ithayamnanaikirathey15

IN_profile pic

இதயம் நனைகிறதே…

அத்தியாயம் – 15

“டூ யு லவ் மை மாம்?” சர்வசாதாரணமாக கேட்டாள் தியா.

ஒரு நொடி மற்றோரு அறையில் இருந்த இதயாவும், தியாவை பார்த்து கொண்டிருந்த விஷ்வாவும் திடுக்கிட்டனர். அவர்கள் இதயம் நொடிக்கும் குறைவான நேரத்தில் நின்று மீண்டும் துடித்தது.

தியாவின் அந்த கேள்வியை சர்வசாதாரணமாக எதிர் கொண்டவன் அஜய் மட்டுமே.

‘ஐயோ, தியா கேள்வி கேட்க ஆரம்பிச்சா கேட்டுட்டே இருப்பாளே. இன்னும் என்னென்ன வில்லங்கமான கேள்வி கேட்பாளோ?’ இதயா பதட்டம் கொண்டாள்.

‘இந்த காலத்து குழந்தைகளுக்கு லவ் என்பது சாதரண வார்த்தை’ விஷ்வா தன்னை நிதானப்படுத்தி கொண்டான்.

‘அதும் அமெரிக்காவில் வளரும் தியாவுக்கு அது மிக சாதாரணமான வார்த்தை.’ மேலும் தன்னை சமன் செய்து கொண்டான்.

‘ஆம்…’ என்பது போல தலை அசைத்தான் விஷ்வா.

“அப்ப, எங்க அம்மாவை உங்களுக்கு ரொம்ப பிடிக்கும்?” கூர்மையாக வந்தது, தியாவின் கேள்வி.

“ம்…” என்று அவன் சங்கடத்துடன் தலை அசைக்க, “என்னை?” என்று கேள்வியாக நிறுத்தினாள் தியா.

“உன்னையும், ரொம்ப ரொம்ப பிடிக்கும்.” அவன் மொத்த அன்பையும் வெளியிடும் நோக்கோடு கூறினான்.

“டூ டெஸா தான் என்னை ரொம்ப ரொம்ப பிடிக்குமா?” தியா சாதாரணமாகத்தான் கேட்டாள். ஆனால், அந்த கேள்வி விஷ்வாவின் மேல் சாட்டையாக இறங்கியது.

விஷ்வா திருதிருவென்று விழிக்க, “இல்லை, வொய் மேனி டேஸா எங்களை பார்க்க வரலை?” என்று நேரடியாக கேட்டாள் தியா.

விஷ்வாவிடம் மௌனம் மட்டுமே. ‘தியா கேள்வி கேட்பதை எப்படி நிறுத்த?’ இதயா மனம் நொந்து கொண்டாள்.

“இல்லை… ஐ ரியலி லவ் மை மாம். நான் உங்களை மாதிரி, எங்க அம்மாவை தனியா விடவே மாட்டேன். கூடவே தான் இருப்பேன்.” என்று தியா இயல்பாக பேசினாள்.

“அது தான் யு ரியலி லவ் மை மாம்ன்னு கேட்டேன்?” தியா மழலையோடு பல வருட கணக்கை தீர்த்து கொண்டிருந்தாள்.

‘ஐயோ, என் விஷ்வாவை நானே குற்றவாளி கூண்டில் நிறுத்தி விட்டேன்னே’ இதயா நொந்து கொண்டு பின்னே சாய்ந்து கண்ணீர் உகுத்தாள்.

சரவெடி போல் பேசும் தன் தங்கையை விழி விரித்து பார்த்தான் அஜய். அஜய், தன் தந்தையிடம் கேலி பேசுவான். ஆனால், விஷ்வா ஒருமுறை அதட்டி விட்டால் மிரண்டு விடுவான்.

‘இவளுக்கு எந்த தடையும் கிடையாதா?’ என்று அஜய் தியாவை ஆச்சரியத்தோடு பார்த்து கொண்டிருந்தான்.

