இதய ♥ வேட்கை 7

 

மறுதினம் காலையில் அழைத்துப் பேசியவன் மாலினியின் யூக வினாக்களுக்கு விடைளித்தான்.

அரைமணித் தியாலம் ஒத்துழைத்தவன் மாலினியின் சில வினாக்களுக்கு, உள்ளபடி விடையளிக்க இயலாமல் தர்மசங்கடமாக உணர்ந்தான்.

சிறுவயது முதலே தெரிந்தவர் என்றாலும், மரியாதைக்குரிய பெண்மணியிடம் அந்தரங்கம் பற்றிய வினாக்களுக்கு விடையளிக்க முடியாமல் திணறினான்.

ஓரளவிற்குமேல் சில விசயங்களைப் பற்றி பொதுப்படையாகக்கூட பேச யோசிக்கும் நிலையில், தனது அந்தரங்கம் சார்ந்த கேள்விகளுக்கு இலகுவாக பதிலளிக்க இயலாத தடுமாற்றம் வந்தவுடன், மாலினியிடம் மேற்கொண்டு சரளமாகப் பேச இயலாமல் நாக்கு மேலண்ணத்தில் ஒட்டிக்கொள்ள, பேசத் தயங்கினான் விஷ்வா.

தனது தயக்கத்தை ஆரம்பத்திலேயே உணர்ந்தாலும், சற்றுநேரத்தில் அதற்கான எந்த முன்னேற்றமும் இல்லாத நிலையை அறிந்து, “நான் நாளைக்கு இங்கிருந்து கிளம்பிருவேன் ஆண்ட்டி.  வந்துட்டு இதுபற்றி நேருல பேசிக்கலாம்னு தோணுது. ஏன்னா ஸ்டார்ட் பண்ண இடத்திலேயேதான் இருக்கற மாதிரி இருக்கு.  நேருல வந்தா இன்னும் என்னால நல்லா கோஆபரேட் பண்ண முடியும் ஆண்ட்டி”, என்று மாலினியிடம் இரங்கிய குரலில் தனக்கு ஒத்துழைப்பு நல்க வேண்டினான்.

விஷ்வாவின் தயக்கமான பேச்சைக் கேட்டவர், “எனக்கும் அதுதான் சரினு தோணுது விஷ்வா.  நீ இங்க வந்தபின்ன பேசிக்கலாம்”, என்று அதற்குமேல் விஷ்வாவை தர்ம சங்கடத்திற்கு ஆட்படுத்த விரும்பாமல் அழைபேசியை வைத்திருந்தார் மாலினி.

/////////////

மாலையில் வீட்டிற்கு வந்த மிதிலாவிடம், “உன் வீட்டுக்காரன் நாளைக்கு வந்தபின்ன பேசிட்டு, இதுக்கான சொலுயூசன்ஸ் பத்தி சொல்றேன்டா, வெறெதுவும் மேற்கொண்டு பேசணும்னா இன்னிக்கு அதைப் பற்றிப் பேசலாம்”, என்று நேரடியாகவே கூறியிருந்தார்.

தனது குழப்பத்திற்கான முடிவை எதிர்நோக்கி வந்தவளுக்கு மாலினியின் பேச்சில் ஏமாற்றமாக இருந்தாலும், கணவன் வரப்போகிறான் எனும் புதிய செய்தியில் மிதிலாவிற்கு மகிழ்ச்சி உண்டானது.

தனது தயக்கமான மனநிலையை மாலினி எவ்வாறு மாற்றுவார் என்பது பற்றியும், இதற்கு மருந்து மாத்திரை என்று எதாவது சொல்வாரோ, இல்லை மாற்றத்திற்காக என்ன மாதிரியான வழியினை தன்னைப் பின்பற்றக் கூறுவார் என்கிற எதிர்பார்ப்போடு வந்தவள், கணவன் எப்போது வருவான், காலையிலா அல்லது மாலையிலா என்ற மனத்திரிபுக்கு ஆளாகியிருந்தாள்.

