Jeevan Neeyamma–Epi 10

171916099_840757923178210_3424615682123961255_n-49942fcb

Jeevan Neeyamma–Epi 10

அத்தியாயம் 10

மின்சாரத்தைத் தொட்டால்தான் ஷாக்கடிக்கும், உன் பார்வை பட்டாலே ஷாக்கடிக்கும் என்பாள்! யாரவள்? என் ஜீவனவள்!

 

அன்றைய தினத்தில் தமிழ் கழகத்தின் செயற்குழு உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்கும் நிகழ்வு ஏற்பாடாகியிருந்தது. அந்த பெரிய லெக்சர் ஹால் தமிழ் மாணவர்களால் நிரம்பி வழிந்தது. எல்லா பகுல்ட்டியில் இருந்தும் சுமார் இரு நூறுக்கும் மேற்பட்ட மாணவர்கள் குழுமி இருந்தார்கள் அங்கே. பேச்சு சத்தம், சிரிப்பு, கூச்சல், கிண்டல் கேலி என அந்த இடமே அதிர்ந்தது. ஜூனியர் மாணவர்களும் அந்த ஜோதியில் ஐக்கியமாகி இருந்தனர்.  

“ஏன்டி அம்மன், தமிழ் கிளப்ல சேர்ந்தே ஆகனும்னு ரூல்ஸ் எதாச்சும் இருக்கா? ஏன்டி டீ கூட குடிக்க விடாம என்னை இங்க இழுத்துட்டு வந்துருக்க?” என மெல்லிய குரலில் புலம்பினாள் ஹேமா.

“தமிழ் நம்மோட அடையாளம்டி ஜண்டா! அதை அங்கீகரிச்சு நமக்குன்னு ஒரு இயக்கம் குடுத்துருக்காங்க இங்க. உன்னை மாதிரி சலிச்சிக்கிட்டு ஒவ்வொரு தமிழ் மாணவனும் கழகத்துல சேராம இருந்தா, அப்புறம் இதை எதுக்கு தண்டமா நடத்தனும்னு யூனிவர்சிட்டிகாரனுங்க மூடு விழா பண்ணிடுவானுங்க! இந்த கழகத்தின் மூலமா நடத்தப்படற கலை கலாச்சார, இலக்கிய நிகழ்ச்சிங்க, வறுமையில வாடும் தமிழ் ஸ்டூடண்ட்ஸ்கு கொடுக்கப்படற உதவிங்க, மாணவர்கள் திறமைய வளக்க நடத்தப்படற பேச்சுப் போட்டி, பட்டிமன்றம், நாவல் போட்டி எல்லாம் அப்படியே நின்னுப் போயிடும்! அப்படி நடக்க விடலாமா?” என ஆணித்தரமாகக் கேட்டவளை ஆவெனப் பார்த்திருந்தாள் ஹேமா.

“இந்த கலை, கலாச்சாரம், இலக்கியம், ஈர வெங்காயம்லாம் தமிழ் கழகத்துல நடத்தறாங்கன்னு அம்மிணிக்கு எப்படித் தெரியும்?”    

“எங்க ரஹ்மானு சொன்னான்! அதோட எந்த எந்த இயக்கத்துல சேரனும், எதெது எனக்கு சரியா வரும்னு ஒரு லிஸ்ட் கூட போட்டுக் குடுத்திருக்கான். நாம ஆக்டிவா இருந்தாத்தான் அடுத்த வருஷம் கூட ஹாஸ்டல் அலட் பண்ணுவாங்களாம். இல்லைனா யூனிவர்சிட்டி வெளியே நாமளே சொந்தமா ரூம் பார்த்துக்கனுமாம்.  லெக்சர் போனோம், படிச்சோம்னு வாழைப்பழ சோம்பேறியா மட்டும் இருந்தா எந்த சலுகையும் கிடைக்காதாம் இங்க!”

“நெனைச்சேன்! என்னடா நம்ம புள்ள ரொம்ப அறிவா பேசுதேன்னு பார்த்தேன்! அந்த முக்காப்புல்லா கொழுத்திப் போட்ட பட்டாசுக்குத்தான் நீ இங்க வந்து வெடி வெடிக்கறியா?” என நக்கல் செய்தாள் ஹேமா.

“ரஹ்மானுக்கு அப்படிலாம் பட்டப் பேரு வைக்காத ஜண்டான்னு எத்தனை தடவை சொல்லறது?” என கேட்டு அவள் கையை வலிக்கக் கிள்ளினாள் மீனாட்சி.

