இதய ♥ வேட்கை 6

 

விஷ்வா வெளியூர் சென்றிருந்த நாள்களில் ஏதோ வெறுமையை உணர்ந்தாள் திலா.

சென்னையில் இருந்து தான் செங்கோட்டை சென்றபோது தோன்றியிராத உணர்வு, விஷ்வா தன்னை விட்டுவிட்டு வெளியூர் சென்றபிறகு தோன்றத் துவங்கியிருந்தது.

விஷ்வா உடன் இல்லாத வெறுமை திலாவைத் தாக்கத் துவங்கியிருந்தது.

இதுவரை பெண்ணிற்கு தோன்றியிராத புதிய அனுபவம்.

விஷ்வா சென்ற முதல் நாள், திலாவிற்கு  வெளிவேலைகள் இருந்ததால், அவன் இல்லாதது பொருட்டாகத் தோன்றவில்லை.

அடுத்து வந்த நாள் முதல், பெரும்பாலும் அதிக வேலை இல்லாமல் மேற்பார்வை மட்டுமே என்றளவில் பொழுது சென்றது.

வெகுநேரம் தனிமையில் எந்த பணியும் இல்லாமல் இருந்தவளுக்கு, விஷ்வா எப்போது திரும்புவான் என்றோ, என்ன பணியாக எங்கு செல்கிறான் என்றோ, தன்னிடம் எதையும் சரியாக பகிர்ந்து கொள்ளாது கிளம்பிச் சென்றது, அவளை அறியாமல் கணவனின் மீது என்றுமில்லாது கோபத்தை உண்டு செய்திருந்தது.

‘எங்கனு ஒரு வார்த்தை எங்கிட்ட சொல்லிட்டு போயிருக்கலாம் இவரு!’

‘இல்ல! என்னிக்கு ரிட்டர்ன் வருவேன்னாவது சொல்லிருக்கலாம்’, என்று விஷ்வாவைப் பற்றிய எண்ணங்களே திலாவின் மனதில் தோன்றியவாறு இருந்தது.

சிந்தனை முழுக்க விஷ்வா ஆக்ரமிக்கத் துவங்க, ஆக்ரமிப்பினால் பெண் மனம் அலைபாயத் துவங்கி, விஷ்வா எனும் கரையைக் காண, பார்வையால் தழுவ உள்ளம் ஏங்கியது.

இதற்கிடையில், ‘நீ மட்டும் ரொம்ப நல்லவ!  விஷ்வா நினைச்ச மாதிரி எல்லா விசயத்திலயும் அவனுக்கு ஒத்துழைச்சு நடந்துட்ட! இப்ப அவன் உங்கிட்ட எதையும் பகிர்ந்துக்கலைன்னு கோபம் வேற!’, என திலாவின் மனம் அவளைச் சாடியது.

சாடிய மனதால் வாடிய உள்ளத்தோடு உலாவினாள் பெண்.

‘உடம்பு முடியாம இருக்கும்போது, அப்டி என்ன பெரிய்ய்யய… வியாபாரம் பேசப் போறாராம்’, என்று எழுந்த மனதை சரிசெய்ய இயலாமல் சோர்ந்தாள் திலா.

‘இவருக்காக மெனக்கெட்டு செங்கோட்டையில இருந்து வந்து, இங்க நான் ஒருத்தி காத்துக்கிடக்க, எனக்கென்னனு கிளம்பிப் போனா என்ன அர்த்தம்?’, என்று எழுந்த வினாவோடு விடை அறிய விளையாது, மன உளைச்சலுக்கு உள்ளானாள் திலா.

முன்பெல்லாம் தினசரி ஒருமுறை தவறாது அழைத்துப் பேசுபவன், சமீப காலமாக தன்னைத் தவிர்த்ததை எண்ணி பெண்ணின் மனம் குமைந்தது.

வெளியூர் செல்லும்முன்பே, பெண்ணிடம் முந்தைய இரவு பேசியதுதான்.

அந்த வேளையில் கணவனிடமிருந்து வந்த அழைப்பைக் கண்டு, தான் அன்று தயங்கியது நினைவுவர, பெண்ணுக்கு இன்றைய தனது நிலையை எண்ணி தன்மீது கழிவிரக்கமும் வந்தது.

