இதய ♥ வேட்கை 20

 

மதுரையில் இருந்து செங்கோட்டையை நோக்கி மிதிலாவோடு பயணமாகிக் கொண்டிருந்தான் விஷ்வா.

ஓட்டுநரை வைத்துக்கொண்டு திலாவை வலுக்கட்டாயமாக மதுரை அழைத்துவந்து, மருத்துவரிடம் காட்டி,  பெண்ணிற்கு ஒன்றுமில்லை, மனதளவில் உண்டான தொய்வு பெண்ணை இந்நிலைக்கு கொண்டு வந்துள்ளது என்பதைக் கூறக்கேட்ட பிறகே மனம் ஆசுவாசமாக உணர்ந்திருந்தான் விஷ்வா.

முந்தைய நாளின் மாலை வேளையில் கேள்வியோடு வந்து நின்ற மனைவியைக் கண்டதும் அதிர்ந்தவன், பெண்ணை மருத்துவமனைக்கு அழைக்க, தர்க்கத்திற்கு சிறிது நேரம் செலவிட்டு, அதன்பிறகே மதுரைக்குக் கிளம்பியிருந்தார்கள்.

மதுரைக்கு வந்தவுடன் மருத்துவரைப் பார்த்து, அறிக்கையைப் பெற்றுக் கொண்டு நேரத்தைப் பார்த்தபோது ஒன்பதரைக்கு மேலே ஆகியிருந்தது.

அந்நேரத்தில் செங்கோட்டை திரும்ப தனக்கு ஆட்சேபனை இல்லாதபோதும், மனைவியின் உடல்நிலையைக் கருத்தில் கொண்டு மருத்துவமனையில் தங்கிவிட்டு, மறுநாள் கிளம்ப எண்ணியிருந்தான் விஷ்வா.

பெண் காலையில் சற்றுத் தெளிந்து காணப்பட்டாலும், விஷ்வாவுடன் வழமைபோலப் பேசவில்லை. 

ஆனால் பயணத்தின்போது வாகாக கணவனின் மடியில் தலைவைத்து உறங்கியவாறே வந்தாள்.

தலையை வருடத் துடித்த கைகளை கட்டுக்குள் வைத்துக் கொள்ளச் சிரமப்பட்டான் விஷ்வா.

பூகம்பம் எப்போது, எப்படி நிகழும் என்று அறியாததுபோல, திலாவும் எப்போது என்ன சொல்வாளோ என்கிற எண்ணத்தால் கூட்டுக்குள் அடங்கிக் கொண்டு அமைதியாக இருக்கும் ஆமையைப்போல சிந்தனையோடு விஷ்வாவும் இருந்தான்.

தொடர்ச்சியாக படுக்காமல், குறிப்பிட்ட இடைவெளிக்குப்பின் எழுந்தமர்வதும், பிறகு படுப்பதுமாக வந்தாள் திலா.  எழுந்தமர்ந்தாலும், விஷ்வாவிடம் திலா பேச முனையவில்லை.

பெண் முந்தைய தினம் பேசிய பேச்சிற்கு, கர்ப்ப ஸ்தீரியாக இருந்தமையால் விஷ்வாவிடம் இருந்து தப்பித்தாள்.

இதுவே, சாதாரண நேரமாக இருந்திருந்தால், விஷ்வாவின் மறுபக்கத்தைக் காட்டியிருப்பான்.

பெண்ணது உடல்நிலையால் உண்டான மனமாற்றம் அவளை அவ்வாறு பேசச் செய்கிறது என அமைதியாகவே அப்போது திலாவைக் கையாண்டிருந்தான் விஷ்வா.

எல்லாம் மருத்துவர் மாலினியின் தயவில் கொடுக்கப்பட்ட இலவச அறிவுரைகள்.

‘எல்லாரும் ஒரே மாதிரி இருக்க மாட்டாங்க!  பட் ஒவ்வொருத்தவங்களும் ஒவ்வொரு மாதிரியான முறையில நடந்துப்பாங்க! சிலர் வழமைபோலவே கர்ப்பகாலத்திலயும் இருப்பாங்க!  சிலர் ரொம்ப மூர்க்கமாகவோ, எதுக்கெடுத்தாலும் சட்டுன்னு கோபத்தோடவும், சிலர் சலிப்பான உணர்வோடவும், சிலர் அதீத மகிழ்ச்சியோடவும், சிலர் எதையும் தனக்கருகே நெருங்கவிடாம… இப்படி கர்ப்பகாலம் நிறைய வகையில வேறுபட்டு இருக்கும்.  பெண்கள் எல்லாரும் அதைக் கடந்து வந்திருந்தாலும், தனக்கு நடந்ததை மட்டுமே பிராதானமா நினைச்சிட்டு, அப்டித்தான் மத்தவங்களுக்கும் இருக்கும்னு குருட்டுத்தனமா நம்பறதுதான் இங்க பிரச்சனையே!  அதை மட்டுமே நினைச்சிட்டு பிறரையும் அப்டியே எதிர்பாக்கற மனப்பக்குவத்தாலதான் நிறைய இடங்கள்ல பிரச்சனைகள். பலமாறுபட்ட நிலையை புரிஞ்சுக்காம கர்ப்பமான பொண்ணுகிட்ட மல்லுக்கு நின்னு, அவங்களோட நிலைமையை இன்னும் சிக்கலாக்கிருவாங்க!  இந்தப் பிரச்சனை எதுவும் கர்ப்ப ஸ்திரீக்கு வேணானுதான் பிள்ளைப்பேறு காலத்துல அவங்க தாய் வீட்டுக்கு பெண்ணை அனுப்பிற பழக்கம் வந்திருக்கும்னு தோணுது!  நம்ம திலாவுக்கு தாய்வழில யாரும் இல்லாததால நாமதான் ரொம்ப பொறுமையா அவளைக் கையாளணும் விஷ்வா!  உன்னால பாத்துக்க முடிஞ்சா பாத்துக்க!  இல்லைனா எங்கிட்ட கூட்டிட்டு வந்து விடு!  அவளை நாம்பாத்துக்கறேன்!, என விஷ்வாவிடம் ஆரம்பத்திலேயே மாலினி பேசியிருந்தார்.

