ithayamnanaikirathey-9

IN_profile pic

ithayamnanaikirathey-9

இதயம் நனைகிறதே…

அத்தியாயம் – 9

    “நான் கேட்ட கேள்விக்கு பதில். நான் ஏன் நியூயார்க் போக கூடாது?” விஷ்வா கேட்க, கண்களில் குறும்பு மின்ன, “ஏன்னா, உங்க அம்மா, அப்பாவுக்கு அவங்க மகன் வேணும்.” இதயா பட்டென்று கூறினாள்.

“ஹா…. ஹா…” அவன் பெருங்குரலில் சிரிக்க, அந்த சிரிப்பில், அவள் தொலைந்து போனாள்.

‘ஏன் என் வாழ்க்கையில் மட்டும் அப்படி ஒரு சம்பவம் நடந்தது?’ அவளுள் கேள்வி.

‘இல்லை…இல்லை… என் வாழ்வில் மட்டுமில்லை. எல்லா பெண்களின் வாழ்க்கையிலும் நடப்பது தான். ஆனால், நான் சராசரி பெண்ணாக நடந்து கொள்ளவில்லை.’ அவள் மனதில் ஒரு ஓரத்தில் குற்ற உணர்ச்சி எழுந்தது.

நொடிக்கும் குறைவான பொழுதில், தன்னை சரி செய்து கொண்டாள் இதயா.

‘இவன் என் பக்கத்தில் இருந்தால், நான் இப்படி தான் மாத்தி யோசிக்க ஆரம்பிச்சிருவேன். நான் ஏன் ஒரு சராசரி பெண்ணாக யோசிக்க வேண்டும்?  பெண்கள் என்ன இந்த சமுதாயத்தில் கிள்ளுகீரைகளா?’ அவள் சுதாரித்து கொண்டாள்.

அவனில் மயங்கிய அவள் விழிகள், சிந்தனையை தேக்கி கொண்டு வருந்தியதை கவனிக்க அவன் தவறவில்லை.

‘அவள் இப்படி தான் இருக்க வேண்டும் என்று நான் ஏன் நினைத்தேன்? என் ஆண் ஆதிக்க புத்தியா? நான் கொஞ்சம் விட்டு கொடுத்திருக்கலாமோ?’ அவனுள் சிந்தனை பரவியது.

 ‘ஆனால், என்னவெல்லாம் நடந்துவிட்டது? நடந்தது மாறுமா? தன்னால் மாற்ற இயலுமா?’ அவன் சிந்தனையில் உழல, ‘இதற்கு மேல் முழித்திருக்க இயலாது.’ என்று தியா அருகே படுத்துக்கொண்டாள் இதயா.

அவனும் சோபாவில் படுத்து கொண்டான். அந்த இரவு பொழுது அவர்களுக்கு சற்று நீண்ட பொழுதாகவே தோன்றியது.

மறுநாள் காலையில்.

      இதயாவுக்கு விரைவாகவே விழிப்பு தட்டியது. தியாவை பற்றிய கவலை. இதயா, தன் மகளின் நெற்றியை தொட்டு பார்த்தாள்.

‘காய்ச்சல் இல்லை.’ அவளுள் நிம்மதி பரவியது.

வேகமாக எழுந்து தன் குளியலை முடித்து கொண்டு, ஒரு லெக்கிங் டாப்ஸ் அணிந்து கொண்டாள்.

தியா இன்னும் எழவில்லை. அஜய் படுத்திருந்த மெத்தையில் அவனை காணவில்லை.

விஷ்வாவை பார்த்தாள். அவன் சோபாவில், ஆழ்ந்த நித்திரையில் இருந்தான்.

இதயாவின் இதய துடிப்பு வேகமானது. வீடு முழுக்க தேடினாள். அவனை காணவில்லை.

‘அஜய், குளிச்சிட்டு இருப்பானோ?’ அவள் அவன் நேற்று உபயோகித்த குளியலறையை திறந்து பார்த்தாள்.

  அவன் எழுந்து பல் துலக்கியதன் அடையாளமாக, அந்த இடம் ஈரமாக இருந்தது.

