jeevan 28(1)

உன்னோடு தான்… என் ஜீவன்…

பகுதி.. 28.1

ஆரன் ஸ்ரீரங்கம் சென்ற போது இரவு மணி 9 ஆகியிருக்க, அவன் காயத்ரி எழுதி கொடுத்த அட்ரஸ் கொண்டு, கால் டாக்சி மூலமாக சுலபமாய் அந்த அக்ரஹாரத்தில் நுழைந்தாலும், இருக்கும் வீடுகள் பெரும்பாலும் ஒரே நிறம் வடிவம் கொண்டிருக்க, திண்டாடி தான் போனான்.

காயத்ரி நல்ல முறையில் இருந்தால், அவளுக்கு அழைத்து கேட்கலாம்…?! இப்போது அதற்கும் வழியில்லாத போது, இந்த பகுதியில் சுத்தி வந்தவனை பார்த்த பலருக்கும், அவனின் நடை, உடை, பாவனை வித்தியாசமாக தெரிய.. அவர்களின் கண்பார்வையில் தெளிவாக பதிய துவங்கினான் ஆரன்.

“ஆரா! இப்படியே சுத்துனா டைம் தான் வேஸ்ட்.. யாராவதுகிட்ட கேட்கறது பெட்டர்!” என தனக்கு தானே பேசியவன், அங்கிருந்தவர்களை நெருங்க.. அவனின் கழுத்தில் இருந்த சிலுவையே, அவர்களில் பாதி பேரை ஒதுங்கி போக வைத்தது.

முதலில் புரியாது நின்றவன், அவர்கள் பார்வை சென்ற இடம் பார்த்தவனுக்கு அவர்களின் ஒதுக்கத்திற்கு காரணம் புரிய, “அடக்கொடுமையே…  இன்னும் இப்படி பட்டவங்களும் இருக்காங்களா?! இவங்க மாறவே மாட்டாங்களா…?!” என கடுப்பானவன், மேலும் தானே தேடல் படலத்தை துவங்க… ஒருவழியாய் வாசலில் இருந்த வாழைமரம், காயத்ரியின் அண்ணன் திருமண நிகழ்வுக்காய் இருக்கும் என்பதை ஊகித்தவன், அவர் இல்லத்தை நோக்கி சென்றான்.

காயத்ரி வீட்டு வாயிலில் நின்றிருந்த சிலரிடம் சென்றவன், “சார்.. இங்க சங்கரன்.. !” என கேள்வியாய் இழுக்க…

“ஆமா… இது அவா வீடு தான்… நீங்க யாருன்னு தெரியலையே..!” என ஒருவர் சொல்ல..

“ஒருவேள.. சங்கரனோட புள்ளையாண் ப்ரண்ட்டா இருக்குமோ.. ?! அவனோட கல்யாணத்திற்கு வந்திருக்கலாம். ஏம்ப்பா அப்படியா.. ?!” என கேட்டதும்…

“நோ.. நோ..  நா அவரோட பையனுக்கு ப்ரண்ட் இல்ல, சார். நா அவரோட பொண்ணுக்கு ப்ரண்ட்.. சென்னையில இருந்து வர்றேன்” என்றதும், நின்றிருந்த அனைவருக்கும் அதிர்ச்சியில் வார்த்தையே வெளிவரவில்லை அதற்கு அடுத்து….

உள்ளிருந்து இவர்களின் பேச்சை கவனித்த சில பெண்கள், தங்களுக்குள் கிசுகிசுக்க, சில நிமிடங்களில் அந்த தகவல் அவ்வீட்டின் மூலை முடுக்கெல்லாம் பரவியிருந்தது. பின்கட்டில் காலை டிபன் வேலைக்கான பணிகளை பற்றி பேசிக்கொண்டிருந்த சங்கரும், ஜானகியும் வந்த செய்தியில் ஆடி போனது உண்மை…

இருந்தாலும், தங்கள் மகளின் மீதான நம்பிக்கையில், ‘வேறு யாராவது மாறி வந்திருக்கலாம்!’ என உடனடியாக வாயிலுக்கு வர… பெரும்பாலான அக்கம் பக்கத்தினர் குழுமியிருந்தனர் அங்கு…

“சார் .. நீங்க யாரு?  உங்களுக்கு என்ன வேணும்?!” என  அப்போது தான் விசயம் அறிந்து வந்த ராம் ஆரனிடம் கேட்க…

