Jeevan Neeyamma–Epi 11

171916099_840757923178210_3424615682123961255_n-51a2196e

Jeevan Neeyamma–Epi 11

அத்தியாயம் 11

கடல் மணலில் உன் பெயர் எழுத மாட்டேன். அதை அலை அழித்துப் போனால், நான் அலமலந்துப் போவேன் என்பாள்! யாரவள்? என் ஜீவனவள்!

 

“கடைசி நேரத்துல இப்படித்தான் காலை வாரி விடுவியா ஜண்டா? எவ்ளோ ஆசையா இருந்தேன் தெரியுமா? எல்லாம் போச்சு!” என சோகமாய் தன் கட்டிலில் போய் குப்புறப் படுத்துக் கொண்டாள் மீனாட்சி.

நடந்து வந்து அவள் கட்டிலில் அமர்ந்த ஹேமா,

“நான் என்னடி செய்ய? இந்த வாரம் மஞ்சள் சிக்னல் டைம்டி! அதான் ஊர் சுத்த போகலாம்னு ப்ளான்லாம் பக்காவா போட்டேன்! பழுதாப் போன ட்ராபிக் லைட்டு மாதிரி மஞ்சள் விழ முன்னமே பச்சக்குனு ரெட் சிக்னல் வந்து விழும்னு கனவா கண்டேன். இந்த வண்டி டோட்டல் டேமேஜாகி கிடக்கு. சத்தியமா இன்னிக்கு ஒரு நாள் எங்கயும் நகராது” என தனக்கு மாதாந்திர நிகழ்வு வந்ததை கடுப்புடன் விவரித்தாள் ஹேமா.

“வயிறு ரொம்ப வலிக்குதாடி? இரு, அம்மா அரைச்சுத் தூளாக்கிக் குடுத்த வெந்தயம் இருக்கு. சுடுதண்ணில கலந்து எடுத்து வரேன்! வலி குறையும்” என கட்டிலில் இருந்து எழுந்து சென்றாள் மீனாட்சி.

கோலாலம்பூர் சுற்றிப் பார்க்கப் போவதை எவ்வளவு எதிர்ப்பார்த்திருந்தாள் மீனாட்சி என ஹேமா அறிந்து தான் இருந்தாள். அடுத்த வாரம் கூட போகலாம்தான், ஆனால் ஆசையாக காலையிலேயே எழுந்து கிளம்பி நின்ற தோழி தன்னால் ஏமாந்துப் போவதை விரும்பவில்லை இவள். மாதவிடாயின் முதல் நாள் என்பது எப்போதும் ஒரு சவால் இவளுக்கு. நடக்கக் கூட முடியாத அளவுக்கு வயிற்று வலியும், கால் வலியும் பாடாய் படுத்தும். முதலில் விஷயம் அறிந்து வருத்தமாய் இருந்த மீனாட்சி, தனக்கு வலி என்றதும் அதை களைய விளைந்ததை நினைத்து மென்னகைப் பூத்தது இவளுக்கு.

மீனாட்சி கொடுத்த வெந்தய நீரைக் குடித்தவள்,

“கிளம்பி போ” என்றாள்.

“நீ இல்லாம எப்படி?” என தயங்கினாள் மீனாட்சி.  

“அதான் அன்னைக்கு நான் வேணான்னு கண்ணக் கண்ணக் காட்டியும், அந்த எர்ராணி குரதாணி கோபாலா நம்ம கூட வரேன்னு கேட்டதும் தலையை சரின்னு ஆட்டிட்டியே! போ அவன் கூட போய்ட்டு வா!”

தன் தோழியை ரஹ்மானோடு அனுப்பி வைப்பதில் சுத்தமாக இஸ்டமில்லாவிட்டாலும் அவளைத் தன்னோடு இருத்திக் கொள்வது பக்கா சுயநலமாகத் தோன்றியது ஹேமாவுக்கு.

“ஜண்டா பேயே! நான் மட்டும்தான் ரஹ்மான வாடா போடான்னு சொல்வேன். ஏன்னா அவன எனக்கு சின்னப் புள்ளையில இருந்தே தெரியும். ஆறுண்ணா கூட சேர்ந்து அப்படியே கூப்டு பழகிடுச்சு. நான் அப்படி கூப்பிடறதால நீயும் கூப்பிடலாம்னு நெனைக்காதே! அவனுக்கு நம்மளோட வயசு கூட. ஒழுங்கா மரியாதைக் குடு” என படபடத்தாள் மீனாட்சி.