அத்தோடு அடுத்த கட்ட நிகழ்விற்கு ஒத்துழைக்க ஆயத்தமானாள்.

அதே அறை. நிறைவான அமைதியான சூழல்.

கையில் எடுத்து வந்திருந்த அறிக்கையின் நகலை எடுத்து, மாலினியின் எதிரில் விரித்து வைத்தாள் மிதிலா.

‘என்னது?’, என்கிற ஆராய்ச்சிப் பார்வையோடு, அறிக்கையை கையில் எடுக்காமலேயே வரிகளை கர்ண சிரத்தையோடு நிதானமாக வாசித்தார் மாலினி.

‘இது எப்படி இவ கையில?’, என்ற கேள்வி மனதில் எழுந்தாலும், ‘புள்ளய பத்தி நாந்தான் தப்பு கணக்கு போட்டுட்டேனோ?’, என்கிற எண்ணம் மேலோங்க

என்றோ படித்த அறிக்கை இது என்கிற நினைவுகளும் வந்து நினைவலையில் மோத…

‘இனி மிதிலா பேசுறத வச்சித்தான் அடுத்தகட்ட நகர்வுக்கு போகமுடியும்’, என்கிற தீர்மானத்தோடு

“சொல்லு மிதிலா.  இந்த ரிப்போர்ட் பத்தி உனக்கு எப்பத் தெரிய வந்தது?”, என்று இயல்பாகவே வினவினார்.

பிராது கொடுக்கும் மனோபாவத்தோடு இருந்த திலாவின் முகத்தைக் கண்டு யூகித்துக் கேட்டார் மாலினி.

இயல்பான மாலினியின் வினா கண்டு, யோசனையோடு, “உங்களுக்கு இதைப் பாத்தா என்ன தோணுது”, என்று நேரடியாகவே வினவினாள் மிதிலா.

“நாங்க பொண்ணு நீதான்னு முடிவானதுமே, இதைப்பற்றி திருநாவு, அவர் மூலமா எதையும் மறைக்கக்கூடாதுன்னு உங்கவீட்ல சொல்ல சொல்லித்தான், உன்னை விஷ்வாவுக்கு பொண்ணு கேட்டோம்.  அவரு உங்கம்மாகிட்ட எல்லாம் சொல்லிட்டதா சொன்னாரு திலா”, என்று நிறுத்த

மாலினியின் பேச்சில் எனக்கு இதுபற்றி முன்பே தெரியும் என்கிற செய்தி இருப்பதை அறிந்து மனமொடிந்து போனாள் திலா.

‘என்ன சொல்றீங்க? இன்னும் என்னென்னவெல்லாம் எனக்குத் தெரியாம நடந்தது’, எனும் மனதின் கேள்வியோடு மாலினியை அசூயையோடு நோக்கினாள் திலா.

“இதைப் பத்தியெல்லாம் எங்களுக்கு எதுவுமே தெரியாதே”, சலனமில்லாத பார்வையோடு கூறினாள் மிதிலா.

“திருநாவு அவர்கிட்ட நாங்க ரெண்டு பேரும் இதைப்பற்றி உங்க வீட்ல சொல்லி, அதற்குமேலே பொண்ணு கொடுக்க பிரியம் இருந்தா மேற்கொண்டு பேசலாம்னு சொல்லித்தான் அனுப்பினோம்.  அவரும் சொல்லியாச்சுன்னு சொல்லித்தான் விஷ்வாவை உங்க வீட்டுக்கு அழைச்சிட்டுப் போறதா செங்கோட்டையில இருந்து போன் மூலமா எங்ககிட்ட விசயத்தைச் சொன்னாரு”, மாலினி

“ஏதோ சதி பண்ணிட்டாங்க.  எங்கம்மா நிச்சயமா இந்த மாதிரி ஒரு மாப்பிள்ளைக்கு என்னைக் கல்யாணம் பண்ணிக் கொடுக்க சம்மதிச்சிருக்கவே மாட்டாங்கம்மா”, மிகவும் உறுதியான குரலில் திலா கூறினாள்.

