இதய ♥ வேட்கை 23 (ஈற்றியல் பதிவு)

“ம்ஹ்ம்..”, என தலையை மேலும் கீழுமாக அசைத்து ஆமோத்தவள், கணவனின் நிலையைப் பார்த்து தயங்கியவளாக,  “இருக்கு!  ஆனா அதை இன்னொரு நாள் கேட்டுக்கறேன்!”, என்றாள்.

திலாவிடமிருந்த இலேசான பதற்றத்தைக் கண்டு, “இன்னொரு நாள் எதுக்கு!  இப்பவே கேளு!”, மனதின் ஒரு மூலையில் அபாயமணியின் ஓசை ஒலித்தாலும், நாவில் அமர்ந்திருந்த சனியின் தூண்டுதலும், ‘அப்டி என்னத்த பெருசா கேட்டுறப்போறா!’, என்கிற அசட்டுத் தைரியமும் விஷ்வாவை அவ்வாறு பேசச் செய்திருந்தது.

கணவனது பேச்சு திலாவை ஊக்கப்படுத்த, “கேக்கத்தான் பயமா இருக்கு!”, என திலா தான் கேட்க விரும்பிய விசயத்தை எண்ணித் தயங்கிய இதயத்தோடு இழுத்தவளின் பேச்சைக் கேட்டவனுக்கும், திலாவின் தொனியில் ஏதோ நெஞ்சம் கனப்பது போன்ற உணர்வு.

ஆனாலும் தன்னைத் தேற்றியவனாக, “ஜோக் பண்ணாதடீ! உனக்கு எங்கிட்ட பயமா? நம்புற மாதிரிச் சொல்லுஉஉஉ…”, என சிரித்தபடியே கேட்டவனின் உள்ளமோ, ‘அப்டி என்னத்தைக் கேக்கப்போறானு தெரியலையே? நம்மை அடுத்த ரவுண்டு எத்தனை சுத்துல விடப்போறாளோ  தெரியலையே!’, என்கிற எண்ணமும் வலுக்க, இனம்புரியாத தவிப்பு நிலையிலேயே விஷ்வாவின் மனமும் இருந்தது.

கணவனின் வார்த்தையில் துணிந்தாலும், கேட்க விரும்பியதை கேக்கலாமா எனத் தயங்கி சற்று நேரம் தாமதித்தவள், மடைதிறந்த வெள்ளம்போல, திருமணத்திற்கு முன்பு இருந்த பெண்கள் சகவாசத்தை முற்றிலுமாக நிறுத்திவிட்டாயா?  அல்லது இன்னும் அவ்வப்போது தொடர்கிறாயா? என இலைமறை காயாக கடலளவு வருத்தம் தோய்ந்த குரலில் விஷ்வாவிடம் கேட்டுவிட்டாள்.

கேட்பதற்கு ஆரம்பித்தபோது இருந்த தயக்கம், திலா துவங்கியதும் போயிருந்தது.

திலாவிற்கு மனதில் வைத்திருந்த பாரத்தை இறக்கிவிட்டதில் பரம திருப்தி என்பதைவிட நிம்மதி.

எதிர்பாரா மனைவியின் கேள்வியில், மனைவி என்ன கேட்க வருகிறாள் என்பது புரிந்ததும், ‘என்ன பதில் கூற?’, என்பது புரியாதவனாக திருதிருத்து விழித்தவன், இரு கைகளாலும் தலையைக் குனிந்த நிலையில் தாங்கிப் பிடித்தவாறு அமர்ந்துவிட்டான் விஷ்வா.

“தப்பா எதுவும் கேட்டுட்டேனா?”, என கணவனின் செயலைக் கண்டு மெதுவான குரலில் திலா வினவ

மறுத்து தலையை அசைத்தவாறே சற்று நேரத்திற்குப் பிறகு நிமிர்ந்தவனின் கண்கள் சிவந்திருந்தது.

‘அழுதானா?  இல்லை எதனால் இவ்வளவு சிவப்பா… கண்ணு ரெண்டும் இருக்கு!’, என திலாவின் மனதிற்குள் ஓட, அதற்கு சரியான விடை தெரியாமல், விஷ்வாவின் உள்ளத்து குமுறல் புரியாதவளாக, சற்றே அருகில் வந்து கணவனின் தோள் தொட்டு அமர்ந்தாள்.

“என்னங்க…”, என விஷ்வாவின் அருகே சென்று அழைக்க

“ம்ஹ்ம்…”, என பெருமூச்சொன்றை இழுத்து விட்டவன்

“அப்ப கண்ணன் சொன்னதை நம்பியிருக்கதான?”, என அதே தொனியில் மனைவியிடம் மெதுவாக வினவினான் விஷ்வா.

உண்மை அதுவானாலும், இப்போது ஆம் என்று ஒத்துக் கொண்டால், கணவனின் மனம் இன்னும் வருந்துமோ என யோசித்தவள், “ச்சே.ச்சே… அப்டியெல்லாம் இல்லைங்க! அதனால கேக்கலை”, என தடுமாற்றத்தோடு பேச

“வேற எப்டி கேக்கற?”, என அந்நேரத்திலும் அதே தொனியில் மனைவியிடம் கேட்டு சிரிக்க முயன்று தோற்றான் விஷ்வா.