“சரி சரி, காது கிட்ட கத்தாதே! இனிமே அந்த இசையை சீனியர் சார்னே கூப்டு தொலைக்கறேன். இப்போ தயவு செஞ்சு கிளம்பு! பஸ் ஸ்டாப்ல நமக்கு காத்திருப்பாரு அந்த ஐர ஐர ஐயரப்பா!”

“அடச்சீ! உன்னைத் திருத்தவே முடியாதுடி!” என கடிந்துக் கொண்ட மீனாட்சி கைப் பையை எடுத்துக் கொண்டு கிளம்பினாள்.

“போடி போடி! உன்னால திருத்த முடியலைன்னா உங்க ஆறுண்ணாவ என்னைக் கட்டிக்கிட்டு திருத்த சொல்லு” என தோழியின் குரல் கதவைத் தாண்டி கேட்க, புன்னகையுடனே நடையைக் கட்டினாள் மீனாட்சி.

அன்று ரஹ்மான் இவர்களோடு இணைந்துக் கொள்கிறேன் என கேட்க, உடனே சரியென்று விட்டாள் மீனாட்சி. இப்பொழுது தாங்கள் வரவில்லை என அவனிடம் சொல்லக் கூட வழியில்லை. பஸ் நிறுத்ததுக்குப் போய் நேரிடையாக சொல்லி விட்டு வரலாம் எனதான் கிளம்பி இருந்தாள் மீனாட்சி.

தோழி சொன்னது போல ரஹ்மானோடு தனியாக கோலாலம்பூர் சுற்றிப் பார்க்கத் தோன்றவில்லை அவளுக்கு. அண்ணன்களோடு கூட தனியாக இப்படியெல்லாம் சென்றது இல்லை. வெளியே தெருவே போவதென்றால் அப்பாவுடன் சென்று மட்டுமே பழக்கம். அவர்கள் வசிக்கும் குட்டி டவுன், வருடத்திற்கு ஒரு முறை குடும்பத்தோடு சென்று வரும் பத்து பெரெங்கி கடற்கரை இவ்வளவுதான் அவளது வெளி உலக அறிமுகம். அதனால்தான் இங்கே வந்து தனியாக இருக்கும் நிலை வந்தப் போது அவ்வளவு கலக்கம் அவளுள்ளே!   

கிளி பச்சை நிறத்தில் ஓர் அழகான சுடிதார் அணிந்து, ஒரு பக்கத் தோளில் கைப்பைத் தொங்க, கொஞ்சம் முடி எடுத்து அதை பின்னால் க்ளிப் போட்டு மற்றதை ப்ரீ ஸ்டைலாக விட்டு, தன்னை நோக்கி நடந்து வரும் மீனாட்சியைப் புன்னகையுடன் எதிர் கொண்டான் ரஹ்மான். அவனை நெருங்கியவள்,

“ரஹ்மானு” என மெல்ல மூச்சு வாங்கினாள்.

அவன் காத்திருப்பானே என வேகமாய் நடந்து வந்ததால் மூச்சிரைத்தது பெண்ணுக்கு.

“ஏன், ஏன் இந்த அவசரம்! மெல்ல நடந்து வர வேண்டியது தானே!”

“அத விடு! ரஹ்மானு, ஹேமாக்கு உடம்பு சரியில்ல! அதனால நாங்க இன்னிக்குப் போகல! அத சொல்லத்தான் வந்தேன்”

அவள் முகத்தை ஆழ்ந்து பார்த்தவன், ஒன்றும் பேசாமல் திரும்பி நடந்தான்.

அவனின் அமைதியில் என்னவோ சரியில்லை என புரிய,

“ஹேய் நில்லு ரஹ்மானு! ஒன்னும் சொல்லாம அப்படியே போற!” என அவன் பின்னே ஓடினாள் இவள்.

அவன் நிற்காமல் நடக்க, அவன் முன்னே ஓடிப் போய் நின்றாள் மீனாட்சி.

அமைதியாக அவளைப் பார்த்தவன்,

“என்னை நம்பலல?” என கேட்டான்.

“என்ன பேத்தற நீ!”

