இதய ♥ வேட்கை 12

 

பெரும்பாலும் திலா செங்கோட்டையில் இருந்தால், அவளையும் உடன் அலுவலகம் அழைத்துச் செல்பவன், இன்று தவிர்த்துக் கிளம்பிச் சென்றிருந்தான் விஷ்வா.

சோதனையைக் கூட்டி, வேதனை கொள்ள வேண்டாம் என்கிற எண்ணத்தில்தான் திலாவை வீட்டிலேயே விட்டுச் சென்றிருந்தான் விஷ்வா.

விஷ்வா சென்றது தெரியாமல் குளித்து கிளம்பி அலுவலகம் செல்ல தயாராகி வந்தவளுக்கு, விஷ்வா தன்னிடம் கூறாமல் கிளம்பிச் சென்றது ஏகத்திற்கு வருத்தத்தையும், ஏதோ ஒன்று தன் கையை விட்டுப் போன உணர்வையும் தந்திருந்தது.

விசயம் எதுவும் தெரியாததால், ‘விச்சுக்கு எம்மேல என்ன கோவம்? நான் எதுவும் செய்யலையே!’, என முதலில் சாந்தமான எண்ணத்தோடு யோசித்தவள், அதன்பின் அதை அவளால் ஏற்றுக் கொள்ள இயலாத மனநிலைக்கு மாறியிருந்தாள்.

‘நான் வரலைனு சொன்னப்பலாம் வற்புறுத்தி கூட்டிட்டு போயிட்டு, தானா ஆசையா கிளம்பி வரவளை கண்டுக்காம விட்டுட்டுப் போனாக்கா என்ன அர்த்தம்?  இது நல்லாயில்லை விச்சு.  உன் அலும்புக்கு வர வர அளவில்லாம போகுது.  நானும் பாவம் நம்ம பையனு, போனா போகட்டும்னு, பேசாம விட்டா, வண்டி வண்டியா என்னை வச்சி செய்யற!’, என்று கொந்தளித்தவள்

‘இதுவரை இருந்த திலா வேற.  இனி நீங்க பாக்கப் போற திலா வேற.  இந்த மிதிலா யாருனு சீக்கிரமா காட்டாம விடமாட்டா!’, என்று மனம் பல மாற்றங்களுக்குப்பின் சூளுரைத்து, கொந்தளித்த கோபம் அடங்கி, சாதாரண நிலைக்கு வரும்வரை விடாது விஷ்வாவை வைதவாறு இருந்தாள் திலா.

உண்ண விருப்பம் இல்லாதபோதும் டைனிங்கில் சென்று அமர்ந்திருந்தாள்.  அதன்பின் யோசனையோடே, உண்டதாக பெயருக்கு அமர்ந்து, நான்கு வாய் உண்டவள் எழுந்து, அறைக்குள் அடைக்கலமாகியிருந்தாள்.

விஷ்வாவிடம் தன் மனக் கொதிப்பை காட்டிட எண்ணினாலும், தன் ஆதரவற்ற நிலையை எண்ணி அமைதி காத்தாள் பெண்.

‘எனக்கு ஒன்னுன்னா கேக்க யாருமில்லைங்கற தைரியம் அவருக்கு.  அதான் வேணுனா முகம் குடுத்து பேசுறாரு, இல்லைனா கருவேப்பிலைய தட்டுல ஓரமா தூக்கி ஒதுக்கி வைக்கிற மாதிரி இப்டி பண்ணுறாரு…’, என்று அடுத்தடுத்து பல ‘ரு’க்களை மரியாதையோடு விளித்து, மனதை விரித்து மனம்போல சிந்தித்து, தன்னைத்தானே வருத்திக் கொண்டாள் திலா.

விஷ்வாவின் செயலை அசைபோட்டு, அசைபோட்டு என்ன காரணம் என்று புரியாத குழப்பத்தில், நேரமும் செல்லாது மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகியிருந்தாள் திலா.

வீட்டிலிருந்து இம்போர்ட்டர்ஸ் மற்றும் அடுத்து டைல்ஸ் நிறுவனத்தை நேரில் சென்று பார்வையிட்டு, கடந்த தினங்களின் வரவு செலவுகளைக் கவனித்து மதிய உணவிற்கு வீட்டிற்குள் நுழைந்தவனுக்கு, வீட்டின் நிசப்தம் பழைய நாள்களை நினைவுக்கு கொண்டு வந்தது விஷ்வாவிற்கு.

கசப்பான நாள்களை நினைக்க வேண்டாம் என தனக்குள் கடிவாளமிட்டு, உள்ளே வந்தவனது கண்கள் திலாவைத்தான் முதலில் தேடியது.

