Jeevan 23(2)

Jeevan 23(2)

‘தனக்கு என்ன நடக்கிறது?!’ என்பதை உணர்வதற்கு முன்பே, அனைத்தும் நடந்துவிட்டிருக்க, கத்தி.. உதவிக்கு அழைக்க கூட முடியாத படி, வாயும் கட்டப்பட்டிருக்க, ‘தன் நிலையை இனி என்னவாக போகிறதோ?!’ என மிகவும் கலங்கி தான் போனாள் காயத்ரி.

தனது கைகளும், பின்பக்கமாய் இறுக்கி கட்டியதால், தன்னால் எதையும் செய்திட முடியாது என்பது விளங்கிய நொடி முதல்,  அவளின் மனம் முழுவதும் நிறைந்தது தன்னவனின் நினைவே….

“ஏன்னா! ப்ளீஸ், வந்து என்ன காப்பாத்துங்கோ… இவ யாருன்னு நேக்கு தெரியலையே.. எப்ப நினச்சாலும் வருவேன்னு கொடுத்த வாக்க காப்பாத்துவேளா இப்பவும்.. ?!’ என கௌதமிடம், மனதால் அழைப்பு விடுத்தவள், அந்த நொடி, அவன் மீது தான் கொண்டிருந்த கோபம், வருத்தம் எல்லாமே கானலாகி போயிருந்தது.

அந்த வாகனத்தில், தன்னை தூக்கி செல்பவர்கள், மூவர் என்பது அவர்களின் இருப்பில் உணர முடிந்தவள், இறுதியில், ‘நேக்கு தப்பா எதுவும் நடந்திட கூடாது, அப்படி எதாவது ஆகறதுக்கு, முன்னே என்னோட பிராணன, நா விட்டுடனும்’ என முடிவு செய்தவள், அவளின் இறுதி நொடிக்காக பிராத்தனை செய்ய துவங்கினாள், தனக்கு நடக்க போவது யாதென தெரியாமலேயே….

பல மணி நேரமோ, பல யூகங்களோ என கழிந்த, சில நிமிட பயணம் நிறைவு பெற, வாகனத்தை நிறுத்தி, காயத்ரியின் கைகளை விடுவித்து, அவளை ஒருவன் பல படிகளை கடக்க வைத்து, உள்ளே அழைத்து வர, பின்னே வந்த ஒருவனோ, அவள் வந்து சேர வேண்டிய இடம் வந்ததும், அவளின் கண் கட்டை அவிழ்க்க, இதுவரை கட்டப்பட்டிருந்ததால், அந்த இடத்தில் இருந்த சாதாரண வெளிச்சம் கூட கண்களை கூசச்செய்திட, கண்களை நன்கு கசக்கி, மெல்ல விழி திறந்து எதிரில் பார்த்தவள், விழி விரித்து நின்றாள் அதிர்ச்சியில்…


‘தான் காண்பது நிஜமா.. !!!’ என ஒரு நொடி யோசித்தவள், மறு நொடி, எதை பற்றியும் யோசிக்காமல் ஓடத்துவங்கினாள், “ஏன்னா…!” என்ற அழைப்போடு…

தன் முன்பு காயத்ரி வந்து நின்றது முதல், அவளை, ஒற்றை இருக்கையில் அமர்ந்து,  கற்பாறையென இறுகிய முகபாவனையில் பார்த்திருந்த கௌதமிற்கு, காயத்ரியின், “ஏன்னா…!” என்ற அழைப்பு, முதலில் சிறு நிம்மதியை கொடுத்தது எனில், அடுத்து அவள் செய்த செயல், முற்றிலும் அவள் மீதான கோபத்தை துடைத்தெரிந்தது.

கௌதமை அங்கே கண்டவுடன், இதுவரை தான், நினைத்து பயந்த அனைத்து துயரும், தன்னை விட்டு நீங்கிவிட்டது என்ற நிம்மதி தோன்ற, ஓடி வந்து, அவன் மடியில் அமர்ந்தவள், தனது இரு கரத்தை, அவன் கழுத்தில் மாலை போல் இட்டு, அவன் கழுத்து வளைவில் முகம் புதைத்திருந்தாள்.