“நீங்க…?!” என கேட்ட ஆரனிடம், தனது பெயரை சொன்னதும்… “ஓ..! கல்யாண மாப்பிள்ளையா…?! கன்கிராட்ஸ் மாப்பிள்ள சார். நா ஆரன் சாம்வேல். சென்னை உங்க சிஸ்டர் படிக்கற காலேஜ்ல தான், மாஸ்டர்ஸ் பண்றேன்” என சொல்லி கையை நீட்ட… ராமோ, அவனின் கையை பற்றாமல், அவனின் வாழ்த்தை ஏற்பது போல வெறுமனே தலையசைக்க…

ஏற்கனவே சந்தேக கண்கொண்டு பார்த்தவர்களுக்கு, உறுதியாகவே ஆகிவிட்டது விசயம்… ஏதோ விவகாரமானது என்று.. அதனால் முன்பை விட சுவாரஸ்யாமாக பார்க்க துவங்கினர் நடக்கும் நிகழ்வை…

“இப்ப காயத்ரி இங்க வரவேண்டியது…! அவ இன்னும் வரலையேன்னு தான், அவ போனுக்கு ட்ரை பண்ணிட்டு இருக்கோம். அவ போன் ஸ்விட் ஆஃப் ன்னு வருது. அவளுக்கு பதிலா நீங்க வந்திருக்கீங்க…! அப்ப அவ…?!” என ராம் கேட்டதும்.. சுற்றியிருந்த கூட்டத்தை பார்த்தவன்…

“சார், உள்ள போய் பேசலாமா?!” என கேட்க.. அவனின் மதம் அவர்களை அதை செய்யவிடாது தடுக்க… “பரவாயில்ல, எதுவானாலும் இங்கையே சொல்லுங்க..” என்றவன்…. சங்கரை, ‘அவள லவ் பண்ணறேன்னு, எதாவது சொல்லட்டும் அப்புறம் இருக்கு உங்களுக்கு…! என்னை இங்க லோக்கல்ல படிக்க வச்சிட்டு, அடுத்த வீட்டுக்கு போறவள, சென்னையில படிக்க வச்சீங்க இல்ல!’ என்று குற்றசாட்டோடு பார்க்க… சங்கருக்கும், அவரின் மனைவிக்குமே பயத்தில் வேர்க்க துவங்கியது…

‘என்னடா இது… வீடு தேடி வந்திருக்கோம், அதுவும் அவ்வளவு தூரம் இருந்து… வீட்டுக்குள்ள அவங்களே கூப்பிட்டு இருக்கணும், நம்ம கேட்டும் … இப்படி ஒரு பதிலா?!’ என யோசித்தவன்… ‘விடு ஆரா… நம்ம வந்த வேலைய முடுச்சிட்டு சீக்கிரம் வீட்டுக்கு கிளம்பனும்.. ஜெனிய சாம் எப்படி சமாளிக்கறாரோ இதுக்கே..’ என நினைத்து தனது தோளை குலுக்கியவன்,

நடந்த நிகழ்வை சொல்ல.. கேட்ட காயத்ரியின் அன்னை, “பெருமாளே… இதென்ன என் பெண்ணுக்கு வந்த சோதனை… !!!” என தலையில் அடித்து அழ.. சங்கருக்கும், ராமிற்கும் அதிர்வில் பேச்சே வரவில்லை சிறிது நேரம்…

அங்கு நின்று சுவராஸ்யமாய், ஏதாவது காதல் விவகாரம் பற்றி சொல்வான்… என பார்த்திருந்தவர்களுக்கு ஏமாற்றமாய் போக… அப்போதும் அதை அப்படியே விட்டு செல்ல மனமில்லாமல்…

“படிக்க போன புள்ள .. பாட போறேன்.. ஆட போறேன்னு போயி … ஊனமாகி நிக்குதே..!

வீட்டோட இருந்திருந்தா இன்னோரம் கல்யாணத்த முடுச்சு புக்காத்துக்கு அனுப்பியிருக்காலாம்…!