கண்ணில் விழும்படியாக வெளியில் எங்கும் திலா இல்லை என்பதை உணர்ந்தவன், “செல்லம்மா… அம்மா எங்க?”, என்று வினவ

“காலையில இருந்தே அறைய விட்டு வெளிய வரவேயில்லை சின்னய்யா”, என்றதோடு

மதிய உணவை எடுத்துவைக்கும் பணிகளில் தீவிரமாகியிருந்தார் செல்லம்மாள் என்று விஷ்வாவால் அழைக்கப்பட்டவர்.

‘நம்ம கண்ணுதான் புள்ளைகளுக்கு பட்டுருச்சோ, நேத்து முழுக்க ஒன்னோட ஒன்னு சிரிச்சிப் பேசி ஒன்னா இருந்ததென்ன?  இன்னைக்கு ஆளுக்கொரு பக்கமா அக்கடானு உம்முனு இருக்கறதென்ன?’, என்று மனதிற்குள் எண்ணியவாறே செல்லம்மாள் தனது வேலையில் கருத்தாக இருந்தார்.

அறைக்குள் சென்று தன்னை சுத்தப்படுத்திக் கொண்டு வந்தவன், நேராக திலா அறை வாசலில் நின்றவாறு, ஆட்காட்டி மற்றும் நடுவிரலைக் கொண்டு இரண்டு தட்டு கதவில் தட்டினான்.

“திலா சாப்பிட வரலையா? எனக்கு செமப் பசி, வா சீக்கிரம்”, என்றவன், “நான் போயி சாப்பிடவா?”, என்ற வினாவோடு சற்று நேரம் நிற்க, எந்த பதிலும் திலாவிடமிருந்து வராமல் போகவே, டைனிங்கை நோக்கி வந்திருந்தான் விஷ்வா.

மிகுந்த மன உளைச்சலோடு இருந்தவள், விஷ்வா வந்து கதவைத் தட்டிக் உண்ணக் கேட்டதில் மனம் பாகாக இளகியிருந்தது.

ஆனாலும், காலையில் அப்படி நடந்து கொண்டவன், எதுவும் நடவாததுபோல வந்து அழைத்ததுவேறு அவளை அங்கு வர அனுமதிக்கவில்லை.

இருவேறு மனப் போராட்டத்தில், இளகிய மனது நாட்டாமை செய்திட, உண்ண மனமில்லாதபோதும், கணவன் அழைத்தமைக்கு நேர் செய்யும் விதமாக, அறையை விட்டு வெளிவந்து, “நீங்க சாப்பிடுங்க! எனக்கு பசியில்ல!  நான் அப்புறமா சாப்பிட்டுக்கறேன்!”, என்று சுவற்றைப் பார்த்தவாறு விஷ்வாவிற்கு பதில் கூறினாள் திலா.

காலை ஆகாரம் எதுவும் உட்கொள்ளாததால், அதிகப்படியான பசியை உணர்ந்தான் விஷ்வா.

அதனால் பெண்ணை வற்புறுத்தாமல், வந்து பேசிய வார்த்தைகளைக் கேட்டு, தோளைக் குலுக்கி, ‘உன் விருப்பம்’ எனுமாறு செயலில் காண்பித்துவிட்டு, சென்றமர்ந்து உண்ணத் துவங்கியிருந்தான்.

தோளைக் குலுக்கிவிட்டு, உண்ணத் துவங்கியவனைப் பார்த்தவாறே, மீண்டும் பழையபடி அறைக்குள் அடைந்து கொண்டிருந்தாள் திலா.

அடுத்தடுத்து அழைப்புகள் வரவே, பேசியவாறே உண்டு எழுந்தவன் அலுவலகத்திற்கு மீண்டும் கிளம்பியிருந்தான்.

திலாவைக் கவனிக்க வேண்டும் என்கிற எண்ணமே வராத வகையில் அடுத்தடுத்து வேலைகளில் மூழ்கி முந்தைய தின இரவு மற்றும் காலையில் நடந்த அனைத்தையும் மறந்திருந்தான் விஷ்வா.

ஆனால் திலாவோ, முந்தைய தின கனவிற்கு எதிராக காலையில் நடந்த நிகழ்வோடு முடிச்சிட்டு, ‘விச்சுக்கு இன்னிக்கு காலையில என்னாச்சு.  ஏன் எங்கிட்ட அப்டி பேசணும்.  நான் என்ன செய்தேன்’, என்ற கேள்விகளைச் சுற்றியே அடுத்தடுத்து வினாக்கள் எழுந்து அதற்கு பதில் தெரியாமலேயே பொழுதைக் கழித்திருந்தாள்.

இரவும் வந்திருந்தது.

படுக்கையில் படுத்தே இருந்தவளுக்கு எண்ணங்கள் முழுவதும் விஷ்வாவின் செயலிலேயே இருந்ததால், மன அலைச்சுழல் கூடியிருந்தது.

‘இப்ப யாராவது வந்து சிக்குனா சிக்கன் கைமாதான்’, என்கிற நிலையில் திலா இருந்தாள்.

