ithyamnanaikirathey-13
ithyamnanaikirathey-13
இதயம் நனைகிறதே…
அத்தியாயம் – 13
அந்த இரவு வேளையில் அங்கு நிசப்தம் நிலவியது. இருவருக்கும் தூக்கம் வரவில்லை.
இருவருக்குள்ளும் ஒரே எண்ணம். ‘பேசி, என்ன ஆகப்போகுது?’ பல வார்த்தைகள் அவர்கள் நாக்கு வரை மோதிக் கொண்டு நின்றாலும், இத்தனை வருடங்கள் தந்த பக்குவம் அவர்களை அமைதி காக்க செய்தது.
‘நான் ஏதாவது பேசி இருக்கிற பிரச்சனையை இன்னும் பெருசு பண்ண கூடாது. கொஞ்சம் பொறுமையா இருக்கணும். நான் பொறுமையா இருந்திருந்தா, இப்படி எல்லாத்தையும் இழந்துட்டு இப்ப தனியா நிற்பேனா?’ அவன் மௌனித்து கொண்டான்.
‘நாலு சுவத்துக்குள், நான் பேசும் பெண்ணியம் இந்த நாட்டு பெண்களையா காப்பாத்த போகுது? என் வாழ்க்கையை கூட காப்பாத்தலை.’ அவள் சலிப்பாக எண்ணிக் கொண்டு, “ம்… ச்…” கொட்டினாள்.
அவள் சலிப்பில், அவன் “இதயா” என மென்மையாக அழைத்தான்.
“ம்…” அவள் மேலே எதுவும் பேசவில்லை. “இதயா…” அவன் குரல் ராகம் போல் இன்னும் குழைந்தது.
“என்னை சமாதானம் செய்யறீயா விஷ்வா?” அவள் கேட்க, அவன் முகத்தில் புன்னகை கீற்று.
தரையில் சுவற்றை பார்த்து படுத்து கொண்டிருந்த அவள் திரும்பிப்படுத்தாள் அவனை பார்த்தபடி.
ஒரு கைக்கு அண்டை கொடுத்து, ஒரு பக்கமாக சாய்ந்து இதயாவையும், தியாவையும் பார்த்தபடி படுத்திருந்தான் விஷ்வா.
அவன் முகத்திலிருந்த புன்னகையில் இதயா, தன்னை இன்னும் நிதானப்படுத்திக் கொண்டாள்.
இதயா திரும்பி அவனை பார்த்து படுத்ததும், அவன் புன்னகை இன்னும் விரிந்தது.
“நான் கேட்குற கேள்விக்கு பதில் இல்லை. சும்மா, என் பெயரை கூப்பிட்டுகூப்பிட்டு பேசாத விஷ்வா.” அவள் உதட்டை சுழிக்க, “பதில் இருக்கு இதயா. சொல்றேன் கேட்குறீயா?” என்று அவன் நிறுத்த, அவள் புருவங்கள் சுருங்கியது.
“நீ தப்பே பண்ணலையா இதயா? நான் மட்டும் தான் தப்பு பண்ணினேனா?” அவன் புருவங்களை உயர்த்தி, சத்தமில்லாமல் சிரித்தான்.
‘இது தான் பதிலா?’ என்ற எண்ணம் தோன்றினாலும், அந்த இருளில் அவன் பற்கள் முத்துக்களை சிதறவிட்டது போல் இருந்த புன்னகையில் அவள் நொடிக்கும் குறைவான நேரத்திற்கு மயங்கினாள்.
‘நான் தப்பு பண்ணலை. தப்பா பண்ணினேன். அவ்வளவு தான். அதுக்கெல்லாம் காரணம் யார். இவன் தானே?’ அவள் அறிவு சொல்லத்தான் துடித்தது. மனமோ அவன் சிரிப்பை தட்டி பறிக்க மனமில்லாமல் அவனை ரசித்தது.
‘என்ன?’ அவன் புருவங்களை உயர்த்த, “தூங்கு விஷ்வா. இல்லை, என்னையாவாது தூங்க விடு. இப்ப பேசி என்ன ஆக போகுது?” அவள் மீண்டும் வேறு பக்கம் திரும்பி படுத்து கொண்டாள்.