அன்று இதமான மனநிலையோடு உறங்கச் செல்லும் வேளையில் வந்த கணவனது அழைப்பைக் கண்டு, மனதில் ஏதோ தயக்கம்.

‘வில்லங்கம் புடிச்ச உடும்பு எதுக்கு இந்நேரத்தில கால் பண்ணுது’, என்று எண்ணியவாறே அழைப்பை நீண்ட நேரம் எடுக்காமல் பார்த்திருந்தாள்.

அழைப்பை எடுக்காமலேயே உறங்கிவிட்டதுபோன்று இருந்துவிடலாம் என்கிற எண்ணத்தோடு அழைப்பை ஏற்க முதலில் தயங்கியவள், பிறகு என்ன வந்தாலும் பார்த்துக் கொள்ளலாம் என்கிற துணிச்சலோடு அழைப்பை ஏற்றாள்.

“சாரி… ரெண்டு நாள்ல வெளியூர் கிளம்பறதா இருந்தேன். இப்பதான், ப்ரீவியசா அப்பாயிண்ட்மென்ட் நாளை மறுநாள்னு கன்பார்ம் ஆகியிருக்கு.  அதனால நாளைக்கு இயர்லியரா கிளம்பனும். வரதுக்கு எப்டியும் ஒன் வீக் மேல ஆகலாம்.  நான் வந்தபின்ன நீ செங்கோட்டைக்கு போகலாம்.  இங்க இருக்க போரடிச்சா மாலினி ஆண்ட்டியோட போயித் தங்கிக்க.  அதச் சொல்லத்தான் கால் பண்ணேன்”, என்றவன்

“அப்புறம் இங்க ஃபர்னிச்சர் ஷோரூம்ல ரெண்டு ஆர்டர் கிளியர் பண்ணணும்.  அதைப் பாத்துக்க.  கண்ணணும் எங்கூட வர்றதால நீதான் பாக்கற மாதிரி இருக்கும்”, என்று நிறுத்தியவன்

எதிரில் இருந்தவளின் இதயம் தாறுமாறாக துடிப்பதை உணராமல் வியாபார வரவு செலவு பற்றிக் பேசிக் கொண்டிருந்தான்.

“செங்கோட்டை இம்போர்ட்டர்ஸ்ல இருந்து ரெண்டு பேமெண்ட் செட்டில் பண்ணணும்.  அதையும் செய்திரு…”, என்று அதற்குமேலும் வியாபாரம் சார்ந்த பேச்சுக்களை மட்டுமே மூச்சுவிடாமல் பேசிவிட்டு, அதற்குமேல் சொந்த விசயங்கள் எதுவும் பேசாமல் திலாவை தவிக்கவிட்டவன்

“குட் நைட் ஸ்ட்ராபெர்ரி”, என்று வழமையான வசியக் குரலில் கூறிவிட்டு, மிதிலாவின் பதிலுக்குக் காத்திராமல் அழைப்பை வைத்திருந்தான் விஷ்வா.

என்னவோ ஏதோ என்று பதறி அழைப்பை எடுத்தவளுக்கு, இடையில் உண்டான திக்திக் தித்திப்பான உணர்வுகளுக்குப்பின், இறுதியில் அடைமழையில்  கொளுத்திய நமத்துப் போன புஸ்வானம்போல மனம் மாறியிருந்தது.

முதலில் பதறி, பிறகு ஏமாற்றமடைந்த மனதைக் கண்ட உள்ளம், ‘ஒரு மனுசன் ஒரு முறை தப்பு பண்ணா காலத்துக்கும் அப்டித்தான்னு முடிவெடுத்திருது இந்த மானங்கெட்ட மனசு’, என்று கணவனைத் தவறாக எண்ணிய தன் மனதை வெறுத்தவளாய், தானே திட்டியதில் சமாதானம் அடைந்திருந்தாள்.

கணவனிடம் எதையோ ஆழ்மனம் எதிர்பார்த்து, அதில் நிறைவுறா மனது திலாவை உறங்கவிடாமல் செய்திருந்தது.

வழமையாக செய்யும் அவனது தொந்திரவுகளை அவளறியாமலேயே ரசிப்பதை உள்ளம் உணர குற்ற உணர்வு வந்தது.