“நீங்க ஏன் இவ்வளவு நாள் வரவே இல்லை? என்னை பிடிக்கும்முன்னு சொல்லறீங்க. அம்மாவையும் பிடிக்கும்னு சொல்லறீங்க. என் ஸ்கூலுக்கு அம்மா மட்டும் தான் தனியா வருவாங்க தெரியுமா? நாங்க மட்டும் எல்லா இடத்துக்கும் தனியாவே போவோம். அம்மாவுக்கு உடம்பு சரி இல்லைனா அம்மாவே தான் அவங்களை  டேக் கேர் பண்ணிபாங்க.” தியா கள்ளம் கபடமில்லாமல் பேசினாள்.

“இனி, நான் உங்க கூட எப்பவுமே இருப்பேன் சரியா?” விஷ்வா சமரச முயற்சியில் இறங்கினான்.

“ஃபியூச்சர் ஓகே. பாஸ்ட்… தீஸ் மேனி டேஸ் வரலியே?” தியாவின் சந்தேகம் தீரவில்லை.

“தியா…” என்று இதயா மிரட்டலாக குரல் கொடுக்க, ‘வேறு யாராவதா இருந்திருந்தா, என்னை நிற்க வைத்து கேள்வி கேட்பதற்கு சந்தோஷ பட்டிருப்பாங்க. ஆனால், என் இதயா எனக்காக துடிப்பா.’ அவனுள் அந்த சூழ்நிலையிலும் பெருமிதம் குடி கொண்டது.

“இதயா, நான் பார்த்துக்கறேன்.” அவன் தன் மனைவியை அடக்கினான்.

“ஆஃபிஸ் வொர்க் இருந்தது தியா.” அவன்  தியா முன் மண்டியிட்டு கூற, “எங்களை விட ஆஃபிஸ்  வொர்க் தான் பிடிக்குமோ?” தியா இந்த கேள்வியை கேட்கவும் இதயா படார் படாரென்று தலையில் அடித்து கொண்டு அழுதாள்.

‘இது போன்ற கேள்விகள் தான் என் வாழ்வை தீர்மானிக்குமா? எதை விட எது முக்கியம் என்ற போட்டியில் தான் வாழ்க்கையே அழிந்து கொண்டிருக்கிறது.’ இதயா துடிதுடித்து போனாள்

விஷ்வா வாயடைத்து  தன் மகள் முன் முகத்தை மூடி கொண்டு அமர்ந்தான்.

‘இது போல் ஒரு கேள்வியை தானே நான் இதயாவிடம் பல வருஷத்துக்கு முன்னாடி கேட்டேன். அதே கேள்வி இன்னைக்கு என் முன்னாடி திரும்பி நிறுக்குதே. இதைத் தான் லைஃப் இஸ் எ பூமராங்ன்னு சொல்றாங்களோ?’ அவன் நொறுங்கி போனான்.

‘அவசரப்பட்டு செய்த தவறால், குழந்தை முன் தலை குனிந்து நிற்கிறேனே’ அவன் நொந்து கொள்ள, “நீ ஏன், என் அப்பாவை இவ்வளவு கொஸ்டின் கேட்குற?” தன் தந்தையின் முக வாட்டத்தை காண பிடிக்காமல் அஜய் தியாவிடம் கோபமாக கேட்டான்.

“எனக்கு உன் அப்பாவை பிடிக்கலை.” பட்டென்று கூறினாள் தியா.

“தியா…” இதயா விறுவிறுவென்று நடந்து அவள் முன் கோபமாக நிற்க, “எனக்கு அஜய் அப்பாவை சுத்தமா பிடிக்கலை அம்மா. ஹி லூக்ஸ் லைக் எ தமிழ் ஃபிள்ம்  ஹீரோ. எனக்கு ஃபிள்ம்ல கூட ஒன்லி லேடீஸ், ஹீரோயின் மட்டும் தான் பிடிக்கும்.” தியா அஜய், விஷ்வா இருவரையும் பார்த்து கடுப்பாக கூறினாள்.