ரஹ்மான் மீனாட்சியின் சிறு வயது தோழன் என அறிந்தது முதல், தன் நட்பை பங்கு போட இன்னொருவனா எனும் பொறாமையில் பொங்கிக் கொண்டிருந்தாள் ஹேமா. மீனாட்சியோ ரஹ்மானைப் பற்றி கதை கதையாக சொல்லி ஹேமாவின் காதை தீய்க்க, இவளுக்கோ மிளகாயை அரைத்துத் தேய்த்தது போல பற்றி எரிந்தது. ரஹ்மானை குறிப்பிட்டுப் பேசுவதாக இருந்தால், ஏ.ஆர். ரஹ்மான் பாடல்களில் வரும் வரியை வைத்துதான் அவனை நக்கலடிப்பாள் ஹேமா.

வலித்தக் கையை நீவி விட்டுக் கொண்ட ஹேமா,

“எனக்கு இப்பவே ரெண்டுல ஒன்னுத் தெரியனும்! உனக்கு இந்த ஜண்டா முக்கியமா இல்ல அந்த உல்லேல்லே உள்ளே ஒன்னும் இல்லேல்லே ரஹ்மான் முக்கியமா?” என கடுப்பாகக் கேட்டாள்.

லெக்சர் ஹால் நடுவே மற்ற சில சீனியர்களுடன் நிகழ்ச்சியை ஆரம்பிப்பதற்கான ஆயத்த வேலைகளைப் பார்த்துக் கொண்டிருந்த ரஹ்மானின் மேல் மீனாட்சியின் பார்வை படிந்தது. அதை உணர்ந்தது போல சட்டென நிமிர்ந்தவன் கூட்டத்தைத் தன் பார்வையால் ஓர் அலசு அலசி தன்னைப் பார்த்திருந்த மீனாட்சியைக் கண்டுக் கொண்டான். அவளை நோக்கி அவன் மெலிதாய் புன்னகை சிந்த, இவள் பதிலுக்கு முகம் மலர புன்னகைத்தாள்.

“மனுஷன் ஒரு கேள்விய கேட்டுட்டு பத்து நிமிசமா பதிலுக்கு வேய்ட் பண்ணறான்! உனக்கு அந்த மாயா மச்சிந்திராவ பார்த்து அப்படி என்ன ஒரே இளிப்பு?” என படபடத்தாள் ஹேமா.

“மை டியர் ஜண்டா! நீ கேட்ட கேள்விக்கு நான் பட்டுன்னு பதில் சொல்லிடுவேன். அப்புறம் நீ மூஞ்ச தூக்கி ஏழு முழத்துக்கு வச்சிக்குவ! அதான் எதுக்கு வம்புன்னு கம்முன்னு கிடக்கேன்!” என பட்டும் படாமல் ரஹ்மான் தான் முக்கியம் என சொன்ன தோழியை முறைத்தாள் ஹேமா.

“ஆமா ஆமா! நாங்க என்ன செல்லமா வெல்லமா! எங்கள எல்லாம் யாருக்குப் பிடிக்கும்!”

“விட்றி விட்றி! நான் ரஜினி அவன் மம்முட்டினா, நீ விஜயகுமார் நான் சரத்குமார்! போதுமா? மீசையில்லாத நண்பி உனக்கு ரோசம் அதிகம்டி! ரோசம் அதிகம்டி அதை விட பாசம் அதிகம்டி” என மெல்லிய குரலில் மீனாட்சி பாட, இவர்களின் பின்னால் வரிசையில் உட்கார்ந்திருந்த சில பையன்கள்,

“நாம பழகனத மறக்கலியே

அந்த பருவம் இப்போ கிடைக்கலியே” என எழுந்து நின்று சத்தமாய் இவர்கள் இருவரையும் பார்த்துப் பாட, எல்லோரின் பார்வையும் இவர்கள் மேல் பாய்ந்தது.

திருதிருவென முழித்த தோழிகள் இருவரையும் அடக்கப்பட்ட புன்னகையுடன் பார்த்திருந்தான் ரஹ்மான். ஒரு வழியாக எல்லோரையும் அமைதிப்படுத்தி நிகழ்ச்சியும் ஆரம்பமானது.