“ஹேமா வரலன்னா, என் கூட நீ வர மாட்டியா மீனாட்சி அம்மன்? அப்படி என் மேல நம்பிக்கை எல்லாம போகற அளவுக்கு நான் என்ன தப்பா நடந்துகிட்டேன்?”

எப்பொழுதும் அவளிடம் பேசும் போது அவன் குரலில் அப்படி ஒரு மென்மை இருக்கும். அது காணாமல் போயிருந்தது அன்று. இறுக்கத்தோடு அவன் சொன்ன மீனாட்சி அம்மன் இவளுக்குப் பிடிக்கவேயில்லை. ரஹ்மான் அப்படி கூப்பிட்டது அவ்வளவு கோபத்தைக் கொடுத்தது மீனாட்சிக்கு.

“பைத்தியம் மாதிரி பேசாதே ரஹ்மானு! உன்னை நம்பாம நான் வேற யார நம்புவேன்! அப்பாவத் தவிர வேற ஆம்பளைங்க கூட நான் தனியா எங்கயும் போய் பழக்கம் இல்லடா! ஆறுண்ணா கூட போகக் கூட அம்மா விட மாட்டாங்க. ஒரு பொண்ணும் பையனும் ஒன்னா நடந்துப் போனா கூடப் பிறந்தவங்களா இருக்கும்னு எத்தனை பேரு நெனைக்கறாங்க? எல்லாம் தப்பாத்தானே பார்க்கறாங்கன்னு சொல்லுவாங்க அம்மா. அப்படியே பழகிடுச்சு, அதான் வரலன்னு சொன்னேன். உடனே பெரிய இவன் மாதிரி நம்பிக்கை தும்பிக்கைன்னு பேசாதே!” என்றவளுக்கு கோபத்தில் குரல் கம்மியது.

இரு பெண்கள் தனியாகப் போகிறார்களே, அவர்களுக்குப் பாதுகாப்பாக போகலாம் என எண்ணிதான் இவர்களோடு வருவதாக கேட்டான் ரஹ்மான். அன்றிலிருந்து அந்த இடத்துக்குப் போக வேண்டும், இது சாப்பிட்டுப் பார்க்க வேண்டும் என பின்னிப் பின்னி அதையே பேசிய மீனாட்சியின் உற்சாகம் இவனையும் தொற்றி இருந்தது. கோலாலம்பூரின் இண்டு இடுக்கெல்லாம் சுற்றி இருந்தவன் தன் தோழிக்கும் அதையெல்லாம் காட்டி மகிழ வேண்டும் என ஆர்வமாக இருந்தான். அவளோ ஹேமா இல்லாமல் தன்னோடு வர பிரியப்படாதது, தன் மேல் நம்பிக்கையின்மையைக் காட்டுகிறது என அப்படி ஒரு கோபம் வந்திருந்தது ரஹ்மானுக்கு.

மீனாட்சியின் விளக்கத்துக்குப் பிறகு அவள் நிலைப் புரிய,

“சரி விடு மீனாம்மா! அடுத்த தடவை போகலாம்” என்றான்.

“இப்போ போகலாம்”

“நான்தான் பரவாயில்லன்னு சொல்லிட்டேன்ல”

“போகலாம்! போகனும்! இன்னிக்கே இப்பவே!” என்றவளின் குரலில் பிடிவாதம் அமர்ந்திருந்தது.

அவன் ஒன்றும் சொல்லாமல் அவள் முகத்தைப் பார்க்க,

“நீ கூட்டிட்டுப் போகலன்னா, நானே போவேன்! தனியாப் போவேன்!’ என்றவள் திரும்பி பஸ் நிறுத்தத்திற்கு நடந்தாள்.

“ஷப்பா! அந்தப் பிடிவாதம் மட்டும் அப்படியே இருக்கு கொஞ்சம் கூட குறையாம!” என முனகியவன், அவள் பின்னே நடந்தான்.

அவன் பேச முயல, முகத்தைத் திருப்பிக் கொண்டாள் இவள்.

“மீனாம்மா!”

“மீனாட்சி அம்மன்னே கூப்புடு! அதானே உனக்குப் பிடிச்சிருக்கு” என பஸ் வரும் வழியைப் பார்த்தவாறே சொன்னாள்.

“ஓ அதான் கோபமா!” என முணுமுணுத்தவன்,

“சாரி மீனாம்மா! இனி கோபப் படமாட்டேன். கோபம் வந்தாலும் மீனாட்சி அம்மன்னு நீட்டி கூப்புடமாட்டேன். ஐ எம் சாரி!” என இறங்கி வந்தான்.

