IV24Final

IV24Final

இதய ♥ வேட்கை 24 (நிறைவு)

 

கணவனது பேச்சைக் கேட்டு நீண்ட நேரம் ஸ்தம்பித்துப்போய் அமர்ந்திருந்தாள் திலா.

விஷ்வா படுத்ததும் உறங்கியிருந்தான்.  கேட்டிருந்தவளுக்கு இதை அறிந்துகொள்ளாமலேயே இருந்திருக்கலாம் என்கிற எண்ணம் வந்தது.

மேலும் விஷ்வா கூறிய நிகழ்வு சார்ந்த கேள்விகள், மனதில் எழுந்து பெண்ணை அமைதியாக இருக்கவிடவில்லை. அதைப்பற்றி கேட்கலாமா, இதைப்பற்றிக் கேட்கலாமா? இல்லை வேண்டாமா என்கிற போராட்டம் திலாவிற்குள்.

இப்படியெல்லாம்கூட நடக்குமா என்கிற அதிர்ச்சி ஆரம்பத்தில் பெண்ணை உறைய வைத்திருந்தது. வாலிப வயதில் இருப்பவன் தவறிழைத்தால், கண்டிக்க வேண்டியவரே தவறாக நடந்து கொண்டால் என்ன மாதிரியான பெண்ணவள் என்று முகமறியாதவளின் மீது கோபமும், அருவெருப்பும் ஒருங்கே வந்திருந்தது.

அதற்காக கணவன் அடுத்து மேற்கொண்ட செயலினையும் நியாயப்படுத்த இயலாத மனம் வெம்பியது.

முக்கியமாக, உடல்நிலை சார்ந்த பாதிப்பு விஷ்வாவிற்கு வந்திருக்கவில்லையென்றால், பழையபடியே இருந்திருப்பானோ என்கிற கேள்வி வேறு மனதைக் குடைந்தது.

அதைவிட கடந்த நான்கு மாதங்களாக தன்னை நெருங்காததே பெரும் சந்தேகத்திற்கு வித்திட்டிருந்தது.

‘அதை எப்டிக் கேட்க’, என மனம் மேலும் தயங்கியது.

விடியலில் அமைதியாக இருந்தவள், இருட்டியதும் திரும்பியவனிடம் தனது மனதில் எழுந்த முதல் கேள்வியைக் கேட்டுவிட்டாள்.

விஷ்வா இதை முற்றிலும் எதிர்பார்க்கவில்லை.

அவனும் பெண்ணின் கேள்வியில் முதலில் தடுமாறினாலும், தன்னை நிதானப்படுத்திக் கொண்டு, “ஹெல்த் இஸ்யூ வரலைன்னா மேரேஜ் பத்தி யோசிச்சிருக்கறதுக்கான வாய்ப்பு ரொம்ப கம்மியாதான் இருந்திருக்கும்”, என உண்மையை படாரென்று போட்டுடைந்திருந்தான்.

கணவனது பதிலைக் கேட்டு முறைத்தபடியே சென்று படுத்தவள், உணவு உண்ண அழைத்தவனை பொருட்படுத்தவே இல்லை.

நீண்ட நேரம் அழைத்து திலாவிடமிருந்து எந்த பதிலும் வராததால், தான் மட்டும் சென்று உண்டான்.

இரண்டு நாள்கள் முகத்தைத் தூக்கி வைத்தபடியே தனித்தீவாகத் திரிந்தாள்.

பழங்கஞ்சி ஆறின கஞ்சியாக மாறியதால், மூன்றாம் நாள் பெண்ணிடம் சிறு இளக்கம்.

“பேசாம அப்பவே உங்கப்பாகிட்ட சொல்லி ஒரு பொண்ணைப் பாத்து கல்யாணம் பண்ணி வைக்க சொல்லியிருக்கலாம் நீ”, என விஷ்வாவிடம் கிண்டலாகக் கூறினாள்.

முதலில் புரியாமல் விழித்தவன், பெண் எதைப்பற்றி கூற வருகிறாள் என்று புரிந்ததும், “எனக்கும் அப்டித்தான் தோணுச்சு!”, என பெண்ணது கிண்டலைப் புரிந்து கொள்ளாமல் சிரிக்க

கணவனது பதிலைக் கேட்டு முறைத்த திலாவைக் கண்டு மேற்கொண்டு பேசுவதைத் தவிர்த்திருந்தான் விஷ்வா.

“அப்புறம் ஏன் கேக்கலை?”

“எப்டி கேக்கனு தெரியலை”, என மிகவும் சீரியசாகப் பதில் கூறியிருந்தான் விஷ்வா.

“தெரிஞ்சிருந்தா கேட்டிருப்ப!”, என இகழ்ச்சியோடு வினவ

“திலா… அது முடிஞ்ச விசயம்.  இன்னும் அதைப்பத்திப் பேசி என்னாகப் போகுது.  இப்ப மாறியிருக்கேன்ல.  அந்த ஏஜ்ல அப்டித்தான் என்னால யோசிக்க முடிஞ்சது.  இப்ப அப்டியில்லை”, என நிதானமாகக் கூற

“எப்டியில்லை?”