கலி முத்திடுச்சு…  அதான் பொம்பள பிள்ளைங்க.. இப்படியெல்லாம் நடந்துக்குது..!” என ஆளுக்கு ஒன்றை சொல்ல… கேட்ட ஆரனுக்கு, “கூட வாழ்ந்துட்டு இருந்த பொண்ணுக்கு ஒரு விபத்துன்னு சொன்னா…  அத பத்தி பேசாம, அவ பாட போனது தப்புன்னு பேசாறாங்க. என்ன மனுஷங்க!” என நினைத்த படியே ராமை பார்க்க…

அடுத்த நாளில் திருமணத்தை வைத்துக் கொண்டு, எப்படி இதை கையாள?! என தெரியாமல் முழிப்பது புரிய… “மிஸ்டர் ராம்… உங்க சிஸ்டர்.. இப்ப ரொம்ப நல்லா இருக்காங்க.. அவங்க ஹாஸ்பிடல்ல இருந்தாலும், காலேஜ்ல நடந்த விபத்துங்கறதால, இப்ப அவங்க தான் பார்த்துக்கறாங்க. அவளோட காலேஜ் மேட்ஸ் ஹெல்போட…

காயத்ரி தான், உங்க கல்யாணத்த முடுச்சிட்டு நீங்க வந்தா போதுன்னு, சொல்லிட சொல்லி என்ன அனுப்பி வச்சாங்க….! அவங்களால பேச முடியாத நிலையில, அவங்க இதை எப்படி உங்ககிட்ட சொல்ல முடியும்?! அதே சமயம் அவங்க அதிர்ச்சியில இருக்கறதால, விட்டு விட்டு காய்ச்சல் வருது. சோ, இப்ப ட்ராவல்.. பண்ண கூடாது ன்னு டாக்டர் ட்ரிக்ட்டா சொல்லிட்டாரு. அதனால, நீங்க இங்க பாருங்க .. உங்க சிஸ்டர பத்திரமா பாத்துக்க வேண்டியது எங்க பொறுப்பு…”
என சொல்லி முடிக்க..

காயத்ரி நிலை வருத்தம் தந்தாலும், ‘அப்பாடா.. நம்ம கல்யாணம் நிற்காதே!’ என்ற அல்ப்ப சந்தோஷம் ராம் மனதில் எழுவதை, அவனாலேயே தடுக்க இயலவில்லை.

சங்கருக்கு, ‘இப்போதே, தன் மகளை காண வேண்டும்… அவளுக்கு ஆறுதலாய் இருக்க வேண்டும்!’ என்ற எண்ணம் இருந்தாலும், பெற்ற மகளுக்காய்.. மகனின் வாழ்க்கையில் ஒரு நல்லது நடக்கும் போது …’ என்ற யோசனை தோன்றிட, இருந்தும் மனம் பொறுக்காமல், பெற்ற பாசத்தில்…. “தம்பி.. நீங்க சொல்ற மாதிரி அப்படியே விட முடியாது… நாங்க இப்பவே கிளம்பி வர்றோம்” என சொல்ல..


“சார் சொன்னா கேளுங்க.. காயத்ரி இப்ப நல்லா தான் இருக்காங்க. இப்ப நீங்க வந்தா, நாளைக்கி இங்க நடக்கபோற கல்யாணம்…?!

அதனால, நீங்க ஒரு நாள் கழிச்சு வாங்க. அப்படி வர்றதுல ஒண்ணும் ஆகிடாது.. நேத்து மதியம் இருந்து பார்த்துட்ட நாங்க, இன்னும் ஒரு நாள் பார்க்க மாட்டோமா…?! மனசுல அதையே நினைக்காம, உங்க பையனோட வாழ்க்கைய ஆரம்பிக்கற நிகழ்ச்சிய நல்லவிதமா நடத்த பாருங்க..” என பேசியே, அவர்களை சமாதானம் செய்தவன்.. வாசலோடு திரும்பி செல்ல..

அந்த திருமணத்திற்கு என வந்திருந்த சிலர்… “ஏன்டா சங்கரா ?! அந்த புள்ளையாண்டான் கழுத்த பார்த்ததுமே.. ரோட்டுக்கு அழச்சிட்டு போறதில்லையோ…?! இப்ப வீடே தீட்டா போச்சு…! முதல்ல எல்லாத்தையும் கழுவி விட்டுட்டு, கோமியத்த தெளிக்க சொல்லு…!” என சொல்வது, ஆரன் செவில் விழ…

‘நல்ல வேளை, நம்மள சேத்து கழுவி அனுப்பாம விட்டாங்களே…! நல்ல ஆளுங்க… கௌதம், உன் கல்யாணத்துக்கு இவங்க கிட்ட சம்மதம் வாங்க.. என்ன பாடு படப்போறையோ….?!’ என நினைத்தவன், சிறு சிரிப்போடு, மீண்டும் அதே டேக்சியில் விமான நிலையம் வந்து சென்னையை அடைந்திருந்தான் விடியும் தருவாயில்….

