ithayamnanaikirathey-5

IN_profile pic

ithayamnanaikirathey-5

இதயம் நனைகிறதே…

அத்தியாயம் – 5

அன்று வலெண்டைன்ஸ் டே.

  அமெரிக்க வழக்கப்படி, இங்கு குழந்தைகள் அவர்கள் வகுப்பில் இருக்கும் அனைத்து குழந்தைகளுக்கும் கிஃப்ட் கொடுத்து ஒவ்வொருவருக்கும் வாழ்த்து சொல்லி கொள்வது பழக்கம்.

 தியாவும், ஆர்வமாக அவள் பரிசு பொருள்களை அடுக்கி வைக்க, “நேரமாகிருச்சு சீக்கிரம் சாப்பிட வா. நானும் ஆஃபிஸ் கிளம்பனும்” என்று தியாவை விரட்டி கொண்டிருந்தாள் இதயா.

“இன்னும் கொஞ்ச நாளில் ஸ்கூல் கிளோஸ் பண்ணிருவாங்க. அப்ப, என்ன பண்ணுவீங்க மா?” என்று தியா கேட்க, “எதுக்கு?” என்று பதட்டமாக கேட்டாள் இதயா.

“ம்…. வைரஸ் இங்கயும் வந்திரும். வந்தா லீவு விடுவாங்கன்னு சொன்னாங்க.” என்று தியா மழலையில் தன் தலையை அசைத்து அசைத்து கூற, அவள் தலையில் செல்லமாக தட்டினாள் இதயா.

“இது தான் சாக்கு. லீவு விடுவாங்கன்னு நினைக்கறியா? அதெல்லாம் நடக்காது. சீக்கிரம் இட்லி சாப்பிடு.” என்று அவள் குழந்தைக்கு உருட்ட எத்தனிக்க, “அம்மா, கார்ன் ஃபிளக்ஸ் இல்லையா?  கார்ன் ஃபிளக்ஸ் எப்பயாவது தான் தருவீங்களா?” என்று தியா சினுங்கினாள்.

“அம்மாவுக்கு உடம்பு சரி இல்லைனா மட்டும் தான் கார்ன் ஃபிளக்ஸ். இல்லைனா கிடையாது. இட்லி தான் ஹெல்த்தி.” என்று அவள் இட்லியை சற்று பெரிய துண்டாக கொடுத்தாள்.

“இப்படி திணிச்சா, என் வாய் பெரிசாகி பார்க்க பேட் ஆகிரும்.” என்று தியா உதட்டை பிதுக்க, ‘அப்படியே அப்பனை மாதிரி வாய்.’ என்று மனதிற்குள் மகளையும், தன் கணவனையும் ஒரு சேர திட்டி கொண்டு அங்கிருந்து எழுந்தாள் இதயா.

“நான், தான் பெருசா கொடுக்கறேனில்லை? நீயே சாப்பிடு.” என்று இதயா முறுக்கி கொண்டாள்.

“மாம், லவ் யு சோ மச். வலெண்டைன்ஸ் டே அன்னைக்கு யாராவது கோபப்படுவாங்களா?” என்று அவள் நாற்காலியில் ஏறி, தன் தாயை கட்டிக்கொண்டாள்.

குழந்தையின் தொடுகை, செய்கை அவளுக்கு விஷ்வாவை நினைவு படுத்த, ‘அவனும் இப்படி தான் சமாதானம் செய்வான்’ தன் கண்களை இறுக மூடி தன்னை நிதானப்படுத்தி கொண்டாள் இதயா.

அதுவும், ‘வலெண்டைன்ஸ் டே…’ என்ற வார்த்தை அவனின் நினைவுகளை தட்டி எழுப்ப, மேலும் எதுவும் பேசாமல், தன் குழந்தைக்கு உருட்டி கொடுக்க ஆரம்பித்தாள் இதயா.

அதே சமயம், விஷ்வாவின் வீட்டில்.

‘வலெண்டைன்ஸ் டே…’ விஷ்வாவின் எண்ணம் அதைச் சுற்றியே வந்தது.

சில வருடங்களுக்கு பின், இந்த நாள் அவன் நினைவலைகளை தட்டி எழுப்பியது.

‘இதயாவை தினமும் பார்ப்பதால், இந்த எண்ணமோ?’ அவனுள் கேள்வி கணைகள்.

      “அப்பா….” அலறினான் ஒன்பது வயது சிறுவன்.

     “சொல்லு அஜய்!” தன் சிந்தனையிலிருந்து மீண்டவனாக நிதானமாக நடந்து வந்தான் விஷ்வா.

      “லாக் டௌன்… ப்ளடி வைரஸ்… ஈட்டிங் ஆள்.” என்று தன் கால்களை எட்டி உதைத்தான் அஜய்  அவன் அலைபேசியை பார்த்தபடியே.

“சைனாவில் தானே இருக்கு. இங்க எல்லாம் வராது.” என்று விஷ்வா எடுத்துரைக்க, “அதெல்லாம் இல்லை அப்பா. இங்க கொஞ்சம் வந்திருச்சு. ஸ்கூல்ஸ் எல்லாம் கிளோஸ் பண்ணுவாங்கனு தான் சொன்னாங்க.” என்று தெளிவாக கூறினான் அந்த சிறுவன்.

