Jeevan 31

Jeevan 31

உன்னோடு தான்… என் ஜீவன்…

பகுதி 31

முழுமையாய் இரவு முடிந்து, கதிரவன் வானில் உலாவரும் நேரத்திற்கு முந்தைய அதிகாலை பொழுதில், தனது காதில் விழுந்த சலசலப்பான பேச்சு குரலில் திடுக்கிட்டு எழுந்தான் அமுதன்.

‘என்னடா சத்தம் இது! காலங்காத்தால.. யாரோ சண்டை போட்டுக்கற மாதிரி இருக்கே?!’ என்று எண்ணியபடி, தனது அறையை விட்டு வெளியேறி, நுழைவாயிலை  திறந்து பார்த்தவன், அடுத்த நொடி அதிர்ந்து போனான் ஆரனின் வரவை எண்ணி.. ‘இவரு எப்ப வந்தாரூ..?!’ என்றபடியே கேட்டை நோக்கி விரைந்திட,

அங்கோ, ஆரனை உள்ளே அனுமதிக்க முடியாது என்று அவனோடு வாக்குவாதத்தில் ஈடுபட்டிருந்தார் வாயில் காவலாளி.

“சார், நீங்க வந்திருக்கற நேரத்த பாருங்க. எடுத்த எடுப்பில கௌதம் சார பார்க்க அலவ் பண்ண முடியாது. அதோட அப்பாயின்மெண்ட் வேற இல்ல. காலைல மூனு மணிக்கு வந்து, ஏன் சார் இம்ச பண்ணறீங்க?! போயிட்டு, எதுவானலும் விடிஞ்சு வாங்க.. சார கேட்டுட்டு உள்ள விடுறேன்” என காவலர் சொல்ல,

“நா யாருன்னு தெரியாம பேசாத, ஒன்னு என்னை உள்ள விடு, இல்ல கௌதம வெளிய வர சொல்லு, இப்பவே அவன பார்த்தாகணும். அவன பார்க்காம ஒரு அடி கூட நகர மாட்டேன்..!” என்று ஆரன் சத்தமாக, அவரோடு உள்ளே விடச்சொல்லி போராடிக் கொண்டிருந்தான்.

அருகே வந்த அமுதன், “ஆரன் சார், நீங்க இங்க என்ன பண்றீங்க?!” என ஏதும் அறியாதவன் போல கேட்க…

“ஹும்..!! உன் பாஸ் நேத்து எனக்கு கொடுத்த பட்டத்திற்கு, நன்றி விழா நடத்தலாமின்னு வந்தேன்..!” என நக்கலாய் சொன்னவன்,  “கூப்பிடுடா அந்த இடியட்ட…!” என கோபமாய் அமுதனிடமும் சத்தமிட…

“சார், சத்தம் போடாதிங்க ப்ளீஸ். பாஸ் ரெண்டு நாளா சரியா தூங்கவே இல்ல.. எதுவானாலும் விடிஞ்ச பின்னாடி பேசலாம்” என்றவனை, நக்கலாய் பார்த்தவன்… “ஏன் தூங்கி எழுந்திருச்சு, அப்படியே… ஜாலியா வாக் போயிட்டு வந்து சாப்பாட்ட கொட்டிக்கிட்டே பேசலாமே…! அடிங்க…! நானே பொறுமையா பேசிட்டு இருக்கேன்.. உள்ள விடாம, என்னடா ஆர்க்யூ பண்றீங்க..?!


ரெண்டு நாள் தூங்காததுக்கு இப்படி ஃபீல் பண்ணறையே, இவனால.. இவனுக்காகன்னு, எத்தன நாள் தூங்காம ஏங்கி தவிச்சிருக்கேன் தெரியுமா..?! உனக்கெல்லாம் புரியாதுடா..! இப்பவே நா அவன பார்த்தே ஆகணும்..! அவன் சொன்ன வார்த்த, என்ன நிம்மதியா ஒரு நொடி கூட இருக்கவிடாம துரத்துது .. ப்ளீஸ்..!” என்றவன் குரல் அதிகாரமாய் ஆரம்பித்து, இறுதியில் இறங்கி ஒலிக்க,

இருவர் வாழ்க்கையிலும் நடந்ததை ஒரளவிற்கு அறிந்திருந்த அமுதன்,
‘கௌதமின் வாழ்விலும், ஆரனின் வரவால் நல்லது நடக்காதா?!’ என்ற எண்ணம் கொடுத்த ஆசையோடு…

“வாங்க..!” என்றவனோடு விரைந்தவன், நேராக மாடி செல்ல போக, “ஆரன் சார், இப்பவே பேசனுமா…! கொஞ்சம் நேரம் போய் பேசலாமே… டைம் 3.15 தான் ஆகுது.. நீங்களும் தூங்காம ட்ராவல் செஞ்சிருப்பீங்க.. நா உங்களுக்கு ரூம் அரேன்ஜ் பண்றேன்” என அக்கரையாய் கேட்க…

