஞ்சி போன தோசையும், ரோஸ்டேட் தோசைன்னு கருகி போன தோசையும் தான் குடுப்பாங்க. தெரியுமா?” என்ற அஜயின் முகத்தில் சோகம் கவ்வி இருந்தது.

“அப்பாவுக்கு குக் பண்ண தெரியாதா?” என்று தியா வாய் பொத்தி சிரித்தாள்.

சட்டென்று அஜய், தியாவை பார்த்து, “உனக்கு அப்பாவை தேடாதா?” என்று கேட்டான்.

“அதெல்லாம் தேடாது” என்று தியா கூற, அஜயின் முகம் வாடியது. விஷ்வாவின்  முகமும் தான்.

சில நிமிடம் அமைதிக்கு பின், “பட், ஐ லவ் ஹிம்”என்று தியா உதட்டை சுழிக்க, விஷ்வாவின் கண்கள் மலர்ந்தது.

 “பட் ஐ அம் அங்கிரி ஆன் ஹிம்” என்று தியா கூற, அஜய் ஆர்வமாக தங்கையை திரும்பி பார்த்தான்.

“என்னை மெனி டேஸ் பார்க்க வரலை தானே? ஸ்கூலுக்கு அம்மா மட்டும் தான் தனியா வருவாங்க . ஸோ நான் சீக்கிரம் எல்லாம் அப்பா கூட நல்லா பேசமாட்டேன். கொஞ்சோண்டு தான் அப்பா கூட பேசுவேன்.” கறாராக தியா கூற, “ஏய், இந்த சுண்டக்காய் ரொம்ப பேசுறா. இவளை நான் எப்படி சரிகட்டுறேன்னு மட்டும் பாரு” என்று விஷ்வா தன் மனைவியின் காதில் கிசுகிசுத்தான்.

“நீ இப்படி வளர்த்திருக்க…” அவன் வம்பிழுக்க முயன்றாலும், இதயா உணர்ச்சியின் பிடியில் இருந்தாள்.

விஷ்வா அதற்கு மேல் பேசவில்லை.

“அப்பா பாவமில்லை?” என்று அஜய் கேட்க, “நானும் பாவம் தான். நான் ரொம்ப பாவம். இவ்வளவு நாள் நீ இல்லாம, அப்பா இல்லாம தனியா இருந்தேனில்லை?” தியா உதட்டை சுழித்து, கன்னத்தில் கை வைத்து கூற அஜய் ஆமோதிப்பாக தலை அசைத்தான்.

“சரி, நீயும் அப்பாவும் எங்க கூடவே இருக்கணும். அதுக்கு ஏதாவது ஐடியா சொல்லு” என்று தியா சோபாவில் அமர்ந்திருந்த அஜயை  இடித்துக்கொண்டே கேட்டாள்.

அஜய் தீவிரமாக சிந்திக்க, “கொரோனாவுக்காக தானே இங்க வந்தீங்க?” தியா  கேட்க, “கொரோனா போகலைனா நாங்களும் போக மாட்டோம்” அஜய் யோசனையோடு கூறினான்.

தியா அவனை புரியாமல் பார்க்க, “கொரோனா போகவே கூடாதுன்னு சாமி கிட்ட வேண்டிப்போம். உனக்கு நானும், அப்பாவும் இருப்போம். எனக்கு அம்மாவும், நீயும் இருப்பீங்க. எப்படி என் ஐடியா?” என்று தன் சட்டையின் காலரை தூக்கி விட்டுக்கொண்டான் அஜய்.

“சூப்பர் அண்ணா” அவன் கன்னத்தில் முத்தமிட்டாள் தியா. அவனும் தங்கையை கொஞ்சியபடியே, அவளை அழைத்துக்கொண்டு பூஜை அலமாரி முன் நின்றான்.

“சாமி, கொரோனா அப்படியே இருக்கட்டும். அப்பதான் எங்க அம்மா, அப்பா இப்படியே இருப்பாங்க” என்று இரு குழந்தைகளும் இறைவனிடம் பிரார்த்திக்க, இதயா துடிதுடித்து போனாள்.

அவள் பரிதவிப்போடு விஷ்வாவை பார்க்க, அவன் இடது கையால் தன்னவளை தன் மேல் சாய்த்து ஆறுதலாக அவள் தோளை தட்டி கொடுத்தான்.

தாங்கள் செய்த குற்றத்தின் அளவு அவர்களுக்கு புரிய, அவர்கள் குற்ற உணர்ச்சி அவர்களை நெருக்கியது. இருவரின் கண்களும் கண்ணீரை தாரை தாரையாக சொரிந்தது.