காயத்ரியை பார்த்து, அவர்கள் வாசலோடு அனுப்பியதை பெரிது படுத்தாமல், நடந்ததை விளக்கும் போதே.. அவளுக்கு புரிந்து போக.. பார்வையால் மன்னிப்பு கேட்டவளிடம், கௌதமின் இருப்பை காட்டி பேச்சை மாற்றிவிட்டான். அவனுக்கு தான் தெரியுமே, இது தெரிந்தால் கௌதம் நிச்சயம் கோபமும், பின் தன்னால் தானே இந்த அவமானம் என நினைத்து வருத்தமும் கொள்வான் என்பது..

___________


ஆரன் ஸ்ரீரங்கத்திற்கு சென்று வந்து இன்றோடு மூன்று நாட்கள் சென்றிருந்தது. காயத்ரிக்கு நடந்தது அறிந்தது முதல், அவளின் தாய், தந்தை மட்டுமே வருத்தத்தோடு நடமாடி கொண்டு, வேறு வழியில்லாது திருமணத்தை முடித்த கையோடு வந்துவிட, மற்ற சொந்தங்கள் இன்று தான் வந்திருந்தது மருத்துவமனைக்கு….

காயத்ரியின் தாயின் அழுகையை தவிர, உடன் வந்திருந்த சொந்தக்களின் ஏச்சுக்களும், பேச்சுக்களுமே அந்த அறையை நிறைந்திருந்தது.

காயத்ரியின் பெற்றோரின் வருகைக்கு முன்னதாக கௌதம், அங்கு நடக்கும் அனைத்தும் நேரடியாய் தெரியும் வகையில், அந்த அறையில் ஒரு கேமிராவை சைட் செய்து விட்டு வந்தவன் திரும்ப செல்வே இல்லை.

காயத்ரி, ‘தான் விசயத்தை, தனது பெற்றோருக்கு சொல்லும் முன்பு, அதுவும் இப்படியான சூழலில் வைத்து, கௌதமை அறிமுகப்படுத்துவது சரியில்லை’ என்ற அவளின் விருப்பத்திற்காகவே, அவன் விலகி நின்றது.

“ஏன்டீ! நேக்கு கொஞ்சமாச்சும் அறிவு இருந்தா இப்படி செய்திருப்பியோ..?! அதும் அத்தன பசங்க முன்னாடி போய்… காட்சி பொருளா நின்னு.. பாட்டு பாடிட்டு!” என  அவளின் அத்தை ஒருவர் ஆரம்பித்த வார்த்தைக்கு,

“தனியா வந்து, தங்கி படிக்கறச்சயே நினச்சேன்.. இதெல்லாம் இப்படி தான் நடக்குமின்னு. நம்ம ஆத்துல இருந்த வரைக்கும், ஆப்பிள முகத்த பார்க்காத இருந்த பொண்ணு, இப்ப மேடை ஏர்ற அளவுக்கு வந்திருக்கு.. இது மட்டுமா இல்ல…!” என ஒருவரும்,

“நல்லா இருக்கற பொண்ணுக்கே… எத்தனையோ சீரும் செனத்தியும்… செய்யற இந்த காலத்தில, இப்படி செஞ்சு வச்சிருக்கியே! சங்கரா.. எப்படி இவள கரை சேர்க்க போற?!” என மற்றொருவரும், ஆளுக்கென்றை சொல்ல,

வந்து பார்த்த அன்று இருந்த ஆதங்கமும், பரிவும், ‘அவளின் அதிகபிரசங்கி தனத்தால் அவள் வாழ்க்கையில் இப்படிபட்ட குறையை வாங்கி கொண்டாளே!’ என்ற கோபத்தால் கரைந்திட, அவர்கள் சொல்வதில் இருக்கும் சில விசயங்கள் நியாயமாக பட்டதால், ஆதரவாக பேச வேண்டிய அவளின் தந்தையோ, அவளை குற்றம் சாட்டும் பார்வை பார்த்தார்.

