IV8

IV8

இதய ♥ வேட்கை 8

 

மாலினியைத் தவிர யாரையும் காணப் பிரியமில்லை என்று அறைக்குள் அடைந்து கொண்டிருந்தாள் மிதிலா.

மாலினியிடமும், “எனக்கு மியூசுவலா டிவோர்ஸ் மட்டும் வாங்கித் தந்திருங்க.  எனக்கு பிடிச்ச மாதிரி நான் எங்க வீட்ல போயி இருந்துக்குவேன்”, என்பதை மட்டுமே மீண்டும் மீண்டும் கூறினாள் மிதிலா.

மாலினியும் பெண்ணை வற்புறுத்தாமல், “நீ என்ன நினைக்கிறயோ அதையே செய்யலாம்டா.  இப்போ பட்டினி கிடந்து எனர்ஜியில்லாம இருக்க.  உனக்கு பிடிக்காத எதையும் உங்கிட்ட திணிக்கற ஐடியா எங்களுக்கு எப்பவும் இல்ல.  அதனால நீ பயப்பட வேணாம்”, என்று உறுதிகூறி இருந்தார்.

அறைக்குள் அடைந்திருந்தவளை கட்டாயப்படுத்தி, வெளியே அழைத்துச் சென்றார்.

பெரியவரைச் சந்தித்த வேளைகளில் எல்லாம், “எனக்கு அவருகூட வாழ முடியாது.  அவரை வேற பொண்ணு பாத்து கல்யாணம் பண்ணிக்கச் சொல்லுங்க, எனக்கு டிவோர்ஸ் வாங்கிக் கொடுத்திருங்க”, என்று கூறுவதையே திலா வழக்கமாக்கியிருந்தாள்.

மாலினியும், “உன் விரும்பம்போல பண்ணலாம் திலா.  ஆனா தனியா ஊருல போயி நீ என்ன செய்யப் போறங்கறதை எங்கிட்ட மட்டுமாவது சொல்லு.  உனக்கு சேஃப்டி பண்ணி எங்களுக்கும் அதில திருப்தியா இருந்தா அங்கேயே அனுப்பிறோம்”, என்று உறுதி கூறியவர்

“நல்லா யோசிச்சு நிதானமா முடிவெடு.  ஆனா நல்ல முடிவா எடு”, என்று கூறியதோடு

“அதுவரை வீட்டுக்குள்ள அடைஞ்சி கிடக்காம உங்க ஆஃபீஸ் போறதான போயிட்டு வா”, என்றும் திலா மீள வழி கூறியிருந்தார் மாலினி.

விஷ்வாவைச் சந்திப்பதையே தவிர்த்தவள், அவனோடு அலுவலகத்திற்கா செல்வாள்.

அலுவலகம் செல்லாது, அறைக்குள் மட்டுமே பொழுதைப் போக்கினாள்.

சில நாள்கள் தனது வழமையை சற்றும் மாற்றாது இருந்தவளைக் கண்ட மாலினி, “இனி நீ வீட்டுக்குள்ள அடைஞ்சி கிடக்காம, எங்கூட வந்து கிளினிக்ல உக்காரு”, என்று நேரில் வந்து கையோடு அழைத்துச் சென்றிருந்தார்.

முதலில் மறுத்தவள் அதன்பின் கடனே என்று மாலினியோடு கிளம்பிச் சென்றிருந்தாள் மிதிலா.

“இனி கொஞ்ச நாளைக்கு எங்கூட இதேமாதிரி டெய்லி வந்து போ திலா.  வேற சூழல்ல வந்து போகும்போது உனக்கும் மனசு இலேசாகும்”, என்று மாலினி கூற, தலையை ஆட்டி அதற்கு தனது ஆமோதிப்பைத் தெரிவித்தாள் திலா.

வாரம் செல்ல, திலா இலகுவான மனநிலைக்கு மாறத் துவங்கியிருந்தாள்.

விஷ்வா அதே வீட்டில் இருந்தாலும், மிதிலாவின் கண்ணில் படவே இல்லை.

மாலினியும் விஷ்வாவிற்கு அழைத்து, “கொஞ்ச நாள் அவளை அவ போக்குல விடுவோம் விஷ்வா. அவ சரியான பின்ன மேற்கொண்டு பேசலாம்”, என கூறியிருந்தார்.

“முன்ன மாதிரியே இருந்திருக்கலாம் ஆண்ட்டி, அவ சொல்லாதப்போகூட எங்கிட்ட நல்லாதான் பேசிட்டிருந்தா.  இப்போ பழையதை பேசப்போக எல்லாம் மாறிப்போச்சு”, என்று வருந்தினான் விஷ்வா.