“அப்ப வேற எந்த கமிட்மெண்ட்டும் இல்லாத வயசு.  அதனால அப்டியொரு முடிவுனால யாருக்கும் எந்த பாதிப்பும் இல்லைனு அப்டியிருந்திட்டேன்.  அதை என்னிக்குமே சரினு நியாயப்படுத்த நான் நினைக்கல! உன்னை கல்யாணம் பண்றதுக்கு எட்டு மாசத்துக்கு முன்னயே எல்லாத்தையும் மூட்டை கட்டி வீசியாச்சு.  அப்புறம் எதுக்கு இன்னம் அதையே பேசணும்?”

“சரி அதைவிடு.  அப்புறம் ஏன் முன்னமாதிரி நீ இல்லை?”, என்றுவிட்டு நோக்க

“நான் எப்பவும்போலதான் இருக்கேன்”, என்றவனை முறைத்தவாறே அங்கிருந்து அகன்றிருந்தாள் திலா.

உண்மையில் திலா என்ன கேட்க வருகிறாள் என்பது விஷ்வாவிற்கு புரியவில்லை.

முன்பைக் காட்டிலும், பெண்ணை அதிக அக்கறை எடுத்துக் கொண்டு கவனிக்கும் தன்னிடம் இப்படி ஒரு கேள்வியை ஏன் திலா கேட்டாள் என்பதே புரியாமல், அவனாகவே வலிய வந்து பேச்சுக் கொடுத்தாலும் தவிர்த்தவளை, தவிப்போடு கையாண்டான்.

கடந்தகாலம் எத்தனை கறைபடிந்திருந்தாலும், கணவனதுமேல் கொண்ட பற்று அவனையே நாடுவதை திலா வெறுத்தாலும், அவனை வெறுக்க முடியாமல் தவித்தாள்.

ஆனாலும், அடுத்து வந்த நாள்களும் அமைதியோடும், இடைவெளியோடும் நகர்ந்தது.

விஷ்வா வந்து பேசினாலும் பதில் பேசுவதில்லை.  அவனாக வந்து பெண்ணிற்கு எதாவது செய்தாலும் அதை ஏற்றுக் கொள்வதும் இல்லை.

விஷ்வாவிற்கு பெண்ணின் பாராமுகமும், பேசா வார்த்தையும் வதைத்தது.

பத்து நாள்களுக்குப் பிறகான ஒரு நாளில் அறைக்குள் வந்து படுத்தவனின் அருகே நெருங்கிப் படுத்தவள், ஐந்தரை மாத வயிறு இன்னும் வெளியே தெரியாததால், விஷ்வாவின் முதுகோடு அட்டைபோல ஒட்டி, கட்டிக் கொண்டாள்.

‘உனக்கு இந்த வெக்கம், மானம், சூடு, சுரணை இதல்லாம் எதுவுமே கிடையாதா?  உன்னைக் கண்டுக்காதவனைப் போயி கட்டிக்கிட்டுப் படுக்கற’, திலாவின் மனது கேட்க

அதை ஒதுக்கி புறம் தள்ளியவள், இன்று ஒரு முடிவு கண்டாக வேண்டும் என்கிற எண்ணத்தோடு இறங்கிவிட்டாள்.

கட்டிக் கொண்டவளின் ஸ்பரிசத்தை உணர்ந்தவன், பெண்ணது செயலில் மகிழ்ந்தாலும், அடுத்து தனது நிலையை உணர்ந்த எச்சரிப்போடு, “திலா… நான் ரொம்ப நல்ல பையன் கிடையாது.  நீ அப்டியே அந்த ஓரமா படுத்துப்பியாம்.  நான் சமத்தா இப்டியே படுத்துப்பேனாம்!”, என்க

“ஏன் அப்டி?  எனக்கு உன்னை ஹக் பண்ணிட்டு தூங்கணும்போல ஆசையா இருக்குடா!”, என திலா அசையாது அதேநிலையில் படுக்க முயல

“ஏய்… சொன்னா புரிஞ்சுக்கோடீ…!”, என மன்றாடினான் விஷ்வா.

புரியாதவளோ, “அப்போ நீ வேற ஏதோ புது பிளான் ரெடி பண்ணிட்ட அப்டித்தானே”, என்று கணவனைச் சீண்ட

“எதுக்கு எதைடீ கொண்டு வர்ற”, என்று கோபமாகக் கத்தியவாறு பெண்ணை நோக்கித் திரும்பினான்.

கணவனது கோபத்தை கண்டு சிரித்தபடியே திலா இருக்க, “உனக்கு என் நெலமையப் பாத்தா சிரிப்பா இருக்கு!”