தனக்கு முழுமையான பாதுகாப்பு, அவனின் கரத்தில் தான்! என்பது போல இறுக்கமாய் அவனை அனைத்திருந்தவளின் செயலில், முதலில் திகைத்தவன், அடுத்த நொடி, அவளின் இடையோடு கை கோர்த்து, தன்னோடு இறுக்கிக்கொண்டான் காற்றுக்கும் இடைவெளி இல்லாது.

தான் கௌதமை அனைத்திருப்பதோ, அவனின் அனைப்பில் தான் இருப்பதோ, சிறிதும் உணராது, இதுவரை இருந்த தவிப்பு இன்னும் நீங்காது, நடுக்கம் சிறிதும் குறையாமல் அவனுள் புதைந்தவள்,

“ஏன்னா ! என்ன காப்பாத்துங்கோ..! இவா யாருன்னே நேக்கு தெரியல. என்னை எங்கையோ அழச்சின்டு போறா. நல்லவேளை நீங்க… வந்து….. !!” ‘வந்துட்டேள்!’ என சொல்ல வந்தவள், அப்போது தான், ‘இல்லையே! அவரு எங்க வந்தாரூ.. நா தானே இங்க வந்தேன்?!’ என்பது வரை விளங்க, இதுவரை இருந்த பயம், பதட்டம், குழப்பம் நீங்கி தெளிவாகிட, தன்னை  இங்கே வரவைத்தது கௌதமின் திட்டமா?! என அதிர்ந்தவள் அவனை விட்டு சட்டென விலக முயற்சிக்க, அது வெறும் முயற்சியாக மட்டுமே இருந்தது.

அவள் வந்து, தன் மீது அமர்ந்தது, முதலில்  அதிர்ச்சியை கொடுத்தது எனினும், அவளின் மூச்சுக்காற்று தன் பின்னங்கழுத்திலும், காதுமடலிலும் உரச, பேசியவளின் வார்த்தைகளும், அவள் உடுத்தியிருந்த தாவணியின் விளைவால், தனது கரம் உணர்ந்த வெற்றிடை மென்மையும், அவனின் காதல் மனதுடன், அவனின் இளமை உணர்வையும் சேர்த்து தூண்டிய விதத்தில், கிறங்கி இருந்தவன், அவள் சட்டென விலகிட நினைத்த போது, அதற்கு இடம் தர இயலாது, அவளின் விலகல் தனக்கு பிடிக்கவில்லை எனும் விதமாய், “க்கூம்… ” என முனுமுனுத்தபடி, அவளை தன் கரம் கொண்டு தன்னோடு சேர்த்தனைக்க, அதுவரை இருந்த கொஞ்ச நஞ்ச பரிதவிப்பும் நீங்கி, அந்த இடத்தில் மொத்தமாய் கௌதமின் செயலே ஆக்கிரமித்து ….

தன் பலம் கொண்ட மட்டும், அவனை தள்ளி நிறுத்தியவளின், முகத்தை பார்த்த கௌதம், “இப்ப என்னடீ, உன் பிரச்சனை?!” என கேட்க, “என்ன பிரச்சனையா?! நன்னா கேட்டேள் போங்கோ.. விடுங்கோ முதல்ல என்ன..?!” என அவனிடமிருந்து திமிறிட,

“நானா வந்து உன்ன இழுத்து மடியில உக்கார வச்சேன்.. நீயா வந்து உக்காந்த, கட்டிபிடிச்ச, இப்படி உசுப்பேத்தி விட்டுட்டு, என்னமோ, நா தான் எல்லாத்துக்கும் காரணம், அப்படிங்கற மாதிரி ரியாக்ட் பண்ணற…!!”  என கேட்டவனின் வார்த்தையில், தான் செய்த பிழையால், பதில் சொல்ல முடியாது தலை கவிழ்ந்தவளின் கண்ணீர் துளி, அவன் கரத்தில் விழ, அவளை தன்னை விட்டு விலக்கி எழுந்தவன்,

