உன்னோடு தான் … என் ஜீவன்…
பகுதி 14
இரவின் நிசப்தமும், இருளும் எங்கும் தென்படா வகையில் மின்னி மறையும் ஒளியும், காதுமடல் கிழியும் வண்ணம் ஒலிக்கும் பாடல்கள், என அந்த ‘டிஸ்கோத்தே க்ளப்’ அந்த நள்ளிரவிலும் பகலை போன்ற தோற்றத்தை கொடுத்துக் கொண்டிருந்தது.
இளைஞர்களும், இளம் யுவதிகளும் பாகுபாடு தெரியா விதத்தில் அந்த இடத்தையே கலகலப்பாக மாற்றிக்கொண்டிருந்தனர் தங்களின் நடனத்தால்…. அத்தனை பேரும் சோர்ந்து போனாலும் , கடைசி வரை தனது ஆட்டத்தை நிறுத்த போவது இல்லை எனும் விதமாக இருவர் மட்டும் போட்டி போட்டுக்கொண்டு, தங்களின் திறமையை, தங்களின் வேகமான, அதே நேரம் நளினமாக வெளிப்படுத்திக் கொண்டிருந்தனர். அவர்களை சுற்றி இருந்தவர்களையும், அவர்களின் உற்சாகம் தொற்றிக் கொள்ள, கை தட்டலும், ஆரவாரமும் என அந்த பகுதியே அதிர்ந்து கொண்டிருந்தது.
“கௌதம்…. !!!!” ,”ஆரன்…..!!!” என்ற சத்தம் மட்டும் விண்ணை தாண்டி ஒலித்திடுமோ, எனும் விதத்தில் அங்கே குழுமி இருந்த இளம் பெண்கள், இருவரின் பெயரையும் மாற்றி மாற்றி சொல்லி கூச்சலிட… ஆடிக்கொண்டே சன்ன சிரிப்போடு , இருவரும் அடுத்தவரின் முகம் பார்த்து ஸ்டைலாக ஒற்றை கண்சிமிட்டி விட்டு.. மீண்டும் ஆட்டத்தின் வேகத்தை கூட்ட…. அந்த இடமே பூகம்பம் கண்டது போல அதிர்ந்தது மீண்டும்…
ஒருவழியாக ஆடி கலைத்த ஆரன் , மற்றவனுக்கு சைகை காட்டிவிட்டு தங்களின் தோழர்கள் அமர்ந்திருந்த இடத்திற்கு வர,
“டேய் ஆரா! கௌதம் இன்னுமா டையர்டு ஆகல..நீயே வந்திட்ட இன்னும் அவன் வரமாட்டிங்கறான் !!”
“மச்சி ,செம டேன்ஸ்.. !”
“ஏன் மச்சி ரெண்டு பேருமே பொண்ணுங்க கூட ஆடாம ,சோலோ வா வே ஆடறீங்க?! . உங்க கெப்பாசிட்டி மட்டும் எங்களுக்கு இருந்திருந்தா .. இங்க இருக்கற பாதி ஃபிகர கரெக்ட் பண்ணியிருப்போம்… !!!”
என ஆளுக்கு ஒன்றை சொல்லிக் கொண்டிருக்க, அவர்கள் சொன்னது எதுவும், தனது காதில் விழவில்லை எனும் விதமாக, அங்கிருந்த ‘கோக்’ டின்னை கையில் எடுத்தவன் , அதை உடைத்து வாயில் கவித்துக் கொண்டே பார்வையை கௌதமிடம் செலுத்தினான்.
அப்போது ,
“இந்த இரவுதான் போகுதே போகுதே
இழுத்துக்கட்ட கயிறு கொண்டுவா நண்பனே நண்பனே
இங்கே தான் சொர்க்கம் நரகம் இரண்டும் உள்ளதே ..