“சிரிச்சா எல்லாத்துக்கும் நல்லதுதான!”, திலா

“நல்லதுதான்.  ஆனா நீ கொஞ்சம் தள்ளிப் படுத்தா இன்னும் நல்லாருக்கும்!”, என மூலக் கடுப்பால் அவதியுறுபவன்போல சொன்னதையே திரும்ப சொல்ல

முடியாது என அடம்பிடித்தவளிடம், “மனுசந்தான நான்!  பக்கத்துல ஒட்டிக்கிட்டு ஒரசிக்கிட்டுனு நீ கிட்ட வந்தா, என்னால நல்ல புள்ளையா படுக்க முடியாது!”, என்று தனது நிலையை மறையாது கூற

“அதான் உன் பிரச்சனையா?  இல்லை வயசாயிருச்சா?”, என்று மீண்டும் வம்பிழுக்க

“வாயைக் குடுத்து தேவையில்லாம வாங்கிக் கட்டிக்காதடீ!”, என்றவாறே பெண்ணிற்கு முதுகு காட்டி திரும்பி படுத்திருந்தான் விஷ்வா.

திலாவோ ‘இதுதான் விசயமா?  இதுதெரியாம நாம்போயி உன்னைச் சந்தேகப்பட்டு, பட்டினி கிடந்து, வெந்து, நொந்து’ என நிறைய ந்துக்களைப் போட்டு மனதில் நகைத்துக் கொண்டவள், கணவனின் அருகே இன்னும் நெருங்கிப் படுத்து, கட்டிக் கொண்டாள்.

“ம்ஹ்ம்… சொன்னா கேளு திலா. நம்ம ஜூனியர் வர வரை உன்னை டிஸ்ட்ரப் பண்ணக்கூடாதுன்னு டாக்டர் சொன்னதை கேக்கமாட்டியா?”, என்றவாறு பெண்ணிடமிருந்து நகர்ந்து முகத்தை பெட்சீட்டால் மூடிக்கொண்டு ஓரமாகப் படுத்திருந்தான் விஷ்வா.

“இது எப்போ?”

“அப்போ”, என ஆரம்பத்தில் கர்ப்பமாக இருப்பதை உறுதி செய்யும்போது மருத்துவர் கூறியதை போர்வைக்குள் இருந்தபடியே விஷ்வா கூற

“அப்போதானடா சொன்னாங்க..! இப்பவும் ஏன் எங்கிட்ட இருந்து தள்ளி தள்ளிப் போற!”

“உன் வயிறு தள்ளத் தள்ள, இன்னும் தள்ளியிருக்கணும்னு டாக்டர் சொல்லியிருக்காங்களே!”, விஷ்வா.

விஷ்வாவின் அருகே வந்து போர்வையை விலக்கியபடியே விஷ்வாவின் முகத்தை நோக்க விஷ்வாவிற்கு திலாவின் வடிவில் வந்தது சோதனை! 

திலாவோ கணவனுக்கு போதனையைத் துவங்கியிருந்தாள்.

“நீ இப்டி என்னோட ஆசையை நிறைவேத்தலைன்னா நம்ம புள்ளை எப்டி ஆரோக்யமா பொறக்கும்?”, என முக்கிய விசயத்தினை ஆயுதமாக்கிட

“உன்னை டிஸ்ட்ரப் பண்ணலைன்னாதான் புள்ளை ஆரோக்யமா பொறக்கும்னு அந்த கைனி டாக்டர் சொன்னாப்புலயே!”

“அது ஆரோக்யமாப் பொறந்தாலும், என்னோட ஆசையை நீ நிறைவேத்தாததால  குழந்தை காதுல சீழ் வடியுமாம்!”, என அடுத்து விடாமல் சீரியசாக முகத்தை வைத்தபடி கணவனிடம் கூற

“அதெல்லாம் வடியாது!”, என வெளியில் தைரியமாகக் கூறினாலும் காட்டிக் கொள்ளாமல், “போடீ… எம்புள்ளைக்கு எந்தக் கஷ்டமும் குடுக்கக்கூடாதுன்னுதான் நானே வைராக்கியமா இருக்கேன்!”, என்று விஷ்வா வீராப்பு பேசிட

விட்டாளா திலா?

நேரம் செல்லச் செல்ல, அதுவரை விஷ்வாமித்திரர் வேடமிட்டிருந்த விஷ்வா, சாமான்ய விஷ்வாவாக மாறத் துவங்கியிருந்தான்.

“என்னை டெம்ப்ட் பண்ணாம தள்ளிப் படு திலா!”, என கோபத்திலும், தன் உணர்வுகளோடு விளையாடுபவளை தள்ளிப் படுக்குமாறு கூற

“ரொம்பப் பண்ணாதடா!  எனக்கு இப்டிப் படுத்தாதான் இன்னிக்கு தூக்கம் வரும்”, என அணைப்பை விடாது அட்டைபோல முதுகோடு ஒட்டிக் கொண்டாள்.

‘ஆனாலும் உனக்கு ரொம்ப தைரியம்டீ’, என்றவாறு பெண்ணை நோக்கித் திரும்பிப் படுத்து திலாவை அணுகியவன் பெண்ணிடம் பேச முயல, “ஸ்ஸ்.. இந்த நேரத்தில என்ன பேச்சு தேவையில்லாம…”, என கணவனை அடக்கியவள், அவன் அரவணைக்கும் முன்னே நெஞ்சோடு ஒன்றி, அடங்கிப் போனாள்.