அவளை தனது இருக்கையில் அமரவைத்து, அவளின் முன்பு மண்டியிட்டு அமர்ந்தவன், “செல்லம்மா! இங்க பாரு.. உனக்கு என் மேல இருக்கற காதல் உண்மை. அதே மாதிரி, நா, உன் மேல உயிரா இருக்கறதும் உண்மை… அந்த காதல் மேல மட்டும் நம்பிக்கை வை… ப்ளீஸ்!” என, தனது மற்றைய உணர்வுகளுக்கு, பூட்டி போட்டுவிட்டு, காயத்ரியின் குழப்பத்திற்கும், பயத்திற்கும் முதலில் தீர்வு காணும் எண்ணத்தோடு பேசிட,

“காதலா … நீங்களா…  என் மேலையா..?! என் மேல மட்டும் தானா?! இல்ல நிறைய பேரில நானுமா… ?! உங்கள மாதிரி குடுச்சிட்டு, கூத்தடிக்கறவா சொல்ற பேச்சு, விடிஞ்சா மாறிடுமின்னு நேக்கு நன்னா தெரியும்… நீங்க பப்ல போட்ட ஆட்டத்த தான், நா என் கண்ணால பாத்தேனே… விடுங்கோ… நேக்கு பயமா இருக்கு இங்க இருக்கவே… ” என முதலில் கேலி போல ஆரம்பித்தவள், பரிதவிப்பில் முடிக்க,

காயத்ரி, தன் மீது சொன்ன புகார்களில் விட்ட கோபம் மீண்டும் வந்திட, “அடிச்சேன்னு வைய்யி.. பல்லு காணாம போயிடும். யார் கூட நா கூத்தடுச்சத நீ பாத்த… நா தண்ணீ…. எவடீ சொன்னா….?!  எவளோ சொன்னான்னு, நீயும் நம்பி என்ன சந்தேகபட்டதுக்கு, பதிலா என்னைய கொன்னு போட்டிருக்கலாம்!” என சொல்லி முடிக்கும் முன்பு, தன் கரம் கொண்டு, அவனின் வாயை அடைத்தவள், “ப்ளீஸ், அப்படி சொல்லாதேள்…?!” என பதட்டத்தோடு சொல்லிட,

“லூசாடீ நீ!  இப்படியும் பேசற, அப்படியும் பேசற… இப்ப உண்மைய சொல்லு, அவங்க சொன்னத நம்பி மட்டும் தான், நீ என்ன விட்டு விலகி போக பார்க்கறையா..?! அப்ப என்னை நம்பல, நா, உன் உடம்புக்காக மட்டும் தான், உன் பின்னாடி வந்தேன்னு நினைக்கிறையா….?! இல்ல, வேற காரணமா?! அத நீ  சொல்லாம, இந்த இடத்தில இருந்து, ஒரு அடி கூட உன்னால நகர முடியாது… ” என எச்சரிக்கையாக சொல்லி, அவளின் முகம் பார்க்க,

‘தான், அவனின் மீது கொண்ட சந்தேகம் என்பது, தனக்கு ஒரு ஆபத்து என்னும் போது, அவனை மட்டுமே, உள்ளம் தேடிய போதே விலகி, அவன் மீதான காதல் மட்டுமே பிரதானமாகி போனது விளங்கினாலும், அவன் அந்தஸ்த்து, உயரம் அவளை மிரட்சி கொள்ள வைத்ததே, அவனிடமிருந்து விலகி செல்ல தூண்ட, அவர்கள் சொன்னதை கொண்டு, தான் இப்படி பேசினால், அவன் தன்னை விட்டு விலகிடுவான்.

தன்னை போன்ற சந்தேகபிராணியோடு வாழ முடியாது என நினைப்பான் என்பதற்காக  சொன்னதை கூட நம்பாமல், வேறு காரணம் நிச்சயம் இருக்கும், அதை அறியாமல் இங்கிருந்து செல்லவிடமாட்டேன் எனும் அவனின் காதல் தான் எத்தனை உயர்ந்தது.. அதற்கு தான் தகுதியானவள் இல்லையே… !’ என தோன்றிட, அவள் அவன் மேல் சொன்ன பழி சொல்லிற்காகவே, அவன் கரம் பற்றி அதில் தன் முகம் புதைத்தவள்,