மூவரும் அதிர்ந்து நிற்க, “நாம இவ்வளவு டேஸ் ஃபிரியா இருந்தோமில்லை. இப்ப பாய்ஸ் இன் ஹோம் எனக்கு பிடிக்கலை. நோ பர்சனல் ஸ்பேஸ் ஃபார் மீ ” தியா  தன் கண்களை உருட்டி, இடுப்பில் கை வைத்து கொண்டு பிடிவாதமாக கூறினாள்.

“தியா, இன்னும் ஒரு வார்த்தை பேசின, அம்மா அடிப்பேன்.” அவள் தன் மகளை மிரட்ட, “அவ குழந்தை, அவளை ஏன் மிரட்டுற? இத்தனை நாள், அல்லி ராஜ்ஜியம் பண்ணது நீ” இப்பொழுது விஷ்வா, இதயாவுக்கு மட்டும் கேட்கும் படி முணுமுணுத்தான்.

‘அப்ப, இவ கேட்குற கேள்விக்கு நீயே பதில் சொல்லு’ என்பது போல், அஜய்யை தன்னோடு அழைத்து கொண்டு சென்றுவிட்டாள் இதயா.

நேரம் அதன் போக்கில் நகர்ந்து கொண்டு இருந்தது. இதயா, வைரஸின் தாக்கத்தால் வெளியே போக கூடாது என்று கூறிவிட்டாள்.

இருவரும் சேர்ந்து வீட்டிற்கு தேவையான சாமான்களை ஆன்லைன் ஆர்டர் செய்தனர்.

அன்று இரவு, இதயாவின் அலைபேசி அதன் ஒலியை எழுப்ப, “பாட்டி வீடியோ கால்” என்று கூறிக் கொண்டு ஓடினாள் தியா.

“தியா, உங்க அம்மா கிட்ட குடு டீ” எதிர் பக்கம் கொஞ்சம் அதிகாரமாகவே ஒலித்தது.

“ம்…” இதயா ஒரு வார்த்தை மட்டுமே பேசினாள்.

“ஏய், திமிரா? மாப்பிள்ளை வந்திருக்காங்க. ஒரு வார்த்தை கூட நீ என் கிட்ட சொல்லலை.” இதயாவின் தாய் கேட்க, “…” இதயா பதில் எதுவும் பேசவில்லை.

“நீ, மாப்பிள்ளை கிட்ட குடு” ஈஸ்வரி கூற, இதயா அலைபேசியை விஷ்வாவிடம் நீட்டினாள்.

“மாப்பிள்ளை…” ஈஸ்வரியின் விசும்பல் சத்தம் மட்டுமே கேட்டது.

“….” விஷ்வா தடுமாறினான். முன்பெல்லாம்,’அத்தை…’ என்று உரிமையாக அழைப்பான். ஆனால், இடையில் நடந்த குளறுபடியால் தடுமாறினான் விஷ்வா.

ஈஸ்வரி அதை எல்லாம் கண்டுகொள்ளவில்லை. கண்டு கொள்ளும் மனநிலையில் அவர் இல்லை.

“மாப்பிள்ளை, இனி எல்லாம் சரியாகிரும். நான் வேண்டுன பெருமாள் என்னை கைவிடலை.” அவர் கூற,”எல்லாம் சரியாகிரும் அத்தை.” விஷ்வா பேசினான்.

“எல்லாம் சரியாகிருச்சுனா, நான் இதயா திருப்பதிக்கு நடந்தே வருவான்னு வேண்டி இருக்கேன்.” ஈஸ்வரி கூற, சரேலென்று திரும்பி அலைபேசி வழியாக எட்டி பார்த்தாள் இதயா.

