உன்னோடு தான்… என் ஜீவன்…

பகுதி 32.

மருத்துவமனையிலிருந்து வந்ததும், காயத்ரியை கட்டாயப்படுத்தி உணவு உண்ண வைத்த ஆரன், அவளுக்கு மருத்துவர் கொடுத்த மருந்தையும் உட்கொள்ள வைத்து, படுக்கும் வரை உடனிருந்து விட்டு வெளியேற, ஜெனிபரின் பேச்சில் இருந்த தவறை கண்டிக்க வேண்டும் என்ற எண்ணம் இருந்தாலும், பல நாட்கள் ஜெயிலில் சரிவர தூங்காது.. வந்ததும் காயத்ரியால் வந்த பதட்டம், அலைச்சல், கேட்ட விசயம் தந்த தாக்கம் எல்லாம் சேர்ந்து அவன் உடலும் ஓய்வுக்கு கெஞ்ச, “மாம்.. தயவு செஞ்சு போய் தூங்குங்க.. மார்னிங், நா வந்து அப்புறம் முடிவு பண்ணலாம். ப்ளீஸ்” என்றபடி தனது அறைக்கு சென்றவனை, நித்ராதேவி சுகமாய் தழுவிக்கொண்டாள்.

நீண்ட நாட்களுக்கு பிறகு, தனது அறையில் இருக்கும் நிம்மதியும், இதுவரை அனுபவிக்காத சூழலில் இருந்ததால் வந்த சோர்வும் ஆரனை நல்ல உறக்கத்திற்கு தள்ள, காயத்ரி வெளியேறி சென்றது யாருக்கும் தெரியாது போனது.. அவன் வந்து கேட்கும் வரை…

காயத்ரி இல்லாததை அறிந்து, “டாடி, எப்படி நம்மையே நம்பி வந்த பொண்ணு, வீட்டுல இருந்து போனது கூட தெரியாம இருக்கீங்க.. இத நம்ம வீட்டுல எதிர்பார்க்கவே இல்ல. நேத்தே, மம்மி பேசினது ரொம்பவும் ராங்.. இதுல .. அவங்கள கூட விடுங்க, நீங்க எப்படி இவ்வளவு இர்ரெஸ்பாஷ்பிலா இருந்திருக்கீங்க..?!” என யாரையும் பேசவே விடாது காய்ந்தவன், “ஷிட்!” என கைகளை உதறிய படி வந்து, இருக்கையில் அமர்ந்தான், தன் இரு கரம் கொண்டு முகம் மூடி…

“ஆரா, காலைல நானும் எழுந்தது லேட் டா.. உன்ன விட காயத்ரிக்கு டையர்ட்னஷ் அதிகமா இருக்குமின்னு தான் டிஸ்டர்ப் பண்ண வேணாமின்னு இருந்துட்டேன்” என்ற சாமுவேலின் குற்ற உணர்வோடு கூடிய பதிலில் வெகுண்ட ஜெனி..

“இப்ப என்ன ஆச்சின்னு ரெண்டு பேரும் இப்படி சோக கீதம் வாசிச்சிட்டு, சீன போடுறீங்க. கல்யாணத்திற்கு முன்னாடியே புள்ளைய வாங்குனவளுக்கு போறதுக்கா இடமிருக்காது. அதெல்லாம், அவள நல்லா வச்சுக்க.. எவனாவது இருப்பான். அவ பவுசு தெரிஞ்சு தான், அவன் வெவரமா கழட்டி விட்டுட்டான் வேலை முடுஞ்சுதும்.. அதக்கூட்டிட்டு வந்து வீட்டுல விட்டுட்டு …. நல்ல வேளை அந்த சனியன் ஒழிஞ்சுதேன்னு இப்ப தான் நிம்மதியா இருக்கு!” என்றவர், வார்த்தையில் கொடுத்த அர்த்தத்தில்,

கொதித்தெழுந்த ஆரன், “மாம், திஸ் ஆஸ் த லிமிட்.. இதுக்கு மேல, ஒரு வார்த்த.. அவள பத்தியோ அல்லது கௌதம் பத்தியோ, நீங்க தப்பா பேசினா.. அடுத்த செக்கண்ட், இந்த ஆரன மறந்திடுங்க…!” என்று அழுத்தமாக சொன்ன தோனியே, ‘சொன்னது நடக்கும்!’ என்பதாய் இருக்க,