“என்ன மன்னிச்சிடுங்கோன்னா. நா உங்கள பத்தி அவா ஆயிரம் சொன்னாலும், மனசுல சின்ன சலனமும் கொண்டு வந்திருக்க கூடாது. அது தான் உண்மையான நேசம், அதோட உங்க அந்தஸ்த்துக்கு ஏத்தவா நா இல்ல. அதான் உங்களுக்கு, நா தகுதியானவ இல்லன்னு, உங்கள விட்டு விலகி போயிடலாமின்னு… சாரி ன்னா…. ” என சொல்லி, தோம்பியவளின் தலையில், தன் மறுகரம் கொண்டு வருடியவன்,

மென்மையாக, “செல்லம்மா! இங்க பாருடா… இதெல்லாத்துக்கும் காரணம் நீ இல்ல, நா தான்.. நாம் பார்த்து, எப்ப நீ தான் எனக்கு எல்லாம் ன்னு முடிவு செஞ்சேனோ, அப்பவே உன் பத்தி நா தெரிஞ்சுகிட்டது மாதிரி, என்னைய பத்தி உனக்கும் தெரியபடுத்தியிருந்தா, யார் என்ன சொல்லியிருந்தாலும், உன் மனசுல குழப்பம், சந்தேகம் வந்திருக்காதே..?! சோ முதல் தப்பு என்னோடது தானே…!” என சொன்னவனின் வார்த்தையில், தவறு செய்த தன்னைவிட்டு, ‘நடந்த பிழைக்கு தானே காரணம்’ என, தன் மீதே பழிபோட்டுக் கொள்ளும் கௌதமின் அன்பில் பிரம்மித்து போனவள், அதுவரை வழிந்த கண்ணீர் துளி மொத்தமாய் நின்றிருக்க, அந்த கண்களில் இப்போது, அவன் மீதான மரியாதையும், நேசமும் மட்டுமே மிஞ்சி நின்றது..

“செல்லம்மா ! கொஞ்சம் என்கூட வா…” என, அவளின் கரம் பற்றியவன், நேராக அந்த வீட்டின் மாடியில் இருந்த அறை ஒன்றிற்கு அழைத்து செல்ல, அந்த அறையின் உள்ள சென்றவள், அதன் பிரமாண்டத்தில், ‘ஆ…!’  வென வாய் திறந்து நின்றவள், இது தானே கௌதமிற்கும் தனக்குமான வேறுபாடு என எண்ணி முடிக்கும் போது,

“இந்த ரூம்ல உனக்கு என்ன தெரியுது, செல்லம்மா?!” என கேட்ட கௌதமின் குரலில், ‘எதற்கு கேட்கிறான்?!’ என புரியாவிட்டாலும், மீண்டும் அந்த அறையை கண்களால் வலம் வந்தவள், “ரூம் பெருசா, நல்லா நீட்டா இருக்குன்னா.. எல்லா பொருளும் நிச்சயமா விலை உயர்ந்ததா தான் இருக்கும். எல்லா இடத்திலையும் பணத்தோட செழுமை தெரியற மாதிரி பாத்து பாத்து கலை நயத்தோட இருக்குன்னா…. !” என சொல்லிக் கொண்டே போனவள்,

நிறுத்தி கௌதம் முகம் பார்க்க, ‘ஹும்..!’ என பெருமூச்சு விட்டவன், “ரொம்ப சரியா சொன்ன செல்லம்மா…! பணத்தோட செழுமை, பிரமாண்டம், அழகு…. எல்லாமே இருக்கு, ஆனா உயிர்ப்பு… !!!!மிக பெரிய கேள்விக்குறி இல்ல..?!”  என கேட்டவனின் வார்த்தைக்கு சரியான அர்த்தம் புரியாமல் விழித்தவளை அழைத்து அங்கிருந்த மெத்தையில் இருத்த, அதன் மென்மையே கூறியது அதன் விலையை..

“இந்த மெத்தை எப்படி இருக்கு…?!” என மீண்டும் கேட்க, “நன்னா தான் இருக்கு.. ஷாப்ட்டா… படுத்தா நிம்மதியா தூக்கம் வரும்…. ” என சொல்ல, விரக்தியாய் ஒரு சிரிப்பை உதிர்த்தவன், “நீ சொல்லற அந்த தூக்கம் எனக்கு வரலையே, ஏன் செல்லம்மா… !” என வருத்தத்தோடு கேட்வனின் குரலில் இருந்த பேதம் அப்போது தான் உறைக்க,

“என்னன்னா சொல்றேள்?! நேக்கு, எதுவும் புரியல… கொஞ்சம் புரியற மாதிரி சொல்லுங்கோ…. ” என குழப்பத்தோடு கேட்டவளிடம்,

“நீ சொன்னையே அந்தஸ்த்து, உயரம் ன்னு அது மட்டும் இருந்தா நா பெரிய ஆளா…. நிம்மதியான வாழ்க்கை வாழ்ந்திட முடியுமா?!