கண்காணிக்க ஆள் இல்லாதபோது காக்கப்படும் கண்ணியம்தான் புனிதமானது என்பது அறியாதவனல்ல விஷ்வா.

இருந்தும் என்ன செய்ய முடியும்?

கண்ணியம் தவறி நடந்த காலம் இல்லையென்று வாதிட முடியுமா தன்னால், என விஷ்வாவின் மனம் வாதிட்டது.

ஒரு சமயம் வழிதவறி நடந்து கொண்டதால், தான் என்னதான் தற்போதைய உண்மை நிலையைச் சொன்னாலும் உலகம் ஏற்குமா? இல்லை நம்ப முயலுமா? என்கின்ற தயக்கமும் வந்திருந்தது.

அதைத்தானே இன்று தன்னவளும் பதைபதைப்போடு தன்னிடம் கேட்கிறாள்.  என்ன சொல்ல?  புரியாமல் சற்று தடுமாறியவன் பேசாது நிதானித்தான்.

“நான் இப்டிக் கேட்டது..”, என பேசத் துவங்கியவளை இடைமறித்தவன்,

“உம்மனசுக்குள்ள என்னை, என்னோட பாஸ்ட்டை நினைச்சு நம்பிக்கையில்லாம தவிக்கற!  அதான் இந்தக் கேள்வி!  என்னைப் பத்தி இன்னும் தெரிஞ்சிக்காததாலதான் உனக்கு இப்டியொரு அவநம்பிக்கை!”, என்றவன்

“எம்மேல நம்பிக்கை வர அளவுக்கு உன்னை நல்லா வச்சுக்கலையேங்கற வருத்தந்தான் எனக்கு!”, என்றவன் எழுந்து பாத்ரூமிற்குள் சென்றான்.

இருபது நிமிடங்களுக்குப் பிறகே, ஒருவாராக தன்னை ஆசுவாசப்படுத்திக் கொண்டு வெளியில் வந்தான்.

சற்றே தெளிந்து காணப்பட்டான்.

கணவனின் வருகையை நோக்கி, ‘என்னத்த சொல்லி சமாளிக்கலாம்னு பாத்ரூமுக்குள்ள உக்காந்து யோசிக்கிறியா விச்சு! இல்லை என்ன சொன்னா இவ நம்மளை நம்புவானு அதுக்கு பிரிபேராகுறியா!’, என்ற எண்ணத்தோடு, அமர்ந்திருந்த இடத்தைவிட்டு அசையாது அதேநிலையில் கணவன் வரும்வரை அமர்ந்திருந்தாள் திலா.

திலா படுக்கையில் அமர்ந்தபடியே கணவனை நோக்க, திலாவை நோக்கி அருகில் வந்தவன் படுக்கையில் சென்று படுக்க, ‘கடவுளே, எனக்கென்னனு வந்து படுக்கறான்.  பாவி.  என்ன நினைச்சிட்டு இருக்கான்?’, என மனம் அடித்துக் கொண்டாலும், கணவனின் செயலைக் கண்கொட்டாமல் பார்த்திருந்தாள்.

“உம்மடியில தலை வச்சிக்கவா!’, என பெண்ணிடம் அனுமதி கேட்க, பெண்ணிற்கும் ஒன்றும் புரியாதபோதும், விஷ்வாவின் நிலையைக் கண்டு மறுக்கத் தோன்றவில்லை.  அதனால் தலையை அசைத்து ஆமோதித்து, ‘என்னதாண்டா உனக்கு இப்ப பிரச்சனை!’ என பார்த்திருந்தாள்.

விஷ்வாவிற்கோ தான் கூறப்போகும் விசயம் இன்னும் எத்தகைய பிரளயத்தை உண்டு செய்யுமோ என்கிற தயக்கத்தோடு, தான் எதை, எப்படிக் கூறினால் பெண் தன்னை உணர்ந்து, தன்மீது நம்பிக்கை கொள்வாள் என்கிற வாதனை.

விஷ்வாவிற்கு பேசத் தைரியம் வேண்டியிருந்தது.  அதோடு திலாவின் தவிர்ப்பையோ, தவிப்பையோ எதிர்கொள்ளும் தைரியமின்றியிருந்தான்.

வாகாக பெண்ணது மடியில் தலைவைத்துப் படுத்துக் கொண்டு மனைவியின் இடையோடு கைகளால் அணைக்க, தைரியம் வந்தாற்போன்றதொரு மாயை விஷ்வாவிற்குள்.

கணவனின் தொடுகையில் எழுந்த உணர்வை சட்டைசெய்யாமல், “என்ன விச்சு?”, என வினவ “ம்… என்ன கேட்ட?”, என விஷ்வா பதில் வினா வினவ, ‘நாங்கேட்டதுக்கு அப்போ பதிலில்லையா?  எதுவும் காதுல விழாத மாதிரி இது என்ன கேள்வி’, என கணவனது செயலையே கவனித்திருந்தாள்.