“என்ன நடந்ததுன்னு திருநாவுக்கு மட்டுமே தெரியும் திலா.  உன்னை நாங்க ஏமாற்ற நினைக்கல.  ஆனா அவருக்கு உன்னை இந்த மாதிரி இடத்தில கல்யாணம் செய்து கொடுக்கறதில என்ன இலாபம்”, என வினவ

“தெரியலையே? அந்த சமயம் எங்கம்மாவுக்கு உடம்பு ரொம்ப முடியாம இருந்தாங்க.  அதனால நான் வேற எதுலயும் கான்சன்ட்ரேட் பண்ணவே இல்லையே”, என பரிதாபமான குரலில் உரைத்தாள் திலா.

“என்ன நடந்ததுன்னு நான் இப்ப உங்கிட்ட சொல்றேன் திலா.  அதுல எங்க சைட்ல நாங்க எதையும் மறைக்கலைங்கறதை நீயே புரிஞ்சிப்படா”, என்று உறுதியான குரலில் கூறினார் மாலினி.

தங்களின் நியாயத்தை நிலைநாட்டும் குரலில் மாலினி பேசியதைக் கேட்டவள், “உங்க சொந்தப் பொண்ணுக்கு இப்டி ஒரு மாப்பிள்ளை பாத்துக் கட்டிக் கொடுத்திருப்பீங்களாம்மா”, என்று கண்ணிலிருந்து வழிந்த நீரோடு கேட்டாள் திலா.

நீண்டதொரு மலை உச்சியில் இருந்து கோடுபோல விழும் வெள்ளம்போல, கன்னத்தில் நிற்காமல் வழிந்தோடிய நீரைப் பார்த்தவாறே

“எம் பொண்ணா இருந்தாலும், நீயா இருந்தாலும் ஆப்போசிட் பார்ட்டி சொல்றதை வச்சி மட்டுமே மேரேஜ் விசயத்துல முடிவெடுக்க மாட்டோம் திலா. 

அக்கம் பக்கத்தில விசாரிச்சு, நாலு இடத்தில கேட்டு நம்பிக்கை வந்தாதானே பொண்ணு குடுப்போம். 

விஷ்வா பத்தி திருநாவு உங்க வீட்ல சொன்னாரா இல்லையாங்கறது எங்களுக்கு இன்னிக்குவர தெரியாது.  

ஆனா பொண்ணு குடுக்கறவங்க எப்டி சும்மா தூக்கினாப்புல, விசாரிக்காம, என்ன ஏதுன்னு மாப்பிள்ளையப் பத்தி எதுவும் தெரியாம பொண்ணைக் கட்டிக் குடுத்துருவாங்களா?”, என்று பெண்ணிடம் வினவியவர்

“எல்லாம் விசாரிச்சு தெரிஞ்சிட்டு, உங்களுக்கு ஒகேன்னதும்தான் கல்யாணம் பேசினதா நாங்க நம்பினோன்டா”, என்று மாலினி தெளிவான குரலில் உரைத்ததைக் கேட்டவள்

“எல்லாருமா சேந்து என்னை இப்டி ஒரு கஷ்டத்தில தள்ளியிருக்க வேணாம்”, என்று குரல் கம்மக் கூறியவளை வினோதமாகவே நோக்கினார் மாலினி.

முந்தைய தினங்களில் விஷ்வாவைப் பற்றி அறிந்து கொள்ள அவள் காட்டிய ஆர்வமென்ன?

தற்போது தனது திருமணத்தைப் பற்றிய ஆதங்க வார்த்தைகளை உதிர்ப்பதென்ன?, என பெண்ணை பேச விட்டு அமைதியாக கேட்டறிந்து கொண்டார் மாலினி.