வேறு வழியில்லாமல் அமைதியானவரை விடுத்து, சாமுவேலிடம் திரும்பியவன், “டாட், காயத்ரிக்கு இங்க தெரிஞ்சது ஹாஸ்டல், நம்ம வீடு, அத விட்டா கௌதமோட வீடும், ஆபீஸும் தான். சோ, நா போய்.. அங்க பார்த்துட்டு இன்பார்ம் பண்றேன்!” என்றவன், வேகமாய் தனது வாகனத்தில் பறந்தான் கௌதம் இல்லம் நோக்கி…

ஆரன் அங்கு சென்ற போது, இதுவரை இருந்த காவலாளி அல்லாது, வேறு ஒருவர் இருக்க யோசனையோடு அவரிடம் வந்து விசாரிக்க, “ஆமாம் சார்.. யாரோ ஒரு பொண்ணு, ஊமை போல… வந்துச்சு காலைலயே, ஏதோ ஜாடையில கேட்டுச்சு, வீட்டுல யாருமில்லன்னு சொன்னதும் திரும்பி போயிடுச்சி!” என சொல்ல…

“நீங்க எப்ப இருந்து வேலைக்கி வர்றீங்க?! இங்க இதுக்கு முன்னாடி இருந்தவங்க?!” என கேட்க, “சார், நா வந்து பத்து நாள் தான் ஆச்சி.. இதுக்கு முன்னாடி யார் இருந்தாங்க தெரியாது!” என சொல்ல.. குழப்பத்தோடு, அங்கிருந்து கிளம்பியவன் கௌதமின் அலுவலகத்திற்கு விரைந்தான்.

அங்கோ, அவனை பார்த்தவர்களின் பார்வையில் இருந்த வித்தியாசம், ஒரு நொடி தயங்க வைத்தாலும், நேராக ரிஷஃப்ஷனில் கேட்க, “காயத்ரி வந்தாங்க காலைல.. கௌதம் சார், இன்னும் வரலைன்னு சொன்னதும் கிளம்பிட்டாங்க..” என சொல்ல,

“நா, சதா சார பார்க்கலாமா?!” என கேட்க, “சாரி சார். அவர பார்க்க முடியாது. சார் ரொம்ப பிசி.. எதுவானாலும் ரெண்டு நாள் கழிச்சு வாங்க!” என சொல்லிட, வேறு வழியில்லாமல், கௌதமை மனதால் திட்டியபடியே, காயத்ரி எங்கு போயிருப்பாள்?! என்ற எண்ணத்தோடு, ஹாஸ்டலிலும் விசாரித்துவிட்டு வந்தவனுக்கு, அவளின் இல்லம் சென்றிருந்தால்! என்ற நினைவு வர…

சாமுவேலுக்கு அழைத்து, “டாடி, நா காயத்ரி வீடு வரை போயிட்டு வர்றேன். இங்க எங்கையும் அவள காணோம்!” என சொல்ல,

“ஓகே ப்பா.. பார்த்து பத்திரம் ப்பா.. முழுகாம இருக்கற பொண்ணு வேற..!” என சொன்னதை கேட்ட ஜெனிபருக்கு ஆத்திரம் வந்தாலும், மகனின் வார்த்தைக்காக வேறு வழியில்லாமல் மனதில் வன்மைத்தை காயத்ரி மீது வளர்த்துக்கொண்டிருந்தார். அந்த வன்மத்தால் அழிய போவது யாரோ???

*******

ஜெனிபரின் உதாசினத்தில், அங்கு இருப்பது சரியில்லை என்பதால், விடியலிலேயே அங்கிருந்து வந்த காயத்ரிக்கு, கௌதம் பற்றிய எந்த தகவலும் கிடைக்காததால், தனது தாய்வீடு தான், இப்போதைக்கு தனக்கிருக்கும் ஓரே போக்கிடமாய் கருதி, ஹாஸ்டல் சென்று, தனது உடைமைகளை எடுத்துக் கொண்டவள், ஸ்ரீரங்கம் நோக்கி சென்றாள்.

தனது தாய் வீட்டிற்கே என்றாலும், நடந்த நிகழ்ச்சியை அவர்கள் அறியாமல் இல்லையே..!! காவல்நிலையத்திலிருந்து, அவர்களுக்கும் தான் தகவல் சென்றதே! தன் மூலமாக அவர்களை அறிந்து..