வெளியில் விஷ்வாவை வேண்டாமென்று பேசும் வாய், உள்ளத்தில் அவனை விட்டுக் கொடுக்க தன்னால் இயலுமா என்று சரியாக அறிந்து கொள்ள முடியாத தனது நிலையை எண்ணி திலாவிற்கு வருத்தமும் வந்தது.

கணவன் கூறிய அனைத்தையும் அவளது ஹேண்ட்பேகில் வைத்திருந்த ஸ்டிக்கி நோட் பேடை எடுத்து கர்ம சிரத்தையோடு குறித்து வைத்துக் கொண்டாள்.

‘அதிகம் கணவனை வதைக்கிறோம்.  விரைவில் நல்ல முயற்சியாக எடுக்க வேண்டும்’, என்கிற எண்ணத்தோடு படுக்கைக்கு சென்று உறங்க முயற்சித்தவளுக்கு உறக்கம் வந்தாலும் உறங்க இயலாமல் இருந்தாள்.

வந்த உறக்கம், கணவன் மறுநாள் வெளியூர் செல்கிறான் என்றறிந்ததும், ‘எங்க போறாரு?  எதுக்கு ஒரு வாரம்? யாருகிட்ட அப்பாயிண்ட்மென்ட்’, என்று அது தொடர்பான எண்ணங்களில் பின்னலிட்டு தொடர,

‘காலையில போயி அவருகிட்டயே நேருல கேப்போம்.  நம்மகிட்ட சொல்லாம யாருகிட்ட சொல்லப் போறாரு!’, என்கிற முனைப்போடு சென்று படுத்தவள் அதிகாலையில் தன்னை மறந்து உறங்கியிருந்தாள் மிதிலா.

பெண் எழுமுன் விஷ்வா கிளம்பியிருந்தான்.

திலா தொலைவில் இருந்தபோது வராத வாய்ப்பு, பெண் அருகில் இருக்கும்போது கிட்டியது எட்டிக்காய் போன்றே தோன்றியது விஷ்வாவிற்கு.

ஆனாலும், நீண்டநாள் தனது அவாவான வணிக விருத்திக்கான வாய்ப்பை நழுவவிட விரும்பாமல் உடனே கிளம்பியிருந்தான் விஷ்வா.

தாமதமாக துயிலெழுந்து வந்தவள், கணவனைக் காண வேண்டிய தன் மனத் தூண்டுதலால், விழியை தூண்டிலாக்கித் தேட, ஏமாற்றமே மிஞ்சியது.

‘எங்கிட்ட சொல்லவே இல்லை’ என்கிற எண்ணமே பெண்ணை சோர்வடையச் செய்திருந்தது.

அன்று துவங்கிய போராட்டம் இன்னும் தொடரவே, இதற்குமேல் வீட்டில் இருந்தால் அவ்வளவுதான் என்று முடிவாக, மாலினிக்கு அழைத்துப் பேசினாள்.

“இப்பதான் பேச நேரங்கெடச்சுதா.  விஷ்வா டெய்லி ஃபோன் பண்ணி இன்னிக்கு திலா வந்தாளாங்குறான்.  ஆனா உனக்கு இப்பதான் எங்க நினைவு வந்திருக்கு”, என்று மாலினி குறைபட்டுக் கொண்டார்.

கணவன் தன்னோடு பேசவில்லை என்று வாடியவளுக்கு, மாலினியின் பேச்சைக் கேட்டு, ‘அவங்ககூட பேசலாம் இவருக்கு நேரமிருக்கு.  எங்கிட்ட ஒரு வார்த்தை பேச நேரமில்லையாக்கும்’, என்று திலா கணவனது செய்கையில் மிகவும் சோர்ந்தாள்.

பெண் தனது செயல்களைப் பற்றி உணரவே இல்லை.  பழி ஒரு இடம், பாவம் வேறிடம் என்பதுபோல தனது செயல்களை மறந்து கணவனின் செயலில் குறை கண்டவளாக வலம் வந்தாள் திலா.

/////////

மாலினியின் வீட்டில் வரவேற்பிற்கோ, வழமைபோல பேச்சிற்கோ எதற்கும் திலாவிற்கு குறைவில்லை.

ஆனாலும் திலாவிற்கு கணவன் உடன் இல்லாததால் பெருங்குறையாகத் தோன்றியது.