பெண்ணின் மனதை அறியாதவனோ ஆறரை மணியளவில் வீடு திரும்பியிருந்தான்.

தற்போதும் மதியம் போன்றே இருந்த சூழலைக் கண்டு, ஆடையை மாற்றி தன்னைச் சுத்தம் செய்து கொண்டு வந்தவன், தனதறையிலிருந்த கதவின் வழியே திலாவின் அறைக்குள் செல்ல முயன்றான்.

படுக்கையில் குப்புறப்படுத்த நிலையில் அலைபேசியில் கவனத்தைத் திருப்பி, பொழுதுபோக்க தனது மனதை திசைதிருப்ப முயன்றுகொண்டிருந்தாள் திலா. 

அதேவேளையில் தனதறையை ஒட்டி எழுந்த சிறு சத்தம் பெண்ணை இயல்பாக சத்தம் வந்த திசையில் திரும்பிப் பார்க்கச் செய்தது.

முதல் முறையாக கணவன் தனதறைக்குள் வரும் வழியை நேரில் கண்ணுற்றவளுக்கு, அதிர்ச்சியில் விழி விரிந்திருந்தது.

ஏனெனில், பழைய காலத்து ஒன்றரை அடி சுவராலான வீட்டில் சுவர்போல அமைக்கப்பட்டிருந்த இடத்தை திறந்து கொண்டு அறைக்குள் இமை சிமிட்டியவாறு சிரித்தபடியே தனதறைக்குள் நுழைந்தவனை, இமை சிமிட்ட மறந்து, சிரிக்காமல் பார்த்திருந்தாள் திலா.

சகல வசதிகளையும் உள்ளடக்கிய பெரிய அறையில், டபுள் காட் ஒன்றும், மறு ஓரத்தில் சோபா மற்றும் வார்ட்ரோப், ட்ரெஸ்ஸிங் டேபிள் என அடுத்தடுத்து இருந்தது.

‘இப்டித்தான் திருட்டுத்தனமா இந்த விச்சு இங்க வரதா?’, என்ற எண்ணத்தோடு குப்புறப்படுத்திருந்த நிலையிலேயே திரும்பிப் பார்த்திருந்தவளின் அருகே சென்று படுத்தவன்,

“என்ன ஸ்ட்ராபெர்ரி… ரூம்குள்ளயே அடைஞ்சிருக்க? உடம்புக்கு ஏதும் முடியலையா?”, என்று இயல்பாக வினவ

பதில் எதுவும் பேசாமல் அலைபேசியில் மீண்டும் பார்வையைக் கொண்டு சென்றவளைக் கண்டவன்,

“என்ன கோவம் ஸ்ட்ராபெர்ரிக்கு எம்மேல”, என்றபடியே குப்புறப்படுத்திருந்தவளை தன்னோடு சேர்த்து இழுத்து அணைத்தவாறு மல்லார்ந்து படுத்த நிலையில் கேட்டவனிடமிருந்து திமிறினாள் திலா.

பெண்ணின் எதிர்ப்பைக் கண்டு யோசித்தவனுக்கு காலையில் நடந்த விசயம் நினைவில் வர, “காலையில எனக்கு மூடு சரியில்லடா… அதான்”, என்று இழுத்தவனிடம்

“இப்போ எனக்கு மூடு சரியில்லடா அதான்”, என்று வலுக்கட்டாயமாக அவனிடமிருந்து பிரிந்து, அங்கிருந்த சோபாவில் சென்று அமர்ந்தாள் திலா.

எழுந்து படுக்கையில் அமர்ந்தவாறே பெண்ணைப் பார்வையிட்டவன் சிறிது நேரம் அமைதி காத்தான்.

காரியம் கைகூடுமோ கூடாதோ என்று தெரியாமல் விசயத்தைக் கூறி மீண்டும் ஒரு பிரிவை ஏற்க மனம் துணியவில்லை விஷ்வாவிற்கு.

“சரி. உனக்கு மூடு சரியானபின்ன சொல்லுடா.. வரேன்”, என்றுவிட்டு அறையிலிருந்து பொதுப்பாதையின் வழியே அறைக்கதவைத் திறந்து கொண்டு தனதறைக்குள் சென்றவன், சற்று நேரத்தில் வெளியே கிளம்பியிருந்தான்.

திலாவின் மனஅழுத்தத்தை, விஷ்வாவிடம் கடத்திவிட்டாளோ?

விஷ்வாவிற்கு ஏதேதோ சிந்தனையோடு வண்டியை எடுத்துக் கொண்டு முதன் முதலில் திலாவைச் சந்தித்த இடத்திற்குச் சென்று காரை நிறுத்திவிட்டு இறங்கியிருந்தான்.

அலைபேசியை டாஸ்போர்டிற்குள் வைத்துவிட்டு, வெளியே நின்று நிதானமாக, அடுத்தடுத்து புகைக்கத் துவங்கினான்.