முதலில் வெகுநேரம் அரற்றியவள், பிறகு, “சரி, அப்டியென்னதான் அவரு பண்ணாருன்னு இப்பவாவது எங்கிட்ட எதையும் மறைக்காம சொல்லுங்கம்மா”, என்று கேட்க

“சொல்றதைப் பற்றி எனக்கொன்னும் இல்லை திலா.  ஏற்கனவே உனக்கு இதுவரை சொன்ன விசயங்களைக் கேட்டு தெரிஞ்சிட்டதுல உன்னை அறியாத ஒரு டிப்பரஷன்குள்ள இருக்க.  அதனால இன்னொரு நாள் நான் விஷ்வாவோட பாஸ்ட் பத்திச் சொல்றேன் உனக்கு”, என்று கூற

“இல்லையில்ல”, என்று வேகமாக மறுத்தவள். 

“எல்லாத்தையும் இப்பவே சொல்லிருங்க”, என்று ஒருவழியாக தன்னை ஆசுவாசப் படுத்தியவாறு கேட்கத் தயாரானாள் திலா.

பெண்ணது பார்வையின் தன்மை புரிந்தாலும், அவர் சார்ந்த மருத்துவத் துறையில் இது சர்வசாதாரணம் என்கிற மனோபாவத்தோடு, மாலினி தானறிந்த விஷ்வாவைப் பற்றிய விசயங்களை மெல்லிய குரலில் மிதிலாவிடம் பகிரத் துவங்கினார்.

///////////

சத்யநாதன் இறந்த பிறகு, தொழிலில் அதிக கவனம் செலுத்தினாலும், மதுவாகட்டும், மாது விசயமாகட்டும், ஊதும் விசயமாகட்டும் எதிலும் குறைவின்றி தன் மனம்போல நடக்கத் துவங்கியிருந்தான் விஷ்வா.

தந்தை இருந்தவரை, சில வரைமுறைக்குட்பட்டு நடந்து கொண்டவன், அதன்பின் வரைமுறையற்று நடந்து கொள்ளத் துவங்கியிருந்தான்.

தந்தை இருந்தவரை இலைமறை காயாக வாரம் ஒரு முறை என்றிருந்தது, அதன்பின் மூன்று அல்லது நான்கு முறை என பெண்கள் விசயத்தில் மாறியிருந்தான்.

தங்களது கெஸ்ட் ஹவுஸில் இதுபோன்ற விசயங்களை தங்குதடையின்றி அரங்கேற்றியவாறு, மனம்போல செயல்பட்டான்.

விஷ்வாவை கண்டிக்கவோ, தட்டிக் கேட்கவோ யாருமில்லாத நிலை.

சுந்தரம், மாலினி இருவரும் பெரும்பாலும் மருத்துவமனையில் தங்களது கடமையில் கண்ணாக இருந்தனர்.

என்றாவது விஷ்வாவை அலைபேசியில் இரண்டொரு வார்த்தை பேசுவதோடு, “வீட்டுப்பக்கம் வந்துட்டுப் போ விஷ்வா”, என்பதோடு கட்டாயப்படுத்தியதில்லை.

விஷ்வாவும், “நேரங்கெடைக்கும்போது கண்டிப்பா வரேன் டாக்டர்”, என்பதோடு அங்கு செல்வதைப் பற்றி நினைத்ததில்லை.

சிறுவயதில் ‘டாக்டர் அங்கிள்’, என்று ஆசையோடு தங்களோடு பேசுபவன், வளர்ந்ததும், “டாக்டர்”, என்று அழைப்பதையே ஆரம்பத்தில் முரணாக எண்ணினார் சுந்தரம்.

“ஏன் விஷ்வா. முன்னலாம் டாக்டர் அங்கிள்னு அன்பா சொல்லுவ.  வளர்ந்தபின்ன டாக்டர்னு மூணாம் மனுசங்க மாதிரி கூப்பிட்டு, என்னை உங்கிட்ட இருந்து தள்ளி நிறுத்தரயே”, என்பவரை

சிரித்தே மழுப்புவானே தவிர பதில் கூறமாட்டான்.

பாதுகாப்பற்ற முறையில் தனது பாலுணர்வு வேட்கையைத் துய்க்கத் துவங்கியவனுக்கு, எதிர்பாரா விதமாக தொற்று உண்டாகியிருந்தது.

பால்வினைத் தொற்று காரணமாக உண்டான அசௌகரிய உணர்வை ஆரம்பத்தில் கண்டு கொள்ளாமல் விட்டிருந்தான் விஷ்வா.