திலா எதையும் கூறாது நேரத்தைக் கடத்தவே, பெண் இனி இதுபற்றித் திரும்பக் கேட்கமாட்டாள் என்பதும் விஷ்வாவிற்குப் புரிந்திட, “எனக்கு விவரம் தெரிய ஆரம்பிச்ச கொஞ்ச நாள்லயே அம்மா இல்லை.  அதுக்குப்பின்னயும் அப்பா என்னை ரொம்ப அரவணைச்சதில்லை”

‘நான் என்ன கேட்டேன்?  இப்ப இவன் என்ன சொல்ல வரான்’, என குழப்பத்தோடு கணவனது பேச்சைக் கேட்டாள்.

“…தன்னந் தனிமையான தனி உலகத்தில நாம் மட்டும் வேலையாளுங்க பராமரிப்பில வளந்தேன்”, என்றவனின் குரலில் இருந்த கரகரப்பு பெண்ணை வதைத்தது. ஆனாலும் அமைதியாக கணவனின் தலைமுடிக்குள் கைவிரலால் வருடியவாறு, மற்றொரு கையால் கணவனது தோளின் மீது கைவைத்தபடியே விஷ்வா கூறுவதைக் கேட்க தயாராகியிருந்தாள்.

“…எதுவும் கேக்கணுங்கற அவசியமில்லாதபடி எல்லாமே கேக்குமுன்ன கிடைச்சது”, இடைவெளிவிட்டவன் “..அன்பையும், அரவணைப்பையும் தவிர… எல்லாமே கிடைச்சது. புரியாத வயசில தவறா எதாவது பண்ணிட்டா நாகம்மாதான் ரொம்ப ரேரா என்னைக் கண்டிப்பாங்க.  அதுவும் ரொம்ப மைல்ட்டா, யாரும் இல்லாதப்போ, தனியா என்னோட ரூமுல வந்து கூப்பிட்டு கண்டிச்சுச் சொல்லுவாங்க.  அதுக்கே நான் ரொம்ப பெர்ஃபெக்டா என்னை வச்சுக்க நினைப்பேன்.  என்னை யாரும் எதுவும் குறை சொல்லிட்டா அது என்னால ஈசியா எடுத்துக்க முடியாது. சிறு வயசில இருந்தே அப்டியே வளந்துட்டேன். படிப்பானாலும் சரி, மற்ற விசயங்கள்ளயும் என்னால என் அறிவுக்கு எட்டின வகையில நானே என்னை பெர்ஃபெக்ட்னு ஃபீல் பண்ற அளவுக்கு மாத்திகிட்டேன்.  அதுல எனக்கு ஒரு சேடிஸ்ஃபேக்சன்”, என்றவன்

நிமிர்ந்து திலாவை ஒரு பார்வை பார்த்தான்.  அதில் என்ன கண்டானோ?  நேரடியாக விசயத்திற்கு வந்திருந்தான்.

“வெளிய யாரு வீட்டுக்கும் போகமாட்டேன். ஃபிரண்ட்ஸ் எங்க வீட்டுக்கு வருவாங்க. சிலநேரம் ஃபிரண்ட்ஸ்கூட செங்கோட்டை போவேன்.  அங்க குற்றாலம் போயி ஜாலியா என்ஜாய் பண்ணுவோம். அடிக்கடி அங்க வீக்கெண்ட்லகூட போனதுண்டு.

அப்ப நான் இலெவன்த்துன்னு நினைக்கிறேன். ஃபைனல் எக்சாம்கு என்னோட ரூம்ல உக்காந்து படிக்கற மாதிரி என்னை நானே ஏமாத்திட்டு இருந்தேன்”, என விஷ்வா கூறியபோது சிரித்தாற்போன்று தோன்றியது திலாவிற்கு.

திலா கூர்ந்து கவனிப்பதைக் கண்டு கொள்ளாமலேயே தன்னைப் பற்றி கூறிக்கொண்டிருந்தான் விஷ்வா. “…லேண்ட் லைனுக்கு வந்த போன்காலை வீட்ல யாரும் எடுக்காததால நான் அட்டெண்ட் பண்ணேன்.  அது ஒரு ராங் கால்.  பேசி விசயத்தைச் சொல்லி உடனே வச்சிட்டேன்”, அதன்பின் படுத்த வண்ணம் பேச மனம் ஒவ்வாத நிலையில் எழுந்து அமர்ந்தவன், எழுந்து அறையில் வைக்கப்பட்டிருந்த நீரை எடுத்துப் பருகினான். 

சற்று தயக்கமும், தான் கூறும் விசயத்தை திலா எப்படி எடுத்துக் கொள்வாள் என்கிற பதற்றமும் சேர்ந்து கொள்ள, நீரைப் பருகி சற்றுநேரம் தன்னை நிதானப்படுத்தினான்.