போன வருடம் துணைத் தலைவனாக இருந்த ரஹ்மானே எல்லோரின் ஏகோபித்த ஆதரவுடன் இந்த ஆண்டுக்கான தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டான். அதன் பிறகு துணைத் தலைவர், பொருளாளர், செயலாளர், செயற்குழு உறுப்பினர் என வரிசையாக தேர்ந்தெடுக்கப்பட்டார்கள். ஐந்து செயற்குழு உறுப்பினர்களாக எப்பொழுதும் ஜூனியர் மாணவர்களையே தேர்ந்தெடுப்பார்கள். அவர்கள் தலையில் தான் மொத்த எடுபிடி வேலையும் வந்து விழும். இந்த வருடம் ஐவரில் ஒருத்தியாக மீனாட்சியின் பெயரும், இன்னும் சில அழகான ஜூனியர் பெண்களின் பெயரும் ஆண்கள் பக்கம் இருந்து வழிமொழியப்பட,

“ஏங்கடா டேய்! பொண்ணு வெள்ளையும் சொள்ளையுமா இருந்தா உடனே ஓட்டுப் போட்டுடுவீங்களே! புத்திசாலியா, பொறுப்பானவளான்னு ஒரு மண்ணும் பார்க்க மாட்டீங்களாடா!” என சீனியர் பெண்களிடம் இருந்து கண்டனம் வந்தது.

“ஐயய்யோ! என்னமோ பொசுங்கற நாத்தம் ஹெவியா வர மாதிரி இல்ல?”

“அது ஒன்னும் இல்லை மச்சான்! சீனியர் மனுஷ கொரிலாங்களுக்கு, ஜூனியர் மனிஷா கொய்ராலாங்க மேல அம்புட்டு பொறாமை!” என இத்தனை நாள் தங்களைக் கண்டுக் கொள்ளாத பெண்களை கலாய்த்து தள்ளினார்கள் சீனியர் ஆண்கள்.

“யாருடா மனுஷ கொரிலா? நாங்களா? அத தேமல் வந்த தேவாங்கு மாதிரி இருக்கற நீங்க எல்லாரும் சொல்லக் கூடாது” என பெண்கள் பக்கம் பொங்க, ஒரே ரணகளமாகப் போனது ஓட்டெடுப்பு.

ஒரு வழியாக எல்லோரையும் அமைதிப்படுத்தி, நிகழ்ச்சியை நிறைவு செய்தனர் பழைய கமிட்டி மெம்பர்ஸ்.

புதிய செயற்குழுவில் நியமிக்கப்பட்ட ஆட்களுக்கு பழைய கமிட்டி மெம்பர்களோடு சின்னதாய் மீட்டிங் இருக்க, ஹேமாவை வெளியே காத்திருக்க சொல்லிவிட்டு மற்றவர்களுடன் சேர்ந்துக் கொண்டாள் மீனாட்சி. கமிட்டி மேம்பர்ஸ் ஒருத்தருக்கு ஒருத்தர் அறிமுகமாகி, சென்ற வருடம் என்ன நிழச்சிகள் நடத்தினார்கள், இந்த வருடம் என்ன நடத்தலாம், கையிருப்பில் இருக்கும் நிதி எவ்வளவு என முக்கியமான விஷயங்களை சேர்ந்து விவாதித்தார்கள். விவாதம் முடிந்து தங்களது பொறுப்புகளை புதியவர்களிடம் ஒப்படைத்து விட்டு பழைய குழுவினர் ஒதுங்கிக் கொண்டனர். புதிய செயற்குழு தங்களது திட்டங்களை அலசி ஆராய அடுத்து எப்பொழுது சந்திக்கலாம் என ஒரு நாளைத் தெரிவு செய்து விட்டு கலைந்துப் போனார்கள்.

மீனாட்சியின் அருகே வந்த ரஹ்மான்,

“எடுபிடியா டீம்ல செலெக்ட் ஆனதுக்கு வாழ்த்துக்கள் மீனாம்மா” என புன்னகையுடன் சொன்னான்.

“நன்றி தானைத் தலைவரே!” என இவளும் புன்னகையுடன் பதிலளித்தாள்.

அவர்களுடன் வந்து சேர்ந்துக் கொண்ட லோகா,

“எனக்குத்தான் நீ நன்றி சொல்லனும் மீனாம்மா!” என்றான்.

“லோகாண்ணா! மீனாட்சின்னு கூப்புடுங்க இல்லைன்னா அம்மன்னு கூப்பிடுங்க! மீனாம்மான்னு கூப்பிட வேணாம் ப்ளீஸ்!” என புன்னகையுடன் சொன்னாலும் அதில் அழுத்தம் இருந்தது.

“சரி சரி! இவன் கேட்டுக்கிட்டான்னு உன் பேர நான் தான் கூவி கூவி சஜஸ்ட் பண்ணேன் மீனாட்சி” என்றான் லோகா.

