IV16

IV16

இதய ♥ வேட்கை 16

 

கணவன், “இந்த பாலுக்கும், நைட்டு நடக்கற விசயத்துக்கும் எதாவது சம்பந்தமிருக்கா!” எனக்கேட்ட கேள்வியை உள்வாங்கிய திலா, முதலில் விஷ்வாவிடம் மறைக்கத் தோன்றாமல் விசயத்தைக் கூறிவிடலாம் என்கிற எண்ணத்தில், ஒப்புக்கொள்ளும் விதமாக தலையை மேலும் கீழுமாக அசைத்து ஆமோதித்திருந்தாள்.

அந்த நொடியே, மனம் ‘இதைப் போயி எப்படி விச்சுகிட்ட விலாவாரியா விளக்கிச் சொல்லுவ!’, என்று சாட, அடுத்த கணமே கூறவேண்டாம் என்கிற முடிவோடு இல்லை என மறுத்துத் தலையை அசைத்திருந்தாள் திலா.

திலாவையே கண்களால் நோக்கி, அவளின் செயலை வாசித்தபடி ரசித்துப் பார்த்திருந்தவன், பெண்ணது செயலில் தன்னிடம் ஏதோ மறைக்க நினைக்கிறாள் என்பதைக் கண்டு கொண்டான்.

“என்ன திலா சொல்லலமா வேணாமானு யோசிக்கிறியா?”, என்று பெண்ணிடமே நேரடியாக வினவியிருந்தான் விஷ்வா.

“இல்ல…!”, என வார்தைகளை முடிக்காது இழுத்தவளுக்கு, கணவன் தன்னைக் கண்டு கொண்டதையும், தான் மறைக்க நினைத்ததையும் எண்ணி சிரிப்பு வந்திருக்க, அதை மறைக்கப் பாடுபட்டாள் திலா.

மனைவியின் மறைக்க எண்ணிய சிரிப்பையும் கண்டு கொண்டவன், எதிரே நின்றிருந்த பெண்ணின் இடப்பக்க இடையை பிடித்து, தன் வலப்பகுதி உடலோடு  இழுத்து தன்னோடு சேர்த்து அணைத்தவன், “அப்ப இருக்கு!”, என்க

கணவனது செயலில் தர்மசங்கடமாகக் குனிந்தவாறே, “ஆமான்னா என்ன செய்யப் போறீங்க? இல்லைனா என்ன செய்வீங்கனு முதல்ல சொல்லுங்க”, என்று விஷ்வாவிடம் மெதுவாகக் கேட்டபடியே விஷ்வாவிடமிருந்து பிரிந்து நின்றாள் திலா.

“ம்ஹ்ம்…”, என்று யோசித்தவன், “ஆமானா பாலைக் குடிக்கறதைப் பத்தி கன்சிடர் பண்ணுவேன்.  இல்லைனா விட்டுட்டுப் போகவேண்டியதுதான்”, தோளைக் குலுக்கியவாறு வசியப் புன்னகை மாறாமல் கூறினான்.

“பால்டாயில் கேங்கல்லாம் பாலைக் குடிக்கறதைப்பத்தி யோசிச்சா, உங்களை மாதிரி உள்ளங்களையே நம்பியிருக்கிற பால்டாயில் கம்பெனிகாரன் பாவமில்லையா?”, என்று குறும்போடு திலா கேட்க

“பால்டாயிலா?”, பதறிக் கேட்க

கணவனின் பதற்றத்தில் உண்டான விசமப் புன்னகையோடு திலா விஷ்வாவை நோக்க

“ஏய் என்ன பாத்தா விசங் குடிக்கற மாதிரி தெரியுதா இல்ல விவசாயம் பண்ண போற மாதிரி தெரியுதாடீ உனக்கு?”, விஷ்வா

“விவசாயமெல்லாம் உங்களுக்கு சரிபட்டு வராது.  நீங்கள்லாம் விச கேங்க்”, என்று மீண்டும் சிரித்தாள்.

