IV14

IV14

இதய ♥ வேட்கை 14

 

கூடல் தந்த இதத்தோடு, கணவனின் அரவணைப்பும் ஒருங்கே இணைந்துகொள்ள துயில் கொண்டவளுக்கு விடியல்வரை இடையூறு இன்றி உறங்கியிருந்தாள்.

வழமைபோல உறக்கம் களைந்து விழித்தவள், முந்தைய தினத்தின் நினைவுகளைச் சுமந்தபோது, செங்காந்தள் மலரின் நிறத்தை வதனம் பூசிக்கொண்டது.

கணவனைக் காண நாணி, அருகில் உறங்குபவனைத் தவிர்த்து, அவன் எழுந்திரா வண்ணம் அறையிலிருந்து அரவமில்லாமல் கிளம்பி தனதறைக்குள் சென்றிருந்தாள் திலா.

வேகவேகமாகக் குளித்து வெளியே வந்தவள், முந்தைய தின அவசர வேண்டுதலை நினைவு கூர்ந்து, வீட்டின் அருகே இருக்கும் கோவிலுக்குச் செல்லும் தீர்மானத்தோடு கிளம்பினாள்.

கிளம்பி நின்ற நேரம் அலைபேசி ஒலிக்கவே, தனக்கு இன்னேரத்தில் அழைப்பது யாராக இருக்கும் என்கிற யோசனையோடு சென்று எடுத்தாள் திலா.

கண்ணனின் தந்தை திருநாவு அழைக்கவே,  இந்நேரத்தில் இவர் எதற்கு தன்னை அழைக்கிறார் என்ற நினைப்போடு அழைப்பை ஏற்று, “ஹலோ மாமா”, என்க

“அம்மாடி திலா! இங்க உங்க அத்தை காலையிலயே வழுக்கி விழுந்து அடிபட்டுக் கிடக்கா!  ஆஸ்பத்திரிக்கு கொண்டு போறோம்! கொஞ்சம் ஒத்தாசைக்கு கூட வந்தேன்னா நல்லாயிருக்கும்!  வர்றியாம்மா!”, என்று சற்றே பதறிய குரலில் கேட்க

திருமணம் முடிந்து தனது தாய் மரணித்த வீட்டில் பார்த்தபிறகு தன்னை அலைபேசியில் அழைத்துக்கூட இதுவரை பேசாதவர்கள், இன்று அவர்களுக்கு ஒரு துன்பம் என்றதும் தன்னை அழைத்திருப்பதை எண்ணி, ‘கலிகாலம்கிறது இதுதான் போல’, என்று எண்ணிக் கொண்டவள், அதை ஒதுக்கிவிட்டு தங்களுக்கு அவர்கள் செய்த உதவியை எண்ணி கேட்ட செய்தியால் பதற்றம் வந்திருக்க, மேற்கொண்டு பேசினாள் திலா.

“ஐயோ! அத்தை எப்டி மாமா விழுந்தாங்க..!”, என்ற பதற்றத்தில் வினவினாள்.

“அது… என்னத்தைச் சொல்லச் சொல்ற…”, என்று இழுத்த திருநாவுவின் நிலையை உணர்ந்து கொண்டாள்.

அத்தோடு, “சரி நீங்க எந்த ஹாஸ்பிடல்கு கூட்டிட்டுப் போறீங்கனு போயிட்டு போன்ல சொல்லுங்க.  நான் அங்கே கிளம்பி வரேன்”, என்க

“இல்லைடாம்மா இப்ப அத்தைகூட வந்தா நல்லாயிருக்கும்.  அதான் கூப்பிட்டேன்”, என்று திருநாவு தயங்கி இழுத்ததோடு, தங்களது எதிர்பார்ப்பையும் மறையாது திலாவிடம் பகிர்ந்து கொண்டார்.

திலாவிற்கு மறுக்கத் தோன்றவில்லை.  தனது தாயின் கவலைக்கிடமான நாள்களில் திலா அழைத்தபோதெல்லாம் வந்து நின்றவர்கள்.  அவர்களுக்கு ஒன்று என்றால் தான் தவிர்த்து கண்டுகொள்ளாமல் இருப்பது தவறு என்று ஆழ்மனம் சாட, “கிளம்பி வாங்க… நானும் கிளம்பி மெயின்ல வந்து நிக்கறேன்.  அப்டியே என்னையும் பிக்கப் பண்ணிக்கங்க!”, என்றிருந்தாள் திலா.

தனது வீட்டின் நிலையை உணராதவளாக, கணவனிடம் கேட்காமலேயே தானாக ஒரு முடிவை எடுத்து, தனியொருத்தியைப்போல யோசியாமல் பேசியிருந்தாள் திலா.

“சரிம்மா, இதோ கேப் புக் பண்ணது வந்திருச்சு.  நாங்க இப்பவே கிளம்பி வரோம்மா. நீ சீக்கிரமா அங்க வந்து நில்லு! ரொம்ப லேட் பண்ணிராதா! உங்க அத்தை வலியில தாங்க முடியாம கத்துறா!”, என்று வைத்திருந்தார் திருநாவு.

அலைபேசியை வைத்தவளுக்கு அடுத்ததாக எண்ண செய்ய வேண்டும் என்கிற தெளிவு இல்லாமல், அங்கும், இங்கும் ஓடி பதறினாள்.

எதையும் உருப்படியாக செய்யாமல் நேரத்தை வீணடிப்பதை உணர்ந்து, சற்றே ஆழ்ந்து மூச்சை எடுத்து விட்டவாறு நின்றிருந்தாள் திலா.