“இப்படி எதாச்சும் பதவில இருந்தாத்தான் நெறைய கத்துக்க முடியும். ஒரு விஷயத்த எப்படி மேனேஜ் செய்யறது, வழி நடத்துறது, யார் கிட்ட எப்படி பழகறது, கண்ட்ரோல எப்படி நம்ம கையில வச்சிக்கறதுன்னு ஒவ்வொரு ஈவண்ட் நடத்தும் போதும் புதுசு புதுசா கத்துப்போம். படிச்சு முடிச்சு வெளிய போகிறப்போ உனக்கு இந்த ஸ்கில்லாம் ரொம்ப உதவியா இருக்கும்னு தான் சேர்த்து விட்டேன்” என்றான் ரஹ்மான்.

அவர்கள் அருகே வந்து சேர்ந்த ஹேமா,

“அம்மன், போலாம் வா! எனக்குப் பசிக்குது” என ரஹ்மானைக் கண்டுக் கொள்ளாமல் மீனாட்சியை அழைத்தாள்.

“நாங்களும் கண்டீனுக்கு சாப்பிடத்தான் போறோம்! எங்க கூட ஜாய்ன் பண்ணிக்குங்க ஹேமா சிஸ்டர்” என ரஹ்மான் அழைக்க,

“சம்பா சம்பா, லம்பா லம்பா கூடலாம் நாங்க ஒன்னா உட்கார்ந்து சாப்பிடமாட்டோம்! வாடி போலாம்” என தோழியின் கையைப் பிடித்து இழுத்தாள் ஹேமா.

அவளது சிறுபிள்ளை செயலில் சிரிப்பு வந்தது ரஹ்மானுக்கு.

“ஹோய் நாலு கண்ணு! என்ன பேச்சுல கீறல் விழுது? சீனியர்னு ஒரு மரியாதை வேணாம்?” என லோகா சவுண்ட் விட அவனை மேலிருந்து கீழ் வரை பார்த்தவள்,

“பேச்சுல தானே கீறல் விழுந்துருக்கு! மூஞ்சுல கீறல் விழறதுக்குள்ள ஓடிப் போயிடு! நாலு கண்ணாம் நாலு கண்ணு! ஓணானுக்கு ஒன்னு விட்டத் தம்பி மாதிரி மூஞ்ச வச்சிக்கிட்டு மத்தவங்கள பாத்து கிண்டல் பண்ணறது!” என திருப்பி பதில் கொடுத்தாள் இவள்.

“ஹேய்ய்ய்!!!! யாரப் பார்த்து ஓணான் மூஞ்சுன்ன!!!” என அவனும் எகிற,

“உன்னைப் பார்த்துதான்” என இவளும் எகிற,

“டேய் விடுடா லோகா!” என ரஹ்மான் நடுவில் வர,

“எந்த சிக்கு புக்கு ரயிலையும் இங்க ரெப்ரீ வேலைப் பார்க்க கூப்பிடல!” என ஹேமா முகத்தைத் திருப்ப,

“டீ ஜண்டா! ரஹ்மானு! லோகாண்ணா! இப்போ சண்டைய நிப்பாட்டிட்டு சாப்பிட வரீங்களா இல்லை நான் பாட்டுக்கு பட்டினியா கிளம்பி போகவா?” எனும் மீனாட்சியின் சத்தத்தில்தான் கப்சிப் ஆகினர் மூவரும்.

நால்வரும் எந்தப் பேச்சும் இல்லாமல் கண்டீனுக்கு நடந்துப் போனார்கள். அங்கே ஒரு மேசையைத் தேடி பெண்களை அமர வைத்த ரஹ்மான், என்ன உணவு வேண்டும் என கேட்டு வாங்கி வந்துக் கொடுத்தான். லோகாவோ நால்வருக்கும் குடிக்க பானம் வாங்கி வந்தான்.

பொதுவான பாட சம்பந்தப் பட்ட விஷயங்களைப் பேசியபடியே உணவு உண்டனர் நால்வரும்.

“ரஹ்மானு, எனக்கு ரம்லீ பர்கர்(மலேசிய பிராண்ட் பர்கர்) வாங்கிக் குடு! நைட்டு பசிக்கும் போது சாப்பிட்டுக்குவேன். அப்புறம் ஒரு டேரி மில்க் சாக்லேட் வேணும்! அங்கிருக்கறதுலயே பெரிய பாரா பார்த்து வாங்கிட்டு வா” என பட்டியலிட்ட தன் தோழியை ஆச்சரியமாகப் பார்த்தாள் ஹேமா.