‘ப்ரஷ் செஞ்சிருக்கான். ஆனால், குளிக்கலை. அஜய், எங்க போனான்?’ அவளுள் பல சந்தேகங்கள்.

‘ஒருவேளை அஜய்க்கு இங்க வந்தது பிடிக்கலையா?’ பல கேள்விகள் அவளை துளைக்க, அவளின் படபடப்பு அதிகமாகியது.

‘அஜய்… அஜய்… அஜய்…’ அவள் மனம் அரற்ற, ‘பால்கனியில் இருப்பானோ?’ அங்கும் தேடினாள் அவனை காணவில்லை.

‘விஷ்வாவை எழுப்பவா? ம்…ச்… கொஞ்சம் முன்னாடி தான் தூங்கினான். ஒருவேளை பக்கத்தில் வெளிய போயிருந்தா…’ எண்ணிக்கொண்டு, கதவை திறந்து கொண்டு வெளியே சென்றாள் இதயா.

படி இறங்கி அங்கு உலாத்தி கொண்டிருந்தான் அஜய். படி இறங்கியதும், தன் மகனை கண்டுகொண்டவள், “அஜய்… அஜய்… ” அவள் அவன் அருகே வேகமாக ஓடினாள்.

அந்த வேகம் எல்லாம் அவன் அருகே செல்லும் வரை தான். அவன் பக்கத்தில் சென்றதும், நிதானத்திற்கு வந்திருந்தாள் இதயா.

“இங்க என்ன பண்ணிட்டு இருக்க அஜய்?” அவள் கேட்க, “ஜஸ்ட் வாக்கிங்” என்றான்.

“அம்மா, கிட்ட சொல்லிட்டு வந்திருக்கலாமில்லை. அம்மா, உன்னை தேடினேன். தேடிகிட்டு தான் இங்க வந்தேன்.” அவள் கூற, “ஏன், இத்தனை வருஷம் என்னை தேடி வரலை?” அஜய் தன் தாயை பார்த்து கூர்மையாக கேட்க, அவள் ஸ்தம்பித்து  நின்றாள்.

தன் தாயின் வெளிறிய முகத்தை கண்டு, “இல்லை, நீங்க வருவீங்கன்னு பாட்டி, தாத்தாவும், அப்பாவும் சொன்னாங்க.” அஜய், தூங்கி எழுந்த தெளிவில், தெளிவாக பேசினான்.

‘என்னை விரட்டி, அனுப்பிட்டு பேரன் கிட்ட இப்படி ஒரு கதையா?’ அவள் எண்ணி கொண்டாள்.

பதில் கூறவில்லை. பதில் இருந்தால், தானே கூற முடியும்.

“அப்பா இருந்தாங்க இல்லையா உன் கூட, அது தான் அப்பா உன்னை என்கிட்ட கூட்டிட்டு வருவாங்கன்னு நினச்சேன்.” இதயா தன் மகனிடம் சப்பைக்கட்டு காட்டினாள்.

“அப்பா, அப்படி தான் சொன்னாங்க. ஆனால், அப்பா கூட்டிட்டு வர எவ்வளவு இயர்ஸ் பாருங்க.” அஜய், பல வருட பிரிவை சுட்டி காட்டினான்.

பல வருட பிரிவை மகன் சுட்டி காட்டினாலும், தன்னை தன் மகனுக்கு நினைவு இருக்கிறது, தன்னை தேடி இருக்கிறான் என்றதில் அவளுள் ஓர் இதமான உணர்வு.

“அப்பா…” அஜய் ஏதேதோ பேச, அஜயின், ‘அப்பா… அப்பா…’ என்ற அழைப்பு மட்டுமே, இதயாவின் காதில் விழுந்தது.

‘இவன் என்னை அம்மான்னு கூப்பிடலையே?’ என்ற ஏக்கமும், அவள் மனதில் பரவியது.

தன்னை சரி செய்து கொண்டு, அஜயை பார்த்தாள். “இனி இப்படி சொல்லாம வர கூடாது.” இதயா கூற, “அப்பா, அப்படி சொல்ல மாட்டாங்க. நான் இப்படி, தான் என் இஷ்டப்படி வெளிய வந்துட்டு உள்ள வருவேன்.” அஜய் இயல்பாக கூறினான்.