‘அடுத்து என்ன?’ என்ற கேள்வி அவள் மனதில் எழுந்தாலும், அந்த எண்ணத்தை ஒதுக்கிவிட்டு தூக்கத்தில் ஆழ்ந்தாள் இதயா.
மறுநாள் காலை, தியா அஜய் இருவரும் எழுந்துவிட்டனர்.
இருவரும் இன்று “பாதாம் மில்க்” என்று ஒரு சேர கேட்க, பாதாமை அரைத்து பாலை சுண்ட காய்ச்சி ஏலக்காய் சேர்த்து, மணக்க மணக்க பாலை ஆற்றி கொடுத்தாள் இதயா.
“அம்மா, ஸ்கூல் எப்ப?” தியா சிணுங்க, “எப்படியும் ஒரு வாரத்தில் ஆன்லைன் கிளாஸ் ஆரம்பிச்சிருவாங்க தியா.” இதயா தன் மகளை சமாதானம் செய்தாள்.
பாலை குடித்துவிட்டு ஆளுக்கு ஒரு பக்கம் செல்ல, “ரெண்டு பேரும் சேர்ந்து விளையாடுங்க. தனியா விளையாடினா போர் அடிக்குமில்லை?” இதயா கேள்வியாக நிறுத்தினாள்.
தியா அஜயை மேலும் கீழும் பார்த்தாள். அஜய் தியாவை யோசனையோடு பார்த்தான்.
“வெளிய போய் விளையாடலாமா?” அஜய் கேட்க, “கொரோனா வைரஸ் இருக்குன்னு சொல்றாங்கள்ல. எப்படி வெளிய போக முடியும் அஜய். கொஞ்ச நாளைக்கி வீட்டுக்குள்ள தான் இருக்கனும்.” இதயா அஜயை சமாதானம் செய்தாள்.
“ஹொவ் மேனி டேஸ்?” என்று தியா கண்களை சுருக்க, “தெரியலை தியா.” என்று இதயா உதட்டை பிதுக்கினாள்.
இதற்குள் விஷ்வா ப்ரஷ் செய்து முகம் கழுவி கொண்டு மீண்டும் சோபாவில் கால் நீட்டி படுத்து கொண்டான்.
இதயாவின் கண்கள், டைனிங் அறையிலிருந்து விஷ்வாவையும் கவனித்து கொண்டது. அஜயின் கண்களும் அவன் தந்தையை தழுவி மீண்டது.
“அப்பா, எப்பவும் காலையில் ஜாகிங் போவாங்க. இங்க வந்து தான் இப்படி லேஸி மாதிரி தூங்குறாங்க.” அஜய் கூற, “எங்க அம்மாவும் காலையில் ஜிம் போவாங்க. ஏன் டுடே போகலை?” தன் சகோதரனிடம் பேச ஆரம்பித்து, தன் தாயிடம் கேள்வியாக நிறுத்தினாள் தியா.
“ஜிம் எல்லாம் கிளோஸ் பண்ணிட்டாங்க தியா. வைரஸ் ரொம்ப வேகமா பரவுதுன்னு வெளிய போகக்கூடதுன்னு எல்லாரும் சொல்லறாங்க.” என்று தன் மகன் மகள் இருவருக்கும் சேர்த்து பொத்தம் பொதுவாக பதில் கூறினாள் இதயா.
“அது தான் அப்பா ஜாக்கிங் போகலையா?” தன் தந்தையை பற்றி கேட்டு தெளிவு படுத்தி கொண்டான் அஜய்.
இதயா, தன் மகனை பார்த்தபடி ஆமோதிப்பாக தலை அசைத்து கொண்டே, ‘அஜய்க்கு அவங்க அப்பா மேல இருக்கிற பாசம் என் மேல் என்றாவது வருமா?’ என்று எண்ண தொடங்கினாள்.
தியா, அஜய் இருவரும் இதயா சொன்னபடி சேர்ந்து விளையாட அவர்கள் விளையாடும் அறை நோக்கி சென்றனர். செல்லும் பொழுது, “எ அம்மாவும் ஜாகிங், ஜிம் எல்லாம் போவாங்க. இந்த பேட் கொரோனா வைரஸால் தான் போகலை.” என்று அஜயிடம் தன் தாயை பற்றி பெருமை பேசிக்கொண்டே சென்றாள் தியா.