வெளியே கார் கிளம்பிய சத்தத்தில், விஷ்வா கிளம்பியதை அறிந்து கொண்டவள், தனது முட்டாள்தனத்தை நொந்தவாறே சிறிது நேரங்கழித்து விஷ்வாவிற்கு அழைத்தாள்.

நெடுநேரம் அழைப்பு எடுக்கப்படாமலேயே சென்று தானாகவே அழைப்பு துண்டிக்கப்பட்டது.

அடுத்தடுத்து இரண்டு முறை அழைத்தபோது திலாவின் அலைபேசியில் சார்ஜ் இல்லாமல் அணைந்திருந்தது.

விஷ்வா அழைப்பை ஏற்கவில்லை என்பதைவிட, தனது அழைப்பைக் கண்டு, விஷ்வா அழைத்தாலும் தன்னால் எடுக்க இயலாதநிலை என்றதும், தரைவழித் தொடர்பில் அழைத்து விசயத்தை பகிர எண்ணி ஹாலுக்குச் சென்றாள்.

ஹாலில் நின்று பேசினால், இருவருக்கும் இடையேயான பேச்சு வார்த்தை முன், பின் மாறி வீட்டில் உள்ள அனைவருக்கும் விசயம் காதிற்கு செல்லும் அபாயத்தை எண்ணியவள், வந்தபடியே அவளறைக்குள் நுழைந்திருந்தாள்.

‘வர வர புத்திய கடங்குடுத்திட்டே தெறி திலா.  இதை முன்னயே யோசிக்கறதுக்கு என்ன’, என்று மனம் அவளைச் சாட

விஷ்வா தனதறைக்குள் வந்த வழியை சற்றுமுன் கண்டு கொண்டவள், அதன்வழியே விஷ்வாவின் அறைக்குள் இருந்த தரைத்தொடர்பு தொலைபேசியின் வாயிலாக விஷ்வாவை அழைக்க எண்ணி அவனது அறைக்குள் வந்தாள்.

தொலைபேசியை எடுத்து டயல் செய்யும்போதே கார் நுழையும் சப்தம் கேட்க, ‘எங்க போயிட்டு இவ்வளவு அவசரமா உள்ளே வருது உடும்பு’, என்று எண்ணியவாறே மீண்டும் தனதறைக்கு செல்ல எண்ணித் திரும்பியபோது, காலையில் தனது கையில் இருந்து பிடுங்கி வீசிய டவல் இன்னும் கீழே விஷ்வா வீசிய இடத்திலேயே கிடப்பதைக் கண்டு, அதன் அருகே சென்று குனிந்து எடுத்தவள், அதனை அந்த அறையில் வாசிங் பாஸ்கட் இருக்கும் இடத்தைக் கண்டுபிடித்து, அதனுள் குனிந்து போட்டு விட்டு நிமிர்ந்தாள்.

பெண் நிமிரவும், விஷ்வா அவனது அறைக்குள் நுழையவும் சரியாக இருந்தது.

திலா நின்றிருந்த இடத்தை கொண்டே கணித்தவன், “உனக்கு எதுக்கு இந்த வேண்டாத வேலைலாம்.  அது செல்லம்மா பாத்துக்குவாங்க”, என்று கூலாகக் கூறிவிட்டு

“எதுக்கு கால் பண்ண?”, என்று விஷ்வா கேட்கும்போதுதான் கண்ணன் காலையில் அழைத்துக் கூறிய விசயம் பெண்ணிற்கு எதேச்சையாக அந்நேரம் நினைவில் வந்தது.

சற்றே சமாளித்தவள், காலையில் கண்ணன் அழைத்ததையும், அதன்பின் அதனைத் தான் கூற வந்து மறந்து போனதையும் கூற, “பிஸினெஸ் விசயத்தை இவ்வளவு சீக்கிரமாவா சொல்லுவாங்க திலா”, என்று கிண்டல் செய்தவனை

பழைய மோடுக்கு மாறியிருப்பவனை கண்டு கொண்டவள், அதைக் கண்டு கொள்ளாது,

“எல்லாம் உங்களாலதான் மறந்துச்சு”, என்றுவிட்டு தனதறைக்குச் செல்ல முயன்றாள் திலா.

“இதை நான் உன் ரூம்ல இருக்கும்போதே சொல்லாம, போனை போட்டுச் சொல்லக் கூப்பிட்டியாக்கும்”, என்று மேலும் விசயத்தைக் கிளற எண்ணிக் கேட்டான் விஷ்வா.

“அதுக்கு ஒன்னும் பண்ணலை”, என்றபடியே அறைக்குள் சென்று தனது அலைபேசியை எடுத்து சார்ஜ் இட்டாள் பெண்.