என்ன முயன்றும், பேசியும் எதையும் காதில் வாங்காதவளை என்ன செய்வான்?

“ஏய் நானென்ன இரும்பாடீ?”

“உன்னைக் கரும்பாத்தான் இருக்க சொல்றேன்.  எதுக்கு இரும்பா இருக்கணும்”, என வியக்கியானம் பேசியவளிடம் தோற்றுப் போயிருந்தான் விஷ்வா.

சில மாதங்களுக்குப் பிறகான பல ஊடல்களுக்குப் பிறகான நிதானமான கூடல்.

தயங்கித் தயங்கி ஒதுங்கியவனின், தயக்கத்தை ஓரங்கட்டி, தைரியமாக காரியத்தைச் சாதித்துக் கொண்டாள்.

திலாவின் அசட்டுத் தைரியத்தை எண்ணி முதலில் தயங்கியவன், பிறகு நிதானமே நிதானிக்கும் அளவிற்கு மாறி பெண்ணைக் கையாண்டான்.

கணவனது அரவணைப்பில் நீண்ட நெடிய நாள்களுக்குப்பிறகு எந்த சுணக்கமும் இன்றி துயில் கொண்டிருந்தாள்.

////////////

“இன்னும் எவ்வளவு நாள் இப்டியே இருக்கும்”, என புலம்பியவளை, “சீக்கிரமா எல்லாம் சரியாகிரும்.  ஒவ்வொருத்தவங்களும் பிள்ளையில்லைனு ஆயிரமாயிரம் கஷ்டப்பாடுபட்டு, தன்னையும் வருத்திகிட்டு, பணத்தையும் வாரியிறைக்கிறாங்க.  உனக்கு அதுவா நல்ல விசயம் நடந்ததை நினைச்சு சந்தோசப்படு திலா.  இதுக்காக மனசுல வருத்தம் வரக்கூடாதுடா தாய்மைய சிரமம்னு நினைக்காதே!”, என்று திலாவிடம் அன்பாகவே விளக்கினார் மாலினி.

“விச்சு மட்டும் ஜாலியா இருக்கான்.  நான் மட்டும் கஷ்டப்படறேன். பசிக்குது  ஆனா ஒரு இட்லி சாப்டாலே வயிறு நொம்பிறுது!”, என அழாத குறையாக கூறினாள் திலா. 

“பேபி பெருசா ஆகிட்டு இல்ல!  அது உன்னோட இரைப்பையை மேல்நோக்கி அழுத்தறதால அப்டித்தாண்டா இருக்கும்.  அதுக்காக அவனை எதுக்கு வம்புக்கு இழுக்கற!”, என சிரித்தவாறே பேச

“இப்பவும் இங்க வந்து எவ்ளோ நேரமாச்சு.  ஒரு போனக்கூட போடலை.  வரவர நான் விச்சுவுக்கு வேண்டாத ஆளா போயிட்டேன்ல!”, என்று தனது வருத்தத்திற்கான காரணத்தை மாலினியிடம் குமுறலோடு கொட்ட

அடுத்த அரைமணி நேரத்தில், மாலினியின் முறையான அணுகுமுறைக்குப்பின், விஷ்வா நேரில் வந்திருந்தான்.

படுக்கையில் படுத்தபடியே, மனம் முழுவதும் கணவன் தன்னைத் தேடாத வெம்மையில் உள்ளம் புழுங்க படுத்திருந்தாள் திலா.

எட்டு மாதம் நிறைவடைந்திருந்தவளை மாலினியே தன்னோடு இருக்கும்படி கூறிவிட்டார்.

அறைக்குள் நுழைந்தவனை உணரும் நிலையில் திலா இல்லை.

கண்கள் மூடியிருந்தபோதும், கண்ணீர் வழிந்தபடியே படுத்திருந்தவளைப் பார்த்தவனுக்கோ, மனம் கசிந்தது.

கண்களைத் துடைத்து, பெண்ணை அரவணைத்துக் கொண்டவன், “சாரிடீ,  கொஞ்சம் அதிக வேலை.  அதான்வர லேட்டாயிருச்சு!”, மனமறிந்தே பொய் கூறினான்.

“போ. கிட்ட வராத!  நீ மட்டும் ஜாலியா சுத்தற!  நான் மட்டும் இப்டிக் கஷ்டப்படுறேன்.  எல்லாம் உன்னால!”, எனத் தள்ளிவிட்டாள் பெண்.

பெண் தன்னை எதிர்நோக்கியே இந்நிலைக்கு ஆளாகியிருக்கிறாள் என்கிற இறுமாப்பு விஷ்வாவிற்கு எழுந்தது என்னவோ உண்மை.

அனைத்தும் அன்பின் ஆரோகணிப்பு.

“என் ஸ்ட்ராபெர்ரிக்கு எம்மேல கோபமா?  வராதே!  வந்தாலும் அது பொய்க்கோபமாதான் இருக்கும்!”, என்று விலகியவளை தன்னோடு இழுத்து அணைத்துக் கொண்டான் விஷ்வா.