அவர்கள் விழிநீர் ஒன்றோடு ஒன்றை தொட்டுதொண்டு அவர்கள் இதயத்தை நனைத்தது. இதயம் நனைந்ததில் அவர்கள் நெகிழ்ந்து போனது.

வேண்டுதல்களுக்கு பின் குழந்தைகள் விளையாட துவங்க, எதுவும் அறியாதவர்கள் போல், இருவரும் குழந்தைகளோடு இணைந்து கொண்டனர்.

நாட்கள் அதன் போக்கில் நகர, விஷ்வாவின் கைகள் தேறியது. இதயா அவனை கன அக்கறையோடு பார்த்து கொண்டாள்.

சில கேள்விகள் அவளுள் இருந்தாலும், அதை அவள் கேட்கவில்லை. ‘என்ன நடந்திருந்தாலும், அவை முடிந்து போன விஷயம். பேசி என்ன பயன். காலப் போக்கில் தெரிந்து கொள்ளுவோம்.’ என்று எண்ணிக் கொண்டாள்.

அவனும் நாட்களின் போக்கில் பேசிக்கொள்ளலாம் என்று அமைதி காத்துக் கொண்டான்.

சிலப்பல நாட்கள் கடந்திருந்த நிலையில், அவன் கைகள் ஓரளவுக்கு பழைய நிலைக்கு திரும்பி இருந்தது.

அன்றிரவு, தியா வீல்லென்று கத்திக்கொண்டு நடுஹாலுக்கு வந்தாள்.

குட்டி எலி ஒன்று அதன் வாலை அங்குமிங்கும் அசைத்த படி அவளை துரத்தி கொண்டு வர, “அம்மா… அம்மா…” என்று அவள் அலற, “ஐயோ, எலி ஏன் உன்னை துரத்துது? நீ என்ன பண்ண?” இதயா அவள் பின்னே ஓட, எலி அதன் கண்களை உருட்டியபடி குறுக்கும் நெடுக்கும் இவர்கள் கால்களுக்கு இடையில் ஓடியது.

“நான் எலி வாலை மிதிச்சிட்டேன்.” என்று புலி வால் அளவுக்கு கூறிக்கொண்டு ஹாலில் குறுக்கும் நெடுக்கும் ஓடினாள் தியா.

“நில்லுடி” இதயா கத்த, அஜய் அங்கு வந்து பார்த்தான்.

“எலி தானே?” என்று அவன் அசட்டையாக கேட்க, அங்கிருந்த நாற்காலி மேல் ஏறிக் கொண்டாள் தியா.

“நீ தானே ஹீரோ மாதிரி எலி எல்லாம் பிடிப்பன்னு சொன்ன. இப்ப பிடி” என்று தியா நாற்காலியில் மேல் ஏறிக்கொண்டு தன் தமையனை மிரட்டினாள்.

“நான் ஹீரோ தான். எலி எல்லாம் எனக்கு நத்திங்” என்று கூறிக்கொண்டு அவன் எலி அருகே செல்ல அது அவன் கையை தாண்டி குதித்து ஓடியது.

“வீல்…” என்று கத்திக் கொண்டு சோபாவில் ஏறிகொண்டான் அஜய்.

“நீயெல்லாம் ஒரு ஹீரோவா?” என்று நாற்காலி மேல் நின்று கொண்டு இடுப்பில் வைத்து கொண்டு அவள் கேட்க, எலி அவள் நாற்காலியை சுற்றி சுற்றி வந்தது.

விஷ்வா முகம் கழுவிக்கொண்டு வர, அங்கிருந்த சத்தத்தில் என்ன விஷயம் என்று பார்க்க, “உஷ்… உஷ்…” என்று இதயா எலியை விரட்ட, எலியோ துள்ளி குதித்து கொண்டிருந்தது.

“என்ன இதயா?” என்று விஷ்வா கேட்க, “அப்பா… எலி…” என்று அவன் மேல் பாய்ந்தாள் தியா.

‘ஆபத்துன்னா உடனே வந்திருவா அப்பான்னு.’  என்று தன் மகளை நெஞ்சோடு அள்ளிக்கொண்டான் விஷ்வா.

இதயா எலியை விரட்ட, அது அவளுக்கு பயந்து ரேட் ட்ராப்பில் மாட்டிக் கொண்டது. அது கோந்து போல் அமைப்பு கொண்ட ட்ராப் என்பதால் எலி அத்தோடு சேர்ந்து நகர அதன் வேகம் மட்டுப்பட்டிருந்தது.