ஆந்தை போலதான் இரவிலே இரவிலே
கண்ணிரண்டை திறந்துவைக்கலாம் நண்பனே நண்பனே
இங்கேதான் இன்ப துன்பம் ரெண்டும் உள்ளதே
என்றென்றும் பகலிலே ஏதேதோ வழியிலே
பொல்லாத ஞாபகத்தை துரத்தி துரத்தி
கொன்றுப்போடு இரவிலே
பொய்யான வாழ்விலே மெய்யான இன்பம் இந்த போதையாலே”
என்ற பாடல் பின்னணியில் ஒலிக்க அதற்கு தகுந்தாற் போல, தனது ஆட்டத்தை தொடர்ந்து கொண்டிருந்த கௌதமும், அங்கிருந்தே.. ஆரனை பார்த்து, சைகையால் மீண்டும் தன்னிடம் அழைத்தான் நடனத்தை தொடர..
பாடலின் வரிகளும், இசையும் ஆரனையும் ஈர்க்க, கையில் கோக் பாட்டிலோடு, தனது நடையில் நடனத்தையும் சேர்த்து, ஆடிக்கொண்டே சொன்றான் கௌதம் இருக்கும் இடம் நோக்கி…
அந்த நேரத்தில், அங்கிருந்த வேறு குழுவில், சில இளைஞர்கள் அதீத போதையால்.. போவோர், வருவோரை பாகுபாடின்றி சீண்டி கொண்டிருக்க, அவர்களை ஆரன் கடக்கும் நேரம், அவர்களில் ஒருவன் கை பட்டு ஆரன் கையிலிருந்த கோக், அவர்கள் குழுவில் இருந்த, மற்றொருவன் மீது கொட்டிட, எதிர்பாரா இந்த நிகழ்வால் அதிர்ந்த ஆரன், தவறு தன் மீது இல்லாத போதும் ,
“சாரி பாஸ்.. தெரியாம..!” என சொல்லி முடிக்கும் முன்பே, எதையும் யோசிக்காமல் , தனது கையை ஆரன் கன்னத்தை நோக்கி வீசியிருந்தான் கோக் அபிஷேகம் வாங்கியவன். அவன் கை ஆரனை தீண்டும் முன்பு அதை கெட்டியாக பிடித்திருந்தது கௌதமின் கரம்.
ஆரனை பார்த்தவாரே ஆடிக்கொண்டிருந்த கௌதமிற்கு, நடக்க போவது புரிந்த நொடி, அவ்விடத்திற்கு விரைந்தவன் , ஆரனை அவனின் அடியிலிருந்து காத்திருந்தான். தன் மீது விழப்போகும் அடியை அனுமானித்த ஆரன், கண்களை மூடி சில நிமிடம் ஆகியும், தன் மீது எந்த கையும் படாமல் இருப்பதை உணர்ந்தவன் , கண்களை திறக்க, தன் கண்முன் இருந்த கரம்.. மற்றொரு கரத்தை தடுத்திருப்பதை பார்த்தவன், திரும்பி பார்க்க .. அங்கே நின்ற கௌதம், அவனை பார்த்து.. ‘எப்போதும் நான் இருப்பேன் உனக்கு துணையாய். என்னை தாண்டி தான் எந்த ஆபத்தும் உன்னை நெருங்கும் !’ என்பது போன்ற பாவனையோடு, புன்சிரிப்பை அளிக்க,
