IthayamNanaikirathey-4

IN_profile pic

IthayamNanaikirathey-4

இதயம் நனைகிறதே…

அத்தியாயம் – 4

“அம்மா… எனி ப்ரோப்லம்? கால் 911. போலீஸ் வருவாங்க.” என்றது குழந்தை தெளிவாக வந்தவனை மேலும் கீழும் பார்த்தபடி.

பதறிக்கொண்டு, குழந்தை அருகே மண்டியிட்டு அமர்ந்தாள் இதயா.

‘இந்த ஊரில் எதை ஒழுங்கா சொல்லி தராங்களோ இல்லையோ? இதை சரியா சொல்லி  கொடுத்திருவாங்க.’ மனதிற்குள் நொந்து கொண்டு,  “அதெல்லாம் வேண்டாம் தியா.” என்றாள் பொறுமையாக.

 அவள் கண்களில் மெல்லிய பதட்டம்.

‘நீயும் போலீஸுனு சொல்லு. பிள்ளையும் சொல்லுது. அப்படின்னு குற்றம் சாட்டுவானோ?’ என்ற எண்ணம் ஓடுகையில், விஷ்வா கலகலவென்று சிரித்தான்.

போலீஸ் என்று கூறியும் கலகலவென்று சிரிக்கும் மனிதனை வினோதமாக பார்த்தது குழந்தை.

இதயா சற்று கடுப்பாகவே அவனை பார்த்தாள்.

‘நான் சொன்னா திமிர். குழந்தை சொன்னா என்ன சிரிப்பு வேண்டி கிடக்கு?’ அவள் மௌனமாக நின்றாள்.

தியா அங்கிருந்து அசையும் எண்ணம் இல்லமால் தன் தாய்க்கு பாதுகாப்பு போல் முன்னே நின்று கொள்ள, “தியா, அம்மாவுக்கு தெரிஞ்சவங்க தான். என் கூட ஒர்க் பண்றவங்க.” என்று குழந்தைக்கு புரிய வைத்து, அவளை கிளப்பும் நோக்கோடு கூறினாள் இதயா.

“ஏன், உங்க முகம் டென்ஷனா இருக்கு?” என்று ஆங்கிலத்தில் கேட்டது குழந்தை. “ஆஃபிஸ் டென்ஷன். நீ போய் விளையாடு. அம்மா, இப்ப வரேன்” என்று அவள் சமாளிக்க, விஷ்வா இவரக்ளை மௌனமாக பார்த்து கொண்டிருந்தான்.

 தியா திரும்பி செல்ல… குழந்தையை வழி மறித்து, அவள் முன் மண்டியிட்டு தன் கையில் இருந்த பொம்மையை அவன் நீட்டினான்.

இப்பொழுது இதயா எழுந்து கொண்டாள்.

அவளுள் பதட்டம் சற்று அதிகரித்து கொண்டு தான் இருந்தது.

அத்தோடு, ‘விஷ்வா எப்பொழுது கிளம்புவான்?’ என்ற கேள்வியும் எழுந்தது.

  “தெரியாதவங்க கிட்ட நான் எதையும் வாங்க மாட்டேன்.” அழுத்தமாக இப்பொழுது தமிழில்  கூறியது குழந்தை மழலை குரலில்.

அவன் முகத்தில் மீண்டும் புன்முறுவல்.

 தன் கைகளை அவன் நட்போடு நீட்டி,”ஹை…“ என்று கூற, குழந்தை தன் கைகளை பின்னே கட்டி கொண்டது.

தியாவின் சின்ன சின்ன செயல் கூட அவனை வசிகரித்தது.

குழந்தையின் ஒதுக்கம் கூட, அவனை ரசிக்க வைத்தது. 

குழந்தையை கட்டி அணைத்து முத்தமிடும் பேராவல் அவனுள் எழுந்தது.

கட்டுபடுத்தி, அவளை ஆசையாக பார்த்துக் கொண்டிருந்தான்.