அதன்பின், “நீங்க அப்பப்ப அடிக்கற ரம்மு, பீரு, விஸ்கியெல்லாம் விசமில்லாம அமிழ்தமா மச்சி”, எனக் கேட்டுச் சிரிக்க

“அதைப்போயி பால்டாயிலோட சேக்குற?”, என்று விஷ்வாவின் தலையைக் கொண்டு திலாவின் தலையில் முட்ட

அதில் சற்றே வலி உண்டாகியிருக்க, தலையை தேய்த்தபடியே

“அதுக்கு எதுக்கு முட்டுனீங்க?  நீங்க என்ன மாடா?”, என்று ஙஞன னமன குரலில் திலா வினவ

“ம்ஹ்ம்.. பேச்சை மாத்தாம கேட்டதுக்கு பதிலைச் சொல்லுடீ”, விடாக்கண்டன் கொடாக்கண்டனாக பெண்ணை முழுவதுமாக தனது அணைப்பிற்குள் கொண்டு வந்தவாறு கேட்டான் விஷ்வா.

‘இல்லாமலா அன்னைக்கு மெனக்கெட்டு எடுத்துட்டு வந்தேன்!’, என்று அங்கலாய்ப்போடு நினைத்துக் கொண்டவள்,

“விசயம் எதுவுமில்ல”, என்றவாறு கணவனிடமிருந்து விலக முயற்சிக்க

“அப்ப இருக்கு”, என்றபடியே விலகியவளை விலகாமல் இழுத்து நிறுத்தினான்.

“ச்ச்சு என்ன இது, நடுவீட்ல இப்டி பிடிச்சிட்டு”, என்று சுற்றிலும் பார்வையைச் செலுத்தியபடியே மீண்டும் விலக முயற்சிக்க, பெண்ணின் பார்வை வாயிலாக சுற்றத்தை யோசிக்கிறாள் என்று மெதுவாக விலக்கினான் பெண்ணை.

“சரி சொல்லு”, என்று வம்படியாகக் கேட்க

“இல்லைங்க”

“ரொம்ப பிகு பண்ணாதடீ! சொல்லலைனா நான் ஆண்ட்டிகிட்டயே போயி கேப்பேன்”, என்று ஸ்திரக்குரலில் கூற

கண்டிப்பாக இதைக் கேட்டாலும் கேட்பான் என்று எண்ணி லஜ்ஜையாக உணர்ந்தவள், “இல்லாமயா மெனக்கெட்டு காய்ச்சி எடுத்துட்டு வந்து அன்னிக்கு தந்தோம்”, என்று பார்வை மோகனமாக்கிக் கணவனை மேலும் கீழும் பார்த்தபடியே குறுஞ்சிரிப்போடு திலா கேட்க

“அன்னைக்கு அந்தப் பாலை என்ன பண்ணுன?”, அடுத்த தினம் பெண் அறையில் இருந்தபோது விஷ்வாவிடம் கூறியதை அன்று மனதில் வாங்காததால் விஷ்வா அதைப்பற்றிக் கேட்க,

“கெட்டுப்போன பால என்ன செய்ய? கீழதான் ஊத்துனேன்!”, வருத்தம் தோய்ந்த குரலில் கூறினாள் திலா.

“சரி சீக்கிரமா விசயத்தைச் சொல்லு!”, விஷ்வா குஷியாக வினவினான்.

“ம்ஹ்ம்”, என யோசித்தவள்,  “நிறைய சொன்..னா..ங்களே!”, என்று கூறிவிட்டு,

“இப்போலாம் அதச் சொல்ல முடியாது! நைட்டு வந்து நான் சாவகாசமா சொல்றேன்!”, என்று கணவனிடமிருந்து அகன்று அங்கிருந்து அடுக்களைப் பகுதிக்குள் செல்ல முயன்றாள்.

“ப்ளீஸ் இப்பவே சொல்லுடீ!”, என்று பெண்ணை விஷ்வா வற்புறுத்த, பெண் மறுக்க, பெண்ணை கடந்த சில நாள்களில், புரிந்துகொள்ள தன்னை ஆயத்தப்படுத்தியதன் விளைவாக, அதற்குமேல் வற்புறுத்தாது அத்தோடு திலாவின் போக்கில் விட்டிருந்தான் விஷ்வா.

‘இதுக்குமேல தில்லு சொல்லாது.  அதுக்கா சொல்லணும்னு தோணுறப்பதான் சொல்லும்!’, என்று உணர்ந்து அமைதியாகியிருந்தான் விஷ்வா.

“வேணுமா வேணாமான்னு சொல்லிட்டுப் போங்க!”, என்று திலா அமைதியானவனிடம் கேட்க

“ம்ஹ்ம் அப்புறம் சொல்றேனே!”