அவர்கள் பழக ஆரம்பித்த இத்தனை நாட்களில் இப்படி உரிமையாக எதையுமே அவளிடம் கேட்டதில்லை மீனாட்சி. நல்லதாய் எதையும் சாப்பிடாமல் பார்த்து செலவு செய்கிறாளே என லீவ் முடிந்து வீட்டிலிருந்து வரும் போது கெண்டக்கி சிக்கன் வாங்கி வந்துக் கொடுத்தால் கூட தன் பங்கு பணத்தைக் கொடுத்து விட்டுத்தான் சாப்பிடுவாள். அவ்வளவு சுயமரியாதைப் பார்ப்பவள், ரஹ்மானிடம் காட்டும் உரிமை உணர்வை உள் வாங்கிக் கொண்ட ஹேமாவுக்கு நன்றாகவே புரிந்தது அவர்களின் பிணைப்பு.

‘ஹ்ம்ம்! நாம ஆரோத்தானே!’ என மனதில் முனகிக் கொண்டாள் ஹேமா.   

அவள் கேட்டதை வாங்கிக் கொடுக்க எழுந்துப் போனான் ரஹ்மான். பர்கர் ரெடியாக காத்திருந்தவன், மீனாட்சியின் சிரிப்பு சத்தத்தில் அவளைத் திரும்பிப் பார்த்தான். லோகா சொன்ன ஏதோ ஒரு ஜோக்குக்கு கன்னங் குழிய நகைத்தவளைப் பார்த்தவனுக்கு தானாக புன்னகை மலர்ந்தது. தங்களுக்கு நடுவே இத்தனை வருட இடைவெளி என்பது இல்லவே இல்லை என்பது போல அவனிடம் அவள் காட்டும் அன்பு, உரிமை உணர்வு, கோபம், ரஹ்மானு எனும் அழைப்பு, முறைப்பு எல்லாம் அப்படியேத்தான் இருந்தது.

“சைத்தான்!” என செல்லமாக முணுமுணுத்தான் ரஹ்மான்.     

அன்று ஜபம் போல தன் பேரை சொல்லித் தேம்பிக் கொண்டிருந்தவளை கண் கொண்டு பார்க்க முடியவில்லை ரஹ்மானால். முகம் மூக்கெல்லாம் சிவந்துப் போய் கண்களில் மாலை மாலையாக கண்ணீர் ஊற்ற அவன் முகத்தையே பார்த்தப்படி நின்றவளின் கண்ணீரைத் துடைக்க கையைத் தூக்கியவன் பட்டென இறக்கிக் கொண்டான். தொட்டுத் தோள் கொடுக்க அவள் இன்னும் அவனது குட்டித் தோழியில்லையே! வளர்ந்து நிற்கும் பெரிய பெண்ணாயிற்றே!

“மீனாம்மா, அழாதே ப்ளீஸ்! கண்ணைத் துடை” என சொன்னவனின் குரலும் கரகரத்துத்தான் இருந்தது.

அதற்குள் அவர்கள் அருகே வந்திருந்தார்கள் லோகாவும் ஹேமாவும். தோழியைத் தன்னருகே திருப்பி அணைத்துக் கொண்ட ஹேமா,

“அழாதே அம்மன்! அதான் பைக் இடிக்கறதுக்குள்ள சீனியர் பிடிச்சு இழுத்துட்டாங்கல்ல!” என சமாதானம் செய்தாள் தோழியை.

“இது இது…இந்த சீனியர் வேற யாரும் இல்ல, எங்க ரஹ்மானு! இனிமே எங்க நான் பார்க்கவே மாட்டேனோன்னு ஏங்கித் தவிச்ச எங்க ரஹ்மானு” என்றவளுக்கு இன்னும் அழுகை முட்டியது.

தன்னைப் பார்க்க ஏங்கி இருக்கிறாள் எனும் அவள் வார்த்தைகள், காய்ச்சல் கண்டு கசந்து வழிந்த வாயில் இனிப்பு ஜீராவைத் தடவியது போல நெஞ்சில் தித்திப்பாய் இறங்கியது ரஹ்மானுக்கு.

“மறக்கல! என்னை மறக்கல” என முணுமுணுத்தவன்,

“உன் கிட்ட பேசனும் மீனாம்மா! என் கூட வா!” என்றான்.

ஹேமாவைப் பார்த்து,

“சிஸ்டர், கொஞ்சம் வெய்ட் பண்ணுங்க, வந்துடுவாங்க” என சொல்லிவிட்டு நடந்தான்.