“இதெல்லாம் எதுக்கு டா ஸ்கூலில் பேசுறீங்க?” என்று கேட்டுக் கொண்டே, “எல்லாருக்கும் உள்ளது தானே நமக்கும்.” என்று விஷ்வா பொறுமையாகக் கூறினான்.

 “எல்லாருக்கும் நல்லா ஃபூட் கிடைக்கும். நமக்கு?” என்று கேலியாக நாக்கை வெளியே நீட்டினான் அஜய்.

தன் மகனின் குறும்பு பேச்சு மனைவியை நினைவு படுத்த, விஷ்வா மௌனமாக அஜயை பார்த்தான்.

    “நோ இந்தியன் ஹோட்டேல்ஸ்…நோ பிஸ்சா… நோ பர்கேர்ஸ்… ஸோ ஸாட்.” என்று  அஜய் முகத்தை சுருக்க, “நான் பண்றேன் டா… மூணு வேளையும்.” விஷ்வா தன் மகனைச் சமாதான படுத்தினான்.

   “போற உசிரு கொரானாவிலே போகட்டும். உங்க குக்கிங் ஸ்கில் டெவெலப் பண்ண, நான் என்ன டெஸ்ட் எலியா?” என்று அஜய் பளிச்சென்று கேட்டான்.

“இந்த காலத்து பிள்ளைகளுக்கு வாய் நீளம் தான். நான் எங்க அப்பா கிட்ட இப்படி பேசினதே இல்லை தெரியுமா?” என்று விஷ்வா தன் மகனை தன்மையாகவே கண்டித்தான்.

        அஜய் கண்ணாடி முன் நின்று கொண்டு, “வாய் நீளமா இல்லையே.” என்று தீவிரமாகப் பதில் கூற, “டேய்…” தன் மகனை மிரட்டினான் விஷ்வா.

   மகனை மிரட்டினாலும், அவன் எண்ணங்கள் எங்கோ தேங்கி இருக்க, “அப்பா! வாட்ஸ் ஈட்டிங் யுவர் பிரைன்?” என்று கேட்டான் அஜய்.

    “நத்திங்….” என்று விஷ்வா கூற, “உங்களுக்கே உங்க குக்கிங் நினைச்சி பயம். ஹோட்டல் இல்லைன்னு என்ன பண்ண போறோமுன்னு யோசனை.” அஜய் கூற, சிரித்துக் கொண்டான் விஷ்வா.

        விஷ்வா வீட்டை பார்க்க, அது அலங்கோலமாக கிடந்தது.

 “இந்த குப்பைக்கே கொரோனா வரும்.” என்று விஷ்வா தன் மகனை  மிரட்ட, “ஹா… ஹா… குப்பையில் இருந்து வெளிய போக வழி தெரியாமல் செத்துரும். அதால,  நாம இல்லாம வாழ முடியாது.” அஜய் அவனுக்குத் தெரிந்ததைக் கூற, விஷ்வா தன் மகனை முறைத்தான்.

    “அப்படியே தப்பிச்சு வெளிய வந்தாலும், உங்க சாப்பாட்டை சாப்பிட்டு செத்துரும்.” என்று கூறிக்கொண்டு, தன் அறைக்குள் ஒழிந்து கொண்டான் அஜய்.

“இப்படி எல்லாம் பேசி சமாளிக்க முடியாது. ஒழுங்கா கார்ன் ஃபிளக்ஸ் சாப்பிட வா.” விஷ்வா தன் மகனை மிரட்டினான்.

“முடியாது அப்பா. அம்மா கிட்ட போலாமுன்னு சொல்லி தான் இங்க கூட்டிட்டு வந்தீங்க. இன்னும் போகலை. அதுவும் இந்த  கார்ன் ஃபிளக்ஸ் பாலில் போட்டு குடுக்கும் போதெல்லாம், ஏதோ நாய்க்குட்டிக்கு பௌலில் வைக்குற பால் மாதிரி இருக்கு. இட் டேஸ்ட்ஸ் லைக் ஹெல்.” என்று அஜய் பிடிவாதமாக நின்று கொண்டிருந்தான்.

‘இவன் இத்தனை பிடிவாதம் செய்வதில்லை. ஆனால், யூ. எஸ் வந்த இந்த சில மாதங்களில் இங்கிருக்கும் தனிமை அஜயை மாற்றிவிட்டது.’ என்ற எண்ணம் அவனுக்கு தோன்றியது.

‘தாயின் மீது பாசமா? அப்படி எல்லாம் சொல்ல முடியாது. இத்தனை வருஷம் எல்லாம் பார்க்க கூட இல்லாதவ மேல எப்படி பாசம் வரும்? ஆனால் ஏக்கம்?’ என்ற எண்ணம் தோன்ற, ‘இதை விரைவில் சரி செய்ய வேண்டும்.’ முடிவெடுத்துக் கொண்டான் விஷ்வா.

