ithayamnanaikirathey-7

IN_profile pic

ithayamnanaikirathey-7

இதயம் நனைகிறதே…

அத்தியாயம் – 7

“நல்லாருக்கிற புருஷன் பொண்டாட்டியையே இப்படி ஒரே வீட்டில் வச்சி பூட்டினா டைவோர்ஸ் தான் வரும். நாம டைவோர்ஸ் வரைக்கும் போன புருஷன் பொண்டாட்டி நமக்கு என்ன நடக்கும்?” என்று விஷ்வா அவர்கள் ஹாலில் இருந்த சோபாவில் நடுநாயமாக அமர்ந்து நக்கலாக கேட்டான்.

          இதயா அவள் அருகே இருந்த, புத்தகத்தை அவன் மீது எரிய, அவள்  செய்கையில் அவன் கலகலவென்று சிரித்தான்.

       அவன் சிரிப்பை பார்த்த இதயா அவனை கோபமாக முறைத்தாள்.

 விஷ்வா வேறு ஒரு  குளியலறைக்குள் நுழைந்து கொள்ள,  அஜய் குளித்து விட்டு வெளியே வந்தான்.

   வந்தவன், தன் தாய் அருகே உறங்கி கொண்டிருந்த தங்கையை பார்த்தான்.

     அஜயிடம் என்ன பேசுவது என்று இதயாவுக்கு தெரியவில்லை.

அவனிடம் பேச, அத்தனை ஆவல், கேட்க பல கேள்விகள். ஆனால், எங்க ஆரம்பிப்பது என்று தான் தெரியவில்லை.

       ‘எத்தனை வருடங்கள்?’ அவள் இதயம் அதை எண்ணுகையில் சுக்கு நூறாக உடைந்து விடுமோ, என்பது போல் படபடத்து. அவன் கண்கள் கண்ணீரை சொரிய, பளபளத்தது.

   ‘அஜய் முன்னாடி அழ கூடாது. பிள்ளை பயந்திரும்.’ அவள் அறிவு கட்டளையிட, தன்னை நிதானப்படுத்திக் கொண்டாள் இதயா.

கண்கள் பளபளக்க, தன் மகனை ஆசையாக பார்த்து கொண்டிருந்தாள் இதயா. அவள் விரல்கள், அவன் தலை கோத பரபரத்து நடுங்கியது.

   மூச்சை உள்ளித்து, தன் ஆசைகளை அடக்கி கொண்டாள். ‘அம்மா என்று கதறி, தன்னுள் தன் மகன் புதைந்து விட மாட்டானா?’ என்ற அவள் ஏக்கம் நிராசையாக நொடி நொடியாக கழிந்து கொண்டிருந்தது.

அஜயின் மனநிலையோ, இதயாவிற்கு சற்றும் குறைவில்லாமல் குழப்பத்தில் இருந்தது.

தங்கையை ஆசையாக பார்த்தான்.

‘தியா…’ மனதிற்குள் அவள் பெயரை உற்சாகமாக, ஆசையாக, உரிமையாக, சற்று அதிகாரமாகவும் சொல்லி கொண்டான் அஜய். 

  தன் தாய் முன் இருந்த சோபாவில் அமர்ந்து கொண்டான் அஜய். அவன் அமர்ந்திருந்த தொனி சற்று விஷ்வாவை நினைவு படுத்தியது.

           இதயா, அவன் செய்கையை, தன் மனம் என்னும் பொக்கிஷ பேழைக்குள் பொதித்து கொண்டாள்.

       ‘எத்தனை நாட்கள் அஜய் என்னோடு இருப்பான்?’ என்ற ஏக்கம் கலந்த கேள்வி அவளுள்.

    அஜயின் கண்கள், தங்கையை பார்ப்பது போல், தன் தாயையும் பார்த்து கொண்டது. தங்கை மீது சற்று பொறாமையும் எட்டி பார்த்தது.

    ‘தியா மட்டும், அம்மா பக்கத்துல இப்படி படுத்திருக்கா?’ என்ற ஏக்கம் அவனுள் எழுந்தது.

       அஜய்க்கு, தாய் அருகே செல்ல கொள்ளை ஆசை எழுந்தது. அவன் கண்கள் அதை பிரதிபலிக்க, இதயா தலை அசைத்து அவனை அருகே அழைத்தாள்.

     அஜய் அவள் அருகே சென்றான். அவன் ஆசைக்கு, அவள் அழைப்புக்கு இசைந்து, இதயா பக்கத்தில் அமர்ந்து கொண்டான்.

