IV19

இதய ♥ வேட்கை 19

 

திலா தனது தாயின் மறைவிற்குப் பிறகு, தங்களைச் சார்ந்து, கேட்டு, கலந்து எந்த முடிவையும் எடுப்பாள் என மனப்பால் குடித்திருந்தான் கண்ணன்.

தான் எதிர்பார்த்தது போல், திலா எதற்காகவும் தன்னையோ, பெற்றோரையோ சாராமல் வாழப் பழகியது பெருத்த ஏமாற்றத்தை கண்ணனுக்குத் தந்திருந்தது.

அவளாக தங்களை நாடி வராதபோதும், தானாகவே பேச்சுக்கொடுத்து, அறிய முற்பட்டான் கண்ணன்.

ஆனால் எதையும் முழுமனதோடு கண்ணனிடம் பகிர்ந்துகொண்டாளில்லை திலா.  கண்ணனின் பெற்றோரையும் பெண் எதற்காகவும் நாடவில்லை.

திருநாவு நேரில் வந்து பார்க்க எண்ணினாலும், கண்ணனின் தாய் அதற்கு ஒப்புக் கொள்ளவில்லை.

‘முடிந்தது முடிந்ததாகவே இருக்கட்டும். இனியும் பொறுப்பைத் தூக்கிச் சுமக்காமல், இத்தோடு ஒதுங்கிடலாம்’, என பொறுப்புகள் கூடிவிடுமோ என்கிற எண்ணத்தால் தவிர்க்க எண்ணினார் கண்ணனின் தாய்.

அவ்வாறு தானும் நடந்து கொண்டதோடு, தனது குடும்ப நபர்களையும் நடந்துகொள்ளுமாறு வலியுறுத்தியிருந்தார்.

“அதுக்கு என்ன ராசாத்தி மாதிரி நல்ல வாழ்க்கை. அவங்க அம்மை, அப்பன் இல்லைங்கறத தவிர ஒரு குறையும் இல்ல! அப்டி எதாவது ஒன்னுன்னா கண்ணன் அங்கதான வேல பாக்கான்.  அப்ப நமக்குத் தெரியாம போகாது!”, என்றவர்

அத்தோடு விடாமல், “சும்மா உக்காந்திருந்தா இப்டித்தான் யாருக்காவது எதாவதான்னு ஓடி ஓடி பாக்கச் சொல்லும். பொழுதுபோகலைன்னா… நம்ம கண்ணனுக்கு நல்ல வசதியான அம்சமான அழகான பொண்ணா போயி பாருங்க!”, என திலாவின் விசயத்தில் விட்டேத்தியான பதிலையும், கண்ணனின் விசயத்தில் தனது எதிர்பார்ப்பையும் திருநாவுவிற்கு தந்திருந்தார்.

கண்ணன் அலுவலகம் தவிர விஷ்வாவின் வீட்டிற்கு இயல்பாக வந்து செல்லும் பழக்கமின்மையால், விஷ்வாவின் வீட்டிற்கு வந்து திலாவைக் காணவோ, அவளின் நிலையைக் கண்டறியவோ கண்ணனால் முடியவில்லை.

திருமணத்திற்கு முன்பாவது, வேலையிருந்தால் எப்போதேனும் வீட்டிற்கு வருமாறு அழைப்பான் விஷ்வா.

திலா திருமணமாகி வந்தபின், ஏனோ கண்ணனை வீட்டிற்கு அழைத்ததில்லை.

விஷ்வாவின் செயல்பாடுகளில், திருமணத்திற்கு முன்பாக இருந்த பெண் சகவாசம் திடீரென்று நின்றதையும் ஏனென்று புரியாமல் குழம்பியிருந்தான் கண்ணன்.

நேர்த்தியோடு நடக்கத் துவங்கிய விஷ்வாவின் செயலை, ஆரம்பத்தில் கண்ணனால் முழுமையாக நம்ப முடியவில்லை.

தன் மூலமாக இந்திரஜாலங்களை திருமணத்திற்கு முன்புவரைச் செய்து வந்தவன், திலாவை திருமணம் செய்து கொடுத்ததும், தன்னிடம் பெண்ணை அமர்த்தித்தரக் கேட்க, லஜ்ஜையாக உணர்ந்து, வேறு நபர்கள் மூலமாக பழைய லீலைகளைத் தொடர்வதாகவே எண்ணிக் கொண்டிருந்தான் கண்ணன்.

நேரிடையாக அதைப்பற்றி விஷ்வாவிடம் கேட்கவும் கண்ணனுக்கு தயக்கமாக இருந்தது.

ஒத்த வயதுடையவராக இருந்தபோதும், முதலாளி, தொழிலாளி எனும் இடைவெளியை இதுவரை பின்பற்றி வந்தவவனாயிற்றே விஷ்வா.

அதனால் அதற்குமேல் விஷ்வாவிடம் எதையும் கேட்டறிய முடியாத நிலை கண்ணனுக்கு.

சந்தேகக் கண்கொண்டு, பிறர் மூலம் விஷ்வாவின் செயலைச் சரிபார்த்து, உண்மை என்னவென்பதை ஊர்ஜிதம் செய்துகொள்ளவே வருடம் சென்றிருந்தது கண்ணனுக்கு.

