Jeevan 32(2)

Jeevan 32(2)

ஜெனிபருடன் பேசியபடி இறங்கிய சாமுவேல், சுதாரிக்கும் முன்பு, அவர்கள் இருந்த காரின் பின்னால், கட்டுப்பாடு இல்லாது வந்த கார் ஒன்று வேகமாக மோத, அதன் சத்தத்தில் திரும்பிய காயத்ரியும், ஆரனும் நடந்ததை கிரகிக்கவே சில நொடிகள் ஆனது. அதற்குள் ஜெனியின், “அம்மா…!” அலரலும், சாமுவேல் தூக்கிவீசப்பட்டதால் வந்த சத்தமும், என அந்த இடமே அதிர்ந்து போனது சில மணித்துளியில்….

ஆரன் சுதாரித்து, அங்கே விரைய நினைக்கும்  நேரத்தில், தன் மீது மயங்கி சரிந்த காயத்ரியை தாங்கியவன், “காயூ!!!” என்றபடி அடுத்த நொடி அதிர்ந்து நின்றான்.. அவளின் பாதத்தை நனைத்த நீரினை கண்டு..

பெற்றவர்களை பார்ப்பதா?! அல்லது பனிக்குடம் உடைந்த நிலையில் காயத்ரியை தாங்குவதா?! என்ற நிலையில் ஆரன் தவிக்க, அந்த இடத்தினை கடந்து போக இருந்த வாகனங்கள் சில, அவன் உதவிக்கு வர, அவர்களை கொண்டு ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு, துரிதமாய் செயல்பட்ட போதும், ஜெனியே காரிலிருந்து வெளியேற்றும் போதே உயிர் பிரிந்திருந்தது.

என்ன தான் தாய் மீது, சிறு மனஸ்தாபம் இருந்தாலும், அவரின் மரணத்தை கண் முன் கண்ட போது, ஆரனால் அதனை தாங்கிட இயலாது தான் போனது. தனக்கு எப்போதும் ஆறுதலாய் இருக்கும், எவரும் இப்போது இல்லாது தனித்து இருப்பதே மாபெரும் கொடுமை…. இதில் இப்படியான ஒரு சூழல்…

காயத்ரி, சாமுவேல் இருவரின் நிலையும் ஆரனை பித்தாக்கி கொண்டிருந்தது. பதட்டத்தில் சாதாரண விசயமே பூதகரமாய் தெரியும் போது, நடந்த நிகழ்ச்சி கொடுத்த தாக்கம், ஆரனின் அத்தனை சக்தியையும் பிடிங்கி வேரறுந்த மரமாய் அலைக்கழிக்க, சாமுவேலினை அனுமதித்திருக்கும் ஐசீயூவிற்கும், காயத்ரி இருக்கும் லேபர்வார்டுக்கும் மாறி மாறி சென்றவனை பார்த்தவர்கள் அவனை நிச்சயம் பைத்தியகாரனோ! என்ற எண்ணம் தான் தோன்றும்….

கெட்டதிலும் நன்மையாய் இருந்த ஒரே விசயம், எந்த அதிர்வு காயத்ரியின் குரலை பறித்தோ, அதே போன்றதொரு அதிர்வு, அவளின் குரலை மீட்டிருந்தது..

அவளின் பிரசவ வலியின் கதறலை வெளியிருந்து கேட்ட ஆரனுக்கோ, எந்த நேரமும் மயக்கத்திற்கு தான் சென்றிடுவோமோ?! என்ற எண்ணம் தான்… வேர்வை மழையால் நனைத்து, பதட்டத்திலும், பயத்திலும் முகம் வெளிறி நின்றவனை ஆறுதல் படுத்தவே தேவதையாய் வந்தாள் அவளின் செல்லப்பட்டு..

பஞ்சு பொதி போல அழகாய், சிப்பி இதழில் சிறு புன்னகையோடு, ஆரனின் முகத்தை, தன் இரு குட்டி விழியால் பார்த்தபடி, கரம் நீட்டியவளை வாரி அணைத்த நேரம், இதுவரை இருந்த தனிமை உணர்வும், பயமும் இருந்த இடம் தெரியாது போக, உலகின் ஒட்டு மொத்த மகிழ்ச்சியும், அவனிடம் வந்தது போன்று பிரம்மையை தந்தவளின் மேனியின் மென்மையும், பச்சளம் குழந்தையின் மேல் வீசும் அற்புத மணமும், அவனின் ஒட்டு மொத்த பலத்தையும் மீட்டு கொடுத்தது.