“எப்பறமா வந்து சொல்லுவீங்க!”, என கணவனருகே வந்து இடுப்பில் கை வைத்தபடியே கேட்டவளின் உடல்மொழியைக் கண்டு விஷ்வா நகைத்திட 

“என்ன வில்லங்கமா சிரிப்பு வேண்டிக் கிடக்கு”, என்றவள்

“நான் படுக்க வந்தப்புறமா வந்து சொல்றதைக் கேட்டுட்டு, நீங்க அப்ப பாலு வேணும், மோரு வேணுனு சொன்னாக்கா, உடனே அப்பபோயி எடுத்துட்டு வர வேற ஆளைப் பாருங்க!”, என்று இடக்காகக் கூறியவளிடம்

“அதுக்கு வேற ஆளுக்கு நா எங்கடீ போக?  அதையும் நீயே பாத்து ஏற்பாடு பண்ணு”, என்று ஒரு மார்க்கமாக கண்ணடித்தவாறு கூறியவனைக் கண்டு

“பிச்சு விச்சு”, என்று கொன்றுவிடுவேன் என்று கையைக் காட்டி மிரட்டியவளைக் கண்டு

“அப்ப நீதான் எடுத்துட்டு வரணும்”, என்றபடியே விஷ்வா சிரிக்க

“இப்ப சொன்னா வரும்போது எடுத்துட்டு வருவேன்.  இல்லைனா இன்னைக்கு கிடையாது”, என்று கண்டிப்போடு கூறினாள்.

“வேணா”, என்று டக்கென்று கூறிவிட்டு அங்கிருந்த சோபாவில் சென்றமர்ந்தவன் தொலைக்காட்சியோடு ஐக்கியமாகிவிட்டான் விஷ்வா.

உறங்க வந்தவளிடம், பெண்ணை படுக்கையில் அமர வைத்து விசயத்தைக் கேட்ட பிறகே படுக்க அனுமதித்தான் விஷ்வா.

படுக்கையில் அதுவரை படுத்தபடியே, தனது அலைபேசியில் பார்த்துக் கொண்டிருந்தவன், பெண் வரும் அரவம் உணர்ந்து, காரியத்தில் கண்ணாக எழுந்து அமர்ந்து கொண்டான்.

வந்து உள்நுழைந்தவளை, “ம் இப்ப சொல்லு”, என்க

‘என்னத்தைச் சொல்ல?’, என்கிற தினுசில் கணவனை கேள்வியாக ஒரு பார்வை பார்த்தாள் திலா.

படுக்கையை விட்டு எழுந்தவன், மனைவியின் அருகே சென்று பின்னோடு அரவணைத்து படுக்கையருகே அழைத்து வந்து அமரச் செய்ததோடு, “நீ மறக்கற ஆளு கிடையாதுன்னு தெரியும்.  ரொம்ப பிகு பண்ணாம இப்ப சொல்லுவியாம்”, என்று பெண்ணை வற்புறுத்த

பெண்ணும் இதற்குமேல் கூறாமல் இருந்தால் கணவன் விடமாட்டான் என்று கருதியதால் கூறத் துவங்கியிருந்தாள் திலா.

“பால் ரெகுலரா குடிச்சா ரீபுரொடக்டிவ் ஆர்கன்ஸ்ஸோட திஸ்யூஸ் எல்லாம் (இனப்பெருக்க உறுப்புகளின் திசுக்கள்) ஃப்ளெக்ஸிபிளாகிருமாம்”, என்க

“ம்.. அப்புறம்”, என்று ஆர்வத்தில் வினவியவனை முறைத்துப் பார்த்தவள்

“மாலினியம்மா எங்கிட்ட எப்பவோ சொன்னது. இப்ப எனக்கு மறந்துருச்சு.  அதனால யோசிச்சுத்தான் சொல்ல முடியும்.  இப்டி அவசரப்படுத்தினா கொஞ்ச நஞ்சம் நினைவுல இருக்கறதும் மறந்துரும்”, விஷ்வாவிடம் அதட்டிச் பேசியிருந்தாள் திலா.

அத்தோடு அமைதியாகியிருந்தான் விஷ்வா.  ஆனாலும் மனம் அமைதியாக இல்லை.