இதற்கிடையே திலாவிடம் பேசி எதாவது அறிந்து கொள்ளலாம் என ஆரம்பத்தில்  பெண்ணிடம் வாய்கொடுக்கவே,  பெண் அதிகம் தனது குடும்ப விசயம் பேசாமல், பகிராமல், கத்தரித்துப் பேசியதும் கண்ணன் முற்றிலும் எதிர்பாராதது.

‘கொழுப்பெடுத்தவளா இருக்கா!  வீட்டு விசயத்தை மூச்சு விடறாளா?  பெரிய சிதம்பர ரகசியம்!  எங்களால கண்டுபிடிக்க முடியாது!  இதெல்லாம் ச்சுசூப்பீ எங்களுக்கு! இருடீ… எல்லாத்தையும் கண்டுபிடிக்கறதோடு இருக்கற சொத்துக்களோட உன்னையும் அபேஸ் பண்ணலைனா நான் செங்கோட்டையில பிறந்த கண்ணனில்லைடீ!’, என மனதிற்குள் தனக்குத்தானே சூலுரைத்துக் கொண்டான்.

தம்பதியர் இருவருக்கிடையேயான ஆரம்பப் பிரிவை ஆத்மார்த்தமாக மனதோடு வரவேற்று மகிழ்ந்தவன், பெண் விரைவில் தனது தந்தையை நாடி வருவாள், அப்போது தனக்கு சாதகமாக வாழ்வை ஏற்படுத்திக்கொள்ளலாம் என அசட்டையாக, விஷ்வாவைப் பற்றி விசாரிப்பதிலேயே காலத்தை கடத்தியிருந்தான் கண்ணன்.

ஆனால் காலம் போனதே தவிர, இருவருக்கிடையே எந்த பிணக்கோ, மனமுறிவோ பகீரங்கமாக வெளியே தெரியாமல், திடீரென தம்பதியர் இணைந்து வாழத் துவங்கியதும், இருவரின் மாற்றங்கள் கண்ணனை மேலும் குழப்பியதோடு, அதை ஏற்றுக்கொள்ளத் தயங்கிய மனம் குரூரமாக சிந்திக்கத் தூண்டியிருந்தது.

தனது தாயின் உடல்நிலையின்போது இருவரையும் ஒருசேரக் கண்டவன், அதன்பின் நோட்டமிட்டதில், தனக்கு ஆதரவான எதுவும் நடப்பதற்கான சாத்தியம் இனியில்லை என்பதை உணர்ந்து மனம் வெதும்பினான்.

அழகிய தேன்கூட்டின் மதுரம் தனக்கில்லை இனி என உணர்ந்ததும், அதைக் கலைத்துப் பார்க்க வேண்டும், அல்லது சிதைத்துப் போட வேண்டும் என்கிற வெறி மிகுந்திருந்தது கண்ணனுக்கு.

தான் எதிர்பார்த்த எதுவும் நடவாமல்போகவே, தனக்கு வேண்டும் என நீண்டகாலம் எதிர்பார்த்துக் காத்திருந்தது தனக்கேயில்லை என்றால்,  யாருக்கும் வேண்டாம் என இறுதியாக முடிவெடுத்துக் கொண்டான்.

அதனை செயல்படுத்த, தனது நடைமுறை பேச்சின் மூலமாக குயுக்தியோடு சாதிக்க எண்ணிக் களம் இறங்கியிருந்தான் கண்ணன்.

அதனால் பெரியளவில் குற்றங்களைச் செய்து தான்மாட்டிக்கொண்டு விழிக்காமல், கமுக்கமாக இருவருக்கிடையே பிரிவினையை உண்டுசெய்து, அதில் குளிர்காய ஆயத்தமானான்.

அதன் விளைவு, பேசாததை பெண்ணோடு பேசினேன் என்று, விஷ்வாவின் மனதில் விசத்தை விதைத்து, உண்டாகும் புகைச்சலில், தீ பிளம்பாக அது உருமாறி இருவருக்கிடையேயேன உறவைச் சிதைக்கட்டும் என எதிர்பார்த்தான். 

திலாவை, விஷ்வாவாகவே தவிர்த்து ஒதுக்கட்டும் என்கிற வகையில் குழப்பங்களை இருவருக்கிடையே விதைத்தான்.

ஆண்களது பொதுவான குணம் என்னவென்பதை அறிந்த ஆண்வர்க்கமாயிற்றே!

பெண்ணை அனைத்து வகையிலும் நெருங்க முயன்று தோற்றவன், இறுதியாக எடுத்த ஆயுதம் இன்றைய நவீன அலைபேசி.

புரளி கிளப்பி திலாவின் வாயிலாக காரியத்தை நடத்த திட்டமிட்டு பெண்ணை முகாமிட்டு, முகமண் பாத்திருந்தவனின் முகத்திரையை, பெண் கிழித்ததில் பெருத்த ஏமாற்றமடைந்திருந்தான்.

இதற்குமேலும் திலாவை நோக்கி காயை நகர்த்துவது மடைமை என உணர்ந்து, விஷ்வாவை நோக்கி முன்னேறினான்.

அதனால் அடுத்த நடவடிக்கையாக விஷ்வாவை குறிவைத்து தனது செயலை துவங்கியிருந்தான்.

இருவரையும் பிரிக்க எண்ணி திட்டமிட்டதோடு, அதற்கென மெனக்கெடலோடு செயல்படத் துவங்கியிருந்தான் கண்ணன்.

சாதாரண விசயமாயின் விஷ்வாவும் அதை பெரிதுபடுத்தமாட்டான்.

