Jeevan 7

Jeevan 7

7
மருத்துவமனைக்கு வந்து இறங்கியதிலிருந்து, அதிர்ச்சி மேல் அதிர்ச்சியாக மணிவாசகத்தைத் தாக்கியதில் யோசிக்கும் திறனையே இழந்தவர் போல ஐசியுவின் வாயிலில் போடப்பட்டிருந்த சேரில் அமர்ந்திருந்தார்.

முடிந்து விட்டது என்று எண்ணியிருந்த விஷயம் இன்று தொடரும் போட்டு பூதாகாரமாகத் தொடங்கியது போல இருந்தது.

இருபது வருடங்களுக்கு முன் யாரை மிரட்டி கிட்டத்தட்ட அகதி போல ஓட வைத்திருந்தாரோ அந்த கோமதியின் சாயலில் மீண்டும் வந்து கம்பீரமாக நிற்பவளைப் பார்த்ததும் சர்வமும் ஆடிப்போனது அவருக்கு.

மாதவனின் குடும்பத்தை உயிரோடு விட அவருக்கு விருப்பமே இல்லை. ஆனால் அப்போது சேதுபதி சென்ற காரின் விபத்து கொலையாகவும் இருக்கலாம் என்று போலீசு சந்தேகப்பட சற்று அடக்கி வாசிக்க எண்ணினார்.

கோமதிக்கும் அவளின் குழந்தைக்கும் ஏதாவது ஆனால் போலீசின் கவனம் முழுக்க தன் பக்கம் திரும்பினாலும் திரும்பும் என்பதால், பயந்த சுபாவம் உடைய கோமதியை மிரட்டி கையெழுத்து வாங்கிக் கொண்டு விரட்டி விட்டார்.

அலர்மேல்மங்கையும் சோகத்தில் நடந்த எதையும் கவனிக்காமல் விட அவருக்கு கோமதியை விரட்டுவது எளிதாக இருந்தது.

சேதுபதி இறந்த வழக்கை விபத்துதான் என்று மூட வைக்க சக்திக்கு மீறி செலவு செய்தார்.

விபத்தை ஏற்படுத்திய லாரி டிரைவரை வேறு நாட்டுக்கு அனுப்பி வைப்பதற்குள் முழி பிதுங்கி போனது அவருக்கு. அவன் உள்ளூரில் இருந்தால் என்றாவது ஒரு நாள் தான் மாட்டுவோம் என்பது அவருக்கு நன்றாகத் தெரியும்.

அதன்பிறகு தாய் தன்னை சந்தேகக் கண் கொண்டு விடாமல் கண்காணித்தபோதும், அலர்மேல்மங்கையையும் அவரால் பகைத்துக் கொள்ள முடியவில்லை.

தாய்க்கு கட்டுப்பட்டவர் போலவே நடித்து அந்த வீட்டிலேயே ஒட்டிக் கொண்டார்.

அர்ஜுனிடம் மட்டும் வெகுவாக பாசமாக இருப்பதாக காட்டிக் கொண்டவர், தனது திட்டப்படியே அர்ஜுன் தனது மகளைத் திருமணம் செய்து கொள்ள ஆசைப் பட்டதும் வெகுவாக மகிழ்ந்து போனார்.

அலர்மேல்மங்கை சம்மதிக்காத போதுகூட பெரிதாக அவர் அலட்டிக் கொள்ளவில்லை. அர்ஜுன் தனது மகளைத் தவிர வேறு யாரையும் திருமணம் செய்து கொள்ள மாட்டான் என்பது அவருக்கு உறுதியாக தெரியும். அர்ஜுன் அந்த அளவுக்கு ஸ்வேதா மேல் பிரியம் வைத்திருந்தான்.

தான் ஒன்று நினைத்திருக்க… இன்று நடந்து கொண்டிருப்பது என்ன? கஷ்டப்பட்டு விரட்டி விட்டவளின் வாரிசைத் தேடிக் கண்டுபிடித்து அழைத்து வந்து சரிபாதி சொத்தை தரப் போகிறார்களாம். நினைக்க நினைக்க வயிற்றெரிச்சலாக இருந்தது அவருக்கு.