அடுத்து நிதானத்திற்கு வந்தவள், விஷ்வாவிடம் கூற அறைக்குச் சென்றாள். அவனை எழுப்ப மனம் வந்தாலும், முந்தைய நாளின் மோகமோ, அவனின் வேகமோ, அதனால் எழுந்த நாணமோ, ஏதோ ஒன்று அவனைக் காணத் தடுக்க, தவிர்த்தவள், நாகம்மாள் அல்லது ராசாத்தியிடம் கூறிவிட்டுச் செல்லலாம் என்று அடுக்களைப் பகுதிக்குச் சென்றாள்.

நாகம்மாள் தங்களோடுதான் அதே வீட்டிலேயே இதுவரை தங்கியிருப்பார்.

அவரது அறைக்குச் செல்லும்போதுதான், முந்தைய நாள் ராசாத்தியோடு அவர் கிளம்பிச் சென்றது திலாவிற்கு நினைவில் வந்தது.

ராசாத்தியின் மகளுக்கு பூபெய்திய நாளை கொண்டாடியபிறகு நேரில் சென்று பார்த்து வர எண்ணி, பூ, பழம், இனிப்பு, உடை முதலியவற்றை வாங்கிக் கொண்டு, முந்தைய இரவில் ராசாத்தியுடன் கிளம்பிச் சென்றிருந்தார் நாகம்மாள்.

ராசாத்தி இன்று ஏழு மணிக்கு மேல் வேலைக்கு வரும்போது நாகம்மாளும் உடன் வருவார் என்பதை மறந்திருந்தவளுக்கு அப்போதுதான் நினைவில் வந்திருந்தது.

இதற்கிடையே திருநாவு மீண்டும் திலாவிற்கு அழைத்திட, அவசரமாக மீண்டும் அழைப்பை ஏற்றுப் பேசினாள்.

வீட்டிலிருந்து கிளம்பி வந்து கொண்டிருப்பதாகவும், தாமதிக்காது மெயின் ரோட்டிற்கு வந்துவிடுமாறும் கூறிவிட்டு வைத்திருந்தார்.

அதற்குமேல் நிற்க நேரமில்லாமல் தான் கோவிலுக்கு உடுத்திய ஆடையை மாற்றி, மருத்துவமனை செல்வதற்கேற்ற ஆடையை உடுத்திக் கிளம்பியவள், அலைபேசியில் அங்கு சென்ற பின் நிலவரத்தை நேரில் கண்டு கொண்டு, விஷ்வாவிடம் கூறிக்கொள்ளலாம் என்ற நினைப்போடு, பதற்றத்தோடு கிளம்பியிருந்தாள் பெண்.

பதற்றத்தில் தனது கைப்பையைத் தேடி எடுத்தவள்,  திருநாவுவிடம் பேசிவிட்டு அலைபேசியை வைத்த இடத்தில் இருந்து எடுக்க மறந்து, கிளம்பியிருந்தாள்.

வீட்டை விட்டுக் கிளம்பி வெளியே நடக்கத் துவங்கியிருந்தாள் திலா.

கண்ணன், திருநாவு, அவரின் மனைவியோடு மெயின் ரோடில் கேபில் அமர்ந்தபடி காத்திருந்தனர். தங்களை நோக்கி வேகமாக நடந்து வருபவளை நோக்கிக் காத்திருக்க, முன்பைக் காட்டிலும் ஓட்டமும் நடையுமாக அவசரமாக நடந்து வந்தாள் திலா.

காத்திருந்து, திலாவை தங்களோடு ஏற்றிக் கொண்டு மருத்துவமனையை நோக்கிக் கிளம்பியிருந்தது கண்ணனது குடும்பம்.

வழுக்கி விழுந்ததில் கை கால்களில் மிகுந்த சிராய்ப்போடு, கால் மூட்டும் பிசகி வலியில் துடித்துக் கொண்டிருந்தார் கண்ணனின் தாய்.

மருத்துவமனையின் கொண்டு சென்று அவசர சிகிச்சைப் பிரிவில் சேர்த்துவிட்டு, மூவரும் வெளியில் காத்திருந்தனர்.

என்ன, எப்படி என்று விசாரித்தபோது, திருநாவு, கண்ணன் இருவருக்குமே எதுவும் தெரிந்திருக்கவில்லை.

எப்பொழுதும்போல எழுந்து வேலை பார்த்துக் கொண்டிருந்தவரின் சத்தம் கேட்டே, திருநாவு ஓடிச் சென்று பார்த்ததாகவும், கண்ணனின் தாய் விழுந்து கிடந்ததைக் கண்டு, தந்தை மகன் இருவரும் பதறியடித்துச் சென்று தூக்கி அமர்த்தியபோது, வலியிலும் வேதனையிலும் துடித்தவரை மருத்துவமனைக்கு அழைத்து வந்ததையும் பற்றியும் திலாவிடம் கூறினார்கள்.

எதையும் விளக்கமாகக் கூறும் நிலையில் கண்ணனின் தாயார் இல்லாததால் வரும்வழியில் அவரைத் தொந்திரவு செய்யாமல் வந்திருந்தாள் திலா.

அவசர சிகிச்சை பிரிவில் இருந்த மருத்துவர், கண்ணனின் தாயாரை பரிசோதித்துப் பார்த்துவிட்டு, “வெளியேயும் சிவியர் இன்ஞ்சுரிஸ் இருக்கு.  அதுக்கு ஃபர்ஸ் எய்ட் பண்ணியாச்சு, அவங்களுக்கு கால்ல மூட்டு விலகின மாதிரி தெரியுது.  எக்ஸ்ரே எடுக்கணும்”, என்று அடுத்தடுத்த சிகிச்சை சார்ந்த முறைகளைக் கூற

ஆண்கள் இருவரும் அதைச் செய்ய வேண்டி ஆயத்தமாக, கண்ணனின் தாயாருக்கு உதவியாக திலா உடன் இருந்தாள்.