“ஒன்னும் தேவையில்ல”

“இப்படி மூஞ்சத் தூக்கி வச்சிருந்தா அப்புறம் உன் ப்ரேண்ட் ஹேமா மாதிரி நானும் பாட்டால உன்னைக் கூப்பிட ஆரம்பிச்சிருவேன்”

அவள் கண்டுக் கொள்ளவேயில்லை அவனை.

“மீனாம்மா, மீனாம்மா கண்கள் மீனாம்மா”

“அது மீனாம்மா இல்ல, மீனம்மா”

“ஆமாவா???? எனக்குத் தெரியாம எப்போ கால(னா,ன) எடுத்தாங்க?”

“உன் மூஞ்சி!” என்றவளுக்கு சிரிப்பு வந்து தொலைத்தது.   

கோபம் போய் அவள் முகத்தில் சிரிப்பு வர, அதன் பிறகு தான் இவனுக்கு நிம்மதியாய் ஆனது. இவர்களைக் காக்க வைக்காமல் காம்பஸ் பஸ் வர, இருவரும் ஏறி அமர்ந்தார்கள். அந்த பஸ் பல்கலைக்கழகத்தின் நுழைவாயில் வரை போகும். அங்கே இறங்கி மேய்ன் ரோடில் மினி பஸ் எடுத்து தலைநகருக்கு செல்ல வேண்டும்.

அரை மணி நேரம் கடந்து தான் மினி பஸ் வந்தது. அதற்குள் இருவரும் சகஜமாகி இருந்தனர். அவள் கையில் ஒரு வெள்ளியைக் கொடுத்தவன்,

“மினி பஸ்ல ஆள் நெறைஞ்சு வழியும், நிக்கக் கூட இடமிருக்காது. நான் பின்னால வழியா ஏறிடறேன். நீ முன்னால ஏறிக்கோ. அங்கத்தான் லேடிஸ்லாம் நிப்பாங்க. கண்டக்டர்ட இந்த காச குடுத்து டிக்கட் வாங்கிக்கோ. இடையில எங்கயும் இறங்கிடாதே மீனாம்மா! கடைசியா மெட்ரோஜாயால(அப்பொழுது மிக பேமசாக இருந்த ஷாப்பிங் காம்ப்லேக்ஸ். ப்ராண்டட் பொருட்கள் மட்டுமே இருக்கும் இங்கே) பஸ் நிக்கும். அங்கதான் நாம இறங்கனும்” என சொல்லிக் கொடுத்தான்.

பஸ் ஏறியதும் மீனாட்சியின் மேலேயே கண்ணை வைத்திருந்தான் ரஹ்மான். புது இடம், புது அனுபவம், புது மனிதர்கள், எங்காவது காணாமல் போய் விடுவாளோ எனும் பயமே அதற்கு காரணம். இவளோ மேலே தொங்கிய கைப்பிடியை இறுக்கமாகப் பற்றிக் கொண்டு பஸ் ஆடிய ஆட்டத்துக்கு சேர்ந்து ஆடியபடியே பயணப்பட்டாள். ஒரு வழியாக மெட்ரோஜயா அருகே இறங்கினார்கள் இருவரும்.

“முதல்ல சரப்பான்(காலை உணவு) போகலாமா? என்ன வேணும் சாப்பிட?” என கேட்டான் ரஹ்மான்.

“முர்தாபா!(உள்ளே ஆட்டிறைச்சி, அல்லது கோழி வைத்திருக்கும் பரோட்டா)” என வாயில் எச்சில் ஊற பதிலளித்தாள் அவள்.

“சரி வா! என் பக்கத்துலயே நடந்து வரனும்! பராக்குப் பார்த்துட்டு எங்கயும் நின்னுட கூடாது! அப்படி எங்கயாச்சும் கூட்டத்துல தொலைஞ்சிப் போய்ட்டனா, அழுதுட்டு நிக்காம மெட்ரோஜாயா எப்படிப் போகனும்னு ஆளுங்க கிட்ட கேட்டு இங்க வந்திடு. நானும் கண்டிப்பா இங்க வந்துடுவேன்! புரியுதா மீனாம்மா?”