 “என் மிஸ். கோல்டிங் யாருக்கும் ஹாண்ட் ஷேக் குடுக்க கூடாதுன்னு சொல்லிருக்காங்க. சைனால இருந்து  ஏதோ வைரஸ் இங்கயும் வந்திருக்கு. ஸோசியல் டிஸ்டன்சிங் மெயின்டைன் பண்ண சொன்னாங்க.” என்று மழலையோடு கூறிக்கொண்டு, அவனிடமிருந்து சற்று விலகி  நடந்தாள் தியா.

அவன் எழுந்து கொண்டு, விளையாட சென்ற குழந்தையை பார்த்துக் கொண்டிருந்தான்.

“எதுக்கு வந்திருக்க விஷ்வா?” அவள் கேட்க, “உனக்கு தெரியாதா?” என்று  சற்று தள்ளி விளையாடி கொண்டிருந்த குழந்தையை பார்த்து கொண்டே பேசினான் விஷ்வா.

‘குழந்தைக்காகத்தான். உனக்காக இல்லை.’ என்று சொல்லாமல் சொன்னது அவன் செய்கை.

“நீ நினைக்கிறது நடக்காது.” அவள் சவால் விட, “குழந்தை நல்ல பொறுப்பா, அழகா, சமத்தா இருக்கா” அவன் அவள் பேசுவதற்கு சம்பந்தம் இல்லாமல் பேசினான்.

“என் வளர்ப்பு.” அவள் குரலில் பெருமிதம். சரேலென்று திரும்பி, அவளை கூர்மையாக பார்த்தான் அவன்.

அவன் கூர்மையான பார்வைக்கு சவால் விட்டது அவளின் கர்வ புன்னகை.

 “என் கிட்ட கேட்க உனக்கு எதுவுமே இல்லையா?” அவன் நூல் விட்டு பார்க்க, ‘என் மகனை பத்தி இவன் சொல்ல மாட்டான். என்கிட்டே இருந்து பிரிச்சிகிட்டு போவான். இப்ப கேட்டா மட்டும்…’ அவள் எண்ணம் தறிக்கெட்டு ஓடி, அவனுக்கு மௌனத்தையே பதிலாக கொடுத்தது.

  அவன் மீண்டும் அதே கேள்வியை கேட்க, “இருக்கு விஷ்வா. ஒரே ஒரு கேள்வி தான் இருக்கு. நீ எப்ப இங்க இருந்து கிளம்புவ?” அவள் கேட்க, அவன் அவளை கடுப்பாக பார்த்தான்.

“குளிர், ரொம்ப நேரம் வெளிய நின்னா அவளுக்கு தாங்காது. பசியோடு வந்திருப்பா, நான் அவளுக்கு ஏதாவது சாப்பிட குடுக்கணும்.” அவள் தியாவை பார்த்தபடி கூற, அவன் அவளை ஆழமாக பார்த்தான்.

“ம்…” மேலே எப்படி நெருங்குவது என்று அறியாமல் ஒரு  பெருமூச்சோடு, அவன் காரை நோக்கி சென்றான் விஷ்வா.

 எந்த காரணம் கொண்டு அவன் நெருங்கி வர நினைத்தானோ? அதே காரணம் கொண்டு அவனை விலக்கி நிறுத்தினாள் அவள்.

ஆனால், இந்த செயல் ஒரு தற்காலிக தீர்வே என்று அவளுக்கும் புரிந்து தான் இருந்தது.

விஷ்வா கிளம்பியதும், குழந்தையை அழைத்து கொண்டு அவள் வீட்டுக்கு சென்றாள்.

  ‘வீட்டுக்கு வான்னு சொன்னால், இவ குறைஞ்சா போய்டுவாளா?’ காரை செலுத்தி கொண்டே அவன் இதயாவை வஞ்சித்து கொண்டிருக்க, ‘இவன் ஏன் என் வீடு வரைக்கும் வர வேண்டும்?’ என்று தன் வீட்டுக்கு படி ஏறியவாறே அவனை அவள் வஞ்சித்து கொண்டிருந்தாள்.

அன்றிரவு…

இதயா, தூக்கம் வரமால் மெத்தையில் புரண்டு படுத்தாள்.