அதனால், உச்ச தொனியில் கத்திப் பேசியவளை விநோதமாகவே உணர்ந்தாலும், பதிலுக்குப் பேசாமல் இயன்றவரை அமைதி காத்தான் விஷ்வா.

இப்படியெல்லாம் இந்தப்பெண் பேசுவாளா? என்கிற ரீதியில் பெண்ணை அமைதியாகவே பார்த்திருந்தான்.

ஆனாலும் கோபம் எழவில்லை.  பெண்ணது நிலையைப் பார்த்துப் பரிதாப உணர்வே மேலிட்டது.

பெண்ணது பேச்சை புறம் தள்ளியவன், ‘என்ன ஆனது?  எதனால் இத்தனை மோசமாகக் காட்சியளிக்கிறாள், என்பதான யோசனையோடு, “என்ன செய்யுது திலா.  வா ஹாஸ்பிடல் போகலாம், என உடனே மருத்துவரைக் காணக் கிளம்பு என்கிற ரீதியில் விஷ்வா திலாவிடம் கூற, அதற்கும் மறுத்து மல்லுக்கு நின்றாள் திலா.

‘எனக்கு ஒன்னுமில்லை.  நான் நல்லாதான் இருக்கேன். உங்களுக்கு வேண்டாதவ எப்டியோ இங்க இருந்திட்டுப் போறேன்! நீங்க பாக்க வந்த வேலையப் பாத்துட்டு பேசாம கிளம்பிப் போங்க!, எனக் கத்தியிருந்தாள் திலா.

அனைத்தையும் அமைதியாகக் கேட்டவன், ‘நான் போறேன்.  நான் போகணும்னா இப்ப என்னோட கிளம்பி ஹாஸ்பிடல்கு வா!, என வற்புறுத்தியிருந்தான்.

ஆரம்பத்தில் எழுந்த மறுப்பு, வாக்குவாதமாக மாறியிருந்தது.  நீண்ட நேரம் இருவருக்கிடையே எழுந்த வாக்குவாதம், இறுதியில் விஷ்வாவின் பக்கமாக முடிவுக்கு வந்திட, வேறுவழியில்லாமல் திலா அரைமனதாகக் கிளம்பினாள் கணவனோடு.

இல்லையெனில் நிச்சயம் விஷ்வா அங்கிருந்து செல்லமாட்டான் என்பதும் பெண்ணுக்குத் தெரிந்தே இருந்தது.

எத்தனை தூரம் விஷ்வாவைத் தள்ளி நிறுத்த எண்ணினாலும், வார்த்தை மட்டுமே அவ்வாறு உரைத்ததே தவிர, உண்மையில் அவன் தன்னைவிட்டுவிட்டுச் சென்றுவிடக்கூடாதே என பெண்ணது உள்மனம் ஏங்கியது.

ஆனால் திலா அதைக் கூறவில்லை.

செங்கோட்டையில் உள்ள மருத்துவரைச் சென்று காணத்தானே அழைக்கிறான் என்று எண்ணிக் கிளம்பினாள் திலா.  ஆனால் திலாவை மதுரைக்கு அழைத்து வந்துவிட்டான் விஷ்வா.

செங்கோட்டை எல்லையைத் தாண்டி சீறிச் சென்ற வாகனத்தைக் கண்டவளுக்கு எதுவும் புரியவில்லை.  ஆனாலும் அதைக் கேட்க திலாவிற்கு ஏனோ வாய் எழவில்லை.

‘இங்கேதான? இல்லையே அடுத்து திருநெல்வேலிக்கோ?  இல்லையே இது மதுரை ரூட் மாதிரியில்ல இருக்கு!’, என மனம் அவ்வப்போது கணித்ததை மனதிற்குள் வைத்தவாறே பேசாமல் வந்தாள்.

‘எதுக்கு மதுரைக்கு கூட்டிட்டு போறீங்க?’, எனக் கேட்க நினைத்தாலும் இயல்பாகவே உள்ள அசதியிலும், சற்றுமுன் தான் அதிகமாகவே பேசியதும் நினைவில் மோத, விஷ்வாவுடன் இணக்கமாகச் சென்று பேச உள்ளுணர்வு தடுத்தது.  ‘இவ்வளவு நேரம் மூனாவது மனுசங்கிட்ட பேசற மாதிரி பேசிட்டு, எதுவுமே நடக்காதமாதிரி எப்டி விச்சுகிட்ட போயிப் பேச!, என மனம் பெண்ணைக் கேலி செய்திட நடப்பதை அமைதியாக பார்க்கும் எண்ணத்தோடு பேசாமலேயே இருந்தாள் திலா.