“அம்மா, வேண்டுதல் உங்களுக்கு. வேணுமின்னா, நீங்க நடந்து வரேன்னு வேண்டிக்கோங்க. இல்லைனா, உங்க மாப்பிள்ளை நடந்து வருவாருன்னு  வேண்டுங்க. நான் நடந்து வருவேன்னு நீங்க ஏன் வேண்டுறீங்க?” சீறினாள் இதயா.

“நீ சும்மா இரு டீ. இனியாவது, ஒழுங்கா மாப்பிளை சொல்றதை கேட்டு நட. மத்ததெல்லாம், அந்த ஆண்டவன் பார்த்துப்பான்” ஈஸ்வரி கூற, “ம்… தப்பெல்லாம் நீங்க பண்ணிட்டு, அந்த ஆண்டவன் பார்த்துப்பான்னு சொல்லறீங்க. என்னை மாதிரி அப்பாவியை கொடுமை செய்றதால தான் எல்லா பிரச்சனையும். உங்களை மாதிரி ஆளுங்களால் தான் இந்த மாதிரி வைரஸ் எல்லாம் வருது.” என்று இதயா முறுக்கி கொண்டாள்.

‘இவள் அப்பாவியா?’ விஷ்வா அவளை மேலும் கீழும் பார்த்தான்.

“இதயா, ஏதோ கொரோனா  வைரஸ்ன்னு எல்லாரும் சொல்றாங்க. நீ மாப்பிள்ளையையும், குழந்தையையும் நல்லா பார்த்துக்கோ.” என்று ஈஸ்வரி கூற, “இந்தியாவுக்கு வரும்ன்னு  தான் எல்லாரும் சொல்றாங்க அம்மா. நீங்களும், அப்பாவும் பத்திரமா இருங்க.” என்று இதயா கூறினாள்.

“லூசு மாதிரி பேசாத. அதெல்லாம் இந்தியாவுக்கு வராது. இங்க அடிக்குற வெயிலுக்கு அதெல்லாம் வராது. அப்படியே இந்தியாவுக்கு வந்தாலும், வட இந்தியாவுக்கு தான் வரும். இங்க, சென்னை பக்கம் வந்தால் அடிக்கிற வெயிலுக்கு வைரஸ் செத்துரும்.” என்று ஈஸ்வரி கூற, ‘சொன்னாலும், இவங்களுக்கு எதுவும் புரியாது. என் வாழ்க்கை உட்பட.’ சலிப்பாக எண்ணி கொண்டு மௌனம் காத்தாள்.

“அஜய் இருக்கானா? அவனை காட்டு. அவனை பார்த்து எத்தனை வருஷம் ஆகுது. அப்படியே தியா கிட்ட குடு. அவ கிட்ட பேசவேயில்லை.” என்று ஈஸ்வரி பேரன் பேத்தியை அழைத்தார்.  “அப்பா, எங்க அம்மா?” இதயா கேட்க, “பக்கதுல வெளிய போயிருக்காங்க டீ.” என்று ஈஸ்வரி பதில் உரைக்க, அவள் அலைபேசியை குழந்தைகளிடம் நீட்டினாள்.

அஜய் ஈஸ்வரி கேட்ட கேள்விக்கு பதில் சொன்னான். தியா நன்றாக பேசினாள்.

தியா, அஜயிடம் பேசிவிட்டு ஈஸ்வரி மீண்டும் மகளிடம் அலைபேசியை கொடுக்க சொன்னார்.

“இதயா மாப்பிள்ளை கிட்ட பொறுமையா இரு. எல்லாம் சரியானா கோவிலுக்கு…” என்று ஈஸ்வரி மீண்டும் ஆரம்பிக்க, “நீங்க இப்படி சும்மா சும்மா அவரை தொந்திரவு பண்றதால தான் அவர் வைரஸை காரணம் கட்டி மொத்தமா கோவிலை மூடுற மாதிரி லீவு விட போறார்.” இதயா பட்டென்று கூறினாள்.