தொற்று முற்றிய நிலையில், அதீத அசௌகர்யங்களை அணுபவித்தவன், மருத்துவரை அணுக முதலில் தயங்கினான்.

இது விசயமாக வெளியில் யாரிடம் போகலாம் என்று தனக்குள் யோசனையோடு பட்டிமன்றம் நடத்தியவாறு இருந்தவன், இறுதியாக குடும்ப மருத்துவர் மற்றும் தனது நீண்ட நாள் நலன் விரும்பியான சுந்தரத்தைத் தொடர்பு கொண்டு தனது நிலையை மிகவும் தர்மசங்கடத்தோடு பகிர்ந்து கொண்டான்.

விசயத்தைக் கேட்டறிந்தவர் முதலில் பால்வினை சார்ந்த பரிசோதனைக்கு விஷ்வாவை உட்படுத்தினார்.

பாக்டீரியா சார்ந்த பால்வினைத் தொற்றாக இருந்ததை அறிக்கையில் கண்டு கொண்டவர், தனது முறையான விசாரிப்பின் மூலம், விஷ்வாவிடம், “சில காரணங்கள்னால இப்டி வர வாய்ப்பு இருக்கு விஷ்வா”, என்று சுந்தரம் பேசத் துவங்கியதும்

தலையை குனிந்தவாறு கேட்கத் துவங்கியிருந்தான் விஷ்வா.

தனது செயலை எண்ணி அவனுக்கே மிகவும் வருத்தம் என்பதைவிட, அருவெறுப்பு வந்தது.

“தொற்றால பாதிக்கப்பட்ட நண்பர்கள் பயன்படுத்தின உள்ளாடைகளைப் பயன்படுத்தறது, இல்லைனா தொற்றுள்ள பெண்களோடு பாதுகாப்பில்லாம உடலுறவு கொள்ளுதல்னு ரெண்டே காரணத்தால மட்டுமே இந்த பாதிப்பு வர வாய்ப்பிருக்கு விஷ்வா.

இதுல நீ எந்த கேட்டகரினு ஓபனா சொன்னா அதற்கேற்றமாதிரி ட்ரீட்மெண்ட் ஆரம்பிக்கலாம்”, என்று தர்மசங்கடமாகவே விஷ்வாவிடம் விசயத்தைப் பகிர்ந்து கொண்டார் சுந்தரம்.

பாதுகாப்பற்ற உடலுறவு என்பதைவிட, பல பெண்களோடு உடலுறவு என்பதை முற்றிலும் தவிர்க்கவும், குறிப்பாக சிசிச்சை முடியும்வரை உடலுறவு என்பதை முற்றிலும் தவிர்க்கும்படியும், தொடர்ச்சியாக சிகிச்சை பெறவும் விஷ்வாவிற்கு முறையாக அறிவுரை வழங்கினார் சுந்தரம்.

குடும்ப நண்பராக தனது தந்தையோடு தோழமையோடு பழகியவரான, தனக்கும் சிறுவயது முதலே நல்ல பரிட்சயமான நபரான சுந்தரத்தின் பேச்சைத் தட்டாமல் முறையான சிகிச்சையோடு, வரம்புக்குட்பட்ட வாழ்க்கை முறையையும் கடைபிடிக்கத் துவங்கினான் விஷ்வா.

மாதுவிடமிருந்து தள்ளி இருந்தவன், மதுவையும், ஊதுதலையும் குறைத்தானில்லை.

“இப்டி நீ வரைமுறையில்லாம கண்ட பொண்ணுங்கள்டயும் தொடர்பு வச்சிக்கறது உனக்கு நல்லதில்ல விஷ்வா.  இந்த இஸ்யூ சரியான பின்ன, நல்ல பொண்ணா பாத்து கல்யாணம் செய்துக்க,  அதான் நல்லது”, என்று அறிவுறித்தவும் தவறவில்லை சுந்தரம்.

