ithayamnanaikirathey-29final

IN_profile pic-fb2bdb4b

ithayamnanaikirathey-29final

இதயம் நனைகிறதே…

அத்தியாயம் – 29

‘என்ன கேட்டாலும்?’ என்ற விஷ்வாவின் கேள்வியின் பதில் இதயா அறிந்திருந்தாலும், அவன் கூற கேட்க வேண்டும் என அவள் மனம் துடித்தது.

“எனக்கு இதயா வேணும். இதயா… இதயா… இதயா…” அவன் கூறிக்கொண்டே இருக்க, புயலென பாய்ந்து காற்று புகவும் இடைவெளி இல்லாமல் அவனை கட்டிக்கொண்டாள் இதயா.

“நாம்ம டைவர்ஸ் வரைக்கும் போயிருக்கோம்” அவன் அவள் இதய துடிப்பை அனுபவித்தபடியே கூற, “அது என்ன வரைக்கும்?” அவள் அவனை சீண்ட, “மேலே சொல்ல எனக்கு ஒரு நாளும் மனசு வராது இதயா” அவன்  குரலில் வருத்தம் மிதமிஞ்சி இருந்தது.

“எனக்கும் தான். சொல்ல வேண்டாம். நீயும் சொல்லாத.” அவளும் அவனுக்கு இசை பாடினாள்.

“அப்படியா சொல்ற?” அவன் கேட்க, “வெத்து காகிதம் நம்மளை பிரிச்சிரும்மா என்ன?” இதயா கேட்டாள்.

“நேத்து ராத்திரி மௌனராகம் படம் பார்த்தியா?” அவன் அவளை சீண்ட, இதயா கோபமாக விலகி செல்ல எத்தனிக்க, அவன் அவர்கள் இறுக்கத்தை மட்டுமே அதிக படுத்தினான்.

“கோபப்பட்டாலும், சண்டை போட்டாலும் இனி இப்படி தான்” அவன் அவர்கள் நிற்கும் கோலத்தை கண்களால் காட்ட, அவள், ‘க்ளுக்…’ என்று சிரித்தாள்.

சிரிப்போடு யோசனை பரவவும், “ஓய்… என்ன?” அவன் கேட்க, “நம்ம வாழ்க்கையில் இப்படி நடந்திருக்க வேண்டாம்” அவள் கூற, “ஏதோ தப்பு பண்ணிட்டோம். இனி பண்ணமாட்டோம்” அவன் கூற அவள் புன்னகைத்து கொண்டாள்.

அந்த புன்னகைக்கு பின், ஏதோ கவலை சஞ்சலம் இருப்பதை அவன் உணர்ந்து கொண்டான். அவன் தோண்டி துருவவில்லை.

‘நாட்களின் போக்கில் அவளே கூறுவாள்’ என்று மௌனித்து கொண்டான்.

சில நாட்களுக்கு பின் மாலை பொழுது.

“அம்மா, நான் வெளிய போகணும்” தியா பிடிவாதமாக கூறினாள்.

“தியா நோ. வெளிய கொரோனா இருக்கு. நாம போக முடியாது.” இதயா மறுப்பு தெரிவித்துவிட, “அப்பா…” தியாவின் குரல் உயர்ந்தது.

“அப்பா, நாங்க வெளிய போகணும்” விஷ்வாவுக்கு தியாவிடமிருந்து கட்டளை பறந்தது.

“அஜய் கேட்கவே இல்லை. நீ அவனை உன் கூட கூட்டு சேர்க்காத.” இதயா தியாவின் முன் கோபமாக நின்றாள்.

“நான், அப்பா கிட்ட பேசிக்குறேன்.” தியா, விஷ்வாவின் முன் கோபமாக நின்றாள்.

“அம்மா, சொல்றது தானே சரி. கொரோனா இருக்கு. நாம்ம எப்படி வெளிய போக முடியும்?” அஜய் நியாயம் பேச, “அவன் சொல்றதை கேட்குறான். நீ கேட்க மாட்டேங்குற தியா” இதயா தியாவை மிரட்டினாள்.

“அப்பா…” தியா சிணுங்க, “விஷ்வா, நீ அவளுக்கு ரொம்ப செல்லம் குடுக்குற” இதயா விஷ்வாவிடம் பாய்ந்தாள்.

தியாவை தூக்கி கொண்டு, ‘இ… த… யா…’ அவன் கண் சிமிட்டினான்.