“சி…ச்சீ… வாயை மூடு. கோவிலை மூடுவாங்கன்னு அபசகுனமா பேசிட்டு. ஏன் தான் உன் புத்தி இப்படி போகுதோ?” ஈஸ்வரி மகளை திட்டிவிட்டு அலைபேசி பேச்சை முடித்து கொண்டார்.

‘இது என்னடா வம்பா போச்சு? நாட்டு நடப்பை சொன்னா லூசு. நியாயத்தை கேட்டா கெட்டவ. என்ன உலகமோ?’ என்று ஒரு பெருமூச்சை வெளியிட்டாள் இதயா.

விஷ்வா எதுவும் பேசவில்லை. அமைதியாக இதயாவை பார்த்து கொண்டிருந்தான்.

“அஜய்…” என்று தியா அவன் முன் இடுப்பில் கை வைத்து நின்றாள்.

“நீ என்னை அண்ணன்னு கூப்பிடு.” அவனும் அவளை முறைத்தபடி நின்றான்.

அந்த கோரிக்கை எல்லாம் கண்டு கொள்வேனா, என்பது போல் பேச்சை தொடர்ந்தாள் தியா.

“இன்னைக்கு என் பாட்டி, உன் கிட்ட பேசினாங்களே? ஏன் உன் பாட்டி, என் கிட்ட பேசவே இல்லை. உன்கிட்ட மட்டும் பேசிட்டு வச்சிட்டாங்க?” தியா கேட்க, விஷ்வா அவன் இதயமே எம்பி வெளியே குதிப்பது போல் கண்களை விரித்து தியாவை பார்த்தான்.

‘இந்த சுண்டைக்காயை சரி பண்ண ஒரு வழி கிடையாதா? என் இதயத்தை அப்பப்ப நிக்க வச்சிடுறா?’ விஷ்வா சிந்திக்க, இதயாவின் முகத்தில் மெல்லிய புன்னகை எட்டி பார்த்தது.

‘பேசு விஷ்வா… பேசு…’ என்பது போல் இருந்தது அவள் பார்வை.

‘விஷ்வா, நீ இப்ப மட்டும் அம்மாவுக்கு சப்போர்ட் பண்ணி பேசின செத்த… ஏற்கனவே, மண்ணுக்குள் புதைந்து இருக்கிற உன் வாழ்க்கை மண்ணோட மண்ணா போயிடும்.’ அவன் வாயை இறுக மூடி கொண்டான்.

“நான் இங்க இருக்கேன்னு உங்க பாட்டிக்கு தெரியும். நீ என் கூட இருக்கிறது என் பாட்டிக்கு தெரியாதா இருக்கும்.” அஜய் கூற, தியா யோசனையாக தலை அசைத்து  கொண்டாள்.

அதன் பின்னும் தியாவின் கேள்வி கணைகள் தொடரத்தான் செய்தது. அஜய் இந்த வீடு சூழ்நிலைக்கு தன்னை பழக்க படுத்தி கொண்டான். விஷ்வா, இதயா இருவரும் அதிகம் பேசி கொள்ளவில்லை.

ஓரிரு நாளில், குழந்தைகளுக்கு ஆன்லைன் வகுப்புகள் தொடங்கிவிட்டன. நேரம் அனைவருக்கும் சரியாக இருந்தது.

மூன்று நாட்கள் அதன் போக்கில் நகர்ந்தன. தியாவுக்கு காய்ச்சல் முழுதாக சரியாகி இருந்தது.

“நாம்ம போட்ட ஆர்டர் இன்னைக்கு தான் வருது இதயா. வீட்டில் காய் இல்லை. கீரையும், கேரட்டும் தான் கடையிலும் இருக்கு போல. வெங்காயம், தக்காளி, உருளை கிழங்கு எதுமே இல்லைனு சொல்லிட்டாங்க” விஷ்வாவின் குரலில் கொஞ்சம் பதட்டம்.