பெண்ணின் கர்ப்பகால மனநிலை, உடல்நிலையை எடுத்துக்கூறி, ‘நீயும் அவளை ஒதுக்கினா அவ எங்க போவா விஷ்வா.  இப்பதான் அவளுக்கு உன்னோட சப்போர்ட் அதிகம் தேவை.  இந்த நேரத்தில பொண்ணை தவிக்க விட்டா பிறக்கப்போற குழந்தையதான் பாதிக்கும்.  அவளை சந்தோசமா வச்சிக்க!’, என அவ்வப்போது கூறும் ஆலோசனைகளோடு, அறிவுரைகளையும் அலைபேசியில் அழைத்துக் கூறியதும், அப்போதே கிளம்பி நேரில் வந்திருந்தான் விஷ்வா.

திலா துவண்ட வேளைகளில், தெரிந்தோ, பிறரின் வழிகாட்டுதலாலோ தூணாகத் தாங்கிப் பிடித்தான் விஷ்வா.

கணவனைக் கண்டதும் கலகலப்பு மீண்டிருந்தது.  ஆனால் எப்போது எந்த நிமிடம் குட்டிக் கலகத்தைத் துவங்குவாள் என்பதை கணிக்க முடியாமல், கலக்கத்தோடு பெண்ணைக் கையாண்டான் விஷ்வா.

சுகமாக இம்சைகளை நினைவடுக்கிலும், சிலதை பெண் அறியாமல் வீடியோவாகவும் சேமித்து வைத்து, பெண் இலகுவான மனநிலையில் இருக்கும்போது அவளிடம் போட்டுக் காண்பித்து, பெண்ணை மகிழ்ச்சி, வெட்கம், உவகை போன்ற நிலைகளுக்கு உள்ளாக்கி, உன்மத்தம் கொண்டான் விஷ்வா.

விஷ்வாவிற்கு ஒவ்வொரு தினமுமே அழகானது போன்ற உணர்வு.

ஏதோ சாதித்த திருப்தி.

தனக்கும் குடும்ப விருத்தி என்ற ஒன்றைத் தந்த வாழ்க்கையை இன்பமாகவே ரசித்தான்.

அதே மகிழ்வோடு பெண்ணை இயன்றவரைத் தனது பார்வையிலும், கவனிப்பிலும் தாங்கினான்.

தனது தேவைகளை அவளாகவே உணர்ந்து செய்த நாள்கள் அனைத்தும் மாயமானது போன்ற உணர்வு விஷ்வாவிற்கு.

எல்லாம் மாறிப் போயிருந்தது.

முதலில் எந்த சுணக்கமும் இன்றி திலாவிற்காக என்பதைவிட, தனது ஜூனியருக்காக செய்யத் துவங்கியிருந்தான் விஷ்வா.

மதிய உணவிற்கு வந்தவனிடம், “எனக்கு இந்த சாப்பாடே பிடிக்கலை!  சாப்பிட இது வாங்கித்தா!”, என்று இன்பமான இம்சைகள் விஷ்வாவிற்கு தொடர

“அதை நான் வருமுன்ன சொல்லியிருந்தா, வரும்போது வாங்கிட்டு வந்திருப்பேன்ல. இனிமேப் போயி என்னால வாங்கிட்டு வர முடியாது.  டிரைவரை அனுப்பு!”, என்று விஷ்வா கூற

“எதுனாலும் உங்கிட்டதான் கேப்பேன்.  நீதான் வாங்கிட்டு வரணும்.  வேணுனா நீ டிரைவரை அனுப்பி வாங்கிட்டு வரச்சொல்லு”, என்று மெத்தனமாக பதில் கூறியவளை முறைத்தபடியே வாங்கிவரச் சென்றான் விஷ்வா.

பெண்ணது ஒவ்வொரு செயலிலும் மறைந்து கிடந்த அன்பு விஷ்வாவை உள்மத்தம் கொள்ளச் செய்தது.

தனது உடல்நிலையால் அங்ஙனம் நடந்து கொள்கிறாள் என்பது விஷ்வாவிற்குப் புரிய, தன்னை மீறி இடையிடையே சச்சரவுகளுக்கு இடம் கொடுத்து, சங்கடங்களை எதிர்கொண்டு, பிறகு சமாதானம் ஆவது வழமைபோல தொடர்ந்திருந்தது.

இருவருக்கிடையே அன்பும், அரவணைப்புமாக சில நாள்களும், அடுத்து வந்த தினங்களில் எதிரும் புதிருமான காலமாகவும், திலாவின் கர்ப்பகாலம் அவியலைப்போல எல்லா உணர்வுகளும் கலந்து வந்து, மறைந்து, அவ்வப்போது இருவரது நிலையையும் மாற்றியிருந்தது.

விஷ்வா மனைவியிடம் நேரில் மறுத்தாலும், தனது வரப்போகும் வாரிசை எண்ணி ஆனந்தமாகவே அனைத்தையும் செய்து வந்தான்.