அப்போதே, தன்னை யாரென்று தெரியாது என்றவர்கள், இப்போது தான் இருக்கும் இந்த  நிலையில், ஏற்பார்களா?! என்பது மிகப்பெரும் கேள்வி குறி தான் என்றாலும், நேரில் பார்க்கும் போது தன்னை நம்பிட மாட்டார்களா..?! அன்று நடந்தவைகளுக்கு விளக்கம் கேட்டிட மாட்டார்களா?! என்ற அற்ப நம்பிக்கையை மனதில் சுமந்தே, அந்த அக்ரஸாரத்தை அடைந்தாள் காயத்ரி… தனக்கென இங்கே எதுவும் மிச்சமிருக்க போவது இல்லை என்பதை அறியாமலேயே….!

காயத்ரி அங்கு வந்த போது, பார்த்த  அனைவருமே துஷ்டனை கண்டது போல விழகி செல்ல, குனிந்த தலையை நிமிர்த்தாமல், மனதில் எழுந்த பெரும் பிரளயத்தை வெளிப்படுத்தாமல், நகர மறுத்த காலையும் மெல்ல நகர்த்தி ஒருவாறு அவர்கள் வீட்டிற்கு வர, அவளின் பாதம் வாசலில் படும் முன்பே..

“அங்கையே நில்லு… இதுக்கு மேல ஒரு அடி எடுத்த வச்சாலும், நா மனுஷனா இருக்கமாட்டேன்!” என்ற ராமின் கர்ஜனையான குரலில், உடல் மெல்லிய நடுக்கம் கொடுக்க, கண்களில் வெள்ளமென நீர் வடிய துவங்கியது.

ராமின் குரலை தொடர்ந்து, ஜானகியோ..
“நோக்கு, என்னடீ கொற வச்சோம். நன்னா படிக்கட்டும், நன்னா வாழட்டுமின்னு சென்னைக்கி அனுப்பிவச்சா, எங்க குடும்ப மானத்தையே இப்படி குழி தோண்டி பொதச்சிட்டையே.. பாவி.. உருப்படுவியா நீ..!” என சொல்ல, மலை போல் நம்பி வந்த தாயே, இப்படி தன் பக்கத்தை கேட்காமல் பேசுவதில், மேலும் நொறுங்கி போனது அவள் இதயம்…

இவர்கள் அனைவரையும் விடுத்து, தன் முகம் கூட பார்க்க மறுத்து, எங்கோ பார்த்து நின்ற தந்தையை நெருங்கியவள், அவரின் பாதத்தில் விழ போக, சட்டென அங்கிருந்து நகர்ந்தவர், “ராம், அவள இங்கிருந்து போக சொல்லூ.. நேக்கு அவள கண்டாலே பத்திண்டு வர்றது. இவ தான் இந்த வீட்டுக்கு மகாலட்சுமின்னு நினச்சேன். இப்ப தானே தெரியர்து ‘இவா தான் எங்க ஆத்துக்கே வந்த தரித்திரம்… எங்க குல பெருமையை அழிக்க வந்த பீடை” ன்னு..

அவ போனதும் முதல்ல ஆத்த சுத்தம் பண்ணிட்டு, காரியம் செய்ய ஏற்பாடு பண்ணு.. எம் பொண்ணு போய் சேர்ந்து பத்து நாளாச்சே! கடமைய செய்யாத போனா, பகவான் மன்னிக்க மாட்டார்..” என்றபடி தனது துண்டை உதறி தோளில் போட்டவர் வீட்டினுள் சென்று மறைய..

தன் முன்னே, தனக்கு இறுதி காரியத்தை  ஏற்பாடு செய்ய சொல்லி, சென்ற தந்தையை, கண்ணில் இதுவரை வழிந்த நீரும், அதிர்ச்சியில் நின்றுவிட, வெறுமையாய் பார்த்தவள், இனி வாழ்க்கையில் என்ன இருக்கிறது.. என்ற எண்ணம், காலைமுதல் கொடுத்த சிறு தைரியத்தையும், மொத்தமாய் துடைத்து எறிய, வேரருந்த மரமாய் சரிந்து விழுந்தாள் அந்த தெருவிலேயே…

அவள் விழுவதை பார்த்த போதும், அவளை நெருங்கவோ, உதவி செய்யவோ யாருமின்றி, மாலை நேர வெயிலில், பகலெல்லாம் காய்ந்திருந்த மண்ணில் வீழ்ந்து கிடந்தவளுக்கு, தண்ணிர் தர கூட யாரும் தயாராய் இல்லாது போனது மிகப்பெரும் கொடுமையாகி போனது.

