Jeevan 30
Jeevan 30
உன்னோடு தான்… என் ஜீவன்…
பகுதி 30
“டக்.. டக்.. டக்..” என்ற ஓசை செவியில் விழுந்தாலும், அதை உணராது, வெகு நேரம் இருந்த ஆரனை, அவனின் போன் அழைக்க, அதில் நிஜத்தை உணர்ந்தவன்… ‘சாரிடா, கௌதம்! என்னால என்னையே மன்னிச்சுக்க முடியல… நா, மட்டும் அத செய்யாம போயிருந்தா… இப்ப நீ, இப்படி ஒரு வார்த்தைய என்ன பார்த்து சொல்லும் படி ஆகியிருக்காது.. என்ன ஆனாலும் சரி, உன் வாழ்க்கைய சரியா அமைச்சு கொடுக்க வேண்டியது என்னோட கடமை.. அத செய்ய யார் தடையா இருந்தாலும், இந்த முறை எதையும் தவறாக விடமாட்டேன்… ” என அப்போதும், தனது சிந்தனையிலேயே இருந்தவனை மீண்டும், “டக்.. டக்..” ஓசையும், கைபேசி ஒலியும் இருக்கும் இடத்தையும், நிலையையும் உணர்த்த,
“மை காட் ஹரிணிக்கு…! ச்ச…!! பொறுப்பில்லாம இத்தன செஞ்சது போதாதா…?!” என திட்டியபடியே சென்று கதவை திறந்தவன், அங்கிருந்த நர்ஸிடம் மன்னிப்பை யாசித்துவிட்டு… ஹரிணியின் நிலையை கேட்க…
“சார் அவங்களுக்கு மயக்கம் தெளிஞ்சிடுச்சு..! பட் ரொம்ப அரகண்ட்டா பிகேவ் செய்யறாங்க…. முழுசா அவங்க சுயஉணர்வு அடையலன்னு நினைக்கிறேன்… டாக்டர் உங்கள கூப்பிட்டு வர சொன்னார்” என படபடவென ஒப்பித்தவரை விட்டு, விரைவாக ஹரிணியை அனுமதித்திருக்கும் இடத்திற்கு சென்றவன் கண்டது, இன்னும் தான் காப்பாற்றப்பட்டதை கூட உணராது, அந்த கயவர்களின் கையிலிருப்பதாக எண்ணி தவித்த ஹரிணியின் செய்கையையே…
டாக்டர், நர்ஸ் என அவர்கள் அனைவரின் போராட்டத்தையும் மீறி, திமிரும் அவளின் வேகத்தை மட்டுப்படுத்த போடப்பட்ட ஊசி கூட பயனற்று தான் போனது…
பார்க்கும் போதே அந்த நால்வரையும் கொல்லும் எண்ணம் வந்தாலும், முதலில் ஹரிணியை சமாதானம் செய்ய வேண்டியதை உணர்ந்தவன்… “ஹரிணி …! ஹரிணி..!” என அழைக்க… இரண்டு, மூன்று முறை சத்தமாக அழைத்த பின்பே, அது ஆரனின் குரல் என்பதை அவளின் மூளை கிரகிக்க அவளின் போராட்டம் மட்டுபட்டு, அந்த இடத்தை பரிதவிப்பு ஆட்கொண்டது…
“சார் … நா.. எனக்கு.. நாலு…!” என அந்த நிகழ்வை சொல்லிட துடித்து.. தனக்கு ஏதோ ஆகிவிட்டதாய் நினைத்து, கண்ணீர் வடிய திக்கி திணறும், அவளின் செய்கையில் அனைவருக்கும் வேதனையாக இருந்தாலும், இதைவிட எத்தனையோ பார்த்தவர்கள் என்பதால்.. “மிஸ்டர் ஆரன்.. அவங்களுக்கு எதுவுமில்லன்னு, அவங்களுக்கு புரிய வைக்க பாருங்க.. உங்க வாய்ஸ்க்கு தான் ரெஸ்பான் பண்ணறாங்க” என்ற மருத்துவரின் ஆலோசனையில்..
அவளை நெருங்கி, அவளின் கையை பிடித்த ஆரன்… “ஹரிணி இங்க பாரும்மா… நா சொல்றது கேட்குது தானே…!” என பரிவோடு மெல்ல கேட்க… “ஹும்… ” என்ற ஹரிணியின் மெல்லிய முனங்களில்..