இருபது வருடங்களாக புதையலை பூதம் காப்பது போல தான் காத்து வந்திருக்க, இன்று நோகாமல் தூக்கிக் கொடுக்கப் போகிறார்களா…?

அன்றே அந்த சொத்துக்களை அவர் பேரில் எழுதி வாங்கியிருக்க முடியும். கோமதி அர்ஜுன் பெயரில் என்பதால்தான் அதிகம் முரண்டு பிடிக்காமல் கையெழுத்து போட்டாள் என்றாலும்கூட, இவருக்கென்றால் இன்னும் சிறிது மிரட்டி அச்சுறுத்தியிருந்தால் எழுதித் தந்திருப்பாள்.

ஆனால் அது பல கேள்விகளை எழுப்பியிருக்கும். அனைவரின் மொத்த சந்தேகமும் மணிவாசகம் மீது திரும்பியிருக்கும். அதனாலேயே அவர் அர்ஜுன் பெயரில் எழுதி வாங்கியது.

தான் அவ்வளவு பாடுபட்டிருக்க… இவன் நொடிகூட யோசிக்காமல் கொடுக்க ஒப்புக் கொண்டானே என்று அர்ஜுனைப் பார்க்கப் பார்க்க கோபமாக வந்தது அவருக்கு. அதுவுமில்லாமல் அர்ஜுன் தொழிலை கையில் எடுத்துக் கொண்ட இந்த ஆறு வருடங்களில் அவன் எட்டிய உயரம் அபாரம்.

அலர்மேல்மங்கை சிந்தாமல் சிதறாமல் கட்டிக் காப்பாற்றி ஒப்படைத்த சொத்துக்களை குறுகிய காலத்திலேயே இரண்டு மடங்காக பெருக்கியிருந்தான். அவனது திறமைக்கு இன்னும் பெரிய ஆளாகவும் வரக்கூடும்.

ஆனால் இன்று கிட்டத்தட்ட ஐம்பது அறுபது கோடி மதிப்பிலான சொத்துக்களையும் தொழிலையும் பிரித்து கொடுத்துவிட்டால், தொழில் சரிவடையாதா…? அதை அவன் யோசித்த மாதிரியே தெரியவில்லையே என்று வெகுவாக குழம்பிப் போய் அமர்ந்திருந்தார்.

லோகேஸ்வரியைப் பொறுத்தவரை கணவன்தான் எல்லாம். வசதியாக வாழ வேண்டும், அதற்கு கணவன் செய்யும் அனைத்து தகிடுதத்தங்களும் தெரிந்திருந்தாலும் அதற்கு ஒத்து ஊதிக் கொண்டிருப்பவர்.

இத்தனை வருடங்களாக அந்த வீட்டில் ஒரு விருந்தினரைப் போல நடத்திய மாமியார் மீது அளவுகடந்த எரிச்சல் உண்டு. திருமணம் முடிந்து இத்தனை வருடங்கள் ஆனபோதும் மாமியாரின் பேச்சுக்கு மறுபேச்சு பேசாமல் அடங்கியிருப்பது வேறு அவருக்கு வெறுப்பைத் தந்திருந்தது.

எப்பொழுது தன் மாமியாரின் காலம் முடியும், தான் சற்று நிம்மதியாக வாழலாம் என்று எண்ணிக் கொண்டிருப்பவருக்கு, தற்போது அலர்மேல்மங்கை படுக்கையில் இருப்பது மகிழ்ச்சி அளித்தாலும், இத்தனை சொத்துக்களையும் எவளோ ஒருத்தியின் கையில் ஒப்படைப்பது வெகுவாக காந்தியது.

இத்தனை வருடங்களாக ஒரு ரூபாய் செலவு செய்ய வேண்டும் என்றாலும், ஆயிரம் கணக்குகள் மாமியாருக்கு சொல்ல வேண்டும். இந்த டூர் கூட மகள் ஆசைப்பட்டாளே என்று அர்ஜுன் அனுப்பியது.

