IV10

IV10

இதய ♥ வேட்கை 10

 

புகைவண்டி, முப்பது முதல் நாற்பது கிலோமீட்டர் வேகத்தில்தான் சென்றது.  அதனால் செல்லும் வழியெங்கும் பசுமையை நிதானமாக திலாவால் ரசிக்க முடிந்தது.

முதல் புகைவண்டிப் பயணம் என்கிற பயம் திலாவிற்கு சற்று குறைந்திருக்க, பழகிய இடம்போல கம்பார்ட்ர்மென்ட்டிற்குள் அமர்ந்தவாறு சிறிது நேரம், அதன்பிறகு வாயிலில் நின்றவாறு சிறிது நேரம் என நொடி நேரத்தையும் வீணாக்காமல் வழிநெடுகிலும் வாரியிறைத்த இயற்கையின் எழிலை ரசித்தாள் திலா.

இந்தப் பயணம் இயற்கை அன்னையின் மடியில் தவழ எண்ணுபவருக்கு மட்டுமே சிறந்த, ரசிக்கக்கூடிய அருமையான ஒரு பயணமாக அமைய முடியும்.

அந்த வகையில் தான் இது வரை நேரில் பார்த்திராத, இங்கு செல்லும் வழியெங்கும் காணும் ஒவ்வொரு சிறு அசைவையும், சிரத்தையோடு காண்பதற்கரிய ஒவ்வொரு செயலையும், இயற்கையின் எழிலோடு, எழிலாக இருந்த அனைத்தையும், தனித்துவமாக தனது மனப்பெட்டகத்தில் சேமித்து வைத்துக் கொள்ளக்கூடிய ஆர்வமும், ஆசையும் ஒருங்கே கொண்டவளாக திலா இருந்தாள்.

சுற்றிலும் இருந்தவர்களை சட்டைசெய்யாது, அவளது விருப்பத்திற்கேற்ப மனம்போல நேரத்தைச் செலவிட்டாள் திலா.

வெளியில் நின்று கம்பார்ட்மென்டின் இருபக்க கைப்பிடியை பிடித்தவாறு தலையை வெளியில் கொண்டுசென்றவாறு ரசிப்பவளைக் மறுபக்கத்தில் நின்றவாறு கவனித்திருந்தார் மாலினி.

திலாவிற்கு இரயில் பயணம் புதிது என்பதால் தனித்துவிட வேண்டாம் என்று மாலினி விஷ்வாவை அழைத்து எச்சரிக்க, தானும் திலாவுடன் வந்து நின்றிருந்தான் விஷ்வா.

விஷ்வா வந்து தன்னோடு நின்றபிறகு இலகுத்தன்மை மறைந்து, ஏதோ இனம்புரியாத உணர்வு உடலில் வந்து ஒற்றிக் கொண்டிருந்தது திலாவிற்கு.

இருப்பினும் தன்னைச் சமாளித்து சகஜமாக்க முயன்றவளோ, “இந்தப்பக்கம் பாத்தா, அந்தப் பக்கம் மிஸ் ஆகிருது”, என்று சுணங்கியவளை

“இப்போ ஒன் சைட் பாத்திட்டு வா, ரிட்டன் ஆகும்போது நெக்ஸ்ட் சைட் பாத்திட்டா போச்சு”, என்று ஆறுதல் கூறியவனிடம்

“நல்ல ஐடியாதான்”, என்று எந்தக் குதர்க்கமும் இன்றி பதிலளித்துவிட்டு, ஆர்வமாக புகைவண்டி கடந்த பசுமையான இடங்களில் பார்வையைத் திருப்பியவளை பாராமல் பார்த்திருந்தான் விஷ்வா.

விஷ்வாவின் நயன வீச்சு பேதையின் உள்ளம்வரை தாக்கி, உயிர்வரை ஊடுருவி உள்ளத்தை அவன்பால் ஈர்த்தது என்னவோ உண்மைதான்.

ஆனாலும் அதைக் காட்டிக் கொள்ளாது, இயல்பாக இருக்க முயன்று தோற்றாள் திலா.

பெண்ணின் சங்கடமும், நாணமும் முகத்தில் புதியதான ஒரு வசிய உணர்வை கொண்டு வந்திருந்தது.

உணர்வுகள் மாறி மாறித் தெளிந்த பெண்ணின் வதனத்தை அணு அணுவாக ரசித்தபடியே, இயற்கையை ரசிப்பதாகக் காட்ட முயன்று தோற்றான் விஷ்வா.