“ஒரு வருசமா கமுக்கமா இருந்தது மாதிரி காலத்துக்கும் இருக்க முடியாது விஷ்வா.  அதுவும் நீ வாயத்திறந்து இந்த மாதிரின்னு யாருகிட்டயும் சொல்லவே இல்லை.  நான் கெஸ் பண்ணதை அன்னிக்கு உனக்கு கால் பண்ணிக் கேட்டதால சொன்ன”, என்றவர்

“அப்பவும் எங்கிட்ட மறைக்கத்தான் நினைச்ச.  நாந்தான் விடாப்பிடியா உங்கிட்ட பேசி விசயத்தை வாங்கினேன்”, என்றுவிட்டு

“எல்லாம் சீக்கிரமா சரியாகும்னு நம்பு விஷ்வா”, என்றிருந்தார் மாலினி.

////////////

வினோதமான விசயங்களோடு மாலினியை அணுகிய நோயாளிகளின் காரணங்கள், குறைகள், போராட்டங்கள் அவற்றை மாலினி அணுகிய விதம் அனைத்தையும் பொறுமையாக கவனித்தபடி அமைதியாகவே இருந்தாள் திலா.

திருமணம் வரை ஒழுக்கமாக இருந்தவன், அதன்பின் வேறு பெண்ணோடு வாழ்க்கை நடத்துவதாக மனைவி சந்தேகம் கொண்டு, கணவனைத் திருத்தித் தரும்படி கேட்டு தன்னோடு கணவனையும் உடன் அழைத்து வந்திருந்தார்.

விசாரித்ததில், பெண் பெரும்பாலும் அருகிலுள்ள தனது தாயின் வீட்டில் தங்கிவிட, தனது வீட்டின் சாவியை வாங்க அருகில் உள்ள வீட்டிற்குச் சென்றதாகவும், அதனை மனைவி சந்தேகம் கொண்டு விசயத்தை பெரிதுபடுத்தி, பக்கத்து வீட்டில் குடியிருந்த அப்பெண் வீட்டைக் காலி செய்துவிட்டதாகவும் கணவன் கூறினான்.

இதுபோல் உப்பு சப்பற்ற, ஒப்பேறாதா, உலகம் போற்றும், தூற்றும் பல பிரச்சனைச் சுமந்தவாறு பலர் வந்தவண்ணம் இருந்தது அந்த கிளினிக்.

விவாகாரத்து பெற்று தனித்து வாழ்ந்த பெண்ணிடம், நல்லவன்போல வேடமிட்டு, திருமணம் செய்து கொண்டு ஏமாற்றிய கதையோடு ஒருத்தி, ‘இனி நான் பிற ஆண்களிடம் ஏமாறாமல் இருக்க மருந்து எதாவது இருந்தால் தந்து உதவுங்கள்’ என்று வந்திருந்தாள்.

‘என்னையும், எம் புள்ளைக்கும் வேணுங்கறது செய்யவே துப்பு இல்லாதவன், வேற ஒரு பொண்ணை சேத்துட்டு வாழ ஆரம்பிச்சிட்டான்.  அவன் என்னைவிட்டு போனது தெரிஞ்சதும், வரவன், போறவனெல்லாம் எங்கூட வந்திரியானு கேக்கறான்.  இதனால தற்கொலை பண்ணிக்கலாமானு இருக்கு, எனக்கு வழி சொல்லுங்க’, என்று ஒருத்தி பிள்ளையோடு வந்திருந்தாள்.

அன்றாட செலவிற்கு பணம் தராமல், பிறர் போற்ற மூன்று மாடிக் கட்டிடத்தை எழுப்பி, அதில் சகல வசதிகளையும் செய்து, ஊர் மெச்சும் தன் கணவனைத் திருத்த என்ன செய்யலாம் என்று எனக்குத் தெரியவில்லை,  நீங்களாவது நல்ல புத்தி சொல்லி இவரை மாற்றித் தாருங்கள் எனக்கேட்டு மற்றொருத்தி வந்திருந்தாள்.

பிரசவத்திற்கு சென்றிருந்தபோது, வேறொரு பெண்ணோடு குடும்பம் நடத்தத் துவங்கிய கணவனை மீட்டுத்தர யாரை அணுக வேண்டும் என்று கேட்டு ஒருத்தி.

மறுபக்கம், முறையற்ற உறவால் பால்வினை, எயிட்ஸ் போன்ற நோய்த் தொற்றைக் குணப்படுத்த, மீள வழி தேடி ஒரு கூட்டமே வந்த வண்ணம் இருந்தது.

தினசரி வந்த, பல்வேறு விதமான குடும்ப வாழ்க்கை மற்றும் பாலுணர்வு சார்ந்த பிரச்சனைகள் ஏராளம் ஏராளம்.