கணவனுக்கு, எந்த மாதிரி விசயங்களில் தன் மனைவி வேறொரு ஆணின் தயவை எதிர்பார்க்கும்போது இயல்பாகவே சினம் உண்டாகும் என உணர்ந்திருந்தான் கண்ணன். 

ஆகையால் விஷ்வா எனும் ஆணது உளவியலை உரசி, அதனால் உண்டாகும் கோபம் அல்லது சந்தேகத்தினால் எழும் மனக்கசப்புகளை, தனக்கு சாதகமாக்கிக் கொள்ளும் எண்ணத்தோடு, யோசித்து செயல்படுத்தினான்.

விஷ்வாவின் முன்பு திலாவோடு தான் நெருக்கமாக இருப்பதாகக் காட்டிக் கொண்டால், விஷ்வா பெண்ணிடம் எதாவது கண்டிக்கும் விதமாகவோ, அதை தன்னிடம் கூறாமல் எதற்காக கண்ணனிடம் கூறினாய் எனக் கேட்கும்நிலையிலும், இருவருக்கிடையே சச்சரவுகள் எழக்கூடும்.

அல்லது அதுசார்ந்து விசாரிக்கும்போது, நடவாத ஒன்றை நடந்ததாக பேசும்போதோ, தன்னைக் கணவன் சந்தேகித்துவிட்டான் என பொங்கியெழுந்து பிரச்சனையை உண்டு செய்வாள் திலா என முழுமையாக நம்பினான் கண்ணன்.

ஏனென்றால் கண்ணன் திலாவிடம் உண்மையில் அலைபேசியில் பேசியிருக்காத நிலையில், தான்  விஷ்வாவிடம் கூறியதைக் கொண்டு, திலாவிடம் விசாரித்தால் நிச்சயம் அங்கு இருவருக்கிடையே பிரச்சனை ஏற்படும் என முழுக்க நம்பினான்.

ஆகையால், இருவருக்கிடையே சண்டையை, சச்சரவை, வாய்த்தகராறை முதலில் உண்டாக்க, ஆயத்தமாகியிருந்தான் கண்ணன்.

சிறு சிறு பிரச்சனைகளை முதலில் உண்டாக்கி, மனம் வெறுத்து இருவரும் இருக்கும் நிலையில், மேலும் சிலபல வேலைகள் செய்து, இருவருக்கிடையே நிரந்தரப் பிரிவினையை உண்டாக்கிட எண்ணி, முழுவேகமாக காயை நகர்த்தினான்.

திலாவிடம் அதற்கான முயற்சியில் பலமுறை முயன்று தோல்வியைத் தழுவிய பிறகே, விஷ்வாவை குறிவைத்து தனது செயல்களை தற்போது நடைமுறைப்படுத்தினான் கண்ணன்.

பெற்றோர் எத்துணை முறை எடுத்துச் சொல்லியும், தனது எண்ணத்தை மாற்றிக்கொள்ள எண்ணாதவனை, இருவருமே வசைபாடியதோடு, எச்சரித்தும் இருந்தனர்.

அவர்களின் பேச்சை மறுக்காமல் சென்றவனை, அவர்கள் ‘இனிமேலாவது திருந்தட்டும்’, என்கிற ரீதியில் வசவோடு விட்டிருந்தனர்.

ஆனால் காமாலை கண்டிருந்தவனது நிலை கண்ணனுக்கு!

கண்ணனுக்குள் இருந்த திலாவின் மீதான வெறி, தனது செயல் தவறானது எனத் தெரிந்தும், பின்வாங்காமல், அதைத் தேர்ந்தெடுத்து, அதில் பயணிக்கத் துவங்கியிருந்தான்.

விஷ்வா திலாவைக் கைவிட்டுவிடும் நிலையில், எந்த ஆதரவுமின்றி நிற்கும் திலாவிற்கு, ஆரம்பத்தில் ஆதரவு கரம் நீட்டி, அதன்பின் தனது மனம்போல அவளை இணங்கச் செய்யலாம் என்ற பகல் கனாவுடன் அனைத்தையும் செய்யத் துவங்கியிருந்தான் கண்ணன்.

ஆனாலும், எச்சரிக்கை உணர்வும், தன்னைக் காட்டிக்கொள்ளாமல் எட்டப்பன் பணியைச் செய்யும் எண்ணமும் மாறவில்லை.

இதில் முக்கியமாக பெண்ணது தற்போதைய உடல்நிலையைப் பற்றி எதுவும் அறியாமல், தனது எண்ணத்தைச் செயல்படுத்தத் துணிந்திருந்தான் கண்ணன்.

செங்கோட்டைக்கு திலா சென்றதை அறிந்து கொண்டவன், தினசரி ஒருமுறையேனும் திலா சார்ந்த விசயத்தை விஷ்வாவிடம், அவன் கேளாமலேயே கூறுவதை வழக்கமாக்கியிருந்தான்.

அவள் முன்புபோல செங்கோட்டையில் தனித்து வசிப்பதாக எண்ணிக்கொண்டு, மிகுந்த ஆர்வத்தோடு, அவ்வப்போது விஷ்வாவிடம் தானாகவே முன்வந்து, திலாவோடு பேசியதாக, பேசுவதாகக் காட்டிக் கொண்டான்.

“மேடம் வீட்ல இன்னிக்கு டேப்பில பிராப்ளம்னு, அதைச் சரிபார்க்க பிளம்பிங் ஆளை ஏற்பாடு பண்ணச் சொல்லி போன் பண்ணாங்க சார்”, என்றிருந்தான் ஒருமுறை.