“உனக்கு எதுவும் ஆகல… யூ ஆர் ஷேஃப்… அன்னைக்கி மாதிரியே, கடைசி நிமிஷம் நீ.. நீயா, காப்பாத்த பட்டிருக்க… புருஞ்சுதா… நீ.. நீயா தான் இருக்க… அவங்க யாரும் இங்க இல்ல.. இப்ப நம்ம ஹாஸ்பிடல்ல இருக்கோம்…” என மீண்டும், மீண்டும் அவளின் மனதில் பதியும் படி சொல்ல … சிறிது நேரத்தில் அவளின் மொத்த பதட்டமும் தணிந்து, மெல்ல தூக்கத்திற்குள் செல்ல… அவளின் கைகளை விலக்கி வெளியேறினான் ஆரன்.
“டாக்டர், அவங்க இப்படியே தான் இனி பிகேவ் பண்ணுவாங்களா…?!” என தனது சந்தேகத்தை ஆரன் கேட்க,
“நோ மிஸ்டர் ஆரன்.. அவங்க மைண்ட்ல இன்னும் அவங்க அந்த நாலு பேர்கிட்ட மாட்டின விசயம் தான் ஓடுது.. அதான் இப்படி. நீங்க பேசினது அவங்க நல்லபடியா உள்வாங்கியிருக்காங்க. அதோட விளைவு தான் இந்த தூக்கம்… மறுபடியும் எழும்போது இந்த நிலை மாறலாம்.. இல்ல மீண்டும் இப்படியே இருக்கலாம்… லெட்ஸ் வெயிட் அண்ட் வாட்ச்…!” என சொல்லி செல்ல….
இப்போதைய சூழலில் ஹரிணியை விட்டு செல்லவும் இயலாது.. கௌதமை சந்திக்காமல் இருக்கவும் இயலாது என்று தவிக்க துவங்கியவனுக்கு மீண்டும் அழைப்பு வர…
அதில் வீட்டு எண்ணை கண்டவன் நேரத்தை பார்க்க.. ‘சரி தான் பட்டூ விழிச்சிட்டாளா… போச்சு..!’ என இதுவரை இருந்த இறுக்கம் அனைத்தையும், ஒரம்கட்டிவிட்டு போனை எடுத்த நொடி…
“டாடி.. உன் கூட நா டூ…!” என சொல்லிய மழலை குரலில், எப்போதும் போல பாசத்தோடு, “பட்டூ.. டாடி மேல என்ன கோபம்..?! ஏன் டூ விட்டுட்டீங்க.. டாடி பாவமில்லையா…!” என அப்பாவியாய் கெஞ்சும் பாவனையில் கேட்க..
அவனின் செல்ல இளவரசியோ… “காலைல நா வேக் அப் ஆக.. டாடி இல்லாம பட்டீ சோ சேட் .. தெய்யுமா..?! அதான், டாடி கூட பட்டூ டூ விட்டா…!” என தனது செயலுக்கு விளக்கத்தை கொடுக்க…
“அச்சோ… செல்லம், டாடி ஆஃபீஸ்ல கொஞ்சம் வேலைடா.. நா வரும் போது பட்டூ, வேக் அப் ஆகலையே. அதான் டாடி சொல்லாம வந்துட்டேன்.. சாரி பட்டூ… டாடி வீட்டுக்கு வந்ததும் ஹன்ரட் தோப்புகரணம் போடறேன், ஓகே..” என சொல்லிட…
“ஹண்தட் வேணாம்… கால் வலிக்கும் டாடி… டென் வச்சுக்கலாம்… ” என பெரிய மனதோட தண்டனையை குறைத்தவளின் செய்கையில், முற்றிலும் மலர்ந்தவன்…
“மை ஸ்வீட் லிட்டில் பட்டூ.. லவ் யூ டியர்… பிரின்ஷஸ்” என சொல்லி , “காயும்மா, பக்கத்துல இருந்தா கொடு பட்டூ” என சொல்ல.. “அம்மா.. டாடி உன்கிட்ட பேசணுமாம்..!” என கொடுத்துவிட்டு, தனக்காக காத்திருந்த சச்சும்மாவோடு அங்கிருந்து சென்றாள் ஆரனின் பட்டு.