“திஸ்யூஸ் எல்லாம் ஃப்ளெக்ஸிபிளாறதால இரிடேசன், பெயின் இந்தமாதிரி இன்கன்வீனியன்ட் எதுவும் ரொம்பத் தெரியாது அப்டினு சொன்னாங்க”, என்றபடியே அமைதியாக இருந்தவனை திரும்பி நோக்கியவள், “ஃபிரஷ்ஷா, பிரிஸ்கா ஃபீல் ஆகற மாதிரி இருக்கும்னு சொன்னாங்க. அப்புறம்…”, என்று மேல்நோக்கிப் பார்த்தபடி யோசித்தவள், “உடம்புக்கு எனர்ஜியைத் தந்து அந்த நேரத்தில வரக்கூடிய டயர்ட்னஸ்ல இருந்து நம்மை பிரிவெண்ட் பண்ணுமாம். ம்ம்… அப்புறம், அந்த நேரத்தில  உண்டாகுற பயம், வேறு காரணத்தால உண்டாகுற டிப்ரெசன் எல்லாத்தையும் குறைக்கவும், இது சப்போர்ட் பண்ணும்னு சொன்னாங்க!”, என்று முடித்துவிட்டு

“அவ்ளோதான்”, என்றபடியே கணவனை நோக்க

“அவ்ளோதானா…”, என்கிற விஷ்வாவின் கேள்வியில் ஏதோ சட்டென்று நிறைவுற்றமையால் உண்டான அதிருப்தியை கண்டுகொண்டவள்,

“ஜென்ரலா சில ஐடியாஸ் சொன்னாங்க”, என்று துவங்க

“ம்ஹ்ம் சொல்லு”, என்று உத்வேகப்படுத்தியவனை சிரித்தபடியே பார்த்துக் கொண்டே

“அப்புறம் மசாலா பால் மாதிரி ரெகுலர் பண்ணா சந்நியாசி மாதிரி விட்டேத்தியா இல்லாம, சம்சாரியா சந்தோசமா வாழலாம்னும் சொன்னாங்க”, என்று திலா சன்னமான குரலில் சிரித்தபடியே சற்று நாணத்தோடு கூறிவிட்டு,

“இப்பவாவது நான் படுக்கலாமா?”, என்று கேட்க, எதையும் கூறாமல், தன்னவளை நோக்கி உள்நோக்கோடு விஷ்வா சிரித்தபடி இருக்க, அவனைத் தள்ளிவிட்டு முகத்தை நாணத்தால் மூடியவாறு படுக்கையில் சாய்ந்திருந்தாள் திலா.

“இதெல்லாம் நீ அன்னிக்கே எங்கிட்ட சொல்லியிருக்கலாம்!”, என்று கூறியபடியே, பெண்ணை தனது புறம் திருப்ப முயல, பெண் திரும்ப மறுத்து மீண்டும் முகத்தை தலையணையில் புதைத்துக் கொண்டாள்.

பெண்ணைக் கோபப்படுத்தி எழச்செய்ய என்ன செய்யலாம் என சற்றுநேரம் யோசித்தவன், “இப்ப எனக்கு ஒரு கப் பால் கிடைக்குமா திலா?” என்று மெலிதான குரலில் தில்லாக வினவ

கணவனின் வார்த்தைகளைக் கேட்டு, தலையணையில் இருந்து முகத்தை எடுத்து, “என்னாது?”, என்று முகத்தை கடுப்போடு நிமிர்த்தியவளின் முன், விஷ்வா தனது கட்டை விரலோடு, ஆட்காட்டி விரலை நீட்டி மீண்டும், “ஒரு கப் பால் ப்ளீஸ்”, என்று பாலின் அளவை கைகளில் காட்டியவாறு கேட்டு சிரிக்க

“கேக்கற சைசு பாத்தா பால் மாதிரி இல்லையே விச்சு! அது பெக்கு மாதிரி இருக்கே!”, என்று பெண்ணும் விஷ்வாவைச் சீண்ட

“அட அது எப்பவாவதுதான், என் பேக்கு!”, என்று இழுத்தவனிடம்

“யாரு பேக்கு, நானா? உங்களை”, என்று சண்டைக்கு கிளம்ப

“சண்டை உனக்கு நல்லா வரும்போலயே”, என்று திணுசான குரலில் கூறியவன்,

“படுக்கும்போது சமாதானமா போயிரணும்னு நீதான அன்னைக்குச் சொன்ன”, என்றவாறே பெண்ணது சொல்லை நினைவு கூற,

கணவனின் பேச்சில் அமைதியானவள், “இன்னிக்குத்தான் வேணானு சொல்லிட்டீங்களே! இனி நாளைக்குத்தான் கோட்டா கன்சிடர் பண்ணுவேன்”, என்றுவிட்டு மறுபுறம் திரும்பிப் படுத்துக் கொண்டாள் திலா.