இல்லையென்றால் போயிருக்க முடியாது.
நம் நிலைமை இப்படி இருக்க, எங்கிருந்தோ வந்தவளுக்கு சொத்தை தாரை வார்ப்பதா? விடக்கூடாது என்று உள்ளுக்குள் கருவிக் கொண்டவள், மகளுக்கும் அதையே போதித்துக் கொண்டிருந்தாள்.

கிட்டத்தட்ட ஸ்வேதாவும் அவளது தாயின் கருத்துக்களை ஆமோதித்தாள். அந்த வீட்டில் அவர்களது நிலை அவளுக்கு தெரியும்தானே. அதுமட்டுமில்லாமல் அர்ஜுன் தன்னை மணம் புரிய ஆசைப்பட்டபோதுகூட தன் பாட்டி ஒத்துக் கொள்ளவில்லையே.

இப்போது இவள் கிடைத்ததும், இவளுக்கும் விருப்பமில்லை என்றதும்தானே தன்னைத் திருமணம் செய்து கொள்ள பேரனுக்கு சம்மதம் சொல்லியிருக்கிறார். சுபத்ராவை வெறுப்புடன் கறுவிக் கொண்டது அவள் விழிகள்.

சுபத்ராவுக்கு இவர்கள் மூவரின் பார்வையிலேயே புரிந்தது, தன்னை அவர்களுக்குப் பிடிக்கவில்லை என்பது. முதன் முதலாக பார்க்கும் தன்மீது இவர்களுக்கு இவ்வளவு வன்மம் ஏன் என்று புரியாமல் சரஸ்வதியோடு ஒட்டிக் கொண்டு அமர்ந்திருந்தாள்.

ஆனால் அர்ஜுன் சந்தோஷமாகவே சுற்றிக் கொண்டிருந்தான். வக்கீலுடன் கலந்தாலோசித்துக் கொண்டிருந்தவன் அருகே சென்ற மணிவாசகம்,

“மாப்ள… உன்கூட கொஞ்சம் தனியா பேசனும்.”

“இருங்க மாமா, வக்கீல்கிட்ட சொத்து பிரிக்கறது பத்தி பேசிகிட்டு இருக்கேன். முடிச்சிட்டு வர்றேன்.”

‘அடக் கிறுக்குப் பயலே’ என்று பற்களைக் கடித்துக் கொண்டவர்,

“அது சம்பந்தமாதான் உன்கூட பேசனும். எழுந்து வா மாப்ள.”
என்ன பேசப்போகிறார் இவர் என்று யோசித்தபடி அவரோடு வந்தவனை ஸ்ரீராமும் பின் தொடர்ந்தான்.

“நீ எங்கப்பா வர்ற? நான் என் மருமகனோட பேசனும்.”

“மாமா… அவனுக்குத் தெரியாத ரகசியம்னு எதுவுமே என்கிட்ட இல்லை. அவனும் இருக்கட்டும் நீங்க சொல்லுங்க.” பேசியபடியே அங்கிருந்த பூங்கா ஒன்றினுள் வந்திருந்தனர்.

“மாப்ள… நீ தெரிஞ்சு செய்யறீயா? தெரியாம செய்யறீயா? எனக்கு ஒன்னுமே புரியல. அவ்வளவு சொத்தையும் அந்தப் பொண்ணு பேர்ல எழுதப் போறேன்னு நிக்குறியே இது நியாயமா? எங்கம்மாகிட்ட முடியாதுன்னு சொல்ல வேண்டியதுதானே”
“மாமா… இந்த சொத்தெல்லாம் நியாயமா அவ பேருக்கு சேர வேண்டியதுதான். ஏன் மாதவன் மாமாவைப் பத்தி தெரியாதா உங்களுக்கு?”

“அந்தக் கதையெல்லாம் உன்னை விட எனக்கு நல்லாவே தெரியும் மாப்ள. இருபது வருஷத்துக்கு முந்தி இருந்த அளவு சொத்தா இப்ப இருக்கு? நீ எவ்வளவு பெருக்கியிருக்க? எங்கம்மா எவ்வளவு உழைச்சிருக்காங்க?