“உன்னோட பேர் என்ன?! மறந்திடுச்சு” என தனது நெற்றியில் தட்டியபடியே சம்மந்தமில்லாது கேட்க, முதலில் முழித்தாலும், “அமுதன்.. ஏன் கேட்டீங்க?!” என கேட்டிட…

“இதோ பாரு அமுதன்.. நா, உக்காந்து விருந்து சாப்பிட, மாமனார் வீட்டுக்கு வரல.. அதோட அவனோ, இந்த வீடோ எனக்கு புதுசும் இல்ல.. போய் உன் வேலைய பாரு.. எப்ப பேசனும், எப்படி பேசனுமின்னு எனக்கு தெரியும்.. தயவு செஞ்சு” என்றவன்.. தனது கையை கொண்டு வாயை மூடி, சைகையாய், ‘நீ முடிட்டு போடா!’ என்று சொல்லாமல் சொன்னவன், “வந்துட்டான், எனக்கும் கௌதமிற்கும் இடையே!” என்று முனுமுனுப்பாக சொல்ல,  

அவனின் பொறாமை கண்டு, சிறு புன்னகை வந்தாலும், அதை காட்டினால் இன்னும் காய்வான் என்பதால், அதை தன் வாயினுள் அடக்கியவன், தனது கரம் கொண்டு வாயை மூடி, ஆரனை பார்த்து, ‘போதுமா!’ என தலையாட்டி கேட்க,

“எங்க இருந்துடா, உன்ன புடுச்சான் அவன்.. முதல்ல அவன பார்த்துட்டு வந்து, உன்ன வச்சுக்கறேன்!” என்றபடியே மாடி ஏறியவனை பார்த்த அமுதன் மனமோ,  
‘கலகம் தொடங்குது, நல்லதா முடுஞ்சா சரி!’ என்று எண்ணியது.

அதோடு எதுவும் பேசாது, மேலேறி வந்த அமுதன், தன் அறைக்கு வெளியே இருக்கும், ஹால் போன்ற அமைப்பிலிருந்த இருக்கையில் அமர்ந்தான் பலத்த யோசனையோடு…

*******

கௌதம், தன் அறைக்கு வந்ததும் மனதில் இருந்த அழுத்தம் காரணமாக, நீண்ட நாட்களுக்கு பிறகு,  அந்த பேப்பரை எடுத்தவனின் கண்கள் கலங்கினாலும் அதிலிருந்த…

“தடம் மாறும் இளைஞர்கள்.. போதையின் உச்சத்தில் உல்லாசம்.. ”

வாசகம், அவனை அதை முதன்முறையாக வாசித்த போது கொடுத்த அதே தாக்கத்தை இப்போதும் கொடுத்தது.

மெல்ல அதிலிருந்து பார்வையை கீழிறக்க, அதில் ஆரனும், காயத்ரியும் நெருக்கமாய் இருக்கும் புகைப்படம் இருக்க, கண்கள் அவனறியாமல் மெல்ல கண்ணீரை உகுத்தது.

தன் உயிரான இருவரையும், அந்த கோலத்திலும் தவறாக நினைக்கவிடாமல் தடுத்தது அவனின் புத்தி. இருவரையும் நன்கு அறிந்தவன் என்பதால், அவர்கள் போதை மருந்து எடுத்திருப்பதாய் போட்டிருந்த உடனேயே, இது அவர்களுக்காய் பின்னப்பட்ட சதி வலை என்பது தெளிவாகி போனது கௌதமிற்கு..

தன்னை முழுமையாய் நம்பி இருந்த ஒரு பெண்ணை, எப்போதும் துணையிருப்பேன், எந்த துன்பமும் நெருங்கிட விடமாட்டேன் என தான் கொடுத்த வாக்கை ,அன்று  காத்திட முடியாது போன குற்றத்திற்காக, தனது செல்லம்மாவிடம் எப்போதும் போல, இப்போதும் மன்னிப்பை யாசித்தான் அவளின் மீது உயிரானவன்.

அவனுக்கு, ‘ஸ்ரீரங்கம் செல்ல வேண்டியவள் எதற்காக, ஆரனை காண வந்தாள்?! அவளாக வந்தாளா?! இல்லை வரவழைக்கப்பட்டாளா..?!’ என்ற  குழப்பம் மட்டும் இன்னும் தீராது இருக்க, ‘தான் ஜெர்மன் போகாது இருந்திருந்தால், இப்படி நடந்திருக்காதோ?!’ என இதோடு எத்தனை முறை யோசித்திருப்பானோ..!!

‘எது எப்படி இருந்தாலும், இப்போது ஆரனின் மனைவி காயத்ரி. அதை தாண்டி வேறு சிந்தனையை செலுத்துவது, மிக மிக தவறான செயல். என் செல்லம்மா இப்போது இல்லை.. இது மட்டுமே நிதர்ஷனம்!

அன்பானவர்களை இழப்பது எனக்கொன்றும் புதிதில்லையே.. இனி எந்த சூழலிலும் ஆரனையும், காயத்ரியையும் நான் சந்திக்கவே கூடாது. நேற்று ஆரனை கண்டவுடன் தன்னையும் மீறி, அவனை நெருங்க நினைத்த மனம், காயத்ரியை பார்த்தால் நிச்சயம் வேறு மாதிரியாக மாறி போகுமோ! என்ற பயம் ஆரனை மித்ரதுரோகியாக்கி விட்டு விலகி ஓட வைத்தது.