        சிறு இடைவெளிவிட்டே! அந்த சிறு இடைவெளி, இத்தனை கால வருடத்தின் இடைவெளியை கூறுவது போல் இருந்தது இதயாவிற்கு.

   “அம்மா, ஏதாவது சாப்பிட செஞ்சி தரட்டுமா?” ஆசையாக கேட்டாள் இதயா.

“இல்லை, வேணாம்.” மறுப்பாக தலை அசைத்தான் அஜய்.

    “ஏண்டா?” அவள் கேட்க, “அப்பா இப்ப தான் பீட்சா வாங்கி கொடுத்தாங்க.” அஜய்  கூற, ‘இந்த நேரம் பிள்ளைக்கு வெளிய சாப்பிட வாங்கி குடுத்திருக்கான். என் பிள்ளையை என்கிட்டே கூட்டிட்டு வர வேண்டியது தானே?’ இதயவின் மனம் ஒருபக்கம் கருவிக்கொண்டது.

  அதே நேரம், அஜய் தன்னை ‘அம்மா’ என்று அழைக்கவில்லை என்றும் குறித்து கொண்டது.

           அஜய் தன் கண்களை சுழல விட்டு தன் தந்தையை தேடினான்.

அவன் கண்கள் அவன் எதையோ கேட்க விழைவதை உணர்த்தியது.

        ஏதோ தனக்கு தானே சிந்தித்து கொண்டவன் போல் தலை அசைத்து மௌனித்து கொண்டான்.

              ‘எல்லாம் பெரிய மனுஷன் மாதிரி செய்யறான்.’ தன் மகனை ஆர்வமாக பார்த்து புன்னகைத்து கொண்டாள் இதயா.

    “அஜய் தூங்க போ. அம்மா கிட்ட நாளைக்கு பேசிக்கலாம்.” விஷ்வா கூற, இதயா விலுக்கென்று தலையை உயர்த்தி அவனை பார்த்தாள்.

                   ‘அஜய்க்கு நான் அம்மாங்கிறதேல்லாம் உனக்கு தெரியுமா?’ என்பது போல் இருந்தது அவள் பார்வை.

     அவள் பார்வையை கண்டுகொள்ள தான் யாரு அங்கில்லை.

அஜய், ‘எங்கு படுக்க?’ என்று போல் இதயாவை பார்க்க, “என்னடா இவ்வளவு அமைதியா இருக்க?” என்று கேட்டாள் இதயா.

   “அமைதி எல்லாம் கிடையாது. ஏதோ, இன்னைக்கு இப்படி இருக்கான்.” என்று விஷ்வா கூற, இப்பொழுது இதயா அவனை கண்டு கொள்ளவில்லை.

  “உனக்கு எங்க வேணுமோ, அங்க படுத்துக்கோ.” இதயா அவர்களின் படுக்கை அறையை முதலில்  காட்டினாள். படுக்கை அறை, சற்று பெரியதாக இருந்தது.

 மற்றோரு அறையையும் காட்டினாள்.

 “இது டாய்ஸ் ரூம். இங்க பங்க் பெட்டும் இருக்கு. தியா சில சமயம் இங்க படுக்கணும்னு சொல்லுவா. சில சமயம் அங்க படுக்கணும்னு சொல்லுவா. அது தான், ரெண்டு இடமும் ரெடியா இருக்கு.” என்று இதயா கூறினாள்.

     விஷ்வா சோபாவில் அமர்ந்தபடி, அவர்கள் பேசுவதை கேட்டு கொண்டிருந்தான்.

    “நான் இங்க படுக்கறேன்.” என்று விளையாட்டு சாமான்கள் இருக்கும் அறையை காட்டினான் அஜய்.

   இதயா, அவனுக்கு உதவ, “எனக்கு, இந்த பிங்க் கலர் பெட்ஷீட் வேணாம். இட்’ஸ் நாட் ஃபார் பாய்ஸ்.” என்று அவன் முகத்தை சுழிக்க, இதயாவின் முகத்தில் ஒரு புன்னகை பூத்தது.

   தன் மகனின் தலை கலைத்து விளையாடும் பேராவல் அவளுள் எழுந்தது.

      ‘அஜய் என்ன நினைப்பான். அவன் இன்னும் என்னை அம்மானு கூப்பிடலியே. நான் தொட்டா அவனுக்கு பிடிக்குமோ? பிடிக்காதோ?’ போன்ற கேள்விகளோடு, தன் மனதை கட்டுப்படுத்தி, அவனுக்கு வேறு நிறத்தில் ஒரு போர்வை விரித்து கொடுத்து உதவினாள் இதயா.