“சின்ன குழந்தை. அவ தேவை இல்லாம சேட்டை பண்ண மாட்டா. தேவை இல்லாமல் எதுவுமே கேட்க மாட்டா. அப்படி தானே தியா?” அவன் தன் மகளை கொஞ்சினான்.

“எஸ் அப்பா.” தியா தன் அப்பாவோடு ஹைஃபை செய்து கொண்டாள்.

“தியா எது வேணுமினாலும் உன்கிட்ட கேட்கலாமுன்னு நினைக்குறா. இது நல்லாயில்லை” இதயா கோபம் கொள்ள, “தியா, அம்மா ஓகே சொன்னா தான்” விஷ்வா உதட்டை பிதுக்கினான்.

“நீங்க அம்மாவை ஒகே சொல்ல வைங்க” தியா, விஷ்வாவிடம் கோரிக்கை வைக்க, “எல்லா நாளும் முடியாது. இன்னைக்கு பண்றேன். சரியா?” அவன் மகளிடம் பேரம் பேசினான்.

“இதயா, எத்தனை நாள் தான் குழந்தைங்க வீட்டிலேயே இருப்பாங்க?” அவன் இதயாவிடம் கேள்வி கேட்க, “கொரோனா போகுற வரைக்கும்” பட்டென்று வந்தது அவள் பதில்.

“கொரோனா போகாது. அது போகவே கூடாதுன்னு, நானும், அண்ணாவும் சாமி கிட்ட கேட்டுருக்கோம்” அவளை விட அதீத வேகத்தில் கூறினாள் தியா.

தியாவை மடியில் இருத்தி கொண்டு, “தியா, அம்மா அப்பா எப்பவும் சேர்ந்தே தான் இருப்போம். அண்ணாவும், உன் கூட தான் இருப்பான். கடவுள் கிட்ட கொரோனா சரியாகட்டுமுன்னு தான் கேட்கணும். ஓகே?” விஷ்வா வினவுகையில், அஜய் அவன் கழுத்தை கட்டிக்கொண்டு, அவன் கன்னத்தில் இதழ் பதித்து, “தேங்க்ஸ் அப்பா” என்றான்.

தியாவும், அஜயும் அருகே இருக்கையில் இந்த உலகை வென்ற எண்ணம் விஷ்வாவிற்குள். இந்த காட்சியை பார்த்துக்கொண்டிருந்த இதயாவின் இதயம் நிறைவாக உணர்ந்தது.

“நீங்க கிளம்புங்க. கொஞ்ச நேரத்தில் வெளிய போவோம்” அவன் கூற, குழந்தைகள் வெளியே செல்ல தயாராயினர்.

இதயா, சமையலறை வேலையில் மூழ்க, அவள் அலைபேசி ஒலித்தது. “ஹே, நித்திலா சொல்லு. எப்படி இருக்க? எப்படி போகுது வேலை எல்லாம்?” என்று இதயா கேட்க, “அதை ஏன் கேட்குற. நம்ம வீட்டு ஆளுங்க இவ்வளவு சாப்பிடுறாங்கன்னு, இந்த லாக் டவுனில் தான் தெரியுது. சமைத்தே என் பிராணன் போய்டும் போல” நித்திலா நிறுத்த, இதயா “க்ளுக்…” என்று சிரித்தாள்.

“பாத்திரமோ, நம்ம வீடு கிச்சேன்ல இருந்து மட்டும் தான் வருதா? இல்லை பக்கத்துக்கு வீட்டுக்காரங்களும் போடுறாங்களான்னு தெரியலை அவ்வளவு விழுது” நித்திலா புலம்ப, இதயாவின் கண்களோ தனக்கு உதவி செய்து கொண்டிருந்த விஷ்வாவின் மேல் விழுந்தது.

விஷ்வாவின் கைகள் மட்டும் தான் வேலை செய்து கொண்டிருந்ததே ஒழிய, அவன் கண்கள் அவள் விழிகள், கன்னங்கள் என்று அவளை அளந்து கொண்டிருந்தது.

“உன் வீட்டுக்காரரை கொஞ்சம் ஹெல்ப் பண்ண சொல்லு. வீட்டு வேலை ரெண்டு பேரும் ஷேர் பண்ணி செஞ்சா தான் வசதியா இருக்கும்” இதயா ஆலோசனை கூற, “அது சரி, எல்லாரும் விஷ்வா மாதிரி இருப்பாங்கள்ளா?” என்று நித்திலா இழுக்க, இதயா ஸ்தம்பித்து நின்றாள்.