பெண் உடைமாற்றி வருமுன்பே, அறிந்தவர்கள் மூலமாக மதுரையில் மருத்துவரிடம் அப்பாயிண்ட் முதல் அனைத்தையும் ஏற்பாடு செய்தவன், தாமதிக்காமல் திலாவோடு உடனே மதுரையை நோக்கிக் கிளம்பியிருந்தான்.

கிளம்பி அரைமணித்தியாலம் வண்டியில் தனித்தமர்ந்து வந்தவளுக்கு அதற்குமேல் இருப்புக் கொள்ளாதநிலை.

இடுப்பில் உண்டான ஓய்ந்து போன உடலின் உணர்வு, படுத்துக்கொண்டு எனக்கு ஓய்வு கொடு என அசௌகரியத்தின் வாயிலாக வெளிப்படுத்த, வீம்பும், வெட்டி வாயாக இதுவரை கணவனிடம் பேசிவிட்டு, எதுவும் நடவாததுபோல விஷ்வாவிடம்போய் இயல்பாகப் பேச எதோ ஒரு உணர்வு தடுக்க, அமர முடியாமல் நெளிந்தபடியே நீண்ட நேரம் அதே நிலையில் வந்தாள் திலா.

முதலில் பெண்ணைக் கவனிக்காமல், மொபைலில் பார்வையைப் பதித்தபடி வந்தவன், சற்று நேரத்தில் பெண்ணின் நிலையை எதேச்சையாகப் பார்த்து, ‘எதனால் அவசரத்தில் அடக்க முடியாதவள்போல அமர்ந்தபடியே நெளிகிறாள்?, என யோசனையோடு பார்த்தான் விஷ்வா.

தன்னிடம் எதுவும் சொல்கிறாளா? கேட்கிறாளா? என பார்த்தும் பாராமல் அமர்ந்தபடி, கீழ்க்கண்ணால் நோட்டமிட்டவாறே வந்தான்.

ஐந்து, பத்து என நிமிடங்கள் ஆனபோதும், பேசாமல் அதேபோலவே வந்தவளைக் கண்டவனுக்கு, ‘நம்மகிட்ட இவளுக்கு அப்டி என்ன ரோசம் வேண்டிக் கெடக்கு!  வாயத் திறந்து சொல்றதுக்கென்ன?, என எண்ணி கோபம் வந்தாலும், அதைக் காட்ட இது சரியான தருணம் அல்லவே!

அதனால விஷ்வாவாகவே, மெதுவான குரலில், பெண்ணிடம் வினவ, அதற்குக் காத்திருந்தாற்போல, ‘உக்கார முடில!, என மிகுந்த பதற்றத்தோடு கூறியவள், விஷ்வாவின் கேள்விக்காக காத்திருந்தாற்போல ‘உங்க மடியில தலைவைச்சு படுத்துக்கறேன்! என டக்கென்று விஷ்வாவின் மடியில் தலைவைத்து படுத்துக் கொண்டாள்.

மடியில் படுத்தவளைக் கண்டவனுக்கு, ‘அப்ப இவ்ளோ நேரம் நம்மகிட்ட பேசாம வந்ததுக்கு ரோசமெல்லாம் காரணமில்லைபோலவே!  வாயக் குடுத்தவளாச்சே! அதான் வம்புக்கு பயந்துபோயி பம்மிட்டு வந்திருக்கா!, என்கிற முடிவுக்கு வந்திருந்தான் விஷ்வா.

விஷ்வாவிற்கு பெண்ணது செயல் சிரிப்பை உண்டு செய்திருந்தாலும், அதை வெளிக்காட்டவில்லை.

கிளம்பும்முன் நடந்த எதையும் அறியாதவள், மதுரை வந்து மருத்துவர் கேட்ட கேள்விக்கு பதில் என்பதைத் தவிர வேறு எதையும் பேச முடியாதவளாக இருந்தாள்.

அனைத்து டெஸ்ட்டுகளையும் எடுத்து, பெண்ணையும் பரிசோதித்து, பெண்ணிடம் சில விசயங்களைக் கேட்டறிந்து முடிவில், அனைத்தும் நன்றாகவே உள்ளது என அறிக்கையும் வந்திருந்தது.

தனிப்பட்ட முறையில் விஷ்வா மருத்துவரிடம் சில விசயங்களைக் கேட்க, ‘அவங்க மனசுல வேற எதையோ போட்டுக் குழப்பற மாதிரி தெரியுது. முதல் கர்ப்பம் அப்டிங்கறதால சிலருக்கு பயமும் இருக்க வாய்ப்பு இருக்கு.  அப்டி மனசளவில பயந்த மாதிரியும் அவங்க பேச்சில தெரியுது.  மற்றபடி இப்ப வாமிட்கூட கன்ட்ரோலாகிட்டததாதான் சொல்றாங்க. அப்டியிருந்தும் ஒழுங்கா சாப்பிடாமா வெறும் டேப்ளட் மட்டுமே லாஸ்ட் ஒன் வீக்கா எடுத்திருக்காங்க.  அதனாலகூட இப்டி ஆகியிருக்கலாம்.  அதனால வீட்ல பெரியவங்கட்ட சொல்லி வேளைக்கு அவங்களை நல்லா சாப்பிட வைச்சு டேப்ளட் எடுக்கறமாதிரி பாத்துக்கங்க.