அந்த நேரம், அவனை அவசரமாய் சாமுவேல் பார்க்க நினைப்பதாய் அழைக்க, அவரிடம் சென்றவனின் முகம் பார்த்தவர், “குழந்தை பிறந்திடுச்சா?!” என கஷ்டப்பட்டு கேட்டவருக்கு, பதில் கூட சொல்ல முடியாது படி, உள்ளே நுழையும் போதே மருத்துவர் சொன்ன செய்தியில், நொறுங்கி போய் நின்றவனுக்கு, வார்த்தை வெளிவராமல் சண்டித்தனம் செய்தது. கண்கள் கலங்க, “ஆம்..” என தலையசைத்தவனை, பார்த்தவர், “என்ன குழந்தை?!” என கேட்க…

“ஏஞ்சல்ப்பா..! அவ்வளவு பட்டு மாதிரி ஸ்கின்..! கையில வச்சிருக்கும் போது அவ்வளவு ஷாப்ட் ப்பா…!” என சிலாகித்து கூறியவன், “இந்த நிமிஷத்த, இந்த நொடி சந்தோஷத்த.. அனுபவிக்க கௌதம் இல்லையேன்னு தான்ப்பா, வேதனையா இருக்கு…! பட்டு பாவம் ப்பா.. பிறக்கும் போது, அப்பாவ பார்க்க முடியாம போச்சு பாருங்க.. அவன மாதிரியே…!!!” என சொல்லியவனின், கரத்தை பற்றிய சாமுவேல்…

“ஆரா, எனக்கு கடைசியா நீ ஒரு வாக்கு கொடுப்பியா..?!” என கேட்க, “அப்பா என்னப்பா, கடைசியா ன்னு சொல்றீங்க?! அம்மா தான் இல்ல, நீங்களும்.. ஏம்ப்பா இப்படி சொல்றீங்க?!” என கண்ணீர் வழிய, குரலடைக்க கேட்வனுக்கு, பதில் சொல்ல, தனக்கு இன்னும் அதிக நேரமில்லை என்பதை உணர்த்தவர்,

“ஆரா, நீ வாக்கு கொடுக்கறையா இல்லையா?!” என்க, “நிச்சயமா, நீங்க எத சொன்னாலும் செய்வேன்ப்பா.. அதுக்காக கடைசி ன்னு எல்லாம் பேசாதிங்கப்பா..!!” என சிறு குழந்தையின் அழுகுரலில் கேட்டவனின், கரத்தை கெட்டியாக பற்றிக்கொண்டவர்,  “கௌதம் எப்படி அப்பா, அம்மா உறவு இல்லாம தனிமைய அனுபவிச்சானோ.. அந்த வலிய, அதே வேதனைய அவனோட குழந்தை, ஒரு நாள் கூட அனுபவிக்க கூடாது. கௌதம் வந்தாலும் சரி, வராட்டியும் சரி.. அந்த குழந்தைக்கு அப்பாவா என்ன செய்யனுமோ.. அத நீயும், அம்மாவா காயத்ரியும் கடைசி வரை இருக்கணும். உங்க ரெண்டு பேரோட வாழ்க்கையும் இது பாதிக்கும் தான்… ஆனா அந்த குழந்தை இன்னொரு கௌதமா ஆகிட கூடாது… அதான் என்னோட… கடைசி…” என்றவரின், உயிர் மூச்சு ஆரனின் கைபிடித்த நிலையிலேயே பிரிய…

தாயை விட, எல்லா நேரமும் தன்னிடம் பிரியமும், நட்புமாய் பழகிடும் தந்தையின் இழப்பில், அந்த மருத்துவமனையே அதிரும் வண்ணம், கதறிய ஆரனை தோற்றவும் ஆறுதல் படுத்தவும் யாருமில்லை…

*******

அன்றைய நினைவில், அதே போல் தன் முன் நின்று கதறி அழும் ஆரனுக்கு, அப்போது கொடுக்க இயலாத ஆதரவை, ஆறுதலை தந்தவாறு, இப்போது தன்னோடு அணைத்தபடி நின்றான் கௌதம்.

அவனின் முதுகில் மெல்ல தட்டி கொடுத்தவனுக்கும், விழியில் வெள்ளமென நீர் வழிந்தது.. தன் நண்பனின் அன்றைய நிலையை எண்ணி… அந்த சூழலிலும், தன்னை எந்த இடத்திலும் விட்டுக்கொடுக்காது, நம்பிக்கையோடு இருந்தவனை நினைக்கும் போதே, மனம் பெருமையில் விம்மித்தனிந்தது.

