Jeevan 9

9

ஸ்ரீராமுக்கு மனது மிகவும் நிறைவாக இருந்தது. திருமணத்திற்கு வந்தவர்கள் அனைவரையும் நன்றாக உபசரித்து அனுப்பிய பின் மீண்டும் மருத்துவமனைக்குத் திரும்பியிருந்தான்.

அர்ஜுனையும் சுபத்ராவையும் ஜோடியாகப் பார்க்க அவ்வளவு அம்சமாக இருந்தது. அர்ஜுன் பேரழகன் அதில் எந்த சந்தேகமும் இல்லை. எளிமையான அழகுடைய சுபத்ராவும் இன்று பட்டுப்புடவை நகைகளில் பாந்தமான அழகுடன் மிளிர்ந்தது திருப்தியாக இருந்தது.

ஆரம்பம் முதலே ஸ்வேதாவை அர்ஜுனுக்கு ஜோடியாக நினைத்துப் பார்க்கவே முடிந்ததில்லை ஸ்ரீராமுக்கு. அழகில் பொருத்தமாக இருந்தாலும், அர்ஜுனின் குணத்துக்கும் ஸ்வேதாவின் குணத்துக்கும் பொருத்தம் இல்லை என்று நினைத்துக் கொள்வான்.

ஆனால் நண்பனின் விருப்பமும் பிடிவாதமும் தெரியும் ஆகையால் எதையும் வெளிப்படுத்தியது கிடையாது. திருமணம் அர்ஜுனின் சொந்த விருப்பம். இதில் என்னுடைய கருத்து தேவையற்றது என்றும் எண்ணிக் கொள்வான்.

அவனுக்கு ஸ்வேதாதான் என்று முடி போடப் பட்டிருந்தால் அதை யாராலும் மாற்ற முடியாது. ஆனால் அது அப்படி அல்ல என்று இன்று விதி சுபத்ராவுடன் அர்ஜுனை இணைத்து வைத்திருக்கிறது.

இது ஸ்ரீராம் எதிர் பாராத திருப்பம். நேற்று மணிவாசகமும் ஸ்வேதாவும் சேர்ந்து கொண்டு சொத்துக்காக அர்ஜுனை போலியாக திருமணம் செய்ய வற்புறுத்தும் போது, இவர்களுக்கு என்ன பைத்தியமா பிடித்திருக்கிறது என்றுதான் எண்ணிக் கொண்டான்.

ஏனெனில் அர்ஜுனைப் பற்றித் தெரியும் ஸ்ரீராமுக்கு. அவன் எந்த அளவுக்கு திருமண பந்தத்தை மதிப்பவன், பாட்டியின் மீது எவ்வளவு மதிப்பு வைத்திருக்கிறான்,

அவனைப் போய் பாட்டியின் முன்பு போலியாக திருமணம் செய்து கொள்ள சொல்கிறார்களே என்றுதான் எண்ணியிருந்தான்.

அர்ஜுனைக் குழப்பி குழம்பிய குட்டையில் மீன் பிடிக்க முயல்கிறார்கள் இவர்கள் என்று தோன்றியது. ஆனால் அது அப்படியல்ல… அவர்களே, அவர்களைப் பற்றி அறிந்து கொள்ள,

அர்ஜுனுக்கு ஒரு நல்ல வாய்ப்பை ஏற்படுத்தித் தந்திருக்கிறார்கள். ஆனால் பாவம் அவர்களுக்குத்தான் அது புரியவில்லை.

அலர்மேல்மங்கை தான் இன்னும் அந்த வீட்டின் அச்சாணிதான் என்பதை மீண்டும் ஒருமுறை நிரூபித்து விட்டார். தன் மகனைப் பற்றியும் தெரியும். தன் பேரனைப் பற்றியும் தெரியும் அவருக்கு.

நேற்று தன் காதலுக்காக பேசிய பேரன் இன்று உங்கள் பேச்சைக் கேட்கிறேன் என்று வந்து நிற்கும் போது என்ன நடந்திருக்கும் என்று ஊகிக்க முடியாதவரல்ல அவர்.