அனாதையா ஆசிரமத்துல வளர்ற குழந்தைக்கு கூட , அங்க கூடவே வளர்ற பிள்ளைங்களோட பாசம் கிடைக்கும்… ஆனா எனக்கு?!

பிறந்தது முதல் தனிமை மட்டுமே அனுபவிக்கற அனாதை நா… கடமைக்காக பார்த்திக்கற யார்கிட்டையும் அன்பையும், பாசத்தையும் எதிர்பார்க்க முடியுமா?! வேலைக்கு வர்றவங்க அவங்க கடமையா செய்வாங்களா?! இல்ல, அதுல பாசத்த காட்டுவாங்களா சொல்லு?!

அம்மா, தாத்தா எல்லாம் இருந்தும் எதுவுமே எனக்கு நிரந்தரமில்லாமல், தினம் தினம் இந்த வீட்டுல, தனிமைய அனுபவிச்சிட்டு கிடக்கற கொடுமைய விட, ப்ளாட்பார்ம்ல தூங்கறது எவ்வளவு நிம்மதி தெரியுமா?!

பிறந்தது முதலே அம்மா தூக்கி வளர்க்கல… ஏன்! தாய்பாலோட ருசி கூட எனக்கு தெரியாது. தாத்தாக்கு தொழில் தான் பிரதானம். நேரம் கிடச்சா என்கூட இருப்பார். குழந்தையில நிறைய அவர தேடியிருக்கேன். வளரும் போது அவர் இப்படி தான்னு புரிஞ்சிது. அவர் கூடவாவது இருக்கணுமின்னே பத்து வயசுல அவர்கூட ஆஃப்பிஸ் போவேன். அங்க போய் அந்த உலகத்துல வாழ துவங்கன உடனே அவர் இன்னுமே என்னவிட்டு விலகி போவாருன்னு தெரியல எனக்கு, இல்லன்னா அவராவது இன்னும் கொஞ்ச வருஷம் எனக்கு கத்து கொடுக்கணுமின்னே இருந்திருப்பாரோ என்னவோ… நா நிர்வாகத்த பார்த்துப்போன்னு தெரிஞ்ச உடனே அவரும் போயாச்சு…. ” என சொல்லும் போது, அவன் முகத்தில் தெரிந்த விரக்தியும், குரலின் கரகரப்பும், காயத்ரியின் மனதை சுட, தன் கௌதமின் ‘தேடல் எது?’ என்பது நன்கு விளங்க, அவன் கைபிடித்து அழைத்தவள், தன் மடியில் தலை சாய்த்த நொடி, அவன் கண்ணீர் அவளின் மடியை நனைக்க துவங்கியது.
சிறிது நேரம் அமைதியாய், அவளின் மடியின் சுகத்தில் லயித்திருந்தவன், மீண்டும்,

“நா தண்ணி அடுச்சத பார்த்தேன் பப்லன்னு சொன்ன இல்ல… நா இதுவரை அத கையில தொட்டது கூட கிடையாது…” என சொன்னதும்,

அவன் வாயை தன் கரம் கொண்டு மூடியவள்,  “போதுன்னா, நா அதுக்கு உங்ககிட்ட விளக்கம் கேட்கல. விட்டுடுங்கோ.. நா தான் மட்டி மாதிரி பேசிட்டேன்!” என சொல்லியவளுக்கு,

“இல்ல செல்லம்மா! இன்னும் என்னை பத்தி நீ தெரிஞ்சுக்க இது தேவை” என்றவன், “ஏன், அத தொட்டது இல்ல தெரியுமா… ?! அதனால தான், என்னோட அம்மா நிரந்தர நோயாளியா ஆனாங்க…”