அவளுள் மெல்லிய பயம் சூழ்ந்து கொண்டது. கிட்டத்தட்ட ஐந்தாறு வருடங்களுக்கு முன் சூழ்ந்து கொண்டது போல் ஓர் அச்சம்.

‘இனி என் வாழ்க்கையின் நிலை என்ன?’ என்று எழுந்த அச்சம் போல், இன்றும்!

 “எல்லா பயத்தையும் ஒதுக்கிட்டு, தியா தான் என் வாழ்க்கைன்னு வாழ ஆரம்பிச்சி நிம்மதியா போய்கிட்டு இருக்கும் பொழுது விஷ்வா ஏன் வந்தான்?” அவள் சத்தமாக தனக்கு தானே கேட்க, தாயின் பேச்சு குரலில் குழந்தை திரும்பி படுத்தது.

ஏதோ, குழந்தை அவளை விட்டு விலகி செல்வது போன்ற எண்ணம் தோன்ற, “தியா எனக்கு தான். எனக்கு மட்டும் தான்.” கூறிக்கொண்டு, குழந்தையை இறுக கட்டிக்கொண்டு, உறங்க முயற்சித்தாள் இதயா.

  உறக்கம் அவள் விழிகளை தழுவுமுன், சூரியன் மேகத்தை தழுவிக்கொண்டு  விழித்துக் கொண்டான்.

 மறுநாள், அதே போல் பள்ளி, அலுவலகம் என குழந்தையை அனுப்பி விட்டு அவள் ஓட, இன்றும் மின்தூக்கியில் அவன்.

அவள் உள்ளே செல்லாமல் வெளியே நிற்க, “லிஃப்ட்டுக்கு லிஃப்ட் வேணுமா இதயா?” அவன் கண்சிமிட்ட, அவள் இதயம் வேகமாக துடிக்க ஆரம்பித்தது.

‘வெளியே நின்னா இவன் இடக்கு மடக்கா பேசுவான். உள்ள போனா, இவனுக்கு பயந்து போற மாதிரி இருக்கும். ரெண்டும் நடக்க  கூடாது.’  முடிவோடு மடமடவென்று படி ஏறினாள் இதயா.

 நான்கு மாடிகள், கஷ்டப்பட்டு அவள் படி ஏறி, அவள் இடத்திற்கு வந்து அவள் நாற்காலியில் அக்கடா என்று அமர எத்தனிக்கையில், அவளை அவன் இடத்திற்கு வரும்படி அழைத்தான் விஷ்வா.

அமர விடாமல், அவள் அலையும் படி வேலை ஏவிக் கொண்டே இருந்தான் விஷ்வா.

சில நிமிடங்களில் தொடங்கி அவள் பணி பல நிமிடங்களாக நீண்டு கொண்டே போக, அவள் கால்கள் நடுங்கியது.

அவளுக்கு சற்று ஓய்வு தேவைப்பட்டது. ஒரு நிமிடம் அமர வேண்டும் அவ்வுளவு தான். காலையில் எழுந்து, குழந்தைக்கு உணவு செய்து, குழந்தையை கிளப்பி, அலுவலகத்திற்கு வந்து ஒரு நிமிடம் அமர்ந்து ஒரு குட்டி ஆசுவாச மூச்சு. அவ்வளவு தான்.

அந்த நொடியை கொடுத்து விட கூடாதென்று கங்கணம் கட்டி கொண்டிருந்தான் விஷ்வா.

அவள் கால்கள் பரபரத்தது. கால்களில் ஆரம்பித்த வலி, அவள் இடுப்பில் பரவி, முதுகு வரை சென்றது. மடிக்கணினி முன் அவளை அமர விடாமல், மீட்டிங் மீட்டிங் என்று அவளை அலைக்கழித்து கொண்டிருந்தான் விஷ்வா.

மீட்டிங் முழுதும் நின்று கொண்டே, இதயவை விளக்கம் கொடுக்க செய்தான். நித்திலாவை, பார்க்க கூட முடியாமல், இதயாவின் வேலை அவளை இழுத்து கொண்டது என்றும் கூறலாம். இல்லை, அவளை தன் பக்கம் விஷ்வா இழுத்துக் கொண்டான் என்றும் கூறலாம்.