நீண்ட நேரம் அங்குள்ள நிலைக்கு தன்னை மாற்றி அதில் மனதோடு உழன்று கொண்டிருந்தவளுக்கு, கணவனிடம் கூறாததோடு, யாரிடமும் விசயம் பகிராததும் நினைவில் வந்தது.

அலைபேசியை எடுத்து விசயத்தைக் கூற எண்ணி கைப்பையில் தேட, அது நான் இதிலில்லை என்று தெளிவாகக் காட்டியது.

அலைபேசியை மறந்து வைத்துவிட்டு வந்த தனது மடத்தனத்தை நொந்தவாறு கண்ணனைத் தேடி அருகில் சென்றவள், “கண்ணானா! அவரு நம்பருக்கு கால் பண்ணிக் கொடு”, என்க

எதுவும் கேட்காமல் அலைபேசியை எடுத்து டயல் செய்து திலாவின் கையில் கொடுத்தான் கண்ணன்.

சற்று தொலைவில் சென்று விஷ்வா அழைப்பை எடுக்கும்வரைக் காத்திருந்தாள் திலா.  நீண்ட நேரத்திற்குப் பிறகே அழைப்பு எடுக்கப்பட்டது.

விரக்தி தோய்ந்த குரலில் கண்ணனின் அலைபேசி அழைப்பை ஏற்றவனிடம், திலா.. தான் அவசரமாக மருத்துமனைக்கு கிளம்பி வந்ததைக் கூறினாள்.

முதலில் திலாவின் குரல் கண்ணனது அலைபேசியில் வந்ததைக் கேட்டவன் புரியாமல் குழம்பியிருந்தான்.

“நீ எப்டி அங்க போன?”, என்ற கேட்டவனிடம்

கண்ணனின் தாயாரின் உடல்நலத்தைப் பற்றியும், காலையில் திருநாவு அழைத்துப் பேசியதையும் திலா நிதானமாகக் கூற, விசயத்தை கேட்டுக் கொண்டான் விஷ்வா.

முந்தைய தினத்திற்கும், இன்றைய விஷ்வாவின் அமைதிக்கும் பொருந்தா நிலையை உணர்ந்த திலா, திருநாவு தன்னை உதவிக்கு அழைத்ததால், வேறு வழியின்றி யாரிடமும் கூறாமல் தான் அவசரமாகக் கிளம்பி வந்ததையும் கூறினாள்.

அனைத்தையும் அமைதியாகக் கேட்டுக் கொண்டவன், குரலில் எந்த உணர்ச்சியையும் காட்டாது, எந்த மருத்துவமனை, என்ன ஏது என்று விபரம் கேட்டறிந்து கொண்டான். அடுத்த முக்கால் மணித் தியாலத்தில் மருத்துவமனைக்கு நேரில் வந்திருந்தான் விஷ்வா.

வந்தவன் திருநாவு, கண்ணன் இருவரையும் சந்தித்து கண்ணனது தாயாரின் நிலையைக் கேட்டறிந்தான்.

அங்குள்ள நிலைமையை ஒரளவு கணித்தவன், சற்று நேரம் அங்கிருந்து விட்டு, திலாவை தன்னோடு வருமாறு செய்கையில் அழைக்க, அதுவரை தன்னைக் கண்டுகொள்ளாதிருந்தவன் அழைத்ததும், பின்னோடு வேகமாக வந்தவளை தனியாக அழைத்துச் சென்று, “வேற யாரையாவது ஹெல்புக்கு அரேன்ஞ் பண்ணலாம்.  என்னோட, நீ இப்ப வீட்டுக்குக் கிளம்பு”, என்று உறுதியான குரலில் கூறினான் விஷ்வா.

விஷ்வாவின் வார்த்தையைக் கேட்டவளுக்கு, அவனது குரலில் இருந்த திடம் மறுக்கவும் தோன்றவில்லை. அதேநேரம் தனது தாயின் உடல் நிலையில் உண்டான சரிவின்போது, உடன் வந்து உதவிக்கு நின்றவர்கள் என்கிற நன்றியுணர்வு பெண்ணைத் தயங்கச் செய்ய, பெண்ணின் தயக்கத்தைக் கண்டவன், “எனக்கு உன்னோட மனநிலை புரியுது திலா.  அதுக்கு வேற ஆளு அரேன்ஞ் பண்ணிரலாம்.  ஒன் ஆர்குள்ள இங்க நாம ஏற்பாடு பண்ணவங்க அவங்க ஹெல்புக்கு வந்திருவாங்க.  வா நான் திருநாவு சார்கிட்ட பேசுறேன்”, என்றவன் மனைவியின் கருத்தை எதிர்பார்க்காமல், திருநாவு, கண்ணன் இருவர் இருந்த இடத்தை நோக்கி விரைந்தான்.

இருவரிடமும் சென்று, எந்த விதமான உதவியாக இருந்தாலும் தயங்காமல் தன்னை அழைக்குமாறு கூறினான் விஷ்வா.