“அது தனி வீடா இருக்கும். நீங்க மட்டும் தான் இருப்பீங்க. இது அபார்ட்மெண்ட் இல்லையா?” அவள் பொறுமையாக கேட்க, அவன் ஆமோதிப்பாக தலை அசைத்தான்.

“நிறைய பேர் வருவாங்க. போவாங்க. அது மட்டுமில்லை. கொரோனா வைரஸ் வேற இருக்கு. கொஞ்ச நாளைக்கு நாம, வெளிய போக வேண்டாம். சரியா அஜய்?” அவள் அவனிடம் சம்மதம் கேட்டு நிற்க, அஜய் தலை அசைத்துக் கொண்டான்.

அவனின் செய்கை, அவனுக்கு அதில் விருப்பம் இல்லை என்றும், ஆனால் மறுக்க காரணம் இல்லை என்பதால் கேட்டுக்கொண்டான் என்று இதயவுக்கு புரிந்தது.

‘அப்படியே விஷ்வா மாதிரி. அவனை உரிச்சு வச்சிருக்கு. இதுல, விஷ்வாவை பார்த்தே வளர்ந்திருக்கான்.’ அவள் மனம், தன் கணவனின் செய்கை, மகனை ஒத்து போக, கோபம் வர வேண்டும் என்று எண்ணினாலும் பூரித்து தான் போனது.

காதல் வைரஸ் அவள் மூளையையும், மனதையும் தாக்கியதே!

“எல்லாருக்கும் கொரொனா வருமா? வட்ஸப்பில் அப்படி எல்லாம் மெஸெஜ் வருதே.” தான் த்ன் தாயிடம் கேட்க வேண்டிய கேள்வியை கேட்டதும் இயல்பாக பேச ஆரம்பித்தான் அஜய்.

“அப்படி எல்லாம் இல்லை அஜய். ஒழுங்கா கை கழுவிட்டா ஒரு பிரச்சனையும் வராது. வெளிய போயிட்டு வந்துட்டா குளிக்கனும். அப்படி எல்லாம் இருதுட்டா ஒரு பிரச்சனையும் வராது. சத்தா சாப்பிடனும்” மகனுக்கு தைரியம் கூறினாள் இதயா.

“பால் தரேன் குடி.” அவள் தன் மகனை அழைத்துக்கொண்டு, வீட்டிற்குள் நுழைந்தாள்.

“நான் அதை தான் தேடினேன். அப்பா, பாதாம் மில்க் டின்ஸ் வாங்கி வச்சிருப்பாங்க. நான், அப்பாவுக்கு முன்னாடியே எழுந்திருவேன். அதை, சம்டைம்ஸ்  அப்படியே சில்லுனு குடிப்பேன். சம்டைம்ஸ் ஒவேன்ல ஹீட் பண்ணி குடிப்பேன்.” அஜய் இயல்பாக பேசுவதை சந்தோஷமாக பேசுவதை மனதில் குறித்து கொண்டாள் இதயா.

‘மகனுக்கு காலையில் பால் குடுக்கறதை விட, அப்படி என்ன தூக்கம் இந்த விஷ்வாவுக்கு.’ அவள் மனதிற்குள் அவனை திட்டி கொண்டாள்.

“உனக்கு பாதாம் மில்க் பிடிக்கும்முன்னா, நான் உனக்கு பாதம் மில்க் பண்ணி தரேன். இல்லைனா, சாக்லேட் மில்க் பண்ணறேன். உனக்கு என்ன பிடிக்கும்?” இதயா தன் மகனிடம் கேட்டாள்.

“சாக்லேட் மில்க்” பட்டென்று கூறினான் அஜய்.

“நல்ல, ஆத்திட்டேன். சரியா இருக்கானு பாரு அஜய் உனக்கு?” அவள் அவனிடம் பாலை நீட்ட, “நான் சின்ன பிள்ளை இல்லை. நீங்க குடுத்தா, நானே ஆத்திப்பேன். ஐ நோ ட்டு டூ தட்.” என்று கூற, இதயாவின் முகத்தில் புன்னகை கீற்று.