அவளின் நிலையை அறியாது, அன்று போலவே வந்திறங்கிய ஆரன், அவளின் நிலை கண்ட போது உயிர் போகும் வலியை உணர்ந்தான்.

“காயூ…!” என்ற அந்த இடமே அதிர கத்தியபடி அவளிடம் ஓடியவன், தன் மடியில் அவளின் தலையை தாங்கிபிடித்தபடி, தான் வந்த வாகனத்திலிருந்து ட்ரைவர் மூலமாக தண்ணிரை வாங்கி தெளிக்க, சிறிது அசைந்தாளே ஒழிய, முற்றும் அவளுக்கு மயக்கம் தெளியவில்லை.

அவளை கையில் ஏந்தியவன், தான் வந்த வாகனத்திலேயே படுக்க வைத்துவிட்டு காயத்ரியின் வாசலுக்கு வந்தவன், “யோவ்.. பெரியமனுஷா வாய்யா…! வாய்யா வெளிய..!” என கத்த

அன்று போல, இன்றும் நடப்பதை சுவாரஸ்யமாய் பார்க்கவென கூடிய கூட்டத்தை அருவருப்போடு பார்த்தவன், “ச்சீ… நீங்கெல்லாம் மனுஷங்களா.. ஒரு வாயில்லா பொண்ணு, இப்படி வீதியில மயங்கி கிடக்கறான்னு, ஒரு சொட்டு தண்ணி கொடுக்க வக்கில்ல.. நீங்கெல்லாம் என்ன புண்ணியத்த கட்டிகிட்டு மேல போக போறீங்க.. யாரோ, எவரோன்னு இருந்தாலே.. உள்ளம் பதறும் அந்த பொண்ண பார்த்தா…! ஆனா, நீங்க பார்க்க வளர்ந்த பொண்ணு இப்படி இருக்கேன்னு, ஒருத்தருக்கு கூடவா பதட்டம் வரல..!

அதானே, பெத்து வளர்த்த ஜென்மங்களுக்கே.. இதுவரை தோணல..! உங்களுக்கா தோண போகுது!!” என நக்கலும், ஆதங்கமும் கலந்த குரலில் கேட்டவனை,

ராம், “நிறுத்து, நீ தானே, அவ கூட இருந்தவன். அதான் பிரியம் வந்துடுத்தோ…?! முத தரம், நீ அவ பேர சொல்லிண்டு வர்றச்சையே தெரியும்… இப்படி ஏதோ வில்லங்கம் இருக்குன்னு..! நினச்சது சரியா போச்சு..!

அவ மேல அவ்வளவு அக்கர இருக்கரவன்னா, கூட்டிட்டு போக வேண்டியது தானே..?! அவளுக்கும், எங்களுக்கும் இனி இந்த ஜென்மத்துல ஆகாது.. எங்க ஆத்து பொண்ணு, எப்ப கல்யாணம் கூட ஆகாத இன்னொருத்தனோட படுத்தாளோ, அப்பவே சகலமும் விட்டு போச்சு.. அவள கூட்டிட்டு போய் கட்டுவியோ, இல்ல வச்சப்பியோ அது உன் விருப்பம்… இடத்த காலி பண்ணு.. எங்களுக்கு காரியத்திற்கு நாழியாறது” என அலட்சியமாய் சொல்லிட,

அவர்களை கொல்லும் வெறி வந்தாலும், அவர்கள் சொன்னதை இல்லை என நிருபிக்க முடியாதபடி  காயத்ரியின் சூழ்நிலை தடுக்க, இது அனைத்திற்கும் மூலம் கௌதம் தானே… இப்போது அவன் உடன் இருந்திருந்தால், அவர்கள் ஒரு வார்த்தை பேசிட முடியுமா?! என்ற ஆதங்கம்,  ஆரனின் கோபத்தை அங்கே காட்டிட முடியாது செய்ய, எந்த பதிலும் சொல்லாது அனைவரையும் கேவலமாய் ஒரு பார்வை பார்த்துவிட்டு…

‘யார இப்ப இவ்வளவு கோவலமா பேசினீங்களோ, அவளோட மதிப்பையும், மரியாதையையும் நீங்க தெரிஞ்சுக்க ஒரு நேரம் வரும்… அப்ப இந்த மூஞ்சிங்கல பார்க்கவே, நா வருவேன்டா!’ என மனதில் நினைத்தபடி, வாகனத்தில் ஏறியவன், அருகே இருக்கும் மருத்துவமனைக்கு அழைத்து சென்றான், காயத்ரியின் நிலையை அறிந்து கொள்ள..