எலி இரண்டு கண்களை உருட்டி உருட்டி இவர்களை பார்த்துகொண்டு அதன் உடம்பை அசைக்க, அதன் வால் ஒருபக்கம் அசைய, அந்த ட்ராப் ஒரு பக்கம் அசைந்தது.

தியாவால் சிரிப்பை அடக்க முடியவில்லை. எலிக்கு முன் சற்று தைரியமாக நின்றாள்.

“ஐயோ பாவம், இந்த எலியால் என்ன பிரச்சனை? அதுவாட்டுக்கும் ஒரு ஒரமா இருந்துட்டு போகுது” விஷ்வா பாவம் பார்க்க, “அது அரிசி பையை கடிச்சி அரிசி சாப்பிடுது” இதயா எலியை முறைத்தபடி முறையிட்டாள்.

“இந்த எலியால உன் டாலர்ஸ் குறைஞ்சிடுமா என்ன?” விஷ்வா தியாவை பார்த்தபடி இதயாவிடம் கேட்டான்.

“எலியால் ரேட் ஃபிவர் வரும்” என்று இதயா கூற, ‘தியாவை மடக்க ஒரே ஆயுதம், இந்த எலி தான்’ அவன் மனம் கணக்கிட்டு கொண்டது.

“என்னை துரத்துவியா?” என்று தியா விஷ்வாவின் கால்களை கட்டிக் கொண்டு தைரியமாக எலியிடம் கேட்க, அது தன் கண்களை உருட்டிக் கொண்டு தன் தலையை மேலும் கீழும் அசைத்து, ‘ஆம்…’ என்பது போல் முன்னே குதித்தது.

“ப்ப…” என்று அலறிக் கொண்டு பின்னே ஓடினாள் தியா.

விஷ்வா ஒரு பையை எடுத்துக்கொண்டு குச்சியால் எலியை பிடிக்க எத்தனிக்க, அதே பின்னே ஓட, விஷ்வா இதயா இருவரும் குனிந்து கொண்டு முன்னே குதிக்க அஜய், தியா இருவரும் பின்னே குதித்தனர்.

மரத்தால் செய்யப்பட்ட வீடு, நால்வரும் குதித்ததில் தரை சற்று ஆடியது.

விஷ்வா, இதயா குனிந்த மேனியில் எலிக்கு முன்னே செல்ல, தியாவும், அஜய்யும் எலியை சுற்றி சுற்றி ஓடினர்.

ஒருவாறு ஒரு அரை மணி நேரத்தின் போராட்டத்திற்கு பின் அவர்கள் எலியை பிடித்து வெளியே விட்டனர்.

“வாவ்! அப்பா எ ரியல் ஹீரோ” என்று தியா, தந்தையிடம் கைகுலுக்கி, அஜயை நக்கலாக பார்த்தாள்.

“நான் எலிக்கெல்லாம் பயப்படமாட்டேன். அது பாவமுன்னு சும்மா விட்டேன்.” என்று அஜய் கெத்தாக கூறினான்.

“அப்பா, தான் சூப்பர்.” என்று தியா கூற, “அவனவன் எப்படி எல்லாமோ ஹீரோ ஆகுறான். நீ எலி பிடிச்சி ஹீரோ ஆகுற” இதயா அவனை கேலி செய்தாள்.

“பசங்களை கரெக்ட் பண்றது என்னைக்கும் ஈஸி. சாப்பாடை பார்த்தாலே மயங்கிடுறோம். நீ கொடுத்த சாப்பாட்டில் அஜய் ஃபிளாட். ஆனால், பொண்ணுகளை எந்த வயசிலும் கரெக்ட் பண்றது அவ்வளவு கஷ்டம். ஒரு குட்டி பொண்ணை என் பக்கம் இழுக்க கையை உடைக்க வேண்டியதிருக்கு. எலியை பிடிக்க வேண்டியதிருக்கு. இன்னும் முழுசா முடியலை” என்று விஷ்வா சோகத்தை இதயாவுக்கு மட்டும் கேட்கும் விதமாக வெளிபடுத்த, அவர்கள் கதவு படார் படாரென்று தட்டப்பட்டது.

விஷ்வா சென்று கதவை திறக்க, மற்ற மூவரும் பின்னே சென்றனர். அங்கு காவல்துறையினர் நின்று கொண்டிருக்க, விஷ்வா இதயா இருவரும் அதிர்ச்சியில் உறைந்தனர்.

 இதயம் நனையும்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!