சிறிது நேரத்தில், தன்னை மீட்டுக்கொண்ட ஆரன், “பட்டு.. எந்த விதத்திலையும், எதற்கும் ஏங்கிட கூடாதேன்னு… என்னையே அவளோட டாடியாக்கி, காயத்ரிய அம்மான்னு கூப்பிட வச்சேன்!”

“காயத்ரிய மீட்க தான் பெரும் போராட்டம் ஆகிடுச்சு அப்ப.. மனசுல இருந்த விரக்தி, அவள மீண்டு வரவே விடல, மயக்கத்துக்கு போனவ, மறுபடியும் கண்விழிக்கறதுக்குள்ள, படாதபாடு ஆகிடுச்சு. இதுல அப்பா, அம்மாவோட இறுதி சடங்கு, பட்டுவ பார்த்துக்கறதுன்னு ரொம்பவும் தடுமாறி போயிட்டேன்!

அப்ப தான், அந்த ஹாஸ்பிடலுக்கு தன்னோட பேத்திக்கு, காயச்சல்ல ஜன்னி கண்டு காப்பாத்துங்கன்னு வந்தாங்க சச்சும்மா… அவங்களுக்கு இருக்கற ஒரே உறவு அந்த தேவி தான். அவங்ககிட்ட பணமில்லாததால, சேத்துக்க மாட்டேன்னு சொல்ல, நா அவங்களுக்கு பண உதவி செஞ்சேன். அங்க இருந்த, அந்த சில நாள்ல அவங்க உதவி தான், என்னைய கொஞ்சம் சரியா, எல்லாத்தையும் செய்ய வச்சுது.

அப்புறமும் காயத்ரிகிட்ட நிறைய மாற்றம்.. கவுன்சிலிங் வரை போய் வந்தாச்சு. சச்சும்மாவ, நா கேட்டுகிட்டதால எங்க கூடவே வந்து தங்கினாங்க. தேவிய நானே நல்ல ஸ்கூல்ல ஹாஸ்டல் பார்த்து சேர்த்துவிட்டேன். காயத்ரியோட உடல்நிலைய வச்சு, பட்டுவ அவங்க தான் நல்லா பார்த்துக்கிட்டாங்க. பகல்ல வேலைய பார்த்திட்டு, நைட் பட்டுவ நா பார்த்துப்பேன்.

வாழ்க்கையில எல்லாரையும் இழந்துட்ட எனக்கு, சந்தோஷத்த மீட்டு கொடுத்த தேவதை அவ.. அவளோட சின்ன சிரிப்பு போதும் என்னோட எல்லா ஸ்ரஸ்ஸும் ஓடியே போயிடும்…

இது அத்தனையும் நடக்கும் போது, ஒவ்வொரு தடவையும் உன்ன காண்டாக்ட் பண்ண ட்ரை பண்ணி பண்ணி சோர்ந்து போயிட்டேன். எனக்கு இருந்த ஒரே சோர்ஸ், உன்னோட ஆபீஷியல் மெயில் ஐடி தான். அதுல நடந்தது, நடக்கறதுன்னு எல்லாத்தையும், அப்ப அப்ப அனுப்பிட்டே இருந்தேன். பதில் வரும்ங்கற நம்பிக்கையில… ஆனா கடைசியில நானா தான் உன்ன தேடி வந்திருக்கேன்.


சொல்லு…  இப்ப எனக்கு,  அந்த குழந்தையோட அம்மா சார்பா கேட்கறேன்… அந்த மாதிரி காயத்ரி கூட வாழ்ந்துட்டு.. அவளுக்கு ஒரு கஷ்டமுன்னு வரும் போது துணை நிற்காம, ஓடி ஒளிஞ்சதுக்கு என்ன காரணம்.. எங்க ரெண்டு பேர் மேலையும் சந்தேகப்பட்டேன்னு மட்டும் பொய் சொல்லாத… என்னோட கௌதம பத்தி எனக்கு நல்லா தெரியும்… எந்த சூழ்நிலையிலும் அவனுக்கு எங்கள சந்தேகப்பட தெரியாது….!”

என அழுத்தத்தோடும், விடை தெரிந்தே தீர வேண்டும் என்ற பிடிவாதத்தோடும் நின்றவனை பார்த்து கண்ணில் கண்ணீர் நிறைய  உரைத்தவன் வார்த்தையில் அதிர்ந்து… உறைநிலையில் நின்றான் கௌதமின் ஆரன் ….

error: Content is protected !!