என் மனம் மாற்றான் மனைவியை என் செல்லம்மாவாக பார்த்துவிட கூடும்… அது ஆரனுக்கு செய்யும் துரோகம்…!’ என்று எப்போதும் போல இன்றும், தன்னுள்ளேயே மறுகி தவித்தவன்,

தனது இத்தனை வருட அஞ்ஞானவாசத்திற்கு நேற்று முடிவு கிடைத்தாலும், அதை தொடர்ந்தால் வரும் விளைவுகளுக்காகவே, அவர்களை விட்டு என்றும் விலகி நிற்பது என்பதில் தீவிரமானவன், அந்த பேப்பரை மெத்தை மீது தூக்கி எறியவும், பட்டென கதவை திறந்து ஆரன் உள்ளே வரவும் சரியாக இருந்தது.


கௌதம், திறந்த கதவின் புறம் திரும்பியவன், நிச்சயம் ஆரனை எதிர்பார்க்கவில்லை என்பது அவனின் விழி வழி தெரிய…

ஆரனோ, “என்னடா… இவன எப்படியெல்லாம் பார்க்கவிடாம செஞ்சோமே, அதையும் மீறி வந்துட்டானேன்னு பார்க்கறையா..?!” என நக்கலாய் கேட்ட படியே, கௌதமிற்கு அருகே வந்தான்.

அவன் அருகே நெருங்கிய போது, கண்ணில் தெரிந்த அந்த பேப்பரை பார்த்ததும்,  தன் நாக்கு உலந்து போனது போல் வார்த்தைகளற்று சமைந்தான் ஆரன்.

ஆரன் கண்கள் கண்டதை, கௌதமும் பார்க்க, விரக்தியான சிரிப்போடு, “நேத்து நா, உன்னை பார்த்ததும், விலகி வர காரணமே இது தானே… ! ஏன்டா, தேடி வந்து மறுபடியும் வேதனைய கூட்டறீங்க..?!” என கரகரப்பான குரலில் கேட்வனின், வேதனையின் அளவு ஆரனால் புரிந்து கொள்ள முடிந்தாலும், இப்போது பேசியே ஆகவேண்டிய நிலையில் கஷ்டப்பட்டு தனது தொண்டையை சரி செய்தவன்..


“சோ.. நீயும் அத நம்பற.?!” என கௌதமின் முகம் பார்த்து அழுத்தத்தோடு ஆரன் கேட்க, “நம்பறது விசயமே இல்ல, இப்ப.. நீ வாழற வாழ்க்கை..  அது நல்லபடியா இருக்கா?! அதான் விசயம்.. தயவு செஞ்சு மேல எதுவும் பேசாம, போ ஆரன்.. எனக்கு எப்பவும் தனிமை தான்னு விதிச்சத மாத்திட முடியுமா..?!” என வாழ்க்கையின் மிதமிஞ்சிய வெறுமையை குரலில் தேக்கி சொன்னவனிடம் நெருங்கியவன்,

“எனக்கு, ஒரே ஒரு கேள்விக்கு மட்டும் பதில் சொல்லு?! இந்த பேப்பர்ல இருக்கறத, நீ நம்பறையா?! இல்லையா?! எனக்கு தெரிஞ்சே ஆகணும்…?” என கராராய் கேட்க,

தான் சொல்லும் பதிலில், அவனின் வாழ்க்கை உள்ளது என்பதை நினைத்து மனதை கல்லாக்கியவன், முகத்தை வேறு புறம் திருப்பி, “நம்பிக்க.. அத தான் ஒடச்சிட்டீங்களே…!” என கத்தியவனிடம்,


சென்று  சட்டென அவனின் சட்டை காலரை பற்றியவன், “இப்ப சொன்னத, அப்படியே, என் முகத்த பார்த்து சொல்லு… இத, நீ முழு மனசா நம்பறேன்னு….!” என கௌதமிற்கு இணையாய் கத்தி கேட்வனின், ஆதங்கம் புரிந்தாலும், பிடிவாதமாய் பேசாமலும், தன்  சட்டையை பற்றிய கையை விலக்கி விடாமலும் நின்றான் கௌதம்.

ஆரன், கௌதமிடம் சென்று சிறிது நேரத்தில் வந்த கௌதமின் கத்தலில் பதட்டத்தோடு வந்த அமுதன், இருவருக்கும் இடையே செல்லாது, கதவருகே நின்றான் ஆரனின் கேள்வியில்..