எங்கயோ காணாம போயிட்டு திடீர்னு வந்தவங்களுக்கு பாதி சொத்து எப்படி குடுக்க முடியும்? எங்கம்மாதான் அர்த்தமில்லாம பேசுதுன்னா நீயும் அதுக்கு சரிசரின்னு மண்டைய ஆட்டுற.”

“மாமா நீங்க சொல்றதெல்லாம் எனக்கும் புரியுது. ஆனா பாட்டி படுத்த படுக்கையா இருக்காங்க. அவங்களோட கடைசி நேரத்துல அவங்க கேட்டதை நான் செய்து குடுக்கனும். அந்த கடமை எனக்கு இருக்கு.

அவங்க அந்தப் பொண்ணைக் கட்டிக்கச் சொன்னாங்க. அது என்னால முடியாதுன்னு சொன்னதும் சரிபாதி சொத்தையாவது பிரிச்சுக் குடுன்னு சொன்னாங்க. அது எனக்குப் பெரிய விஷயமாத் தோணலை. அதனால ஒத்துக்கிட்டேன்.”

“சரி… சொத்தைப் பிரிக்க ஒத்துகிட்ட… தொழிலைப் பிரிக்க எப்படி ஒத்துகிட்ட? தொழிலைப் பிரிச்சா என்ன ஆகும்னு உனக்குத் தெரியாதா?

நாளைக்கு அந்த பொண்ணா வந்து தொழிலைப் பார்க்கப் போகுது? அவ புருஷன்னு சொல்லிக்கிட்டு எவனாவது ஒருத்தன் வருவான்.

அவனுக்கும் நீ பதில் சொல்லனும்.
மாதவன் இருந்த காலத்துலயே இந்தத் தொழில ஒவ்வொரு செங்கல்லா பார்த்துப் பார்த்து உருவாக்கினது உங்கப்பா. காசு வேணும்னா மாதவனோடையதா இருக்கலாம். ஆனா உழைப்பு மொத்தமும் உங்கப்பாவுது.
உங்கப்பாவுக்குப்பிறகு அதைக் கட்டிக் காப்பாத்துனது எங்கம்மா.

அதுக்கு அப்புறம் இந்த அளவுக்கு வளர்த்து வச்சிருக்கறது நீ. இப்ப வந்து எவனோ ஒருத்தன் உன் பேக்டரில வந்து உனக்குச் சமமா உட்காருவான். உன்னால தாங்க முடியுமா அதை.”

எதைச் சொன்னால் அர்ஜுன் குழம்புவானோ அதைச் சொன்னார் மணிவாசகம். ஸ்ரீராமுக்குமே இந்த விஷயத்தில் மணிவாசகம் சொல்வது சரி என்று தோன்றியது ஏனெனில் தன் நண்பனுக்கு தொழில் மீது இருக்கும் காதலும் பக்தியும் அவனுக்குத் தெரியும். .

சொத்துக்களைப் பாதியாகப் பிரித்தாலே தொழில் கொஞ்சம் தடுமாறும். அப்படியிருக்க தொழிலில் வேறு யாரோ ஒருவர் வந்து சமமாக நாட்டாமை செய்வது எல்லாம் யோசிக்கவே முடியவில்லை அவனால். அர்ஜுனின் பதில் இதற்கு என்னவாக இருக்கும் என்று அவனையே பார்த்துக் கொண்டிருந்தான் ஸ்ரீராம்.
சொத்துக்கள் போனால் சம்பாதித்துக் கொள்ளலாம்…

பாட்டியின் கடைசி ஆசை முக்கியம் இதைத் தவிர்த்து வேறு எதையும் யோசித்திருக்கவில்லை அர்ஜுன். இப்போது மணிவாசகம் சொல்லவும் அவனுக்குமே சற்று சுருக்கென்றது.
இத்தனை வருடங்கள் ராஜா போல வலம் வந்த இடத்தில் நமக்குப் போட்டியாக இன்னொருவன்… யோசிக்க முடியவில்லை அவனால்.