“…பட் இவினிங் டைம் அதே நேரத்தில அப்பப்போ அந்த கால் வர ஆரம்பிச்சது.  என்னைப் பத்தி ஆரம்பத்திலே விசாரிச்சது.  நானும் யாரு, என்னனு எதையும் மறைக்காம ஒரு ஃபுளோல கேக்கக் கேக்க எல்லாத்தையும் சொல்லிட்டேன்.  அடுத்து வந்த நாள்கள்ல அது அப்டியே தொடர்ந்தது.  எங்க அப்பா, அம்மா பத்தினு எதையும் மறைக்கலை!”, என்றபடியே பழைய நினைவுகளில் ஒன்றியிருந்தவனிடம்

“யாரது?”, திலா

“ம்… ஒரு லேடிதான் பேசினாங்க!”, என நிறுத்தி திலாவின் முகத்தைப் பார்த்தவன்

ஆர்வத்தோடு கேட்டிருந்தவளிடம் ‘எப்படி இதுக்குமேல சொல்ல’ எனத் தயங்க,

“ம்.. அப்புறம்”, என அடுத்து சொல்லு என பெண்ணது ஆர்வம் குரலில் வெளிப்பட்டது.

ஆனால் விஷ்வாவின் குரலின் தொனி குறைந்தபடியே வந்தது.

“அதுக்கப்புறம் அடிக்கடி பேச ஆரம்பிச்சாங்க.  போன் பண்ணி, என்னை சாப்பிட்டியா? நல்லா படிக்கிறியா? அப்டினு எம்மேல ரொம்ப அக்கறை எடுத்துக்க ஆரம்பிச்சாங்க.  அனாமத்த யாருமில்லாத தனிமையான என்னோட உலகத்தில அவங்க காட்டின அந்த அக்கறை என்னை ரொம்ப ஈர்த்திச்சு.  அப்டியே போயிட்டுருந்தப்போ அவங்க வீட்டுக்கு என்னை வரச் சொல்லி ரொம்ப வற்புறுத்த ஆரம்பிச்சாங்க.  சரினு சொல்லுவேன்.  பட் ஏனோ போகனும்னு தோணாது எனக்கு. நானும் ஒன்னரை வருசத்துக்குமேல வரேன் ஆண்ட்டினு சொல்லியே நாளக் கடத்தினேன்.

வருசமே போயிருச்சு!

காலேஜ் போனபின்ன பெரியவனா வளந்திட்ட ஃபீல்ல வீட்ல தங்கறது குறைய ஆரம்பிச்சிருச்சு! அந்தக்   காலகட்டத்திலயும், அவங்க நம்ம வீட்டுக்கு போன் பண்ணி பேசறத நிப்பாட்டலை!

பல நேரங்கள்ல நான் இல்லைனதும் வந்தவுடனே பேசச் சொல்லுவாங்க!  நானும் வீட்டுக்கு வந்தப்புறம் கால் பண்ணி பேசுவேன்.  அப்டியே போச்சு.  ஒரு சமயம் ரொம்ப வற்புறுத்திக் கூப்பிட்டாங்க!

ரொம்ப நாளா கூப்பிடறாங்களேனு நானும் ஒருவழியா நேருல போயிட்டேன்.  நல்ல வரவேற்பு.  அவங்க வீட்லயும் என்னையவிட சின்ன பசங்க இருந்தாங்க!  அவங்க எல்லாரும் எங்கூட நல்லா பேசி, பழகுனதுல எனக்கும் ஒரு சந்தோசம்.  அதற்குபின்ன நேரங்கெடச்சப்போ, அவங்க வீட்டுப் பக்கம் வேற வேலையா போனாலும், கூப்டாதபோதும் அங்கே போயிட்டு வருவேன்.  கொஞ்ச நேரம் பேசிட்டு இருப்பேன். அப்புறம் கிளம்பி வந்திருவேன்.  அவங்க வீட்டுக்கு போக வர ஆரம்பிச்ச பின்ன கொஞ்சம் ஹாப்பியா ஃபீல் பண்ணேன்! மொபைல் நம்பர் கேட்டப்போ அதையும் சொல்லிட்டேன்.  அவங்க நினைச்சப்போ கால் பண்ணி அவங்க பசங்களை எங்காது இருந்து கூப்பிட முடியுமானு கேப்பாங்க.  முடிஞ்சா கொண்டு போயி விடுவேன். சிலநேரங்கள்ல முடியாதுன்னுருவேன்.  அவங்களும் சரினு சொல்லி வேற ஏற்பாடு பண்ணிக்குவாங்க.  முன்னைவிட அவங்க வீட்டோட நல்ல க்ளோஸாகிட்டேன்”, என நிறுத்தியவன் திலாவை நோக்கி

“எதுக்கு இதையெல்லாம் சொல்றேன்னு யோசிக்காத,  நீ கேட்டதுக்கு இது நேரடியான பதில் கிடையாது.  ஆனா அப்டி நான் என்னோட பதிலை உண்மையாச் சொன்னாலும் என்னை நீ நம்பப் போறதில்லை”, என்றவனின் குரலில் தொனித்த வலியை பெண்ணும் கண்டு கொண்டாள். 