“எப்படிபட்ட தப்பு செஞ்சாலும், தண்டனைன்னு ஒண்ணு கொடுக்கறதுக்கு முன்னாடி, அவனோட பக்கத்து நியாயத்த சொல்ல ஒரு சந்தர்ப்பம் கொடுப்பாங்க. ஆனா.. அப்படியான சந்தர்ப்பத்த கூட கொடுக்காம, நீயே தீர்ப்ப எழுதி முடிச்சிருக்க கௌதம்..! இதுல என்னை விடு, உன்னோட வாழ்க்கையும் இருக்குன்னு ஏன் தெரியல…?!” என்ற ஆரனை பார்த்து, விரக்கியான சிரிப்பை உதிர்த்தவன்,

“வாழ்க்கையா.. எனக்கா?! அப்படிவேற ஒன்னு இருக்கா என்ன..?!” என்றவன், “ஊர் உலகம் முழுக்க வெட்ட வெளிச்சமா தெரிஞ்ச ஒரு விசயத்திற்கு, எதுக்குடா விசாரண… ?! போடா, போ போய் நிம்மதியா இருக்கற வழிய பாரு….!” என சொன்ன கௌதமை விட்டு விலகியவன்,

“ஒரு போட்டோவும், நாலு வரியும் கொடுத்த நம்பிக்கைய, கிட்டத்தட்ட இருபது வருஷத்துக்கும் மேல பழகின நட்பு கொடுக்கல… ?! உயிரா நேசிச்ச பொண்ணு கொடுக்கல..?! சபாஷ்…!!!இதுல நா, நிம்மதியா வாழறதா…?! தினம், தினம் நகரத்துல வாழ்ந்துட்டு இருக்கற, எங்களுக்கு தான்டா தெரியும் வலி.. !”

“இப்ப நா, சொல்லறத நீ நம்பினாலும் சரி, நம்பாமலே போனாலும் சரி, ஆனா.. நா, முழுசா நடந்தத சொல்லிடுறேன்..! ஏன்னா, என் தரப்ப சொல்லலையேன்னு, எனக்காவது உறுத்தல் இல்லாம போகும் பாரு..!” என்றவன், அன்றைய தினத்தின் நிகழ்வை விளக்க தயாரானான்.

கௌதமிற்கும், தனக்கு தெளிவில்லா விசயத்தில் தெளிவு பெற வேண்டி இருந்ததால், ஆரன் சொல்வதில் தடை சொல்லாது, வெறுமையான உணர்வோடு கேட்க துவங்கினான்.

******

கௌதம், ஜெர்மன் சென்று தனது வேலையை வெற்றிகரமாய் முடித்த செய்தியை சொல்வதற்காக போனை எடுக்கவும், ஆரன் அவனுக்கு அழைக்கவும் சரியாக இருந்தது.

“ஆரா இப்ப தான், உனக்கு கூப்பிட நினச்சு போன எடுத்தேன்.. ! கரெக்ட்டா, நீயே கூப்பிட்ட..!” என உற்சாகத்தோடு பேசும் கௌதமின் குதூகலத்திலேயே தெரிந்து போனது, அவன் பயணத்தின் வெற்றி ஆரனுக்கு..

“வாவ்.. கன்கிராட்ஸ் டா.. ! நல்லபடியா முடிச்சிட்ட போல..!” என கௌதமின் சந்தோஷம் தன்னிடமும் பிரதிபலிக்க கேட்டான் ஆரன்,

“ஆமாம் டா, ரொம்ப சந்தோஷமா இருக்கு.. ரொம்ப நாள் கனவு இப்ப நிஜமாகிடுச்சி!” என மகிழ்ச்சியை வெளிப்படுத்திய கௌதமிடம்,

“ஓகே, நாளைக்கி நைட் பார்ட்டிக்கு வந்திடுவ தானே.. ?!” என கேட்க,

“கண்டிப்பாடா, நாளைக்கி மார்னிங் டெல்லி வந்து, அங்கிருந்து மாறி சென்னை வர்ற மாதிரி தான் ஏற்பாடு ஆகியிருக்கு. எப்படியும் நைட் தான் வருவேன்” என தனது பயண திட்டத்தை சொல்லிட,

“ஓகே, நா அப்ப.. பசங்ககிட்ட சொல்லிடுறேன். எப்படியும் விடியவிடிய அங்க தானே இருக்கபோறோம்..!” என விளக்கியவனிடம்,

“செல்லம்மா, ஊருக்கு நாளைக்கி கிளம்பறதுக்குள்ள பார்க்க முடியுமான்னு பார்க்கணும். இல்ல, பார்ட்டி முடுச்சிட்டு காலைல நீயும், நானும் ஸ்ரீரங்கம் போற மாதிரி ஏற்பாடு பண்ணி வை.. முக்கியமான விசயம்..” என்ற கௌதமிடம்,

“என்னடா விசயம் .. ?!” என யோசனையாய் கேட்க

சிறு மௌனத்திற்கு பிறகு, “வந்து சொல்றேன்!” என சொன்னவனிடமிருந்து, இனி கேட்டு பதில் பெற முடியாது என்பது புரிய,  

“ஓகே, உனக்காக காத்திட்டு இருக்கேன். நீ சொன்ன மாதிரி ஏற்பாடு பண்ணிடுறேன். நல்ல நேரம் ஜெனியும், சாமூம் எங்க ரிலேட்டிவ் மேரேஜ் ன்னு பெங்களூர் போறாங்க. சோ, எனக்கு எந்த பிரச்சனையும் இல்ல” என்று சொல்லி விடை பெற்றவன், அடுத்த நாள் நடக்க போவது தெரியாமல் உற்சாகமாய் உறக்கத்தில் ஆழ்ந்தான்.