“சரி… சரி “, என்றவனது குரலைக் கேட்டு மனம் ஏதோ குறையாக உணர, சிறிது நேரம் கழித்து படுக்கையில் இருந்து எழுந்தவள் கணவன் அழைத்தும் எதுவும் பேசாமல் சென்று பாலை காய்ச்சி எடுத்து வந்திருந்தாள்.

எடுத்து வந்ததை கணவனிடம் தந்துவிட்டு படுத்தவளைப் பார்த்தபடியே, மடக்கென்று குடித்துவிட்டு வைத்தவன், “இது நல்லாவா இருக்கு?”, என முகத்தைச் சுருக்கியபடியே கேட்க

“அது நல்லாயிருக்குன்னா குடிக்கிறோம்,  நாம நல்லாயிருக்கணும்னு தான குடிக்கிறோம்!”, என்று வேதமொழிபோல பேசியளைக் கண்ணுற்றவன்

“நல்லா பேசுறடீ ஸ்ட்ராபெர்ரி”, என்றபடியே “இந்த மாதிரி விசயத்தையெல்லாம் உங்கிட்ட மட்டும் ஆண்ட்டி சொல்லிருக்காங்க! எங்கிட்ட ஏன் சொல்லலை!”, என்று திரும்பிப் படுத்திருந்தவளின் முதுகோடு உராய்ந்தபடியே கேட்க,

“அதுபத்தி நீங்க அவங்கட்டதான் கேக்கணும்!”, தப்பிக்க முயல

“நீ என்ன நினைக்கிற?”

“நான் நினைக்கிறதுபத்திச் சொன்னா உங்களுக்கு கோவம் வந்திரும்!”, பெண்ணும் உணர்ந்து உரைக்க

“இல்ல சும்மா சொல்லு.  நான் கோபப்படமாட்டேன்”, என்று எடுத்துக் கொடுத்தான் விஷ்வா.

“பயந்து ஒதுங்கற புள்ளைக்கு”, எனும்போது இல்லாத காலரை எடுத்துவிடுவதுபோல தன் செய்கையில் கூறிக்கொண்டே பேச்சைத் தொடர்ந்திருந்தாள் திலா. “..இதையெல்லாம் சொல்லி பயத்தை போக்க நினைச்சு சொல்லியிருப்பாங்க. நீங்கதான் பிஞ்சுல இருந்தே பூந்து விளையாடிருக்கீங்க.  உங்ககிட்ட வந்து என்னத்தை இதைப் பத்திச் சொல்லனு சொல்லாம விட்ருக்கலாம்”, என்று தனது மனதில் தோன்றியதை மறைக்காமல் கூறியிருந்தாள் திலா.

“அடிங்க… பிஞ்சுல என்ன பண்ணேன். நல்லாத்தாண்டி யோசிக்கிற! அதெல்லாம் அப்ராட் போயிட்டு வந்ததுக்குப்பறமாத்தான்.. அதுவும் லோலோனு ரோடு ரோடாவா சுத்துனேன்.  என்னைக்கோ ஒரு நாளைக்கு…”, என்று விஷ்வாவும் குறைந்த, சற்றே ஒடுங்கிய குரலில் கூறினான்.

“சரி…. போதும்”, என்று காதுகளை மூடி தன்னைச் சுருக்கிக் கொண்டவளின் மனநிலையை உணரப் புரியாதபோதும், அவளுக்கு ஏதோ சங்கடம் என்று உணர்ந்தவனாக

“எப்பவுமே என்னைப் பத்தி மட்டமாவே யோசி”, என்றபடியே பெண்ணை சில்மிசமாகத் தீண்டி, பெண்ணருகே சென்று, பெண்ணது கண்ணக்கதுப்பைச் செல்லமாகக் கடித்து விளையாட

“விடுங்க ங்க”, என்று தன்னை கணவனிடம் இருந்து மீட்டுக் கொண்டவளை, கைகளால் சீண்ட

கணவனின் உரிமையோடுடனான மீறலை கைகளால் தடுத்தபடியே, “வாய்ப் பேச்சு வாயோடு இருக்கும்போது இதென்னது”, என்று கையைக் காட்டிக் கண்டிக்க