“….அதனாலதான் இவ்வளவு டீட்டைலா சொல்றேன்”, என்றவன்

“ஃபர்ஸ்ட் இயர், லாஸ்ட் செமஸ்டர் சமயம் அது.  முன்ன மாதிரி அவங்க வீட்டுக்கு போகலை.  அந்தப் பக்கம் போக முடியாத அளவு நிறைய ஃப்ரண்ட்ஸ். அவங்களோட தம்மு, தண்ணி, பார்ட்டி, மூவினு ஒவ்வொன்னா பழகி அந்த வயசுக்கான அர்ப்பணிப்போட வாழ ஆரம்பிச்ச நேரம் அது!”, என நிறுத்தி மூச்சை இழுத்து விட்டவன் திலாவின் முகத்தில் தெரிந்த அசூயையான தொனியைக் கண்டு

“ஃபிரண்ட்ஸ் இன்ரடியூஸ் பண்ணா அதை மறுக்கத் தோணாத வயசு.  நல்லது கெட்டது புரிஞ்சு அதை அவாய்ட் பண்ணா நம்மை இளக்காரமா பாப்பானுங்க!  அப்டி நம்மை யாரும் இளக்காரமா பாத்திரக் கூடாதுங்கறதுக்காகவே எதையும் விட்டு வைக்கலை!  கஞ்சா… இப்டியெல்லாம் கூட நம்மை அப்ரோச் பண்ணுவானுங்க!  பணம் இருக்கு இவங்கைல அப்டினு தெரிஞ்சதால… நிறைய பிரெயின் வாஷ் பண்ணுவானுங்க!  வெளிய தப்பு பண்ணாலும் நம்ம வீட்டைப் பொறுத்த வரை நாகம்மாவ ஏமாத்த முடியாது.  அவங்க யாருகிட்டயும் இதைப்பத்தி சொல்ல மாட்டாங்கனாலும், அவங்களுக்கு என்னைப் பத்தி இந்த மாதிரி விசயம் தெரிய வந்திராத வகையில வெளிய ஸ்மோக்கிங், எப்பவாவது டிரிங்ஸ்னு மட்டும் இருந்தேன்”, என இடைவிடாது பேசியதால் சற்று இடைவெளிவிட்டாவனோ, அடுத்து என்ன கூறலாம் என யோசித்தபடியே மனைவியைக் கவனிக்கவில்லை.

“அப்ப, ரொம்ப நாளாச்சு வீட்டுக்கு வந்து, அதனால ஒரு எட்டு வந்திட்டு போ விஷ்வானு என்னை அவங்க வற்புறுத்தி கூப்பிட்டாங்க.  நானும் அன்னிக்கு எந்த கமிட்மெண்டும் ஃபிரண்ட்ஸ்கூட வெளிய இல்லைனதும் உடனே கிளம்பி போயிட்டேன்”, என்று நிறுத்திவிட்டு

“பசங்க எல்லாரும் இந்த விசயத்தில வீக்குனாலும், தப்பு பண்ற தைரியம் அவ்வளவு ஈஸியா யாருக்கும் வராது.  அதேமாதிரிதான் நானும் இருந்தேன்.  இன்னொன்னு அவங்க வீட்டுக்கு போயி வந்திருந்தாலும், ரொம்ப கண்ணியமாதான் அவங்ககிட்ட மரியாதையோட நடந்திட்டேன்.  வேற எந்த தப்பான எண்ணத்தோடயும் நான் அவங்க வீட்டுக்கு அதுவரை போனதில்லை!”, என திலாவிற்கு விளக்கம் கூறியவன், தான் கூற வந்ததைத் தொடர்ந்தான்.

விஷ்வாவின் பேச்சைக் கேட்டு பெண்ணுக்கு நெஞ்சை அடைத்தாற்போன்ற உணர்வு.  ஆனாலும், தன்னைப் பொறுத்துக் கொண்டு கணவனது பேச்சைக் கேட்க முயன்றாள்.

“அப்டிப்போனப்ப வீட்ல பசங்க யாரும் இல்லை.  அந்த நேரம்…” என அன்றைய நிகழ்வைப் பற்றிக் கூறத் தயங்கியவன், “அவங்க தப்பான இன்டென்சனோட என்னை அணுக நெனைச்சப்போ, எதிர்பார்க்காததால தயக்கத்தோட, தடுமாறினாலும், என்னால தடுக்கவோ…, மறுக்கவோ…, தவிர்க்கவோ… முடியலை!  தோணலை! என் வயசும் அப்டி!”, என அடிப்பட்ட உணர்வோடு கீழே குனிந்தவாறு கூறியவன்,

“நான் அப்டி நடந்திட்டதை நியாயப்படுத்தல!  ஆனாலும் அப்டியொரு சந்தர்ப்பம் எனக்கு வராம இருந்திருந்தா நிச்சயமா வுமனைசர் மாதிரியான ஒரு பிம்பம் எனக்கு வந்திருக்காது. அந்த ஏஜ்ல அப்டி ஒரு எண்ணத்தோட யாரையும் அதுவரை நான் பார்த்ததில்லை. அதுக்காக புத்தர் மாதிரி இருந்தேன்னு பொய்யெல்லாம் சொல்ல மாட்டேன்.  புரியாத, தெரிஞ்சிக்க ஆசைப்பட்ட ஒரு நிலைதான்னாலும், அது இந்தமாதிரியான முறையற்ற எதிர்பார்ப்பா எனக்குள்ள இருந்ததில்லை”, என்றவன் ஐந்து நிமிடத்திற்குமேல் எதுவும் பேசாது அமைதி காத்தான்.  பெண்ணுக்கோ உடலெங்கும் தீப்பட்டாற்போன்ற உணர்வு.