இதுவரை ஆரனுக்கும் மகளுக்கும் நடந்த ஊடல், பேச்சுவார்த்தையை சிறு புன்னகையோடு பார்த்திருந்தவள், அழைப்பேசியே வாங்கி, “ஹலோ.. ஆரன் ஹரிணிக்கு எப்படி இருக்கு..?! நல்லா இருக்காங்களா?!” என கேட்க,
“ம்ம்.. பரவாயில்ல… பட், இப்ப அவங்கள விட்டு வரமுடியுமான்னு தெரியல…! பட்டுகிட்ட காலைல தான் வந்த மாதிரி சொல்லிட்டேன். சோ, அவ இனி நைட் வரை என்ன கேட்க மாட்டா.. நீ என்ன பண்ணு.. எனக்கு ஒருசெட் ட்ரஸ் மட்டும், நம்ம ட்ரைவர்கிட்ட கொடுத்துவிடு..” என்றதும், “சரி..” என்றவள், தொடர்ந்து
“ஆரன்.. அது.. வந்து, நா.. அங்க வரட்டா…?! ஹரிணிய பார்க்க” என நிறுத்தி, மெதுவாய் கேட்ட போது தெரிந்து போனது, நேற்றைய விசயத்தை அவள் முழுதாய் ஆராயாமல் விடமாட்டாள் என்பது….
‘ஹூம்..!’ என்ற பெருமூச்சை அவளறியாது வெளிவிட்டவன்.. “சரி, நீ அப்ப ட்ரஸ் எடுத்துட்டு, ட்ரைவரோட வந்திடு… பட்டுவ சச்சும்மாவ பார்த்துக்க சொல்லி விட்டுட்டு வா” என சொல்லி போனை வைத்தவன்… ‘இனி வருவதை சமாளித்து தான் தீர வேண்டும்!’ என்ற முடிவோடு, அதற்கான ஏற்பாட்டை செய்து, அனைத்தையும் எதிர்கொள்ள தயாரானான்.
ஹரிணியின் தாயும், தங்கையும் வந்தாலும், அவளின் அடுத்த நிலையை அறியாமல், அங்கிருந்து செல்ல மனம் இடம் தராததால், அங்கேயே இருந்தவனிடம் வந்த காயத்ரி, உடையை கொடுக்க… இரவு தங்கியிருந்த அறைக்கு சென்று ரெடியானவனுக்கும், மற்றவர்களுக்கும், கட்டாயபடுத்தி உணவு கொடுத்தவள்… ஆறுதலாய் பேசி கொண்டிருந்தாலும், அவளின் மனமோ எதோ ஒன்று தன்னிடம் மறைக்கப்படுவதாகவே தோன்றியது.
ஆரன் அறியாமல், ஹரிணியின் விபத்து குறித்து கேள்வி கேட்டாலும், அனைவரும் ஒன்று போல அது சாதாரண விபத்து தான் என உறுதியாய் சொல்லிட, ஆரன் கரத்திலும் காயம் இல்லாது இருக்க குழப்பம் அதிகமானதே அன்றி குறையவில்லை காயத்ரிக்கு…
ஹரிணியின் நிலை குறித்து, அவளின் தாயாருக்கே முழுதாய் தெரிவிக்காதவர்கள், காயத்ரியிடமா உண்மையை சொல்லிட போகிறார்கள். ஆரன் அனைவரும் வரும் முன்பே, அதை செயல்படுத்தி வைத்திருந்ததால் எல்லாம் எளிதாகி போனது.
இப்போது அவனின் பயம் எல்லாம், ஹரிணி மறுபடியும் விழிக்கும் போது எதையாவது சொல்லிட கூடாதே என்பதே….!!!
மதியம் வரை அனைவரையும் தவிக்க விட்டு கண் விழித்தவள், ஓரளவு நார்மலாக இருக்க… டாக்டரின் அனுமதியோடு உள்ளே வந்த ஆரன், “இங்க பாரு ஹரிணி, நடந்த எதுவும் யாருக்கும் தெரிய வேணாம். இன்க்லூடிங் யுவர் பேமிலி, நிச்சயமா அவங்க பயந்திடுவாங்க. சோ! சாதாரணமா நீ இரு. உனக்கு எதுவும் ஆகல, அத மட்டும் மனசுல நல்லா பதிய வச்சுக்கோ” என நன்றாக, அவளுள் பதிய வைத்தவன், அதன் பிறகே மற்றவர்களை பார்க்க வைத்தான்.