சற்றுத் தள்ளி இருந்த மரத்தின் கீழ் போடப்பட்டிருந்த பெஞ்சில் போய் அமர்ந்த இருவரையும் பார்த்தப்படி நின்றனர் லோகாவும், ஹேமாவும்.

எடுத்த உடனே,

“ஏன் லெட்டர் போடல?” எனத்தான் கேட்டான் ரஹ்மான்.

மீனாட்சியின் முகம் சட்டென இறுக்கமானது. அவர்கள் கடந்து வந்தது பூப்பாதை இல்லையே, முட்பாதையல்லவா அது!

புறங்கையால் கண்ணீரைத் துடைத்துக் கொண்டவள்,

“மனுஷன் திட்டம் போடுவான், ஆனா கடவுள் தான் நடத்தி வைப்பான்னு சொல்வாங்க! பினாங்குல எதிர்காலம் பிரகாசமா இருக்கும்னு, இருக்கறத எல்லாம் வித்திட்டு எங்கள அழைச்சிட்டுப் போனாரு அப்பா. சொந்தம்னு நம்பி நாங்க போன ஆளு, நம்ப வச்சி கழுத்த அறுத்துட்டாரு. ஒருத்தர் கீழ வேலை செய்யறதுக்கு பதிலா நாமளே லாரி வாங்கி ஓட்டுவோம்னு அப்பா வச்சிருந்த பணத்த வாங்கிட்டு கண் காணாமப் போயிட்டாரு. எங்கப்பாவ பத்தி உனக்குத் தெரியும்தானே எவ்வளவு நேர்மையானவருன்னு! தன்னைப் போலவே மத்தவங்களும் இருப்பாங்கன்னு நம்பி நட்டாத்துல நின்னாரு அந்த மனுஷன்” என சொன்னவளுக்குத் தொண்டை அடைத்தது.

தனது பேக்கில் இருந்து வாட்டர் பாட்டிலை எடுத்துக் கொடுத்தவன்,

“குடி மீனாம்மா” என்றான்.

அதை வாங்கிப் பருகியவள், பாட்டிலைத் தங்களுக்கு நடுவே வைத்தாள்.

“இங்கல்லாம் வீடு கிடைக்க கஸ்டம். கொஞ்ச நாளைக்கு இந்த செதிங்கான்(புறம்போக்கு நிலத்தில் வீடு கட்டி வசிப்பது. பெரும்பாலும் பலகை வீடுதான்) வீட்டுல இருங்கன்னு எங்கள ஒரு இடத்துல குடி வச்சான் அந்த சொந்தக்காரன். ரயில் போகற தண்டவாளம் இருக்கும்ல, அது பக்கத்துல இருக்கற கொஞ்ச நிலத்துல வரிசையா பத்து பதினஞ்சு வீடு அப்படி கட்டிப் போட்டிருந்தாங்க. எங்கள மாதிரி இன்னும் பல குடும்பம் அங்க தங்கி இருந்தோம். கரண்டு இல்ல, ஜெனரெட்டர்தான். அது பழுதா போச்சுன்னா கும்மிருட்டுத்தான். எஸ்டேட்ல நானே ராஜா நானே மந்திரின்னு வாழ்ந்த நாங்க அந்த வீட்டுல என்ன பாடுபட்டிருப்போம்னு யோசிச்சுப் பாரேன். ரயிலு போனா வீடே கடகடன்னு ஆடும்! எனக்கு ரொம்ப பயமா இருக்கும் ரஹ்மானு, எங்க கூரை என் தலையில இடிஞ்சு விழுந்துடுமோன்னு.”

அவர்களது வாழ்க்கை திசை மாறிப் போனதை கேட்ட ரஹ்மானுக்கு உள்ளுக்குள் அவ்வளவு வலித்தது. எங்கோ ஒரு மூலையில் சந்தோஷமாக இருப்பார்கள் எனும் அவன் எண்ணம் பொய்த்துப் போயிருந்தது.