“எங்க தாத்தா பணத்து பின்னாடி ஓட, அவரோட ஒரே மகள சரியா விசாரிக்காம, பணக்காரங்க படிக்கற ஸ்கூல்ன்னு சேர்த்துட்டு மாசமானா பணத்தை அனுப்பிட்டு விட்டுட்டாரூ. ஸ்கூல் முடிச்சு, காலேஜும் அதே மாதிரி ஹாஸ்டல் வாசம் தான்…

அப்ப ஒரு நாள் தாத்தாக்கு போன் வந்து, போய் பார்க்கும் போது தான் தெரிஞ்சுது, அம்மா புல்லா ட்ரக் அடிக்ட் ஆனதே… அப்புறம் கையோட கூட்டிட்டு வந்து எவ்வளவோ ட்ரீட்மெண்ட் கொடுத்து, அவங்கள கொஞ்சம் சரி செஞ்சாலும், அவங்க எடுத்துக்கிட்ட போதை மருந்தோட தாக்கம் உடல்நிலைய ரொம்பவும் பாதிச்சிடுச்சு.

எங்க தாத்தாக்கு, தனக்கு அடுத்து தன்னோட குடும்பத்திற்கும், சொத்துக்கும் வாரிசு வேணுமின்னு தோண, அவருக்கு கீழ வேலை பார்த்தவர பேசினாரா, மிரட்டி பனியவச்சாரா தெரியல… ! எங்க அம்மா கல்யாணம் ஊரறிய ஜம்முன்னு நடந்துச்சு…

அடுத்து கொஞ்ச நாள் கழிச்சு, நா உருவானதும் தாத்தாக்கு தலைகால் புரியல… அப்போ தன்னோட மகளும், வயித்துல இருக்கற குழந்தையும் தெருஞ்ச அளவு, என்னோட அப்பா தெரியல… முழு நேரமும், தன் மகள தன்னோட கட்டுப்பாட்டுல, கண்காணிப்பில வச்சிட்டாரு.

‘கணவன், மனைவிக்கு இடையில ஒரு குறிப்பிட்ட அளவுக்கு மேல தலையிட யாருக்கும் உரிமையில்ல. அப்படி உரிமையை மீறி நடந்தா அந்த உறவு நிலைக்காதுன்னு ..’ சிறந்த வியாபாரியா இருந்த தாத்தாக்கு தெரியல…

பொறுத்திருந்த அவரும், எந்த நோக்கத்திற்காக, என்னை உங்க மகளுக்கு கல்யாணம் செஞ்சு வச்சிங்களோ, அது நடந்திடுச்சு. இனி எனக்கு இங்க வேலையில்ல. இதுவும் உங்களுக்கு கீழ செஞ்ச வேலை மாதிரி தான். என் வேலை முடிஞ்சுது.. இனி என் வாழ்க்கைய நா பார்த்துக்கறேன்னு விட்டுட்டு போயிட்டாறூ….”

“அப்ப உங்க அப்பா… ?!”

“இருக்கலாம்.  பட் எங்க தெரியாது.. கண்டுபிடிக்கலாம். ஆனா, அவருக்குன்னு ஒரு குடும்பம் இருக்குமே. அவரோட நிம்மதிய சேர்த்து கெடுக்கனுமான்னு விட்டுட்டேன்.

அப்புறம், அம்மா டெலிவரி. அதுவும் ஏதோ சிக்கலால, ஏழு மாசத்துலையே பிறந்திட்டேன். அதோட அம்மாவால சுத்தமா நடமாட்டம் இல்லாம போச்சு. அவங்க ரத்ததுல இருக்கற நஞ்சு எனக்கு போயிடுமின்னு புட்டிபால் தான் கொடுக்க வச்சாறாம் தாத்தா. அவருக்கு தெரியல பாரேன், அந்த ரத்ததுல தான் அத்தன மாசமும் நா இருந்தேன்னு…

நல்லா நடமாடும் வயசுல, அம்மாவ பார்க்க அவங்க ரூமுக்கு கூட்டிட்டு போவாங்க.. ஆனா அங்க இருக்கற அமைதி, ஒரு மாதிரி எனக்கு அப்ப பிடிக்கலையோ?! இல்ல, துறுதுறுப்பினால அங்க இருக்க முடியலையோ..?! நிறைய நேரம் அங்க இருக்க மாட்டேன்.