எதிலும் மனம் நாட்டமில்லாதிருந்தது.

பெண்ணை, அவளின் ஒட்டாத நாட்டமில்லாத செயலைக் கண்டுகொண்ட மாலினி , “பக்கத்தில விஷ்வா இல்லாம திலாவுக்கு எதிலயும் இண்ட்ரெஸ்ட் போகமாட்டிங்குதா”, என்று கேட்டு சிரித்தார்.

“அப்டிலாம் இல்லமா”, என்று வாய் அதை மறுத்துக் கூறினாலும், அதுதான் உண்மை என்பது இருவரும் அறிந்த உண்மையாக இருந்தது.

பத்து வார்த்தைகள் பேசினால், திலா அவளை அறியாமல் ஐந்து வார்த்தைகள் விஷ்வாவைப் பற்றிப் பேசினாள்.

மாலினிக்கு ஓரளவு விஷ்வாவின் பின்புலம், குடும்ப சூழல் அறிந்திருந்தது.

அதனை தனக்கு சாதகமாக்கி, விஷ்வாவைப் பற்றிய பால்ய கால நடப்புகள், பெற்றோரைப் பற்றிய விசயங்கள் போன்றவற்றை இயல்பாகக் கேட்டறிந்து கொண்டாள் திலா.

முதலில் பெண்ணின் பேச்சிற்கு இடையூறு இல்லாமல் விஷ்வாவின் குடும்பத்தைப் பற்றி திலா வினவிய அனைத்திற்கும் தானறிந்ததை கூறியவர்,

இறுதியாக, “ஏன் திலா நான் ஒன்னு கேப்பேன்.  நீ மறைக்காம உண்மைய சொல்லணும்”, என்ற பீடிகையோடு பெண்ணை நோக்கினார் மாலினி.

“உங்ககிட்ட மறைக்க எனக்கென்னமா இருக்கு, கேளுங்க!”, என்று ஊக்கமளித்தவள் அடுத்து வந்த மாலினியின் கேள்வியில் ஸ்தம்பித்திருந்தாள்.

“நீங்க கல்யாணம் பண்ணி ஒன்னாதான ஒரு வருசமா குடித்தனம் பண்ணீங்க?”, என்ற மாலினியின் கேள்வியில்

என்ன பதில் கூறுவது என்று புரியாமல் விழித்தாள் திலா.

பிறகு தலையைக் குனிந்தவள் மாலினியின் கண்ணை நோக்குவதைத் தவிர்ப்பதைக் கண்டு மாலினி தானாக ஒரு யூகத்திற்கு வந்திருந்தார்.

மருத்துவராகையால் திலாவின் நடவடிக்கைகளை உற்று நோக்கியது வாயிலாக அவராக சில விசயங்களைப் பற்றிப் பேச எண்ணினார்.

“உங்க மேரேஜ்கு பின்ன ஒரு ஆறு மாசம் இருக்கும்னு நினைக்கிறேன்”, என்று யூகித்தவாறே யோசனையோடு பேசியவர்

“ ரெண்டு முறை அடுத்தடுத்து நான் உங்க வீட்டுக்கு வந்தப்போ, நீ செங்கோட்டை போயிருக்கறதா விஷ்வா சொன்னான்.  என்ன விசயம்னு கேட்டதுக்கு, சும்மா அங்க பிஸினெஸ் விசயமா போயிருக்கானு சொன்னான்.  எனக்கு அப்போலாம் எந்த சந்தேகமும் வரல.  ஆனா அவனைப் பத்தி ஒரு வருசத்தில எதுவும் தெரிஞ்சிக்காம நீ விஷ்வா பேரண்ட் பத்தியெல்லாம் எங்கிட்ட வந்து கேக்கற சாதாரண கேள்விகளை வச்சிப் பாக்கும்போது, எனக்கு இப்டி ஒரு சந்தேகம் இன்னிக்கு வரது”, என்றவர் சிரிப்பு மாறாமலேயே

“ஏதோ ரெண்டு பேரும் சேந்து கண்ணா மூச்சி ஆட்டம் ஆடற மாதிரி தெரியுது”, என்று மனத்தோன்றலை மறையாது கூறினார்.