அடுத்த நாள், அந்த பார்ட்டி ஹால், மாலை முதலே கலைகட்ட துவங்கியது. கல்லூரி இளைஞர்களுக்கே உரித்தான விதத்தில், ஆட்டமும், கொண்டாட்டமும் ஒருபுறம் அட்டகாசமாய் அரங்கேறி கொண்டிருந்தது. ஆரன் மற்றவர்களோடு பேசி கொண்டிருந்தாலும், இன்னும் கௌதம் வராது இருப்பதை பார்த்து, அவனுக்கு அழைக்க, அதுவோ ‘நாட் ரீச்சபிள்’ என்ற தகவலையே திரும்ப திரும்ப சொன்னது.


போனை பார்த்துக் கொண்டிருந்த ஆரனுக்கு, காயத்ரியிடமிருந்து தகவல் வந்திருப்பதை காட்ட, “ஊருக்கு கிளம்பிட்டா போல, மாமி சொல்லறதுக்கு மெசேஜ் பண்ணுது. மேடம், இதுலையெல்லாம் சின்சியர் தான்..” என்று சொல்லியபடியே அதை திறந்தவன்,

“ஆரன், அவரு வந்திட்டாரா..? நா கால் பண்ணா நாட் ரீச்சபிள் வருது?” என இருந்த மெசேஜை பார்த்தவன், அவள் ஊருக்கு கிளம்பினாலும், நாளை தாங்களும் செல்வதை மனதில் கொண்டு, ‘அவள தனியா அனுப்பிவிட்டுட்டு, காலைல நம்ம போறதுக்கு, எல்லாரும் ஒன்னா போயிடலாமே!’ என்று தோன்ற ..


“நீ இப்ப எங்க இருக்க? ஊருக்கு கிளம்பிட்டையா?” என அவளின் கேள்விக்கு பதிலனுப்ப, சில நொடிகளில், “இன்னும் ஹாஸ்டல்ல தான் இருக்கேன்” என சொல்ல,  

அவளுக்கு போன் செய்தவன், “மாமி, நா இப்ப ஒரு அட்ரஸ் அனுப்பறேன். அங்க வா. கௌதமும் இங்க தான் வந்துட்டு இருக்கான். உன்ன பார்க்கணுமின்னு சொன்னான்” என சொல்லி.. அட்ரஸ்ஸை மெசேஜ் செய்ய,

‘சரி..!’ யென ரிப்ளை வந்ததும், “கௌதம், நீ சக்சஸ்புல்லா முடுச்சிட்டு வர்ற விசயத்திற்கு, சர்ப்ரைஸ் கிப்ட் உன் செல்லம்மாவோடையே ட்ராவல் டைம் ஸ்பென்ட் பண்ணறது…” என அழகாய் ஒரு திட்டத்தை போட்டவன், அதில் அவன் கௌதமின் ஒட்டுமொத்த சந்தோஷத்தையும் எடுத்து கொள்ள போவது தெரியாது போனது ..

ஆரன் அனுப்பியிருந்த முகவரிக்கு வந்திருங்கிய காயத்ரி, ஆரனுக்கு கால் செய்ய, விரைந்து ரிஷஃப்ஷன் அருகே வந்தவன், அவள் இருந்த கோலம் கண்டு அதிர்ந்து தான் போனான்.

அழுததினால் கண்கள், மூக்கு எல்லாம் சிவந்து, முகமெல்லாம் வீக்கம் கண்டு, பல நாள் காயச்சலில் விழுந்தவள் போல, ஓய்ந்து போன தோற்றத்தில் இருந்தவளை நெருங்கியவன், “காயு என்னாச்சி..? ஏன் இப்படி இருக்க..? என்ன பிரச்சனை?!” என கேட்க,

அதுவரை வேறு வழியில்லாது, அடக்கி வைத்திருந்த கண்ணீர் ஆரனின் கனிவில் மீண்டும் வர, அவளின் அழுகையையும், ஆரனையும் அங்கிருந்தவர்கள் ஒரு மாதிரி பார்க்க,

“காயு, கொஞ்சம் வெயிட் பண்ணு, வந்திடுறேன்” என்றவன், சிறிது நேரத்தில் அந்த ஹோட்டலிலேயே அறையை புக் செய்து, அங்கு அவளை அழைத்து சென்றான். அனைவருக்கும் காட்சி பொருள் ஆக கூடாது என்று நினைத்து, ஆரன் செய்தது அவனுக்கே வினையாகி போனது.