தலையை ஆட்டியவள், கப்பென அவன் கையைப் பற்றிக் கொண்டாள். தன் கரத்தைப் பற்றி இருக்கும் அவள் கரத்தைப் பார்த்தவன், மெல்ல அதை விடுவித்தான்.      

“பக்கத்துலயே நடந்து வந்தா தொலைஞ்சிட மாட்ட மீனாம்மா! கையைப் புடிச்சிக்கனும்னு அவசியமில்ல”

ஒழுக்க நெறி முறைகளோடு வளர்ந்தவனாயிற்றே, தொட்டுப் பழகுவதை அவன் மனம் அனுமதிக்கவில்லை. இருவரும் அமைதியாக சாப்பாட்டுக் கடை நோக்கி நடந்தார்கள். அவள் கேட்ட உணவை ஆர்டர் செய்தவன், தனக்கும் அதையே வாங்கிக் கொண்டான். இருவரும் பேசிக் கொண்டே உணவருந்தினார்கள். ரஹ்மானின் நிறம் தமிழனைப் போலவே இருக்க, அதோடு அவன் தமிழிலே பேச அவர்கள் இருவராய் அமர்ந்திருப்பது யார் கண்ணையும் உறுத்தவில்லை.

அந்தக் காலகட்டத்தில் மலாய்காரர்கள் மற்ற இனத்து எதிர்பாலரோடு பழகுவதை பூதக் கண்ணாடி கொண்டுதான் பார்ப்பார்கள். அந்த இனத்தவருக்கென சமய இயக்கம் இருக்கிறது. ஆண் பெண் அவர்கள் இனத்துக்குள்ளேயே மணம் புரியாமல் சேர்ந்திருந்தாலோ, மற்ற இனத்து எதிர்பாலரோடு தப்பான முறையில் தனித்திருந்தாலோ இயக்கத்தின் ஆட்கள் அவர்களைப் பிடித்துப் போய்விடுவார்கள். நோன்பு அனுசரிக்காமல் பொது வெளியில் சாப்பிடுவது, இன்னும் மத சம்பந்தப் பட்ட தப்புகள் எதாவது செய்தாலும் இயக்கத்தினரின் தண்டனைக்கு ஆளாக நேரிடும்.(இப்பொழுதும் இதெல்லாம் இருந்தாலும், ஓரளவு கட்டுப்பாடுகள் குறைந்திருப்பதாய் தோன்றுகிறது)

சாப்பிட்டதும் இருவரும் பெட்டாலிங் ஸ்ட்ரீட் என அழைக்கப்படும் ஃபேக் ப்ராண்டட் பொருட்கள் விற்கப்படும் இடத்திற்கு நடந்தே சென்றனர். அந்த தெரு முழுவதும் சீனர்கள் வரிசையாக கடைப் போட்டிருந்தனர். அழகழகாய் தொங்கிய கைப்பைகளையும், துணி மணிகளையும், அடுக்கி வைக்கப்பட்டிருந்த கைக்கடிகாரங்களையும் ஆவென பார்த்தப்படி வந்தாள் மீனாட்சி.(இந்த இடத்த தாண்டித்தான் நாங்க பஸ் எடுக்கப் போகனும் பாட்டி வீட்டுக்கு. சின்ன வயசுல அம்மாட்ட அடம் பிடிப்பேன் எனக்கு ஒரு பேக் வாங்கிக் குடுங்கன்னு. அந்த ஸ்ட்ரீட்ட கடக்கற வரைக்கும் கண்ணு சுத்தி சுத்தி வரும்)    

“எதாச்சும் வாங்கிக்கோ மீனாம்மா!” என்றான் ரஹ்மான்.

“வேணான்டா! உன் கிட்ட சாப்பாடு, சின்ன சின்ன பொருள் வாங்கிக்கறது வேற. இதெல்லாம் விலையா இருக்கும்! வேணா, வேணா”

கையைக் கட்டியபடி அப்படியே நின்றான் ரஹ்மான்.

“வாடா ரஹ்மானு!”

“நீ எதாச்சும் வாங்கிக்கற வரைக்கும் இங்கிருந்து நகர மாட்டேன்”

“ம்ப்ச்! சொன்னா கேளு”

“வாங்கிக்கோ!”

“சரி, வாங்கித்தா!”

அருகே இருந்த ஒரு கடையில் போனியா பேக் ஒன்றை தேர்ந்தெடுத்தாள் மீனாட்சி. கடை சீனன் நூறு வெள்ளி சொல்ல, பேரம் பேசி ஐம்பது வெள்ளிக்கு அதை வாங்கித் தந்தான் ரஹ்மான்.