வேற பயப்படற மாதிரி எதுவும் இல்ல.  பேபி ஹார்ட்பீட் எல்லாம் நார்மலாதான் இருக்கு.  நீங்க இப்பவே கூட்டிட்டுப் போறதா இருந்தாலும் போகலாம். இல்லை மார்னிங் டிஸ்சார்ஜ் ஆகறதா இருந்தாலும் உங்க விருப்பம்தான், என்றதோடு அகன்றிருந்தார் மருத்துவர்.

மருத்துவமனைக்கு வந்தவுடன் மிகவும் சோர்ந்து, நிற்க சிரமப்பட்டவளை அட்மிட் செய்து ட்ரிப்ஸ் போட்டதோடு, மற்ற டெஸ்ட்களை எடுத்து உடனுக்குடன் அறிக்கையைக் கொடுத்ததோடு, விஷ்வாவின் சந்தேகங்களுக்கும் உரிய பதிலைத் தந்திருக்க, விஷ்வா ஆசுவாசமாக உணர்ந்தான்.

சென்னையில் இருந்து செங்கோட்டை வந்து, உடனே கிளம்பி மதுரை வந்து என அலைச்சல் இருந்தாலும், அதைக்காட்டிலும் திலாவின் நிலைகண்டு பயந்திருந்தான்.

உதடெல்லாம் வறண்டு, முகம்வாட, ஓய்ந்து போய் ஒளி குன்ற நின்றவளின் தோற்றம் அத்துணை பயத்தைத் தந்திருந்தது விஷ்வாவிற்கு.

அடுத்த நாள்வரை தேவைக்கு தவிர, ஒரு வார்த்தைகூட கூடுதலாகப் பேசவில்லை இருவருமே.

ஆனாலும், காலையில் கண்ட பெண்ணது தோற்றத்தில் சற்றே தெளிவும், கண்ணில் ஒளியும் தோன்றியதோ!

அந்த ஒளி தன்னால் வந்தது என்பதை அறியாதவனாக, அடுத்தடுத்த பணிகளை கிளம்ப வேண்டிக் கவனிக்கச் சென்றான் விஷ்வா.

விஷ்வாவிற்கு சற்றே திருப்தி.  அதன்பிறகே டிஸ்சார்ஜ் சம்பந்தமாக மருத்துவரைச் சந்தித்துப் பேசினான்.

விட்டு விலகும் எண்ணம் எதுவும் இல்லாமல், தன்னோடு அட்டைபோல ஒட்டியவாறே வந்தவளைக் கண்டு, ‘தன்னைத்தான் தேடியிருப்பாளோ!  அதனால் உண்டான மனஅழுத்தத்ததில் இப்டியாகிவிட்டாளோ?, என யோசித்தவன், ‘நல்லவேளை இப்ப வந்து பாத்தேன்.  இல்லைனா இது எலும்புக்கூடா மாறி எக்ஸிபிஸன் கேசா மாறியிருந்தாலும் ஆச்சர்யப்படறதுக்கு ஒன்னும் இல்லைபோலவே!, என சரியான தருணத்தில் செங்கோட்டை வந்ததை உணர்ந்து நிம்மதியாக உணர்ந்தான் விஷ்வா.

‘என்ன கோபம் இவளுக்கு.  வாயைத் திறந்து சொல்லாம இப்டி இவளுக்குள்ள வச்சிட்டா எனக்கு எப்டித் தெரியும்?என மனதில் ஓடினாலும் வெளியில் கேட்கவில்லை.

ஓட்டுநரின் முன் எதாவது திலா பேசினால், அதைத் தவிர்க்க எண்ணி அமைதியாகியிருந்தான் விஷ்வா.

ஆனாலும் மூடிய வாயைத் திறக்காமல் அமைதியாக வந்தவளை விஷ்வாவும் தொந்திரவு செய்யவில்லை.

காலை ஆகாரத்தைக் கொடுத்ததும், “உங்களுக்கு?, என்றவளை

“நீ சாப்பிடு, நானும் டிரைவரும் கேண்டீன்ல போயி சாப்பிட்டுக்குவோம்!, என்றதோடு, பெண் உண்டு முடித்து பத்து நிமிடம் காத்திருந்து, டேபிளட்டையும் உண்ணச் செய்தான்.

கேண்டினில் சென்று தானும், டிரைவரும் உண்டுவிட்டு மருத்துவமனையில் இருந்து கிளம்பினர்.

மதிய உணவிற்கு செங்கோட்டை வந்துவிடுவதாக செல்லம்மாளை அழைத்துப் பேசியதோடு, பெண்ணிற்கு ஏதுவான உணவாகப் பார்த்துச் சமைக்கும்படியும் கிளம்பும்முன் கூறிவிட்டே வைத்தான்.