“என்ன சத்தத்தை காணும் இதயா? எல்லாரும் விஷ்வா மாதிரி தேடி வந்து உதவி செய்வாங்களா?” அவள் கேட்க, “உனக்கு விஷ்வாவை பத்தி எப்படி தெரியும் நித்திலா?” என்று இதயா கேட்க,”மொத்த ஆஃபீஸ்க்கும் தெரியும். அது விஷ்வாவின் பார்வையே சொல்லுச்சு” என்று நித்திலா கேலி பேசினாள்.

இதயா முகத்தில் வெட்கம் சூழ விஷ்வா புருவம் உயர்த்தினான்.

“எனக்கு அதுக்கு முன்னாடியே தெரியும். பாஸ், அவர் ஒய்ஃப் பத்தி சொல்லலியான்னு நீ ஆர்வமா கேட்டியே?அன்னைக்கே கண்டுபிடிச்சிட்டேன். நீயே சொல்லுவேன்னு பார்த்தா சொல்லவே இல்லை. நெக்ஸ்ட் மந்த் வீடு காலி பண்ண போறீங்கன்னு கேள்விப்பட்டேன். அது தான கூப்பிட்டேன்” நித்திலா கூற, “காலி பண்ணும் பொழுது சொல்லலாமுன்னு இருந்தேன்.” இதயா சமாளித்தாள்.

“சரி சரி… உன்னவர் கூப்பிடுவார். கிளம்பு கிளம்பு. இங்கையும் குழந்தைங்க எதையோ உருட்டுறாங்க. அப்புறம் கூப்பிடுறேன். பை… பை…” நித்திலா, பேச்சை முடித்துக்கொள்ள, விஷ்வா குறும்பாக புன்னகைத்தான்.

“விஷ்வா, நித்திலா தான் பேசினா. எல்லாருக்கும் எல்லாம் தெரிஞ்சிருக்கு.” அவள் கூற, அவன், “உம்…” கொட்டினான்.

“நீ ஆபீஸ் வந்தப்ப எல்லாரும் உன்னை சைட் அடிச்சாங்க. வயசு வித்தியாசம் இல்லாம.” அவள் கூற, அவன், “உம்…” கொட்டினான்.

“என்ன உம் கொட்டுற?” அவள் கேட்க, அவளை இடையோடு அணைத்து, “உன்னை தவிர எல்லாருக்கும் அன்னைக்கே என் மனசு தெரிஞ்சிருக்கும். உன்னை தவிர எல்லாரும் என்னை அன்னைக்கு சைட் அடிச்சாங்க” அவன் கூற, “இதுல பெருமை வேறையா?” இதயா சிடுசிடுத்தாள்.

“இல்லை, வருத்தம் தான்.  உலகமே என்னை பார்த்தாலும், நீ பார்க்குற மாதிரி ஆகுமா?” அவன் குரல் குழைந்தது.

“நீ அஜய் கிட்ட ஸ்ட்ரிக்டா இருக்கிற மாதிரி தியா கிட்ட இருக்க மாட்டேங்குற. தியாவுக்கு ரொம்ப செல்லம் கொடுக்காத” அவள் பேச்சை மாற்ற, “தியா ரொம்ப குட்டி பொண்ணு. அவளுக்கு அப்படி என்ன வயசு ஆகுது?” அவன் தன் மகளுக்கு வக்காலத்து வாங்கினான்.

“நீ வயசை தப்பு தப்பா குறைச்சி சொல்லுற” அவள் கூற, “அப்படியாவது நம்ம பிரிவின் காலம் என் மனசளவில் குறையுமுன்னு தான்” அவன் கூற, அவள் மௌனித்து கொண்டாள்.

“அப்பா, போலாமா?” தியாவின் குரல் ஓங்கி ஒலிக்க, இதயா விஷ்வாவை முறைத்து பார்த்தாள்.

“எங்கயும் போக வேண்டாம். சும்மா வீட்டுக்கு கீழ போய், யாரும் இல்லாத இடத்தில் விளையாடிட்டு வந்திருவோம். பசங்களுக்கும் வைட்டமின் டி கிடைக்கனுமில்லை. சுத்தமான காற்று, சன் லைட் வேணும் இதயா. வந்து கபசுர குடிநீர் குடிசிருவோம். சால்ட் வாட்டெர் காகில் பண்ணிருவோம்.” அவன் கூற, அவள் சம்மதமாக தலை அசைத்தாள்.