ஒரு மிடறு குடித்துவிட்டு, “டேஸ்ட்டி…” அஜய் கூற, இதயாவின் கண்களில் ஒரு சொட்டு கண்ணீர். அதை தன் மகனுக்கு தெரியாவண்ணம் மறைத்து கொண்டாள்.

“அம்மா, நான் பால்கனிக்கு போறேன்.” கூறிக்கொண்டு, பால்கனிக்கு சென்றான் அஜய்.

ஒரு பந்தை போட்டு கொண்டு, விளையாட ஆரம்பித்தான்.

விஷ்வா, கால் மேல் கால் நீட்டி தலைக்கு தன் கைகளை அண்டை கொடுத்து படுத்திருந்தான்.

அவனை கடந்து சென்ற இதயாவை அவன் சொடக்கிட்டு அழைத்தான்.

“என்ன கொழுப்பா?” இதயா விஷ்வாவிடம் சீறினாள்.

லெக்கிங், டாப்ஸ் அவளுக்கு கச்சிதமாக பொருந்தி நின்றது.

“ஒரு சந்தேகம்.” அவன் கண்கள் குறும்பு பேசியது.

“என்ன?” அவள் கடுப்பாகவே கேட்டாள்.

“உன் டிரஸ் எல்லாம் தச்சிட்டு போடுவியா? இல்லை போட்டுட்டு தைப்பியா?” அவன் முகத்தை தீவிரமாக வைத்து கொண்டு கேட்டான்.

‘காலையில் இது தான் இவனுக்கு சந்தேகமா? திமிர் பிடித்தவன்?’ அவள் கோபம் சர்ரென்று ஏறியது.

“வெரி பேட் அண்ட் ஓல்ட் ஜோக்.” என்று தோளை குலுக்கினாள் இதயா.

“ஒரு ஹஸ்பண்ட் வொய்ஃப் குள்ள எனக்கு அது பேட் ஜோக் மாதிரி தெரியலை. அண்ட் ஓல்டும் இல்லை. யு ஆர் சோ ஃபிரெஷ்  அண்ட் யங்”  இதுவரை அவன் தேடி கொண்டிருந்த தாலியை எடுத்து காட்டிய அவள் உடையை மனதில் மெச்சியபடி, அந்த தாலியை உரிமையோடு பார்த்துக்கொண்டே கூறினான்.

 “ஏய், போனா போகுதுன்னு என் மகனுக்காக உனக்கு இடம் கொடுத்து தங்க வச்சிருக்கேன்.” அவள் பொரிந்து கொண்டே போக, “உன்னை தனியா விட்டுட்டு நியூயார்க் கூட போக கூடாதுன்னு சொல்லி.” அவன் எடுத்து கொடுத்தான்.

அவள் திரும்பி செல்ல முற்பட, “இல்லை, மகனுக்கு சாக்லேட் மில்க் எல்லாம் கொடுத்த, ஒரு அம்மாவா? அப்படியே, தாலியை கண்ணுல ஒத்தி என் காலை தொட்டு கும்பிட்டு காபி கொடுப்பியான்னு கேட்க தான்.” என்று அவன் ராகம் பாடினான்.

“இப்படியே, பேசிகிட்டு இருந்தேன்னு வையென்,  உன் காலை சப்பாத்தி கட்டையால் ஒரு அடி அடித்து, சூடான காபியை உன் முகத்தில் ஊத்துவேன். பரவாயில்லையா?” அவள் காட்டமாக கேட்டாள்.

‘இவன் காலை தொட்டு கும்பிட்டு, நான் காப்பி குடுக்கணுமா?’ என்று மனதில் கறுவியவாறு.

“ஹா…ஹா… நீ என்ன செய்தாலும், ஐ அம ஹாப்பி இதயா.” அவன் பல பொருள் பட பேசினான்.