“…”, அமைதியாக இருந்தவனை ஆழ்ந்து நோக்கியவாறு

“எதோ இந்தளவு சின்ன பாதிப்புங்கறதால ரெகுலர் ட்ரீட்மென்ட்லயே க்யூர் பண்ணிறலாம்.  எய்ட்ஸ்ஸா இருந்தா இந்நேரம் என்னாகியிருக்கும்னு யோசி விஷ்வா”, என்ற சுந்தரத்தின் பேச்சைக் கேட்டபடி இருந்தவன்,

தனது நிலையை சுந்தரிடம் மறையாது விளக்கத் துவங்கினான், “எனக்கு யாரு அங்கிள் பொண்ணு தருவா? அப்டியேனாலும் பெரியவங்க யாருமில்லாத வீட்ல எனக்குன்னு மெனக்கெட்டு பொண்ணு தேடி பேசி முடிக்கறதெல்லாம் நடக்கிற காரியமா? நீங்களே சொல்லுங்க… அதுவும் எனக்கு இப்டினு விசயம் தெரிஞ்சா எவனும் பொண்ணு தருவானா?”, என்ற விஷ்வாவின் கேள்வியில் அமைதியான சுந்தரம், மாலினியோடு கலந்துபேசி ஒரு முடிவுக்கு வந்திருந்தார்.

அடுத்தடுத்து முறையான சிகிச்சையில் முழுக் குணமானவனை, கணவன் மனைவி இருவரும் அழைத்துப் பேசினர்.

மாலினியை எதிர்கொள்ளவே மிகவும் தயங்கினான் விஷ்வா.

விஷ்வாவின் தயக்கத்தைப் போக்கும் விதமாக, “தவறான வழியில முன்ன நீ நடந்திருந்தாலும் ட்ரீட்மெண்ட்கு வந்தபின்ன உன்னோட கோஆபரேசன் பத்தி உங்க அங்கிள் சொன்னார் விஷ்வா.  இதில இருந்தே இனி அந்த மாதிரி தப்பான வழியை நீ ஃபாலோ பண்ண மாட்டேங்கறதை உன்னோட நடவடிக்கை மூலமா கன்ஃபார்ம் பண்ணிட்டுதான் இதப்பத்தி பேசறோம் விஷ்வா”, என்று நேரடியாகவே பேசினார்.

“விஷ்வா, இந்த ரிஸ்க் உன் பேரண்ட்ஸ்காக நாங்க எடுக்கலாம்னு நினைக்கிறோம்.  உன்னோட பாஸ்ட் எதையும் மறைக்காம பொண்ணு வீட்ல உண்மைய சொல்லி பொண்ணு கேப்போம்.  இனி நீ ஒழுங்கா இருப்பேங்கற அசுரன்ஸ் எங்களுக்கு கொடுத்தா, நாங்க மேற்கொண்டு பாக்கறோம்,  என்ன சொல்ற விஷ்வா”, என்று சுந்தரம் வினவ

“எனக்கு கல்யாணமெல்லாம் சரியா வரும்னு தோணலை அங்கிள்”, என விட்டேற்றியாக பதில் கூறினான் விஷ்வா.

“செக்சுவல் ஃபீல் இந்த வயசுல இயல்பா வரக்கூடியதுதான் விஷ்வா.  இந்த சமயத்துல முறையான உறவு இல்லைனா உன்னால தொழில், வியாபாரம், அடுத்த கட்ட வளர்ச்சின்னு கடந்து போகறது ரொம்பக் கஷ்டம்.  உன் உணர்வுகளை அடக்கும்போதும் சில இஸ்யூஸ் வரத்தான் செய்யும்.

எவ்வளவு நாளுக்கு தனிமரமா இருக்க முடியும்னு யோசிக்கிற? குறிப்பிட்ட வயசுக்குப் பின்ன செக்சுவலுக்குனு ஒரு பொண்ணு தேவையில்லைனாலும், நம்மை அன்பா கவனிக்க, ஆதரவா பேச, நமக்கே நமக்குனு ஒரு உறவு வேணும் விஷ்வா.   