அனைவரும், அபார்ட்மெண்ட் உள்ளே இருக்கும் புல்வெளிக்கு செல்ல, அஜய் அவன் செய்த சிறிய பறக்கும் தட்டு போல் விமானம் வைத்து தியாவுக்கு விளையாட்டு காட்டினான்.

விஷ்வா, இதயா இருவரும் அவர்களை பார்த்து கொண்டிருந்தார்கள்.

“என் ட்ரொன் எப்படி?” அஜய் கேட்க, “அண்ணா சூப்பர்” என்று தியா தன் தமையனை பாராட்டினாள்.

சிறிது நேரம் விளையாடிவிட்டு, தியா தந்தையின் மடியில் அமர்ந்து கொள்ள, “அண்ணா, நீ என்னவாகப் போற?” தியா கேட்க, “அஸ்ட்ரோனட்…” என்றான் அஜய்.

“தியா, நீ என்னவாகப்போற?” அஜய் கேட்க, “நானும் உன்னை மாதிரியே அஸ்ட்ரோனட்…” தியா கூற, “தியா, அண்ணா அஸ்ட்ரோனட் ஆக முடியும். ஆனால்…” என்று இதயா பேச, “இதயா…” விஷ்வாவின் குரல் கர்ஜித்தது.

“தியா, என் ட்ரொன் பறக்குது. வா பிடிக்க போகலாம்” அஜய் துள்ளி ஓட, தியாவும் அவன் பின்னே ஓடினாள்.

“என்ன பேசுற இதயா?” அவன் அவளை கண்டிக்க, “ஏன் அவ மனசில் ஆசை வளர்க்கணும். கல்யாணத்துக்கு முன்னாடி படிச்சா தான் உண்டு. அப்புறம் நினைச்சாலும் படிக்க முடியாதுன்னு சொல்ல வேண்டியது தானே? கல்யாணத்துக்கு அப்புறம் அவளுக்கு கனவுன்னு இருக்க கூடாதுன்னு சொல்ல வேண்டியது தானே?” அவள் நேரடியாக கேட்டாள்.

‘இது தான், அன்று இதயாவின் புன்னகைக்கு பின் இருக்கும்  யோசனையா?’ அவன் புன்னகைத்துக் கொண்டான்.

“ஏன் இதயா நீ படிக்கலியா? உன் கனவை நீ நனவாக்கலை?” அவன் கேள்வி கேட்க, “அதுக்கு நான் இழந்தது அதிகம் விஷ்வா. எவ்வளவு சண்டை. எவ்வளவு வலி? என் வீட்டில் கூட எனக்கு சப்போர்ட் இல்லை. வாழ்க்கையே போச்சுன்னு பேசினாங்க. நான் தனியா, தியாவை கூட்டிட்டு வந்து எவ்வளவு கஷ்டபட்டேன்னு தெரியுமா விஷ்வா?” அவள் மீண்டும் கேள்வியையே தொடுத்தாள்.

“நீ செஞ்சது சரி தான் இதயா. நீ படிச்சது சரி. உன் கனவு சரி. உன் போராட்டம் சரி. ஆனால், நீ செஞ்ச முறை தான் தப்பு. என்னை விட்டுட்டு போயிருக்க கூடாது. தப்பு உன் மேல மட்டுமில்லை. என் மேலையும் இருக்கு. நாம பொறுமையா பேசி முடிவு எடுத்திருக்கலாம் இதயா. அவ்வுளவு தான்.” அவன் பேசினான். அவள் எதுவும் கூறவில்லை.

“அத்தை, மாமா, அம்மா, அப்பா எல்லாரும் என்னை மட்டும் தானே தப்பு சொல்றாங்க. நான் படிக்க நினைச்சது தானே தப்புன்னு சொல்றாங்க.” அவள் குற்ற உணர்ச்சியோடு பேசினாள்.

“அவங்க போன ஜெனரேஷன் இதயா. அவங்களை மாத்த முடியாது. சில விஷயங்களை பேசி புரிய வைக்கவும் முடியாது. நான் உன்னை தப்பு சொல்லலை. என் மனைவி அவள் கனவை சாதிச்சதுல எனக்கு பெருமை. கொஞ்சம் பொறுமையா இருந்திருக்கலாமுன்னு வருத்தம் மட்டும் தானே ஒழிய… ஆனால், என் பெருமை துளி கூட குறையலை” அவன் கூற, அவள் அவனை ஆச்சரியமாக பார்த்தாள்.