அவள் மீண்டும் திரும்ப எத்தனிக்க, அவள் கைகளை பிடித்து கொண்டு எழுந்து நின்று, அவள் கழுத்தில் இருந்த தாலியை கைகளில் ஏந்தி, “இதை ஏன் இன்னும் வச்சிருக்க?” அவன் அழுத்தமாக கேட்டான்.

அவன் கண்கள் அவள் கால் விரல்களை தீண்டியது.

அதிலிருந்த மெட்டி அவன் கண்களில் பட, அவன் பெருவிரலால், அவள் மெட்டி இருந்த இடத்தை அழுத்த, வலியில் அவள் முகம் சுருங்கியது.

“இதை ஏன் டீ போட்டிருக்க இன்னும்?” அவன் அவள் செவியோரம் மெல்லிய குரலில் கர்ஜித்தான்.

இத்தனை நாள், அவள் உடை மறைத்ததை அவள் இன்றைய உடை காட்டி கொடுத்ததில், அவனிடம் தோற்று விட்ட எண்ணத்தில் அவளை அவமானம் பிடுங்கி தின்றது.

அவன் அருகாமை அவளை இம்சிக்க, அவனின் பெருவிரல் அழுத்தம் கொடுத்த வலி அவளுக்கு சினத்தை கொடுக்க, “ஏன் நீ சங்கவியை கல்யாணம் செய்ய இது இடைஞ்சலா இருக்கா?” அவள் சிறிதும் அசராமல் கேட்டாள்.

“ஏய்!” அவன் அவளை முழுதாக திருப்பி, “அந்த கல்யாணத்துக்கு எதுவும் இடைஞ்சல் செய்ய முடியாதுனு நான் நிரூபிக்கட்டுமா?” அவன் அவளை இடையோடு அணைத்திருந்தான்.

அவன் செய்கையில் சற்று வன்மை, அழுத்தம் இருந்தது.

“விஷ்வா என்னை விடு.” அவள் கர்ஜித்தாள். அவள் கர்ஜனை, அவனுக்கு ஆணையாக தோன்ற, அவன் வன்மை குறைந்திருந்தது.

ஆனால், அவன் பிடி தளரவில்லை. “அஜய், பால்கனியில் தான் இருப்பான். எப்ப வேணாலும் வருவான்.” அவள் விலக முயற்சித்து கொண்டே கூறினாள்.

“அவன் இப்ப தான் பால் குடிச்சிட்டு போயிருக்கான். இனி பிரேக்ஃபாஸ்ட்டுக்கு தான் வருவான்.” அவன் கூற, “தியா எப்ப வேணாலும் முழிச்சிபா.” அவள் குரல் தோய்ந்திருந்தது.

“அப்ப, குழந்தைங்க தான் உனக்கு பிரச்சனை இல்லையா இதயா?” அவன் அவளை தன் கைவளைவில் நிறுத்திக் கொண்டேகேலியோடே கேட்க, “ஆமா, நம்ம வாழ்க்கையில் குழந்தைங்க தானே உனக்கு பிரச்சனை?” அவள் குற்றம் சாட்ட அவன் உடல் இறுகி, அவன் பிடி இறுகியது.

“அம்மா…” என்று தியா சிணுங்கினாள்.

இதயாவிற்குள் எப்படி அத்தனை வேகம் வந்ததோ, விஷ்வாவை வேகமாக தட்டிவிட்டு குழந்தை பக்கம் சென்றாள்.

“அம்மா…” தியா அழைக்க, அவள் தியாவை எழுப்பி, “ஆர் யு ஒகே?” என்று தன் மகளின் தலையை கோதியபடி வினவினாள்.

“எஸ் மாம்.” என்று சிரித்து கொண்டே தாயோடு ஒட்டிக்கொண்டாள் தியா.

தியாவின் சிணூங்கலில், அஜய் ஹாலுக்கு வந்திருந்தான்.

அஜயின் கண்கள், தாயோடு ஒட்டிக் கொண்டிருந்த தியாவை சற்று பொறாமையோடு பார்த்தன.

அப்பொழுது, அங்கே விஷ்வாவை பார்த்த தியா, “ஹூ இஸ் திஸ்?” என்றாள் கண்களை சுருக்கி.