ஆரன், தன்னை அடிக்க வந்தவனை திரும்பி பார்த்த பார்வையில்,’இப்ப.. தில்லிருந்தா! கை வை பார்க்கலாம்?!!’ என்ற தெனாவெட்டு தெரிய, சில நிமிடம் முன்பு, கௌதமின் கண்ணை பார்த்து, அதன் உள் தெரிந்த ஆவேசத்தில் மிரண்டு நின்றவன், ஆரனின் பார்வையால் வந்த கோபத்தில், இதுவரை காத்த பொறுமையை விட்டவன், கௌதமிடம் இருந்து தனது கரத்தை வேகமாய் விடுவித்து கொண்டு, ஆரனை நோக்கி பாய , தான் கற்றுக் கொண்ட தற்காப்பு கலையினை கொண்டு அவனை மட்டுமல்ல , அவனோடு துணைக்கு வந்த அனைவரையும் தும்ஷம் செய்திருந்தான் கௌதம் சில வினாடிகளில்…
நடந்த இந்த நிகழ்ச்சியால் , அதுவரை ஒலித்துக் கொண்டிருந்த பாடல் சட்டென நிறுத்தப்பட, ஒட்டு மொத்த கும்பலும், அங்கு நடந்து கொண்டிருந்த அந்த சண்டையை , ஆடல், பாடலை விட வெகு சுவாரஸ்யமாய் ரசிக்க துவங்கினர். அதற்குள் அங்கே விரைந்து வந்த பவுன்ஸ்ஸர்ஸ் அவர்களை பிரித்து அழைத்து செல்ல, கௌதமும் , ஆரனோடு தனது மற்ற நண்பர்கள் குழு இருந்த இடத்திற்கு வந்தான்.
கௌதம் , ஆரன் இருவரும் வந்தவுடன் , “கௌதம் , இவன் சொன்னப்ப நா நம்பவே இல்ல. இப்ப நேர்ல பார்க்கும் போது … செம ஷாக்!
அதெப்படி அவனுக்கு மட்டும் எதாவதுன்னா.. முதல் ஆளா போயிடுற.. நீ இருந்த டிஸ்டன்ஸ்க்கு அவ்வளவு சீக்கிரம், நீ இந்த க்ரவ்டுல அவங்ககிட்ட வந்ததே ஆச்சர்யமின்னா, அதோடு அவனுங்க அத்தனை பேரையும் நீயே சமாளிச்ச பாரு… ச்சான்ஸ் லஸ் மேன்…!!!” என , இன்று தான் புதிதாக, தன் தோழனோடு வந்திருந்த புதியவனின் பேச்சிற்கு சின்ன சிரிப்பை மட்டுமே பதிலாக்கினான் கௌதம்.
“டேய், நீ, இப்ப தான் இவங்களையே நேருல பார்க்கற!. நா சொன்னத வச்சு அவங்கள பத்தி நீ தெரிஞ்சிக்கிட்டு இருந்தாலும் … பல வருஷமா பழகற எங்களுக்கே இவங்க புரியாத புதிர் தான். அவன் எப்பவும் இப்படி தான்.. “என்றவன் “எப்படி தான் சரியான நேரத்தில அவனுக்கு ஹெல்புக்கு வர்றான்னே தெரியல… ?!” என சிலாகித்து கூறினான்.
அந்த நண்பனுக்கு எங்கே தெரிய போகிறது, மிக மிக தேவையான நேரத்தில், கௌதமின் துணையை ஆரன் நாடி நிற்கும் போது , ஆரனை விட்டு கௌதம் விலகி சென்றிடுவான் என்பதும், அதனால் ஆரன் பெற போகும் அவமானமும், இழப்புகளும்….!!!” என விதி அங்கிருந்த அனைவரையும் பார்த்து உரக்க சொன்னது யார் காதிலும் விழாது போனதோ..!