வேலையை முடித்து கொண்டு, அவள் உண்பதற்காக நித்திலாவோடு செல்ல, நித்திலாவிற்கு வேலை வந்துவிட, இன்றும் நித்திலாவால் இதயாவுடன் செல்ல முடியவில்லை.

நித்திலா, வேலை செய்து கொண்டிருந்தாலும், அவள் எண்ணம் இதயா விஷ்வாவை சுற்றி வந்தது.

‘எங்கையோ இடிக்குதே…’ அவள் சிந்தனை பதிலறியா கேள்வியோடு தடை பெற்று நின்றது.

சாப்பாட்டு மேஜையில் அவள் அமர்ந்திருக்க, இன்றும் அவள் முன் வந்து அமர்ந்தான் விஷ்வா.

‘என்ன நடந்திருக்கும்?’ என்று யூகித்துவிட்ட இதயா, எதுவும் பேசாமல் உண்ண, “கால் வலிக்குதா இதயா?” என்று கன அக்கறையாக கேட்டான் விஷ்வா.

இதயா கடுப்பின் உச்சத்தில் இருக்க, எதுவும் பேசாமல் மௌனமாக சாப்பிட்டு கொண்டிருந்தாள்.

அதை எல்லாம் கண்டு கொள்ளும் உத்தேசம் இல்லாமல், “லிஃப்ட்டில் வரலைனா, இப்படி தான் கால் வலிக்கும்.” அவன் அழுத்தமாக கூறிக் கொண்டே தான் வாங்கிய சண்ட்விச்சை உண்ண, அவள் முகத்தில் ஒரு மெல்லிய புன்னகை பரவியது.

  அவள் புன்னகையில் கடுப்பாகி, “கால் வலிக்குதா? கால் பிடிச்சி விடணுமா இதயா?” அவன் குரலில் நக்கல் வழிந்து ஓடியது.

   “சாண்ட்விச்சில் சீஸ் அதிகமா இருக்குனு நினைக்குறேன். உனக்கு கொழுப்பு அதிகமாகிட்டே இருக்கு.” அவள் அவனை உதாசீனப்படுத்த, “வொய்ப்புக்கு ஹஸ்பேண்ட் இதெல்லாம் பண்றத்தில் என்ன தப்பு?” அவன் கண் சிமிட்டினான்.

“யாருக்கு யார்  ஹஸ்பண்ட்?” அவள் கேட்க, அவன் அவளை ஆழமாக பார்த்தான்.

அவன் கண்கள் இன்றும் அவள் கழுத்தில் தாலியை தேடியது. அவள் சட்டையின் வழியே அவனால் எதையும் கண்டுபிடிக்க முடியவில்லை.

‘நான் இவன் கூட லிஃப்டில் வரலை. அதுக்காக மத்தியானம் வரைக்கும்  என்னை ஓடவிட்டுட்டு, இப்ப என்ன சமாதான செய்யுற மாதிரி குத்தல் பேச்சு?’ தன் சிந்தனையை ஒதுக்கிவிட்டு, அவனை பார்த்து  சிரித்து வைத்தாள் இதயா.

‘பேசியே வம்பு வளர்க்க பாக்குறான். இடம் கொடுக்க கூடாது.’ அவள் தனக்கு தானே வலியுறுத்திக் கொண்டாள்.

“இந்த சிரிப்பை பார்த்து நீ சந்தோஷமா இருக்கிறதா இந்த உலகம் உன்னை நம்பலாம் இதயா. இந்த சிரிப்புக்கு பின்னாடி இருக்கிற வலி எனக்கு தெரியும்” அவன் இதழ்கள் இப்பொழுது அக்கறையை மட்டுமே வெளிப்படுத்த, அவள் கண்கள் கலங்கியது.

விழி மூடி தன் முகத்தை திருப்பி கொண்டு, தன் கண்ணீரை மறைத்தாள் இதயா.

அவன் காலையில் இருந்து  காட்டிய கடினத்தில் கூட இதயாவின் கண்கள் கலங்கவில்லை. ஆனால், அவனின் கரிசன பேச்சு அவளை ஏதேதோ செய்தது.