  “குட் நைட்.” அஜய் அவளை நாசுக்காக வெளியே போக சொல்லிவிட, தன் மகனை விட்டு அந்த அறையை விட்டு வெளியே செல்ல அவள் மனம் ஒப்பவில்லை என்றாலும், இதயா மின் விளக்கை அணைத்து விட்டு, விடிவிளக்கை ஏற்றினாள்.

    முடிந்த அளவு அந்த அறையில் நேரத்தை செலவழித்து விட்டு,  அந்த அறையை விட்டு வெளியேறினாள் இதயா.

    அஜய், இறுக கண் மூடுவதை போல் பாசாங்கு செய்து கொண்டு,அறையிலிருக்கும்  தன் தாயின் செய்கையை பார்த்து கொண்டிருந்தான்.

 இதயா வெளியே சென்றதும், அஜயின் கண்கள் தன் தாயை ஏக்கத்தோடு தேடியது. தன் தாயிடம் நெருங்க அவன் மனம் துடித்தாலும், நெருங்க ஏதோ ஒன்று அவனை தடுத்து விலகி நிற்கவே செய்தது.

“அஜய் தனியா படுத்துப்பானா?” வெளியே வந்து இதயா  விஷ்வாவிடம் கேட்க, “எட்டு முடிந்து ஒன்பது அவனுக்கு. அதெல்லாம் தனியா படுப்பான். படுத்த வேகத்தில் தூங்கிருவான்.” அவன் கூற இதயா மௌனித்து கொண்டாள்.

  இதயா, மெளனமாக தியா அருகே அமர்ந்திருந்தாள். தியா ஹாலில் படுத்திருந்தாள்.

 “தியாவை மெத்தையில் படுக்க வைக்கலியா?” அவன் கேட்டு கொண்டே தியா அருகே அமர்ந்து கொண்டான். இதயா அருகிலும் தான்.

“அவ, வேண்டாமுன்னு சொல்லிட்டா. டீ.வி. பார்த்துட்டே தூங்கிட்டா.” சோபாவில் சாய்ந்து கொண்டே கண்களை இறுக மூடி கொண்டாள் இதயா.

தியா சிணுங்க, அவளை தூக்கி மடியில் போட்டு கொண்டாள் இதயா. நேரம் சென்று கொண்டே இருந்தது. அங்கு மௌனம் மட்டுமே நிலவியது.

“எவ்வளவு நேரம் இப்படி உட்காந்திருப்ப இதயா?” அவன் அக்கறையோடு  கேட்க, “உன்னை யாரும் உட்கார சொல்லலை. நீ போய் படு. இல்லைனா உன் வீட்டுக்கு கிளம்பு.” அவள் அசட்டையாக கூறினாள்.

“இதயா” அவன் குரலில் இப்பொழுது அழுத்தம். சிறிது கோபமும் கூட.

“நீ எதுக்கு வந்திருக்க?” அவள் கேட்க, “தியாவுக்கு உடம்பு சரியில்லை. சூழ்நிலை சரி இல்லை. லாக் டவுன். எல்லாரும் வீடுக்குள்ள தான். அதுக்காக தான் வந்திருக்கேன்.” அவன் நிதானமாக கூறினான்.

“இதை என்ன நம்ப சொல்றியா?” அவள் கேட்க, “சரி, நம்ப வேண்டாம். நீயே சொல்லேன். நான் எதுக்கு வந்திருக்கேன்?” அவன் நமட்டு சிரிப்போடு கேட்டான்.

“அது தான் எனக்கு புரியலை.” அவள் எகிற அந்த சத்தத்தில், “அம்மா…” அழுதாள் தியா.

 தட்டிக் கொடுத்தும் தியா விம்ம, மகளை தோளில் போட்டு கொண்டு உலாத்த ஆரம்பித்தாள் இதயா.

விஷ்வாவுக்கு அவளை பார்க்க பாவமாக இருந்தது.

 ‘இவ்வளவு பெரிய குழந்தையை இவள் எப்படி சுமக்கிறாள்? நான் இவளை எப்படி எல்லாம் பார்த்து கொண்டேன்? இதற்கா நாங்கள் காதலித்தோம்.’ அவன் மனம் குற்ற உணர்ச்சியில் தடுமாறியது.

குழந்தையை பெற்றுக் கொள்ளவும் தயக்கமாக இருந்தது. உடல்நிலை சரி இல்லாத குழந்தை.