கௌதம் சொன்னவன் முதுகில், செல்லமாய் ஒரு அடியை வைத்துவிட்டு அங்கிருந்த இருக்கையில் ‘கோக் ‘கோடு அமர்ந்தான். அவனருகே அதே போல அமர்ந்த ஆரன் மற்ற நண்பர்களிடம் பேச ஆரம்பிக்க,
அப்போது , அந்த புதியவன் , “கௌதம் , ஏன் ரெண்டு பேரும் லிக்கர் யூஸ் பண்ணல. இன்பேக்ட் உன்னோட வசதிக்கும், வயசுக்கும், இப்போ நீ .. இருக்க வேண்டிய லெவலே வேற..!” என சொன்னவனின் பாவனையிலேயே, அவன் சொன்ன,’லெவல்!’ எதுவென புரிய,
அந்த புதியவனை அழைத்து வந்த, தனது தோழனை கௌதம் பார்த்த பார்வையின் அர்த்தம் புரியாதவன் இல்லையே அவன். அதனால் “சாரிடா, கௌதம்! சொந்தகார பக்கிடா. ஊருல இருந்து வந்திருக்கு. சரியான இம்சை. வேற வழியில்லாம கூட்டிட்டு வர வேண்டியதா போச்சு!” என கௌதமின் காதருகே வந்து கிசு கிசுத்து விட்டு, பார்வையாலும் மன்னிப்பை வேண்ட,
அவனின் நிலையை புரிந்து கொண்ட கௌதம் , அந்த புதியவனை நோக்கி, “பணக்கார பசங்கன்னா கெட்ட பழக்கத்தோட ஒட்டு மொத்த கூடாரமா இருக்கணுமா என்ன?!” என நக்கலாய் கேட்க..
அவனின் நக்கல் புரியாத அவனோ.. “ஒட்டு மொத்தமா இல்லாட்டியும், வர்றத அனுபவிக்கலாமே! பாரு, இங்க இருக்கற கேல்ஸ் எல்லாருக்கும் உன் மேல தான் கண்ணு. நீ ஆரனை தவிர யாருக்கும் கண் காட்ட மாட்டிங்கற. நீ மட்டும் லைட்டா திரும்பி பார்த்தா போதும், பச்சிங்க அப்படியே வந்திடுடாது! தானா கிடைக்கறத அனுபவிக்கறதுல தப்பில்லையே! எனக்கென்னமோ சந்தேகமா இருக்கு , நீ பொண்ணுங்கள நெருங்காம, நெருங்கவும் விடாம இருக்க காரணம் ஏதோ இருக்கு. ஆரன் தான் உனக்கு எல்லாமுமா?” என சொல்லி நக்கலாய் கண்சிமிட்டி சொன்னவனின் சொல்லின் அர்த்தம் ‘அவனா நீ !!’ என்பது புரிந்த நொடி , கௌதமின் கரம் அவனின் கன்னத்தை பதம் பார்த்திருந்தது.
ஏற்கனவே முதல் முறை பார்க்கும் ஒருவரின் அனுமதி இல்லாமல் மரியாதை இல்லா பேச்சே அவனை பிடிக்காமல் செய்திருக்க, தனது தோழனுக்காக பொறுத்திருந்தவன் , இப்போது அவனின் இந்த அசிங்கமான பேச்சில் வெகுண்டெழுந்த கௌதம், “யூ பிள….. பி…*****” என ஆரம்பித்து, சில தகாத ஆங்கில வார்த்தையில் அவனை வருத்தெடுத்தவன் ,
அவனை அழைத்து வந்தவனை நோக்கி தனது கண்டனத்தை பார்வையால் தெரிவிக்க, அவனுக்கே தன் உறவினனின் பேச்சில் இருந்த அர்த்தம் மிகவும் தவறாக பட்டதால், “சாரி கௌதம் இனி நம்ம இருக்கற இடத்தில இவன் வர மாட்டான். சாரி பார் ஆல்…” என மனதின் வருத்தம் வெளிப்படையாய் தெரிய சொன்னவனின் நிலைக்காக…
“இவனோட வந்த ஒரே காரணத்துனால உயிரோட போற. இதே, நீ மட்டும் யாருன்னு தெரியாம இருந்து, இப்படி நீ கேட்டிருந்தா! அப்ப தெரியும் இந்த கௌதம் யாருன்னு…! இனி ஒரு முறை உன்ன நா பார்க்க கூடாது. கெட் லாஸ்ட் ..?!” என கத்தியவனை..