“அது வேற, இது வேற”, என்றவாறு விஷ்வாவும் தொடர

கூச்சத்தாலும், சிரிப்பாலும், பெண் ஒரு இடத்தில் இருக்க இயலாது அங்குமிங்கும் திமிற, பெண்ணைத் தன்னோடு இழுத்து அணைத்தபடியே, “நீயாவது இனி இந்த மாதிரி விசயத்தை முன்கூட்டியே எங்கிட்ட சொல்லப் பாரு!”, என்று கட்டளையாகக் கூறிவிட்டு தானும் திலாவின் அருகே படுத்து பெண்ணைத் தன்னோடு அணைத்துக் கொண்டான் விஷ்வா.

அதுவரை சீண்டலும், தீண்டலும், தூண்டலுமாக விளையாடி ஓய்ந்து, அமைதியாக படுத்தபடியே சற்று இளைப்பாறினார்கள்.

முன்பிருந்த விஷ்வாவிற்கு எதைப்பற்றியும் எந்த சுணக்கமோ, எண்ணமோ, தயக்கமோ, எதிர்பார்ப்போ, இழப்போ இல்லாத நிலை.

ஆனால் தற்போது தான் சுயம்புவாக இருந்தபோதும், ஒரு குறிக்கோளோடு தன்னைத் தானே செதுக்கி, சீரமைத்துக் கொள்ளத் துவங்கியிருக்கும் நிலை.

அதில் எழக்கூடிய குறைகளைக் களைந்து, நிறைவான வாழ்வைப் பெற நித்தமும் பயிற்சிகளையும், முயற்சிகளையும் விதைக்கும் மாமனிதனாக தன்னை மாற்றிக் கொள்ள முயலும் வித்தகன் அவன்.

அருகில் அணைப்பில் படுத்திருந்தவளிடம், அன்றைய வியாபாரம், தொழில் சார்ந்த பேச்சுக்களை விட்டு விட்டுப் பேசியபடி, நோட்டிபிகேசன் ஒலி வரும்போது மட்டும், வாட்சப்பில் கவனம் செலுத்தியவாறு இருந்தான் விஷ்வா.

பெண்ணும் அமைதியாக ம்.. ம்.. என்று கேட்டுக் கொண்டிருந்தாள்.

பெண்ணது ம்.. ம்.. ம்மைத் தவிர வேற பேச்சில்லாததைக் கண்டு கொண்டவன், பெண்ணை நோக்கி, “கதையா சொல்லிட்டுருக்கேன்.  ம் கொட்டற”

“தலையில கொட்டாதவரை சந்தோசப்படணும் விச்சு”, என்று பேசிவிட்டு, அணைப்பிலிருந்து விலகி விஷ்வாவின் பக்கமாகத் திரும்பியவளை

தனது இரு கரங்களால் வளைத்துப் பிடித்து தன்னோடு, “அதுவேற செய்வியா?”, என்றபடியே, “வர வர கை நீட்டற அளவுக்கு வளர்ந்திட்ட”, என்று கேட்டபடியே பெண்ணின் தலையில் செல்லமாகக் கொட்ட இழுக்க

சுதாரித்த பெண்ணும் தலை அவனது கைக்கு கிட்டாத வண்ணம், அவனிடமிருந்து விலக முயற்சிக்க

இருவருக்குமிடையே செல்லமான உடல்மொழி பரிபாசை அடுத்தடுத்து செல்லமாக அரங்கேற, மனம் இருவருக்கும் ஒருவரின் அண்மையில் மற்றவருக்கு இளைப்பாறியது.

///////

நாள்கள் அதன்போக்கில் விரைய, நாளொரு மேனி பொழுதொரு வண்ணமுமாக பொருளாதாரத்தில் மட்டுமல்லாது, இருவருக்கிடையே உண்டான புரிதலிலும், முன்னேறத் துவங்கியிருந்தனர்.

சிறு சிறு சண்டைகள் வந்தபோதும், அன்றைய நித்திரைக்கு முன்பே அதைச் சரிசெய்யும் வித்தையை இருவரும் கற்றறிந்து கொள்ள முனைந்தனர்.

அதனால் ஊடலும், கூடலுமாக நாள்கள் இனிதாகச் சென்றது.