******

இன்றோடு காயத்ரியை அங்கிருந்து அழைத்து வந்து, ஏழு மாதங்கள் சென்றிருக்க, தனது மேடிட்ட வயிற்றில் கை வைத்தபடி எங்கோ வெறித்திருந்தவளை பார்க்க பார்க்க மனம் உலைகலமாய் கொதித்து போனது ஆரனுக்கு…

இந்த இடைப்பட்ட நேரத்தில், கல்லூரி நிர்வாகம் அவளின் நடத்தை தொடர்பாய் எடுத்த நடவடிக்கையால், கல்வியை தொடரமுடியாது போக, அவளின் தாய்மை தந்த உடல் உபாதைகளால், ஆரனும் அவளை மேலும் படிக்க சொல்வதில் ஆர்வம் காட்டாது போனான்.

அதே சமயம், கௌதம் பற்றி தெரிந்து கொள்ள செய்த அனைத்து முயற்சியும் வீணாகி போனது தான் மிச்சம். ஜெர்மன் சென்றவன் திரும்ப வரவே இல்லை. முழு நிர்வாகமும் அங்கிருந்த படியே நடத்தப்படுவதாய் சதாசிவத்தை பல தடவை இடைவிடாத முயற்சிக்கு பிறகு சந்திக்கும் போது சொல்ல,

“சார், எனக்கு கௌதம் கிட்ட கொஞ்சம் முக்கியமா பேசனும். அவனோட நெம்பர் வொர்க் ஆக மாட்டிங்குது. ப்ளீஸ், அவனோட காண்ட்டாக்ட் நெம்பராச்சும் கொடுங்க..!” என எவ்வளவோ கேட்டும் அவர் மசியவில்லை.

“ஆரன், இப்பவும் கௌதம் உங்க ப்ரண்டா இருந்தான் ங்கற, காரணத்துக்காக மட்டும் தான், இப்ப பேசிட்டு இருக்கேன். இதே… வேற யாராச்சும் இருந்தா.. உன் மேல இருக்கற கேஸ்ஸுக்கு, உள்ளையே அலவ் பண்ணியிருக்க மாட்டேன். தயவு செஞ்சு, சும்மா வந்து எங்க வேலைய கெடுக்காதீங்க!” என கராராய் சொன்ன பின்பு, அவரிடம் கேட்பதில் பிரயோஜனம் இல்லை என்பதால் அமைதியாய் திரும்பிவந்துவிட்டான்.

காயத்ரியை தனியே விட மனமில்லாமல், தனது வீட்டிற்கே அழைத்து வந்தவன் ஜெனியிடம், “மம்மி, காயத்ரி இங்க தான் இருப்பா. அவள பத்தியோ, குழந்தைய பத்தியோ இனி நீங்க எதாவது பேசினதா தெரிஞ்சா, அடுத்த செக்கண்ட், அவள கூட்டிட்டு.. நா வேற எங்கையாவது போயிடுவேன்! மைண்ட்இட்..!!” என மிரட்டலாய் சொல்லிய பின், தன் ஒற்றை மகனை பிரிய முடியாத காரணத்தால் பேச்சை குறைத்தாலும், தன் மகன் வாழ்க்கையை நல்லபடி அமைத்து கொள்ள காயத்ரி தடையாகிட கூடாதே என்பதிலும் கவனமாக இருந்தார்.

ஆரம்பத்தில் மசக்கையால் படுத்தியது போதாது என்று, நடுஇரவில் பதறி துடித்து எழுபவள், அழும் அழுகையை போக்கும் வழி தெரியாமல், அவளருகே ஆறுதலாய் அமர்ந்து, அவள் மீண்டும் உறங்கும் வரை தவித்திருப்பது ஆரனின் முக்கிய பணியாகி போனது.