தியா பேசிய சொற்கள் விஷ்வாவின் செவிகளை தீண்ட, ‘இருக்கிறது ரெண்டு அடி. ஆனால், பேச்சு போகுது முழு நீளத்துக்கு. அதுவும் எப்பப்பாரு அம்மையை பத்தி பெருமை பேசவேண்டியது. கொழு கொழு கன்னத்தோட, நல்லா உருட்டி உருட்டி பாக்குற கண்ணோட இருக்கிற இந்த சுண்டைக்காயை சரிப்பண்ணா எல்லாம் சரியாகிரும்’ எண்ணியப்படி படுத்திருந்தான் விஷ்வா.
அப்பொழுது இதயா சோபாவை கடந்து செல்ல, படுத்துக்கொண்டே அவள் கைகளை எட்டி பிடித்தான் விஷ்வா.
“விஷ்வா” அவள் கர்ஜிக்க, “விஷ்வா தான். ஆனால், இப்படி கோபமா இல்லை. விஷ்வா ஆஆ அப்படின்னு மென்மையா கூப்பிடனும்” விஷ்வா தன் பெயரை மென்மையாக உச்சரித்தான்.
“கையை விடு” அவள் மிரட்ட, “எப்ப பாரு, கையை விடு விடுன்னு சொல்ல வேண்டியது.” என்று அவளை இன்னும் தன் பக்கம் இழுத்து,”ஒரு கப் காஃபி” அவன் கண் சிமிட்டினான்.
“நேத்தே சொல்லியாச்சு எதுவும் செய்ய முடியாதுன்னு.” அவள் கைகளை உறுவிக்கொள்ள, “ஒய், நான் தான் உன் பொங்கலை சாப்பிட்டு, நீ நேத்து சமைச்ச எல்லாத்தையும் சாப்பிட்டேன்னே? உன் பசங்களுக்கு மட்டும் மணக்க மணக்க பாதாம் பால் போடுற, எனக்கு ஒரு காஃபி போட கூடாதா?” அவன் சண்டைக்கு தயாரானான்.
‘இவனுக்கு என் கிட்ட பேசி வம்பு வளர்க்க ஏதாவது ஒரு சாக்கு வேணும். அதை சாக்கு வச்சி என் பக்கதில் இருக்கனும். அதுக்கு நான் இடம் தர மாட்டேன்.’ மனதிற்குள் எண்ணியபடி, “நான் காஃபி போடுறேன்.” என்று அவனிடமிருந்து விலகி சமையலறைக்கு சென்றுவிட்டாள்.
புன்னகையோடு அவன் மீண்டும் சோபாவில் படுத்து கண்களை மூடிக்கொண்டான். பழைய எண்ணங்கள் தென்றல் போல் அவனை வருட தயாரானது. அதே நேரம், ‘வேண்டாம் வேண்டாம்’ என்று இதயா தவிர்க்க நினைத்தாலும், பழைய நினைவுகள் அவளை சூழ ஆரம்பித்தது.
சில வருடங்களுக்கு முன்.
அதிகாலை நேரம். அவர்கள் திருமணமான புதிது. அவள் கழுத்தில் மஞ்சள் கயிறு அதன் நிறத்தை மாற்றி கொள்ளாமல் புதிதாக பளபளத்தது. மயில் கழுத்து பச்சை நிறத்தில் சில்க் காட்டன் சேலை அணிந்திருந்தாள்.
அந்த மயில் கழுத்து பச்சை நிறம் பளிச்சென்று தெரிவது போல், ஆங்காங்கே தங்க நிறத்தில் இலைகள்.
நீர் சொட்ட சொட்ட தலையில் துண்டை கட்டியபடி காஃபி கலந்து கொண்டிருந்தாள்.