அறைக்கு வந்ததும், அவளை முதலில் முகத்தை நன்கு கழுவி வர செய்தவன், அவளிடம் குடிக்க என்ன வேண்டும் என கேட்க, அவளோ எதுவும் வேண்டாம் என்பது போல தலையசைக்க,

“காயத்ரி, உன்ன பார்த்தாலே ரொம்ப சோர்வா தெரியுது. எதாவது முதல்ல சாப்பிடு, அப்புறம் பேசிக்கலாம்” என சொல்ல, தனது போனை எடுத்தவள், “கௌதம பார்க்கணும்!” என எழுதி காட்ட,

“கௌதம் தானே, வந்துட்டு இருக்கான். என்ன ஆச்சி? எதுக்கு இந்த அழுகை? யாராவது, ட்டீஸ் பண்ணாங்களா?!” என மெல்ல அக்கரையோடு கேட்க,

“இல்ல, எனக்கு கௌதம பார்க்கணும்!” என திரும்ப திரும்ப அழுதபடி, அதையே சென்னவளிடம், என்ன விசயம் என்பதை கடைசி வரை அறிந்து கொள்ள முயன்றதெல்லாம் வீணாக,

அதே கடுப்போடு, “ஓகே மாமி! நீ உன் கௌதம் கிட்டையே எல்லாத்தையும் கொட்டு.. ! இப்ப நா ஆர்டர் பண்ற புட்டையாவது,  நா சொன்ன பேச்சு கேட்டு சாப்பிட்டு.. இல்ல வந்ததும், எனக்கு தான் ரெண்டு கொடுப்பான் அந்த இடியட்.. உன்ன கவனிக்காம விட்டுட்டேன்னு!” என சொன்னபடியே, ரூம் சர்வீஸ்க்கு அழைத்தவன், அவளுக்கு விருப்பமான இரவு உணவை ஆர்டர் செய்தான்.

உணவு ரூமுக்கு வந்த போது, அவனுக்கு நண்பர்களிடமிருந்து அழைப்பு வர, “காயு, நீ சாப்பிட்டு இரு, நா ப்ரண்ட்ஸ் கூப்பிடறாங்க, போய் நிலைமைய சொல்லிட்டு, உடனே வந்திடுறேன்” என்றதும், தனியாக இருப்பதா?! என்ற பயம் அவளின் முகத்தில் தெரிய,

“பயப்படாதே, நா வெளிய லக் பண்ணிட்டு தான் போவேன். நீ தைரியமா இரு.. போனதும் வந்திடுறேன்” என அவளுக்கு வாக்களித்தவன், சொன்னது போலவே வெளியே பூட்டிவிட்டு, தனது நண்பர்களை காண சென்றான்.

“டேய் ஆரா எங்கடா போன..?!”,  “கௌதம் இன்னும் வரலையே?!”, “நீ இன்னும் சாப்பிடல?!”,  “கௌதம் வந்ததும் சேர்ந்து சாப்படுறையா?!” என ஆளுக்கு ஒரு கேள்வியை கேட்க,

காயத்ரியின் அழுகைக்கான காரணம் தெரியாமலும், கௌதம் இன்னும் வராமலும் போனதால் கடுப்பில் இருந்தவன்,எதாவது வார்த்தையை விட்டுடகூடாதே என்று, முயன்று பொறுமையை வரவழைத்து கொண்டு, “இப்ப எனக்கு சாப்பிட எதுவும் வேணாம். கௌதம் வரட்டும்!” என சொல்லி போனோடு தனியே ஒதுங்கினான்.

நண்பர்களுக்கு அவன் கௌதம் வராமல் இப்படி இருப்பதாக நினைத்து அவர்களும் தங்கள் பேச்சை தொடர, ஆரன் எவ்வளவு முயன்றும், கௌதமை தொடர்பு கொள்ள முடியாது போக,

“இவன நம்பி, அந்த பொண்ண வேற இங்கையே வரவச்சிட்டேன்.. இவன..!! வரட்டும், செமையா நாலு போடறேன். சொன்னா.. சொன்ன மாதிரி வரமுடியாதா, இல்ல.. தகவலாச்சும் தரக்கூடாதான்னு .. சொல்லியே..!” என கோவமாக, நடந்து கொண்டிருந்தவனிடம் வந்த பேரர் ஒருவன்,

“சார், உங்க ப்ரண்ட்ஸ், நீங்க சாப்பாடு வேணாமுன்னு சொல்லிட்டதால, கூல்டிரிங்ஸ் கொடுக்க சொன்னாங்க..!” என கொடுக்க, அப்போது இருந்த கொதிப்புக்கு, அவனுக்கும் அது தேவையாக இருக்க, எதையும் யோசிக்காமல், அதை வாங்கி குடிக்கதுவங்கினான் ஆரன்.

குடித்துக்கொண்டே பலமுறை முயன்றும் அதே பதில் வர, “ச்சை..!” என முனுமுனுத்தவன், ‘காயத்ரி, வேற தனியா ரொம்ப நேரம் இருக்க மாட்டா..! போய் பார்த்துட்டு, வீட்டுக்காவது கூட்டிட்டு போயிடலாம்!’ என்ற எண்ணத்தோடு வேகமாக காரிடரில் சென்றவன், திடீர் திருப்பத்தில் வந்த, பேரரை கவனிக்காது போனதால், அவரின் கையிலிருந்த உணவு ட்ரே அப்படியே ஆரனின் மீது கவிழ,

“ஓ.. ஷிட்! பார்த்து வரமாட்ட..! இடியட்..!” என்று யாரோ மீதான கோபத்தில் கத்திய ஆரனின் குரலில், பலமுறை சாரி கேட்ட அந்த பேரரின் சத்தம் கேட்கவே இல்லை அவனுக்கு..