மற்றவர்களோடு பேசிக் கொண்டிருந்த போதும், இவர்களின் பேச்சிலும் கவனம் வைத்திருந்த ஆரனுக்கும் அவன் பேசியதை கேட்ட போது, கௌதமிற்கு வந்த அதே கோபமும் ஆத்திரமும் வந்தாலும், இப்போது அவனிடம் ஆவேசத்தை காட்டுவதை விட கௌதமின் நிலையை பார்ப்பதே உகந்தது என்ற முடிவோடு , அந்த வார்த்தையை சொன்னவனை முறைத்தபடியே கௌதமிடம் வந்தவன்,
“கௌதம் விடுடா. அந்த லூசுக்கு உன்ன பத்தியும், உன் கொள்கை பத்தியும் தெரியல. அதனால ஒழறிட்டு போறான். இங்க இருக்கற எல்லாருக்குமே உன்ன பத்தி தெரியும் தானே .. பீ கூல்… ” என சமாதானம் செய்து அங்கிருந்து அழைத்து சென்றான், தங்கள் வாகனம் நிறுத்தியிருக்கும் இடத்திற்கு… மற்றவர்களிடம் பார்வையால் விடை பெற்று…
அங்கே இரண்டு ஒரே மாதிரியான, ஒரே நிறம் கொண்ட டூக்காட்டி இவர்களுக்காய் காத்திருந்தது. வெளியே வந்தும் கௌதம், அவனின் வார்த்தைகள் தந்த தாக்கம் சிறிதும் குறையாது தவிப்பதை கண்டு கொண்ட ஆரன், “ கௌதம் விடுடா ! அதையே நினச்சிட்டு!” என்றதும்,
“ஏன்டா ஆரா ! தண்ணி அடிக்கறது, தம்மடிக்கறது, ஒரு பொண்ண கரெக்ட் பண்ணி, அவளோட முறையான உரிமை இல்லாம கட்டிலை ஷேர் செய்யறது இதெல்லாமா ஆம்பிளைக்கு உதாரணம். எந்த பொண்ணு நம்மள நம்பி வர்றாளோ, அவளுக்கு கடைசி வரை எந்த கஷ்டத்தையும் கொடுக்காம நிம்மதியான வாழ்க்கையை உருவாக்கி கொடுக்கறது தான் உண்மையான ஆம்பிளை.
எந்த விசயத்தை நம்பிக்கையா அவளுக்கு நம்ம கொடுக்கிறோமோ நம்மோட கடைசி நொடி வரை அதே நம்பிக்கையை அவளுக்குள்ள விதைச்சு அதையே செயல்ல காட்டறவன் தானேடா ஆம்பள. அத விட்டு .. ச்சை….!” என அவனின் கேவலமான சொற்களினால் விளைந்த ஒவ்வாமையை முகத்தில் காட்டிட..
“கௌதம் இங்க பாரு.. நீ , உன் ஒட்டு மொத்த காதலும், நேசமும் நீ கல்யாணம் செய்துக்க போற அந்த பொண்ணுக்கு மட்டுமேன்னு தவம் இருக்கன்னு எங்களுக்கு தெரியுமே. அந்த பொண்ண பார்த்து, உன்னோட வாழ்க்கையில வெற்றிகரமா , சந்தோஷமா வாழ்ந்து காட்டுடா. அதவிட்டு இப்படி பேசற சில சில்லரைதனமான கேரக்ட்ருக்காக நீயேன் ஃபீல் பண்ற.
என் கௌதமோட மொத்த அன்பையும், காதலையும் அடையபோற அந்த பொண்ணுக்காக நீ மட்டுமில்ல , நானும் தான் காத்திட்டு இருக்கேன். இதெல்லாம் அந்த மாதிரி ஆளுக்கு புரியாது விடுடா.. கூடிய சீக்கிரமே அவ உன்கிட்ட வந்திடுவா பாரேன் ” என சொன்ன நேரம், வானத்து தேவதைகள் “ததாஸ்து..” என்று சொல்லியதை ஆரன் அறியவில்லை.