மடியில் தலைசாய்த்திருந்தவளை தோள் தொட்டு, “திலா வீட்டுக்கு வந்தாச்சு!  எழுந்து வா! வந்து ரூம்ல படு!, என எழுப்ப

படக்கென எழுந்தவளை, “ரிலாக்ஸ் திலா.. எதுக்கு இவ்ளோ ஃபாஸ்டா எழற?, என்று கண்டிக்க

வண்டியை விட்டு இறங்கியவள் வீட்டிற்குள் செல்லாமல் வாசலில் நின்று வீட்டையே வெறிக்கப் பார்த்திருந்தாள்.

வீட்டிற்குள் செல்லாமல், தயங்கி வெளியில் திலா நிற்கக் கண்டவன், பெண் எதனால் தயங்கி நிற்கிறாள் என்பது புரிந்தாலும், அதைத் தெரிந்ததாகக் காட்டிக் கொள்ளவில்லை.

திலாவின் கைபிடித்தபடியே, எதிரே வந்து விசாரித்த செல்லம்மாளிடம் கையில் இருந்த பொருள்களைக் கொடுத்தவாறே, அவரின் கேள்விகளுக்கு பதில் கூறியபடி திலாவை உள்ளே அழைத்து வந்திருந்தான்.

மகுடிக்குக் கட்டுப்பட்ட நாகத்தைப்போல பெண்ணும் எதிர்க்காமல் உள்ளே வந்திருந்தாள்.

விஷ்வாவின் அறை சற்று விசாலமானது.  மிகுந்த காற்றோட்டமாக அனைத்து வசதிகளோடும் இருக்கும்.  அதனால் அங்கேயே திலாவைச் சென்று ஓய்வெடுக்கக் கூற

“இல்ல குளிக்கனும், என்றவளை விநோதமாகப் பார்த்தவன்

“நிக்கவே தள்ளாடற!  இன்னும் கொஞ்ச நேரம் கழிச்சி போ!, என்றவனிடம் மறுத்துவிட்டாள் திலா.

மறுத்தவளிடம் எதுவும் கூறாமல், ‘இவளைத் திருத்த முடியாது, என நினைத்தாலும், “அதுக்கு இப்ப நான் என்ன செய்யனும்?, எனக் கேட்டவனை

“ம்.. ஒதுங்கி நிக்கனும்!, என்றவள், விஷ்வா விலகியதும் தனக்குத் தேவையானதை எடுத்துக் கொண்டு குளியலறை சென்றவளை, சிரிப்போடு பார்த்தாலும், அதைப் பெண் பார்த்தும் பார்க்காததுபோல செல்ல, அங்கிருந்து அகன்றான் விஷ்வா.

மதிய உணவிற்குப்பின் அலுவலகம் செல்லலாம் என்கிற எண்ணத்தில், ஹாலில் சென்றமர்ந்து தொலைக்காட்சியைப் பார்த்திருக்க, அதே நேரம் கண்ணன் அழைத்தான்.

அலுவலக விசயமாக முதலில் பேசியவன், “சார் இப்ப நீங்க எங்க இருக்கீங்க?, எனக்கேட்க

“ஏன் கண்ணா?

“இல்லை.  ரொம்ப நேரமா ட்ரை பண்ணிட்டே இருந்தேன்.  நாட் ரீச்சபிள்னே வந்தது,  அதே மாதிரி மேடத்துக்கும் உங்க நம்பர் நாட் ரீச்சபிள்னு வருதுன்னு கேட்டாங்க, என்க

“எந்த மேடம்?”, வேறு யாரையும் சொல்கிறானோ என்றே வினவினான் விஷ்வா.

“நம்ம மேடந்தான் சார்”, எந்த உறுத்தலுமின்றி பேசியவனை ‘உக்கார முடியாம எம்மடியில படுத்துட்டே வந்தவ உங்கூட பேசி என்னைக் கேட்டாளா?  கலிகாலம்டா!

ராஸ்கல்…!  வந்து உன்னை நேருல வச்சிக்கிறேன்!’, என மனம் கோபத்தில் குமுற அதை வெளிக்காட்டாது அமைதி காத்தான் விஷ்வா.

அப்போதுதான் தான் செங்கோட்டை வரும் விசயத்தை அலுவலகத்தில் கூறாமல் கிளம்பி வந்ததும், இதுவரை செங்கோட்டையில் பணிபுரிபவர்களுக்கும், தான் செங்கோட்டை வந்ததைத் தெரிவிக்காததும் நினைவில் வர தன்னை நிதானப்படுத்திக் கொண்டு, “அப்டியா கண்ணன்?  சரி நா கூப்பிட்டு திலாகிட்ட பேசிக்கறேன், என்க

“சார் நீங்க எங்க இருக்கீங்கனு மேம் கேட்டா என்னனு சொல்ல?, என கண்ணன் இழுக்க

“அதுவா..?, என யோசிப்பதுபோல சற்றுநேரம் தாமதித்தவன், “இப்போ தூத்துக்குடியில இருந்து கொச்சின் கிளம்பறேன் கண்ணா!  அங்க போயிட்டு நிலவரம் என்னனு பாத்துட்டு சென்னை வந்திருவேன், என பொய்யாக ஒரு பதிலை கண்ணனிடம் கூறியதோடு, அலுவலக விசயத்தைப் பேசிவிட்டு வைத்தான்.