அடுத்த நாள், எவ்வளவு கேட்டும் பதிலில்லாது.. எங்கோ வெறிப்பவளை என்ன செய்து மாற்றுவது?! என்பது புரியாது, சாமுவேலிடம் தனது கவலையை இறக்கி வைக்க, அவருக்கும் இருவர் படும் வேதனையின், பலன் இருதயத்தை பாதிப்படைய செய்தது. மருத்துவ பரிசோதனையில் அவருக்கு கட்டாய ஓய்வு தேவை என சொல்லப்பட..

ஆரனிக்கு தொழிலா, காயத்ரியா என்பதை முடிவு செய்ய வேண்டிய நிலை.. சாமுவேலின் உடல்நிலையை கொண்டும், நிச்சயம் காயத்ரியின் பிரசவத்திற்கு ஜெனி, எந்த விதத்திலும் உதவ போவதில்லை என்பதாலும் சாமுவேலிடம்.. “டாடி, நம்ம பெங்களூருக்கு போயிடலாமா..?!” என கேட்க,

“ஆரா, அங்க போனா நம்ம தொழில்…?!” என மகனின் இத்தகைய முடிவுக் காரணம் அறிந்திட வேண்டி கேட்க,

“டாடி, தொழில் செய்யறது இங்க தான் செய்யணுமின்னு இல்ல.. அதோட, இப்ப இன்னும் சில மாசத்திற்கு காயத்ரிய தனியா விடவும் முடியாது. செக்கப்புக்கு போனப்ப, டாக்டர் அவ ரொம்ப வீக்கா இருக்கான்னு சொல்றாங்க.

அதுமட்டுமில்ல டாடி, எங்க விசயம் இங்க எல்லாருக்கும் தெரிஞ்சிருக்கறதால போற இடத்தில எல்லாம், அதையே கேட்டு கேட்டு டார்ச்சர் பண்ணறாங்க..! நானாவது கொஞ்சம் தேத்திக்கிட்டேன் மனச.. ஆனா காயூ… பாவம்ப்பா…. என்னை விட அவள பேசற வார்த்தைகள், அவள கொஞ்சம் கொஞ்சமா அழிச்சிட்டு இருக்கு..


எதையும் மனசு விட்டு பேச முடியாத நிலையில, அவ உள்ளையே போட்டு வச்சிட்டு, உடம்ப ரொம்ப வறுத்திக்கிறா.. டெலிவரில சிக்கல் வந்தா, ரொம்பவும் சிரமம் ன்னு டாக்டர் சொல்லிட்டாங்க. அதான்..!” என்றவன் மிகவும் தயக்கத்தோடு,

“பிரசவத்துல யாராவது ஒரு பொண்ணோட உதவி தேவை படும்ப்பா… நிச்சயம் அம்மா, ஹெல்ப் பண்ண மாட்டாங்க. அதான்.. உங்க சொந்த ஊருக்கு போனா, அங்க நம்ம ரிலேட்டிவ்ஸ் யாராச்சும் உதவி செய்வாங்க இல்ல…!”என சொல்ல..

“ம்ஹும்…!!” என்ற பெருமூச்சில், அவனின் வார்த்தையை ஆமோதித்தவர்,  “ஆரா, ஒரு பொண்ணா, அவ அனுபவிக்கற வேதனைய புருஞ்சுக்க முடியுது.. அத உங்க அம்மா உணர்ந்திருந்தா, இப்ப பிரச்சனையே இல்ல. ஆனா, அவள நம்பி காயத்ரிய விடமுடியாத நிலைமையில இல்ல வச்சிருக்கா.. சரி, இன்னும்  கொஞ்ச நாள் பொறுத்துக்கோ, நா, நம்ம அங்க போனா தங்கறதுக்கு ஏற்பாட்ட செஞ்சிட்டு, தொழில் மொத்தத்தையும் அங்க மாத்திட ஏற்பாடு பண்ணறேன்..” என்றார் மகனை புரிந்த அன்பு தந்தையாய்..