“எப்பவும் நான் சொல்றது ஒரு விசயந்தான்.  சின்னதா பிரச்சனை இருக்கும்போது அதைப் பேசித் தீத்திட்டா எல்லாம் சரியாகிரும்.  அதையே வளர விட்டா புரையோடி, நம்மை தடந்தெரியாம புரட்டிப் போட்டுரும்”, என்று தனது எண்ணத்தை திலாவிடம் கூறியவர்

“உங்களுக்குள்ள உங்க நடவடிக்கைகளை வச்சிப் பாக்கும்போது இதுக்கு முன்னவரை நல்ல அன்னியோன்யம் எனக்குத் தெரிஞ்சதில்லை. 

நம்ம விஷ்வா உன்னைப் பாக்கற பார்வையில சொல்ல முடியாத ஏக்கம் இருக்கு, சுந்தர்கூட விஷ்வா உக்காந்திருந்தாலும், அப்பொப்ப அவங்கண்ணு உன்னைத் தேடும்.  அதுல உன்னைப் பாத்த சந்தோசமும், அதை மீறிய ஏதோ ஏக்கமும் நான் பாத்திருக்கேன்.  ஆனா இதுவரை நீ அவனைக் கண்டுக்கிட்டதே இல்ல. நீ அப்டி அவனைத் தேடியோ, இல்ல அவனோட வயிஃப் மாதிரியான உரிமைப் பேச்சோ, செயலோ உங்கிட்ட இதுவரை நான் பாக்கல.  அது உங்கிட்ட சுத்தமா மிஸ்ஸிங்.  வந்த இடத்தில வரைமுறையோட நீ இருக்க நினைச்சி அப்டி இருந்தாலும் ஹஸ்பண்ட் அண்ட் வயிஃப்குள்ள ஒரு அந்நியோன்யம் இழையோடும்.  அது உங்கிட்ட இல்ல.

அது நீ இங்க, அதாவது வேற இடத்துக்கு, புது இடத்துக்கு வந்ததால இல்ல. 

அப்டி இருந்த நீ, இன்னிக்கு வந்ததுல இருந்து அதிகமா அவனைப் பத்திதான் பேசின.  இதையெல்லாம் வச்சிப் பாக்கும்போது உங்களுக்குள்ள இத்தனை நாள் ஏதோ சரியில்லைனு தோணறது”, என்று நிறுத்தியவர்

“உண்மைதானா திலா”, என்று வினவ

குனிந்தவாறு நேரடிப் பார்வையைத் தவிர்க்க முயன்று தோற்றவளைப் பார்த்தவாறே 

“ஆனா  இத்தனை நாள் அப்டி இருந்த திலா இன்னிக்கு மாறியிருக்க.  ஏதோ புதிய மாற்றம் உன் மனசுல வந்திருக்க மாதிரி இருக்கு.  இது உங்க வாழ்க்கைக்கு நல்லதா இருக்கணும்னு நான் ஆசைப்படறேன்.

எப்பவும் உங்க நல்லதுக்கு எங்க சப்போர்ட் இருக்கும்.

என்ன பிரச்சனையா இருந்தாலும் சொன்னா அதை சரி பண்ணிறலாம்.

சரி பண்ண முடியாத பிரச்சனைன்னு ஒன்னு இல்லவே இல்லை”, என்று திலாவிடம் நீண்டதொரு தனது மன உணர்வைப் பகிர்ந்து கொண்டிருந்தார் மாலினி.

முதலில் மாலினியின் பேச்சைக் கேட்டுக் கொண்டிருந்தவளுக்கும் அழுகை எழ, அதை தனக்குள் அடக்கியவாறே கேட்டபடி அமைதியாக இருந்தவள்

“உங்ககிட்ட சொல்லறேன்மா நிச்சயமா.  ஆனா இன்னிக்கு வேணா.  இன்னொரு நாள் இது பற்றி பேசலாம்.  ஆனா சீக்கிரமா இதுக்கு ஒரு தீர்வு வேணும்”, என்று கரகரத்த குரலில் பேசியவளின் மனநிலையை உணர்ந்து கொண்ட மாலினி, அருகே இருந்த ஜக்கில் இருந்த நீரை அங்கிருந்த டம்ளரில் ஊற்றிக் கொடுத்தார்.