இவ்வாறு நாளொன்றிற்கு வெவ்வேறானா திணுசில் பல குறைகளோடு வந்தவர்களை, மாலினி கையாண்ட விதத்தையும், கூறிய அறிவுரைகள் அனைத்தையும் கவனமாகப் பார்த்திருந்தாள் திலா.

பெண்ணுக்கு அங்கு வந்த நோயாளிகளின் காரணங்கள், சில மிகவும் அல்பமானவையாகவும், சில சீரணிக்க இயலாததாகவும், சில அருவருக்கத்தக்கதாகவும் பல மாறுபட்ட நிலைகளில் ஒவ்வொரு நாளும் சந்திக்க நேர்ந்தது.

மருத்துவமனையில் வந்த பல வகையான சச்சரவுகளைப் பற்றிய விசயங்களையும், அதற்கான தீர்வுகளையும் மனதில் வைத்து, தனக்குள் அதுபற்றி யோசித்தும், சிலதைக் கண்டு மலைத்தும், வெறுத்தும், சினம் கொண்டும் இருந்தவளுக்கு, தனது வாழ்வில் நடந்த பிரச்சனை பெரிதாகத் தோன்றாமல் இருந்தது.

மாதங்கள் உருண்டோட வீட்டிலும் ஒதுக்கம் மாறி இயல்பாக நடமாடத் துவங்கியிருந்தாள் திலா.

எசமானியின் மாறுபட்ட நிலைகளைக் கண்டும் காணாததுபோல, இயல்பாக இருந்தனர் பணியாளர்கள்.

தங்களுக்குள் அனுமானமாக சில விசயங்களைப் பற்றி பேசினாலும், அதை ஒரு வரம்புக்குள் வைத்திருந்தனர்.

விஷ்வா அனைத்தையும் பொறுமையோடு கவனித்துக் கொண்டு தானிருந்தான்.

ஓரிரு வார்த்தைகள் வியாபார அவசியத்திற்காக, தவிர்க்க முடியாத வேளைகளில், தவிர்க்காமல் தம்பதியர் பேசிக் கொண்டனர்.

“என்ன திலா, இனி நம்ம ஆஃபீஸ் பக்கம் வர ஐடியாவே இல்லையா?”, என்று விஷ்வா ஒரு முறை கேட்க

அப்போதுதான் இத்தனை நாள் அதைப்பற்றி யோசிக்காமல் இருந்தது திலாவின் நினைவில் தோன்ற, “இல்ல மாலினிமா கூடவே கிளினிக் போறேன்”, என்றவளை மறுக்கவில்லை விஷ்வா.

திலா இயல்பாக பேசத் துவங்கியபின், மாலினி அவராகவே திலாவிடம் அவளின் சிறு பிராயத்தில் வளர்ந்த முறை, அவளது பெற்றோர் பற்றி அறிந்து கொள்ள வேண்டி பேச்சைத் துவங்கினார்.

திலாவும் மிகவும் ஆர்வத்தோடு, இரு விசயங்கள் கேட்டால் எட்டு விசயங்கள் பெற்றோரைப் பற்றி பகிர்ந்து பழைய நினைவுகளில் தன்னைத் தோய்த்து மகிழ்ந்தாள்.

பெண் வளர்ந்த நேர்த்தியான முறையினால் அனைத்தும் நேர்த்தியாக இருக்கவேண்டும் என எதிர்பார்ப்பது மாலினிக்கு புரிந்தது.

பெண் மனதில் இரக்கமும், விஷ்வாவின் மீது அன்பும் இருப்பதும் அவளது நடவடிக்கைகளின் வாயிலாகவும், செங்கோட்டையிலிருந்து கிளம்பி வந்த காரணத்தை விஷ்வா  தன்னோடு பகிர்ந்து கொண்டதை வைத்தும் முன்பே யூகித்திருந்தார்.

அவளாக விஷ்வாவை ஏற்றுக் கொண்டாளேயொழிய திலாவை வற்புறுத்தி சம்மதிக்க வைக்க இயலாது என்பதும் தெளிவாகத் தெரிந்தது.

அதற்கான தகுந்த வாய்ப்பு நேரங்காலத்தை எதிர்நோக்கி, இருவரையும் தம்பதியராக்கி மனமொன்றி இருவரும் வாழும் நாளைக் கண்டு மகிழ மாலினியும் காத்திருந்தார்.

/////////

மாதங்கள் சென்றும் செங்கோட்டை செல்வதைப் பற்றி எதுவும் கூறாமல் பெண் இருப்பது விஷ்வாவிற்கு ஆச்சர்யமாக இருந்தது.