புரிதல் சில நேரங்களில் தாமதமாகும்போது, உள்ளத்தை உளி கொண்டு செதுக்கிய வேதனைகளை ஏற்கும் நிலையும் இருவருக்குமே வந்து போனது.

எட்டாம் மாதம் வரை விஷ்வாவோடு இருந்தவளை, வீட்டிற்கு அழைத்துச் செல்வதாக மாலினி கூற, விஷ்வாவிற்கு அதை ஆமோதிக்கவும் மனமில்லாமல், மறுக்கவும் இயலாமல் தடுமாறினான்.

திலாவிற்கு நாகம்மாள், ராசாத்தி இருவரும் பார்த்து, பார்த்துச் செய்தாலும், மாலினியிடம் சென்று வர மனம் ஏங்கியது.

தாயை உள்ளம் நாடியது.

இல்லாத தாயைத்தேடி திலாவால் என்ன செய்ய இயலும்.

மனதைக் கல்லாக்கியபடியே, மாலினியிடம் சென்று ஒன்றிரண்டு நாள்கள் தங்கியிருந்து வர எண்ணிக் கணவனிடம் கேட்டாள் திலா.

முதலில் சரியென்றவன், திலாவை மாலினி வீட்டில் சென்று விட்டிருந்தான்.

காலையில் அழைத்துச் சென்றுவிட்டவன், அன்று மாலையே பாவம்போல முகத்தை வைத்துக் கொண்டு வந்து நின்றவனைப் பார்த்து மாலினி கிண்டல் செய்ய, திலாவிற்கும் கணவனது நிலையைக் கண்டு வருத்தம் வந்திருந்தது.

“என்ன விஷ்வா! உன் வயிஃப் பத்து கிலோ மீட்டர் டிஸ்டன்ஸ்லதான இருக்கா!  இப்பவே இப்டினா டெலிவரிக்குப் பின்ன த்ரீ மன்த்ஸ் இங்கதான் அவ இருப்பா.  அப்ப என்ன பண்ணுவ!”, என்று வம்பிழுக்க

“அப்ப, நானும் இங்க வந்து இருந்துப்பேன்”, என்று விஷ்வா உறுதியான குரலில் கூறுவதைக் கேட்ட பெரியவர்கள் இருவரும் மாறிப்போன விஷ்வாவைக் கண்டு மகிழ்ச்சியோடு சிரித்து மகிழ்ந்தனர்.

“ரெண்டு நாளு இருந்துட்டு வரேன் விச்சு”, என்றுவிட்டு கணவனை வீட்டிற்கு செல்லுமாறு திலா கூற, “இனி இங்க வரதனா என்னையும் கூட கூட்டிட்டு வந்திரு.  என்னை மட்டும் அங்கே விட்டுட்டு வந்தா இனி நடக்கிறதே வேற”, என்று சிறுவனைப்போல முனங்கியவனைக் கண்டு, திலாவால் சிரிக்க மட்டுமே முடிந்தது.

தனித்து, எந்த ஆதரவுமின்றி வளர்ந்தவனுக்கு கிடைத்த திலா என்னும் பற்றுகோல், அவனைவிட்டு சற்று விலகினாலும், அதை ஏற்றுக் கொள்ள இயலாத நிலைக்கு வந்திருந்தான் விஷ்வா.

மோகமோ, காமமோ தோன்றி, அதைத் தணிக்க பெண்ணைத் தேடவில்லை.

தாம்பத்தியத்தின் தாத்பர்யத்தால் உண்டான நேசம் காரணமாக திலாவை நாடியது மனது.

பெண்ணில்லாத இடங்களில் தன்னை நினைத்துப் பார்க்கக்கூட பிரியம் கொள்ளவில்லை விஷ்வா.

பெண்ணது நிலை புரிந்தாலும், எவ்வளவு பணமிருந்தாலும், பிறரைச் சார்ந்து வாழும், சொந்தமும், பந்தமும் இல்லாத ஏழ்மை நிலையிலேயே தம்பதியர் இருந்தனர்.

தாயில்லாத காரணத்தால் தாயிக்கு நிகராக கவனித்துக் கொண்ட மாலினியைத் தேடி, மனது நாடியது திலாவிற்கு.

நாகம்மாள், ராசாத்தி இருவரும் எவ்வளவுதான் பரிவோடு கவனித்துக் கொண்டாலும், அவர்கள் இருவரும் எஜமான விசுவாசத்தை மட்டுமே காண்பித்தனர்.

அவர்களிடம் தாய்மையைத் தேடி அலுத்துப் போகும் பொழுது, மனம் மாலினியை நாடியதும், உடனே அவர்களது இல்லத்திற்குச் செல்வதை வழக்கமாக்கியிருந்தாள் திலா.

நாள்கள் செல்லவே, விஷ்வா, திலா தம்பதியர் இருவரும் பெற்றோர் எனும் பதவி உயர்வு பெற்றனர்.

மாலினி, சுந்தரம் தம்பதியரின் ஒத்துழைப்பு மற்றும், திலாவின் வேண்டுதல் காரணமாக, மூன்று மாதங்கள் அவர்களது இல்லத்தில் இருந்துவிட்டு, தங்களது வீட்டிற்கு வந்த முதல்நாள்.