அத்தோடு திலாவைக் கையோடு அழைத்துக் கொண்டு செல்வதைப் பற்றிக் கூறிவிட்டு, கண்ணனது தாயாரின் உதவிக்கு வேண்டி, கேர்டேக்கரை தான் ஏற்பாடு செய்திருப்பதையும் பகிர்ந்து கொண்டதோடு, திலாவை உடன் அழைத்துக் கொண்டு அங்கிருந்து கிளம்பியிருந்தான் விஷ்வா.

சற்று நேரம் விஷ்வாவோடு திலா செல்வதையே பார்த்தபடியே இருந்த திருநாவு, “நல்ல புள்ளை அது!  அதத்தான் உனக்கு பேசி முடிக்கலாம்னு நினைச்சேன்.  எங்க உங்கம்மா விட்டா!  இனியும் அந்தப் புள்ளையோட உதவிய நாம எதிர்பார்த்தது தப்புத்தான்!”, என்றவர் பெருமூச்சொன்றை வெளியேற்றியவாறு, “அந்தப் பையன் நீ சொன்னதுபோல பழகுறதுல நல்லமாதிரிதான் போல!  அதான் நமக்கு நேருல வந்து ஹெல்ப் பண்ணுது”, என்று மகனிடம் திலாவைத் தவறவிட்ட வருத்தத்தோடும், விஷ்வாவைப் பற்றி நிறைவோடும் திருநாவு கூற

தந்தை பேசிய திலாவைப் பற்றிய செய்தி அனைத்தும் தானறியாதது என்பதால், கண்ணனின் மனமும் கைக்குக் கிட்டியது வாய்க்கு கிட்டவில்லை எனும் நிலையில் திலாவைத் தவற விட்ட வருத்தத்தோடும், தற்போது பெண் கணவனோடு சென்ற கோபமும் சேர்ந்து கொள்ள, “என்ன தப்புப்பா!  நாம எத்தனை தடவை அவங்கம்மாவுக்கு போயி ஹெல்ப் பண்ணிருப்போம்.  நன்றி கெட்டவ!  இருந்து நான் பாக்கறேன்னு சொன்னா சாரு வேணாணா சொல்லப் போறாரு!  இவளுக்குத்தான் பெரிய இவனு நினைப்பு! புது பணக்காரி ஆகிட்டால்ல! உதவி பண்ற மாதிரி வந்து நின்னுட்டு அவரு கூப்பிடரதுக்கு முன்னேயே கூட கிளம்பிட்டா!”, என்று தன்னை மீறி பொறிந்து தள்ளியிருந்தான் கண்ணன்.

கண்ணனுக்கு, விஷ்வாவின் லீலைகள் அனைத்தும் தெரிந்தநிலையில், கடந்த ஒரு வருடமாகவே, திலா எதாவது ஒரு விதத்தில் தங்களை நாடி வந்து புலம்புவாள் என்று எதிர்பார்த்திருக்க, அவளுடைய குடும்பம் சார்ந்த எதையும் கூறாததோடு, தங்களிடமிருந்து ஒதுங்கியிருப்பவளைக் கண்டு ஏமாற்றமே மிஞ்சியிருந்தது.

பெண் தயங்கும் நிலையில் தானாகவே சில நேரங்களில் அழைத்து விபரம் கேட்டபோதுங்கூட, எதையும் பகிர்ந்து கொள்ளாதது திலாவின் மீது கோபத்தை உண்டு செய்திருந்தது.

எப்படியாவது தனது வழிக்கு கொண்டு வர முயன்றும், அனைத்தையும் வெட்டிப் பேசி, முன்னேற விடாமல் தன்னை முடக்கிய திலாவின் செயலில், பேச்சில் இருந்த வருத்தம், அவனை இன்று அவ்வாறு பேசச் செய்திருந்தது.

“அடுத்தவன் பொண்டாட்டிய நீ அவ இவன்னு பேசறதுலாம் தப்புப்பா!  அது சூழ்நிலை எப்டியோ!  இப்ப இன்னொரு வீட்ல போயி வாழற புள்ளை!  அத நாம உதவிக்குக் கூப்பிட்டதே தப்புதான்!”, என்று திருநாவு உணர்ந்து  வாதிட

“போங்கப்பா! நீங்க இல்லாமலா அவ அந்த வீட்ல போயி இன்னைக்கு ஜாம் ஜாம்முனு வாழறா!  அந்த நினைப்பு கூட அவளுக்கு இல்லை! ச்சேய்! நன்றிகெட்டவ!”, என்று முகத்தில் வெறுப்பைக் காட்டினான் கண்ணன்.

மகனின் பேச்சைக் கேட்ட திருநாவு, “நாம நியாயமாவ அன்னைக்கு நடந்துகிட்டோம். நம்ம பொறுப்பு தீந்தா போதும்னுதான அந்தப் பையனப் பத்தி டாக்டரு வீட்ல சொன்னதெல்லாம் கமலாகிட்ட மறைச்சோம்.  அவங்கம்மாவோட நிலை எல்லாந் தெரிஞ்சும் அவசர அவசரமா விசயம் எதுவும் தெரியுமுன்ன கல்யாணம் முடிச்சு வச்சோம்.  அந்தப் புள்ளை போன நேரம், மோசமாத் தெரிஞ்ச பையன் அவரா மனசு மாறி, வீட்டுக்கு வந்த புள்ளைய நல்லா வாழ வச்சுருக்காரு!”, என்று நடந்தது எதுவும் தெரியாததால், தானாக யூகித்து, தனது தவறை உணர்ந்தவராக அனைத்தையும் நிதானமாக மகனிடம் பகிர்ந்துகொண்டார் திருநாவு.