“டாடி, அப்புறம் காயுக்கு, இது செவன்த் மன்த்.. ஏதோ சடங்கெல்லாம் செய்வாங்களே.. ! அதெல்லாம், எப்படி செய்ய..?!” என இதுவரை, இது போன்ற விசயத்தை பற்றி அறிந்திறாத ஆரன் சாமுவேலிடம் கேட்க,

சிறு புன்னகையோடு, “ஆரா, நீ எப்படா இவ்வளவு மெச்சூர்டா ஆன.. என்னைய  கட்டிபிடிச்சிட்டு, டாடி ன்னு அழுத பையன், இப்ப அடுத்து என்ன, அடுத்து என்ன ன்னவ சிந்திக்கற அளவு வளர்ந்திட..!” என இருக்கும் சங்கடமான மனநிலையை மாற்ற கேட்க,

ஒரு விரக்தி புன்னகையை சிந்தியபடியே சாமுவேலை பார்த்தவன், “இதுவரை கை பிடிச்சு கூட்டி போக, கௌதம் இருந்தான்ப்பா… குழந்தையிலேயே, எனக்கு சில நேரம் தாயா இருந்து பார்த்துக்கிட்டவன் அவன். இப்ப… அவன் எங்க ன்னே தெரியலையே… ?! அவன் இல்லாத நேரத்துல, அவனோட குழந்தைக்காக, யோசிக்க வேண்டிய கடமை எனக்கு இருக்குப்பா..!” என சொல்லும் போதே, அவன் குரலில் வந்த கரகரப்பு, அவன் கௌதமை இப்போதும் தேடுவது புரிய,

“ஆரா! நா ஒன்னு கேட்டா, தப்பா எடுத்துக்காதே… இப்போ காயத்ரியோட நிலைமையையும், கௌதம் இங்க இல்லாம போனதையும் வச்சி கேட்கறேன், ஏன், உங்க அம்மா சொன்னது மாதிரி, அவன் அவள யூஸ் பண்ணிட்டு போயிருக்க ..” என அவர் முடிக்கும் முன்பே….

“டாடி, ஸ்டாப் இட் யூவர் நான்சன்ஸ் திங்கிங்ஸ்…. என் கௌதம பத்தி எனக்கு தெரியும். அவனுக்கு இங்க வர முடியாத மாதிரி, எதோ ஒரு விசயம் தடுக்குது. அத தாண்டி அவன் என்னையும், காயத்ரியையும் தேடி, ஒருநாள் நிச்சயம் வருவான். அப்படி வராம போனா கூட, நா அவன எந்த நேரத்திலையும் தப்பா நினைக்கவே மாட்டேன்… இனி விளையாட்டா கூட, இப்படி பேசாதிங்க.. ப்ளீஸ்!” என கோபத்திலும் நிதானமிலக்காமல் பேசும், தன் மகன் கௌதமின் மேல் வைத்திருக்கும் நம்பிக்கையில் பிரமித்து போய் நின்றார் சாமுவேல்.

சடங்கு விசயமாய் சாமுவேல் காயத்ரியிடம் கேட்க, ‘முடியவே முடியாது, தன் கௌதம் இல்லாது.. எந்த விதமான சடங்கையும் செய்து கொள்ள மாட்டேன்!’ என பிடிவாதமாய் மறுத்துவிட, ஆரனின் பிடிவாதத்தின் பேரில், தங்கள் தொழிற்சாலையில் வேலை பார்க்கும் மூன்று வயதில் முதிர்ந்த பெண்களை அழைத்து வந்த சாமுவேல், வீட்டிலேயே அவர்களை மட்டும் கொண்டு சடங்கினை நடத்தினார்.

மெல்ல நகர்ந்த நாட்கள், ரெக்கை கட்டி பறந்தது போல் விரைய, இன்னும் சில வாரத்தில் குழந்தை பிறந்துவிடும் என டாக்டர் உறுதிபடுத்த, காயத்ரியை விட்டு அகலாமல், அள்ளும் பகலும், அவளுக்கு அன்னையாய், மாறி துணையாய்.. காவலனாகி போயிருந்தான் ஆரன்.

பெங்களூரில், ஆரன் சொன்னது போல, தங்குவதற்கு ஏற்பாடுகளை செய்து, தங்கள் பொருட்களை அங்கே அனுப்பிய பிறகு ஆரன், காயத்ரி, சாமுவேல், ஜெனிபரோடு தொங்கியது கார் பயணம். காயத்ரியோடு, ஜெனிபர் அமர மாட்டேன் என தகறாரு செய்ய.. வேறு வழியின்றி முன் இருக்கையில் ஆரனோடு அமர்ந்தாள் காயத்ரி..