“ஒன்னும் பிரச்சனை இல்லை விஷ்வா. அரிசி, பருப்பு, உப்பு, புளி, மிளகாத்தல் எல்லாம் இருக்கு. இரெண்டு மாசத்துக்கு போதும். சாமாளிப்போம்.” இதயா நம்பிக்கையோடு கூறினாள்.

“நான் கடைக்கு நேரில் போனா கிடைக்கும்முன்னு நினைக்குறேன்.” விஷ்வா கூற, “அதெல்லாம் வேண்டாம்” இதயா மறுப்பு தெரிவித்துவிட்டாள்.

“சாமான் வரும் பொழுது, நீ வெளிய போகாத. நான் போய், எடுத்துட்டு வரேன்.” அவன் கூற, இதயா எதுவும் பேசவில்லை.

அன்று கதவு தட்டும் ஓசை கேட்க, “தியா, அஜய் ரெண்டு பேரும் டாய்ஸ் ரூம் போங்க” என்று கூறிக்கொண்டே விஷ்வா முகத்தில் முக கவசம், கைகளுக்கு உறை எல்லாம் போட்டு கொண்டு வெளியே சென்றான்.

அங்கு வைத்திருந்த சாமானை எடுத்து கொண்டு கதவின் ஓரம் வைத்து விட்டான். உள்ளே வந்து, கைகளை கழுவினான். கழுவினான்.கழுவி கொண்டே இருந்தான்.

“இதயா, ஹாண்ட் சானிடைசேர் கொடு.”  அவள் கொடுக்க, அதை கைகளில் தடவி கொண்டான்.

“இரெண்டு நாள் எல்லாம் இங்கயே இருக்கட்டும் இதயா. நம்ம  ஊரா இருந்தா மஞ்சள் போட்டு வெளியவே கழுவி வெயிலில் காய வைக்கலாம். இங்க எதுவும் முடியாது. நான் இரெண்டு நாளுக்கு அப்புறம் எல்லாத்தையும் கழுவி வைக்கிறேன்” என்று அக்கறையோடு கூறினான் விஷ்வா.

“அதெல்லாம் வேண்டாம் விஷ்வா. நான் பார்த்துக்கறேன். நீ, ஒன்னும் பண்ண வேண்டாம்.” அவள் அவன் கூற்றுக்கு எதிர்ப்பு தெரிவித்தாள்.

“ஏன்?” அவன் கேள்வியாக நிறுத்த, “எனக்கு பயமா இருக்கு.” அவள் பதட்டத்தோடு கூற, அவன் முகத்தில் மெல்லிய புன்னகை அரும்பியது.

“என் மேல் அக்கறையா இதயா?” அவன் அவளை நெருங்கி கேட்டான்.

அவன் முன்னே வர, அந்த சமையலறையில் அவள் பின்னோடு சென்று சுவர் மேல் சாய்ந்து நின்றாள்.

அவன் இரு கைகளையும் இரு பக்கமும் ஊன்றி நிற்க அவன் நெருக்கத்தில் அவள் இமைகள் படபடத்தன.’இரெண்டு நாள் கம்முன்னு இருந்தானே? நான் தான் ஏதோ பேசிட்டேன் போலையே?’ இதயா தன்னை தானே நொந்து கொண்டாள்.

“அக்கறையான்னு கேட்டேன்” அவன் அழுத்தமாக கேட்க, “ஆமா, நீ எதையவது இழுத்துட்டு வந்துட்டா, அது எங்களுக்கும் வந்திரும்ன்னு எங்க மேல அக்கறை. நான் உன்னை விட அதிக பாதுகாப்பா இருப்பேன்னு நம்பிக்கை.” அவள் கூற, அவன் பக்கென்று சிரித்து விட்டான்.