“சீக்கிரம் அம்மாவை பார்க்க போகலாம்.” அவன் கூற, “இப்படி தான் சொல்றீங்க. கூட்டிட்டே போகலை அப்பா.” சிறுவன் சலிப்பாக தோளை குலுக்கினான்.

“உனக்கு ஒரு தங்கச்சியும் இருக்கா. “விஷ்வா தன் மகனின் உணர்வுகளை கவனித்தபடி கூற, சிறுவனின் முகத்தில் அதிர்ச்சி.

அவன் எதுவும் பேசவில்லை.

“அஜய்…” விஷ்வா அழைக்க, “ம்… ஏன் இத்தனை நாள் சொல்லலை.” மகன் கேட்க, பதில் கூற வழி இல்லாமல் மௌனித்துக் கொண்டான் விஷ்வா.

“சாப்பிட வா.” விஷ்வா கூற, “தோசை தாங்க. கார்ன் ஃபிளக்ஸ் வேண்டாம்.” உறுதியாக கூறினான் அஜய்.

“என் தங்கச்சி பேர் என்ன?” அஜய் கேட்க, “தியா” என்று விஷ்வா கூற, “அவ நான் என்ன சொன்னாலும் கேட்பாளா?” என்று தோரணையாக புருவம் உயர்த்தினான் அஜய்.

அவனுக்கு தன் மகளின் நேற்றைய செய்கை நினைவு வந்தது. அவன் முகத்தில் ஒரு மெல்லிய புன்னகை பூத்தது.

‘நீ சொல்றதை கேட்டுட்டு தான் மறுவேலை பார்ப்பா.’ அவன் நக்கலாக எண்ணி கொண்டான்.

“கேட்பாளா?” அவன் அழுத்தமாக கேட்டான்.

“கேட்பா… கேட்பா… நான் உனக்கு ரோஸ்ட் பண்றேன். நீ சாப்பிட வா.” என்று கூறிக்கொண்டு மகனுக்காக தோசையை வார்த்தான் விஷ்வா.

அஜய் தன் பள்ளி பையை எடுத்து வைத்துவிட்டு, சாப்பிட வந்தான்.

தோசை கருகி, உருவமற்று இருந்தது.

“அப்பா, வாட் இஸ் திஸ்?” என்று முகம் சுழித்தான் அஜய்.

“ரோஸ்ட் ரோஸ்டேட் ஆகிருச்சு அஜய்.” என்று பரிதாபமாக சிரித்தான் விஷ்வா.

“அப்பா, கருகி போன தோசையை கொடுத்து ரோஸ்டேட் அப்படின்னு இங்கிலீஷ்ல விளையாடுறீங்க. இதுக்கு நான் கார்ன் ஃபிளக்ஸே சாப்பிட்டிருப்பேன்.” அஜய் கடுப்படித்தான்.

“நீ இங்லீஷ் பேசலாம். நான் பேச கூடாதா?” என்பது போன்ற பல சமாதானங்கள் பேசி, தன் மகனை பள்ளிக்கு கிளப்பினான் விஷ்வா.

  விஷ்வா அலுவலகத்திற்கு சென்றான். மின்தூக்கியில், நின்று கொண்டிருந்தாள் இதயா. முன்போல், அவர்களுக்குள் எந்த மோதலும் இல்லை. சமாதானமும் இல்லை. இருவரும் சக ஊழியர்களாக அவர்கள் நாட்களை நகர்த்த ஆரம்பித்திருந்தனர்.

  ‘விஷ்வா எதற்காக வந்திருக்கிறான்? மகன் எங்கே?’ போன்ற பதிலறியா கேள்விகள் அவளுள்.  ‘இதயாவை எப்படி நெருங்குவது? அடுத்து என்ன செய்வது?’ போன்ற கேள்விகள் அவனுள்.

இன்று, அஜய் கேட்ட கேள்விகளில் அவனுள் அழுத்தம் கூடி இருக்க, சரேலென்று மின்தூக்கியில் நுழைந்தான் விஷ்வா. இதயாவை அவன் கவனிக்கவில்லை.

முதலில் அவன் தலை குனிந்திருந்தது. அதன் பின் அவன் அலைபேசியை நோண்டியபடியே  மின்தூக்கியில் இருந்து வெளியேறி அவன் அறைக்குள் நுழைந்து கொண்டான்.

இதயாவும் தோள்களை குலுக்கி கொண்டாள்.

அவன் அறையில் மேஜையில், பல நிற ரோஜாக்கள் கலந்த பூங்கோத்து, ‘வாலெண்டைன்ஸ் டே…’ என்ற வாழ்த்தோடு அவனை பார்த்து சிரித்தது.

அதிலிருந்த சிவப்பு ரோஜாவை மட்டும் எடுத்தான். அவன் விரல்கள், அந்த சிவப்பு ரோஜா  இதழ்களை மென்மையாக நீவியது.

அவன் தவிர்க்க நினைத்தும், அவன் நினைவுகள் பின்னோக்கி சென்றது.

இதயம் நனையும்…

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!