அவள் எண்ணமோ விஷ்வாவை சுற்றியே வந்தது. ‘வெளிய போகணுமுன்னா, நான் மட்டும் சீக்கிரம் எழும்பனும். இவன் ஜாலியா படுத்திருப்பான்.’ எண்ணியபடி மணக்க மணக்க ஆவி பறக்கும் காஃபியை எடுத்து கொண்டு அவர்கள் அறைக்குள் நுழைந்தாள் இதயா.
“ப்ரஷ் பண்ணிட்டு ஏன் விஷ்வா படுத்திருக்க?” அவள் சிடுசிடுக்க, “நான் முழிச்சி தான் இருக்கேன். காஃபி ரெடியா?” அவன் கேட்க, “கொண்டு வந்தாச்சு.”
அவள் காஃபியை நீட்ட, “ஐ பேட்லி நீட் எ ரொமான்டிக் காஃபி” அவன் கண் அடித்தான்.
“பேட் காஃபி வேணா இருக்கு. ரொமான்டிக் காஃபி எல்லாம் இல்லை.” அவள் புன்னகையோடு கூறினாள்.
“அப்ப, எனக்கு காஃபி வேண்டாம்.” அவன் திரும்பி படுத்து கொண்டான்.
“விஷ்வா நேரம் ஆச்சு. அத்தை என்னை தான் திட்டுவாங்க.” அவள் கூற, “அப்ப, ரொமான்டிக் காஃபி கொடு” அவன் பிடிவாதம் செய்தான்.
“அதெல்லாம் எனக்கு தெரியாது.” அவள் காஃபியை அவன் அருகே வைத்து விட்டு விலக எத்தனிக்க, அவன் அவள் கைகளை பிடித்து நிறுத்தினான்.
“எங்க போறீங்க மேடம்?” அவன் கேட்க, “நேரம் ஆச்சு விஷ்வா.” அவள் சிணுங்க, அவன் தன் கன்னங்களை நீட்டினான். “ரொமான்டிக் காஃபி ப்ளீஸ்.” அவன் குரல் குழைந்தது.
அவள் வெட்கப்பட்டு மறுக்க, “காஃபியையாவது குடு.” அவன் கூற, அவள் காஃபியை எடுத்து நீட்டினாள்.
“நீ குடிச்சிட்டியா?” அவன் கேட்க, “இல்லை. இனி தான் சேர்க்கணும். நீ விட்டா, நான் எனக்கு காஃபி கலந்து குடிப்பேன்.” அவள் கூற, அவள் கைகளை பிடித்து எழுந்தான் விஷ்வா.
அவர்கள் அறையில் இருந்த டம்ளரை எடுத்து, அவன் கோப்பையில் இருந்து அரை கோப்பை காஃபியை அதில் ஊற்றி அவளிடம் நீட்டினான் விஷ்வா.
“இதை குடி. எனக்கு இவ்வளவு வேண்டாம்.” அவன் அவளை அணைத்து கொண்டே கூறினான்.
மாடியில் இருந்தது அவர்கள் அறை. அந்த ஜன்னல் வழியே மரங்கள் அசைந்து காற்றை இவர்கள் பக்கம் செலுத்தியது. அவள் சேலை அந்த காற்றில் சிலுசிலுத்தது.
அவள் காஃபியை ஒரு மிடறு அருந்த, அவன் அவள் நெற்றியை ஒற்றை விரலால் தீண்டினான். “விஷ்வா, என்ன பண்ற?” அவள் கேட்க, “காஃபியை குடிக்குறேன்.” ஒரு மிடறு குடித்தபடி கண்சிமிட்டினான்.
அவன் அவள் காதோரம் நெருங்கி, “காஃபி எப்படி இருக்கு?” என்று கிசுகிசுக்க, அவன் அருகாமையில் அவன் சுவாசக்காற்றில் அவள் முகம் சிவந்தது.
“நான் தான்… நான் தான் கலந்தேன்.” வார்த்தைகள் சற்று வெட்கத்தில் தடுமாறியது. “கொடுத்தது நான்.” அவன் காஃபியை குடித்து கொண்டே அவன் அணைப்பின் அழுத்ததை அதிகரித்தான்.