பெரிதாக எந்த பிரச்சனையும் இல்லாது இருக்க, சிறிது நேரத்திலேயே நார்மல் வார்டுக்கு மாற்றப்பட்ட ஹரிணியிடம், காயத்ரி மெல்ல யாருமறியாமல் விசாரணை செய்ய… ஹரிணியே அறியாததை எவ்வாறு சொல்வாள்…?!
செய்த முயற்சி யாவும் தோல்வியில் முடிய அதன் பொருட்டு அமைதியாய் இருந்த காயத்ரியோடு… ஹரிணிக்கு ஆயிரம் பத்திரம் சொல்லி… அவளின் தாய்க்கும், தைரியத்தை கொடுத்து, ஆரன் இல்லம் வர இருள் பரவ துவங்கியிருந்தது.
வந்ததும், தனது பட்டுவின் ஆயிரம் கேள்விகளுக்கு பதில் கொடுத்து, அவளிடம் தந்த வாக்குபடி தண்டனையை பெற்றுக்கொண்டு, அவளுக்கு உணவு கொடுத்து முடிக்கும் வரை ஆரனை விட்டு விலகாது இருந்த குழந்தையால், மேற்கொண்டு செய்ய வேண்டியதை செய்ய முடியாது இருந்தவன்…
அவளை காயத்ரியிடம் ஒப்படைத்துவிட்டு, தனது அலுவலக அறைக்கு வந்து, சில காலமாய் தனக்கு உதவும் ஏஜென்சியை தொடர்பு கொண்டவன், கௌதம் பற்றிய தகவல்களை சொல்லி, இப்போது அவன் இருக்கும் இடம் பற்றிய தகவலை அறிந்து சொல்லிட சொல்ல,
அவர்களுக்கு தேவையான அனைத்தையும் கேட்டவர்கள், 24 மணி நேரத்தில் சொல்வதாக சொல்ல… “நோ.. எனக்கு எவ்வளவு சீக்கிரம் நீங்க கொடுக்க முடியுமோ கொடுங்க…!” என பொறுமையற்று கேட்டவனிடம்…
“ஆரன், எந்த கேஸா இருந்தாலும் தகவல் கலெக்ட் பண்ணிட்டா, உடனே கொடுத்திடுவோம். நா, சொன்னது மேக்சிமம் டைம். டீடெய்ல்ஸ் கிடச்ச அடுத்த செக்கண்ட், உங்களுக்கு சொல்லிடுவோம்…” என சமாதானப்படுத்தியவர்கள், கௌதம் இப்போதைய இருப்பை அறிந்து கொள்ள முயன்று கொண்டிருந்த நேரம், அவன் தனது ஜாகையை சென்னைக்கு மாற்றி சென்றிருந்தான்.
*****
கடந்த கால கனத்தை தாங்க இயலாது, மூச்சுக்கும் தவிக்கும் நிலையில், சட்டென தன்னிலை அடைந்த கௌதம், எழுந்து அமர அவனின் விழிகள் காட்டிய நேரத்தை நம்பிட இயலாது வெறித்தவன்.. இரவு முழுவதும், ஒரு நொடி கூட உறங்காது.. தனது முன்பிறவியோ என்னும் படியான கடந்தகாலத்தில் மூழ்கியதை உணர்ந்தவன், அவசரமாக எழுந்து தன்னை சுத்தப்படுத்தி கொண்டு அமுதனை அழைத்தான், செய்ய வேண்டியதை துரித படுத்த வேண்டிய அவசியம் உணர்ந்து…
“அமுதா, நேத்து அந்த பொண்ண தூக்க ட்ரை பண்ணவங்கள, கவனிக்க சொன்னது என்ன ஆச்சு.. ?!”
“அண்ணா.. ஆல் ரெடி அவங்க நாலு பேரும், லைப் லாங்.. இனி எந்த பொண்ணையும் ஏறெடுத்தும் பார்த்திட முடியாத படி, எல்லாத்தையும் பக்காவா.. நம்ம பசங்க செஞ்சு, அவங்கள ஆளுக்கு ஒரு பக்கமா தூக்கி போட்டாச்சு..”