தலையை அழுந்தப் பற்றிக் கொண்டு அமர்ந்திருந்தான். குழம்பிய குட்டையில் மீன் பிடிக்க மேலும் பேசினார் மணிவாசகம்.
“மாப்ள… நான் டாக்டரைப் போய் பார்த்தேன். அம்மா அதிகபட்சம் இன்னும் இரண்டு நாள் இருக்கறதே கஷ்டம்னு சொன்னாரு. இந்த இரண்டு நாள் அம்மாவை எப்படியாவது சமாளிச்சிட்டா,

அப்புறம் அந்தப் பொண்ணுக்கு ஏதோ கொஞ்சம் சொத்தை குடுத்து ஒரு நல்ல பையனாப் பார்த்து கட்டி வச்சிடலாம். அது அப்படி சரிபாதிதான் வேணும்னு கேட்கற பொண்ணு இல்லைன்னு நினைக்கிறேன்.”
அவர் என்ன சொல்ல வருகிறார் என்று புரியாமல் அவரைப் பார்த்தவன், அவரது கடைசி வரியை ஆமோதித்தான்.

“அது ரொம்ப நல்ல பொண்ணு மாமா. சொத்துக்கெல்லாம் ஆசைப்படற பொண்ணு இல்ல.”

“அப்புறம் என்ன மாப்ள? இன்னும் இரண்டு மூனு நாள் அம்மாவை எப்படி சமாளிக்கறதுன்னு மட்டும் யோசிப்போம். மத்ததெல்லாம் அப்புறம் பேசிக்கலாம்.”

“ஆனா இது அவங்களோட கடைசி ஆசை மாமா. அதைக் கண்டிப்பா நிறைவேத்தனும்.”

“ஐயய்யைய… என்ன மாப்ள திரும்பவும் ஆரம்பிச்ச இடத்துக்கே போற. அம்மாவுக்கு அந்த பொண்ணு நல்லாயிருக்கனும். அதான் உனக்கு கட்டி வைக்கனும்னு யோசிச்சிருக்காங்க.

அதே மாதிரி ஒரு நல்ல வாழ்க்கையை பின்னாடி அமைச்சி குடுத்திட்டா அவங்க ஆத்மா சாந்தியடைஞ்சிடும். நீ எதுவும் யோசிக்காத மாப்ள.” இன்னும் இறந்திருக்காத ஜீவனின் ஆத்மா சாந்தியடைவதைப் பற்றி பேசியவரை விநோதமாகப் பார்த்தவன்,

“என்ன மாமா உளர்றீங்க?”

“மாப்ள… இப்ப அம்மாகிட்ட போய் அந்தப் பொண்ணை கல்யாணம் பண்ணிக்க சம்மதம்னு மட்டும் சொல்லு. அவங்க ரொம்பவே சந்தோஷப்படுவாங்க. அவங்க கடைசி காலம் அந்த சந்தோஷத்துலயே இருக்கட்டும்.

அவங்களுக்குப் பிறகு அந்தப் பொண்ணுக்கு நல்ல பையனைப் பார்த்து கல்யாணம் பண்ணி வச்சிட்டு நீ ஸ்வேதாவை கல்யாணம் பண்ணிக்க.” அவர் முடிக்கும் முன்பே வெடித்தவன்,

“பைத்தியக்காரத்தனமா எதையாவது உளராதீங்க மாமா. என்னால அப்படியெல்லாம் பொய்யா எதுவுமே பாட்டிகிட்ட சொல்ல முடியாது. அந்தக் குற்றவுணர்ச்சியை என்னால தாங்கவும் முடியாது.
அதுவுமில்லாம ஸ்வேதாவுக்கு மட்டும் இது தெரிஞ்சது அவ கொலைகாரியா மாறிடுவா. பெத்த பொண்ணு கையால சாகப் போறீங்களா?

உங்களுக்கு எப்படிதான் இப்படி ஐடியாலாம் கிடைக்குதோ?” தலையிலடித்துக் கொண்டு எழுந்து செல்ல முயன்றவனை தடுத்து அமர வைத்தார்.

“நல்லா யோசிச்சுப் பாரு அர்ஜுன். இதுல உனக்கு பாதகம் எதுவுமில்லாம நான் யோசிச்சு எடுத்த முடிவுதான் இது. சொத்துல ஒன்னு ரெண்டு அந்தப் பொண்ணுக்கு குடுத்து நல்ல பையனுக்கு கல்யாணம் பண்ணி வைக்கப் போறோம். அதனால இதுல அந்தப் பொண்ண ஏமாத்தல.