“போ.. போய் தொல.. மனுஷன் இருக்கற கடுப்புல” என சொல்லி அங்கிருந்து வேகமாக வந்தவனுக்குள், அப்போது தான் லேசான தடுமாற்றம் வர, “என்னடா ஆச்சு, எனக்கு!” என நினைத்தபடியே தலையை உலுக்கியவன், வேகமாய் அவன் அறைக்கு வந்தான்.

அவனின் உடையில் இருந்த உணவின் கரை அப்படியே பிடித்துவிடும் என்ற சிந்தனையும், கண்கள் இருண்டு தலை சுழல்வது போன்ற நிலையும், அவன் வேறு எதையும் கவனிக்காது பாத்ரூமை நோக்கி சொல்ல வைத்தது..

பாத்ரூம் சென்றவன், தட்டுதடுமாறி தனது மேலாடையே கழட்டி, பக்கெட்டில் போட்டு தண்ணிரை திருப்பிவிட்டு, முகத்திற்கு பலமுறை தண்ணிரை வாரி அடித்து கழுவியும் அதே நிலை தொடர, ஏதோ நிச்சயம் தவறாக உள்ளது?! என்ற சிந்தனையில், உடையை மறந்தவனாய் வெளியே வர, அங்கு காயத்ரி சாப்பிட அமர்ந்த சேரிலேயே சரிந்து கிடந்ததை கண்டவனுக்கு, தனது தலைசுற்றை விட அவளின் நிலையே பெரும் பிரளயத்தை கொடுத்தது.

தடுமாறி அவளிடம் வந்தவன், அவளை தட்டி எழுப்ப முயல, அவளிடம் சுத்தமாக எந்த வித அசைவும் இல்லாதது புரிய, என்ன செய்வது என்பதே ஆரன் அப்போதைய நிலையில் யோசிக்க முடியவில்லை.

அவள் உடுத்தியிருந்த புடவை வேறு, அவள் சரிந்திருந்த விதத்தில் எக்குத்தப்பாய் விலகி இருக்க, அதை சரி செய்ய மனம் சொன்னாலும், அவன்  எப்படி என்ற கேள்வி எழ,

அவளை தூக்கி மெத்தையில் விட்டு போர்வையால் மூடும் எண்ணம் வர, ‘கரெக்ட் அதான் பண்ணனும், எனக்கும் ஏதோ பண்ணுது..!’ என முடிவோடு கஷ்டப்பட்டு, அவளை தூக்கி மெத்தையில் படுக்க வைத்தவன், அதற்கு மேல் அவனின் மொத்த உணர்வுகளும் மறத்து போக, அவளோடே சரிந்தான் அவளுக்கு நெருக்கமாக…

மீண்டும் அவனுக்கு உணர்வு வரும் போது, அந்த அறையில் குவிந்திருந்த பலரின் கையிலிருந்த கேமிராக்களின் பளிச்சென்ற ஒளியில் கண்கள் கூச, “டேய்! யார்டா அது, லைட்ட இப்படி மூஞ்சிலையே போடறது.. ஸ்டுப்பிட், இடியட்… !” என ஆரம்பித்து அவனின் குழறலான பேச்சு அனைத்தும் பதிவு செய்யப்பட்டு கொண்டிருப்பதை அறியாமல் போனது அவனின் குற்றமில்லையே .

அவனிடம் வந்த காவல்துறை அதிகாரி.. “ஏண்டா பொறுக்கி! பொம்பள கூட பலான வேலை பார்த்துட்டு, எங்களையே கெட்டவார்த்த சொல்லியா திட்டற..!” என ஓங்கி அறைய.. ஏற்கனவே பாதி தெளிந்திருந்த போதை, அவரின் அடியில் முழுமையாய் தெளிய, அப்போது தான் நிலைமையின் தீவிரம் மெல்ல புரிந்தது ஆரனுக்கு…

“மை காட்.. !” என திரும்ப பார்க்க, காயத்ரியை படுக்க வைக்க, எடுக்கும் முன்பே சரிந்திருந்த முந்தனை, மேலும் நன்கு விலகியிருக்க, மேலாடை இல்லா தன்னையும் பார்க்க, அவர்கள் தங்களை எவ்வாறு கணித்திருப்பார்கள் என்பது நன்கு புரிந்து போனது ஆரனுக்கு.

“சார், ப்ளீஸ்.. நா சொல்லறத கேளுங்க. நா, அப்படி ஆள் இல்ல, அதே மாதிரி காயத்ரியும் அந்த மாதிரி பொண்ணு இல்ல” என ஆரன் சொன்ன எதையும் காதில் வாங்காது, பெண் காவலரை கொண்டு காயத்ரியையும் எழுப்பி, இருவரையும் சேர்த்து வைத்து, பல கோணங்களில் பத்திரிக்கையால்களுக்கு புகைபடம் எடுக்க வைத்து, அவர்களை போலீஸ் ஸ்டேஷன் அழைத்து சென்றனர்.