இன்னொன்னு, பழையபடி நீ கண்ட்ரோல் இல்லாம முன்ன மாதிரி மாறினாலும், அகெய்ன் எதாவது பிரச்சனையில மாட்டிக்கிட்டா, இப்போபோல ஈஸியா ரெகவர் பண்ண முடியும்னு சொல்ல முடியாது.  காய்ச்சல் தலைவலி மாதிரியில்ல எஸ்டிடி பிரச்சனை.  அதுல நிறைய வகை இருக்கு. அந்த மாதிரி எதாவது வந்தா குணப்படுத்தறது ரொம்ப சிரமம். 

அதற்குத்தான் சொல்றோம்.  தரகர்கிட்ட சொல்லி வைப்போம்.  வரப் பொண்ணைப் பாத்து நீ ஓக்கே பண்ணா நாங்க மேற்கொண்டு என்ன செய்யலாம்னு யோசிக்கலாம்”, என்று முடித்திருந்தனர்.

தனக்கு கால அவகாசம் வேண்டுமென்றவன், நீண்ட நாள் யோசனைக்குப் பின் ஒரு மனதாக சரியென்றிருந்தான்.

‘உண்மையச் சொன்னா எவனும் தம் பொண்ணை இந்த மாதிரி ஒருத்தனுக்கு தரமாட்டான்.  விசயத்தைக் கேட்டவுடனே பின்னங்கால் பிடறி அடிக்க ஓடப் போறான்’, என்று நினைத்தவாறே மாலினி, சுந்தரத்திடம் சரியென்றிருந்தான் விஷ்வா.

தரகர் கொணர்ந்த பெண்களின் படங்களைப் பார்வையிட்டவனுக்கு யாரையும் சரியென்று கூறத் தோன்றவில்லை.

விட்டேற்றியாக இரண்டு முறை இருந்தவன், அடுத்த கட்ட புகைப்படங்களை எடுத்து வருவதாகக் கிளம்பிய நவீனத் தரகரின் ஃப்ரீப்கேசில் இருந்து விழுந்த பெண்ணின் புகைப்படத்தை எடுத்துக் கொடுக்க முனைந்தபோது, மிதிலாவின் புகைப்படம் கையிலிருந்ததால், கண்ணில்பட வாழும் வேட்கை உண்டாகி,

‘ஓஹ் காட், ஸ்ட்ராபெர்ரிஇஇஇஇஇ…’, என மனம் ஆனந்தம் கொள்ள, இப்பெண்ணைக் கேட்டுப் பாருங்கள் என்றிருந்தான் விஷ்வா.

திருநாவு வந்து நேரில் சந்தித்தபோது, சுந்தரம், மாலினி இருவரும் எதையும் மறைக்காது விசயங்களைக் கூறினர்.

“பையனுக்கு நல்ல வியாபாரம்.  தொழில்முறையில நல்ல முன்னேற்றம்.  இதுக்குமுன்ன பொண்ணுங்க விசயத்துல அப்டி இப்டி இருந்துட்டாரு.  ஆனா அவரே இனி அப்டி தவறமாட்டேன்னு எங்ககிட்ட அசூரன்ஸ் தந்ததோட, நிறைய மாறிட்டதாலதான் பொண்ணு பேசறோம். 

நீங்க பொண்ணு வீட்டு சார்பா வந்திருந்தாலும், இதைப் பற்றி மறைக்காம அவங்க வீட்ல சொல்லி, அதற்குமேல அவங்க பொண்ணத் தர விரும்பம் இருந்தா தரட்டும்”, என்று சுந்தரம் திருநாவுவிடம் விஷ்வாவின் கடந்த வாழ்க்கை முறை பற்றி மறையாது கூறினார்.

விஷ்வாவிற்கு குடும்ப உறுப்பினர்கள் யாருமில்லாத நிலையில், மருத்துவர் சுந்தரம், மாலினி இருவரும் குடும்ப நண்பர் என்கிற நிலையில் திருமணம் பேசுவதை முதல் சந்திப்பிலேயே கண்டு கொண்டிருந்தார் திருநாவு.