“பட்ட காலிலே படும், கெட்ட குடியே கெடும்னு சொல்லுவாங்க ரஹ்மானு! எங்களுக்கும் அப்படித்தான் ஆச்சு. அந்த வீட்டுக்குப் போன ஒரே வாரத்துல, ஒரு நாள் ராத்திரி நாங்க இருந்த வரிசை வீட்டுல ஒன்னு தீப்பிடிச்சு எங்க வீடெல்லாம் பரவிடுச்சு. தூங்கிட்டு இருந்த எங்களுக்கு எதைக் காப்பாத்த எத விடன்னு தெரில! பலகை வீடுனால படபடன்னு பத்திக்கிச்சு! எங்க உசுர காப்பாத்திக்கறது தான் முக்கியம்னு அப்பாவும் அம்மாவும் எங்கள இழுத்துட்டு வெளிய ஓடனாங்க! அப்படி இருந்தும் கூட எனக்கு தீக்காயம் பட்டிருச்சு” என கை முட்டிக்கு மேல் துப்பட்டா மறைத்திருந்த தீக்காயத்தைத் தன் சின்ன வயது நண்பனிடம் காட்டினாள். (இந்த ரயிலடி வீடு, நெருப்பு எதுவும் கற்பனை இல்ல. நெஜமா எனக்கு தெரிஞ்சவங்களுக்கு நடந்தது. அந்த டைம்ல எஸ்டேட்ட விட்டு பொழப்புத் தேடி பட்டணத்துக்கு வந்த மக்கள் பட்டப்பாடு சொல்லில் வடிக்க முடியாதது.)

“ரொம்ப வலிச்சிச்சு ரஹ்மானு” என சலுகையாய் தன் நண்பனிடம் சொன்னவளின் உதடுகள் இப்பொழுதுதான் அந்த விபத்து நடந்தது போல அழுகையில் பிதுங்கியது.

அவளது சிவந்த கையில் கருப்பான வடுவாய் மாறிப் போயிருந்த அந்தக் காயத்தைப் பார்த்தவனுக்கு, அதை தடவிக் கொடுத்து,

“ஒன்னும் இல்லடா மீனாம்மா! நான் இருக்கேன்ல, அழாதே!” என ஆறுதல் சொல்ல வேண்டும் போல பரபரத்தது.

சட்டென எழுந்து நின்றவன், கைகளை பாண்ட் பாக்கேட்டில் நுழைத்துக் கொண்டான்.

“அப்புறம் என்னாச்சு மீனாம்மா?” என கேட்டவனின் குரலும் முகமும் கூட கலங்கி இருந்தது.

“இருந்த எல்லாத்தையும் இழந்துட்டு நடுத்தெருவுல நின்னோம்! நீ எழுதிக் குடுத்த அட்ரஸ ஆறுண்ணா அவன் புக்குல பத்திரமா வச்சிருந்தான். எல்லாம் தீக்கு இரையாயிடுச்சு. கவர்மேண்ட் ஆளுங்க வந்து எங்கள எல்லாம் ஒரு மண்டபத்துல தங்க வச்சாங்க! மாத்திக்கத் துணி கூட இல்ல! மறுநாள் டோனேஷன்ல துணி, போர்வை, சாப்பாடுலாம் கிடைச்சது! அப்பத்தா ரொம்பவே ஓஞ்சிப் போயிட்டாங்க! அந்த மண்டபத்துலயே ரெண்டு வாரம் இருந்தோம். அப்புறம் கவர்மெண்ட்ல எங்களுக்கு வாடகைக்கு ரூமா மூறா(குறைந்த விலை வீடு) பார்த்துக் குடுத்தாங்க! பெரியண்ணன் படிக்கறத விட்டுட்டு கம்பேனி வேலைக்குப் போனாங்க. அப்பாவும் அங்க இங்க தேடி ஒரு கம்பேனில லோரி ஓட்டற வேலைக்குப் போனாங்க! அம்மா சீனன் கடையில மங்கு(பாத்திரம்) கழுவுற வேலைப் பாத்தாங்க! நானும் ஆறுண்ணானும் மட்டும்தான் ஸ்கூல் போனோம். அந்த கலவரத்துலயும் உன் அட்ரஸ் எரிஞ்சுப் போச்சு, நாம நேருல போய் ரஹ்மான பார்த்துட்டு வருவோம்னு ஆறு அண்ணன் அப்பாட்ட கேட்டுட்டே இருந்தான். அவ்ளோ பொறுமையா போற அப்பாவுக்கு எங்கிருந்து அவ்வளவு கோபம் வந்துச்சோ தெரியல! நாம இருக்கற நிலைமைப் புரியாம ரஹ்மானு ரஹ்மானுன்னு ஏன்டா உயிர விடறன்னு போட்டு அடி அடின்னு அடிச்சிட்டாரு. தடுக்கப் போன எனக்கும் அடி விழுந்துச்சு”

பிள்ளைகள் மேல் அவ்வளவு பாசம் வைத்திருக்கும் அழகுவே கை நீட்டி இருந்தார் என்றால் அவர் எவ்வளவு மன அழுத்தத்தில் இருந்திருப்பார் என புரிந்தது ரஹ்மானுக்கு.