“பட்.. மனசுல ஒரு தப்பு பண்ண ஃபீல் அன்னைக்கு என்னைத் தூங்க விடலை! ஒரு வாரம் வீட்டை விட்டு வெளிய எங்கயும் போகல!  குற்றவுணர்ச்சி!  ஆனாலும் அதை என் தவறா, இல்லை அவங்க தவறானு ஆராய்ச்சி பண்ணலை. நடந்தது தப்பு.  அவ்வளவுதான்!”, மீண்டும் நீரை எடுத்துப் பருகியவன்

“ஆனாலும், அந்த வயசுல தேவையில்லாததை, வயசு தேடுறதை விசயம் என்னனு உடம்பும், மனசும் தெரிஞ்சிட்டதால, அந்த ருசி என்னனு தெரிஞ்ச உடம்பும் மனசும் சில நாளுக்குபின்ன அது வேணும்னு கேக்க ஆரம்பிச்சிருச்சு!

அப்போ என்னால எதுலயும் கான்சன்ரேட் பண்ண முடியலை!

போதை மாதிரி அது வேணும்னு உடம்பு கேக்க, முன்னைவிட ரொம்ப ட்ரிங்க் பண்ணேன்!  ஸ்மோக் பண்ணேன்!  பட் முடியலை! ரொம்ப கஷ்டப்பட்டேன்!

நாகம்மாகூட கூப்பிட்டு வார்ன் பண்ணாங்க.  அந்தளவு மோசாமா இருந்தேன் அப்போ.

டைவர்ட் பண்ண நானும் என்னென்வோ செய்து பாத்தேன்.  தப்பா வேற எதுவும் செய்து அசிங்கப்படதுக்குள்ள எதாவது செய்தே ஆகவேண்டிய நிலை!

வேற எதையும் காம்பரமைஸ் பண்ணிக்க முடியாத அளவுக்கு அந்த விசயம் என்னை பாதிச்சிருச்சு!

அவங்க மறுபடியும் கூப்டு நார்மலா பேசினப்போ… அப்டி ஒரு விசயத்தை நினைச்சு ஃபீல் பண்ண மாதிரியே தெரியலை.  எப்பவும் போல பேசினாங்க.  பட் எனக்கு அவங்ககூட பேசப்பிடிக்கலை. அடுத்து அவங்க வீட்டுக்கும் போகப் பிடிக்கலை.  அவங்களை அதுக்குப்பின்ன ஃபேஸ் பண்ணவும் எனக்கு இஷ்டமில்லை.  அதுக்குமேல அவங்க வீட்டுக்கு போறது சரினு எம்மனசுக்குத் தோணவும் இல்லை.  அப்ப நானே அவங்களை அவாய்ட் பண்ண ஆரம்பிச்சேன்”, என நிமிர்ந்தவனிடம்

“அவங்க ஹண்பெண்ட்….”, என திலா இழுக்க

“கல்ஃப்லதான் இருந்தார்”

“ஓஹ்…”

“நடந்த விசயத்தையும், அதுக்கு காரணமானவங்களையும் ஒதுக்க முடிஞ்ச என்னால, அந்த எக்ஸ்பீரியன்ஸ்ல கிடைச்ச ஃபீலை வேணானு ஒதுக்கவோ, மறக்கவோ முடியலை!”, என்றவன்

“என்னால இயல்பா இயங்க முடியும்னு தோணலை!”, எனத் தலையை தனதிரு கைகளால் கோதிக் கொண்டவன், “கைநிறைய பணம் இருந்தது.  என்ன ஏதுன்னோ, எதுக்கு இவ்ளோ பணமின்னோ, யாரும் கேக்கவும் இல்லை. காசு பணம் இருந்தாலும் அதை அந்த விசயத்துக்குனு சிலர் செலவளிக்க யோசிப்பாங்க!  பொண்ணுங்க வாலண்டியரா வந்தா ஓகேங்கற மாதிரி சிலரோட எதிர்பார்ப்பு இருக்கும்.  சிலர் காதலிக்கிறேன், கல்யாணம் பண்ணிக்கறேன்னு ஏமாத்துவாங்க இந்த விசயத்துக்காக.  எனக்கு அதில உடன்பாடு இல்லை.  அப்டி யாரும் என்னை அட்ராக்ட் பண்ணவும் இல்லை.  அதுவரை   சும்மா பாக்கெட்லயும், வாலட்லயும் இருந்த பணத்துக்கு அப்புறந்தான் வேலை வந்தது”, எனத் தயங்கி நிறுத்தியவன்

“அதுக்கப்புறம்…” என நிறுத்தியவன்

“அப்டியே ஆரம்பிச்சது.  ரொம்பத் தயக்கமா ஆரம்பத்தில இருந்தது.  சோ ரொம்ப ரேரானு அப்டியே லைஃப் போச்சு.  அடுத்து அப்ராட் போயிட்டு வந்தபின்ன கொஞ்ச நஞ்சம் இருந்த அந்தத் தயக்கமும் போயிருச்சு!  போகப்போக அது பெரிய விசயமாவோ, தப்பாவோ எனக்குத் தோணலை!”, என விளம்பியவனிடம்

“அப்ப தப்பா தோணாததால, இன்னிக்கு வரை அப்டியே போகுது அப்டித்தானே!”, என்று நிறுத்தி கணவனைப் பார்த்தவளை, “ஐயோ நான் அப்போ சொன்னேன்டி!”, என விஷ்வா பதற

“நான் இப்ப என்ன நிலைன்னுதான கேட்டேன்!”, என திலா முறுக்க

“கொஞ்சம் பொறு… முழுசா சொல்லி முடிச்சிக்கறேன்!”