‘அவங்க அம்மா திலா கல்யாணத்துக்கு அதுக்கு தெரியாம வீட்டு பேருல வாங்கின கடன் பத்தி விசாரிச்சு சொல்லச் சொன்னாங்க. இன்னும் எவ்வளவு நாளு எவ்வளவு பணம் கட்ட வேண்டியிருக்கும்னும் கேட்டு சொல்லச் சொன்னாங்க மேடம்”, என ஒருநாள் வந்து கூறினான்.

திருநாவு மூலமாக கமலா இவற்றைச் செய்திருந்தமையால், அது கண்ணனுக்கு அறிந்த செய்தியாக இருந்தது.

திருமணம் முடிந்ததும், விசயம் தெரிந்த திலாவே தன் தாயிடம், “வீட்டை எதுக்கு இப்ப அடமானம் வச்சு என்னைக் கல்யாணம் பண்ணீங்க? அப்ப நீங்க எங்க இருப்பீங்க?”, என தாயிடம் என்றுமில்லாமல் சண்டை பிடிக்க

“அடிப்போடீ… வாழ வேண்டிய புள்ள உனக்கு அது பயன்படாம, எனக்குனு அதை வச்சிருந்து போகும்போது எடுத்திட்டா போகப் போறேன்”, எனக் கேட்டு மகளின் வாயை அடைத்திருந்தார் கமலா.

ஊருக்குள் கடன் கொடுத்தவரும், பெரிய இடத்தில் சம்பந்தம் செய்யப் போகும் கமலாவிடம், கேட்ட பணத்தைக் கொடுத்ததோடு அமைதியாகியிருந்தார்.

“யாரது நம்ம சத்யநாதன் பையனுக்குத்தான் பேசி முடிச்சிருக்கிகளாமே! பெரிய இடத்துப் பிள்ளைல அது. எவ்வளவு வேணுனாலும் வாங்கிக்கங்க”, என பெருந்தன்மையோடு கொடுப்பதுபோல கொடுத்து உதவியிருந்தார்.

அனைத்து செலவையும் திருமணத்தின்போது விஷ்வா செய்திருந்தாலும், தனது கையில் மணப்பெண்ணின் தாய் என்கிற நிலையில் சொற்ப பணமாவது வேண்டும் என்று, திருநாவுவிடம் கூறி வீட்டின் பெயரில் கடன் வாங்க ஏற்பாடு செய்திருந்தார் கமலா.

இதை கண்ணன் தனது தந்தை வாயிலாக அறிந்திருந்தவன், தனது ஆதாயத்திற்காக விசயத்தை விஷ்வாவிடம் கூறியிருந்தான்.

உண்மையில் இதுநாள்வரை திலாவின் வீட்டு விசயம் பற்றி விஷ்வா அறிந்திருக்கவில்லை.

அத்தோடு விடாமல் கண்ணன், “நீங்க எங்க இப்ப போயிருக்கீங்கனு எங்கிட்ட மேடம் கேட்டாங்க!”, என வந்து கூறியிருந்தான்.

விஷ்வாவிடம் பேசும்போது ஏனோ பெண்ணை ஒருமையில் பெயர்கூறி சொல்லத் தைரியம் இருக்கவில்லை கண்ணனுக்கு.

நாளில் குறைந்தது ஒருமுறையேனும் இதுபோன்ற திலா புராணத்தை விஷ்வாவிடம் பகிர மறக்கவில்லை கண்ணன்.

எல்லாம் சரியாகவே செல்கிறது எனும் மகிழ்ச்சியோடு கண்ணன் இயங்கினான்.

விஷ்வா கண்ணனின் பேச்சை, அலுவலக விசயம் பேசும்போது கேட்பதுபோல கேட்டுக்கொண்டானேயொழிய, கூறியதைத் தொடர்ந்து, குறுக்கு விசாரணையோ, சாதாரண கேள்விகளையோ கண்ணனிடம் எழுப்பவில்லை.

ஆனாலும் தான் விசயத்தைப் பகிரும்போதும் உண்டாகும் விஷ்வாவின் முகமாறுதலை கவனித்திருந்தான் கண்ணன்.

அதனால் விஷ்வாவின் பார்வையில், எல்லாம் தனது திட்டம்போல நடக்கிறது என மகிழ்வாகவே எண்ணிக் கொண்டான் கண்ணன்.

/////////////

ராசாத்தியின் தாய் அவளது வீட்டோடு இருந்தமையால், அவரின் பொறுப்பில் பிள்ளைகள், கணவனை விட்டு முதல்முறை திலாவோடு வந்திருந்தாள்.

இந்த முறை, திலாவே தனியாக சமாளித்துக் கொள்வதாகக் கூறியதும், ராசாத்தி சென்னையிலேயே தங்கியிருந்தாள்.

விஷ்வாவும் திலாவும் மட்டுமே செங்கோட்டைக்கு வந்து, திலாவை விட்டுவிட்டு விஷ்வா மட்டும் சென்னை திரும்பியிருந்தான்.

திலா செங்கோட்டை வந்து வாரம் ஒன்று கடந்திருந்தது.

விஷ்வாவிற்கு கடுகளவும் மனைவிமீது சந்தேகம் எழவில்லை.