தினசரி மாலினியின் கிளினிக் செல்லத் துவங்கியது முதல் பெண்ணிடம் நிறைய மாற்றங்கள் உண்டாகத் துவங்கியிருந்தது.

உணவு மேஜையின் முன்பு எதிரெதிரே அமர்ந்து உண்டு கொண்டிருந்த வேளை, “திலா, செங்கோட்டையில எனக்கு வேலையிருக்கு.  அதனால அங்க இன்னிக்கு ஈவினிங் கிளம்பற ஐடியால இருக்கேன்”, என்று பேச்சை முடிக்காமல் நிறுத்தி பெண்ணை நோக்க

“நீங்க போயிட்டு வாங்க!  நான் இங்க இருந்துப்பேன்!”, என்றவளிடம் துணிந்து

“அப்போ நான் வரவரை இங்க நம்ம ஆஃபீஸ் போயி பாத்துக்கறீயா?”, என்று கேட்டான் விஷ்வா.

“ம்…”, என்று யோசித்தவள்,

“சரி நான் மாலினிம்மாகிட்ட சொல்லிட்டு நம்ம ஆஃபீஸ் போயி பாத்துக்கறேன்”, என்றவளிடம் அதற்குமேல் வார்த்தை வளர்க்காமல் அலுவலகம் கிளம்பியிருந்தான் விஷ்வா.

/////

கடந்து போன தினங்களில் விஷ்வா இரு முறை செங்கோட்டை சென்று வந்தது திலாவிற்கு தெரியாமலேயே போயிருந்தது.

விஷ்வா தற்போது செங்கோட்டை செல்வதை அறிந்தவளுக்கோ,

கடந்த முறை விஷ்வா வெளியூர் சென்றபோது இருந்த தனது மனநிலைக்கும், தற்போது தானிருக்கும் மனநிலைக்கும் உள்ள வித்தியாசத்தை உணர்ந்தவளுக்கு ஆச்சர்யமாக இருந்தது.

விஷ்வா கடந்த முறை வெளியூர் சென்றபோது, நாளைக் கடத்த முடியாமல் ஆரம்பத்தில் துன்புற்றதும், தற்போது விஷ்வாவின் பயணம் தனக்குள் எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாதது கண்டும் யோசித்தாள் திலா.

அதே யோசனையோடு அலுவலகம் சென்றவள், வேலைக்கு மத்தியில் அவசியத் தேவைக்கென இரண்டொரு முறை அலைபேசியில் விஷ்வாவை அழைத்துப் பேசினாள்.

பெண் கேட்ட விசயத்தைக் கூறியதும், வேலையிருப்பதாகக் கூறி உடனே வைத்துவிட்டான் விஷ்வா.

அவசிய பேச்சைத் தவிர, அநாவசிய பேச்சைக் குறைத்திருந்தான் விஷ்வா.

முதலில் அதை பெரிதுபடுத்தாமல், அவளின்போக்கில் இருந்த பணிகளை மட்டும் மேற்பார்வையிட்டவாறு இருந்தாள் திலா.

மூன்று நாள்களில் அதிகபட்சமாக இருபது அழைப்புகள் என்ற நிலையில் விஷ்வாவுடன் வியாபாரம் மட்டுமே பேசியபோதும், ஒட்டாமல் பேசிய விஷ்வாவின் பேச்சுகள் பெண்ணை வதைத்தது.

ஏனோ பழைய நினைவுகள் மனதின் ஓரம் வந்து போனது.

‘உடும்பு நம்மமேல ரொம்ப கடுப்பா இருக்குபோல. முன்னாடியெல்லாம் இடையில ஜொள்ளும்.  இப்பலாம் ரொம்பத்தான் மாறிருக்கு’, என்று திலாவிற்கு தோன்றாமலில்லை.

முன்பெல்லாம் தினசரி அழைத்து தன்னோடு வலுக்கட்டாயமாகப் பேசுபவன், தன்னைப் பேச வைப்பவன், தற்போது ஒட்டாமல் பேசி அழைப்பைத் துண்டிப்பது மனதில் ஏனோ வருத்தத்தை உண்டு செய்தது.

‘பண்றதெல்லாம் அவரு பண்ணிட்டு, இப்போ எங்கிட்ட முகத்தை அவரு திருப்பினா என்ன அர்த்தம்’, என்ற கோபம் விஷ்வாவின் மீது இலேசாக எழுந்தது.

‘வரட்டும், வந்தவுடனே இதைப் பத்தி நாலு வார்த்தை நறுக்குனு கேக்கணும்’, என்றபடி தன்னை ஆசுவாசப்படுத்தினாள்.