‘இவன் ஏன் வந்தான்? எதுவும் மாறப்போவதில்லை.’ அவள் சிந்தனையோடு தன்னை சமன்படுத்தி கொள்ள ஆரம்பித்தாள்.

“இதயா” அவன் இப்பொழுது ஏதோ பேச ஆரம்பிக்க, கை உயர்த்தி அவனை நிறுத்தினாள் இதயா.

“எதையாவது பேசிறாத விஷ்வா. நான் உன்னை நாக்கை புடுங்கிக்குற மாதிரி கேள்வி கேட்பேன்.” என்று அவள் கர்ஜிக்க, “நம்ம மகனை பத்தி கேட்க வக்கில்லை. என்னை என்னடி கேட்ப  நாக்கை புடுங்கிக்குற மாதிரி?” அவனும் கர்ஜித்தான்.

“நான் கேட்கலியா விஷ்வா?” அவள் பார்வை அவன் காலை தொட்டு மீண்டது.

அவன் உடல் இறுக, “நான் இங்க வந்ததிலிருந்து நீ ஒரு வார்த்தை கேட்கலை.”

இதயா எதுவும் பேசவில்லை. 

உண்டுமுடித்து விட்டு, தண்ணீர் எடுக்க செல்ல எத்தனித்தாள். வழக்கமாக முன்னமே தண்ணீர் எடுத்து வந்துவிடுவாள்.

இன்று இருந்த மனநிலையில் அவள் மறந்திருக்க, அவள் தேவை அறிந்து  தண்ணீர் எடுக்க அவன் எழுந்தான்.

“எனக்கு யார் உதவியும் வேண்டாம்.” அவள் பல பொருள் பட கூற, “உனக்கு கால் வலிக்கும். காலையிலிருந்து நீ உட்காரவே இல்லை இதயா.” அவன் குரல் மீண்டும் அக்கறையை எடுத்து கொண்டு கரகரத்தது.

 அவன் பேசுவதை ஒதுக்கி அவள் எழ, அவனும் அவள் சொல்லை ஒதுக்கி எழ அவன் மீது மோதி சரிந்தாள் இதயா.

அவன் வழிய கரங்கள் அவளை அணைத்து கொண்டது. இல்லை இல்லை தாங்கி கொண்டது.

‘தாங்கி கொண்டதா? இல்லை அணைத்து கொண்டதா?’ அவளுள் கேள்வியோடு மின்சாரம் பாய்ந்தது.

பல வருடங்கள் கழித்து, அவனின் தீண்டல் அவளை ஏதேதோ செய்தது.

பண்ட் ஷர்ட் அணித்திருந்தாள். முழுதாக அவளை மறைத்திருந்த உடை தான். இருந்தாலும் அவன் தீண்டல் அவளை எப்படி இம்சிக்கின்றது என்று தான் அவளுக்கு புரியவில்லை.

அவன் மேல் கோபம் இல்லையா? வெறுப்பு இல்லையா? அவள் அறிவு கேள்வி எழுப்பி, அவன் கணவனே இல்லை என்று அடித்து கூறியது.

மனம், அதற்கு அறிவில்லை. சுயமரியாதை இல்லை. வெட்கமில்லை. மானங்கெட்டு அவன் தொடுகையில் குழைந்து நலிந்து கொண்டிருக்க, அவள் அறிவு அவள் மனதை ஒருமுக படுத்தியது.

அனைவரும் பார்க்குமுன் சரேல் என்று விலக்கி கொண்டாள். 

அனைவரும் அவர்கள் உணவில் கவனமாக இருக்க, இவர்களை யாரும் பார்க்கவில்லை. விழிகளை சுழலவிட்டு அதை உறுதி செய்து கொண்டு, நாற்காலியில் பதட்டமாக அமர்ந்தாள் இதயா.

“ரிலாக்ஸ்…” அவன் அவள் காதில் கிசுகிசுக்க, அவன் வெப்ப காற்றில் அவள் இன்னும் நடுங்கினாள்.