பேச முடிந்த காலத்திலேயே பேசா மடந்தையாய், சொந்தங்கள் முன்பு நிற்பவள், இப்போது இருக்கும் நிலையிலோ, அவர்களின் பார்வையையும் தவிர்த்து தலை குனிந்திருப்பதை தவிர வேறு வழியில்லையே….

அவர்களுடன் வந்த ஒருவனின் பார்வையில் இருந்த காயத்ரி மீதான ஆசையும், மோகமும் வெளிப்படையாய் தெரிய,  இவை அனைத்தையும் பார்த்திருந்த கௌதமிற்கு ஆத்திரத்தை கூட்டிவிட… நேரில் சென்று பேச முடியாத படி, தன்னை வார்த்தையால் கட்டி போட்ட தன் செல்லம்மா மீதான கோபத்தோடு பல்லை கடித்தவன்..

அங்கிருந்தே, அந்த மருத்துவமனையின் உரிமையாளரை தொடர்பு கொண்டு பேசி, அடுத்த சில மணி நேரத்தில், மொத்த கூட்டமும் விரட்டப்பட்டு காயத்ரியின் குடும்பத்தை சார்ந்தவர் மட்டும் அங்கே இருக்கும் படி செய்துவிட்டே அமர்ந்தான்.

அதன் பின், அமைதியாய் கழிந்த சில மணி நேரத்திற்கு பிறகு, ‘சொந்தங்கள் சொல்லி சென்ற வார்த்தையால் இனி காயத்ரி வாழ்க்கை என்ன ஆகுமோ?!’ என்ற பயம் தோன்ற, 

“காயத்ரி ஏன்டீம்மா .. இப்படி செஞ்ச.. இப்ப உனக்கு இப்படி ஒரு குறை வந்திடுச்சே! எல்லாரும் சொல்ற மாதிரி இனி, எப்படி உன்ன நல்லபடியா கரை சேர்க்க போறோமோ.. தெரியலையே! பெருமாளே!!!”  என்ற தாய் மீண்டும் அழுகை குரலில் ஆதங்கத்தோடு கேட்க, அவரின் கையை ஆறுதலாய் பற்றியவள்,

அவளுக்கு ஆதரவாய் கௌதம் இருப்பதை மனதில் கொண்டு, அதை சொல்ல வழியில்லாததால், பார்வையாலேயே ஆறுதல் சொன்னவளை பார்த்த போது, பெற்றவரின் மனம் அவள் சொல்ல வருவது புரியாத போதும்..  ஏதோ ஒரு திடம் கொண்டது உண்மை….

அதுவரை எதுவும் பேசாது இருந்த ராம் புது மனைவியின் ஜாடையில், “அப்பா, இனி காயத்ரி இங்க இருந்து எப்படி படிக்க போறா..?! அதோட ட்ரீட்மெண்ட் செலவு வேற. பீஸ், ஹாஸ்டல் ன்னு பண்ற செலவ மிச்சம் செஞ்சலாச்சும், அவளோட கல்யாணத்துக்கு ஆகும்..” என சொல்லி மனைவி மாலதியை பார்த்து, ‘சரியா!’ என கேட்க,

என்ன ஆனாலும் காயத்ரியை உடன் அழைத்து சென்று, அவளின் ஒன்றுவிட்ட அண்ணனுக்கு திருமணம் செய்திட வேண்டும் என்பதை அவளுக்கு ஏற்பட்ட விபத்தும், குறையையும் அறிந்தது முதலே,  பலமுறை அழுத்தி சொல்லி கூட்டி வந்ததை, ‘சரியாக செய்யுங்க !’ என்ற பார்வையை மட்டும் வீசி விட்டு, ஏதும் அறியாதவளாய் நின்றிருந்தாள் மாலதி.

படிப்பை நிறுத்தி அழைத்து சென்றால் இதுவரை படித்தது வீணாவதோடு, தனது லட்சியத்தை விடுவதும், கௌதமை விட்டு விலகி செல்ல வேண்டி வரும் என்ற சிந்தனை அவளை ஆட்டுவிக்க, சங்கரின் முகம் பார்த்தவள், கண்களால் “வேண்டாம்… நா படிக்கணும் ப்பா .. ப்ளீஸ்!”  என இறஞ்ச..