/////////////

குழந்தை பிறந்ததுமே அலுவலகத்தில் அனைவருக்கும் இனிப்பு வழங்கி மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொண்டிருந்தான் விஷ்வா.

மகன் வீட்டிற்கு வந்தததில் விஷ்வாவின் மகிழ்ச்சி இரட்டிப்பாகியிருந்தது.

அலுவலகம் சென்று வந்தவனுக்கு, மனைவியும், மகனும் வீட்டிற்கு வந்ததே நிறைவைத் தந்திருக்க, நேரம் செல்லச் செல்ல புதிய இடத்தில், புது நபர்களிடம் செல்ல விரும்பாத குழந்தை வீலென்று கத்தத் துவங்கியிருந்தது.

திலாவும் இயன்றவரை குழந்தைக்கு வேண்டிய அனைத்தையும் சரிசெய்ய முயன்றும், குழந்தை அழுகையை நிப்பாட்டவில்லை.

விஷ்வாவிற்கோ, குழந்தையின் நிலையைக் கண்டு பயமே வந்திருந்தது.

ஒவ்வொருவராகத் தூக்கி, முதுகில் தட்டி ஆறுதலாக தடவிக் கொடுத்தும் அழுகையை நிப்பாட்டவில்லை.

இதுவரை குழந்தையை தூக்க பயந்தபடியே, ஆசையாகப் பார்த்துவிட்டு வந்திருந்தவன், முதல் முறையாக திலாவிடம் இருந்து குழந்தையை நடுங்கும் விரல்களோடு வாங்கி, தோளில் அணைத்துப் பிடித்தபடியே குழந்தையை சமாதானம் கூறி தட்டிக் கொடுக்கத் துவங்கினான்.

மகனைத் தூக்கி அணைத்ததும், உடலெங்கும் ஊடுருவி சென்ற உணர்வில் விஷ்வா மறுபிறப்பு எடுத்தாற்போல உணர்ந்தான்.

“என் ராஜால்ல…! அழக்கூடாது.  அப்பாட்ட வந்திட்டடா குட்டி!”, என முதுகை இதமாகத் தட்டிக் கொடுத்தவாறு பெரியவர்களிடம் பேசுவதுபோல் குழந்தையிடம் பேசியவாறே ஹாலில் அங்குமிங்கும் மெதுவாக நடந்திட

சற்று நேரத்தில் மெதுமெதுவாக அழுகையை நிப்பாட்டி, உறங்கத் துவங்கியிருந்தான் மூன்றே மாதமான சர்வேஸ்வரன்.

விஷ்வேஸ்வரன், மிதிலா தம்பதியரின் மகன்.

உறங்கியவனைத் தொட்டிலில் விட திலா வந்து கேட்டபோதும், மகனைத் தர மறுத்து, தோளில் சுமந்தபடியே, நீண்டநேரம் கனவோடு நடந்தவனையே பார்த்திருந்தாள் திலா.

“ரொம்ப நேரமா அப்டியே எப்டி வச்சிட்டு இருப்பீங்க, குடுங்க.  தொட்டில்ல போடறேன்”, என்று குழந்தையைக் கேட்க

“ஸ்..”, என சத்தமில்லாமல் வாயில் விரல் வைத்துக் காட்டி, அமைதியாக இரு என்று செய்கையில் கூறியவன், மகன் ஆழ்ந்து உறங்கியதை உறுதி செய்து கொண்டு, படுக்கையில் தானும் படுத்து, மகனை மார்போடு போட்டுக் கொண்டு உறங்கிப் போனான் விஷ்வா.

இரவு உணவுகூட உண்ணாமல் மகனோடு உறங்கியவனை அழைக்கவும் இயலாமல், அருகிலேயே அமர்ந்து பார்த்திருந்தாள் திலா.

படுத்த அரை மணித்தியாலத்தில், கணவனது மார்பில் உறங்கிய குழந்தையை தூக்கியவளைக் கண்டு, பதறியெழுந்தவனை, “குழந்தைக்கும் அசௌகரியமா இருக்கும்.  உங்களுக்கும் கஷ்டம்.  அதான்”, என்று திலா காரணம் கூற

“ஒரு கஷ்டமும் இல்லை எனக்கு.  சர்வேஸ்ஸை அப்டித் தூங்க வச்சதிலேயே எனக்கு பசியெல்லாம் போயிருச்சு.  எனக்கு எதுவும் வேணாம்”, என்றவனை வற்புறுத்தி உண்ண வைத்தே உறங்க விட்டாள் திலா.

குழந்தையின் அருகாமை விஷ்வாவை இன்னும் இளக்கியிருந்தது.  மனம் இலகுவாகியிருந்தான்.

தனித்து வளர்ந்தவனுக்கு வாழ்வில் வசந்தம் நிரந்தரமாகியிருந்தது போன்றதோர் உணர்வு.