மேலும், அந்த குறிப்பிட்ட தினத்தில் தன்னைப்பற்றி, பெண்ணிடம் அவதூறு கண்ணன் பேசியபோதும், தன்னை ஒன்றும் கூறாமல், கண்ணனையும், கண்ணனது குடும்பத்தையும் வார்த்தைகளால் வாரியதோடு, இனி அது சம்பந்தமாக தன்னை அழைத்துப் பேச வேண்டாம் என்று கடுமையாக திலா கண்ணனிடம் பேசியிருந்ததைக் கேட்டவனுக்கு, மனைவிமீது கட்டுக்கடங்காத அன்பு பிரவாகம் ஊற்றெடுத்தது.

ஆனால் அதே நேரம் கண்ணனின் மீது அதிருப்தி உண்டாகியிருந்தது. ‘அவனுக்கு இப்ப எதுக்கு இந்த எட்டப்பன் வேலை?  எப்பவோ நடந்ததை இப்ப வந்து நடக்கிற மாதிரி சொல்றான்?  எதுனால திலாகிட்ட இப்டி சொல்றான்.  அதுவும் என்னைப்பத்தி திலாவிட்ட சொல்றதுல அவனுக்கு என்ன ஆதாயம்? கல்யாணத்துக்கு முன்ன சொல்ல வேண்டியதை இப்ப வந்து எதுக்குச் சொல்றான்?’, என வியாபார மனம் ஒரு புறம், மறுபுறம் ஆணாக விஷ்வாவின் மனம் யோசித்தது.

ஆனாலும், தன்னிடம் அதுபற்றி எதுவும் விசாரிக்காத திலாவிடம், தனக்கு விசயம் தெரியும் என்பதை காட்டிக்கொள்ள பிரியப்படவில்லை விஷ்வா.

கண்ணன் திலாவிடம் தன் கடந்தகாலத்தைப் பற்றிக் காலந்தவறி கூறியதற்கான உள்நோக்கம் எதுவாக இருந்தாலும், மனைவி அதை பெரிதுபடுத்தாதது மகிழ்வை உண்டாக்கிட, அதனைச் சட்டை செய்யாமல் விட்டிருந்தான் விஷ்வா.

மனைவிக்கு தன்னிடம் அவநம்பிக்கை எதுவும் இல்லை என திலாவின் அன்றைய பதிலில் ஆயிரம் மடங்கு நம்பியிருந்தான் விஷ்வா.

ஆனால், தன்னை அழைத்து வந்து செங்கோட்டையில் தனித்துவிட்டதே, விஷ்வாவின் மனம்போல பழையபடி சல்லாபிக்க என்று திலா தனக்குள் நினைத்துக் கொண்டு, மருகிய மனதோடு இருக்கும் மனைவியவளை விஷ்வா அறிந்திருக்கவில்லை.

நேரங்கிடைக்கும்போது மனைவியை அழைத்துப் பேசும்போதும், எந்த சுணக்கமோ, ஒதுக்கமோ, தவிர்ப்போ இன்றி, சுரத்தின்றிப் பேசியவளை, மசக்கையோடுடனான உடல்நிலையால் அவ்வாறு பேசுகிறாள் என்றே விஷ்வா எண்ணினான்.

கடந்து போன ஒவ்வொரு நாளும் திலாவோடு பேசும்போது, பெண் தன்னைத்தேடி, தன் அருகாமையை நாடி, அங்கு தன்னோடு வந்து தங்குமாறு அழைப்பாள் என்று எதிர்பார்த்து, எதிர்பார்த்து எமாந்ததுதான் மிச்சம்.

ஆனாலும், அவனால் திலாவை விட்டு இருக்க முடியாதநிலை.  அவளில்லாத வீட்டிற்குச் செல்லவும் பிடிக்கவில்லை.

ஆகையினால் இனி பெண் சுகநிலைக்குத் திரும்பும்வரை, மனைவியோடு செங்கோட்டையில் இருந்தவாறே பணிகளைத் தொடர ஏதுவாக கடந்த ஒரு வாரத்தில் பணிகளைத் துரிதமாகச் செய்திருந்தான் விஷ்வா.

வாரம் ஒன்று கடந்தும், தன்னைத் தேடாதவளைத் தேடி, தானே நேரில் வர எண்ணி செங்கோட்டையை நோக்கி கிளம்பியிருந்தான் விஷ்வா.

எதையும் எதிர்பார்க்கவோ, கணவனிடம் உண்மையில் என்ன நடக்கிறது என்பதைப் பற்றிக் கேட்கவோ, மனதில் தைரியமில்லாமல் பதைபதைத்த உள்ளத்தோடு இயல்பு மாறியிருந்தாள் திலா.

திராணியற்ற நிலை திலாவிற்கு.  உடலின் சக்தி வடிந்து போனதால், தன்மீதே நம்பிக்கையற்றிருந்தாள் திலா.

பெண்ணது மனதில் தன்னைப் பற்றிய கழிவிரக்கமும், பெற்றோர் இல்லாத ஏக்கமுமாக, உடன் யாரும் தனக்கில்லை என்கிற எண்ணமுமே, திலாவை செயல்படுத்த இயலாமல் தடுத்தது.

புதிய செயல் அல்லவே  விஷ்வாவிற்கு தயக்கம் உண்டாவதற்கு. 

தனது உடல்நிலையின் காரணமாக ஒதுங்கியிருப்பவனிடம், தானாக நெருங்கினாலும் கண்டுகொள்ளவே இல்லை என்பதும் மனதில் வந்து போனது.