நடப்பது அனைத்தும் அவன் செயல் என்று ஆண்டவன் மீது பாரத்தைப் போட்டு அர்ஜுன் சுலபத்தில் அந்த பந்தத்தில் இருந்து மீள முடியாதபடிக்கு அருமையாக திருமணத்தை நடத்தி விட்டார்.

சரஸ்வதியோ ஸ்ரீராமோ அர்ஜுனுக்கு எந்த ஆலோசனையும் தரவில்லை. அவன் இந்த நேரத்தில் சுயமாக சிந்தித்து முடிவு எடுப்பதுதான் சரி என்று ஒதுங்கியே நின்றனர். அதன்படி எடுத்த முடிவில் அர்ஜுன் என்றுமே பின்வாங்க மாட்டான் என்றும் அவர்களுக்குத் தெரியும்.

திருமணம் முடிந்ததும் பாட்டியின் முகம் மிகப் பிரகாசமாகவே இருந்தது. அணையப் போகும் விளக்கின் ஜ்வாலை அது.

“நல்ல நேரத்துல வீட்டுக்கு கூட்டிட்டு போய் ஆரத்தி எடுத்து பால் பழம் குடு சரோ. அப்படியே பூஜை ரூம்ல விளக்கேத்தி அவங்க பெத்தவங்களை கும்பிடச் சொல்லு.

சுபத்ரா வீட்டுக்கும் நம்ம வீட்டுக்குமா இன்னைக்கே மறுவீடு போகச் சொல்லு”
என்று விரைவாக கட்டளைகளைப் பிறப்பித்து மூச்சு வாங்கியவரைக் கடிந்து கொண்டவன்,

“பாட்டி பொறுமையா பேசுங்க. எப்படி மூச்சு வாங்குது பாருங்க.” ஆதரவாகத் தடவிவிட்டவனின் கரங்களைப் பற்றிக் கொண்டவர்,

“எத்தனை பேரோட ஆசை இன்னைக்கு நிறைவேறியிருக்கு தெரியுமா அர்ஜுன்? இப்ப என் உயிர் போனாக்கூட ரொம்ப சந்தோஷமா போவேன். என்னை ரொம்ப சந்தோஷப் படுத்திட்டய்யா. என் மனசு நிறைஞ்சு இருக்கு.” என்று கண்ணீர் மல்கியவரை,

“அம்மா… சந்தோஷமான நேரத்துல ஏன் கண் கலங்குறீங்க? உங்க பேரனும் பேத்தியும் வாழற வாழ்க்கையை நீங்க பார்க்க வேண்டாமா? அவங்களோட பிள்ளைகளைப் பார்க்க வேண்டாமா?”

“போதும் சரோ. எனக்கு இதுவே போதும். எப்போதும் இவங்க ரெண்டு பேருக்கும் என்னோட ஆசீர்வாதம் உண்டு. அவங்க நூறு வருஷம் சந்தோஷமா வாழ்வாங்க. நீ இப்ப அவங்களை கோவிலுக்கு கூட்டிட்டு போய்ட்டு அப்புறமா வீட்டுக்கு கூட்டிட்டு போ.”

சுபத்ராவுக்குதான் நடப்பது எதையுமே புரிந்து கொள்ள முடியவில்லை. தனக்கு நடந்தது நிஜ திருமணமா? போலியா? இந்த திருமணத்தை எப்படி போலி என்று சொல்ல முடியும்? உற்றார் நட்புகள் சூழ அனைவரது ஆசீர்வாதத்தோடு நடந்திருக்கும் திருமணத்தில் அவளது மனம் நிம்மதியாக உணர்ந்தது என்னவோ உண்மைதான்.