நான்காம் நாள் அலுவலகம் செல்லாது, விஷ்வாவின் மீதிருந்த கோபத்தில், டேக் டைவர்சன் தனக்குத்தானே கூறிக்கொண்டு மாலினியின் கிளினிக் சென்றவள் முதலில் எதுவும் பேசாமல் அமைதி காத்தாள்.

மாலினியும் வந்த நோயாளியைக் கவனித்தவாறே, திலாவையும் அவளின் நடவடிக்கைகளையும் கவனித்திருந்தார்.

‘என்னாச்சு.  திடீர்னு உம்மணா மூஞ்சி வேசம் போட்டு வந்திருக்கு புள்ள’, என்ற எண்ணத்தோடு நோயாளியைக் கவனித்து அனுப்பிவிட்டு,

“என்னம்மா உடம்புக்கு எதுனா முடியலையா? டல்லாயிருக்க மாதிரி இருக்க”, மாலினி

“நல்லாதான்மா இருக்கேன்”, என்ற வார்த்தையில் சலிப்புத் தெரிந்தது.

“என்னடாம்மா சலிப்பா பதில் வருது?”, என்று மாலினி வினவ

“இவரு வரவர ரொம்ப பண்றாரும்மா”, என்று திலா கூற

புரிந்தாலும் புரியாததுபோல, “யாரும்மா”, என்று அம்மாஞ்சி முகம் வைத்து, விஷ்வாவைத்தான் பெண் பேசுகிறாள் என்று புரிந்த மனதில் எழுந்த சந்தோசத்தைக் காட்டாமல் கேட்டார் மாலினி.

“வேற யாரு நம்ம உடும்பு விச்சுதான்”, என்று தன்னையறியாமலேயே அவனுக்கு வைத்திருந்த பட்டப் பெயரோடு பேரையும் கூறி அமர்ந்திருந்தாள் பெண்.

“உடும்பு விச்சுனா யாரும்மா? அப்டி யாரையும் எனக்குத் தெரியலையே?  உங்க வீட்ல அந்த நேம்ல யாரும் வேலைக்கு இருக்காராடா?”, என்று தனது அம்மாஞ்சி முகத்தை மேலும் கூட்ட

“ஸ்…”, என்று உதடு கடித்து நிதானத்திற்கு வந்தவள்,

“இல்லைமா நம்ம விஷ்வா இல்ல அவரைத்தான் அப்டிச் சொன்னேன்”, என்று மொக்கை வாங்கிய முகத்தோடு பேசினாள் திலா.

“சரி விஷ்வாவுக்கு என்ன? அவந்தான் ஊருக்குப் போனதா சொன்னியே? அப்டியிருக்க உன்ன என்ன பண்ணான்?”, என்று அறியாததுபோலவே கேட்டார் மாலினி.

அலைபேசியில் தான் அழைத்து ஏதேனும் விபரம் கேட்டால், விபரம் கூறுவதோடு ஒழுங்காக வைத்து விடுகிறான், தன்னைக் கண்டு கொள்ளவே இல்லை என்றும், அதனால் எனக்கு அவர் மீது கோபம் என்றும், உள்ளதை உள்ளபடியே பெண்கள் என்றும் சொன்னதாக செய்தியில்லாத நிலையில்

பெண்ணும், சற்றுத் திரித்து, “கேக்கறதுக்குக்கூட ஒழுங்கா பதில் சொல்லாம, வேலையில பிஸியா இருக்கற மாதிரி ஒரே சீன்மா.  அங்கே போயி நேருல பாத்தாதான் தெரியும், ஐயா எம்புட்டு பிஸின்னு” என்று திலா நடந்ததை சற்று மாற்றி, கற்பனை கூட்டிய சீனை மாலினியிடம் காட்டியிருந்தாள்.

அதற்குமேல் மாலினி பெண்ணின் பேச்சினூடே எதுவும் பேசாமல் அமைதியாக திலாவின் விஷ்வா பற்றிய பேச்சுக்களை மட்டுமே அமைதியாகக் கேட்டிருந்தார்.

‘விஷ்வா. சீக்கிரமே எல்லாம் சரியாகிரும்டா’, என்று மனதோடு சந்தோஷித்தவாறே இருந்தவருக்கு, திலாவின் மாற்றங்கள் தித்திப்பைத் தந்திருந்தது.  ஆனாலும் எதையும் வெளிக்காட்டாமல் கர்ம சிரத்தையோடு பணி புரிவதுபோல தன்னைக் காட்டிக் கொண்டிருந்தார் மாலினி.

/////////////

அருகில் இல்லாதபோது தோன்றாத விசயங்கள், தொலைவில் போனதும் பூதகரமாகி, பெண்ணை மீண்டும் விஷ்வாவின் நினைவோடு நிமிடங்களை கடக்கச் செய்திருந்தது.