பெரும்பாலும் விஷ்வாவின் முழு நாளையும் தனது அக்கறையாலும், அன்பாலும் முழுமையாக ஆக்ரமித்திருந்தாள் திலா.

பொழுது போகவில்லை என்கிற எண்ணம் தோன்றியவுடனேயே விஷ்வாவிற்கு, அதைச் செய்யலாமா? இதைச் செய்யலாமா? என்ற யோசித்து யோசித்து செயல்பட்டு, தனது நேரத்தை முழுவதுமாக விஷ்வாவிற்காகவே ஒப்புக் கொடுக்கத் துவங்கியிருந்தாள் திலா.

விஷ்வாவிற்கு மனமெங்கும் மத்தள ஒலி மகிழ்ச்சியாக ஒலிக்கத் துவங்கியிருந்தது.

தனியொருவனாக இருந்த மோசமான சூழல் நிறைந்த தனது நிலையை மறந்தும் நினைக்கப் பிரியப்படவில்லை விஷ்வா.

தனது ஐந்து வயதிற்கு முந்தைய வாழ்வில் தனது தாய்  அலங்கரித்ததைப் போன்று, திலா தற்போது முழுவதும் அலங்கரித்து விஷ்வாவின் நாள்களை அழகாக்கியிருந்தாள்.

அங்கமெங்கும் மகிழ்ச்சிக் கூத்தாட வாழ்வினை நித்தமும் நிமிடமும் ரசித்து மகிழ்ந்திருந்தான் விஷ்வா.

காலையில் எழுந்தவுடன் பிரஷ் எடுத்து கொடுப்பது முதல், அதன்பின் குளித்து முடித்து வருபவனுக்கு தலைக்கு நன்கு துவட்டிவிட்டு, உடுத்த வேண்டிய உடுப்புகளை எடுத்துக் கொடுத்து, உண்ண உதவி, கணவன் காரில் ஏறும்வரை அனைத்தையும் பார்த்துப் பார்த்துச் செய்து திலா தனது நிமிடங்களை உவகையோடு ஒப்புக்கொடுத்திருந்தாள்.

விஷ்வா திலாவின் கருத்தான கவனிப்பில் முன்பைக்காட்டிலும் மகிழ்வாக உணர்ந்தான்.

மதிய உணவிற்கு வந்தாலும், அடுத்து மாலைப்பொழுதில் மனங்கொண்டவளோடு இருந்தாலும், அதன் பிறகான இரவுப்பொழுது என்றாலும், ஒவ்வொன்றும் புதுவிதமாக ரசனையோடு இருவருக்குமே இன்பமாகச் செல்லத் துவங்கியிருந்தது.

விஷ்வாவின் அலுவலக நேரங்களில் எதையும் குறுக்கீடு செய்ய விரும்பாது வழமைபோல வியாபாரம் சார்ந்தே சென்றது.

மிகுந்த அர்ப்பணிப்போடு அலுவலக நேரங்கள் செல்ல, இதர நேரங்களில் உள்ளத்து அர்ப்பணிப்போடு ஒருவரையொருவர் சார்ந்து வாழத் துவங்கியிருந்தனர்.

திலாவிற்கு விஷ்வாவினைச் சார்ந்தே தனது சந்தோசப் பொழுதினை கழிக்க தன்னைப் பழக்கி தன்னையே மறந்திருந்தாள்.

விஷ்வாவும்  பெரும்பாலும் பெண்ணைச் சார்ந்தே வாழப் பழகியிருந்தான்.

ஆனாலும், குடும்ப வாழ்வில் ஆணுக்கான நுணுகிய கடமைகளை, பொறுப்புகளை இன்னும் அறியாத நிலையிலேயே இன்னும் விஷ்வா இருந்தான்.

அதுபோன்றதொரு சூழலில் வளராமையால் அதுபற்றிய ஞானம் கிடைக்கப் பெறாதவனாக வளர்ந்திருந்தான்.

எப்பொழுதும் கணவனுக்கு முன்பே காலையில் எழுந்து குளித்து விடுபவள், அன்றும் எழுந்து குளித்து வந்து மீண்டும் படுக்கையில் படுத்திருந்தாள்.