ஆனாலும், எப்போது யார் தன்னிடம் இது எல்லாம் நாடகம் நீ வேஷத்தை கலைத்து விட்டுப் போ என்று சொல்லி விடுவார்களோ…

உள்ளுக்குள் அஞ்சிக் கொண்டிருந்தாள். அனிச்சையாக கைகள் உயர்ந்து தாலியை நெஞ்சோடு இறுக்கிக் கொண்டது.

புரியாத முகபாவத்தோடு இருந்தவளை பயத்தில் இருக்கிறாள் என்று அனைவருமே எண்ணிக் கொண்டனர். பாட்டியிடம் விடை பெற்றுக் கொண்டு நேராக கோவிலுக்குச் சென்றவர்கள், அங்கு ஏற்கனவே ஏற்பாடு செய்யப்பட்டு இருந்த பூஜையில் கலந்து கொண்டு,

ஒரு நல்ல உணவகத்தில் அனைவரும் காலை உணவை முடித்துக் கொண்டு வீட்டிற்கு வந்தனர்.

கோவிலில் குங்குமம் வைக்கும் போதும், கோவில் பிரகாரத்தை அர்ஜுனின் கரங்களைப் பற்றிக் கொண்டு சுற்றும் போதும் அவனது அருகாமை சுபத்ராவுக்கு பெரும் அவஸ்தையையே கொடுத்தது. மனம் ரகசியமாக அவனைக் கணவனாக ஏற்றுக் கொண்டது புரிந்தது.

அர்ஜுனுக்கு எந்த விதத்திலும் தான் பொருத்தமில்லை என்ற உண்மையும் உள்ளுக்குள் உறைத்தபோதும், மனம் தடுமாறத்தான் செய்தது.

என்னவென்றே புரியாத இந்த பந்தத்தில் தன் மனம் ஏன் இப்படித் தடுமாறுகிறது என்று அவளையேக் கடிந்தபடி வந்தாள்.

காரில் வரும்போது இயல்பாக அவன் பேசிய பேச்சுக்களுக்குக் கூட பதில் கொடுக்காமல் அமைதியாகவே வந்தாள். அவனும் அவளுடைய நிலையை உணர்ந்து அமைதியாகிப் போனான். வீட்டிற்கு வரும்வரை இருவரிடையே மௌனமே நீடித்தது.
செங்கமலம் ஆரத்தி சுற்றி இருவரையும் வரவேற்க, வலது காலை எடுத்து வைத்து உள்ளே நுழைந்தாள் சுபத்ரா. நேராக பூஜையறைக்கு இருவரையும் அழைத்துச் சென்ற சரஸ்வதி சுபத்ராவை குத்து விளக்கு ஏற்றச் சொல்லி பூஜையைச் செய்யச் சொன்னார்.

அங்கு இருந்த அர்ஜுனின் பெற்றோர் புகைப்படத்தை வணங்கியவர்கள் வெளியே வந்து ஹாலில் அமர்ந்தனர். இருவருக்கும் பாலும் பழமும் கொடுத்த சரஸ்வதி, மாதவன் கோமதியின் வீட்டிற்கு அழைத்துச் சென்றார்.

சுபத்ரா அப்போதுதான் அந்த வீட்டினுள் அடியெடுத்து வைக்கிறாள். அர்ஜுனுமே உள்ளே வந்தெல்லாம் பார்த்தது இல்லை. வீட்டின் பராமரிப்பு பணிகள் அனைத்துமே அலர்மேல்மங்கையே பார்த்துக் கொள்வார். ஒருவரையும் உள்ளே விட மாட்டார்.

அர்ஜுன் வீட்டைப் போலவே இருந்தது வீடு. அதே அமைப்போடு இருந்த பூஜையறையில் நடுநாயகமாக மாதவன் புகைப்படம் மாட்டப்பட்டு இருந்தது. தற்போது அருகில் கோமதியின் புகைப்படமும் மாட்டப்பட்டிருந்தது.