திலாவின் மீது முன்பைக் காட்டிலும், மனதளவில் இன்னும் நெருங்கியிருந்தான்.

தனது வேட்கைகள் அனைத்தையும், வாரி வழங்கும் வள்ளல்போல திலாவை எண்ணிக் கொண்டதால், திலாவிடம் பைத்தியமாக இருந்தான் விஷ்வா.

புரியாத உணர்வுகள் பலவற்றை புரிய வைத்த மகனை, திலாவைக் காட்டிலும் நெருக்கமாக உணர்ந்தான்.

தனக்கு கிடைக்காத அனைத்தையும் தனது மகனுக்கு கிடைக்கச் செய்ய வேண்டுமென்ற வேட்கை வந்திருந்தது விஷ்வாவிற்கு.

அலுவலகத்தோடு, மனைவி, மகன் இருவரையும் அரவணைத்துக் கொள்ள மறக்கவில்லை.

திலாவும் மகனோடு, கணவனையும் கவனித்துக் கொள்ளத் துவங்கினாள்.

குழந்தை சர்வேஸ் வீட்டிற்கு வந்தபிறகு செங்கோட்டை செல்லும் முதல் பயணம் விஷ்வாவிற்கு.

செங்கோட்டை செல்லும் வேளையில் மனைவி மற்றும் பிள்ளையை உடன் அழைத்துச் செல்லவும் இயலாமல், தானும் பிரயாணத்தைத் தவிர்க்க இயலாமல் திண்டாடினான் விஷ்வா.

இயன்றவரை அன்றே பணியை முடித்துவிட்டால் திரும்பிவிடும் உத்தேசத்தோடு பயணத்தைத் துவங்கியிருந்தான்.

விஷ்வாவின் வேட்கை அனைத்தும் அவனது எதிர்பார்ப்பிற்கிணங்க நிறைவோடு நிறைவேறியது.

உலகத்தின் எந்த மூலையில் யார் இருந்தாலும், உறவுகள் உயிர்ப்போடு இருப்பதற்கு இதயத்தின் வேட்கை மட்டுமே காரணமாக உள்ளது.

விஷ்வா எனும் மனிதனின் வேட்கை, மனைவி, மகன், தொழில் எனும் நிலையில் சிறப்புற்று விளங்க, வாழ்த்தி விடைபெறுவோம்.

நன்றி!

///////////

மூவரின் இதய வேட்கை இந்நாவலில் கையாளப்பட்டிருக்கிறது.

கண்ணனின் வேட்கை சரியானதொரு நிலையில் இருந்ததை, உரிய காலத்திற்குள் தனக்குச் சாதகமாக்கிக் கொள்ளத் தவறியதால் அதனை அவனால் நிறைவேற்றுவதில் சங்கடமும், தோல்வியும் மிஞ்சியது. வலி மட்டுமே எஞ்சியது.

வேட்கை நிறைவேறாததால், பிறன்மனை நோக்கும் நிலைக்கு வந்தான். குயுக்தியும், பொறாமையும், வஞ்சமும் உண்டாகி, சுயத்தைத் தொலைத்து மாபாதக நிலைக்கு தள்ளப்பட்டான்.

திலாவிற்கு விஷ்வாவின் மீது வேட்கை இருந்தபோதும், தன்னிலை உணர்ந்து ஒதுங்கியிருந்தாள்.  ஆனாலும், அவளின் உள்ளம் கவர்ந்தவனே, கணவனாக வந்ததில், பூரண திருப்தி பெற இயலாத நிலைக்கு கணவனது கடந்தகால வாழ்வை எண்ணி ஒதுங்கவும் இயலாமல், ஒதுக்கவும் இயலாமல் திண்டாடினாள். ஆனாலும், அவன் மேல் கொண்ட அதீத வேட்கையின் நிமித்தமாக அனைத்தையும் பொருட்படுத்தாது அவனோடு மனமுவந்து வாழ இசைந்தாள்.

விஷ்வா எனும் நாவலின் நாயகன், தனது வேட்கையை நிறைவேற்ற, தன்னியல்பை மாற்றிக் கொள்ள விழைந்தான்.

எத்துனை இடர்கள் வந்தும், தளராது, தொய்வில்லாத மனதுடன் வேட்கையை நோக்கிய பயணத்தைத் தொடர்ந்தான்.

வென்றான்! 

நம் மனதில் நின்றான்!

 

(விஷ்வாவைப் போல ஆண்கள் மட்டுமல்லாது, சில பெண்களும் நெருங்கிய, நம்பிக்கையான உறவுகள் மற்றும் நண்பர்களின் தவறான அணுகுமுறையால், தவறான பாதையில் செல்லத் துவங்குவது இன்று அதிகரித்துள்ளது.

இதைத் தவிர்க்க, அதிக கவனம் செலுத்தவேண்டிய நிலையில் இன்றைய பெற்றோர் உள்ளனர்.

இருபாலருக்கும் சிறுவயது முதலே விழிப்புணர்வை ஏற்படுத்திட வேண்டிய கடமையும் சமுதாயத்திற்கு உள்ளது)

//////

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!