எங்கம்மாவோட ஆசை அந்த பொண்ணு வாழ்க்கை நல்லாயிருக்கனும். அந்த ஆசையும் நிறைவேறதான் போகுது. நீ ஒரு பொய் மட்டும் சொன்னா போதும். எல்லாமே சரியாகிடும்.

தொழிலும் உன் கையை விட்டுப் போகாது. ஸ்வேதாவையும் நீ அப்புறம் கல்யாணம் பண்ணிக்கலாம். ஸ்வேதாகிட்ட நான் பேசறபடி பேசி சம்மதிக்க வைக்கறேன்.”

அவனை மறுபடி மறுபடி பேசி சமாதானப் படுத்தியவர் ஸ்வேதாவையும் வரவைத்து அவளிடமும் பேசினார். அவள் கொந்தளிப்பாள் தன்னையும் மாமனையும் திட்டுவாள் என்று அர்ஜுன் பார்த்திருக்க, அவளோ ஈசியாக ஒத்துக் கொண்டாள்.

“அப்பா சொல்றதுதான் சரி மாமா. ஒரு பொய்தான பாட்டிகிட்ட சொல்லப் போறீங்க. அதனால நமக்குக் கிடைக்கப் போற நன்மையை நினைச்சுப் பாருங்க.
சொத்து தொழில் எதுவும் நம்மை விட்டுப் போகாதுல்ல. நாம அப்புறமா கல்யாணம் பண்ணிக்கப் போறோம். எனக்கு இதுல தப்பா எதுவுமே தெரியல.”

வெகுவாக குழம்பிப் போயிருந்தான் அர்ஜுன். அவனுக்குமே தொழிலில் வேறு யாருடைய தலையீடும் வருவது பிடிக்கவில்லைதான்.
ஆனால் அதற்காகப் போலியாக பாட்டியிடம் பொய் சொல்வதும் சரியாகப் படவில்லை. ஸ்வேதாவும் உடன் சேர்ந்து கொண்டு வற்புறுத்தவும் என்ன செய்வது என்று புரியாமல் தடுமாறினான்.

அவ்வளவு நேரமும் நடப்பதை மௌனமாகப் பார்வையிட்டுக் கொண்டிருந்த ஸ்ரீராம் மெதுவாக,
“நீங்க சொல்றதெல்லாம் சரின்னே வச்சிப்போம். பாட்டிக்கிட்ட அந்தப் பொண்ணைக் கல்யாணம் பண்ணிக்கிறேன்னு இவன் சொல்றதுக்கு முன்னாடி அந்தப் பொண்ணு என்ன நினைக்குதுன்னு கேட்க வேணாமா?

முதல்ல அந்தப் பொண்ணு இந்த திட்டத்துக்கு ஒத்துக்கனும். அப்புறம்தான் இவன் பாட்டிகிட்ட பேச முடியும்.

பாட்டியுமே இவன் சம்மதம் சொன்னதும் சும்மா இருப்பாங்கன்னு எனக்குத் தோனலை. அவங்க கண் முன்னாடியே கல்யாணம் நடக்கனும்னு ஆசைப்படுவாங்க. தாலியும் கட்டச் சொல்லுவாங்க. அப்ப முடியாதுன்னு யாராலயும் மறுக்க முடியாது. இதையும் யோசிச்சிக்கோங்க.”

ஸ்ரீராம் போட்ட குண்டில் மணிவாசகம் சற்று ஆடிப் போனார்தான். சுபத்ராவைக்கூடப் பேசி சம்மதிக்க வைக்கலாம். அது பிரச்சனையில்லை. ஆனால் தன் அம்மா கண்டிப்பாக தாலி கட்டச் சொல்லுவார்தான். அதற்கு என்ன செய்ய என்று யோசித்தார்.