“ம்.. இன்னும் முடியலையா? சரி.. இது விசயம் யாருக்கும் தெரியலையா?”

பெண்ணின் பேச்சைக் கேட்டவன் அடுத்தகட்ட நிகழ்வுகளைக் கூறத் துவங்கினான்.

“சிலருக்கு தெரிஞ்சாலும் யாரும் என்னை கூப்டு கண்டிக்கல! கண்டுக்கவுமில்லை!”

“கண்டுக்கவே இல்லையா!”, என ஆச்சர்யத்தோடு வினவினாள்.

“ம்ஹ்ம்… அந்த அளவுக்கு யாரு பின்னாடியும் மயக்கத்தோட நான் சுத்தல!  அதான் கண்டுக்கலை!”, என பெருமூச்சொன்றை இழுத்துவிட்டவனிடம்

“உங்க அப்பாவுக்கும் தெரியுமா?”, என அந்நேரத்திலும் அதிமுக்கியமான கேள்வியை முன்வைத்தாள் திலா.

“ம்ஹ்ம்… தெரிஞ்சிருக்கும்னுதான் நினைக்கிறேன்!”

“அப்ப கேக்கலையா உங்கட்ட!”

“அதைப்பத்தி எதுவும் எங்கிட்ட கேட்டதில்லை!”, என விஷ்வா பதில் கூற

“என்ன இப்டி சொல்றீங்க?”, கர்ம சிரத்தையோடு விடாமல் கேட்டாள்.

“இந்த மாதிரி விசயம் தெரிஞ்சாலும் வீட்ல பசங்களை கூப்டு கண்டிக்க மாட்டாங்க!”, என தலையைக் குனிந்தவாறே சிரித்தவனிடம், “அப்போ…”, எனத் தொங்கலில் வினாவோடு திலா நிறுத்த, “தெரிஞ்சா உடனே கல்யாணத்துக்கு ஏற்பாடு பண்ணுவாங்க!”, என விரிந்த புன்னகையை மேலும் விஸ்தீரிக்க

“அப்ப உங்களுக்கு கல்யாண ஏற்பாடு ஏன் பண்ணலை?”, அடுத்த வினாவைக் கேட்டாள் திலா.

“ம்ஹ்ம்… ஒரே பொண்ணோட சுத்தியிருந்தா பயந்து பொண்ணு பாத்திருப்பாரு! நாந்தான் ஒவ்வொரு தடவைக்கும் மாத்திட்டே இருந்தேன்ல…! அந்தத் தைரியத்தில கண்டுக்கலபோல!”, என்று அன்றைய நாள்களை நினைத்த விரக்தியிலும், நகைச்சுவைபோல சிரித்தபடியே பதில் கூறினான் விஷ்வா.

“ம்ம்ஹம்.. அப்புறம்”, என அடுத்து கூற வேண்டியதைக் கூறு என திலா விஷ்வாவைத் தூண்ட

“நான் இந்த விசயத்தில அடிக்ட்டா இருக்கல.  ஆனா எப்பத் தோணுதோ அப்ப என் தேவையைத் தீத்துக்க அது தப்பில்லைனு அப்ப அந்த வழியைப் பழகிட்டேன்!”, என்று தோளைக் குலுக்கினான்.

“உங்க வசதி பாத்து யாரும் பொண்ணு தரேனு வரலையா?”, என திலா கேட்க

“அப்பவும் நிறைய சம்பந்தம் வந்தது.  ஆனா இன்னும் வயசு வரலைன்னு தள்ளிப் போட்டாரு எங்கப்பா. பட்  திடீர்னு அவரும் மொத்தமா போயிட்டாரு”, என மேலே கையைத் தூக்கிக் காட்டியவன்

“மேரேஜ் பத்தி யோசிக்கலைன்னாலும், அப்பா போனதும் இனி இதுதான் நம்ம நிலைமைன்னு நானாவே ஒரு முடிவுக்கு வந்திட்ட சமயம் அது!”, என்றவனை திலா பார்த்த பார்வையின் பொருள் புரியாமல் என்ன என புருவத்தை உயர்த்திக் கேட்க

தலையை மறுத்து ஆட்டி ஒன்றுமில்லை என்றாள் திலா.

பெண் பிள்ளை என்றில்லாது, ஆண்பிள்ளைக்கும் பெற்றோர் ஒரு காலகட்டம்வரை அவசியம்தான் போல என மனம் நினைக்க அதை கணவனிடம் கூறவில்லை பெண்.