இப்படி இருந்த நேரத்தில தான் ஆரன சந்திச்சேன். அவன் அப்பா கூட அவன் செல்லம் கொஞ்சறது.. தினமும் அவங்க அம்மா செய்யறது ன்னு கதையா சொல்வான். எனக்கும் நாளாக ஆக அதே மாதிரி என்னோட அம்மாவும், ஆசையா கொஞ்சனுமின்னு தோணும். அதற்காகவே அவங்க ரூம்ல போய் உக்கார தொடங்கினேன். அப்ப அவங்க பார்வைக்கு அர்த்தம் நிச்சயமா தெரியல..

ஆனா சில நாள் தான் இது நடந்துச்சு, அடுத்து நா ஸ்கூல்ல இருக்கும் போது திடீர்ன்னு கூப்பிட்டாங்க. வீட்டுக்கு வந்தா அம்மா நடு ஹால்ல…. பெட்டில… அந்த நிமிஷத்துக்கு அப்புறம் என்ன நடந்திச்சு, என்னன்னு எதுவுமே தெரியாது. பிரம்மை பிடிச்ச மாதிரி இருந்த என்னை, மறுபடியும் சரி செஞ்சது ஆரன் தான். அவன் தான், என் கூடவே கொஞ்ச நாள் இருந்தான். தாத்தாவும் என் கூடவே இருக்கற மாதிரி பார்த்திட்டாங்க.

ஆரன் என்கிட்ட ரொம்ப க்ளோசா இருக்கறது ஜெனி ஆன்டிக்கு பிடிக்கல. அவங்களுக்கு ரொம்ப நாள் கழிச்சு கிடச்ச குழந்தை அவன். சோ! ஓவர் பொசசீவ் அவங்க.. அவங்க அவன பார்த்துக்கறத பார்த்தா, எனக்கும் ஆசையா இருக்கும்… ஏக்கத்தோட நா பார்க்கறத பொறாமையா பார்க்கறதா அவங்க நினைக்க ஆரம்பிச்சாங்க.


தாத்தாவும் போன பிறகு ரொம்பவும் கொடுமையா இருந்துச்சு இங்க இருக்கறது. அதனால ஆரன் வீட்டுக்கு வேற வழி இல்லாம போய் இருந்த போது தான் அவங்க எண்ணம் தெரிஞ்சுது. அங்கிள் எவ்வளவோ சொல்லியும் அவங்களுக்கு அது பிடிக்கலைன்னதும் நானும் முடிஞ்ச வரை விலகியே தான் இருந்தேன்.


ஆனா அதுக்கு ஆரன் விடல. எங்க போனாலும், எத செஞ்சாலும் என்கூடவே இருக்கற மாதிரி செஞ்சுக்கிட்டான். அவன் ஜாலியா விளையாட்டு பிள்ளையா இருக்கறது என்ன குஷி படுத்த தான். நா சீரியஸ்ஸா இருக்கற பார்த்து வேணுமின்னே, ஏதாவது கலாட்டா செஞ்சு என்னை சிரிக்க வச்சிடுவான்.

இதே மாதிரி போயிட்டு இருக்கற நேரத்துல தான், என்னை மறுபடியும் மனசு விட்டு சிரிக்க வச்ச ஒரு ஏஞ்சல பார்த்தேன்…!” என, இதுவரை அவளின் மடியில் படுத்தபடி சொல்லிக் கொண்டிருந்தவன்,

நேராக படுத்து அவளின் முகம் பார்க்க.. ‘யார் ..?!’ என்ற ஆர்வத்தோடு, கௌதம் முகம் பார்த்திருந்தவளின் கன்னத்தில், தனது ஒரு கரம் பதித்தவன். “இதோ! இந்த இன்னோஷன்ட் பேபிய தான், அந்த மால்ல பார்த்தேன். நீ சுமிகூட பேசினதுல எனக்கு செம சிரிப்பு..” என்றவன்

“அடுத்து அந்த பேக் … அதுல இருந்த மிட்டாய பார்த்ததும், இந்த டால் பேபிய ரொம்ப பிடிச்சு போச்சு… அப்போ நீ மிஸ் ஆகிட்ட… ஆரனுக்கா சாப்பிட அங்க வந்தப்ப தான், மறுபடியும் உன்ன பாத்து அந்த ஸ்வேதா க்ரூப் கிட்ட காப்பாத்தி கூட்டிட்டு வந்தேன்.