கண்ணனுக்கு உண்மை நிலை புரிந்தாலும், அனைத்தையும் அறிந்தும் எப்படி விஷ்வாவோடு ஒருமித்து திலா வாழ்கிறாள் என்கிற வினா மனதிற்குள் குடைந்து கொண்டே இருந்தது.

ஒருவேளை இதுநாள்வரை விஷ்வாவைப் பற்றிய பழைய செய்திகள் எதுவும் திலாவின் காதிற்கு வராமையால் எந்தப் பிரச்சனையும் இன்றி சந்தோசமாக இருக்கிறாளோ என்கிற சந்தேகமும் அவ்வப்போது வந்து சென்றது.

திலாவைப் பற்றிய சிந்தனை வந்தாலே நிம்மதியைப் பறிகொடுக்கும் நிலைக்கு தான் செல்வதை எண்ணிய கோபமும், இன்றைய கண்ணனனது பேச்சிற்கு காரணமாக அமைந்திருந்தது.

“எல்லாம் ஒத்து வந்திருந்தாலும் அந்தப் புள்ளை உன்னை ஏத்துக்கற ஐடியாவுல இருந்திருக்காதுன்னு தோணும்.  ஏன்னா சின்னப்புள்ளையில இருந்து அண்ணேனுதான் உன்னை வாய் நிறையக் கூப்பிடும்.  அதை யோசிச்சுத்தான் நானும் உங்கம்மா பேச்சைக் கேட்டு போனா போகுதுனு விட்டுட்டேன்”, என்று திருநாவு மகனிடம் திலாவைப் பற்றி தான் நினைத்ததைப் பகிர்ந்து கொண்டிருந்தார்.

அதைப்பற்றி காதில் வாங்கினாலும், கருத்தில் ஏற்றாமல் இருந்தான் கண்ணன்.

/////////////////////

வீட்டில் வந்து திலாவை இறக்கிவிட்ட விஷ்வா, “நான் ஆஃபீஸ் கிளம்பரேன்!”, என்றுவிட்டு கிளம்ப எத்தனிக்க

“சாப்பிட்டீங்களா?”, என்றவாறு திலா நோக்க, “காலையில எழுந்தவுடனே ஃபேஸ் பண்ண விசயத்துலயே வயிறு நிறைஞ்சுதான் இருக்கு!”, என்று பூடகமாகப் பேசிவிட்டு, வாயிலோடு கிளம்பியிருந்தான் விஷ்வா.

விஷ்வாவின் நடத்தையில் அவன் தன்மீது கோபமாக இருக்கிறான் என்பதைக் காட்டிலும், தங்களுக்கு உதவியவர்களுக்கு குறிப்பாக தனது தாய் உடல்நிலைக் குறைவால் கஷ்டப்பட்ட தருணங்களில் எல்லாம் உதவி செய்தவர்களுக்கு, தன்னாலான உதவியைச் செய்ய விடாமல் திடுமென்று வந்து, உடன் அழைத்து வந்துவிட்டானே என்கிற குறையோடு பெண்ணும் வீட்டினுள் நுழைந்திருந்தாள்.

வீட்டிற்கு வந்தவளுக்கு மனம் கேட்காமல், அவ்வப்போது திருநாவுவிற்கு அழைத்து விசாரித்து, கண்ணனது தாயாரின் நிலவரம் அறிந்து கொண்டாள்.

ஒரு மணி நேரத்திற்கு முன்பாகவே, விஷ்வா அனுப்பிய கேர் டேக்கர் பெண் அங்கு வந்துவிட்டதாக திருநாவு கூறக் கேட்டவளுக்கு, மனதில் சற்று ஆசுவாசம் வந்திருந்தது.

தான் அருகில் இல்லாதபோதும், கவனித்துக் கொள்ள உரிய நபரை விஷ்வா நியமித்ததால் கிடைத்த சந்தோசத்தால் வந்த உணர்வு அது.

வந்தது முதலே, கண்ணனின் தாயாரைப் பற்றி அவ்வப்போது கேட்டறிந்து கொண்டவள், மதிய உணவை விஷ்வா உண்ண வராததைக் கண்டு, வேலைப்பளுவோ என்று நினைத்து, உணவைக் கொடுத்தனுப்பினாள்.

விஷ்வாவிடம் இருந்து எந்த அழைப்பும் வரவில்லை.

மாலையில் விஷ்வாவிற்கு அழைத்துப் பார்த்தாள்.  திலாவின் அழைப்பை ஏற்கவே இல்லை. இருமுறையும் அழைப்பு ஏற்கப்படாமல் இருக்கவே, ‘ஏதோ முக்கிய வேலையில் இருந்தால் மட்டுமே, விச்சு அப்படி எடுக்காம இருக்கும்.  வயிட் பண்ணிப் பாப்போம்’, என்று காத்திருக்கத் துவங்கினாள் திலா.

விஷ்வா வீடு வந்ததும், அவனையும் அழைத்துக் கொண்டு கோவிலுக்குச் செல்ல எண்ணியிருந்தவள், விஷ்வா அழைப்பை ஏற்காததாலும், வரத் தாமதமானதாலும், கோவில் நடைசாற்றிவிடும் நேரம் நெருங்கவே தனித்துக் கோவிலுக்குக் கிளம்பியிருந்தாள்.

பெண் கோவிலுக்குச் சென்ற சற்று நேரத்தில் வீடு திரும்பியிருந்தான் விஷ்வா.

உண்மையில் கண்ணன் தன் தாயின் உடல்நிலை காரணமாக அன்று விடுப்பு என்பதால், கூடுதலான எதிர்பாரா சில பணிகள் சேர்ந்ததில், விஷ்வா தனித்து செயல்பட்டு சோர்ந்திருந்தான்.