“ஆனா அது அப்டியில்லைனு, அதுக்கும் ஃபுல்ஸ்டாப் வைக்கிறமாதிரி அதுரிலேட்டடாவே ஹெல்த் இஸ்யூனு படுத்திட்டேன்.  இந்த மாதிரியான காரணத்தால முடியாமப் போனப்போ, ரொம்ப அசிங்கமா ஃபீல் பண்ணேன்.  ரிசல்ட்ல எய்ட்ஸ்னு வந்தா என்னோட நிலைமை என்னனு யோசிச்சுப் பாத்தப்போ என்னால அதை ஈஸியா எடுத்துக்க முடியலை.  இந்த விசயம் வெளிய தெரிஞ்சா பிஸினெஸ் மற்ற என் சர்கிள்ள என்னை எப்டி ஹேண்டில் பண்ணுவாங்கனு யோசிக்கும்போதே ரொம்ப நொந்துட்டேன்.  கேவலம் அப்டிங்கறதைவிட, தப்பானவனா, ஒரு பெண் பித்தனா என்னை யாரும் அடையாளம் காட்டுறது எனக்குப் பிடிக்கலை!  நம்ம டாக்டர் அங்கிள்கிட்டதான் ட்ரீட்மெண்ட் போனேன்.  இனி ஷேஃபா இருனு நிறைய அட்வைஸ்.  இன்னும் நிறைய வழிமுறை சொல்லி, அவார்னஸ் கொடுத்தாரு.  அப்பவே அந்த விசயத்துக்கு எண்ட் கார்டு போட்டாச்சு. ஆனாலும் என்னால அது இல்லாம இருக்க முடியுமானு எம்மேலயே எனக்குச் சந்தேகம்.

அப்பதான் மாலினி ஆண்ட்டி கூப்பிட்டு பேசினாங்க.

ரொம்ப ஷையா ஃபீல் பண்ணேன்.  அவங்கள என் சின்ன வயசில இருந்தே ரொம்ப மரியாதையோட பாத்துட்டு, நான் இந்தமாதிரி ஒரு விசயத்துக்காக ட்ரீன்மெண்ட்கு போனப்போ அவங்களை மீட் பண்ண முதல் நாள் உசிரே போன ஃபீல்.

டாக்டர் இதை அவங்ககிட்ட சொல்லாம எப்டி இருப்பார்.  அதனால அவங்களை ஃபேஸ் பண்ணவே ரொம்பத் தயங்கினேன்.  ஆனா அவங்க என்னை விடலை.  அதுக்கப்புறம் ரொம்ப கேர் எடுத்துட்டாங்க.

நிறைய கவுன்சிலிங்.  அவங்ககிட்ட மட்டுந்தான் என்னோட பாஸ்ட் டீட்டைலா சொன்னேன்.  இப்ப உங்கிட்ட” என்றவன்

“அடிக்கடி என்னை டாக்டர் கிளினிக் வரச்சொல்லி கூப்பிட்டு பேசுவார்.  அப்பதான், மேரேஜ் பத்தி பேச்சு எடுத்தாங்க.

உன்னைப் பாக்கறவரை வாழனும்னு ஆசையில்லை.  ஆனாலும் என்னைப் பத்தி சொன்னா உங்க வீட்டுல அக்சப்ட் பண்ணுவாங்கனும் நம்பிக்கையில்லை.  ஆனாலும் சொன்னோம்.  திருநாவு பண்ண ஏதோ கோல்மால் விசயத்தால நம்ம மேரேஜ் நடந்தது.  எனக்கும் ஒரு வாழ்க்கை அமையும்னு மேரேஜ் நடக்கிற வரை நம்பிக்கையில்லை..

ஆனா உன்னைப் பாத்தவுடனே எனக்குள்ள ஒரு ஆசை.  இதுவரை எப்டியிருந்தாலும் போகட்டும்.  இனி ஒழுங்கா, உனக்கு ஒரு நல்ல ஹஸ்பெண்டா, ஒரு சக்சஸ்ஃபுல் பிசினெஸ்மேனா வாழ்ந்துட்டு போகணும்னு வெறி…  அப்புறம் நடந்தது எல்லாம் உனக்குத் தெரியுமே!

கல்யாணம் ஆகி என்னைப் பிரிஞ்சு நீ போனப்பகூட என்னோட மனசு பழைய விசயத்தைத் தேடிப் போக நினைக்கலை. நீ மட்டுந்தான் அப்ப எம்மனசுல இருந்த!  உன்னைத் தவிர, உன்னை எப்டி எங்கூடவே வச்சிக்கறதுங்கறதைத் தவிர வேற எதுவும் எனக்குத் தோணலை.  அதுதான் உண்மை. என் வாழ்க்கை முழுமைக்கும் நீ என்கூட வேணும்னு மட்டுந்தான் யோசிச்சேன்.

எப்பவும் அப்டியிருக்கணும்ங்கறதுதான் என்னோட ஆசையும்கூட.

இதுல நான் என்னைப் பத்தி எதையும் மறைக்காம சொல்லிட்டேன்.  இதுக்குமேல என்னை நம்பறதும், நம்பாததும் உன்னோட விருப்பம்”, என்றவன்

திலாவிடமிருந்து விலகி, தனியே சென்று படுத்திருந்தான்.

விலகியவனின் வார்த்தை விட்டுச் சென்ற தாக்கம் பெண்ணைத் தாக்கியிருந்தது.

பெண் மீண்டாளா…?  என்ன முடிவெடுத்தாள்?

அடுத்த அத்தியாயத்தில்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!