ஆனால் ஸ்வேதா யோசிக்கவேயில்லை, “அதனால என்ன… பாட்டி முன்னாடி தாலி கட்ட சொன்னா கட்டட்டும். அப்புறமா அவகிட்ட கழட்டி வாங்கிட வேண்டியதுதானே. இதுல என்னப் பிரச்சினை?”
என்றவளை வெகுவாக முறைத்த அர்ஜுன், “அப்படியே ஓங்கி அறைஞ்சேன்னு வச்சிக்கோயேன் பல்லு பூராம் எகிறிடும். தாலி கட்றது உனக்கு அவ்வளவு விளையாட்டாப் போச்சா.

உதை வாங்கறதுக்கு முன்ன ஓடிப் போயிடு. மாமா இனி இது சம்பந்தமா எதுவுமே என்கிட்ட பேசாதீங்க. நான் எதுக்குமே ஒத்துக்க மாட்டேன். தொழிலுக்கு எந்த பிரச்சனை வந்தாலும் நான் சமாளிப்பேன்.”
என்று எகிறியவனை சமாதானப்படுத்தி அடக்கி அமர வைத்தவர், “ஏன் மாப்ள இவ்வளவு கோபப்படுற? ஸ்வேதா இப்ப என்ன தப்பா சொல்லிடுச்சி?”

முறைத்தவனை கண்டுகொள்ளாமல் தொடர்ந்தார், “அது படிச்ச பொண்ணு. அதனாலதான் அதுக்கு இந்த சென்டிமென்ட்லாம் நம்பிக்கை இல்லை.

நீ நாடகம் சினிமாலாம் பார்க்கறதில்லையா? அதுல எல்லாம் பொய்யா தாலிகட்டி அப்புறமா கழட்டிடறது இல்லை. அதுமாதிரி நினைச்சிக்கோயேன்.

வெளியாள் யாருக்கும் தெரியாம நமக்குள்ள நடக்கப்போற கல்யாணம். எங்கம்மாவ சந்தோஷப் படுத்தறதுக்காக பண்ணப் போறோம். அப்புறமா தாலியைக் கழட்டி சாமி உண்டியல்ல போட்டுட்டு, அந்தப் பொண்ணுக்கு நல்ல பையனைப் பார்த்து கல்யாணம் பண்ணி வச்சிடலாம்.”

ஸ்வேதாவும் மணிவாசகமும் மீண்டும் மீண்டும் பேச, தலையைப் பிடித்தவாறு அமைதியாக உட்கார்ந்திருந்தான்.

‘இவங்க சொல்றதைக் கேட்டா, பாட்டியை ஏமாத்துற மாதிரி ஆகாதா? கொஞ்சம்கூட என் மனசு ஒப்பவே மாட்டேங்குதே. நான் வேற ஒருத்தி கழுத்துல தாலி கட்றது ஸ்வேதாவை பாதிக்கவே இல்லையா?

என்னை விட என் உணர்வுகளை விட அவளுக்கு இந்த சொத்துக்கள் முக்கியமாகப் போய் விட்டதா?’ உள்ளுக்குள் வெறுத்துப் போனது அவனுக்கு.

சுபத்ராவின் கள்ளமில்லா முகம் நினைவுக்கு வந்தது. ‘நாளைக்கே அந்தப் பொண்ணை கல்யாணம் பண்ணிக்க போறவனுக்கு இந்த விஷயம் தெரியவந்தால் அவ வாழ்க்கை என்ன ஆகும்? அந்த பாவம் என்னை சும்மா விடுமா?’ மனம் அமைதியற்றுத் தவித்தது.

‘அந்தப் பொண்ணு வாழ்க்கை நல்லாயிருக்கனும். ரொம்ப ரொம்ப நல்ல பையனாப் பார்த்து அவளுக்கு கல்யாணம் பண்ணி வைக்கனும்’ என்று எண்ணிக் கொண்டு ஸ்ரீராமைப் பார்த்தவனுக்குள் சில யோசனைகள்.