“இதக் குடி முதல்ல”, என்று மாலினி கூறியதைக் கேட்டு நிமிர்ந்து, அவரின் கையில் இருந்த நீரை வாங்கி சில மிடறுகள் விழுங்கி தன்னை ஆசுவாசப்படுத்தினாள் திலா.

“ஒன்னும் அவசரமில்லை.  இப்பவாவது ஒரு நல்ல முடிவுக்கு வந்தா சரிதான்”, என்று மாலினி பெண்ணின் முதுகில் ஆதரவாகத் தடவி, மிதிலாவை இயல்பு நிலைக்கு கொண்டு வர முயன்றார்.

/////////////

அடுத்த நாளே தனது சந்தேகத்திற்கு வித்திட்ட கோப்பிலிருந்து எடுக்கப்பட்ட நகலையும் எடுத்துக் கொண்டு மாலினியை நேரில் காண விரைந்தாள்.

“அடடே வாம்மா. மாலினி யாரு வந்திருக்கா பாரு”, என்றுவிட்டு மருத்துவமனைக்கு தனித்து கிளம்பிவிட்டார் சுந்தரம்.

வந்தவளை வரவேற்று உண்ணுமாறு கூறியவறின் பேச்சை மறுத்தவள், சற்று நேரம் பொதுவாக மாலினியோடு உரையாடியவாறு இருந்தாள்.

வந்தவளின் நோக்கமறிந்து கொண்டிருந்த மாலினி, தனது மற்ற பணிகளை விரைவாக முடித்துக் கொண்டு தனது வீட்டின் முதல் தளத்தில், தனது தொழில்முறை சார்ந்த சில ஆராய்ச்சி மற்றும் ஆய்வுப் பணிக்காக ஒதுக்கிய அறைக்குள் பெண்ணை அழைத்துச் சென்றார்.

நல்ல காற்றோட்டமான விசாலாமான அறை.

அறையின் சுவரில் தொங்கவிடப்பட்டிருந்த சில படங்களைப் பார்த்தவளுக்கு மனதில் இதம் தோன்றியது.

தோழமையோடு பெண்ணை உள்ளே அழைத்துச் சென்று அமரச் செய்தவர், அங்கிருந்த அலமாரியில் இருந்த புத்தகங்களில் கவனம் செலுத்துவதுபோல, பெண்ணிடம் திலாவின் குடும்பத்தைப் பற்றிய சில பொதுவான கேள்விகளைத் துவங்கியிருந்தார்.

பெண் பேசத் துவங்கியதும் அருகில் வந்தமர்ந்தவர், பெண்ணின் பேச்சில் தனது முழுக்கவனத்தை கொண்டு வந்தார்.

பிறகு, “என்ன பிரச்சனை உங்களுக்குள்ளனு நான் தெரிஞ்சிக்கலாமா”, என்று நேரடியாகவே மாலினி வினவ

தனது திருமணத்திற்கு பிறகான தாம்பத்யம் பற்றிய அனுபவத்தையும், அதனால் தனது மனதில் உண்டான முடிவுகளைப் பற்றியும் துணிந்து கூறத் துவங்கினாள் திலா.

திருமணம் முடிந்து, தங்களது தாம்பத்ய வாழ்க்கைக்குள் அடியெடுத்து வைத்தபோது உண்டான சில கசப்பான அனுபவங்களை மேலோட்டமாகக் கூறி, அதனால் தனக்கு குடும்ப வாழ்க்கை  வேண்டாமெனத் தானாக தீர்மானித்ததை மறைக்காது கூறினாள் திலா.

அமைதியாகப் பெண் பேசுவதைக் கேட்டிருந்தவர், திலா பேசி முடித்ததும், “உங்க கல்யாணத்துக்கு முன்ன விஷ்வாவை நீ எங்காவது சந்திச்சிருக்கியா?”, என்று வினவ

தனது முதல் சந்திப்பில் துவங்கி திருமணம் வரை, விஷ்வாவைப் பற்றிய தனது மனவோட்டத்தை மறையாது கூறினாள் திலா.

திருமணத்திற்குப் பிறகான தாம்பத்தியம் சார்ந்த அணுகுமுறையில், விஷ்வாவின் செயல்பாடுகளைப் பற்றி மாலினி விகற்பமின்றி கேள்விகள் கேட்கத் துவங்கினார்.