அவள் இப்பொழுது காஃபி குடிக்க முடியாமல் தடுமாற, “காஃபி குடி.” அவன் கூறிக்கொண்டே, “ஊப்…” என்று ஊதி, அவள் நெற்றியில் அசைந்து கொண்டிருந்த நீர் துளியை உருண்டோட செய்தான் விஷ்வா.
“என்ன பண்ற விஷ்வா? தள்ளி நில்லு” அவன் செயலை அருகாமையை ரசித்து கொண்டே, அவனை ஒதுக்குபவள் போல் சிணுங்கினாள்.
“ரொமான்டிக் காஃபின்னா என்னனு சொல்லி தரேன்.” அவன் சீண்ட, அவள் மீதம் இருந்த ஒரு மடக்கை குடித்துவிட்டு, “ஒரு காஃபியை நிம்மதியா குடிக்க விடுறியா நீ?” அவள் இப்பொழுது அவனை முறைத்து கொண்டே கேட்டாள்.
“நீ இன்னைக்கு காஃபியை ரொம்ப ரசிச்சு குடிச்ச மாதிரி இருந்ததே.” அவன் அவளை இடையோடு அணைத்து கேட்க, “அப்படியா சொல்ற?” அவள் கேட்க, “அதை நீதானே சொல்லணும்.” அவள் முகத்தை தீண்டிய படியே கூறினான்.
அவள் வெட்கத்தோடு அவன் மார்பில் சாய, “ஹொவ் ரொமான்டிக்?” என்று அவன் அவள் காதோரமாக கிசுகிசுக்க, “பிட் ரொமான்டிக்” என்று அவள் அவன் காதோரமாக கிசுகிசுத்தாள்.
அவன் அவள் முன் தன் காஃபி கோப்பையை நீட்ட, அதில் ஒரு மிடறு காஃபி மீதி இருக்க, “ஐ பேட்லி நீட் எ ரொமான்டிக் காஃபி.” என்று அவன் குரல் கொஞ்சியது. கெஞ்சியது.
அவன் கொஞ்சலை, கெஞ்சலை மிஞ்ச முடியாமல் அவனது விருப்பத்திற்கு அவள் இதழ்கள் பதிலளிக்க, அவன் புன்னகையோடு காஃபியை அருந்தினான்.
அவள் இப்பொழுது, “ஹொவ் ரொமான்டிக்?” என்று அவன் செவியோடு கிசுகிசுக்க, “ஹைலி ரொமான்டிக்” என்று கிசுகிசுத்து கொண்டு அவளை செவ்வானமாக சிவக்க வைத்தான் விஷ்வா.
பால் பொங்கி வழிய, நிகழ் காலத்திற்கு திரும்பினாள் இதயா.
‘திருமணமான புதுசுல தொடங்கிய இந்த ரொமன்டிக் காஃபி பிரியும் கொஞ்ச நாளைக்கு முன்னாடி வரைக்கும் இருந்துச்சே. எல்லம் ஒரு சில நாளில் மாறிடுச்சு.’ இதயாவின் மனம் வேதனை கொண்டது.
காஃபியை கலந்து கொண்டு விஷ்வா அருகே சென்றாள்.
“விஷ்வா, காஃபி” என்று பட்டுப்படாமலும் கூறினாள் இதயா.
பழைய நினைவுகளில் இருந்து முழுதும் மீள முடியாமல், ‘என்ன நடந்தாலும் சரி’ என்ற முடிவோடு, “ஐ பேட்லி நீட் எ ரொமான்டிக் காஃபி.” என்று அவளை பார்த்தபடி கூறினான் விஷ்வா.
“எனக்கு ஹாட் காஃபி, கோல்ட் காஃபி தான் தெரியும்.” வேறு எதுவும் தெரியாதவள் போல் கூறினாள்.
“வேற எந்த காஃபியும் தெரியாதா?” அவன் கேட்க, “பேட் காஃபி தெரியும்.” அவள் பட்டென்று கூறினாள்.
“நீ எதையும் மறக்கலை” அவன் கூற, ‘எதை மறக்க? நினைவுகளை மறக்க முடியும். வாழ்க்கையை?’ அவள் எண்ணங்கள் தறிகெட்டு ஓட, நொடிக்குள் தன்னை சுதாரித்து கொண்டு, “எனக்கு எதுவும் ஞாபகம் இல்லை.” அவள் முகத்தை திருப்பி கொண்டாள்.