தேவைக்காக பிற பெண்களை முன்பே நாடியிருந்தவன்தான் என்பதால், தற்போதும் அதனை மேற்கொள்ள எந்த தயக்கமும் விஷ்வாவிற்கு இருப்பதற்கு வாய்ப்பில்லை என்றே விஷ்வாவைப் பற்றி திலா எண்ணினாள்.

அதைவிட மருத்துவரின் கவுன்சிலிங்கும் மனதில் வந்து பெண்ணை அவ்வாறு நினைக்கச் செய்தது.

அன்றைய நிலையில், பெண் தனித்திருந்தே காலத்தைக் கடத்த நினைத்ததால், விரைவில் நல்லதொரு முடிவை எடுத்து விஷ்வாவிடன் இணைந்து வாழவிட்டால், பழையபடி மீண்டும் தடம்மாறிப்போக அதிக வாய்ப்புள்ளது எனக் கூறிய வார்த்தைகளையே நினைவுறுத்தி சோர்ந்தாள் பெண்.

திலாவின் மனம், ‘அப்டியிருக்கறதாலதான் என்னைய இங்க கொண்டுவந்து விட்டுட்டுப் போயிட்டாரோ!’, என யோசித்து பெண்ணை இம்சித்தது.

செங்கோட்டை நோக்கிக் கிளம்பி பாதி தூரம் வந்தவன், “ஹாய் பொண்டாட்டி”, என குதூகலமாக அழைத்து, தான் வந்து கொண்டிருக்கும் செய்தியை மனைவியிடம் பகிர

‘உண்மையிலேயே என்னதான் பாக்க வராறா?  இல்லை இங்க வியாபார விசயமா வராறா?’, என்கிற கேள்வி திலாவிற்கு எழுந்தாலும், அதைப் பெண் விஷ்வாவிடம் கேட்கவில்லை.

ஆனாலும் விஷ்வாவைக் காணப்போகும் தருணத்தை எண்ணி உள்ளம் மகிழ்ந்தது.

அந்த எண்ணமே பெண்ணைச் சோர்விலிருந்து மீட்சியடையச் செய்தது.

‘நாந்தான் அவரை ரொம்பத் தேடறேன்.  அவருக்கு என்னை மாதிரி இல்லைபோல’, என்கிற எண்ணமே கசந்தது பெண்ணிற்கு.

உண்மையில் தான் அழைக்காமலேயே தன்னைக் காண வருகிறான் என யோசிக்கத் தவறியிருந்தாள் பெண்.

அதையும் தனக்குச் சாதகமாக எண்ணாமல், செங்கோட்டையில் அவனது வியாபார விசயமாக வருவானாக இருக்கும். 

தன்னைக்கான வேண்டி இவ்வளவு தூரம் வருவானா? என நம்பிக்கையில்லாமல் இருந்தாள் திலா.

“எதாவது வேணுமா? வரும்போது வாங்கிட்டு வரணும்னா சொல்லு”, விஷ்வா வினவ

அவனின் அணுகுமுறை அழன்று, உழன்று காணப்பட்ட மனதில் மகிழ்ச்சி அலையை உண்டு செய்தபோதும், அதைக் கரையைத் தொட விடாமல், “நான் சொல்றதைத்தான் நீங்க இப்பலாம் கேக்குறீங்களா?”, எனக் கேட்டிருந்தாள் திலா.

“ம்ஹ்ம்.. டெபனட்டா..”, என்றவன், “ஹோம் மினிஸ்டர் என்ன சொன்னாலும் அதை மறுக்க முடியுமா?”, விஷ்வா சிரிக்க

“என்னைப் பாக்கவெல்லாம் இங்க வராதீங்க! அப்டியே ரிட்டன் போயி சென்னையிலயே டேரா போடூங்க!”, அதே குரலில் யோசிக்காமல் இனி இவனது அருகாமையும் வேண்டாம், அவனைப் பிரிந்து வாடவும் வேண்டாம் என்கிற முடிவில் அழுகையை அடக்கியவாறே கூற

எதிர்முனை சற்று ஸ்தம்பித்தது, அவனது சடன் பிரேக், அதனை அடுத்து தன்னை நிதானித்து, மெதுவாக செறுமல் ஒன்றை ஏற்படுத்தி சரிசெய்து கொண்டவன்

“என்னாச்சு ஸ்ட்ராபெர்ரி? வாய்ஸ் ஏன் ஒரு மாதிரியா இருக்கு?  என்னடா செய்யுது?”, பதற்றத்தை மறைத்துக் கொண்ட குரலில் விஷ்வாவும் திலாவிடம் வினவ

“ஸ்ட்ராபெர்ரி மாதிரியே எல்லாமே புளிச்சிருச்சு!”, என்றவளின் விரக்தியான குரலே, ஏதோ சரியில்லை என்று உணர்த்த, அதற்குமேல் பேச்சை வளர்க்க விரும்பாமல்

“சீக்கிரமா வந்திரேன்டா!  ரெஸ்ட் எடு!”, என வைத்துவிட்டு, வழியில் எதாவது காஃபிடோரியம் கண்ணில் தென்படுகிறதா என்று பார்த்தபடியே வந்தான் விஷ்வா.

முன்புபோல மன அழுத்தம் வந்தால், சிகரெட்டைத் தொடுவதில்லை.

திலாவுடனான நல்உறவிற்குப் பின் அதையெல்லாம் சிறுது சிறிதாக ஓரங்கட்டி ஒதுக்கியிருந்தான்.