“உன் கூட நான் துணை நிற்கல்லைன்னு நான் இப்ப வரைக்கும் வருத்துப்படுறேன். இத்தனைக்கும், நான் துணை நிற்க கூடாதுன்னு கூட நினைக்கலை. ஆனால், ஏனோ…” அவன் மேலே பேச முடியாமல் திணறினான்.

“நீ பெருமைன்னு சொன்ன பார்த்தியா இது போதும் எனக்கு. நான் எவ்வளவு நாளும் போராடுவேன் என் வாழ்க்கையில்” இதயா கம்பீரமாக கூறினாள்.

“நிச்சயம் பெருமை தான் இதயா. என் மனைவி, என் பொண்ணுக்கு சிறந்த முன்னொடி. உன் கனவு, உன் முயற்சி இதெல்லாம் தான் தியாவுக்கு முன்னோடி.” அவன் கூற, இதயாவின் கண்கள் மலர்ந்தன.

“என் அம்மா, இப்படி இருந்தாங்க. நானும் இப்படி இருக்கணும்னு பெண் குழந்தைங்க நினைக்கணும். எங்க அம்மா படிச்சி அவங்க வாழ்க்கை சமையலறையோடு முடிஞ்சி போச்சு. அவங்க கனவு கருகி தான் போச்சு. என்னதும் கருகி தான் போகும்முன்னு அவங்க நினைச்சிற கூடாதில்லையா?” அவன் கூறினான்.

“டேய், உன் பொண்ணுக்குன்னா எப்படி ஜால்ரா போடுற? கேடி…”அவள் வம்பிழுக்க, “நான் என் பொண்டாட்டிக்கே ஜால்ரா போடுவேன். மகளுக்கு போட மாட்டேன்னா?” அவன் பெரிதாக சிரித்தான்.

“உன் ஆசை, கனவோட முக்கியத்துவம் என்னன்னு இங்க வரும் பொழுது கூட தெரியலை. ஆனால், தியாவை பார்க்கும் பொழுது எனக்கு புரியுது. ஷி இஸ் ஸோ ஸ்மார்ட். அவள் கனவுகளை, நாம தொலைக்க விடலாமா? அப்படி தானே உன்னதும்.” அவன் பேசி முடிக்கையில், அவள் கண்களில் கண்ணீர் பெருகியது.

“தேங்க்ஸ் விஷ்வா” அவள் கூற, “எதுக்கு இதயா?” அவன் புரியாமல் அவளை பார்த்தான்.

“என்னை தேடி, நீ தானே வந்த. இல்லைனா, கனவில் ஜெயித்தும் நான் வாழ்க்கையில் தோத்திருப்பேனே விஷ்வா. என் மகளுக்கும், மகனுக்கும் நானே தப்பான உதாரணமாக்கிருப்பேனே” அவள் கூற, “ச்…ச…” என்று அவன் இடைமறித்தான்.

“மனைவியின் கனவை எத்தனை கணவன்மார்கள் புரிந்து கொள்வார்கள். காலம் தாழ்ந்தாலும், எல்லா சூழ்நிலையையும் கடந்து, கனவுன்னு போனவ அப்படியே போன்னு சொல்லாம, என்னை தேடி வந்திருகியே விஷ்வா?” அவள் நிதர்சனத்தை கூறினாள்.

“அப்படி எல்லாம் விட்டுருவோமா? நான் இருக்கேன்னில்லை. அஜய் பாவம் என்னை மாதிரி.  என் மனைவியை குட்டி சுண்டக்காய் கிட்ட இருந்து காப்பாற்ற ஓடியே வந்துட்டேன்” அவன் பெருங்குரலில் சிரிக்க,

“என்ன சிரிக்குறீங்க?” என்று தியாவும், அஜயும் கேட்டு கொண்டே வர, “அஜய் அப்பா மாதிரி நல்லா படிச்சு வேலைக்கு போவான்னு அம்மா சொன்னாங்க. நான், தியா அம்மா மாதிரி நிறைய படிச்சு வேலைக்கு போவான்னு  சொன்னேன். சரி தானே?” என்று விஷ்வா கேட்க, “எஸ்… அஜய் அப்பா மாதிரி… தியா அம்மா மாதிரி…” என்று இருவரும் விஷ்வாவோடு ஹைஃபை செய்து குதுகலித்தனர்.

‘குழந்தைகளுக்கு நாம் தான் முன்னோடி. அனைத்திலும்… எங்கும், எதிலும் தவறிவிட கூடாது.’ என்று இருவரும் அர்த்தம் பொதிந்த பார்வையை பரிமாறிக் கொண்டனர்.