முதன்முறையாக பார்த்த தினத்தில் திலாவின் முகத்தில் இருந்த தேஜஸூம், தெளிவும் நீண்ட நாள்களுக்குப்பின் வதனத்தில் குடியேறியிருப்பதைக் கண்டு, விஷ்வாவின் உள்ளத்தில் சந்தோசம் நிரம்பிக் கொண்டது.

“இதுல ஏன் இவ்வளவு அழுக்கா இருக்கு”, என்று புகைவண்டியில் இருந்த, கீழே கிடந்த குப்பைகளைப் பார்த்துக் கேட்டபடியே, என்ன பேசுவது என்று தெரியாமல், எதாவது பேசு அவனிடம் என உந்திய மனதின் செயலால் பேச்சைத் துவங்கியிருந்தாள் திலா.  அத்தோடு அதன் தொடர்ச்சியாக கையில் ஒட்டிய அழுக்கை கழுவத் திரும்பியவளைக் கண்ட விஷ்வா

பெண்ணின் மனநிலையை படித்தானோ, இல்லையோ கர்மசிரத்தையெடுத்து பதில் பேசத் துவங்கியிருந்தான்.

“பலதரப்பட்ட கிளைமேட்ஸ் இருக்கற இடத்தைக் கடந்துதான் ட்ரெயின் போகும்.  அதுல போற பாதையில உள்ள இடத்திற்கு ஏத்தமாதிரி ஈஸியா டஸ்ட் ஃபார்ம் ஆகும்ல. ஆனா இந்த ஏரியால எல்லாம் ரொம்ப டஸ்ட் வர வாய்ப்பு இருக்காது”, என்று இயற்கையான எழில் மிஞ்சிய பகுதியை கடந்த புகைவண்டியினை சுற்றிலும் இருந்த பசுமையான பகுதியை கைகாட்டியபடி பேசினான் விஷ்வா.

“ அது தவிர தவுசண்ட்ஸ் ஆஃப் பீப்பிள்கு மேலயே ஒரு நாளைக்கு ட்ரெயின்ல ட்ராவல் பண்ணுவாங்கள்ல.  அவங்க எதாவது யூஸ் பண்ணிட்டு, டஸ்ட்டை புராபரா டிஸ்போர்ஸ் பண்ணாம விடறதால போட்டது போட்டபடி எல்லாம் அங்கங்கே அப்டியே கிடக்கு”, என்று திலா சுட்டிக்காட்டிய பகுதியைக் காட்டிக் கூறினான் விஷ்வா.

“ட்ரெயினை க்ளீன் பண்ணவே மாட்டாங்களா?”, என்று அதே அசூசையான குரலில் திலா கேட்டாள்.

“ரயில்வேயில லீசுக்கு எதாவது கம்பெனிகிட்ட பொறுப்பை குடுத்திருப்பாங்க”, என்றபடியே கம்பார்ட்மென்ட்டில் ஒட்டியிருந்ததைக் காட்டிக் கூறியவன்,

“இவங்க ரெகுலராதான் க்ளீன் பண்ணுவாங்க.  பட் அவங்க க்ளீன் பண்றதோட அவுட்புட்தான் இப்டி இருக்கு”, என்று திலாவிடம் விளக்கினான்.

இருவரின் மனமுமே சொன்னது.

‘ரொம்பத்தான் நீ பண்றப்பா, பேச வேற டாபிக்கா இல்லை’, என்று மனம் கூச்சலிட்டாலும், தங்களது செயலை எண்ணி எந்தக் கூச்சமுமில்லாமல் ஏதோ பேச வேண்டும் என்று இடைவிடாது கதைத்தபடி இருந்தனர்.

“எல்லா ட்ரெயினும் இப்டித்தான் இருக்குமா?”, என்று திலா வினா எழுப்ப

“அன்ரிசர்வ்டு ஜென்ட்ரல் கம்பார்ட்மென்ட்டெல்லாம் இதைவிட இன்னும் ஐம்பது மடங்கு மோசமா இருக்கும்”, என்றவனை

‘அப்டியா’, என்பதுபோல முகம் சுழித்துப் பார்த்தாள் திலா.