தற்போதைய நிகழ்விலிருந்து மீள, ஒரு காபியிருந்தால் நன்றாக இருக்கும் என மனம் கூற, அதையே எதிர்பார்த்து வந்தவன், வண்டியை ஓரம்கட்டி அங்கேயே அமர்ந்துவிட்டான்.

பெண்ணது பேச்சு விளையாட்டல்ல என்பது விஷ்வாவிற்கு தெளிவாகப் புரிந்தது.

எது தன்னை இந்த நிலைக்கு கொண்டு வந்திருப்பதற்கான வாய்ப்பு என்பதை அமர்ந்து நிதானமாகவே யோசித்தான்.

ஆனாலும், அன்று அவ்வளவு கடுமையாக கண்ணனிடம் பேசிய திலாவை நிச்சயமாக சந்தேகிக்க முடியவில்லை விஷ்வாவால்.

நீண்ட நேரம் அமைதியாகவே யோசித்தான்.

முனுக்கெனுமுன் தனக்கு அழைத்துப் பேசுபவள், மசக்கையின் காரணமாக அழைப்பைக் குறைத்திருந்தாள் என்றே இத்தனை நாள் எண்ணியிருந்தான்.

ஆனால் அது உண்மையில்லைபோலவே என்பதும் மனதைப் பிசைந்தது.

கண்ணனோடுடனான திலாவின் பதிலை தனக்குச் சாதகமாக இன்றுவரை எண்ணியிருந்தவனால், உண்மையில் அதுவும் காரணமாக இருக்குமோ என்கிற எண்ணம் அவ்வப்போது தோன்றி மறைந்தது.

மனதில் அவ்வாறு தோன்றியபோதும், மனைவிமீது அத்தனை நம்பிக்கை.

நிச்சயமாக வேறு ஏதோ விசயம் இருக்கிறது.  அதை நேரில் சென்று விசாரித்து அறிந்து கொள்வோம் என எண்ணியே மீண்டும் பயணத்தைத் துவங்கினான் விஷ்வா.

திலாவின் அழைப்புகள் முன்புபோல இல்லாதபோது, அவளின் உடல்நிலையால் அப்டியிருக்கிறாள் என அதனை பெரிதுபடுத்தாமல் விட்டது தவறோ என எண்ணினான்.

ஆனால் அது அவ்வளவு எளிமையாக விட்டுவிடக்கூடிய விசயமில்லை என்பதும் புரிய, திலாவை புரியவைக்க மிகுந்த சிரமங்களை எதிர்கொள்ள நேரிடுமோ என அது சார்ந்த வழிகளை யோசித்தான்.

திலா தன்னை அழைக்காததும், தற்போதைய பேச்சின் சாரமும், அவளின் தற்போதைய மனநிலையைச் சுட்டிக் காட்டியதாக உணர்ந்தான் விஷ்வா.

செங்கோட்டை கிளம்பிய தினத்தன்று கண்ணனோடு திலா உரையாடிய உரையாடலை, மீண்டும் தனது அலைபேசி நினைவகத்தில் இருந்து, எடுத்துக் கேட்டான்.

ஒரு முறை மட்டுமல்லாது திரும்பத் திரும்ப கேட்டான்.

தேதியைப் பார்த்தான்.

கண்ணன் பேசிய அன்றைய தினமே பெண்ணை செங்கோட்டைக்கு அழைத்து வந்து விட்டது நினைவில் வந்தது.

பெண்ணது பேச்சில் இருந்த கோபம், அவள் கண்ணனைச் சாடுவது பொய்யல்ல என்பது தெளிவாக அதனைச் சந்தேகிக்க இயலாமல் தடுமாறினான்.

திலாவிற்கு தன்மீது சந்தேகம் உண்டாகியிருந்தால், அன்றே அந்த அழைப்பைப் பற்றி திலா தன்னிடம் கேட்டிருப்பாள் எனத் தோன்றியது விஷ்வாவிற்கு.

இனி எந்த சூழலானாலும், பெண்ணைத் தனித்து விடக்கூடாது என்கிற எண்ணமும் வந்து வலுத்தது.

பெண் தாய் வீடு சென்றதற்கான காரணமும் ஏதேனும் இருக்குமோ என எண்ணத் தோன்றியது விஷ்வாவிற்கு.

////////////

ஒழுங்கான உறக்கமில்லை.  ஓய்வாக இருந்தாலும், மனதை உழட்டி மிகவும் சோர்வாகக் காணப்பட்டாள் திலா.

செல்லம்மாள் எவ்வளவு எடுத்துக் கூறினாலும், ஒழுங்காக உண்ணுவதில்லை.

வீட்டிற்குள் சோம்பியிராமல், வெளியில் நடந்து காற்றோட்டமான பகுதியில் இளைப்பாருங்கள் என்று கூறினாலும், வீட்டிற்குள்ளேயே முடங்கியே இருந்தாள் திலா.

கடந்த முறை இருந்ததுபோல, ஓங்கரிப்பு, வாந்தி இல்லாதபோதும், பெண் இளைத்தே காணப்பட்டாள்.

உண்டும் இளைத்துக் காணப்பட்டவளை பரிதாபமாகப் பார்க்கும்படி இருந்தது.

செல்லம்மாளுக்கோ, தனிமையை விரும்பாததால் அவ்வாறு திலா இருப்பதாக எண்ணியிருந்தார்.