மனைவியின் செயலைக் கண்டவன், “என்னடீ புதுசா இன்னிக்கு காலையில குளிச்சிட்டு வந்து திரும்பவும் படுத்திட்ட”, என படுக்கையில் இருந்தபடியே பெண்ணைத் தன்னோடு இழுக்க

கணவனது இழுப்பில் இருந்து தன்னை விடுவித்துக் கொண்டவள், “எழுந்ததுல இருந்து தலைய சுத்துது விச்சு”, தனது இயலாமையைக் கூற

“அப்ப முதுகெல்லாம் பாத்திட்டனு சொல்லு”, என்று பெண்ணின் நிலை புரியாமல் கிண்டல் செய்ய

“உங்களுக்கு எப்பவுமே கேலி, கிண்டல்தானா, போங்க”, என்று இயலாமையினால் அருகில் வந்தவனை விரட்டியிருந்தாள் திலா.

பெண்ணது செயல் புதுமையாக இருந்தபோதும், அலுவலகம் கிளம்ப வேண்டி படுக்கையில் இருந்து எழுந்தவன், “சரி சரி. எழுந்து வந்து எனக்கு டிரெஸ் எடுத்து வைப்பியாம்”, என்று திலாவிடம் கூற

“ம்ஹ்ம்”, என்றவாறு படுத்தவளை புதுமையாகப் பார்த்தபடியே குளிக்கச் சென்றிருந்தான் விஷ்வா.

‘காலையிலயே போயி படுக்கிறா? என்னாச்சு இவளுக்கு’, எனத் தோன்ற அதை அதற்குமேல் பெரிதுபடுத்தாமல் சென்றிருந்தான்.

குளித்துக் கொண்டே டவல் கேட்டு அழைத்தபோதும் எந்த பதிலும் இல்லாமல்போகவே, எட்டிப்பார்க்க, சுருண்டு படுத்திருந்தவளை யோசனையோடு பார்த்துக் கொண்டே அவனது வேலைகளை நீண்ட நாளுக்குப்பின் செய்தான் விஷ்வா.

குளித்து, தலை சீவி எந்த அரிதாரமும் இன்றி அழகாக உறங்கிக்கொண்டிருந்தவளைப் புரியாமல் பார்த்தவாறு ஏதோ ஒரு நெருடலோடு கிளம்பியிருந்தான் விஷ்வா.

உறவு ஸ்திரப்பட்ட பிறகு அனைத்தையும் விஷ்வாவைச் சார்ந்து செய்து பழகியிருந்தவள், இன்று கணவனைக் கண்டு கொள்ள இயலாது உறக்கத்தில் இருப்பது புதிது.

அதிலும் பகல் பொழுதில் பெரும்பாலும் படுக்கையை நாடியிராதவள், இன்று உறங்குவதைக் கண்டு புரியாமல் பார்த்திருந்தான் விஷ்வா.

சிறு சத்தம் கேட்டாலும் எழுந்து வருபவள், இன்று எதையும் கண்டு கொள்ளாது உறங்குவதைக் கண்டு ஆச்சர்யமாக இருந்தது.

பம்பரம்போல காலை வேளையில் கணவனது தேவைகளை நிறைவேற்றச் சுற்றி வருபவள், இன்று எதையும் கண்டு கொள்ளாது உறங்குவதை, புதிராகக் பார்த்தவாறு பெண்ணை எழுப்புவதா வேண்டாமா என்கிற குழப்பத்திலிருந்தான் விஷ்வா.

பெண்ணில்லாமல் தனித்து உண்ணத் தோன்றாமல், “திலா எழுந்து வா.. வந்து சாப்பாடு எடுத்து வையி”, என்று எழுப்ப

சிரத்தையோடு கண்விழித்து கணவனைப் பார்த்தவள், எழுந்து சற்றுநேரம் அமர்ந்திருந்தாள்.

பிறகு, “விச்சு… என்னால உக்காரவே முடியலை.  இன்னிக்கு நீயே எடுத்துப் போட்டு சாப்பிடுவியாம்”, என்று கெஞ்சலோடு கணவனிடம் கூறிவிட்டு, அந்த கணமே படுத்திருந்தாள் திலா.

புதிராகத் தோன்றியவளை, புரியாமல் பார்த்தபடியே புத்துணர்வு இல்லாமல் அலுவலகம் கிளம்ப ஆயத்தமானான் விஷ்வா.

பெண்ணிற்கு உடல்நிலையில் வந்த பின்னடைவிற்கான காரணத்தை புரிந்து கொண்டானா விஷ்வா?

அடுத்த அத்தியாயத்தில்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!