காயத்ரிக்கு சாப்பிடும்போது, ஆரன் சென்றது மட்டுமே நினைவில் இருக்க, வேறு எதுவும் புரியாத நிலையில், என்ன வென கேட்கும் திறனும் இல்லாது.. கண்ணீரை மட்டுமே துணையாக்க முடிந்தது.

இருவரின் ரத்தபரிசோதனையின் முடிவில், இருவரும் போதை மருந்து உட்கொண்டிருப்பது தெரிய, அன்றைய பத்திரிக்கைகளுக்கு, அவர்களின் நெருக்கமான புகைப்படமும், போதை மருந்து உட்கொண்ட சான்றும், அவர்களிழ் டீ ஆர் பியை ஏற்றிக்கொள்ள அருமையான வாய்ப்பாகி போனது.

ஆரன் எவ்வளவோ போராடியும், கெஞ்சியும் அவனை வெளியே யாரோடும் பேச அனுமதிக்கவே இல்லை அந்த காவல்நிலையத்தில். அடுத்த ஒரு வாரமும் பல்வேறு காரணங்களினால் நீதிமன்றம் நடக்காது என்பதால், நேரடியாக நிதிபதி முன் நிறுத்தப்பட்டு, பதினைந்து நாள் காவலில் உள்ள அடைக்கப்பட்டனர், விதியின் விளையாட்டில் பகடையாகி போன ஆரனும் காயத்ரியும்…

******

அன்றைய நிகழ்வை முழுதாய் சொல்லி முடித்த ஆரன், “இப்ப சொல்லு கௌதம், இதுல, எங்க மேல என்ன தப்பு..?! இது யாரோ செய்த சதிவேலையா?! அல்லது யாருக்கோ வச்ச குறி மாறி எங்களுக்கு வந்திடுச்சா?! ன்னு இன்னைக்கி வரைக்கும் தெரியல..” என சொல்லிக் கொண்டிருக்க,

ஆரனை விடுத்து, கௌதம் அமுதனை பார்க்க, ‘யூ ஆர் ஆல்வேஸ் கரெக்ட் அண்ணா. நீங்க சொன்ன மாதிரி தான் நடந்திருக்கு. அவங்க எந்த சூழலிலும், எனக்கு துரோகம் செஞ்சிருக்க மாட்டாங்க. சமய சந்தர்ப்பம் அவங்கள இணைச்சி வச்சிருக்குன்னு, நீங்க அப்ப சொன்னது அப்பட்டமான உண்மைன்னு இப்ப ஒத்துக்கறேன்!’ என்று நினைத்தது நன்றாகவே கௌதமிற்கு புரிந்தது.

ஆரனோ, கௌதமின் அருகே வந்து அவனின் கையை பற்றிக்கொண்டு, “அன்னைக்கி இத்தன நடந்த போதும், எனக்கு எங்க அப்பாவ தேட தோனலடா..! ஜெயில்ல இருந்த ஒவ்வொரு நிமிஷமும், கௌதம் ப்ளீஸ் வந்திடு! எனக்கு பயமா இருக்குன்னு, மனசால சொல்லிட்டே இருந்தேனே ஏன்டா வரல?!

உனக்கு எதாவது நடந்தா, அது என்ன தாண்டி தான் வருமின்னு, ஒவ்வொரு தடவையும் சொல்லுவியே, எப்ப, நீ என்கூட இருக்கணுமின்னு தவிச்சனோ அப்ப ஏன்டா வரல.. சொல்லுடா .. நீ எப்படிடா, என்னை அம்போன்னு விட்ட..?!” என கேட்டபடி, அவன் கரத்தில் முகம் புதைத்து அழுதிட, அவன் அன்று தன்னை எவ்வளவு தூரம் தேடியிருப்பான், என்பதை ஏற்கனவே உணர்ந்திருந்த கௌதமிற்கு, இப்போது வாய் மொழியாகவே ஆரன் கேட்ட போது,

இதுவரை போட்டு வைத்திருந்த பொய் முகமுடியை துறந்தவன், “ஐ’யம் சாரிடா.. சாரி..” என சொல்லி, அவனும் அழுகுரலோடு அணைத்திட, இருவரின் மனதிலும் இதுவரை இருந்த அழுத்தம் அனைத்தும் கண்ணீராய் கரைந்தோடியது.

பார்த்திருந்த அமுதனின் விழிகளும் சேர்ந்து கலங்கிட, இருவரும் ஒருவாறு தங்களை தேற்றிக்கொண்டு விலகும் வரை பார்த்திருந்தவன், இருவருக்கு தண்ணீரை தந்தான் அவர்கள் ஆசுவாசம் அடைய…

தண்ணிரை பருகிய அடுத்த நிமிடம் , ஆரன் கேட்ட கேள்வியில், “வாட்…!” என்று அதிர்ச்சியோடு எழுந்த கௌதமிற்கு, ஆரனின் செயலில், ஒரு நிமிடம் உலகம் தட்டாமாலை சுற்றி நின்றது.


********

error: Content is protected !!