சென்னை வந்தவுடன் வீட்டிற்கு வராமல், நேராக அலுவலகம் சென்றதை அறியாது, திலாவும் கிளம்பி அலவலகம் வந்திருக்க, அவனது இனோவாவைக் கண்டதில் அவன் வந்த செய்தி பெண்ணுக்கு ஊர்ஜிதமாக, அவன்மீது முன்பைவிடக் கோபம் உண்டாகியிருந்தது.

‘வரதை முன்கூட்டியே சொல்லியிருந்தா, நாம்பாட்டுக்கு மாலினிம்மா கிளிக்குக்கு கிளம்பி அங்க போயிட்டு இருந்திருப்பேன்.  சொல்லாததால நானும் இங்கே வேஸ்டா கிளம்பி வந்து, ச்சேய்… எல்லாம் இந்த உடும்பால’, என்று மனதோடு திட்டிவிட்டு

கோபத்தை நடையில் காட்டியவாறே, வாசலோடு திரும்பி கிளினிக்கிற்கு கிளம்பியிருந்தாள் திலா.

பெண்ணின் கோபம், மனமாற்றம் எதையும் அறியாதவனோ பணிகளில் மும்முரமாகியிருந்தான்.

திலா வந்து சென்றதை அறிந்த கண்ணன், “சார், மேடம் வந்துட்டு வாசலோட கிளம்பிட்டாங்க”, என்று விஷ்வாவிடம் கூற

“அப்டியா”, என்ற கேள்வியோடு அதைப் பெரிதுபடுத்தவில்லை விஷ்வா.

திலா கண்டிப்பாக மாலினி அவர்களின் கிளினிக்கிற்கு செல்வாள் என்பதை உணர்ந்தவன் அவனது பணிகளில் கவனம் செலுத்தினான்.

///////////

இருவரின் நடவடிக்கைகளைப் பார்வையிட்ட கண்ணன், மதியத்திற்கு பிறகு திலாவிற்கு அழைத்திருந்தான்.

“என்ன திலா ஆஃபீஸ் வாசல் வரை வந்திட்டு, உள்ள வராம அப்டியே கோபமா வாசலோட போயிட்டபோல”, என்க

“கோபமால்லாம் போகல. அவரு அங்க இருக்கும்போது நான் வந்து என்ன செய்யப்போறேன்னுதான் கிளம்பி வந்தேன்”, என்று கண்ணனிடம் எதையும் காட்டிக் கொள்ளாது பேசினாள் மிதிலா.

“அப்ப சார் இங்க வந்ததை உங்கிட்ட சொல்லலையா?”, என்ற சமயோசிதமாக யோசித்து கண்ணன் கேட்க

“சொன்னாரு.  நாந்தான் டிரைவர்கிட்ட சொல்ல மறந்துட்டேன்.  அவரு நேத்து மாதிரி இங்கேயே எனக்கு வேலைன்னு கூட்டிட்டு வந்துட்டாரு”, என்று மழுப்ப

“வந்துட்டு சாரைப் பாக்காம அப்டியே கிளம்பிட்ட”

“வேற முக்கியமான வேலை வந்திருச்சு.  அதான் அப்டியே கிளம்பிட்டேன்”, என்று ஒருவழியாக பதிலைக் கூறி, ‘இவங்கிட்ட இருந்து எப்டி எஸ்கேப் ஆகறது’ என யோசித்ததால், அதேநேரம் கண்ணனின் தந்தை திருநாவுவின் நினைவு வர,

“கண்ணா ணா, உங்க அப்பா இப்ப இங்க இருக்காங்களா இல்லை செங்கோட்டையிலா”, என்று கேட்டாள்.

“ஏங்கேக்குற திலா.  அப்பாவப் பாக்கணுமா”, என்று ஆர்வத்தோடு கண்ணன் கேட்டான்.

“அவரப் பாத்து என்ன செய்யப்போறேன். சும்மாதான் ஒரு ஜென்ரல் நாலெட்ஜூக்கு கேட்டு வச்சிட்டேன்”, என்றவாறு

“எனக்கு வேலையிருக்கு.”, என்றவாறு கண்ணனது வளவளத்த பேச்சைத் துண்டிக்க எண்ணி வைத்திருந்தாள் திலா.

‘எமகாதகி. எதையும் வாயைத் திறந்து என்னிக்குமே பேசாது. எப்டிக் கேட்டாலும் ரெண்டும் சரியான ஊமைக்கொட்டான் கணக்கா ஒன்னும் சொல்லாமயே நம்மை எமாத்துதுங்க’, என்று தம்பதியர் இருவரையும் எண்ணியவாறு கண்ணனும் வைத்திருந்தான்.