“ஹும். ஓகே…! சென்னை போக டிக்கெட் போட்டுடு… முதல்ல கிளம்பற ப்ளைட் பார்த்து அதுல போடு.. சப்போஸ், ப்ளைட் டிலே ஆகுமின்னா.. கார்ல போற மாதிரி ஏற்பாட பண்ணிட்டு சொல்லு..” என சொல்லி வைக்க போனவன்,
“அண்ணா ஒரு முக்கியமான விசயம்…!” என்ற அமுதனின் வார்த்தையில் மீண்டும் பேசிட,
“அண்ணா, அந்த ரவுடிங்க ஹரிணிய அஃப்யூஸ் பண்ண நினச்சு தூக்கல…! அவங்க அவள தூக்கறதுக்காகவே அனுப்ப பட்டிருக்காங்க. பசங்க அடி தாங்காம, ஒருத்தன் ஒளறி இருக்கான் உண்மைய… ” என சொல்ல, பரபரப்போடு,
“யார் அமுதன்…?! என்ன மோட்டீவ்?!” என்ற கௌதமின் கேள்விக்கு,
“நம்ம டவுட் கண்பார்ம் அண்ணா இது அவங்க தான்… மோட்டீவ் நிச்சயமா ஆரன் அண்ணாக்கு பாதகமா செய்யறதா தான் இருக்கும். அந்த ஆளுக்கு கடத்த சொன்னது தான் தெரியும்.. காரணம் சொல்லப்படல” என விளக்க..
“அப்ப சென்னை கண்டிப்பா இப்பவே போகறதுக்கு ஏற்பாடு பண்ணிடு… நா ரெடியாகறேன்… இதுக்கு மேல அவங்கள விட்டு வைக்கறது சரியில்ல..” என்று ஆத்திரத்தோடு மொழிந்தவன், அதே வேகத்தோடு கிளம்பினான்.. அந்த மறைந்து தாக்கும் எதிரியை காண…
*****
கௌதம் இருக்கும் இடத்தை அறிந்து, அவனை நேரில் சந்திக்கும் வாய்ப்புக்காக ஆரன் காத்திருக்க, காயத்ரியின் மனமோ ஒரு நிலை இல்லாது தவிக்க துவங்கியது.
நேற்று முதல் எதுவோ ஒன்று சரியில்லாதது போலவே தோன்றுவதை தவிர்க்க முடியாது இருந்தவள், அம்மு உறங்கியதும், ஆரனை தேடி வர, அவனோ, சிந்தனை முழுவதும், ‘கௌதம் வாழ்க்கையை எப்படி சரி செய்வது..?!’ என்ற யோசனையில் ஆழ்ந்திருந்தான்.
“ஆரன்…!” என்ற காயத்ரியின் குரலில், சட்டென தனது யோசனையிலிருந்து வெளி வந்தவன், “சொல்லு காயு.. என்ன விசயம்..?! பட்டு தூங்கிடாளா ?, நீ தூங்காம இங்க என்ன பண்ற..?!” என வரிசையாய் கேள்வியை தொடுக்க…
பதில் சொல்லாது, ஆரனின் முகத்தையே பார்த்திருந்தவளின் பார்வையை, சில நிமிடத்திற்கு மேல் பார்க்க இயலாது, முகத்தை வேறு புறமாக மாற்றி நின்றவன், “என்னாச்சி.. இப்படி பார்த்துட்டு இருக்க..! போ, போய் தூங்கு.. எனக்கு ஒரு முக்கியமான கால் வரணும். அது வந்ததும் பேசிட்டு வர்றேன்” என மனதில் இருக்கும் படபடப்பு, வெளியே தெரியாதவாறு சமாளித்து பேசி, அவளை அனுப்ப நினைத்தவனை, மேலும் அதே போன்று பார்த்தவள்,
“ஆரன்.. எதையாவது என்கிட்ட மறைக்கறீங்களா?! தயவு செஞ்சு இனியும் எதையாவது மறச்சு வச்சு, என்னை மேலும் மேலும் கஷ்டப்படுத்தாதீங்க.. இதுக்கும் மேலையும், எதையும் எதிர் கொள்ளற சக்தி எனக்கு சுத்தமா இல்ல..! ப்ளீஸ்.. எதுவானாலும் ஓப்பனா சொல்லிடுங்க..!” என சொல்லும் போதே அவளின் குரலின் கரகரப்பும், நடுக்கமும் அவளின் மனநிலையை ஆரனுக்கு நன்கு புரியவைத்தாலும்…
‘தன்னால் நடந்த பிழையை சரி செய்யாமல், அவளிடம் எதையும் முன்கூட்டியே சொல்லி, அதனால் அவள் இன்னும் வேதனை பட வேண்டாமே!’ என்ற எண்ணத்தோடு… தனது குரலில் வேண்டுமென்றே கடுமையை வரவைத்தவன்,
“காயத்ரி..! மனுஷனுக்கு ஆயிரம் பிரச்சனை வரும் போகும். எல்லாத்தையும் வீட்டுல எல்லார்கிட்டையும், சொல்லிட்டு இருக்க முடியாது.. சரியா போ, போய் தூங்கு. தேவையில்லாம என்னோட விசயத்தில வந்து என்னாச்சி, என்னாச்சின்னு கேட்டுட்டு…! கொஞ்சம் கூட நிம்மதியே இல்லாம போச்சு..” என கத்தி பேச,
அதுவரை இருந்த பதட்டம் நீங்கி, ஆரனின் இந்த பரிமாணத்தில், பயம் தோன்ற.. அதோடு கண்ணில் சிறு நீர் துளித்ததை, அவனுக்கு தெரியாது மறைத்தபடி வேகமாய் சென்றவன், தனது மகளை அணைத்தவாறு படுத்து, தலையணைக்கு தனது கண்ணீரை பரிசாக்கினாள்.