சற்று நேரம் அமைதியாக யோசித்தவன், “ஸ்ரீராம் நீ சுபத்ராவைக் கல்யாணம் பண்ணிக்கிறியா? பாட்டியோட ஆசைப்படி எல்லா சொத்துக்கள்லயும் சரிபாதியை பிரிச்சிக் குடுத்துடுவேன். நீ தொழில்ல பங்குதாரரா வந்தா எனக்கு எந்தப் பிரச்சினையும் இல்ல. எல்லா பிராப்ளத்துக்கும் ஒரே முடிவு நல்ல முடிவு என்ன சொல்ற?”
இதைக் கேட்டதும் மணிவாசகம் அதிர்ந்து போனார். ‘அடப்போங்கடா… நானும் எவ்வளவு நேரம் தொண்டை தண்ணி வத்த பேசியிருக்கேன்.

திரும்பவும் ஆரம்பிச்ச இடத்துக்கே வந்து நிக்குறானே’ என்று அர்ஜுனை மனதுக்குள் வைதவர், நண்பர்கள் பேசுவதைக் கேட்டுக் கொண்டிருந்தார்.

“சுபத்ரா மாதிரியான ஒரு அழகான நல்ல பொண்ணைக் கல்யாணம் பண்ணிக்க முடியாதுன்னு சொல்றவன் பைத்தியக்காரன்தான்.”
சுபத்ராவை அழகான பெண் என்று ஸ்ரீராம் சொல்லவும் ஸ்வேதாவின் இதழ்கள் ஏளனமாக வளைந்தன.

அவள் அவ்வளவு தைரியமாக அர்ஜுனை பணயம் வைப்பது தன் அழகின் மீதுள்ள கர்வத்தால்தான்.
அர்ஜுன் தன்னைத்தவிர யாரையும் திரும்பிக் கூடப் பார்க்க மாட்டான். அதுவும் அந்த சுபத்ராவைச் சுத்தமாகப் பார்க்க மாட்டான் என்ற எண்ணம் அவளுக்குண்டு. எளிமையாக இருந்த சுபத்ரா அழகற்றவளாக அவளுக்குத் தெரிந்தாள்.

“அர்ஜுன்… சுபத்ரா ஊருக்கு நாம போயிருந்தோம்ல அப்பவே அந்தப் பொண்ணோட இயல்பான அழகு எனக்குப் பிடிச்சிருந்தது. ஆனா, நான் அந்தப் பொண்ணை லேசா ஆர்வமா பார்த்ததுக்கே அது என்னை அண்ணான்னு கூப்பிட ஆரம்பிச்சிடுச்சி. இப்ப வரைக்கும் அண்ணன்னுதான் கூப்பிடுது.
நானும் லேசா ஆர்வமா பார்த்தேனே தவிர, அந்தப் பொண்ணை என் தங்கச்சியாதான் நினைக்குறேன்.” என்க சொத்தென்று ஆனது அர்ஜுனுக்கு.

எப்படி யோசித்தும் ஒன்றும் புரியாமல் குழம்பி அமர்ந்திருந்தவனைப் பேசியே கரைத்தனர் மணிவாசகமும் ஸ்வேதாவும். ஒருவழியாக வெகுநேரம் பேசி அவர்களது திட்டத்துக்கு அர்ஜுனைத் தலையாட்ட வைத்திருந்தனர் இருவரும்.

அதிலும் அர்ஜுன் ஸ்வேதாவிடம் என்னைவிட உனக்கு இந்த சொத்துக்கள்தான் முக்கியமா என்று கேட்க, “நீங்களும் வேணும் சொத்தும் வேணும் மாமா. ரெண்டும்தான் எனக்கு முக்கியம்” என்ற அவளது பதிலில் நொந்து போனான்.

‘அப்போது அவளுக்கு நான் முக்கியமில்லையா? சொத்துக்கள் இல்லையென்றால் என்னை உதறி விடுவாளா? இந்த சொத்துக்காகதான் என்னை மணக்க நினைக்கிறாளா?’ மனம் கண்டதையும் யோசித்து துவண்டு போக, ஸ்ரீராமும் மணிவாசகமும் சுபத்ரா மற்றும் சரஸ்வதியிடம் இவர்கள் நடத்தப் போகும் நாடகத்தைப் பற்றிக் கூறிக் கொண்டிருந்தனர்.

தொடரும்…

error: Content is protected !!