“ஆறுண்ணா அதுக்கு மேல ஒரு வார்த்தை ஒன்னைப் பத்தி பேசனது இல்ல ரஹ்மானு! நாங்க ஒரு நெலைக்கு வந்ததுக்கு அப்புறமா, அப்பாவே உன் வீட்டுக்குப் போகலாம்னு கூப்டாரு! வேணாம்னு சொல்லிட்டாங்க ஆறுண்ணா! ஏன்னு எனக்குத் தெரியல. ஆனா நான் யூனிவெர்சிட்டிக்கு எழுதிப் போட்டப்போ எந்த இடத்துல படிக்க வேணும்னு கேட்ட கேள்விக்கு, சிலாங்கூர்தான்(மாநிலம்) முதல் இடமா தேர்வு செஞ்சேன். இங்க கிடைச்சா, எப்படியும் நம்ம ஊருக்கு உன்னைத் தேடி வந்து பார்க்கனும்னு நெனைச்சேன்.”

தன்னைத் தேடி வருவேன் என மீனாட்சி சொன்னது அவ்வளவு ஆறுதலாய் இருந்தது ரஹ்மானுக்கு.

“இப்போ வீட்டு நிலவரம் எப்படி இருக்கு மீனாம்மா? ஆறு என்ன செய்யறான்?” என அக்கறையாக விசாரித்தான் இவன்.

“இப்போ ஓரளவு தலை நிமிர்ந்துட்டோம். ஆறுண்ணா பாலிடெக்னில படிச்சிட்டு ஒரு கம்பேனில மேய்ண்டேனென்ஸ் வேலைப் பார்க்கறாங்க! பெரிய அண்ணாத்தான் படிக்க வச்சாங்க. முருகண்ணாக்கு கல்யாணம் ஆகி, எனக்கு ஒரு குட்டி மருமகன் இருக்கான்.”

“அப்பத்தா?”

“அந்த ஓல்டிக்கு என்ன? இன்னும் என்னை வம்பிழுத்துக்கிட்டு கன்னு மாதிரி இருக்கு!” என புன்னகைத்தாள்.

“மீனம்மா!”

“சொல்லு ரஹ்மானு”

“என்னைப் பார்த்தத வீட்டுல யாரு கிட்டயும் இப்போதைக்கு சொல்ல வேண்டாம்”

“ஏன், ஏன், ஏன்?”

“எனக்கு ஆறுவ நேருல போய் சர்ப்ரைஸ் பண்ணனும்! மனசு விட்டுப் பேசனும்! அதனால இப்போதைக்கு சொல்லிடாதே ப்ளிஸ்”

அவர்கள் ஓரளவு நல்ல நிலையை எட்டியும் கூட, ஏதோ ஒரு காரணத்துக்காகத் தன்னை தவிர்த்திருக்கிறான் நண்பன். அதை நேரில் பார்த்துப் பேசி தெளிவு படுத்திக் கொண்டு, தர்ம அடி கொடுக்க வேண்டும் என மனதில் முடிவெடுத்துக் கொண்டான் ரஹ்மான்.

“சரி ரஹ்மானு”

அன்றிலிருந்து மீனாட்சியைத் தானாகத் தேடிப் போகா விட்டாலும், அவளை எங்கு பார்த்தாலும் நின்று பேசுவான், உணவு வாங்கிக் கொடுப்பான், எதாவது தேவையா என கேட்டு அதையும் வாங்கிக் கொடுப்பான். நண்பனாய் இருந்த ரஹ்மான் மீனாட்சிக்கு வழிகாட்டியாய், ஆசானாய், நலம் விரும்பியாய், அன்னப்பூரணியாய் என மொத்தமுமாய் மாறிப் போனான்.

பர்கரை வாங்கிக் கொண்டு வந்தவனுக்கு பெண்கள் இருவரின் கோலாலம்பூர் சுற்றிப் பார்க்கப் போகும் பிளான் காதில் விழுந்தது.

“நானும் ஜாயின் பண்ணிக்கவா?”

 

(ஜீவன் துடிக்கும்..)  

(அடுத்த எபில 98ல் கோலாலம்பூர் எப்படி இருந்ததோ, அப்படியே சுத்திப் பார்ப்போம். போன எபிக்கு லைக் கமேண்ட் போட்ட அனைவருக்கும் நன்றி)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!