அங்கும் விளக்கேற்றி பூஜை செய்து வணங்கியவர்கள், மீண்டும் அவர்களது வீட்டிற்கே வந்தனர்.
வீட்டில் மணிவாசகம் லோகேஸ்வரி

ஸ்வேதா மூவரும் இருக்குமிடமே தெரியாமல் மிகவும் அமைதியாக இருந்தது வீடு. தனக்கு சற்று சோர்வாக இருக்கிறது என்றும் தான் சிறிது நேரம் ஓய்வெடுத்து வருகிறேன் என்று கூறி மாடியேறிச் சென்றுவிட்டான் அர்ஜுன்.

ஸ்ரீராமும் கம்பெனியில் அனைவருக்கும் மதிய விருந்து ஏற்பாடு செய்திருப்பதால் அதை கவனிக்கச் செல்வதாகக் கூறிச் சென்றான்.

சுபத்ராவையும் அவளது அறைக்கு அழைத்துச் சென்று எளிமையாக ஒரு புடவைக்கு மாறச் செய்த சரஸ்வதி, அவளையும் ஓய்வெடுக்கச் சொல்லிவிட்டு வெளியேறினார்.

மீண்டும் மீண்டும் அலைபாய்ந்த மனதை அடக்கி, ஓடும் நீரோடு செல்லும் ஓடம் போல என் வாழ்க்கை எப்படி செல்கிறதோ அப்படியே போகட்டும் என்ற முடிவுக்கு வந்தாள் சுபத்ரா.

நிஜமோ போலியோ இந்த ஜென்மத்தில் எனக்கு இதுதான் திருமணம். அர்ஜுன்தான் கணவன். இதில் என்னால் எந்த மாற்றத்தையும் ஏற்றுக் கொள்ள முடியாது.

அர்ஜுன் என்னை போ என்று சொல்லும் அடுத்த நொடி வீட்டை விட்டு சென்று விடுவேன் என்று எண்ணிக் கொண்டாள்.

என்னால் அவரது காதலுக்கு எந்த பிரச்சினையும் வராது. அவருடைய வாழ்க்கையிலும் குறுக்கே நிற்க மாட்டேன். எனக்கு எந்த சொத்தும் வேண்டாம். இந்தத் தாலியை மட்டும் என்னிடம் இருந்து பறிக்காமல் இருந்தாலே போதும்.

மேலும் என்னென்னவோ எண்ணங்கள் அலைமோத, மெல்ல கண்ணயர்ந்தாள்.

மணிவாசகத்தின் அறையில், மணிவாசகமும் லோகேஸ்வரியும் சோபாவில் அமர்ந்திருக்க ஸ்வேதா கட்டிலில் குப்புறப் படுத்துச் சுருண்டிருந்தாள்.

திருமணம் இத்தனை பேரின் முன்னிலையில் நடந்தது, வக்கீலை வைத்து பதிவு செய்தது, திருமண நிகழ்வுகள் அனைத்தும் புகைப்படமாகவும் வீடியோவாகவும் பதிவு செய்யப்பட்டது அனைத்துமே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது மூவருக்கும்.

அய்யர் வைத்து மந்திரம் ஓதவில்லை, அதற்கு பதில் மங்கல இசை ஒலித்தது. மற்றபடி

எளிமையாக நடந்தாலும் முழுமையானதொரு திருமணமாக நடைபெற்றதை ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை அவர்களால்.

பாட்டியின் முன்னிலையில் வெறும் மஞ்சள் கயிற்றை கட்டச் சொல்லுவார், நம்மைத் தவிர சாட்சி என்று ஒருவரும் இருக்க மாட்டார்கள், அப்படி ஒரு திருமணம் நடைபெற்றதையே மறைத்து விடலாம் என்று எண்ணியிருந்தனர்.

ஆனால் சட்டப்படி பதியப்பட்டதை எப்படி மறைக்க. ஸ்வேதாவுக்கு நினைக்க நினைக்க தாளவில்லை. நேற்று பேசுவதற்கு சுலபமான ஒன்றாக இருந்தது இன்று நிஜத்தில் கண்கொண்டு பார்க்க முடியவில்லை அவளால்.