அந்த பார்வையில் புரிதலும், அன்பும் வழிந்தோடியது.

அவன் பார்வை புரிதலை பரிமாறுகையில் அவள் எண்ணம் அவனோடு  பயணித்தது. அவன்  பார்வை அன்பை பரிமாறுகையில், அவள் இதயம் அவன் அன்பில் நனைந்து நெகிழ்ந்து  அவனுக்காக எதையும் செய்யவே துடித்தது.

அன்றிரவு, வெளியே சென்று அனைவரும் உள்ளே நுழைய குளித்து விட்டு உணவை முடித்து கொண்டு உறங்க சென்றனர்.

குழந்தைகள் அவர்கள் அறையில் உறங்கிவிட, இதயா குளித்துவிட்டு இரவு உடையில் வர, அவன் இதழ்கள், “பிட் ரொமான்டிக்…” என்று முணுமுணுத்தது.

அவள் கண்கள் அவனை ஆர்வமாக பார்க்க அவள் மனதில் உள்ள சஞ்சலம் மறைந்து விட்டதை அவன் மனம் புரிந்து கொண்டது.

“நாம ஃபோட்டோ எடுப்போமா?” என்று கேட்டுக்கொண்டே, அவள் எதையோ தேட அவள் தேடிய பொருள் கிடைக்கவில்லை.

இதயாவின் பதட்டம் அதிகரிக்க, “என்ன தேடுற இதயா? உன் பொக்கிஷம் நான் இங்க இருக்கேன்” அவன் கேலி செய்ய, “இல்லை விஷ்வா, நான் இத்தனை நாள் இங்க தான் பத்திரமா வச்சிருந்தேன்” அவள் குரல் உடைய தயாரானது.

விஷ்வா அவன் சட்டை பையிலிருந்து கைகளை நீட்ட, “கேடி, எப்ப எடுத்த?” என்று அவள் முறைக்க, “என்னைக்கு பார்த்தேனோ, அன்னைக்கே எடுத்துட்டேன்” அவன் முன்பு பரிசுபொருளாய் கொடுத்த இதய வடிவ ரகசிய கேமரா.

“உன்னை…” அவள் அவன் காதை திருக, அவன் அதை படம் பிடித்து கொண்டான்.

“ஹௌ ரொமன்டிக்?” அவன் வினவ, “ஹைலி ரொமன்டிக்…” அவள் சிணுங்க, அவன் அவள் சிணுங்களுக்கு முற்று புள்ளி வைத்தான்.

அவள் அவன் வசம் இடம்மாற, அவன் ரசிக்க… அவள் சிவக்க… அவன் சிரிக்க… அவன் மென்மையாக பாடினான்.

“இளைய நிலா பொழிகிறதே

இதயம் வரை நனைகிறதே…”

அவன் அவள் முகம் பார்த்து பாட, அவள் தன் கண்களை இறுக மூடிக்கொண்டாள்.

“முகிலெடுத்து முகம் துடைத்து விடியும் வரும் நடை பழகும்

வான வீதியில் மேக ஊர்வலம்…”

அவள் முகம் நாணத்தை வெளிப்படுத்த, அவன் தன் விரல் கொண்டு நாணத்தை உரிமை கொண்டாட, அவள் கண்களோ பல உணர்வுகளை வெளிப்படுத்தியது.

“காணும்போதிலே ஆறுதல் தரும்

பருவ மகள் விழிகளிலே கனவு வரும்…”

அவன் அவள் விழிகளின் உணர்வுகளை உள்வாங்கி கொண்டே அவன் குரல் அன்பை வெளிப்படுத்தியது. அந்த அன்பில் அவள் இதயம் நனைந்தது.

காலப்போக்கில் நெகிழ்வதும், அன்பில் நனைவதும் தானே இதயம். அந்த சிறிய இதயத்தை அன்பால் நிரப்புவோமே! இதயம் அன்பில் நனையட்டுமே!

அவர்கள் இதயம் அன்பில் நனைகிறது!

அன்பில் மட்டுமில்லை, அவர்கள் இதயம் இப்பொழுது தனிமையில் அன்பில் நனைய விழைகிறது.

அனைவரின் இதயமும் அன்பில் நனையட்டும்… அன்பில் நனையட்டும்… அன்பில் நனையட்டும்… என்று வாழ்த்தி விடைப்பெறுவோம்.

இப்படிக்கு,

அகிலா கண்ணன்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!