“இப்போ இந்த ஃபேக் பேக் வாங்கிக்கோ மீனாம்மா! நல்லா சம்பாரிக்கறப்போ ஒரிஜினல் ப்ராண்ட்ல வாங்கி தரேன்”

ரஹ்மான் ஸ்காலர்ஷிப்பில் படிக்கிறான். அதோடு அப்துல்லாவும் செலவுக்குப் பணம் கொடுப்பார். பல்கலைக்கழகத்தில் சில ப்ராபெசர்களுக்கு அவர்கள் செய்யும் ரிசர்ச்சில் உதவியாளராக இருப்பதிலும் ஊதியம் கிடைக்கிறது அவனுக்கு. தன் சொந்தப் பணத்தில் தான் தன் தோழிக்கு செலவு செய்தான் ரஹ்மான்.

“ப்ராண்டோ இல்லையோ! நீ வாங்கிக் குடுத்ததுனாலேயே, எனக்கு ரொம்ப ரொம்ப பிடிச்சிருக்கு இந்த பேக்! பத்திரமா பாதுகாத்து வச்சிப்பேன்” என முகம் சந்தோஷத்தில் மின்ன சொன்னாள் மீனாட்சி.

“அப்போ நான் குடுத்த சங்கிலியையும் பாதுகாப்பா வச்சிருக்கியா?”

அவன் கேள்வியில் சட்டென முகம் மாறியது அவளுக்கு.

“அது..அது நெருப்புல மாட்டிக்கிச்சு ரஹ்மானு! அத எடுக்கனும்னு நான் திரும்ப உள்ள ஓடுனப்போத்தான் கையில நெருப்பு புடிச்ச கட்டை விழுந்துடுச்சி! அப்பா என்னை திரும்பவும் இழுத்துட்டு வந்துட்டாரு. ஏன்டி பாவி திரும்ப உள்ள போனன்னு, அம்மா புடிச்சு அடிச்சிட்டாங்க! சாரி ரஹ்மானு! நீ குடுத்த சங்கிலிய என்னால காப்பாத்த முடியல! சாரி ரஹ்மானு” என முகம் கசங்க சொன்னாள் மீனாட்சி.

இவனுக்கு என்னவோ உணர்வு நெஞ்சை இறுக்கிப் பிடித்தது. தொட்டுப் பழக கூடாது என்பதையும் மறந்து பட்டென அவள் கையைப் பற்றிக் கொண்டான் ரஹ்மான்.

“பைத்தியமாடி உனக்கு! அது வெறும் சங்கிலி! அத எடுக்கறதுக்கு உயிர விடப் பாத்தியே!” என எப்பவோ நடந்ததுக்கு இப்பொழுது அவளைக் கடிந்துக் கொண்டான்.

“பாத்தியா, பாத்தியா! இனிமே என் மேல கோபப்பட மாட்டேன்னு சொல்லிட்டு மறுபடியும் கோபப்படற”

முயன்று தனது கோபத்தைக் கட்டுப்படுத்தியவன், அதன் பிறகு அமைதியாகி விட்டான். என்னவோ அவனால் பேசவே முடியவில்லை. அவள் கையை விடுவித்தவன், நடக்க ஆரம்பிக்க இவளும் அவனோடே நடந்தாள்.

“ரஹ்மானு!”

“ஹ்ம்ம்”

“ரஹ்மானு!”

“ஹ்ம்ம்ம்ம்”

“ரஹ்மானு!”

“என்ன மீனாம்மா?”

“கோபப்படாதே ப்ளீஸ்!”

“கோபம்லாம் இல்ல! ரொம்ப வருத்தமா இருக்கு. அந்த சங்கிலியால உனக்கு எதாச்சும் ஆகியிருந்தா என்னை என்னாலேயே மன்னிச்சிருக்க முடியாது மீனாம்மா!”

“சின்ன வயசுதானே எனக்கு! உயிரோட மதிப்புத் தெரியல! அப்போ நான் அப்படி நடந்துக்கிட்டதுக்கு இப்போ மூஞ்ச தூக்கி வச்சிக்குவியா நீ!”