தன்னுடைய மாமன் வேறொருத்தியின் கழுத்தில் தாலி கட்டுவதைப் பார்த்து நொந்து போய் வந்து சுருண்டிருந்தாள். அதற்குமேல் எதையும் அங்கு நின்று பார்க்க முடியவில்லை அவளால்.

தான் இறுக்கிப் பிடித்து வைத்திருந்த கைப்பொருள் மெல்ல நழுவிப் போய்விட்டதோ… நினைக்கையில் அழுகையில் உடல் குலுங்கியது. மகள் அழுவதைப் பார்த்த மணிவாசகம்,

“இப்ப எதுக்குடா பாப்பா அழுகுற? இப்ப என்ன ஆகிடுச்சி? நம்ம திட்டப்படிதான் எல்லாம் நடக்குது. என்ன… இத்தனை பேரைக் கூப்பிடுவாங்கன்னு நினைக்கல… எங்கம்மாவ குறைச்சி எடை போட்டுட்டேன். படுக்கையில இருந்தாலும் கெத்து குறையல எங்கம்மாவுக்கு.”

அவருக்குமே நினைக்க நினைக்க தாங்க முடியவில்லை. அர்ஜுன் சுலபத்தில் அந்த பந்தத்தில் இருந்து மீள முடியாதபடிக்கு இறுக்கமான பிணைப்பு வேண்டும் என்பதற்காக அவனுடைய அம்மாவின் மாங்கல்யத்தையே கொண்டு வந்து வைத்து அவனைக் கட்டச் சொல்லுவார்கள் என்றெல்லாம் நினைத்துக்கூடப் பார்க்கவில்லை.

“எப்படியும் எல்லா ஃபோட்டோவும் தெரிஞ்ச எல்லாருக்கும் போயிருக்கும். இனி அடுத்து என்ன செய்யறதுன்னு நம்ம வக்கீல்கிட்ட போய் நான் பேசிட்டு வர்றேன்.” தனக்குத்தானே பேசிக் கொண்டவர்,

“நீ அழாதடா. அர்ஜுன் என்னைக்கும் உனக்குதான்.” என்று மகளை ஆறுதல் படுத்தினார்.
லோகேஸ்வரிக்கும் நினைத்தது ஒன்று நடந்தது ஒன்றாக இருக்க அதிர்ச்சிதான், இருந்தாலும் மகளைப் பற்றிதான் இனி யோசனை செய்ய வேண்டும் என்ற எண்ணம் அவருக்கு.

“ஏங்க… அத்தனை பேர் பார்க்க அர்ஜுனுக்கு கல்யாணம் ஆகிடுச்சி. இனி அவன் அந்தப் பொண்ணை வேணாம்னு சொல்லிட்டு நம்ம பொண்ணைக் கல்யாணம் பண்ணாலும், அது இரண்டாம் கல்யாணம்தான. நம்ம பொண்ணுக்கு எதுக்கு அப்படி ஒரு வாழ்க்கை?

யாருக்கும் தெரியாம நடந்திருந்தா அது வேற… ஆனா இப்ப அப்படி இல்ல. அந்தப் பொண்ணை அவன் முறைப்படி விவாகரத்து பண்ணனும். அதுவரை நம்ம பொண்ணு காத்திருக்கனும். அப்புறம் கல்யாணம் நடந்தாலும் அது இரண்டாம் தாரம்தான.

இரண்டாந்தாரமா கட்டிக்க அவளுக்கென்ன தலையெழுத்தா? நம்ம பொண்ணுக்கு வேற நல்ல மாப்பிள்ளைய பார்த்து கட்டி வச்சிடலாம்ங்க.”

படுத்திருந்தவள் தன் தாயின் வார்த்தைகளைக் கேட்டு சீறி எழுந்தாள்.