சார்ஜ் இடும்வரை பின்னோடு நின்று பொறுமை காத்தவன்,

சற்று முன்பு காரெடுத்து வெளியே சென்று, அடுத்தடுத்து தொடர்ச்சியாக சிகரெட்டின் துணையோடு யோசித்து, ஒரு முடிவுக்கு வந்தபின்புதான் வீட்டிற்கு வந்திருந்தான்.

அதே முடிவோடு, பெண்ணை பின்னோடு வந்து அணைத்துக் கொண்டே, “எனக்கும் சார்ஜ் போட்டா நல்லாயிருக்கும்னு தோணுது. இந்த ஸ்ட்ராபெர்ரி மனசு வைக்குமா?”, என்று மிதமான குரலில் காதோரம் திலாவிடம் கிசுகிசுக்க

விஷ்வாவின் செயல் மற்றும் வார்த்தையில் திலாவின் உடம்பின் ஒவ்வொரு அணுவும் சடுதியில் மாறி, உணர்வுக் குவியலை உடலெங்கும் வாரியிறைத்து, புதியதான உணர்வை பரவச் செய்திருந்தது.

கணவனின் அணுகுமுறையில் விசயம் எதைநோக்கி என்பது தெள்ளத் தெளிவாக, சொல்லாமலேயே புலப்பட, மனதில் நடுக்கமும் வந்திருந்தது.

நிச்சயமாக பெண் இதை எதிர்பார்க்கவில்லை.

வெளியே சென்று விஷ்வா புகைத்து வந்ததை அவனது அருகாமையில் திலாவின் நாசி உணர்ந்து கொண்டிருந்தது.

உடலின் வியர்வையோடு, காலையில் அவன் பயன்படுத்திய சென்ட் மற்றும் தற்போது பயன்படுத்திய சிகரெட்டின் வாசம் மொத்தமும் கலந்து புதுக்கலவையாக புதியதொரு மணம், பெண்ணை இதமாக்கி அவனிடம் மறுக்காமல், இசையும்படி நிற்கச் செய்திருந்தது.

எந்த மறுப்பும் கூறாது, அமைதியாக இருந்தவளை முதல் அனுபவம் நம்பச் சொல்லாததால், பெண்ணைத் தனது புறம் திருப்பி, நேருக்கு நேராகவே நிற்க வைத்து முகத்தை இருகைகளில் ஏந்தியவாறே தன் மனதில் உள்ளதைக் கூறினான் விஷ்வா.

முந்தைய தினம் தான் திலாவுடன் அறையில் வந்து படுத்தது, அதன்பின் நடந்த ஒவ்வொன்றையும் கதைபோல விஷ்வா கூற, ‘அப்ப அதெல்லாம் கனவில்லையா?’, என்று ஸ்தம்பித்த முகத்தோடு கேட்டிருந்தாள் திலா.

அதிகாலை முதலே, பெண்ணிடம் சோமபானம் அருந்தியபின் உண்டாகும் எண்ணத்தில் தான் நாட்டம் கொண்டதையும், பெண்ணின் ஒத்துழைப்பு இல்லாமல் தானாகவே நினைத்து ஒன்று செய்யப்போக, மறுபடியும் திலாவின் மனவருத்தத்திற்கு ஆளாக நேரிடும் என்று கருதி, தான் காலை வணக்கம் வழமைபோல கூறுவதைத் தவிர்த்ததையும் தவிப்போடு, பெண்ணின் மாறியவாறே இருந்த முக உணர்ச்சிகளைப் பார்த்தவாறே கூறியிருந்தான் விஷ்வா.

அதுவரை விஷ்வாவின் மீதிருந்த கோபம் போயிருக்க, அவன் எதிர்பார்ப்பை எண்ணி, அவளறியாமலேயே தயக்கம் வந்திருந்தது.

தான் எதிர்பார்க்கும் நிகழ்வை எண்ணி திலா முகம் வெளிற, தனது கையணைப்பில் இருந்தவளின் உடல்நடுக்கத்தையும், பெண்ணின் முகத்தைக் கொண்டே அவளது மனதையும் கணித்தவன்

“சாரி… உனக்கு வேணானா எனக்கும் வேணா.  அதுக்காக பழையபடி டிவோர்ஸ்னு எதுவும் கேட்டுராத.. சாரி”, என்று தன்னை மறந்து திலாவிடம் பேசிவிட்டு, உடனே அங்கிருந்து தனது அறையை நோக்கி வெளியேறியிருந்தான் விஷ்வா.

கையணைப்பில் வைத்திருந்தவளை அப்படியே விட்டுவிட்டு விஷ்வா வெளியேறியிருக்க, தான் கனவென்று எண்ணிய அனைத்தையும், விஷ்வா நடந்ததாகக் கூறியதை கேட்டதும், சீரணிக்க இயலாமல் சோபாவில் அமர்ந்து விட்டாள் திலா.

இதற்கிடையே, கவுன்சிலிங் என்ற பெயரில் மாறி மாறி மருத்துவர்கள் பேசிய அனைத்தும் மனதில் வந்து போனபடி இருந்தது திலாவிற்கு.