‘இத்தனை நெருக்கத்தில் பேசுகிறானே? நான் தான் இடம் கொடுத்து விட்டேனோ?’ அவனை முறைக்க அவள் விழிகள் விரும்பியது.

‘நான் அவன் கைவளைவில் தடுமாறினேனோ? அதை அவன் கண்டு கொண்டானோ?’ அவளை அவமானம் பிடுங்கி தின்றது.

‘விஷ்வாவின் நிலை என்ன?’ அறிய அவள் மனம் விரும்ப, ‘அவனுக்கென்ன, என்னை வேண்டாமென்று துரத்தியவன் தானே?’ அவள் மனமும், அறிவும் ஒரு சேர கடுகடுத்தது.

“நீ வெயிட் போடவே இல்லை இதயா.” அவன் கண்ணடிக்க, அவள் அறிவு கோபத்தை தான் வெளிப்படுத்தியது.

       ஆனால், முகமோ அவர்களின் பழைய நினைவில் சிவந்தது. கடந்த கால எண்ணங்கள் அலைமோத எத்தனிக்க, அதை கட்டாயப்படுத்தி ஒதுக்கி வைத்தாள் இதயா.

அவன் தண்ணீரை நீட்ட, எதுவும் பேசாமல் மடமடவென்று வாங்கி குடித்து விட்டு எதுவும் பேசாமல் அவள் இடத்திற்கு சென்றாள் இதயா.

அவளை வழியில் கண்ட நித்திலா, “இதயா, விஷ்வா கிட்ட சொல்லிடு. நான் இனி உன் கூட சாப்பிட வரமாட்டேன்னு. அதுக்காக, டெய்லி எனக்கு லன்ச் டைம்ல வேலை குடுக்க வேண்டாமுன்னு.” என்று நித்திலா கூற, “இல்லை… நித்திலா.” இதயா தடுமாறினாள்.

“இல்லை இதயா. நம்ம ஊரா இருந்தா ஒரு பானை சோத்துக்கு ஒரு சோறு பதம். யு.எஸ் அப்படிங்கிறதால, ஒரு முழு பிஸ்சாக்கு ஒரு பீஸ் பீட்சா பதம். இந்த ரெண்டு நாளில் நான் கண்டுபிடிச்சிட்டேன் விஷ்வாவின் எண்ணத்தை.” என்று நித்திலா சற்று கோபமாகவே பேசினாள்.

“நீ மேனேஜர். விஷ்வாக்கு உன் கூட சாப்பிட அவர் பொஸிஷன் இடம் கொடுக்குது. என் கூட சாப்பிட பிடிக்கலை. தட்’ஸ் ஓகே. நான் மத்த பிரெண்ட்ஸ் கூட போறேன்.” அவள் கூற, “நித்திலா…” என்று இதயா பேச தொடங்குமுன், நித்திலா தன் கைகளை உயர்த்தினாள்.

“ஸ்னாக்ஸ் டைம் உன்கூட தான் வருவேன். அதை அவர் கிட்ட தெளிவா சொல்லிடு.” அவள் மடமடவென்று செல்ல, ‘நித்திலா எதையும் கண்டுபிடித்து விட்டாளோ?’ என்று யோசனையோடு  இதயா அவள் இடத்திற்கு சென்றாள்.

நாட்கள் அதன் போக்கில் நகன்றது.  இரெண்டாயிரத்தி இருபது பிப்ரவரி பதினான்கு ‘வேலண்டைன்ஸ் டே’ தினமும் நெருங்கி கொண்டிருந்தது.

சைனாவில் இருந்து பரவ ஆரம்பித்த கொரோனா வைரஸ் மெல்ல மெல்ல அமெரிக்காவில் அதன் ஆதிக்கத்தை செலுத்த ஆரம்பித்திருந்தது.

 இதயா, விஷ்வா இருவரும் காதல் வைரஸில் தாக்கப்பட்டு உழல, அமெரிக்கா  கொரோனா வைரஸில் தாக்கப்பட்டு உழல ஆரம்பித்திருந்தது.

வருங்காலத்தில் வைரஸ் இவர்களுக்கு என்ன வைத்திருக்கிறதோ?

இதயம் நனையும்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!