“நம்ம உயிர விட உயிரற்ற பொருளுக்கு மதிப்பு குடுக்கக் கூடாது மீனாம்மா! பொருள் போனா சம்பாதிச்சிடலாம்! உயிர் போன சம்பாதிக்க முடியாது! என்னைக்கும் இத மறந்திடாதே”

அவனை விட்டு சற்றுத் தள்ளிப் போனவள்,

“மிஸ்டர் கும்சம கும்சம கும்பச்சும் ரஹ்மான்! அட்வைச குறைச்சிட்டு அடுத்த வேலைய பாருங்க” என கிண்டலாக சொன்னாள்.

“அடிங்! உன் ப்ரேண்ட் மாதிரி உனக்கும் ரொம்ப வச்சிப் போச்சு” என சிரிப்புடன் அவன் துரத்த, அந்த பெட்டாலிங் ஸ்ட்ரீட்டில் ஓட்டப் பந்தயம் நடந்தினார்கள் இருவரும்.

மேக்டானல்ட் ரெஸ்டாரண்டைப் பார்த்து, இதையெல்லாம் அவள் சாப்பிட்டதில்லை என சொல்ல, உள்ளே அழைத்துப் போய் வாங்கிக் கொடுத்தான் ரஹ்மான். அங்கு விற்கப்பட்ட வெனிலா ஐஸ்கிரீமை அவள் ரசித்து சாப்பிட, இன்னொரு கப் வாங்கித் தந்தான்.

அதன் பிறகு ஜாலான் மஸ்ஜித் இந்தியாவுக்கு(மஸ்ஜித் என்றால் மசூதி) அழைத்துப் போனான் மீனாட்சியை. இந்தியர்கள் அதிகம் புழங்கும் இடமது. நிறைய இந்திய உணவகங்கள், நகைக்கடைகள், துணி கடைகள், வீடியோ சீடி கடைகள் என இந்தியர்கள் கோலோச்சிய இடமது.

அங்கிருந்த சேலை, சுடிதார் என பலதரப்பட்ட துணிகளை விற்கும் மெட்ராஸ் ஸ்டோருக்கு அவளை அழைத்துப் போனவன்,

“மீனாம்மா! ஒரு அரை மணி நேரம் குடுக்கறியா? நான் போய் மஸ்ஜிட்ல(மசூதி) தொழுகை முடிச்சிட்டு வந்துடறேன். இங்கயே இந்த ப்ளோர்லயே பத்திரமா இருக்கனும். தேவையில்லாம யார் கிட்டயும் பேசக் கூடாது. சுடிதார் எதாச்சும் பிடிச்சிருக்கான்னு பார்த்துட்டே இரு. ஓடி வந்துடுவேன்” என்றான்.

“நீ போய்ட்டு வா ரஹ்மானு! நான் பத்திரமா இருந்துப்பேன்” என அவள் சொல்லியும் ஆயிரெத்தெட்டு பத்திரங்கள் சொல்லி, திரும்பி திரும்பிப் பார்த்தப்படியே சென்றான்.

தொழுகையை முடித்துக் கொண்டு அவன் வரும் வரை, இவளும் அங்கேயே சமர்த்தாய் இருந்தாள். அவன் திரும்பி வந்ததும் எதாவது வாங்கிக் கொள்ள சொல்ல, வீட்டில் நிறைய வாங்கி கொடுத்துதான் அனுப்பினார்கள் என மறுத்து விட்டாள். அவனும் அவளை வற்புறுத்தாமல் அப்படியே விட்டு விட்டான்.

பின் இருவரும் தங்கமலர்(இப்படி ஒரு கடை அப்பொழுது அந்த இடத்தில் இருந்தது) சீடி கடைக்குப் போனார்கள்.

“மீனாம்மா, நீ டிஸ்க்மேன் வச்சிருக்கியா?” என கேட்டான் ரஹ்மான்.

“இல்லடா!”

“சரி என்னோடது எடுத்துக்கோ! படிக்கறப்போ ரொம்ப ஸ்ட்ரேஸ்ஸா இருந்தா பாட்டு கேளு! ரிலேக்சாகும்” என்றவன் ஆடியோ சீடிக்களை ஆராய்ந்தான்.

“அப்போ உனக்கு?”

“நான் இன்னொன்னு வாங்கிக்கறேன்”

“எனக்கு புதுசுதான் வேணும்! நீ புதுசு வாங்கற வரைக்கும் பழசு பாவிச்சுக்கறேன். அப்புறம் அத நீ எடுத்துக்கிட்டு புதுச என் கிட்ட குடுத்துடனும்! இல்லைனா எனக்கு ஒன்னும் வேணா போ!”