வீட்டிற்கு வந்து மனைவியைத் தேட, தற்போதும் திலா வீட்டில் இல்லை என்றதும், காலையில் மருத்துமனையிலிருந்து அழைத்து வந்தவள், மீண்டும் அங்கு சென்றுவிட்டாளோ என்று யோசித்ததும், மனம் அதிருப்தியடைந்திருந்தது.

அதே நினைப்போடு அறைக்குள் சென்றவன், அறையை விட்டு வராமல், அதே நினைவுகளோடு அமர்ந்திருந்தான் விஷ்வா.

‘என்ன நினைச்சிட்டுருக்கா இவ!  காலையில எழுந்தா ஆளக்காணோம்.  இப்ப மனுசன் வீட்டுக்குள்ள வந்து பாத்தா இப்பவும் காணோம்!’, என்று யோசித்தபடியே அலைபேசியை எடுத்துப் பார்த்தவனுக்கு, பெண்ணது இரண்டு அழைப்புகள், மிஸ்டு காலில் இருந்ததைக் கண்டு, ‘எப்போ பண்ணா?’, என்று நேரத்தை எடுத்து நோக்கிவிட்டு தன்மீதுள்ள தவறை உணர்ந்து அமைதியாகியிருந்தான்.

‘எடுத்திருந்தா சொல்லிட்டு போயிருப்பாளோ!  இல்லைனா  கூட்டிட்டுப் போகச் சொல்லியிருப்பா’, என்கிற நினைப்பே கசந்தது விஷ்வாவிற்கு.

அரைமணித் தியாலத்திற்குப்பின் வீட்டிற்கு வந்தவள், கையில் கொண்டு வந்த அட்சதைத் தட்டை ஹாலில் வைத்துவிட்டு, கணவனை ஹாலில் காணாது, அறைக்குள் வந்திருந்தாள்.

வந்தவளின் அரவத்தை உணரக்கூட இயலாத நிலையில் அறைக்குள் யோசனையோடு தலையைப் பிடித்தவாறு அமர்ந்திருந்தான் விஷ்வா.

வழக்கமாக இன்னேரம் ஹாலில் அமர்ந்தவாறு செய்திகள் பார்ப்பான்.  அல்லது தனது லேப்டாப்பில் எதாவது வேலை பார்த்துக் கொண்டிருப்பான்.

இவ்வளவு நேரம் வரை அறையில் என்ன செய்கிறான் என்ற யோசனையோடு அறைக்குள் வந்தவள் கண்டது, குனிந்தபடி தலையை இரு கரங்களால் தாங்கிப் பிடித்தவாறு அமர்ந்திருந்த விஷ்வாவைத்தான்.

தலையைத் தொங்கப் போட்டவாறு அமர்ந்திருப்பவனைக் கண்டு சுற்றிலும் பார்த்தபடியே அருகே வந்தவள், தன்னைத் தேடி தான் வீட்டில் காணவில்லை என்பதால் விஷ்வா அவ்வாறு இருக்கிறான் என்று தெரியாமல் பேசத் துவங்கியிருந்தாள் திலா.

“இப்பதான் வந்தீங்களா! என்ன செய்யுது?  ஆஃபீஸ்ல வர்க்லோடா அதான் தலையைப் பிடிச்சிட்டுருக்கீங்களா! தலைய வலிக்குதுனா போயி காஃபீ போட்டு எடுத்துட்டு வரவா?”, என்று அடுத்தடுத்த கேள்விகளைக் கேட்டவாறு அருகில் வந்தவள், விஷ்வாவின் நெற்றியைத் தொட்டுப் பார்த்தாள்.

கணவன் கோபமாக இருக்கும்போதெல்லாம் கொஞ்சல்ஸ் எல்லாம் போயி, மரியாதை வந்து தானாகவே ஒட்டிக் கொள்ளும் பெண்ணின் வார்த்தையில். 

பெண்ணும் மிகுந்த சிரத்தையோடு மரியாதையாக வினவினாள்.

திலா நெற்றியில் தொட்டவுடன், கையைத் தட்டிவிட்டு,  உடனே எழுந்தவனைப் பார்த்தபடியே, ‘என்னாச்சு?  எப்பவும் இப்டியெல்லாம் முகத்தைத் தூக்கி வச்சிட்டது இல்லையே’, என்கிற யோசனையோடு பார்த்திருந்தாள் திலா.

அதற்குள் அறையை விட்டு வெளியே சென்றிருந்தான் விஷ்வா.

எதேச்சையாக பார்வையில்பட்ட முந்தைய இரவு கொண்டு வைத்த சொம்பை இன்னும் அறையிலிருந்து எடுத்துச் செல்லாததை உணர்ந்து அதை எடுத்தவளுக்கு, அது வயிட்டாக இருப்பதை உணர்ந்ததும், ‘ஐயோடா’ என்றிருந்தது.

வைத்த பால் வைத்தபடி அப்படியே இருப்பதைக் கண்டவள், “ப்சு.. என்ன இது, நீங்க நைட் குடிக்கத்தான பாலைக் கொண்டு வந்து வச்சேன்.  குடிக்கவேயில்லையா?”, என்றபடியே அதை கையில் எடுத்தவாறு கணவனின் பின்னோடு வந்திருந்தாள்.

“வேணானு நேத்து கேட்டப்பவே சொன்னேனே”, என்று பதிலை விட்டேற்றியாகக் கூறியவாறே சென்றிருந்தான் விஷ்வா.