‘இப்ப அவரு மாறிட்டாருனு நீங்க அவரை, அவரோட உணர்வுகளை கண்டுக்காம ஒரேடியா தள்ளித் தள்ளிப் போனா, பழையபடி மாறுறதுக்கும் அதிக வாய்ப்பு இருக்கு.  அதனால உங்களை அவரோட எதிர்பார்ப்புக்கு ஏத்தமாதிரி சீக்கிரமா மாத்திக்க பாருங்க”, என்று செக்சாலஜிஸ்ட் தனக்கு கூறியதை நினைத்தவளுக்கு என்ன செய்யலாம் என்று புரியாத நிலை.

மேலும் அவர்கூறிய வார்த்தைகள் ஒவ்வொன்றும் நினைவடுக்கில் வந்து பெண்ணை யோசிக்கத் தூண்டியது.

‘சிலர் வளர்ந்த சூழல், சுத்தம் பார்த்தே சுத்தியிருக்கறவங்களை நோகடிச்சிருவாங்க’, என்று சிரித்தவர்

‘நீங்க சிறு வயசில இருந்து க்ளீன்ங்கறதுல அதிகமா கான்சன்ரேட் பண்ணி வளர்ந்திட்டதால, மற்றவங்களும் அப்டியே இருக்கணும்னு யாரையும் எதிர்பார்க்க முடியாது,  ஏன்னா ஒவ்வொருத்தவங்களுக்கும் அதில அளவுகோல் மாறும்’, என்றவர்

‘அவரு பல பெண்களோட தொடர்பு வச்சிட்டாருனு தெரிஞ்சதும், அவரை ஏத்துக்க முடியாம, ஒதுக்க நினைக்கறீங்கனு மேடம் சொன்னாங்க.

உண்மையில இவரைப்போல தன்னோட பழைய விசயத்தைப் பற்றி எந்த ஒரு ஆணும் ஃபிராங்கா வெளியே சொல்லறதில்லை.

விஷ்வா சொன்னதாலயோ, இல்லை அவரோட ரெக்கார்ட்ஸ் பாத்தோதான உங்களுக்கு அவரைப் பத்தி தெரிய வந்தது.’, என்று கேட்டவர்,

திலாவின் தலையசைப்பைக் கண்டு, பெண் ஆமோதித்ததாகக் கொண்டு, மேற்கொண்டு பேசத் துவங்கினார்.

‘அதையே அவரு மறைக்க நினைச்சிருந்தா, இதுவரை நீங்க அவரோட எதைப் பற்றியும் தெரிஞ்சுக்காத நிலையில,  சந்தோசமாதான வாழ்ந்திட்டு இருந்திருப்பீங்க’, என்றவர்

‘அந்த மாதிரி வாழணும்னு விஷ்வா நினைச்சிருந்தா, இந்நேரம் உங்க நிலை எப்டி இருந்திருக்கும்னு யோசிங்க.

கல்யாணம் வரை ஒழுக்கமா இருந்த எத்தனையோ ஆண்கள், அதுக்கப்புறம் ட்ரேக் மாறி போறதுண்டு.  ஆனா அது தெரியாம மெயின்டெயின் பண்ற ஆண்களும் இருக்கத்தான் செய்யறாங்க.

நிறைய ஆண்கள், வீட்ல காட்டுற முகம் வேற, வெளியில நடந்து கொள்ளக் கூடிய முறை வேற.  அந்த வகையில் விஷ்வா உங்களுக்கு இதுவரை எப்டி இருந்திருந்தாலும், இனி உண்மையா இருப்பாருங்கறதுக்கு அவரோட தற்போதைய சேஞ்சஸ் மட்டுமே போதும்.’, என்று கூறியவர்

அன்னியோன்யம் இருவரிடையே இயல்பாக எழவேண்டி, சில டிப்ஸ்ஸையும் கூறியிருந்தார்.

‘சின்ன சின்ன விசயங்கள்ல உங்களை மாத்திட்டாலே நாளைடைவில எல்லாம் சரியாகிரும்.  அதாவது வாங்கற, சாப்பிடற ட்ரிங்ஸ், பூட் இந்த மாதிரி எல்லாத்தையும் ஒன்னு வாங்கி ஷேர் பண்ணி ஆரம்பத்தில சாப்டு பழகுங்க.

ஒரே படுக்கையில படுத்துத் தூங்க முயற்சி செய்யிங்க. 

அடுத்தடுத்து உங்களோட எண்ணங்கள்ல, செயல்கள்ல மாற்றம் தானா வரத் துவங்கும்.

அப்போ நீங்களே இயல்பா எல்லா விசயத்துலயும் அவரை ஏத்துக்க முன்வருவீங்க!