நிறைமாத வயிறோடு, அங்கு அமர்வது மிகவும் சிரமமாக இருந்தாலும், ஜெனிபரின் முடிவை ஏற்காது போனால் வீணாக ஆரன், ஜெனியின் உறவில் எதாவது பிளவு வந்திட கூடாது என்பதால் அமைதியாய் அமர்ந்திருந்தாள் காயத்ரி.
பயணம் தொடங்கி சிறிது நேரத்திலேயே தன்னுள் ஏற்படும் மாற்றம் நன்கு புரிய, வாய்விட்டு சொல்லாமல் முடிந்தவரை அடக்கியவள், ஒரு நிலைக்கு மேல் முடியாது போக, ஆரனை அவசரமாய் நிறுத்த சொல்லும் முன்பே அவள் மேலேயே வாமிட் செய்திட,

அவள் தான் செய்த செயலில் கொண்ட பதட்டம் அவள் முகத்தில் நன்கு தெரிய,
“ஏய்… காயூ… ரிலாக்ஸ்.. ரிலாக்ஸ்.. நத்திங்..!” என்றபடியே வண்டியே அந்த ஹய்வேலேயே, ஓரமாக நிறுத்தியவன், அவசரமாக  அவள் புறம் திறந்து, அவளை கீழிறக்கி சுத்தப்படுத்த தண்ணீரை தர, பார்த்திருந்த ஜெனிபருக்கோ, இதுவரை இருந்த கட்டுப்பாடுகள் தகர்ந்து, தனது பேச்சால் அங்கே வாகனத்தினுள் பெரிய கலவரத்தை கூட்ட..

சாமுவேல், “ஜெனிபர் வாய மூடு.. இல்ல இதுவரை உன்ன, என்ன காரணம் கொண்டும் கை நீட்டி அடுச்சதில்ல, அத செய்ய வச்சிடாத.. அந்த பொண்ணையும், கௌதம பத்தியும் ஏன்டீ இப்படி பேசற.. ?!” அவரின் வார்த்தையை பொறுத்துக் கொள்ள முடியாது கேட்டுவிட,

“ஆமா.. அவனால தான், என் பையன் வாழ்க்கையே வீணா போச்சு! அவனுக்கே வக்காலத்து வாங்கிட்டு வாங்க!” என நொடித்த படியே சொல்லிட,

“அவனால தான், நம்ம இந்த அளவில இருக்கோம் தெரியுமா உனக்கு..?! கௌதமோட தாத்தா உதவாம போயிருந்தா, நம்ம எப்பவே அடி பாதாளத்துக்கு போயிருப்போம். பிஸ்னஸ்ல வந்த லாஸ்ஸ சரி செஞ்சு, பல காண்ட்ராக்ட்ட நமக்காக வாங்கி கொடுத்து, இப்படி வசதியா வாழ வழி செஞ்சது..  கௌதம் சொன்ன ஒரு வார்த்தைக்காக…

சின்ன பசங்க, அவங்க ரெண்டு பேரும் மனசளவுல எவ்வளவு தூரம் இணைஞ்சு இருக்காங்க.. ஆனா நீ, எப்ப பாரு அந்த பையன எதிரி மாதிரி பார்த்த, இப்ப அவனுக்கு பதிலா, இந்த அப்பாவி பொண்ணு…

ஏன்டீ! தெரியாம தான் கேட்கறேன், ஒரு பொண்ணா கொஞ்சம் கூடவா..  அந்த பொண்ணு மேல பரிதாபம் வரல.. அவ இப்ப வெளிய நிக்கற நிலைமைக்கு, ஆரன விட, தாயா நீ தான் பதறி போய் அவ கூட இருந்திருக்கணும். உன்கிட்ட போய் பேசறேன் பாரு.. என்ன சொல்லனும்… நீயெல்லாம் திருந்தாத ஜென்மம்..!” என்றபடியே, அவர் புறமிருந்த கதவை திறந்து இறங்கிய அடுத்த நொடி.. “படார்…!!!!” என்ற சத்தத்தை தொடர்ந்து, “அம்மா..!!!”, “காயூ…!” என்ற பல அலரல்கள், அவ்விடத்தை நிறைத்தது.

Written by

Ardent reader, kirukkufying something, want to travel with characters around me.

error: Content is protected !!