திலாவை வீட்டில் காணவில்லை என்றதும், பெண் மீண்டும் மருத்துவமனைக்குச் சென்றுவிட்டாள் என்று நினைத்தே சங்கடத்தோடு அமர்ந்திருந்தான்.

அதனாலேயே யாரிடமும் திலாவைப் பற்றி விசாரிக்கவில்லை.

தனக்கு அதுபற்றிக் கூறவே அழைத்திருக்கிறாள் என்று எண்ணியவனுக்கு அவளை நேரில் கண்டபிறகும் இயல்பாகப் பேசவே இயலவில்லை.

எழுந்தவன், பெண்ணைச் சுற்றி எழுந்து ஹாலுக்குச் சென்று அமர்ந்து கொண்டான்.

பெண்ணுக்கு ஒன்றுமே புரியவில்லை.

இயல்பாக கேட்டறிந்து கொள்ளவும் விஷ்வாவின் மனம் இடங்கொடுக்கவில்லை.

“என்னாச்சு உங்களுக்கு”, என்றபடியே அருகில் வந்து அமர்ந்தாள் திலா.

“ம் நல்லாத்தானே இருக்கேன்”, என்று பல்லைக் கடித்தபடியே பதில் வந்தது விஷ்வாவிடமிருந்து.

கண்கள் இரண்டும் தொலைக்காட்சியில் நிலைத்திருக்க அமர்ந்திருந்தவனைப் பார்த்தபடியே, “இல்லையே.  எப்பவும்போல இல்லை.  ஆஃபீஸ்ல எதுவும் பிரச்சனையா?”, என்று கேட்டாள் திலா.

தலையை மட்டும் மறுத்து ஆட்டியவன், பெண்ணிடம் பேசித் தீர்க்க முனையாமல், காரின் கீயை எடுத்துக் கொண்டு வெளியே கிளம்பியிருந்தான்.

திலாவிற்கு எதுவும் புரியவில்லை.

‘என்னனு சொன்னாத்தானே புரியும்.  இவரா இப்டி முகத்தைத் தூக்கி வச்சிட்டு அமைதியா இருந்தா எனக்கு என்ன ஏதுன்னு எப்டித் தெரியும்?’, என்று எண்ணியவளாக,

‘கேட்டதுக்குப் பதிலைச் சொல்லாம கிளம்பிப்போனா என்ன அர்த்தம்’, என்ற விஷ்வாவின் செயலில் வருத்தமடைந்தவள், கோவிலுக்குச் சென்று திரும்பிய சந்தோசமும் போயிருக்க, இரவு உணவைக் கவனிப்பதாக சற்று நேரத்தைக் கடத்தினாள்.

நீண்ட நேரம் ஆனபோதும் வீட்டிற்கு திரும்பாதவனை அலைபேசியில் அழைக்க எண்ணி எடுத்தவள், ‘வரட்டும்.   போனுல போயி என்னத்தைக் கேட்டுக்கிட்டு. நேருல வந்தவுடனே பேசிக்கலாம்’, என்று மனதிற்குள் நினைத்தபடியே காத்திருக்கத் துவங்கினாள்.

பத்து மணி ஆனபோதும் வீட்டிற்கு வராதவனை எண்ணி, பதற்றத்தோடு அழைக்க, அழைப்பை ஏற்காமல், அடுத்த பதினைந்து நிமிடத்தில் வீட்டிற்கு வந்தவன், நிதானத்தில் இல்லை என்பதை விஷ்வா நிதானத்தோடு வந்தபோதும், கண்டு கொண்டாள் பெண்.

பெண் விஷ்வாவின் நிலையைக் கண்டு தானாகவே ஒதுங்கியிருந்தாள்.

கணவன் மது அருந்தியிருப்பதைக் கண்டு கொண்டவளுக்கு உள்ளமெங்கும் தீயாகத் தகிக்கத் துவங்கியிருந்தது.

‘அப்டியென்ன தலை போற காரியமா?  பழையபடி குடிச்சிட்டு வந்தா, என்னானு நான் நினைக்கிறது?’, என்ற மனதோடு சோர்ந்து போனாள் திலா.

விஷ்வாவும் பெண்ணோடு எதையும் பேச முனையவில்லை.

உணவு வேண்டாம் என்றவனை வற்புறுத்தவில்லை திலா.

டைனிங்கில் இருந்ததை அப்படியே எடுத்து வைக்கும்படி கூறிவிட்டு, நீண்ட யோசனைக்குப்பின், ‘இனி என்ன ஆனாலும் முன் வச்ச காலை பின்ன வைக்கக்கூடாது’, என்று தனக்குத்தானே கூறிக்கொண்டு, விஷ்வாவின் அறையிலேயே சென்று முந்தைய தினம் படுத்த இடத்தில் சென்று படுத்திருந்தாள் திலா.

அறைக்குள் வந்தால், என்ன ஏது என்று விசாரிக்கலாம்.  ஹாலில் அமர்ந்திருப்பவனிடம் என்னவென்று கேட்க என தயக்கம் வந்தது திலாவிற்கு.

திலா உறக்கம் வராது, ‘ அப்டியென்னதான் இவருக்குப் பிரச்சனை?’, என்று தனக்குள் யோசித்து, களைத்து உறங்கத் துவங்கியிருந்தாள்.

அளவோடு மதுவை நாடியிருந்தவனுக்கு, தனது செயல் வருத்தத்தைத் தந்தபோதும், பெண் காலையில் தன்னை ஊதாசீனப்படுத்தியதுபோல உணர்ந்ததால் உண்டான குழப்பம் இன்னும் தீர்ந்தபாடில்லை.