“வண்டி க்ளீனா இல்லன்னா அதுக்கு என்னை ஏன் இவ்ளோ அருவருப்பா பாக்கற?”, என்று விஷ்வா சிரித்தபடியே கேட்க

“நான், நீங்க சொன்னதை இமாஜின் பண்ணிப் பாத்துட்டு இருந்தேன்.  உங்களை யாரு அப்டிப் பாத்தா?”, என்று துடுக்காக வினா எழுப்பியவாறு முகத்தை மறுபுறம் திருப்பிக் கொண்டாள் திலா.

அதற்குமேல் திலாவிடம் வார்த்தையை வளர்க்காமல், அவள் நின்றிருந்த திசைக்கு எதிரே உள்ள வாயிலில் நின்றவாறு வேடிக்கை பார்ப்பதாக பெண்ணை நம்ப வைத்தான் விஷ்வா.

திடீரென்று, “இங்க பாருங்களேன் எப்டி போகுதுன்னு.  இந்த சீனை நான் படத்துல பாத்திருக்கேன்”, என்றவாறு திலா குதூகலிக்கவும்

அது எந்தப் படம், யாரு நடித்தார்கள், அந்தப் படத்தை எந்தத் தருணத்தில் பார்த்தாள் என்று விஷ்வா கேட்கும் முன்பே அவளாகவே சொல்லி முடித்தாள்.

விஷ்வாவும்  திலாவைப் பற்றிய பழைய செய்திகளை அவள் வாயிலாகவே கேட்டறிந்து கொள்ள ஏதுவான பயணமாக இரயில் பயணம் அமைந்ததில், சந்தோசமாகவே உணர்ந்தான்.

மகிழ்ச்சிக்கும், பிரமிப்பிற்கும் இணையாகத் திகிலையும் மிரட்சியையும் தந்த பயணமாக திலாவிற்கு இருந்தது அந்தப் பயணம்.

திகிலான முகத்தைக் கண்டவுடன், விஷ்வாவாகவே, அருகில் சென்று நானிருக்கிறேன் என்கிற வகையிலான அரவணைப்பை பெண்ணிற்கு தர, பெண்ணும் அந்த நொடியில் அதை மறுக்காமல் ஏற்றுக்கொண்டு, வந்த நொடிகளை இலகுவாகக் கடந்திருந்தாள்.

“குகைக்குள்ள போகும்போது ஒரே இருட்டு,  அப்ப மட்டும் உள்ளே போயிக்கறேன்”, என்று முதலில் எதிர்கொண்ட திகிலான நிகழ்வை எண்ணி, திலா கம்பார்ட்மென்ட்டின் பார்ட்டிசன் செய்யப்பட்டிருந்த அறைக்குள் செல்ல முயன்றாள்.

திலாவின் எண்ணத்தை உணர்ந்து கொண்டவன், “அதுக்கு ஏன் உள்ள போற, இங்கேயே லைட் ஆன் பண்ணா ஆச்சு”, என்றவாறு அங்கே இருந்த லைட்டை ஆன் செய்திருந்தான் விஷ்வா.

கணவனின் செயலில் ஆச்சர்யமாகப் பார்த்தபடியே, “நீங்க நிறையத் தடவை ட்ரெயின்ல போயிருக்கீங்களா?”, என்கிற சிறுபிள்ளைத்தனமான மனைவியின் வினாவில்

இளநகை அரும்பிய வதனத்தோடு, “நிறையலாம் போனதில்ல.  ரொம்ப ரேரா இயர்லி ஒன்ஸ் நான் படிக்கும்போது ஃபிரண்ட்ஸோட போயிருக்கேன்”, என்று தனது இரண்டு பாண்ட் பாக்கெட்டில் கைநுழைத்தபடி தோளைக் குலுக்கியவாறு கூறினான் விஷ்வா.

“நான் இதுவரை ட்ரெயின்லயே போனதில்ல,  இன்னிக்குத்தான் ஃபர்ஸ்ட் டைம்”, என்று தனது பெருமையை கணவனிடம் கூறினாள் பெண்.

அத்தோடு, “கல்யாணத்துக்கு முன்ன வரை செங்கோட்டை, திருநெல்வேலி தாண்டி வேற எங்கயும் போனதில்ல”, என்று பார்வையை எங்கோ செலுத்தியவாறு, பழைய நினைவுகளோடு நின்றவளை

“இப்பதான் நீயே காரெடுத்திட்டு செங்கோட்டையிலிருந்து சென்னை வரை தனியே வந்திருவ இல்ல”, என்று நடப்பிற்கு கொண்டு வந்தான் விஷ்வா.