இப்பலாம் வசதிகள் பெருகப் பெருக, பெர்சனல் ஸ்பேஸ் வேணும்னு, நிறைய கப்பிள்ஸ் இண்டிவிசுவல் ரூம்ல ஸ்டே பண்ண ஆரம்பிச்சிட்டாங்க. 

இதுதான் இன்னைக்கு பல உறவுகள் முறிய முக்கிய காரணமா இருக்கு.

கபிள்ஸ்ங்கறவங்களுக்கு இடையே என்ன பெர்சனல் இருக்க முடியும்?

எப்ப இண்டிவிசுவல் ரூம்னு ஒன்னு வருதோ, அப்பவே அங்க அவங்களுக்கிடையே புரிதல் இல்லாமப் போகலாம், முக்கியமா அன்னியோன்யம் குறைஞ்சு, தப்பு வர வாய்ப்பு அதிகம் ஆகிருது’, என்று நீண்டதொரு விளக்கத்தை அந்த மருத்துவர் தந்ததையும் நினைவு கூர்ந்தவாறே அமைதியாகி இருந்தாள் திலா.

அதன்பின் இறுதியாக, ‘இதுக்கும்மேல உங்களுக்கு அவரை ஏத்துக்க கஷ்டமா இருந்தா, உங்க மனசு சொல்றதைக் கேளுங்க’, என்ற நிறைவு செய்து தன்னை அனுப்பியதையும் எண்ணிப் பார்த்தாள்.

நீண்ட நேரம் யோசித்தவள், மெதுவாக விஷ்வாவின் அறைக்குள் குனிந்தவாறே வந்து, தனது லேப்டாப்பில் ஏதோ வேலையாக அமர்ந்திருந்தவனின் அருகே வந்து அமர்ந்திருந்தாள்.

தான் கனவென்று நம்பியிருந்ததைப் பற்றிக் கூறியவள், “இப்போ எனக்கு பயமெல்லாம் இல்லை.  ஆனா நீ இப்ப கேட்டதும் என்னால ஓகேனு சொல்ல முடியல விச்சு. சாரி”, என்று கண்ணில் நீரோடு தயக்கமாக பேசியவள்

“இன்னும் கொஞ்சம் டைம் குடு…”, என்று கெஞ்சலான குரலில் கேட்டவளை, தன்னோடு இழுத்து அணைத்து, நெற்றியில் இதழ் பதித்து முதுகைத் தட்டிக் கொடுத்து ஆறுதல்படுத்தினான் விஷ்வா.

“நீ தயங்கற எதுவும் எனக்கு வேணாண்டா.  இந்த டாபிக்கை இத்தோட விட்ரு”, என்று அணைத்தவாறே பெண்ணைத் தேற்றியவன்,

சற்றுநேரம் தனது கைவளைவில் இருந்து விடாமல், அணைத்தபடியே பெண்ணை வைத்திருந்தான்.

பிறகு, “கிளம்பு.  வெளியே எங்கேயாவது போயிட்டு வரலாம்”, என்று பெண்ணை அவளது மனநிலையிலிருந்து மீட்டுக் கொண்டு வர முயன்றான் விஷ்வா.

வெளியில் கிளம்பியவர்கள், திலா ஆசைப்பட்டதால் அவளின் வீட்டிற்குச் சென்று திரும்பினார்கள்.

விசயம் கேள்விப்படும் முன்புவரை விஷ்வாவோடு அட்டைபோல ஒட்டிக்கொண்டிருந்தவள், விஷ்வாவின் வார்த்தைகளைக் கேட்டபிறகு அண்டவே இல்லை.

விஷ்வாவும் இதைக் கவனித்தும், கவனியாததுபோல இருந்தான்.

இரவு உணவைத் தாமதமாக உண்டவர்கள், சற்று நேரம் அலுவலகம் பற்றிய பொதுவான விசயங்களைப் பேசிவிட்டு உறங்க எழுந்தனர்.

அடுத்த நாள், வீட்டில் பெண்ணைத் தனியே விட்டுச் செல்லாது அலுவலகத்திற்கு உடன் அழைத்துச் சென்றிருந்தான்.

திலா ஒரு வேலையைப் பார்க்க, விஷ்வா மற்றொரு வேலையைப் பார்க்க என்று அடுத்தடுத்து நேரம் அவர்களுக்கு மிச்சமாக, அதில் முதன்முறையாக தியேட்டருக்குச் சென்று படம் பார்த்தார்கள்.

அருகில் உள்ள சில கோயில்களுக்கு திலாவின் விருப்பத்தின்பேரில் சென்று வந்தார்கள்.

செங்கோட்டையின் வேலைகள் முடிந்ததும், சென்னைக்குத் திரும்பியிருந்தனர்.

////////////

திலாவின் ஒவ்வொரு செயலிலும் ஒரு குன்றல் தன்மையை உணர்ந்தான் விஷ்வா.

நேரில் கேட்டபோதும் எதையும் கூறாமல் தனக்குள் வைத்துக் கொண்டு விஷ்வாவின் பேச்சைத் திசை திருப்பியிருந்தாள் திலா.