காயத்ரியை நோகடித்து அனுப்பிவிட்ட ஆரனுக்கு, அது.. அதைவிட பெரும் வேதனையை தந்தாலும், சென்று சமாதானம் செய்ய, இப்போது தான் இருக்கும் நிலையில் இயலாது என்பதால் அங்கேயே இருந்த இருக்கையில் அமர்ந்து காத்திருந்தான் கௌதம் பற்றிய தகவலுக்காக…
அதிக நேரம் காத்திருக்க வைக்காமல் ஆரனுக்கு அழைத்தவர்கள், “கௌதம் சக்ரவர்த்தி, இப்ப பெங்களூர்ல இல்ல ஆரன். ஹீ ஈஸ் இன் சென்னை நைவ்” என்று ஆரம்பித்து, அவர்களுக்கு கிடைத்த தகவல்களை சொல்ல, ஒரு பக்கம் அதிர்ச்சியாய் இருந்தாலும், ஒரு பக்கம் ஆசுவாசமும் கிடைக்காமல் இல்லை ஆரனுக்கு…
“ஓகே, தேங்க்ஸ் சார், இனி நா, நேர்ல பார்த்துக்கறேன். எனக்காக இவ்வளவு தூரம் செஞ்சு கொடுத்ததுக்கு, ஒன்ஸ் ஏகென் தேங்க்ஸ்..” என்றவன், அடுத்து ட்ராவல் ஏஜென்சி மூலம் சென்னை செல்ல ஏற்பாட்டை செய்து முடித்து, “முக்கியமான விசயம், நாளைக்கி வந்திடுறேன்!” என மட்டும் காயத்ரியிடம், அவளின் கண்ணீர் முகம் பார்க்காமல் சொன்னவன், சச்சம்மாவிடம் அவர்களை ஒப்படைத்து, அப்போதே கிளம்பினான்.. கௌதமை சந்திக்க.. ‘காலம் தாழ்த்தினால் அது இன்னும் சிக்கலை கூட்டிடுமோ?!’ என்ற எண்ணத்தோடு…
சென்னையில், தனது இல்லத்தில் இருந்த கௌதமிற்கு, ‘கண்டிப்பாக, இனி தன்னை தேடி ஆரன் வருவான்.. எப்படி அவனை எதிர் கொள்வது.. அதோடு, தனது வரவு அவர்கள் வாழ்க்கையில் குழப்பத்தை உண்டாக்காமல் இருக்க, என்ன செய்ய வேண்டும்?!’ என்ற எண்ணமே பிரதானமாய் ஓடிக்கொண்டிருக்க… மிக நீண்ட நாட்களுக்கு பின், தனது அந்த கபோர்டை திறந்தவன், அதிலிருந்த ஒரு பேப்பரோடு, தனது மெத்தையில் சாய்ந்தவன், அதில் இருக்கும் செய்தியை இப்போதும் கிரகிக்க முடியாது, அன்றைய நாளின் நினைவில், கண்ணில் மெல்லிய நீர்படலம் தோன்ற.. “சாரி செல்லம்மா..!” என்ற சொல்லோடு இமை மூடினான்..
விடியல் யாருக்கு எப்படி அமையுமோ?!