“எல்லாம் உங்களாலதான்”, என்றவள் அதற்குமேல் பேசாமல் அமைதி காத்தாள்.

“என்னாலயா?”, என்றவன்

“நான் என்ன செஞ்சேன்”, என்று புரியாமல் கேட்க

“போனே எடுக்கலை.  எடுத்திருந்தா என்ன ஏதுன்னு உங்ககிட்ட கேட்டுட்டு, செங்கோட்டையிலேயே டேரா போட்டுருந்திருப்பேன்.  போனை எடுக்கலைன்னதும் ஏன்னவோ ஏதோன்னு பயந்துதான் அன்னிக்கு அவசரமா உடனே கிளம்பி வந்தேன்”, என்று தான் சென்னைக்கு வந்த காரணத்தை, இயல்பாகக் கணவனிடம் கூறினாள் பெண்.

ஆறு மணி நேரம் முடிவதற்குள், தன் ஆயுளின் கால்வாசி கதையை, விஷ்வா வினவாமலேயே காணும் நிகழ்வுகளுக்கு ஏற்பவோ, நின்ற இடங்களில் நடந்த சம்பவங்களை ஒட்டியோ, பேசியபடி வந்திருந்தாள் திலா.

பெண்ணைப் பற்றிய விசயங்களை, மிகவும் உன்னிப்பாகவே கேட்டு தனது நினைவடுக்கில் சேமித்துக் கொண்டான் விஷ்வா.

இடையிடையே மாலினி, சுந்தரம் பற்றியும் பொதுவான விசயங்களைப் பேசியவாறு வந்தாள் திலா.

பேச்சில், இருவரின் அன்னியோன்யத்தை திலா சிலாகித்துப் பேசுவதை அமைதியாக கேட்டுக் கொண்டான் விஷ்வா.

“இப்டித்தான் எங்கம்மாவும் அப்பாவும்கூட இருந்தாங்க”, என்று பழையதையும் நினைவுபடுத்தி பெற்றோரின் நினைவுகளில் சோர்ந்தாள் திலா.

விஷ்வாவிற்கு அப்டியான எந்த அற்புதமான நினைவும் இல்லாமல் இருக்கவே, நெஞ்சம் ஏனோ தவித்தது.

மனம் ஏக்கம் கொண்டது.

பெண்ணைத் திசை திருப்ப எண்ணியவன், “என்ன திலா, நான் சொன்ன மாதிரி கேவ், பெண்ட், பிரிட்ஜஸ் எல்லாம் கவுண்ட் பண்றியா இல்லையா”, என்று திலாவிற்கு நடப்பிற்கு கொண்டு வந்தான் விஷ்வா.

“அதுஉஉஉ…”, என்று இழுத்து மழுப்பலாகச் சிரித்தவள்,

“விட்டுப்போச்சே… ரிட்டன் ஆகும்போதுன்னா நான் கவுண்ட் பண்ணி கரெக்டா சொல்லிறேன்”, என்று விஷ்வாவிடம் கூறிவிட்டு சற்றுநேரம் நின்றவள், விஷ்வாவிடம் எதுவும் கூறாமலேயே கம்பார்ட்மெண்ட் உள்ளே சென்று அமர்ந்திருந்தாள்.

உள்ளே சென்றது முதல், மிகவும் சீரியசாக அமர்ந்து இணையத்தில் தேடத் துவங்கியிருந்தாள் திலா.

பெரியவர்கள் இருவரும், விஷ்வாவையும், திலாவையும் கவனித்தவாறு தங்களது இருக்கையில் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தார்கள்.

இடையிடையே உள்ளே வந்தவளிடம் பேச்சுக் கொடுக்க, திலாவும் சற்று நேரம் அவர்களோடு கண்டதைப் பற்றி, பாலத்தின் மேல் வண்டி செல்லும்போது, விஷ்வாவின் துணையோடு கீழே பார்த்ததையும், அப்போது தான் உணர்ந்த நிலையையும் பெரியவர்களோடு பகிர்ந்து கொண்டாள்.

அனைத்தையும் அறிந்தாலும், அறியாததுபோல கேட்டுக் கொண்டதோடு, புகைவண்டிப் பயணத்தில் வேண்டிய விழிப்புணர்வையும் அவர்கள் ஏற்படுத்தத் தவறவில்லை.