“இல்லைனு, நான் நிரூபிக்கட்டுமா?” அவன் அவள் முடியை ஒதுக்கி கூற, அவள் மூச்சு காற்று அவனை தீண்ட அவன் உல்லாசமாக சிரித்தான்.

அவன் பார்வையின் வீரியம் தாங்காமல், அவள் தலை குனிய அவள் நெற்றி அவன் தோள் தொட்டு நின்றது.  விலக அவளுக்கு மனம் வரவில்லை. விலகினாலும், அவன் பார்வையை தாங்கும் சக்தி அவளுக்கு இல்லை என்பது போல் அவள் தலை கவிழ்ந்து கொண்டது.

‘எத்தனை வருடங்களுக்கு பின் கிடைக்கும் ஆறுதல்?’ என்று அவள் மனம் இளைப்பாறவே விரும்பியது. ஆனால், அவள் தன்மானம் சிலுப்பிக்கொண்டு அவள் உடலை நடுங்க செய்தது.

அவள் எண்ணப்போக்கை புரிந்து கொள்பவன் போல், “இதயா, உனக்கு பிடிக்கலைன்னா நான் இங்க இருந்து நிச்சயம் போய்டுவேன்” அவன் கூற, அவள் விசுக்கென்று நிமிர்ந்து அவனை பார்த்தாள்.

“நீ பத்திரமா இருக்கனும்.” அவன் கரகரப்போடு கூற, “நீயும் தானே விஷ்வா?” அவள் சுவரில் தன் தலையை  மோதி கொண்டே கூற, அவள் தலைக்கு தன் கைகளை அண்டை கொடுத்தான் விஷ்வா.

“எனக்கு எதுவும் ஆகாது. ஆனால், ஏதாவது வந்தாலும் நீ பார்த்துப்ப. நான் என்னை குவாரன்டைன் பண்ணிப்பேன். உன்னால், இரண்டு குழந்தைகளையும் பார்த்துக்க முடியும். நான் எப்படி சாமாளிப்பேன் சொல்லு?” அவன் புருவங்களை உயர்த்தினான்.

“அதெல்லாம் ஒன்னும் வராது விஷ்வா. லூசு மாதிரி பேசாத.” அவள் வெடுக்கென்று கூறினாள்.

“வராது. நல்லதே நினைப்போம். ஆனால், நீ இன்னும் பத்திரமா இருக்கனும்.” அவன் குரலில் அக்கறையோடு காதல் வழிய கூற, அவள் மனதில் ‘நீ ஏன் விஷ்வா என்னை வேண்டாமுன்னு சொன்ன?’ என்ற  கேள்வி எழுந்து, அவள் கண்கள் சில நீர் துளிகளை சொரிந்தது.

அவன் அறியாதவாறு இதயா தன் தலையை கவிழ்ந்து கொள்ள, அவள் கண்ணீர் அவன் பெருவிரல் தொட்டு சென்றது. அவன் பெருவிரல், நகத்தில் விழுந்த கண்ணீரை அவன் கவனிக்கவில்லை.

அதே நேரம், “அம்மா….” என்று அலறிக்கொண்டு ஓடி வந்தாள் தியா. அவள் சத்தத்தில் விஷ்வா சரேலென்று தன் மகளை நோக்கி விரைந்தான். அவன் பின்னே இதயாவும் ஓடினாள்.

ஆபத்துக்கு பாவம் இல்லை என்பது போல், விஷ்வா மேல் ஏறிக் கொண்டு, அவன் கழுத்தை இறுக கட்டி கொண்டாள் தியா.

“பி…ப… பி…” என்று வார்த்தைகள் வரமால் பயத்தில் தடுமாறிய தன் மகளை, அவள் பயத்தை போக்குமாறு அள்ளி அணைத்துக் கொண்டான் விஷ்வா.

இதயம் நனையும்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!