“அப்படியே இன்னும் கொஞ்சம் யோசிச்சா ரொமான்டிக் காஃபியும் தெரியும்.” அவன் அவளை விடாமல் சீண்ட, “காஃபி சூடா இருக்கு. மேல ஊத்தினா தெரியும். ஹொவ் ரொமான்டிக்ன்னு” அவள் கடுப்போடு கூறினாள்.
“எல்லாம் ஞாபகம் இருக்கில்லை இதயா?” அவன் ஆழமான குரலில் கேட்க, இதயா தன் இதழ்களை பற்களால் கடித்தாள். அவள் முகம் உணர்ச்சியை அப்பட்டமாக வெளிப்படுத்தியது.
அதே நேரம், அறையில் விளையாடி கொண்டிருக்கும் குழந்தைகளுக்கு இடையில் சண்டை எழுந்தது.
“நீ என்னை அண்ணனு கூப்பிடு.” அஜய் இப்பொழுது தியாவை மிரட்ட, “முடியாது” தியா உறுதியாக கூறினாள்.
அஜய், தியாவின் பொம்மையை பிடுங்கி கையில் வைத்து கொண்டான்.
“என் பொம்மையை தா.” தியா, அஜயின் சட்டையை பிடித்திருந்தாள்.
“என்னை அண்ணான்னு கூப்பிடு தரேன்.” அவன் அவள் பொம்மையை கையில் வைத்து கொண்டு தியாவை மிரட்டினான்.
குழந்தைகளின் சண்டையை பற்றி தெரியாமல், இதயா விஷ்வாவின் பேச்சு தொடர்ந்தது.
“காஃபி சூடு ஆறுது. சீக்கிரம் குடி விஷ்வா. உனக்கு காஃபி சூடா இருந்தா தான் பிடிக்கும்.” அவள் காஃபியை நீட்டியபடி கூறினாள்.
“எனக்கு இன்னும் நிறைய விஷயங்கள் பிடிக்கும் இதயா.” அவன் குரல் கரகரத்தது. அவனின் கரகரப்பில் அவள் இமைகள் படபடத்து, ‘எங்கு அழுதுவிடுவோமோ?’ என்று அஞ்சியது.
அவள் படபடப்பை உள்வாங்கியபடி, “இடையில் வருஷங்கள் அதிகம் தான். நான் காலம் தாழ்ந்து தான் வந்திருக்கேன். ஆனால், நீ எதையும் மறக்கலை இதயா. நானும் எதையும் மறக்கலை. மறக்கவும் முடியலை” அவன் கண்கள் இப்பொழுது கலங்கியது.
இதயா செய்வதறியாமல் அவனை பார்த்தாள். “மறக்கவும் முடியாது. மறக்க கூடிய வாழ்க்கையை நாம வாழலை.” அவன் இப்பொழுது அழுத்தமாக கூற, “தரமுடியாது… தரமுடியாது… நீ அண்ணான்னு கூப்பிட்டா தான் நான் தருவேன்.” என்று கூறிக்கொண்டே பின் பக்கமாக ஓடி வந்த அஜய் இதயாவை இடித்து கொண்டு நிற்க, அஜயை துரத்தி கொண்டு வந்த தியா அவனை இடித்து கொண்டு மறுப்பக்கம் நின்றாள்.
விஷ்வா பக்கமாக நீட்டி கொண்டிருந்த சூடான காஃபி குழந்தைகள் இடித்த வேகத்தில் அவன் மேல் விழுந்து விடுமோ, என்று தன் பக்கம் இதயா இழுத்தாள்.
அதற்குள் இரு பக்கமும் குழந்தைகள் இருக்க, எங்கு அந்த சூடான காஃபி இதயா மேல் விழுந்துவிடுமோ என்று விஷ்வா சூடான காஃபியை தன் பக்கம் இழுத்து பிடிக்க முயல, எதற்கும் பயனின்றி, “வீல்…” என்ற சத்தத்தோடு காஃபி சிதறியது.
இதயம் நனையும்…