“அண்ணன் சொல்லறது தான் நேக்கும் சரியா படறது. இங்க தனியா விட்டுட்டு, அங்க இனி நிம்மதியா, நாங்க இருக்க முடியுமின்னு நேக்கும் தோணல. அதோட உன் குறைக்கு ஏத்த அளவு சீர் செஞ்சு கொடுக்க, நேக்கு தெம்பில்லையே. அதனால படிப்ப நிறுத்திட்டு வீட்டுக்கு வா!” என  சொல்பவரின் வார்த்தையில் இருக்கும், கடினம் அவரின் இயலாமையால் என்பது புரிந்தாலும், அதை ஏற்க இயலாமல் துடிக்கும் மனதை என்ன செய்ய?! என்பதாய் காயத்ரி தடுமாறி கொண்டிருந்தாள்.

தனது வேலையில் கவனம் இருந்த போதும், காயத்ரி அறையில் நடப்பவைகளை உன்னிப்பாக கவனித்து கொண்டிருந்த கௌதம், காயத்ரியை தக்க வைக்க அதிரடியாய் எடுத்த நடவடிக்கையால், அவளின் அண்ணி ராமை கொண்டு போட்ட திட்டம் தவிடு பொடியானது.

கல்லூரியில் நடந்த விபத்து என்பதால், அவளின் மீதமுள்ள படிப்புக்கான மொத்த செலவும், தங்குமிடம், மருத்துவ செலவு வரை அனைத்தையும் கல்லூரி நிர்வாகமே ஏற்பதாக சொல்ல, காயத்ரியின் கெஞ்சலும், சங்கரை நல்லவிதமாகவே முடிவெடுக்க வைத்தது.

*********

காயத்ரிக்கு விபத்து நடந்து ஒரு மாதம் சென்ற நிலையில், அனைவருக்கும் அந்த பருவத்துக்கான தேர்வும், செயல்முறை வகுப்பும் துவங்கியிருக்க, கௌதம் தனது செல்லம்மாவினை இனி தினமும் பார்க்க இயலாதே என்ற எண்ணமே அவனை பாடாய் படுத்த துவங்கியிருந்தது.

முன்பாவது தினமும் பார்ப்பது, இரவில் பேசுவதும், அவளின் தாலாட்டில் தன்னை மறந்து உறங்குவதும் என இருந்தவனுக்கு, இப்போது அவளின் நிலையில் முகத்தை மட்டுமாவது பார்த்திருக்க, இனி அதுவும் கூட தினமும் இயலாது எனும் போது, அதுவே பொறும் வேதனையை கொடுத்தது. அதே சிந்தனையில் இருப்பவனுக்கு வரும் தலைவலி வேறு பாடாய் படுத்த அவன் புன்னகை முகம் மாறி, எப்போதும் ஒரு இறுக்கம் வந்துவிட்டிருந்தது..

ஸ்வேதாவோ, காயத்ரி திரும்ப வந்தவுடன் தனது திருவிளையாடலை நடத்த நினைக்க.. துஷ்யந்த்.. “குட்டிம்மா.. கௌதமுக்கு இன்னும் லைட்டா டவுட் இருந்துட்டு தான் இருக்கு, இது விபத்தா?! இல்லையான்னு…?!

அன்னைக்கி ஸ்டேஜ் டெக்கரேஷன் இன்சார்ஜர்ல இருந்து, அத காண்ட்ராக்ட் எடுத்து செஞ்சவங்க வரை அவன் விசாரிச்சிட்டான். நம்ம கொடுத்த காசு வேலை செஞ்சதால, புதுசா  வேலைக்கு சேர்ந்த ஒரு பையன், சரியா டைட் பண்ணலன்னு சொல்லி, சரிகட்டி வச்சிட்டாங்க. ஆனாலும், நீ இப்போ அவள விட்டு ஒதுங்கியே இரு…

கௌதம் காலேஜ் வர்றது நின்னதும், நீ எத வேணுமின்னாலும் செய்… அத அவளால சொல்ல கூட முடியாது வாய்விட்டு…” என ஆலோசனை கூற, அதன்படி அவளும் ஒதுங்கி இருந்ததால்….  எல்லாமே நன்றாக செல்வதாய் தெரிந்தாலும், இன்னும் பல பிரச்சனைகள் தொடரும் நிலையில் இருப்பதை யாரும் அறியவில்லை….