‘என்னைவிட அவங்கதான் அவளுக்கு முக்கியமா!  வந்து வருசம் இரெண்டாகப் போகுது.  ஒருநாள் கூட இவளை வந்து பாக்காதவங்களை பாக்க, என்னைக் கண்டுக்காம அம்போனு தனியா விட்டுட்டுப் போயிட்டா!  உண்மையிலேயே நான் அவகிட்ட நடந்துகிட்டது புடிக்கலையா?  எவ்வளவு ஆசையோட சந்தோசமா எழுந்துரிச்சேன்!  எல்லாம் பொய்யினு காட்டிட்டா!  எதனால இத்தனை நாள் இல்லாம இன்னைக்கு மட்டும் என்னை ஒதுக்கனும். அப்போ அவளுக்கு என்னைப் பிடிக்கலை!  நான் காலையில வலுக்கட்டாயமா கூட்டிட்டு வரலைன்னா அங்கேயே டேரா போட்டுருப்பா!’, என்கிற எண்ணமே மனதில் உழன்று விஷ்வாவை வருந்தச் செய்தது.

‘சாயங்காலம் எங்க போனா? எனக்கு எதுக்கு கால் பண்ணா?’, என்று மனதோடு கேட்டவனிடம் யார் சொல்வார் தகுந்த பதிலை…

நீண்ட நேரம் ஹாலில் அமர்ந்திருந்தான். எப்போது படுக்கைக்கு வந்தான் என்பதே திலாவிற்கு தெரியவில்லை.

பெண் தனது அறையில் உறங்குவதைப் பார்த்தவனுக்கு சற்றே சந்தோசக் குமிழி மனதோடு வந்து ஆர்ப்பரித்தது.

‘அப்போ அவ என்னை அவாய்ட் பண்ணலையா?  அவளுக்கு என்னைப் பிடிச்சுருக்கா? இப்போ அவ ஈவினிங் எங்கே போனானு கேட்டா, எங்கிட்ட என்ன சொல்வா?’, என்று மனம் தனக்குச் சாதகமான பதிலை எதிர்நோக்கி ஏங்க

அருகே சென்றவன், தனது நிலையை எண்ணி திலாவை நெருங்க யோசித்தான்.

நல்ல உறக்கத்தில் ஆழ்ந்திருந்தவளை, நெருங்க மனம் விழைய, உறங்காத அறிவு ‘இப்போது நெருங்காதே’, என்று அச்சுறுத்தி தள்ளி நிறுத்தியது.

ஆசையாக பார்த்தபடியே, ஏக்கத்தோடு பல நினைவுகளை தனக்குள் கொணர்ந்து ஏங்கியவாறே, நீண்டநேரம் பார்த்திருந்தான்.

‘மடத்தனமா நானே ஏதோ நினைச்சு ஸ்ட்ராபெர்ரியை அவாய்ட் பண்ணிட்டேன்’, என்று மருகிய உள்ளத்தோடு, உறங்குபவளையே பார்த்திருந்தவன், அசதியில் உறங்கத் துவங்கினான்.

அதிகாலையில் விழிப்பு வரவே, எழுந்ததும் திலாவைத் தேடிய உள்ளத்தோடு பெண்ணை நெருங்க, தனது முந்தியநாளின் செய்கையில் தயங்கினான்.

ஆனாலும் உள்ளம் பெண்ணை தன்னோடு அணைத்துக் கொள்ள ஏங்க, அதைச் செயல்படுத்த வேண்டி, எழுந்து பெண் எழுமுன் குளித்து வந்தான்.

படுக்கையில் இருந்தவளை தன்னோடு இழுத்து, மனம் குளிர இறுக அணைத்தவாறே, “ஸ்ட்ராபெர்ரி”, என்று வசியக் குரலில் அழைத்திட, கணவனின் அழைப்பில் திலா விழி விரித்து, புரியாமல் பார்த்தாள்.

‘என்ன?’, என்று புரியாமல் கணவனை மலங்க மலங்க திலா பார்த்ததைக் கண்டவனுக்கு, வேறு எதைப் பற்றிய சிந்தையும் இல்லாது, அதிகாலைப் பொழுதில் திலாவோடு இருக்கும் தருணத்தைக் கொண்டாடும் விதமாக, மகிழ்ச்சியில் திலாவின் முகமெங்கும் முத்தமழை பொழிந்தான்.

‘என்னாச்சி… காலங்காத்தாலயே மூச்சுமுட்ட முத்தமா கொடுக்குது’, என்று மூச்சிற்கு திணறியவாறே புரியாமல் பார்த்தவளைக் கண்டு, “எங்கடீ போன என்னை விட்டுட்டு?”, என்று முந்தைய நாளின் மாலையில் திலா வெளியே சென்றதைப் பற்றி விஷ்வா கேட்க,

கணவனின் கேள்வியில் ‘எப்போ, எங்கே போனேன்’, என்று பெண்ணுக்கும் புரியாமல், விஷ்வா என்ன கேட்க வருகிறான் என்று தெரியாமல், அறையைச் சுற்றிலும் நோட்டம் விட்டாள் திலா.

‘ரூம்லதான தூங்கிட்டு இருக்கேன்.  எங்கே இவரை விட்டுட்டுப் போனேன்’, என்று புரியாமல் விஷ்வாவைப் பார்த்தவளை புரிய வைக்க விஷ்வா என்ன செய்தான்?

 

விஷ்வாவின் வினாவிற்கு பெண் கூறிய பதிலென்ன?

 

அடுத்த அத்தியாயத்தில்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!