‘இன்னுமா குளிக்கிறா? என அறையை எட்டிப்பார்க்க, திலா குளித்து முடித்து ஈரம் சொட்டியவாறு ஓய்ந்த நிலையில் வந்து அமர்ந்திருந்தாள்.

முடியிலிருந்து சொட்டு சொட்டாக விழும் நீர், பெண்ணது உடையில் பரவி, உடையை ஈரமாக்க, அதை உணர்ந்தாலும் அப்படியே அமர்ந்திருந்தவளை அணுகி, டவலைக் கொண்டு ஈர முடியைச் சுற்றி கொண்டை போல உச்சந்தலையில் வைத்தான்.

கணவனின் அண்மையில் அமைதியாக எதையும் மறுக்காமல் இருந்தவளைப் பார்த்தவன், “என்ன செய்யுது? தலையத் தோட்டாம இப்டி உக்காந்திருக்க? விஷ்வா

கணவனை பார்வையால் அளந்தவள், “இங்க எதுக்கு என்னைக் கூட்டிட்டு வந்தீங்க?, திலா

‘ஆரம்பிச்சிட்டாடா விஷ்வா

“மறுபடியும் ஆரம்பிக்காத திலா.  என்ன பிரச்சனைனாலும் அதை எங்கிட்ட சொன்னாதான் சரி பண்ண முடியும்.  நீயா எதையாவது நினைச்சிட்டு பிரச்சனைய பெரிசு பண்ணாத!”, கடுமையாகவே பேசினான் விஷ்வா.

நான் என்ன பிரச்சனை பண்ணேன்?, ஒன்னாங்கிளாஸ் பிள்ளைபோல முகத்தை வைத்துக் கொண்டு அப்பிராணி போல கேட்டவளைப் பார்த்தவனுக்கு தலையில் அடித்துக் கொள்ளும் எண்ணம் வந்தது.

‘ஒன்னுந் தெரியாத அப்பாவி மாதிரி முகத்தை வச்சிக்கிட்டு கேள்வி கேக்கறதைப் பாரு!, என விஷ்வா நினைத்தாலும்

“தலை முடியை நல்லா உணத்து.  பசிச்சா வந்து சாப்பிட்டு கொஞ்ச நேரம் ரெஸ்ட் எடு!, கூறியவன் நேராகச் சென்று டைனிங்கில் அமர, சோர்வான நிலையிலும் திலாவாகவே வந்து விஷ்வாவிற்கு பரிமாற, அதை மறுக்கவில்லை.

மறுத்தால் அதற்கு ஒரு காரணம் கற்பித்து சண்டையெழும் என ஆழ்மனம் கூற அமைதியாக மறுக்காமல் உண்டு எழுந்தான். அலுவலகம் கிளம்ப உத்தேசித்தவன், கண்ணனிடம் கூறிய பதிலில் பின்வாங்கினான்.

வெளிவேலைகள் சிலதை நேரில் சென்று பார்வையிட்டான்.

இரண்டு நாள்கள் அதுபோலவே அலுவலகம் பக்கம் செல்லாமலே பேசியிலேயே முக்கியமானதைப் பேசியதோடு பொழுது செல்ல, மூன்றாவது நாள் செங்கோட்டையில் உள்ள வியாபார இடங்களுக்கு நேரில் சென்று பார்வையிட்டு வந்தான் விஷ்வா.

விஷ்வாவின் அருகாமையில், முன்பைக் காட்டிலும் திலாவின் முகம்  நன்கு தெளிந்து காணப்பட்டது.

‘இன்னிக்கு கிளம்பிருவானோ?  நாளைக்கு போவானோ ஊருக்கு?, என ஒரு மனம் பதைபதைத்தபடி இருக்க அதை வெளிக்காட்டாமல் இருந்தாள் திலா.

வெட்கங்கெட்ட மனது விஷ்வாவையே நினைத்து ஏங்குவதை என்ன செய்து மாற்ற என்பது புரியாமல் குழம்பினாள்.

‘இவன் அருகில் இல்லாததே இத்தனை துன்பத்தை தருகிறது எனில், அவனில்லாத எதையும் என்னால நினைக்கக்கூட முடியலை!, என கடந்து போன வாரத்தில் தனது நிலையை எண்ணி ஓலமிட்ட மனதை நினைத்துப் பயமும் வந்தது.

நான்கு நாள்கள் சென்றும் கிளம்பாதவனை, “சென்னைக்குப் போகலையா?, கேட்டுவிட்டாள்.

இன்று செல்வான் என்பது முன்பே தெரிந்தால் அதற்குத் தகுந்தாற்போல மனதை ஆசுவாசப்படுத்தி, இதமாக வைத்துக் கொள்ளும் முன்யோசனையில் கேட்டுவிட்டாள்.

திடுமெனக் கிளம்பினான் என்றால், தனது நிலை கவலைக்கிடம்தான் என்பதும் புரியவர, மெதுவாக விசயத்தைக் கேட்டபிறகே மனம் இலேசான உணர்வு.