திலா சாதூர்யமாக செயல்பட்டபோதும் யோசித்து உணர்ந்து கொண்ட விஷ்வா, அதன்பின் மிகவும் கவனமாக நடந்து கொள்ளத் துவங்கினான்.

தானாகவே வலியச் சென்று, தனது உரிமையை நிலை நாட்டும் முட்டாள் தனமான எந்தச் செயலையும் விழிப்புணர்வோடு தவிர்த்தான்.

வாய்ப்பேச்சுதான் என்றாலும், தம்பதியராக இருந்தபோதிலும் அதிலும் சென்சாராக இருந்து, வரைமுறைக்குட்பட்ட நிலையில் பேசினான்.

மொத்தத்தில் திலாவை எந்த விதத்திலும் குற்றவுணர்வு ஏற்படாத வண்ணம் பார்த்துக் கொள்வதாக எண்ணி ஒரு பாதை வகுத்து அதில் செல்லத் துவங்கினான் விஷ்வா.

கணவனின் செயலில், பெண்ணுக்கு முன்பைவிட அவனோடு ஒன்றி வாழப்போகும் வாழ்வினை எதிர்நோக்கி, தன்னைத் தயார் செய்யும் முயற்சியில் இறங்கியிருந்தாள் திலா.

நாசூக்காக தன்னைத் தவிர்க்கும் கணவனை, அவளாகவே நாடிச் செல்லத் துவங்கினாள்.

முதலில் தயங்கினாலும், நாள்கள் செல்லச் செல்லவே உணவினை பங்கிட்டுக் கொள்வது, ஒரே தட்டில் இருவருமாக அறையில் அமர்ந்து உண்ணுவது, வெளியில் செல்லும்போதெல்லாம் மற்றவர்களுக்கு வயிற்று எரிச்சலை உண்டு செய்யும் விதத்தில் ஒத்த தம்பதியர்போல ஒருமித்த கருத்தை வலியுறுத்துவது, பேசுவது,  செயல்படுவது என்று மாறத் துவங்கியிருந்தாள் பெண்.

விஷ்வாவும் பெண்ணை வற்புறுத்தாமல், எதையும் திணிக்காமல், குறிப்பாக எதையும் பொது இடத்தில் மறுக்காமல், அவளின்போக்கில் விட்டிருந்தான்.

திடும்மென ஒருநாள் விஷ்வாவின் அறையில்தான் படுப்பேன் என்று கையில் செம்போடு வந்து நின்ற திலாவை திகைப்போடு பார்த்திருந்தான் விஷ்வா.

“படுக்க வந்த சரி! கையில என்ன செம்போட வந்திருக்க?”, என்ற தயங்கிக் கேட்டவனை

“சும்மா ஒரு சப்போர்ட்டுக்கு விச்சு”, திலா

“செம்பு எப்டி சப்போர்ட் பண்ணும்”, உண்மையிலேயே புரியல நம்ம விச்சுவுக்கு

‘நாம எதாவது சில்மிசம் பண்ணா, செம்பை விட்டு சென்னியிலயே எறிஞ்சு படுக்க வைக்க எடுத்திட்டு வந்திருக்காளோ?’, என்று நினைப்பு மனதில் ஒட வினவினான் விஷ்வா.

“செம்பில பாலு இருக்குல்ல!”, என்று பதிலுரைத்தாள் பெண்.

விஷ்வா பீட்டருங்கரதால தமிழ்படம்லாம் பாக்க நேரமிருந்தாலும் பாக்க மாட்டாரு.  அதனால சொம்பு பத்தின மேட்டரு ஒன்னியும் தெரியலை..!

“அது என்னனு சப்போர்ட் பண்ணும்”, யோசனையோடு கேட்டான்

‘அரண்டதால எல்லாம் பயந்து வருதோ’, விஷ்வா

“நடுராத்திரியில பசிச்சா குடிக்கத்தான்”, என்று சிரித்துவிட்டு நோக்க, பெண்ணை நம்பாத பார்வை பார்த்தவனைக் கண்டு,

“இப்ப வேணுனாலும் குடி விச்சு. இந்தா…”, என்று கையில் இருந்ததை விஷ்வாவிடம் நீட்ட

எட்டிப் பார்த்து, வெள்ளையாக இருந்தது பால்தான் என்று உறுதிசெய்துகொண்டு, வேண்டாமென்று திடமாக மறுத்திருந்தான் விஷ்வா.

‘குவாட்டரா இருந்தா பெட்டரா இருந்திருக்கும்.  இதல்லாம் மனுசன் குடிப்பானா? உவ்வே…’, என்ற நினைப்போடு பெருமூச்சு விட்டான் விச்சு என்கிற விஷ்வா.

யாருடைய வேட்கை நிறைவேறும்?

அடுத்த அத்தியாயத்தில்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!