 ‘புதிய நபர் கிட்ட வருவாளா?’ அவனுள் சந்தேகம்.

விம்மல் குறைந்து, தியா உறங்க ஆரம்பிக்க, “அவளை கீழ போடு இதயா.” அவன் மெதுவாக கூறினான்.

 “முழிச்சிப்பா விஷ்வா. மத்த நேரம் எல்லாம் சமத்து. உடம்பு சரி இல்லைனா இப்படி தான் படுத்துவா.” அவள் இயல்பாக பேச, அதை மனதில் குறித்து கொண்டான் விஷ்வா.

‘இவளுக்கு எல்லாத்தயும் விட தியா மேல பாசம் அதிகம் தான்.’ அவன் முகத்தில் புன்னகை.

இதயாவின் கை விண்விண்ணென்று வலிக்க, தியாவை தோள் மாற்ற முற்பட, விஷ்வா தன் மகளை கைகளில் வாங்கி முந்திக் கொண்டான்.

“தியா அழுவா” என்று இதயாவின் குரல் படபடத்தது. கைவலி முற்றிலும் மறந்து மனவலி பாரமாக ஏறிக் கொண்டது. 

தன் பொருள் எதையோ இழந்துவிட்ட பதட்டம் அவள் முகத்தில். அவள் உடலில். அவள் உணர்வில்.

‘தியா அழுதுவிடுவாளோ?’ அவனுக்குள்ளும் அந்த அச்சம் இருக்கத்தான் செய்தது. இருந்தும் தைரியமாக கூறினான்.

 “அதெல்லாம் அழ மாட்டா. நீ எவ்வளவு நேரம் கையிலையே வச்சிருப்ப? உனக்கு கை வலிக்கும்.” குழந்தை எழுந்து விட கூடாது என்று மெதுவாக பேசினான்.

அவளும் குழந்தையின் உறக்கம் கலைந்து விட கூடாது என்று மெல்லமாகவே பேசினாள்.

“இத்தனை வருஷம் இல்லாத அக்கறை. நான் தான் இத்தனை வருஷம் தியாவை பார்த்தேன். நீ இல்லை.” அவளும் அதே அழுத்தத்தோடு பேசினாள்.

“நீ வாய்ப்பு கொடுக்கலை.” அவன் குரல் கர்ஜித்தது.

“வாய்ப்புக்கு அவசியம் வரலை.” அவளின் குரலிலும் கர்ஜனை.

அவன் மேலும் பேசவில்லை. தியா  உறங்கி விடவே, அவளை படுக்க வைத்தான் விஷ்வா.

 “சரி இதயா, குழந்தைங்க தூங்கிட்டாங்க. நாம்ம, எங்க படுக்க போறோம்?” அவன் கண்சிமிட்டினான்.

“டேய்…” அவள் அவனை கோபமாக நெருங்கி நின்றாள்.

 “ஐ அம் வெயிட்டிங்.” அவன் உதட்டை சுழித்து, தன் கன்னத்தை அவள் முன் நீட்டினான்.

“நீ என்ன கொடுத்தாலும் வாங்கிக்க நான் ரெடி.” அவன் வார்த்தைகள் மட்டுமே, என்ன கொடுத்தாலும் என்று கூறியது. அவன் விழிகளோ, அவள் உதட்டை பார்த்துக் கொண்டு சிரித்தது.

அவன் செய்கை, அவளை அசைத்து பார்த்தது.

அவள் எண்ணங்கள் கடந்த காலத்தை நோக்கி தறி கேட்டு ஓட ஆரம்பித்தது.

இப்படி அவன் கன்னத்தை காட்டி கொண்டு நின்றால், அடுத்து அரங்கேறும் காட்சி அவள் கண்முன் விரிய, நொடி பொழுதில் அவள் முகம் இப்பொழுது வெட்கத்தில் சிவந்தது.

அவள் மனதை கடினப்பட்டு கடிவாளமிட்டாள். வெட்கங் கெட்ட, தன் வெட்கத்தை நிந்தித்து கொண்டாள்.

“என்ன ஞாபகம் இதயா?” அவன் குரல் அவள் காதில் கிசுகிசுப்பாக ஒலிக்க,  அவள் கூறிய பதிலில் அவன் அவள் சங்கை பிடித்திருந்தான்.

 இதயாவுக்கு மூச்சு விட சிரமமாக இருந்தாலும்,  அவள் இதழ்கள் அவனை பார்த்து ஏளனமாக வளைந்தது.

இதயம் நனையும்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!