திலாவின் அருகே வந்து, முகத்தை நிமிர்த்தி கண்ணுக்குள் பார்த்தவன், “என்னை விரட்டி விடுறதிலேயே குறியாக இருக்க? என்ன விசயம்?”, ஊடுருவிய பார்வை வழியே பெண்ணது உள்ளத்தை அறிந்து கொள்ள இயலுமா என முயன்று பார்த்தான் விஷ்வா.

தோல்வியே!

“நான் எங்க விரட்டுனேன்?”, பரிதாபமாக முகத்தை வைத்துக் கொண்டு கேட்டாள் திலா.

“வந்த அன்னிக்கே அப்டியே போடான்னுதான சொன்ன? அப்புறம் வேற ஒன்னு சொன்னியே?”, என யோசித்தவாறே குற்றம் சுமத்தினான்.

“அது…! அதற்கு மேல் என்ன சொல்வாள்.

தலையைக் குனிந்து கொண்டு பொலபொலவென கண்ணீர் சிந்தியவளை, தன்னோடு இதமாக அணைத்துக் கொண்டவன்,

“அழுதே நல்லா காரியத்தைச் சாதிக்கறடீ!”, என்றவன்

“எதுனாலும் எங்கிட்ட மறைக்காமப் பேசணும்.  நீ மனசுக்குள்ள நினைக்கிறதை அப்டியே படிக்கற அளவுக்கு நான் மகானெல்லாம் கிடையாது.  அதனால நீ சொன்னாத்தான் விசயம் எனக்குத் தெரியவரும்!  என்ன புரியுதா?, விஷ்வா தனது நிலையையும் திலாவிடம் எடுத்துக் கூறினான்.

திலாவின் அழுகையின் ஈரம் மேலும் விஷ்வாவைத் தீண்ட அத்தோடு தலையை நிமிர்த்தாது ஒப்புதலாக தலையை அசைத்தவளை, “எதுக்குடீ இப்ப இந்த அழுகை? ம்ம்.., என்றவன் அதற்குமேலும் நிறுத்தாது தொடர்ந்தவளின் அழுகையை நிறுத்த, “நான் நல்லாத்தானே இருக்கேன்.  அப்புறம் எதுக்கு அழற?, என்ற விஷ்வாவின் கேள்வியில்

சட்டென்று நிமிர்ந்து அழுகையைக் கட்டுப்படுத்தி கண்களில் வழிந்த நீரைச் சரி செய்தவாறு பார்த்தவளை, “அழுதே கரைஞ்சாலும் வாயத் திறந்து சொன்னாத்தானே எனக்குத் தெரியும். என்னனு சொல்லு!, என்க

“என்னைக் கண்டுக்க மாட்டிங்கற முன்னப்போல!, எனத் தேம்பலோடு பேசியவளின் குழறலான வார்த்தைகளைக் கோர்த்து ஒருவாறாக பெண் பேசியதைப் புரிந்து கொண்டவன்

“கண்டுக்கலையா?,  அதிர்ச்சி வாங்கிய இதயத்தோடு பெண்ணை தன்னோடு இழுத்து அணைத்தபடியே கேட்டான் விஷ்வா.

“ம்…, என ஆமோதித்தவாறே தன்னை இறுக அணைத்திருந்தவளை, அணைப்பிலிருந்து விலக்கி

“எதையும் நியாயமா பேசணும்.  நான் உன்னைக் கண்டுக்கலையா?  நீ என்னை விரட்டுனியா?, என சிரித்தவாறே பெண்ணின் முகம் பார்த்துக் கேட்க

விஷ்வாவின் கேள்வியில் உண்மை உணர்ந்தாலும் அதை ஒத்துக்கொள்ளாமல், “நீ தான் கண்டுக்கலை! அதான் அன்னிக்கு விரட்டுனேன்!, என அவன் மார்பில் தனது இரு கைகளைக் கொண்டு மாறி மாறி அடிக்க

“இந்த அடி அடிக்கிறியே?  எம்மேல உனக்கு கொஞ்சமாவது இரக்கம் இருக்கா?, விஷ்வா

“உனக்குத்தான் இரக்கமில்லாம கொண்டு வந்து இங்க தள்ளிட்டுப் போயிட்ட?, கணவனின் மீது திலா பழிசொல்ல

உண்மையில் எதனால் தான் இங்கு கொண்டு வந்து விட்டது என்பதை விம்பார் இல்லாது திலாவிடம் விளக்கி, கடந்த ஒரு வாரத்தில் அலுவலகப் பணிகளை துரிதமாக முடித்துக் கொண்டு பெண்ணைத் தேடி வந்ததையும் கூற, ‘எல்லாம் எனக்காகவா?, என்பதுபோல பார்த்திருந்தவளை

“வேற யாருக்காக இதையெல்லாம் பண்றேன்னு தெரிஞ்சவ நீ சொல்லேன்!, பெண்ணிடமே கேட்க

“தெரியலையே!”, பாவம்போல முகத்தை வைத்துக் கொண்டவள், கண்ணனது பேச்சை மறுத்தபோதும், மனது அதையே எண்ணி கணவனது நிலையை தானாகவே யூகித்துக் கரைந்ததை எண்ணி, அவள்மீதே கோபம் வந்தது.

தனது செயலை எண்ணி வெட்கியவள் கணவனின் மார்போடு ஒண்டிக்கொண்டாள்.