ஆரன் சொன்னதை கேட்ட கௌதம் , தனது கவலை மறந்து இதழில் சிறு புன்னகையை மலரவிட்டவன், “ஆமா டா, இதெல்லாம் நாளைக்கே நடக்கற மாதிரி சொல்ற. முதல்ல நம்ம பிஜீ முடிக்கலாம். படிப்பு பிஸ்னஸ் ன்னு ஏற்கனவே நிற்க நேரமில்லாம சுத்திட்டு இருக்கேன். இப்ப அதுக்கான நேரமும் இல்ல, தேவையும் இல்ல. அதுக்கெல்லாம் இன்னும் வயசு இருக்குடா அப்ப இத பத்தி பார்க்கலாம் ” என்றவன்,
“ஆரா! சன்டே ஷாப்பிங் போகணும். மன்டே காலேஜ் ஓப்பனிங். அதோட கம்பெனி மீட்டிங்ஸ் வேற . சோ அதுக்கு அப்புறம் எனக்கு டைம் கிடைக்காது” என்றதும் ,
“ஓகேடா, சன்டே காலைலயே போயிட்டு வந்திடலாம். இப்ப வா போலாம் இங்கிருந்து, யார் பஸ்ட் நம்ம ஏரியா போறாங்கன்னு ரேஸ், என்ன ஓகே வா!” என்று கூற, மொத்தமாக கௌதமின் மனநிலை மாறி, அடுத்த நொடி தனது வாகனத்தை தயார் நிலையில் வைத்தான், ‘தான் ரெடி!’ என்பதை போல.
ஆரனும் தனது வாகனத்தில் ஏறிய நிமிடம் தொடங்கியது அழகான ஒரு பந்தயம்.
அவர்கள் அங்கிருந்து செல்லும் வரை அங்கே யாரும் பார்க்காதவாறு மறைந்திருந்தவள் வெளிவர, அவளுடன் வந்த தோழிகள் அவளை சூழ்ந்து , “ஏய் என்னடீ ஆச்சு உனக்கு?! அவன பார்த்ததுல இருந்து பின்னாடியே சுத்திட்டு இருக்க!” என ஒரு தோழி கேட்க,
இன்று வந்தது முதல் கௌதமின் அழகிலும், ஆட்டத்திலும், பின் நடந்த சண்டையிலும் என ஒவ்வொன்றையும் ரசித்திருந்தவள் , இப்போது கௌதம் , ஆரன் இருவரின் பேச்சையும், கேட்டவள் முடிவே செய்திருந்தாள், ‘தனது வாழ்க்கையில் கௌதம் தான் தனக்கு!’ என்று..