“அம்மா… என்ன பேசறீங்க. எனக்கு மாமாதான் வேணும். உங்க பேச்சைக் கேட்டு பின்விளைவுகளை யோசிக்காம பைத்தியக்காரத்தனம் பண்ணிட்டேன். மாமா திருப்பித் திருப்பி கேட்டாங்க. அவ்வளவு தூரம் எடுத்துச் சொன்னாங்க. நான்தான் மடச்சி மாதிரி அவ கழுத்துல தாலியக் கட்டுங்கன்னு சொல்லிட்டேன்.” அழுதவள் தன் கண்களைத் துடைத்துக் கொண்டு,

“மாமா என்னைக்கும் என்னை மறக்க மாட்டாங்க. அவங்க எனக்குதான். அப்பா நீங்க போய் வக்கீல் கிட்ட அடுத்து என்ன செய்யறதுன்னு கேட்டுட்டு வாங்கப்பா. நாம மாமாகூட பேசி அவளை வீட்ட விட்டு அனுப்ப என்ன செய்யனுமோ அதைச் செய்யலாம்.”

மணிவாசகம் கிளம்பி வெளியே சென்றதும், சிறிது நேரம் கழித்து தன்னைத் தேற்றிக் கொண்டு அறையை விட்டு வெளியே வந்தாள் ஸ்வேதா.

அர்ஜுனும் சற்று நேரம் ஓய்வெடுத்தவன், மருத்துவமனை போகலாம் என்று கிளம்பி ஹாலுக்கு வர, அவனைப் பார்த்ததும் ஓடிச் சென்று அவனை அணைத்துக் கொண்டு கண்ணீர் சிந்தினாள் ஸ்வேதா.

“ஸ்வேதா… ம்ப்ச்… என்னடா? எதுக்கு அழற? இங்க பாரு? மாமாவப் பாரு?” அவளைச் சமாதானப் படுத்த முயன்றவனுக்குத் தோல்வியே கிட்டியது. எத்தனை வருட நேசமல்லவா அவனுக்குமே லேசாக கண்கள் கலங்கிச் சிவந்தன.

கூடவே வளர்ந்த பாசம் அவள் தவறு செய்த போதும் அவனால் வெறுக்க முடியவில்லை. அவளை சோபாவில் அமர வைத்து சற்று ஆசுவாசப்படுத்திக் கொண்டிருக்க, இந்தக் காட்சியை தன் அறையை விட்டு வெளியே வந்து பார்த்துக் கொண்டிருந்த சுபத்ரா மேலும் குற்றவுணர்ச்சியில் குன்றிப் போனாள்.

‘நான் இங்க வந்திருக்கவேக் கூடாது. என்னாலதான் பாவம் இவங்களுக்குப் பிரச்சனை எப்படியாவது இரண்டு பேரையும் சேர்த்து வச்சிடனும்’ என்று மனதில் எண்ணியபடி மருகி நிற்க, அவளருகே வந்த சரஸ்வதி அவள் மனதில் ஓடும் எண்ணங்களைப் படித்தவராக,

“எல்லாம் சரியாகும் சுபத்ரா. எது நடக்கனுமோ அது நல்லபடியா நடக்கும். கவலைப் படாதே. போய் முகம் கழுவிட்டு சாப்பிட வாம்மா.” என்றழைத்தவர் அர்ஜுனையும் ஸ்வேதாவையும் அழைத்தார்.

உணவு மேஜைக்கு ஸ்வேதாவை சமாதானப் படுத்தி அழைத்து வந்தவன், அவளை அருகில் அமர வைத்துக் கொண்டு உணவைத் தானே பரிமாறினான். சுபத்ராவை அமர வைத்து சரஸ்வதி உணவைப் பரிமாற, மௌனமாக எதிரே தனியாக அமர்ந்து உணவு உண்டவளை மிதப்பாக ஒரு பார்வை பார்த்தாள் ஸ்வேதா.