நா, தொடர்ந்து படிக்கணுமின்னு, சதா அங்கிள் சொன்னதுக்காக, நீ படிக்கற அதே கேம்பஸ்ல தான், நா MBA படிக்கறேன். நீ அந்த பேர் சொன்னதும் உனக்கு சர்ப்ரைஸ்ஸா இருக்கட்டுமேன்னு, நா படிக்கறத சொல்லல.

அதோட சக்கரவர்த்தி க்ருப்ஸ் கம்பெனின்னு சொன்னதும், நீ ‘வேலை பார்க்கறையான்னு?!’ கேட்டையா, சும்மா விளையாடி பார்க்க ஆசை பட்டு, ஆமான்னு சொல்லி, இப்ப இவ்வளவு தூரம் சிக்கல கொண்டு வந்தாச்சு”  என சொல்லி முடித்தவன்,

இவ்வளவு நாள் மனதில் அழுத்திக்கொண்டிருந்த விசயத்தை வெளியே கொட்டியதாலோ, என்னவோ ஒரு வித நிம்மதி பரவ, ஒரு ஆசுவாச பெருமூச்சோடு, தனது பேச்சே நிறுத்தியவன், அவளின் கன்னத்தில் பதித்த கரத்தை எடுக்காமலேயே அவளின் கண்களையே பார்த்திருக்க…

சிறிது நேரம் வரையிலும், அவனின் பார்வையை தாங்கியவளால், அதற்கு மேல் இயலாது போக, வேறு புறம் பார்வை பதித்து.. “ஏன்னா! இப்படியே பார்த்துட்டு இருக்கேள்?!” என மெல்லிய குரலில் கேட்க,

“செல்லம்மா! நா ஒன்னு கேட்கவா.. ?!”  என்றதும், அவனை பார்த்தவளின் கண்கள், “எதாவது ஏடாகூடமாக கேட்பானோ?!” என்ற படபடப்பை மறைக்காமல் வெளிப்படுத்த,

“பாத்தியா, இன்னும் என் மேல நம்பிக்கை வரல இல்ல?!” என சிறுபிள்ளையாய் முகம் திரும்பியவனை பாத்ததும், அவளின் படபடப்பு நீங்க, “இல்லன்னா, இனி நீங்க எத கேட்டாலும் நா செய்வேன்… சொல்லுங்க என்ன செய்யனும்?”  என அவனின் தலைமுடியை கோதியவாறு கேட்க,

அவளின் கண்களை நேராக பார்த்தவன், “நீ இதே மாதிரி, எப்பவும் என்பக்கத்துல இருக்கணும்.. எனக்கு ஒரு நல்ல தோழியா, காதலியா, மனைவியா மட்டும் இல்லாம ஒரு அம்மாவா… இருப்பியா… நா இதுவரை அவங்க பாசத்த அனுபவிச்சது இல்ல, இனி எல்லாமே உன்கிட்ட தான்னு முடிவு செஞ்சதால தான், உன்னோட செல்ல பேர்ல கூட ‘அம்மா..’ வர்ற மாதிரி வச்சிருக்கேன்… ” என ஏக்கத்தோடு கேட்டவனின் மீது, பெண்களுக்கே உரித்தான தாய்மை உணர்வு உந்திட, அதை வார்த்தையால் சொல்லிட கூட முடியாத நிலையை, கௌதமின் கடந்த காலமும், ஏக்கமும் அழுத்திட,

மெல்ல ‘சரி !’ என தலையசைத்தவள், மிகவும் மென்மையாய் அவனின் நெற்றியில் இதழ் பதிக்க, “தேங்க்ஸ் செல்லம்மா!” என்ற வார்த்தையோடு, மனதின் பாரமெல்லாம் விலகிட்ட நிறைவோடு, தன் செல்லம்மாவின் வயிற்றில் முகம் புதைத்து, இடையோடு அனைத்திருந்தான், கௌதம் சக்கரவர்த்தி மீண்டும் ஒரு மழளையாய்….




error: Content is protected !!