திலா லஜ்ஜையாக உணர்ந்து பதில் கூற மிகவும் தயங்க, “இதுல நீ தயங்க ஒன்னுமில்ல. இப்ப நான் ஒரு டாக்டர்.  நீ உன் கஷ்டத்தை மறைக்காம சொன்னாதான் என்ன பிராப்ளம்னு என்னால அனலைஸ் பண்ணி, அதற்கு உனக்கு தீர்வு சொல்ல முடியும்.  இது நமக்குள்ள இருக்கக்கூடிய விசயம்.  இது வெளியில யாருக்கும் தெரிய போறது இல்ல.  அதனால சங்கோஜப்படாம மறைக்காம சொல்லு”, என்று திலாவை ஊக்கப்படுத்தினார்.

ஆனாலும் திலா தயக்கத்தோடு, தன் அனுபவத்தை சன்னமான குரலில், தலையைக் குனிந்தவாறே மாலினியோடு பகிர்ந்து கொள்ளத் துவங்கினாள்.

திலாவின் செயல்பாடுகளைக் கண்டு எதையும் நிர்பந்திக்காது, அவளது போக்கில் இருந்தவாறே தனக்கு வேண்டியதை கேட்டறிந்து கொண்டார் மாலினி.

பெண்ணிடம் சில கேள்விகைளை முன்வைத்து அதற்கான தெளிவான பதிலைப் பெற்றுக் கொண்டவர்,

“நாளைக்கு இதற்கான சொலுயூசன்ஸ் பத்தி ஈவினிங் பேசலாம்”, என்றவர்

நீண்டதொரு நெடிய நேரத்திற்குப் பின் அறையை விட்டு இருவரும் வெளியே வந்திருந்தனர்.

மாலினி, திலாவின் வருகைக்காக தனது இயல்பு முறைகளை மாற்றி அன்று அமைத்திருந்தார்.

மதிய உணவிற்குப் பின் பெண்ணை வெளியே அழைத்துச் சென்றவர், நகரின் மிக நெருங்கிய பகுதியில் தனக்கு வேண்டிய சில பொருள்களை வாங்கிக் கொண்டு திலாவோடு இரண்டு மணி நேரத்திற்குப் பின் வீடு திரும்பினார்.

அன்று மாலை திலா வீடு திரும்பியபிறகு, மாலினி விஷ்வாவிற்கு அழைத்துப் பேசினார்.

“எப்போ வரே விஷ்வா.  இன்னிக்குதான் உன்னாளு வாயைத் திறந்து விசயத்தைச் சொல்லியிருக்கா”, என்று மாலினி சந்தோசமாகக் கூற

“…”

“இனி எல்லாம் உன் வாழ்க்கையில சரியாகிரும்னு நம்பு விஷ்வா.  அதுக்கு நானும், உங்க அங்கிளும் கியாரண்டி”, என்று தங்களது ஆமோதிப்பைக் கூறினார் மாலினி.

“….”

“ஆனாலும் உன் வயிஃப் ரொம்ப அழுத்தம்.  நல்ல பொண்ணுதான்.  பட் அவ வளர்ந்த முறையில சில விசயம் பத்திப் ஃபிராங்கா பேச தயங்கறா”

“…”

“நீ சிட்டியில வளந்தது.  குட்டிக பின்ன தெரிஞ்சது எல்லாம் இன்னும் அவளுக்கு தெரியலைபோல”

“…”

“மாறிட்ட ஒத்துக்கறேன்.  இருந்தாலும் அவ சைட்ல இருக்கிற சில குறைகள் மட்டுந்தான் ஷேர் பண்ணா.  உன்னைக் குறையா இப்ப வரை சொல்லலை”

“…”

“எனக்குத் தெரிஞ்ச மாதிரியெல்லாம் காட்டிக்கல.  பட் நீயும் கோஆபரேட் பண்ணாதான் உன்னாளு விசயத்துல உண்டான பிரச்சனையை சரி செய்யலாம்.  இப்ப நீ ஃபீரியா”, மாலினி

“…”

நேரம் இன்மையால் அடுத்த நாள் காலையில் மாலினியிடம் பேசுவதாகக் கூறி வைத்திருந்தான் விஷ்வா.

விடியலில் பேசி தங்களுக்கான நல்வாழ்வை உறுதி செய்தானா?

அடுத்த அத்தியாயத்தில்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!