‘என் மாமன் எனக்குத்தான். உன்னால் ஒன்றும் செய்ய முடியாது’ என்ற பார்வை அது. தேவையே இல்லாமல் சுபத்ராவை உள்ளே இழுத்து பிரச்சனையை ஏற்படுத்திக் கொண்டதே தான்தான் என்பது உறைக்காமல் அவளை விரோதியாக பார்த்து வைத்தாள்.

அவளது பார்வையைக் கண்ட சுபத்ராவுக்கு உண்மையில் ஸ்வேதாவை நினைத்து பாவமாக இருந்தது. ‘உன்னுடைய மாமன் உனக்குதான். நான் என்றுமே போட்டிக்கு வரமாட்டேன்.’ என்று எண்ணிக் கொண்டவள் தலையைக் குனிந்தபடியே அரைகுறையாக உணவைக் கொறித்து விட்டு எழுந்து சென்றாள்.

சரஸ்வதியும் மதிய உணவை முடித்துவிட்டு மருத்துவமனைக்குத் தானும் வருவதாக கூற, அவருக்காக காத்திருந்தான் அர்ஜுன்.

சுபத்ராவையும் கிளம்பச் சொன்ன சரஸ்வதி தானும் கிளம்பி வரும்போது, அலைபேசியில் பேசிக் கொண்டிருந்த அர்ஜுன் பதட்டத்தில் இருந்தான்.

“இதோ… உடனே வரேன் டாக்டர். கிளம்பிட்டேன்.” பதட்டமாக அலைபேசியைத் துண்டித்து விட்டு சரஸ்வதியைப் பார்த்தவன்,

“பாட்டிக்கு ரொம்ப முடியலையாம். உடனே வரச் சொல்றாங்க. போகலாம் பெரியம்மா.”

“காலையில கொஞ்சம் நல்லாதான இருந்தாங்க. என்ன திடீர்னு? கிளம்பலாம் அர்ஜுன்.” என்று அவரும் பதட்டத்துடன் கிளம்ப, சுபத்ராவும் உடன் கிளம்பினாள்.

பாட்டியின் மேல் இருக்கும் கோபத்தில், தனக்கு தலைவலிப்பதாகக் கூறி ஸ்வேதா வரமறுத்துவிட, லோகேஸ்வரியிடம் அவளை பார்த்துக் கொள்ளச் சொல்லிவிட்டு அனைவரும் கிளம்பினர்.

மருத்துவமனையில் ஐசியூவில் மூச்சு விட வெகுவாகப் போராடிக் கொண்டிருந்த அலர்மேல்மங்கையைக் கண்ட அனைவருக்குமே தாங்க முடியாத துயரத்தைத் தந்தது. மருத்துவரின் வார்த்தைக்காக வெளியே தவிப்புடன் காத்திருந்தனர்.

வெளியே வந்த மருத்துவர், “சாரி அர்ஜுன்… அவங்க அவங்களோட கடைசி நிமிஷங்களை எண்ணிக்கிட்டு இருக்காங்க. எங்களால முடிஞ்ச அளவுக்கு முயற்சி பண்ணிட்டோம். உள்ள போய் பாருங்க.”

இதுதான் முடிவு, இப்படிதான் இருக்கும், பாட்டியை காப்பாற்றுவது கடினம் என்று புத்திக்குப் புரிந்தாலும், நிதர்சனத்தை ஏற்றுக்கொள்ள மறுத்தது அர்ஜுனின் இதயம்.

உள்ளே சென்று வேகமாக அவருடைய கைகளைப் பிடித்துக் கொண்டவன் அவரின் நிலை கண்டு உடைந்து போனான். மூச்சு விட முடியாமல் உயிருக்குப் போராடும் நிலையிலும் பேரனின் முகத்தைப் பார்த்தவரின் விழிகள் பிரகாசமாயின.

பேரனின் முகத்தைக் காணவே உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு காத்திருந்தவர் போல, சைகையாலே அர்ஜுனையும் சுபத்ராவையும் அருகே அழைத்தவர், இருவரது கரங்களையும் இறுகப் பற்றிக்கொண்டு கண்கள் சொருக உணர்விழந்தார்.