மீண்டும், மீண்டும் தம்பதியர் இருவரும் விஷ்வாவின் பழைய நடத்தைகளைப் பெண்ணின் வீட்டில் மறவாது கூறி, அவர்களின் விருப்பத்தை வந்து கூறுமாறு பேசியதைக் கேட்ட திருநாவு, மாலினி, சுந்தரம் இருவரையும் தனது வசதிக்காக மேற்கொண்டு விசயங்களைப் பேசும்போது சமயோசிதமாக ஒதுக்கிவிட்டு, தானே விஷ்வாவை நேரில் அழைத்துச் சென்று கமலாவிடம் திருமணம் பற்றிப் பேசியிருந்தார்.

திருநாவுவின் சமயோசித தவிர்க்கும் செயலைக் கண்டு கொண்ட மருத்துவர்கள் இருவரும், விஷ்வாவின் திருமணம் நடந்தால் போதும் என்கிற நிலையில் மற்ற விசயங்களைப் பொருட்படுத்தாது ஒதுங்கியிருந்து, மணமக்களை வாழ்த்தி மகிழ்ந்தனர்.

திருமணத்திற்குப் பிறகு வந்த நாள்களில் மிதிலாவை வீட்டிற்கு அழைத்து வருமாறு பலமுறை விஷ்வாவிடம் கூறியும் அழைத்து வரவில்லை என்பதையும் பகிர்ந்து கொண்டிருந்தார் மாலினி.

“இப்போ முடியாம போனபின்னதான் ஹாஸ்பிடல்கு வந்தான்.  அதுவரை அந்தப் பக்கமே வந்ததில்லை”, என்பதையும் விளக்கினார் மாலினி.

////////

மாலினியின் பேச்சைக் கேட்டு மாறியிருந்த மனநிலையோடு வீடு திரும்பினாள் மிதிலா.

மாலினி கூறிய செய்திகளில் மட்டுமே மனம் வலம் வந்தது.  தாயின் மறைவிற்குப் பிறகு நீண்ட நேரம் மனம் ஆறுதலடையும்வரை அழுது தீர்த்தாள்.

விஷ்வாவிற்கு அழைத்த மாலினி, சுருக்கமாக விசயத்தைக் கூறிவிட்டு, “அவளை டிஸ்டர்ப் பண்ணாத விஷ்வா.  அவளை தனியா விடு.  ரெண்டொரு நாள்லயோ, ஒரு வாரத்திலயோ கொஞ்சம் தெளிவான பின்ன, இதைப் பற்றிப் பேசலாம்”, என்று விழிப்போடு நடந்து கொள்ள முன்யோசனை வழங்கினார்.

அத்தோடு, “மிதிலா பேசற வச்சித்தான் நாம மேற்கொண்டு அவகிட்ட எதையும் பேச முடியும்.  இதுவரை பொறுமையா இருந்ததுபோல இன்னும் கொஞ்ச நாள் இல்லைனா சில மாசம் பொறுமையா இரு”, என்றுவிட்டு அழைப்பைத் துண்டித்திருந்தார் மாலினி.

மனைவியைக் காணும் ஆவலோடு வந்தனுக்கு தரிசனம் தராமல், தனக்குள் தன்மீதே கழிவிரக்கம் உண்டான நிலையில் ஓடம் விடும் அளவிற்கு, கண்ணீரைச் சிந்தி, சோர்வடைந்தாள் பெண்.

இடையிடையே நாகம்மாள், மிதிலாவின் அறைக்குள் சென்று உண்ண வற்புறுத்தி ஆகாரத்தைக் கொடுத்தார்.

பசி எனும் உணர்வில்லாததால் இரண்டு நாள்கள் அறைக்குள் சென்ற உணவு முழுமையும் அப்படியே வெளியில் திரும்பி வந்தது.

திலாவின் நிலையை அவ்வப்போது அலைபேசி வாயிலாக அறிந்து கொண்ட மாலினி இரண்டாம் நாள் நேரிலேயே வீட்டிற்கு வந்திருந்தார்.

மிதிலாவின் உள்ளம் மாறுமா?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!