///////////////

மிதிலா எனும் பெண்ணை திருமணம் செய்ய எண்ணியது முதலே, பிற மாதுக்களின் மீதான நாட்டத்தை முற்றிலுமாக குறைத்திருந்தான் விஷ்வா.

திலா திருமணமாகி வந்ததுமுதல் திலா தன்னை கணவனாக ஏற்று அதற்கான கடமைகளைச் செய்யாதபோதும், தனது உணர்ச்சிகளின் வடிகாலுக்காகக்கூட பிற மாதுவை நாட எண்ணாமல் இருந்தான் விஷ்வா.

தனது கடந்த கால செயலால் அவமானமான உணர்வை அடைந்த நாள், மீண்டும் தனது வாழ்நாளில் வராமல் இருக்க, என்ன செய்ய வேண்டும், எதைச் செய்யக் கூடாது என்பதில் தெளிவாக இருந்தான் விஷ்வா.

மதுவும், புகையும் உற்ற துணையாயிருக்க வாளாவிருந்தவன், தற்போது உடல்நலக் குறைபாட்டிற்குப் பின் மதுவையும் நாட, தொட இயலாத நிலைக்கு வந்திருந்தான்.

மிதிலா தன்னை விட்டுச் சென்று விடுவாளோ என்கிற ஐயம் தவிர வேறு எதையும் கண்டு, கருத்தில் ஏற்றினானில்லை.

பொழுது சாய்ந்த சற்று நேரத்தில், முன்பை விட விரைவாகவே இரவு வீடு திரும்பியிருந்தான் விஷ்வா.

கோபத்தோடு தனது அறைக்குள் கணவனின் வருகைக்காக காத்திருந்தவள், வந்ததும் விஷ்வா குளிப்பான் என்பதை அறிந்து சற்று நேரம் அமைதி காத்திருந்தாள்.

அதன்பின் தனது படையெடுப்பை விஷ்வாவின் அறை வரை உறுதிசெய்திட, உள்ளே சென்றிருந்தாள்.

மிதிலாவை, தனது அறைக்குள் எதிர்பார்த்திராதவன், பாலுமகேந்திரா படத்தின் ஹீரோ போல படுகவர்ச்சியாக மேல்சட்டை இல்லாமல், அகன்ற புஜங்களுடன் கரிய நிற கண்ணாடியிலான மேல்சட்டை அணிந்தது போல அடர்ந்து வளர்ந்திருந்த முடி திறந்த தேகமெங்கும் வளர்ந்திருந்தது மட்டுமே தெரியும்படி ஷார்ட்ஸோடு நின்றிருந்தான்.

படு மோசமாக ‘இது திலாவின் எண்ணம்’ உண்மையில் கவர்ச்சியாக மேல் சட்டையின்றி எதிரில் நின்றவனின் கோலத்தைக் கண்டு, தனது முட்டாள் தனத்தை மனதிற்குள் நொந்தபடி, ஆனால் வெளியில் நமத்துப் போன சீனிவெடிபோல முனுமுனுத்தாள்.  

‘வரான் பாரு… மேல ஒரு டவல் கூட இல்லாம… என்னைப் பாரு… என் ஆம்ஸைப் பாருனு… பாத்த எங்கண்ணு பியூசாப் போனா  என் ஃபியூச்சர் என்னாத்துக்கு ஆகறது’, என்று மெல்லிய குரலில் தனக்குள் கூறியபடியே ‘இதுக்காகவே ஒரு கிளாஸ் வாங்கி போட்டுக்கணும்போல’ என தன்னை சுதாரித்துக் கொள்ளப் போராடியவாறு நின்றவளைக் கண்டு,

பெண்ணின் முனுமுனுப்பை முற்றிலும் கேட்டும் கேட்காதவன்போல, “என்ன மிதிலா, என்ன விசயம்?”, என்று வினவியவாறே, பெண்ணை அதிகம் சோதிக்க விரும்பாது, கையில் கிடைத்த மேலாடையை எடுத்து அவசரமாக அணிந்து கொண்டான் விஷ்வா.

ஆம்ஸைப் பார்த்து உண்டான பதற்றத்தை தனிக்க, அறைக்குள் பார்வையை மாற்றி தன்னை தேற்ற முயன்று தோற்றாள் திலா.

நேர்த்தியற்றிருந்த அறையை அசூசையான உணர்வோடு பார்வையில் கடந்தவாறே, “இன்னிக்கு இங்க ஆஃபீஸ் வரதா இருந்தா அதை எங்கிட்ட முன்னாடியே சொல்றதுக்கென்ன?”, என்று கோப முகம் தரித்து கேட்டவாறு நின்றிருந்தாள் திலா.