“அப்பா.” என்றான் விஷ்வா அழுத்தமாக.

“நோ வே. மை மாம் இஸ் சிங்கள்.” தியா அவனை பார்த்து முறைத்து கொண்டே கூறினாள்.

‘சிங்கிள்…’ மென்மையாக கூறி பார்த்தான் அஜய். ‘சிங்கிள்…’ என்ற வார்த்தையின் அர்த்தம் புரிந்த அதிர்ச்சி அவன் கண்களில்.

‘இதனால் தான் அம்மா என்னை தேடி வரலையா?’ அவன் கண்கள் கூர்மையாகியது.

“அப்படி யார் சொன்னா? அதெல்லாம் இல்லை.” என்று விஷ்வா, தியாவின் முன் மண்டியிட்டு அமர்ந்தான்.

ஏற்கனவே, தாயை கட்டிக் கொண்டிருக்கும் தியா, இப்பொழுது தந்தையும் அவள் முன்னே மண்டியிட்டிருக்க தன் உரிமையை நிலை நாட்ட, பின்னோடு தன் தந்தையின் கழுத்தை கட்டிக்கொண்டான் அஜய்.

“ஹு இஸ் திஸ்?” என்று தியா இப்பொழுது அஜயை பார்த்து கேட்க, “உங்க அண்ணன்.” என்று இதயா மெதுவாக கூறினாள்.

“ஓ, அப்ப நீங்க இப்ப சிங்கள் இல்லை. ட்ரிப்லஸ்?” எழுந்து நின்று கொண்டு கேட்க அஜய் சிரித்துவிட்டான்.

“ட்ரிப்லஸ் போக இது என்ன சைக்கிளா? இட்’ஸ் ஃபமிலி.” என்ற நக்கலாக சிரித்து கொண்டெ கூறினான் அஜய்.

தன்னை கேலி பேச சிரித்த அஜயை தியா முறைத்து பார்த்தாள்.

இதயா, அங்கு நடப்பதை விருப்பம் இல்லாமல் பார்த்து கொண்டிருந்தாள்.

‘தியா, விளையாட்டாக கேட்டாலும் அவள் இதை அத்தனை எளிதில் விடமாட்டாள்.’ என்ற எண்ணமும், ‘அஜய் சிரித்து கேலி பேசினாலும், அவனுள் பல குழப்பம் இந்நேரம் எழுந்திருக்கும்.’ என்ற எண்ணமும் இருவருக்கும் ஒரு சேர எழுந்தது.

இதற்கிடையில், தியா, அஜயை அண்ணன் என்று சொன்னதில் இதயாவிற்குள் மெல்லிய சந்தோசம் எட்டி பார்த்தது.

ஆனால் , விஷ்வா தன்னை அப்பா என்று அடையாளம் காட்டி கொண்டதில் அவளுக்கு துளி கூட விருப்பமில்லை.

‘நீடிக்காத உறவை எதற்கு உருவாக்க வேண்டும்? எதற்கு புதுப்பிக்க வேண்டும்?’ என்ற வெறுப்பு இதயாவின் மனதில் எழுந்தது.

‘இவன் எதற்கு இங்கு வந்து உரிமை கொண்டாடுகிறான்?’ அவள் அவனை முறைக்க, ‘நீ என்ன செஞ்சி வச்சிருக்கன்னு பாரு.’ அவன் அவனை குற்றம் சாட்டி முறைக்க, அங்கு நிலவிய மௌனத்தை கலைத்தது விஷ்வாவின் அலைபேசி அழைப்பின் ஒலி.

அதில் மின்னிய பெயரில், விஷ்வாவின் முகம் பதட்டத்தை காட்டியது.

அவன் பதட்டத்தை ரசித்து கொண்டே, ‘நான் செய்தது சரி தானே?’ என்ற கர்வ பார்வையை அவன் பக்கம் வீசினாள் இதயா.

‘அலைபேசியில் யார்?’ என்று இரு குழந்தைகளும் தந்தையை நோக்கி திரும்பின.

இதயம் நனையும்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!