“தலை, கை, காலலாம் வெளிய நீட்டாம பாரு.  நல்லா கம்பிய புடிச்சுக்கணும்”, என்று அறிவுரைகளை வேறு ஆரம்பத்திலேயே கூறியிருந்தனர்.

அனைத்திற்கும் தலையை ஆட்டி ஆமோதித்தவள், தற்போது போனோடு குனிந்திருப்பதைக் கண்ட மாலினி

“என்னம்மா, காலு ரொம்ப வலியெடுத்திருச்சா.  உள்ள வந்து உக்காந்துட்ட”, என்று கேட்க

“ம்.. ஆ.. இல்லைம்மா.  சும்மாதான் வந்து உள்ள உக்காந்தேன்”, என்றபடியே, விஷ்வா பாலம், குகை பற்றிய எண்ணிக்கை பற்றிக் கேட்டதைக் கூறாது மறைத்துவிட்டு, மாலினியோடு பேச ஆரம்பித்திருந்தாள்.

இணையம் இளைப்பாற, அதைக் கவனியாமல் அடுத்தகட்டமாக மாலினியை அழைத்துக் கொண்டு மறுபுறம் சென்று வேடிக்கை பார்த்தபடியே பேசத் துவங்கினாள் திலா.

பயணம் முழுக்க நல்ல நினைவுகளையும், காட்சிகளையும் மனதிற்குள் சேர்த்தவர்கள், கொல்லத்தில் அன்று தங்கிவிட்டு மறுநாள் கிளம்பி செங்கோட்டை வந்திருந்தார்கள்.

கேட்டவனும் நினைவடுக்கிலிருந்து வாய்வரை வந்ததைக் கேட்கவில்லை.  பெண்ணும் வந்த நினைவை சிரிப்போடு ஒதுக்கி, “நல்லா கவுண்ட் பண்ணேன்.  இதைச் சொன்னா ஒலகம் ஏத்துக்காது.  என்ன சொல்லவா? வேண்டாமா?”, என்ற விஷ்வாவிடம் கேட்டு சிரிக்க

“நீ கவுண்ட் பண்ணியா, இல்லை தொடர்ச்சியா வாயடிச்சியானு ஒலகத்துக்கு தெரியாதில்ல.  அதனால் சும்மா சொல்லு. கேப்போம்”, என்று பெண்ணைக் கிண்டல் செய்திருந்தான் விஷ்வா.

முன்பைவிட, விஷ்வா, திலாவிற்கு இடையிலான நெருக்கம் கூடியிருப்பதை, இருவரும் தனியே பிரிந்து சென்று பேசத் துவங்கியதன் மூலம் உணர்ந்து கொண்ட பெரியவர்கள் இருவரும் சந்தோசத்தில் இருந்தனர்.

விசயம் இருந்ததோ இல்லையோ, இருவரும் தனிமையை விரும்பத் துவங்கியிருந்தனர்.

அந்தத் தனிமையில் ஒருவருக்கு மற்றவரோடுடனான அருகாமையை ஆழ்மனம் யாசிக்கத் துவங்கியிருந்தது.

இருவரின் நிலையும் ஒரே நேர்கோட்டில் பயணிப்பதை மருத்துவர்கள் உணர்ந்து கொண்டதோடு, பயணத்தை முழுமையாக தங்களுக்குள் ஆகர்சித்த உணர்வோடு தம்பதியரிடமிருந்து விடைபெற்றிருந்தனர்.

……………………..

விஷ்வாவிற்கு எந்தத் தடையுமில்லாமல், வரவிருக்கும் வசந்த வாழ்வை எதிர்கொள்ள ஏங்கிக் காத்திருந்தான்.

திலாவிற்கோ தயக்கம் இன்னும் மனதில் தங்கி இருந்தது.

திலாவிற்கு, திருமணத்திற்கு பிறகான அவனது வாழ்வினை மட்டுமே கருத்தில் ஏற்றுக் கொண்டு, தன்னைத்தானே சமாதானம் செய்து விஷ்வாவை மனம் விரும்பத் துவங்கியிருந்தது.

ஆனாலும், குடும்ப வாழ்வை எண்ணியபோது, தயக்கம் மேலோங்க, கவுன்சிலிங் தருவதாகக் கூறியிருந்த மாலினியை நாடி, தனக்கு எதாவது குறை இருக்கிறதா? என்று நேரடியாகவே கேட்டிருந்தாள் திலா.