பெண்ணின் தோற்றத்தைக் கண்டு, முதல் சந்திப்பு மனதில் நிழலாட சிரித்தவாறே, “ஓஹ், அதக்கேக்கதான் வந்தியா”, என்றபடியே

“உக்காரு திலா”, என்று அங்கிருந்த ஷோபாவைக் காட்ட, அதைக் கண்டு கொள்ளாது நின்றவளிடம்

“போன வேலை முடிஞ்சதும் கிளம்பி வந்துட்டேன்.  அதனால உனக்கு ஏதும் பிரச்சனையா ஸ்ட்ராபெர்ரி?”, என்று விஷ்வா வினவ

“ம்..”, என்று முறைப்போடு கூறியவள்,

“இல்லைனா எதுக்கு வந்து கேக்கப் போறேன்.  நீங்க வரதா இருந்தா நான் மாலினிம்மா கிளினிக்குக்கு இங்கிருந்தே போயிருந்திருப்பேன்ல.  இன்னிக்கு ஒரே அலைச்சல் உங்கன்னால”, என்று எகிற

“சாரிடா. அது எனக்குத் தோணலை”, என்றவன்

“இனி அந்த மாதிரி கிளம்பி வந்தா உங்கிட்டே முன்கூட்டியே சொல்லிறேன்”, என்று சிரித்தவாறே கூறினான் விஷ்வா.

“எதாவது டீடையில் கேட்டா அதைக் கொஞ்சம் பொறுமையா சொல்றதுக்கென்ன?  கேட்டுக்கிட்டு இருக்கும்போதே டக்டக்னு போனை வச்சா என்ன அர்த்தம்? இதல்லாம் எனக்குப் பிடிக்கலை.  நாந்தானே உங்களுக்கு கூப்பிடறேன்.  நான் வைக்குமுன்னே நீங்க போனை வச்சா நல்லாவா இருக்கு”, என்ற அடுத்த போருக்குத் திலா தயாராக

“அப்டியா வச்சேன்”, என்று யோசித்தவன்,

“வேற வேலை இருந்திருக்கும்டா.  அதனால வச்சிருந்திருப்பேன்”, என்று சிரிப்பு மாறாமல் கூறினான் விஷ்வா.

“இந்த டா போட்டு பேசறதெல்லாம் எங்கிட்ட வேணாம். வேற ஆளுக்கிட்ட வச்சிக்கங்க.  ஆமா… நானே ரொம்ப கோபத்துல இருக்கேன்”, என்று மீண்டும் முறுக்க

திலாவின் கோபம்கூட விஷ்வாவைச் சந்தோசம் கொள்ளச் செய்தது.

‘இப்டி கோபப்பட்டு உன்னைப் பாத்து எவ்வளவு நாளாச்சு.  பேசாம இருக்கறதுக்கு எங்கிட்ட நீ அடிக்கடி கோபமாவதுபடலாம்’, என்று எண்ணியவாறே பெண் பேசுவதைக் கேட்டிருந்தான் விஷ்வா.

“உங்ககிட்ட கோபமா வந்து பேசிட்டு இருக்கேன்.  நீங்க என்னனா சிரிச்சிட்டே பதில் சொன்னா என்ன அர்த்தம். என்னைப் பாக்க உங்களுக்கு எப்டித் தோணுது”, என்று விடாது மேலும் விஷ்வாவை சோதித்தாள் திலா.

“சரி இனி நான் சிரிக்கலை”, என்று அடக்கிய சிரிப்போடு பேசியவனை

“வர வர ஏந்தான் நீங்க இப்டி பண்றீங்கனு எனக்கொன்னும் புரியலை”, என்றபடியே தான் கேட்க வந்த வேலை முடிந்து அறையை விட்டு வெளியேறி இருந்தாள் திலா.

புயல் வந்து ஓய்ந்தது போல அறையில் அமைதி நிலவ, அடுத்த பத்தாவது நிமிடத்தில் வீட்டில் வேலைபார்க்கும் ராசாத்தி வாயிலில் வந்து நின்றிருந்தாள்.

“ஐயா, உங்க ரூம் கிளீன் பண்ணாம இருக்குன்னு”, என்ற இழுக்க

தன் அறையைப் பார்த்தவன் அறையின் கோலத்தை திலா பார்வையிட்டதால் வந்த தாக்கம் இது என்பதைப் புரிந்து கொண்டவனாக,

“வந்து க்ளீன் பண்ணு ராசாத்தி”, என்றவாறு மாலினி, சுந்தரம் இருவரையும் நேரில் சந்திக்கக் கிளம்பினான்.

அறையில் இருந்த குறைகளைக் களைய நினைத்தவள், விஷ்வாவின் குறை களைந்து வாழ நினைப்பவனை ஏற்றுக் கொள்வாளா?

வரும் அத்தியாயத்தில்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!