ஆனாலும் அதை  வெளிக்காட்டாது, “உம்பிள்ளைக்காக பண்றியோ?, முகம் புதைத்தபடியே கேட்டவளை மார்பிலிருந்து பிரித்து நிறுத்தியவன்,

“இன்னும் பாக்காத பிள்ளைக்காக உனக்குச் செய்யறேங்குறியா!  சரி அப்டியே வச்சுக்க!  உனக்கு என் வார்த்தையில நம்பிக்கையில்லைனா நான் என்ன செய்யட்டும்!, கேட்டவனை

“சரி சரி.  நீ சொல்றதை நான் நம்புறேன்!, என நீண்ட நாளுக்குப்பின் சிரித்தவளை நிறைவான உணர்வோடு அணைத்துக் கொண்டான்.

வாரமொருமுறை சென்னை சென்று வருவதாக தனக்குள் திட்டமிட்டிருந்தவன், திலாவிடம் தூத்துக்குடி செல்வதாகக் கூறி சென்னைக்கு கிளம்பிச் சென்றான். ஒரே நாளில் சென்னையில் உள்ள அலுவலக வேலைகளை முடித்துக் கொண்டு, மறுநாளே செங்கோட்டைக்குத் திரும்பியிருந்தான்.

ஆச்சர்யமாக தன்னை நோக்கியவளை, “என்னடீ இந்தப் பார்வை பாக்கறே?  எனக்கே ஒரு மாதிரியா இருக்கு!, உல்லாசமாக வினவியவனை

“எம்புருசனை நான் எப்டி வேணா பாப்பேன்.  அதுக்கு யாருக்கும் விளக்கம் சொல்லணும்னு அவசியமில்லை!, என்றவளை

“நல்லா தேறிட்ட.. இப்படியே இரு!, என வாழ்த்தினான் விஷ்வா.

திலாவின் வீட்டின் பெயரில் இருந்த கடனைப் பற்றி என்ன ஏது என்று திலாவிடம் விசாரிக்க முதலில் மறுத்துவிட்டாள்.

அப்டியெல்லாம் கடன் வாங்கலையே, என மறுத்தவளிடம், “அப்ப எதுக்கு சண்முகத்துக்கு மாசமானதும் பணம் அனுப்பற?, என விஷ்வா விசயத்திற்கு வர

‘இது எப்டி இவனுக்கு தெரிஞ்சது?, என யோசித்ததை முகமே மாறி காட்டிக் கொடுத்திருந்தது.

“அப்ப எதுக்கு பணம் அனுப்பற?, யூகமாகவே விடாமல் கேட்டான் விஷ்வா.

பதில் கூறாமல் யோசனையில் கணவனையே தர்மசங்கடமாகப் பார்த்திருந்தாள் திலா.

விசயத்தை திலா கூறும்வரை அமைதியாகக் கேட்டுக் கொண்டவன், ‘ஃபுல் பேமண்ட் பண்ணிருவோம்.  எதுக்கு மாசமாசம் அமௌண்ட் பே பண்ணிட்டு?, விஷ்வா

அதை தானே கட்டிக் கொள்வதாகக் கூறியவளிடம், “அப்ப நான் உனக்கு யாரோவா?, என்ற விஷ்வாவின் கேள்வியில்

“அப்டியில்ல…!, என்றிழுத்தவளை

“வேற எப்டி?, என பதில் கூறாது விடமாட்டேன் என நிறுத்தியிருந்தான்.

“உங்களுக்கு எதுக்கு சிரமம்னுதான் வேணானு சொன்னேன். மாசமானதும் என் அக்கெளண்ட்ல வர பணம் சும்மாதான இருக்கு.  அதை சேத்து வச்சு என்ன செய்யப்போறேன்.  அதான் நானே கட்டிக்கலாம்னு, என இழுத்தவளிடம்

“அதுக்காக உன் செலவைக் குறைச்சுட்டு, அதை எதுக்கு அனுப்பணும்.  இதை எங்கிட்ட மறைச்சதுபோல இன்னும் என்னலாம் சொல்லாம மறைச்சு இருக்க?, என விஷ்வா திலாவிடம் கேட்க

“அப்டி எதையும் மறைக்கல விச்சு!, என்று பெண் கூறினாலும், கணவனது அரவணைப்பு, அன்பு அனைத்தையும் உண்மை என மனம் உணர்ந்தும், அவன் தன்னைவிட்டு பழையபடி மோகத்தில் வேறு  பெண்ணை நாடிச்  சென்றுவிடுவானோ என்கிற பயம் மட்டும் திலாவிற்கு இருக்கவே செய்தது.

‘அதைப் பத்தி எப்டி கேக்க? என மனம் தயங்கினாலும் அதற்குமேல் அவனிடம் வார்த்தை வளர்த்து, பிரச்சனை வேண்டாம் என நினைத்தவள், “வீட்டு பேருல கடன் வாங்கினது எப்படி உங்களுக்குத் தெரியும்?  சண்முகம் அண்ணே உங்கட்ட பணம் வந்து கேட்டாரா?, எனக் அசாதாரணமான தொனியில் கேட்க, சற்றே நிதானித்த விஷ்வா திலாவிடம் என்ன பதில் கூறினான்.

 

அடுத்த அத்தியாயத்தில்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!