பொதுவான ஆலோசனைகளை திலாவிற்கு முதலில் வழங்கினார் மாலினி.

“உனக்கு இப்ப விஷ்வாவைப் பற்றி எல்லாம் தெரிஞ்சும் உன் மனசுல அவனுக்குன்னு  ஒரு நிரந்தர இடத்தைக் கொடுக்கற அளவுக்கு, அவன்மேல இன்னும் உனக்கு அன்பிருக்கு”, என்ற மாலினியின் பேச்சினைக் கேட்டவளின் உடல்மொழியைக் கண்ட மாலினி

“என்னடா நாம சொல்லாம எப்டி இவங்களா ஏதோ சொல்றாங்கன்னு நீ யோசிக்கறது புரியுது”, என்று நிறுத்தியவர்

“உன்னோட ஒவ்வொரு நடவடிக்கையையும் சமீப காலத்தில பாத்திட்டுத்தானே இருக்கேன்”, என்று சிரித்துவிட்டு

“ இந்த அன்பு மட்டுமே கடைசிவரை உங்க ரெண்டு பேரோட எதிர்காலத்துக்கு ஊன்றுகோல்.

நிதானமா மனசுல இருக்கிற சஞ்சலத்தையெல்லாம் சரி பண்ணிட்டு வாழ்க்கைய ஆரம்பிங்க.

மனசு விட்டுப் பேசுங்க.  குற்றமில்லாத மனுசன்னு இந்த பூமியில யாரையும் சொல்ல முடியாது.  அந்த வகையில, பேரண்ட் ஆதரவு, அன்பு இல்லாம விஷ்வா சுயம்புவா வளந்திருக்கான்.  அப்போ தப்பு சரின்னு தெரிஞ்சும், யாரும் கண்டுக்காததாலும், கைநிறைய பணம் தட்டுப்பாடில்லாம புரண்டதாலும், வழி மாறியிருக்கான்.

அவனுக்கு சில விசயங்களை சொல்லி புரிய வைக்கலாம், இதுகூடத் தெரியாதானு? நீ நினைக்கிற சில விசயங்கள் நிச்சயமா தெரியாமதான் இருந்திருக்கான்.  இன்னும் இருக்கான். அவனை உன் மனம்போல மாத்தி வாழ, உனக்கு நிறைய பொறுமையும், நம்பிக்கையும் வேணும்.

நீ நினைச்சா பச்சைக் களிமண்போல இருக்கறவனை உனக்குத் தோதா, ஏற்றமாதிரி மாத்திக்கலாம்.

இல்லை இது எனக்கு தேவையில்லாத ஒன்னுனு நினைச்சா யாரும் உன்னைக் கட்டாயப்படுத்த மாட்டோம்.

அவனைத் திருத்தவா நான் வந்தேன்னு நீ நினைச்சா, வழக்கும் அதோட முடிவும் மட்டுமே உன் கையில”, என்று மாலினி கூறியதைக் கேட்டு விழிவிரித்துப் பார்த்தவளைக் கண்ணுற்ற மாலினி

“என்னடா இப்படிப் பட்டும் படாம பேசறாங்களேனு நீ நினைச்சா, நிச்சயமா அப்டி நான் சொல்லலை.

ஆனா, விஷ்வா நடந்துகிட்ட முறை எதுவும் நியாயப்படுத்திற முடியாது.  அதுக்காக அவனை வேணானு ஒதுக்கி,  ஒரு பெண்ணா, தனிச்சு ஒரு குறிப்பிட்ட காலம் வரை நீ வாழ்ந்திட்டாலும், இறுதியில் தனிமைங்கறது பெரிய தண்டனை.

அடுத்து யாரையும் திருமணம் செய்துக்கற ஆசையோ, எண்ணமோ இல்லாம இருக்கற நீ, இந்த வாழ்க்கைய வாழ உன்னை மாத்திக்க, குறையோட விஷ்வாவை ஏத்துக்க மனசைத் தயார் செய்துக்கிட்டா எல்லாம் சரியாகிரும்.

ஆதரவில்லாத அனாதையா யாரும் வாழ ஆசைப்படறதில்லை. குடும்பத்தில சச்சரவுகளை குறைச்சு வாழனும்னா சிலதை கண்டும் காணாம இருக்கப் பழகிக்க வேண்டித்தான் இருக்கு.  அதுக்காக தவறுகளை தட்டிக் கேக்காம இருக்கச் சொல்லலை.”, என்று இதமாகவே எடுத்துக் கூறியிருந்தார் மாலினி.