தோழி கேட்டதற்கு பதில் சொல்லாமல் , அங்கிருந்த அனைவரையும் பார்த்தவள், “இப்ப போன அந்த ப்ளாக் டீசர்ட் , பத்தி உங்க யாருக்காவது எதாவது தெரியுமா? ஐ மீன் அவனோட பேர் கௌதம் ங்கறத தவிர…?” என கேள்வி எழுப்ப,
“பேர் கௌதம், MBA பைனல் இயர் ஸ்டுடண்ட், அவனோட பெஸ்ட் ப்ரண்ட் ஆரன். ரெண்டு பேரும் ஒன்னா தான் இருப்பாங்க எப்பவும். அதே மாதிரி இங்க வர்றது மாசத்துல ஒரு நாள் மட்டும் தான். லிக்கர் , பொண்ணு பக்கம் தலை என்ன, கண்ணு கூட திருப்பாத உத்தமபுத்திரங்க ரெண்டும். கொஞ்சம் வசதியானவன் மாதிரி தெரியுது. பட் அவன பத்தி அதிகமா யாருக்கும் தெரியாது” என தனக்கு தெரிந்த விசயத்தை அடுக்கிய பெண்ணிடம், தனது பர்ஸ்ஸை திறந்து மொத்தமாய் கையில் சிக்கிய பணத்தை எடுத்தவள் , அப்படியே கொடுத்துவிட்டு,
” மீதி இருக்கற டீட்டைல்ஸ் கலெக்ட் பண்ணி கொடுத்தா, இத விட டபுள் மடங்கு வாங்கிக்க…” என சந்தோஷத்தோடும், ஒரு வித கர்வத்தோடும் சொன்னவளின் செய்கைக்கு பின் இருக்கும் அர்த்தம் புரிந்தவர்கள், ‘ இவளின் குணத்திற்கும், பிடிவாதத்திற்கும் இது சரி வருமா?!’ என்ற எண்ணம் எழாமல் இல்லை. ஆனால் அதை சொன்னால் அடுத்த நொடி தங்கள் உயிருக்கு உத்திரவாதம் கிடையாது என்பது அவர்களுக்கு நன்கு தெரியுமே.
கௌதமை பற்றிய சிந்தனையோடு தோழிகளை தனது காரில் ஏற்றி கொண்டவளின் மனமோ , என்றுமில்லா உற்சாகம் கொண்டிருந்தது. அவர்களை எப்போதும் இறக்கிவிடும் இடத்தில் விட்டவள் ,தனது வீட்டிற்கு வந்து, தனது அறைக்குள் நுழைந்து , மஞ்சத்தில் வீழ்ந்தவள், தலையனையை கட்டிக்கொண்டு சுகமாய் கௌதமுடனான கலர் கலர் கனவுகளோடு உறக்கத்தை தழுவினாள்.
ஆரன், கௌதம் இருவரும் ஓரே நேரத்தில் அவர்கள் இருக்கும் ஏரியாவிற்கு வந்து சேர , சிறு சிரிப்போடு ,’இரவு வணக்கம்’ கூறி விடை பெற்ற கௌதம், தனது மாளிகை வந்த போது, அவனை வரவேற்ற வெறுமை இதுவரை இருந்த மனநிலையை முற்றிலும் மாற்றியது.
யாருமில்லாமல் தனிமையில் இருப்பதை தவிர்க்கவே படிப்பு, வேலை , இது போன்ற க்ளப் என செல்பவன், வீடு வரும் ஒவ்வொரு முறையும் உணரும் இந்த தனிமை எப்போது நீங்குமோ? என்ற வருத்தத்தோடு, தனது அறைக்கு வந்தவன் ,சிறு குளியலை முடித்து வந்து தனது மஞ்சத்தில் விழுந்த போது ஆரன் சொன்ன சொல் மனதில் ஒலிக்க, அவனிடம், ‘இப்போது தனக்கு அதற்கு தேவையில்லை, நேரமும் இல்லை!’ என மறுத்தவனின் மனமோ, இப்போதைய தனிமையை விரட்டிடவாவது அவன் சொல் பழிக்காதா! என்ற எண்ணத்தை விதைக்க,
“சீக்கிரமா என்கிட்ட வந்திடு செல்லம்மா.. எனக்கு இந்த தனிமை பிடிக்கல. உன் மடியில படுத்து தூங்கனும். உன் கையால சாப்பிடனும்.. இன்னும் எவ்வளவோ ஆசை இருக்கு. எங்க இருக்க நீ?! ” என இதுவரையிலும் சிறிதும் கம்பீரம் குறையா ஆண்மகனாய் இருந்தவன் , குழந்தையாய் ஏங்கி வாய் விட்டே சொன்ன அதே நேரம், தனது தூக்கத்திலிருந்து பதறி விழித்தாள் பாவையவள்….