ஆனாலும் பொதுவாக, “புள்ளத்தாச்சி, கண்டதையும் போட்டு மனசுல குழப்பாம சந்தோசமா துறுதுறுனு இருந்தாதான பொறக்கற புள்ளை சமத்தா இருக்கும்”, என்கிற வார்த்தையை அடிக்கடி உபயோகிக்கத் தவறவில்லை.

ஆனாலும் எதிர்த்துப் பேசவோ, கருத்தைக் கூறவோ செய்யாமல் அமைதியாகக் கடந்தவளை விநோதமாகவே பார்த்திருந்தார் செல்லம்மாள்.

முன்பைவிட பேச்சு, செயல்பாடுகள் அனைத்தும் குறைந்து காணப்பட்டவளை யோசனையோடு மட்டுமே பார்க்க முடிந்தது.

தாயை நினைத்து ஏங்குகிறாளோ என்று ஒருமுறை, “அம்மா இல்லையேனு வருத்தப்படாதீங்கம்மா.  நாங்கள்லாம் உங்க அம்மா அளவுக்கு இல்லைனாலும், எங்க உசிரக் குடுத்து உங்களைப் பாப்போம்.  தைரியமா இருக்கணும் இந்த நேரத்தில”, என திலாவிடம் கூறித் தேற்ற முயன்று தோற்றார்.

அனைத்தையும் பதில் கூறாமல் கடந்தாளே தவிர, பேசவேயில்லை.

/////////////

சிந்தனையோடு ஒருமுகமாகப் படுக்கையில் படுத்திருந்தவளை, வீட்டிற்குள் நுழைந்து அறை வாயிலில் நின்றவாறே அமைதியாகப் பார்த்திருந்தான் விஷ்வா.

கண்டதுமே பெண்ணது தோற்றமே அனைத்தையும் கூறியது.

சென்று ஒரு வாரத்தில் பாதியாக இளைத்திருந்தவளைக் கண்டவனுக்கு வருத்தமாக இருந்தது.

“ஸ்..”, வழமைபோல ஸ்ட்ராபெர்ரி என அழைத்துப்பேச வந்தவன், பெண்ணது பேச்சினை நினைவு கூர்ந்து, “மிதிலா”, என மெதுவாக அழைத்தபடியே, கதவை சாத்திவிட்டு, பெண்ணது படுக்கையை நோக்கி அருகில் வந்தான்.

அதுவரை கணவனைப்பற்றிய சிந்தையில் இருந்தவாறு படுத்திருந்தவள், சற்று முன்பே அவளறியாமல் கண்ணயர்ந்திருந்தாள்.

இருமுறை அழைத்தும் என்னவென்று கேட்காதவளின் அருகே சென்று பார்த்தவன், திலா உறங்குவதை அறிந்து, அறையை விட்டு வெளியே வந்தான்.

செல்லம்மாளிடம் பொதுவான விசயங்களை கேட்டறிந்தான்.

விசயம் ஓரளவு பிடிபட்டது.

அவரிடம் எதையும் காட்டிக் கொள்ளாமல், தன்னை சீர்செய்து, உடைமாற்றி வந்தவன், செல்லம்மாள் கொணர்ந்த காஃபியை வாங்கிப் பருகினான்.

அதன்பிறகு வந்த அரைமணித்தியாலத்தில் இரண்டு முறை அறை வாசலில் நின்று திலாவை நோட்டமிட்டான்.

பெண் அதே நிலையில் உறங்கிக் கொண்டிருந்தாள்.

மிகுந்த சோர்வு காரணமாக இதுபோல அவளறியாமல் எப்போதாவது சற்று நேரம் கண்ணயர்வாள்.

பெரும்பாலும் விழித்தே இருப்பவள், ஒரு நாளில் இதுபோல எப்போதேனும் அயர்ந்து உறங்குவாள்.

செல்லம்மாளின் வார்த்தைகளின் வழியே திலாவின் செயல்பாடுகளை அறிந்து கொண்டவன், பெண்ணை எழுப்ப மனமின்றி ஹாலில் அமர்ந்து தொலைக்காட்சியோடு நேரத்தைச் செலவிட்டான்.

பெண்ணுக்கு தொலைக்காட்சி சத்தம் கேட்டு எழுந்துவிடுவாளோ என்று பயந்து, அறைக்கதவைச் சாத்தியிருந்தான் விஷ்வா.

நீண்ட நேரம் அதில் மூழ்கியிருந்தவனைக் களைத்தது ஒரு செறிவு குறைந்த காந்தக் குரல்.

குரலது பொருள் உரைக்காமல், அதற்குச் சொந்தக்காரியை பார்க்கும் ஆவலே மேலிடத் திரும்பினான் விஷ்வா.

“இங்க எதுக்கு இப்ப வந்தீங்க?”, என்ற கேள்வியில் அதிர்ந்தாலும், அதைக் காட்டாமல் திரும்பியவனை கேட்டவளின் முகம் கண்டு அதிர்ந்தான்.

திலாவின் முகம் முற்றிலும் அருளிழந்து காணப்பட்டது.

தன்னைக் கேட்ட கேள்வியைவிட, பெண்ணது உருவம் விஷ்வாவை உலுக்கியிருந்தது.

மனைவியின் நிலை கண்டு என்ன செய்தான்? அவளின் பேச்சைக் கேட்டு என்ன பதில் கூறினான்?

அடுத்த அத்தியாயத்தில்…