அடுத்து, தனக்கு மிகவும் பரிட்சயமான செக்சாலஸிஸ்டை சந்திக்க, அனுமதி வாங்கித் தருவதாகக் கூறி தம்பதியரை குறிப்பிட்ட தேதியில் அனுப்பி வைத்திருந்தார்.

மருத்துவரின் ஆலோசனை பெற்றவளுக்கு மனம் சற்றே இதமாக உணரத் துவங்கியிருந்தது.

விஷ்வாவிற்கும் உரிய ஆலோசனைகள் வழங்கப்பட்டது. திலாவின் ஒத்துழைப்பிற்காக காத்திருக்கத் துவங்கினான் விஷ்வா.

/////////////////

மாதங்களைக் கடந்த தம்பதியர் இருவரும் தோழமையோடு பேசி, சிரித்து மகிழ்ந்தாலும், ஏதோ தயக்கத்தோடு தங்களுக்குள் ஒரு வரைமுறை வைத்து அளவளாவிக் கொண்டனர்.

பெண் முன்புபோல மீண்டும் ஆமைபோல தன்னை ஓட்டிற்குள் சுருக்கி அமைதிகாத்தால், அதை ஏற்றுக்கொள்ள இயலாத நிலை விஷ்வாவிற்கு.

திலாவிற்கு, மஞ்சள் கயிறு மாஜிக்கோ, அல்லது தான் விஷ்வாவின் மீது கொண்ட அளவற்ற அன்பினாலோ, கணவனின் அருகாமை, பேச்சு, செயல் அனைத்தும் இதயத்திற்கு இதமளித்தாலும், குடும்ப வாழ்வை எண்ணிய தயக்கம் மிச்சமிருந்தது.

அலுவலகம் செல்லும் நேரம் தவிர, இதர நேரங்களை இருவரும் இணைந்தே செலவளித்தனர்.

வாரயிறுதி நாள்கள் அனைத்தும் வரமாகியிருந்தது.

விடிந்தால் அடைந்தால் திலாவின் தொந்திரவுகளை ஆசையோடு எதிர்கொள்ளத் தயாராகியிருந்தான் விஷ்வா.

“உங்களை நான் எப்டிக் கூப்பிட?”, எனத் துவங்கி

“இந்த மீசைய இப்டி வையுங்களேன்.  செமைய இருப்பீங்க”, என்று அடுத்த கட்டத்திற்கு சென்று

ஆடைகளிலும் தனது ஆதிக்கத்தைச் செலுத்தியிருந்தாள் திலா.

ஒவ்வொன்றையும் பெண்ணின் விருப்பத்திற்காக மாற்றி, அவளின் முன் வரும்போது, “எங்கண்ணே பட்டுரும் போலயே”, என்று வெட்கத்தோடு கண்ணூறு கழித்து தாய் இல்லாத குறை போக்கினாள்.

தலைவலியோடு அலுவலகத்திலிருந்து வந்து அறைக்குள் சுருள்பவனுக்கு, எதனால், ஏன்? என்று காரணத்தை அறிந்து அதற்கேற்றாற்போல கைமருந்து கசாயத்தை தானாகவே செய்து வந்து கொடுத்து, அதன்பின் எதாவது தைலத்தை நெற்றியில் தடவி, இதமாகப் பிடித்துவிட்டு பாட்டியில்லாத குறை போக்கினாள்.

வெளியில் செல்லும் நேரங்களில், சுரப்பிகளின் சரியான செயல்பாட்டினால் விஷ்வாவின் கண்கள் காணும் பெண்களின் அழகை அள்ளிப் பருகுவதைக் கண்டும் காணாமல் இருந்துவிட்டு, வீட்டிற்கு வந்தவுடன், இடுப்பில் இரு கைகளையும் வைத்தபடியே, கண்ணை உருட்டி, “என்ன விச்சு?  பக்கத்துல ஆள வச்சிக்கிட்டே, தைரியமா எதிரிலே வலைய வீசினா என்னா அர்த்தம்? இனி கண்ணு பாத்தாக்கா பிச்சு.. பிச்சு”, என்று அதட்டி மிரட்டி பேசும்போது, தந்தையில்லாத குறை போக்கினாள்.