அடிப்பாவி என்பது போல அவளைப் பார்த்தவனுக்கு சிரிப்பு வந்தது.

“சரி தரேன்”  

இருவரும் எந்தப் படப் பாடல் நன்றாக இருக்கும் என கலந்துப் பேசி தேர்ந்தெடுத்தார்கள். அப்பொழுது கடையில் யாரோ வாங்கிய சீடி வேலை செய்கிறதா என செக் செய்ய,

“ஜீவன் நீயம்மா

என் பாடல் நீயம்மா

நீயில்லாத வாழ்வு இங்கு கானல்தான்” என பாடியது.

அந்தக் குரலில் தெரிந்த பாவத்தில் மயங்கிய ரஹ்மான்,

“அண்ணா எந்தப் படப்பாட்டுன்னா இது?” என கேட்டான்.

“முரளி நடிச்ச இதயம் தம்பி”

ரஹ்மானின் காதில் மெல்ல கிசுகிசுத்தாள் மீனாட்சி.

“அந்தப் படம் எனக்குப் புடிக்கவே புடிக்காது ரஹ்மானு”

“ஏன்?”

“காதல் வந்தா போதுமா? தைரியமா சொல்ல வேணாமா?”

“நீ சொல்லுவியா?”

யோசனையாய் புருவத்தை சுருக்கினாள் மீனாட்சி.

“காதலிக்கறதுலாம் தப்புன்னு எங்கம்மா சொல்லிருக்காங்க ரஹ்மானு! அதனால எனக்கு காதல் கத்தரிக்காய்லாம் வராதுனு நினைக்கறேன்! அப்படியே மீறி வந்தாலும் பட்டுன்னு போய் சொல்லிடுவேன்! அந்தக் கர்மத்தை ஏன் மனசுக்குள்ளேயே வச்சிருக்கனும்” என சொல்லியவளைப் புன்னகையுடன் பார்த்தான் ரஹ்மான்.

“உன்னை மாதிரி எல்லோரும் தைரியசாலி இல்ல மீனாம்மா! எவ்வளவோ காரணம் இருக்கும் வெளிய சொல்லாம நேசத்த மனசுக்குள்ளயே பொத்தி வச்சிக்க!” என சொன்னவன்,

“இப்போ நமக்கு எதுக்கு நீ சொன்ன அந்த கர்மத்தைப் பத்தி டிஸ்கஷன்! இருட்டப் போகுது, சீடி வாங்கிட்டு, டீ குடிச்சிட்டு கிளம்பலாம் வா” என்றவன் அந்த இதயம் பட பாடல் சீடியை வாங்க மறக்கவில்லை.

அந்தக் கடைக்குப் பக்கத்தில் இருந்த பஞ்சாபி கடையில் பசும்பால் தேநீர்(நான் குடிச்சிருக்கேன். பால் திரி திரியா மிதக்கும். அவ்ளோ ருசியா இருக்கும். இப்போ அந்தக் கடை இல்ல! சோ சேட்) குடித்தவர்கள் ஹேமாவுக்கும் லட்டு, ஜிலேபி, சமோசா என வாங்கிக் கொண்டு கிளம்பினார்கள்.

திரும்பிப் போகும் போது கூட்ட நெரிசல் இல்லாமல் மினி பஸ்ஸில் உட்கார இடம் கிடைத்தது. மீனாட்சி ஒரு பெண்மணியின் அருகே அமர அவள் பின்னால் இருந்த இருக்கையில் அமர்ந்துக் கொண்டான் ரஹ்மான். அவள் வெளியே வேடிக்கைப் பார்த்துக் கொண்டு வர அவளைப் பார்த்தப்படி வந்தவனுக்கு,

“ஜீவன் நீயம்மா”வே ரிப்பிட் மோடில் ஓடியது மனதில்.

(ஜீவன் துடிக்கும்…)

(போன எபிக்கு லைக் கமேண்ட் போட்ட அனைவருக்கும் நன்றி 🙂 இந்த எபில என்ன புரிஞ்சதுன்னு வந்து சொல்லிட்டுப் போங்க டியர்ஸ்…லவ் யூ ஆல்)

error: Content is protected !!