கண்களில் கண்ணீர் வழிய பாட்டியின் அருகே அமர்ந்திருந்தான் அர்ஜுன். நெடுநேரம் உணர்விழந்த நிலையிலேயே இருந்த அலர்மேல்மங்கையின் உயிர் மெல்ல உடலை விட்டுப் பிரிந்தது.

எதிர்பார்த்திருந்த இறப்புதான் என்றபோதும் அனைவரையும் வெகுவாக பாதித்தது அலர்மேல்மங்கையின் மரணம்.

மிகவும் உடைந்து போய் கதறிய அர்ஜுனைச் சமாதானப் படுத்தவே முடியவில்லை யாராலும்.
ஸ்ரீராமுக்கும் மணிவாசகத்துக்கும் தகவல் தெரிவிக்கப்பட இருவருமே வந்து சேர்ந்தனர். அர்ஜுனை ஸ்ரீராம் தாங்கிக் கொள்ள, மளமளவென அடுத்தடுத்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு அலர்மேல்மங்கையின் உடல் வீட்டுக்கு கொண்டுவரப்பட்டது.

தொழில் வட்டாரத்தில் அலர்மேல்மங்கையை அனைவருக்குமே தெரியும் என்பதால் இறுதியஞ்சலி செலுத்த அனைவருமே திரண்டு வந்திருந்தனர்.

துவண்டு போய் இருந்த அர்ஜுன் அருகே அமர்ந்து அவனுக்கு ஆறுதல் சொல்லிக் கொண்டிருந்தாள் ஸ்வேதா. இந்தப் பாட்டி ஒருநாள் முன்னாடியேப் போய் சேர்ந்திருக்கக்கூடாதா… எங்களுக்கு எந்தப் பிரச்சினையும் இல்லாம இருந்திருக்கும். தேவையில்லாம இந்தக் கல்யாணத்தை முடிச்சு வச்சிட்டுப் போயிருக்கு. என்று உள்ளுக்குள் கருவியபடி அமர்ந்திருந்தாள்.

பார்த்து வெறும் மூன்று நாட்களே ஆகியிருந்தாலும் தன் மீது மிகுந்த பாசம் வைத்திருந்த ஜீவன் என்பதால் பாட்டியின் இழப்பு சுபத்ராவை வெகுவாக பாதித்திருந்தது. சரஸ்வதியின் அருகே அமர்ந்திருந்தவளை, வந்திருந்த உறவினர்கள் யாரென்று கேட்க, சரஸ்வதியும் அர்ஜுனின் மனைவி என்றே அறிமுகப் படுத்தினார்.

அலர்மேல்மங்கையின் ஆசைப்படி நடந்த திருமணம் என்பதாலும் சுபத்ரா மாதவனின் மகள் என்பதாலும் மாதவனை அனைவருக்குமே தெரியும் என்பதாலும் பெரிதாக கேள்வியின்றி போனது.

இறுதிச் சடங்குகளை மணிவாசகம் செய்தாலும், பேரன் என்ற முறையில் அர்ஜுன் செய்ய வேண்டிய சடங்குகளுக்கு மனைவி என்ற முறையில் அனைத்துக்கும் சுபத்ராவே உறவினர்களால் முன்னிருத்தப்பட, ஸ்வேதாவின் கோபம் அதிகரித்த வண்ணம் இருந்தது.

இறுதிச் சடங்குகளை முடித்து அலர்மேல்மங்கையை முறையாக அடக்கம் செய்துவிட்டு வந்தனர்.

ஆளுமையோடு தான் இருந்தவரை அனைத்தையும் ஒழுங்கு மாறாமல் காத்து வந்த அலர்மேல்மங்கையின் சகாப்தம் முடிவுக்கு வந்ததில், இனி என்ன நடக்குமோ என்ற கவலை சரஸ்வதியின் மனதில் நிறைந்து நின்றது.

தொடரும்…