புகைப்பதை வீட்டில் அறவே நிறுத்தியிருந்தான் விஷ்வா.  திலாவிற்கு இருமல் எழவே, அதனால் தனது அறைக்குள் வருவதைத் தையல் தவிர்ப்பதை கேட்டு அறிந்து கொண்டவன், புகை பிடிப்பதை பெரும்பாலும் வீட்டில் தவிர்த்திருந்தான்.

பல விசயங்களில் ஆதிக்கம் செலுத்தி தன்னை மாற்ற எண்ணுபவள், புகைபிடிப்பதைப் பற்றி தன்னிடம் இதுவரை எதுவும் கூறாததை, பேச்சுவாக்கில் வினவியிருந்தான்.

திலாவோ, “முதல்ல நீங்க உங்களுக்காக வாழனும்.  அப்புறந்தான் மத்தவங்களுக்குனு யோசிக்க முடியும்.  உங்களுக்கு அது அவசியமா வேணுனு தோணும்போது அதை நான் எப்டி தடுக்க முடியும்?”, என்று கேட்டு விஷ்வாவை சிலிர்க்கச் செய்திருந்தாள்.

“அப்போ உனக்குப் பிடிக்காததை பண்ணாலும் என்னை அக்சப் பண்ணிக்குவியா?”, என்று ஆர்வமாகக் கேட்டவனிடம்

“எனக்கு பிடிக்காத பழக்கம் ஒருத்தவங்ககிட்ட இருந்தா, அவங்ககிட்ட இருந்து ஒதுங்கி இருந்துப்பேன்.  அதுக்காக அந்த விசயத்தோட அவங்களை எப்டி சகிச்சிக்க முடியும்”, என்றவளை உணர்ந்து கொண்டே, தனதறைக்குள் பெண் இலகுவாக வந்து செல்ல ஏதுவாக புகைப்பதில் தன்னை மாற்றிக் கொண்டிருந்தான் விஷ்வா.

கைகோர்த்து, கடற்கரையோரம் நடந்து திரியும்போது, தோளோடு ஒட்டி உரசிச் சென்றாலும், சுவாதிஸ்டானத்திற்கான உரிய பாலுணர்வு வேட்கை தோன்றாது, இதயம் நெகிழ உயிரை அவளோடு ஒன்றச் செய்யும் வேளையில், தோழியில்லாத குறை போக்கினாள்.

தூக்கம் கலைந்தும், கலையாமலும் எழுந்து வந்து, விஷ்வாவிடம் காலை வணக்கம் கூறுபவளை, இதமாக இழுத்து நெற்றியில் முத்தமிடும்போது, வாகாக மார்போடு ஒண்டிக் கொண்டு பார்க்கும் நாணப் பார்வையில் காதலியில்லாத குறை போக்கினாள்.

அனைத்துமாக மாறியவளை விட்டுச் செல்ல மனமில்லாது, அழைத்தாலும் உடன் வருவாளோ என்ற தவிப்போடு அலுவலகத்திலிருந்து திரும்பியவன்,

“நாளைக்கு செங்கோட்டை போகணும் ஸ்ட்ராபெர்ரி”, என்று வந்து சோகமாக உரைத்தான்.

“அய்யா ஜாலி…”, என்று குதித்து தனது மகிழ்ச்சியை வெளிக்காட்டியவாறே,

“அப்போ நானும் கூட வருவேன்”, என்று இரு கைகளையும் வெற்றியாளர்கள் உயர்த்துவதுபோல மேலே உயர்த்தியவாறே, குதூகலித்து வந்து விஷ்வாவைக் கட்டிக் கொண்டபோது குழந்தையை நினைவுறுத்தினாள்.

வீட்டைப் பராமரித்தல், மற்றும் இதர பொறுப்பான மாற்றங்களை வீட்டில் கண்ணுறும்போது, சிறந்த குடும்பத் தலைவியை நினைவுறுத்தினாள்.

அதே சந்தோசத்தோடு மறுநாள் இருவரும் செங்கோட்டைக்குப் பயணமாகியிருந்தனர்.

திலா மனைவியாக மாறப்போகும் நாளுக்காக விஷ்வா ஏங்க, திலா தயங்க, செங்கோட்டை இருவரையும் வாங்க… என இருவரையும் வழமைபோல வரவேற்றிருந்தது.

 

நூலிழையில் தவிப்போடு காத்திருக்கும் தம்பதியர் இருவருக்கும் வசந்தம் வருமா?

 

அடுத்த அத்தியாயத்தில்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!