Jeevan Neeyamma–Epi 2

171916099_840757923178210_3424615682123961255_n-a0d74efc

Jeevan Neeyamma–Epi 2

அத்தியாயம் 2

 

உனக்குப் பிடித்த இசை என்னவென கேட்டால், நீ மூச்சு விடும் சத்தம்தான் என்பாள்! யாரவள்? என் ஜீவனவள்!

 

(மலாய் உரையாடல்கள் உங்களுக்காக தமிழில்)

 

“அமீனா!”

சலாம் சொல்லிய பின் தன் மனைவியின் பெயரை சொல்லி அழைத்தார் அப்துல்லா. அவருக்கு பதில் சலாம் சொல்லி,

“இதோ வந்துட்டேன் அபாங்”(அபாங் எனும் மலாய் வார்த்தை அண்ணன் என அர்த்தப்படும். இவர்கள் சமூகத்தில் கணவனை இப்படித்தான் அழைப்பார்கள்) என சமையல் அறையில் இருந்து கணவரின் குரல் வந்த திசையான வீட்டின் பின் புறத்துக்கு விரைந்து வந்தார் அமீனா.

தன் கையில் பிடித்திருந்த ப்ளாஸ்டிக் பையை மனைவியிடம் கொடுத்த அப்துல்லா,

“ரஹ்மானுக்கு பிடிச்ச கிளி மூக்கு மாங்கா வாங்கிட்டு வந்தேன். இப்போ கண்ணுல காட்டாம, நாளைக்கு ஸ்கூல் முடிஞ்சு வந்ததும் வெட்டிக் குடும்மா! ராத்திரி சாப்பிட்டா ஜீரணம் ஆகாம கஸ்டப்படுவான்” என்றார்.

கணவரின் கூற்றில் புன்னகை வந்தது அமீனாவுக்கு. தாயாய் மகனின் ஒவ்வொரு அசைவின் அர்த்தத்தையும் அறிந்து வைத்திருக்கும் அவரிடம், நீ தாயென்றால் நான் தாயுமானவன் என அடிக்கடி தன்னையறியாமலே நிரூபித்து விடுவார் அப்துல்லா.

பெற்றவர்கள் பார்த்து முடித்து வைத்தது தான் இவர்களின் திருமணம். மணமாகி ஐந்து வருடங்களில் மூன்று முறை கரு கலைந்துப் போனது அமீனாவுக்கு. வாரிசு பெற்றுக் கொடுக்க லாயக்கில்லாதவளை வெட்டி விட சொல்லி அப்துல்லாவின் வீட்டில் குடைச்சல் கொடுத்தார்கள். இவர் சம்மதிக்கவேயில்லை. சரி அமீனா ஒரு மூலையில் இருந்து விட்டுப் போகட்டும், வாரிசுக்காக இன்னொரு நிக்காஹ் செய்துக் கொள்ள வற்புறுத்தியும் அசைந்துக் கொடுக்கவில்லை அப்துல்லா.

அமீனாவின் அன்பும், காதலும், கண்ணைப் பார்த்தே அவரின் கருத்தை அறிந்துக் கொள்ளும் திறனும் மனைவியில் பால் எல்லையில்லா காதலை விதைத்திருந்தது அப்துல்லாவுக்கு. குழந்தையை இழக்கும் போதெல்லாம் கதறித் துடிக்கும் மனைவியை உறவும் சுற்றமும் இன்னும் துடிக்க வைப்பதை அறவே வெறுத்தவர், கம்பத்தில் (கம்பம் மலாய்காரர்கள் வசித்த இடம். இந்தியர்கள் வசித்தது எஸ்டேட். சீனர்கள் வசித்தது ஈய குட்டைகள் இருக்கும் இடமருகே அல்லது பட்டணத்தில். மூவினமும் சேர்ந்து சுதந்திரம் கேட்டு விடக் கூடாது என இப்படி வேலை வாரியாக பிரித்து வைத்தார்கள் பிரிட்டிஷ்காரர்கள்) இருந்து வெளியேறி நிலம் வாங்கி அல்மினியா எஸ்டேட் அருகே வீடு கட்டி குடியேறினார்.   

எல்லா கம்பத்து வீடுகளைப் போலவே மேலே ஏற்றிக் கட்டப்பட்ட வீடு அது. பாதி கல், பாதி பலகை என கட்டப்பட்டிருக்கும் அழகான இல்லம் அது. நான்கு படி ஏறித்தான் வீட்டுக்குள் போக வேண்டும். நான்கு படி இறங்கி சமையலறைக்குப் போக வேண்டும். பாத்ரூம், கழிப்பறை எல்லாம் வீட்டுக்கு வலது புறம் தனியாக கட்டப்பட்டிருக்கும். மனைவிக்குப் பிடித்த மாதிரி வர்ணம் பூசி, தளவாடப் பொருட்கள் வாங்கிப் போட்டு அழகாய் கட்டினார் அந்த குட்டி தாஜ்மகாலை. தனித்து, சுகித்து, நிம்மதியாய், சந்தோஷமாய், காதலாய் வாழ்ந்த வாழ்க்கைக்கு அடையாளமாய் வந்து பிறந்தவன் தான் அப்துல் ரஹ்மான். அதன் பிறகு வேறு பிள்ளை தங்காமல் போக, அவனே இவர்களின் கண்ணின் மணியாகிப் போனான்.

அப்துல்லா காபி பழங்களை பயிரிடுவர்களிடம் நேரிடையாக வாங்கி அதை காய வைத்து அரைத்து காபி தூள் தயாரிக்கும் கம்பெனி வைத்திருந்தார். ரஹ்மான் காபி என மகனின் பெயரிட்டு பத்துப் பேரை வேலைக்கு அமர்த்தி சிறிய அளவில் ஒரு அதை நடத்தி வந்தார் அவர். அதோடு இவர்களுக்கு சொந்தமாய் மல்லிகைத் தோட்டமும் இருந்தது. அமீனா எஸ்டேட்டில் இருக்கும் பெண்களுக்கு துணி தைத்துக் கொடுக்கும் வேலையும் செய்தார். இந்தியர்கள் அணியும் பாவாடை சட்டை, சேலை ரவிக்கை என எல்லாமும் தைக்கத் தெரியும் அவருக்கு. மனைவிக்காக சிங்கர் தையல் மிஷின் வாங்கிக் கொடுத்திருந்தார் அப்துல்லா.

மோட்டார் சைக்கிள் ஒன்றும், அவர்கள் வசதிக்கேற்ப டாட்சன் கார் ஒன்றும் வைத்திருந்தார் அவர். எஸ்டேட் மக்கள் ஆபத்து அவசரத்துக்கு டவுனுக்குப் போக வேண்டும் என்றால் இவரது உதவியை நாடுவார்கள். ஏனென்றால் பஸ் பிடிக்க மேய்ன் ரோட்டுக்குப் போக முக்கால் மணி நேரம் செம்பணைக் காட்டுப் பாதையில் நடக்க வேண்டும். அதோடு இரண்டு மணி நேரத்திற்கு ஒரு பஸ் வருவதே பேரதிசயம் அங்கே! வேலை மெனக்கெட்டு ட்ரைவர் வேலை பார்த்தாலும் கூட பெட்ரோலுக்கான பணத்தை மட்டுமே வாங்கிக் கொள்வார் அப்துல்லா. அதனாலேயே வேற்று இனத்துக்காரராய் இருந்தாலும் அப்துல்லாவை தங்களில் ஒருவராய் பார்த்தனர் அந்த எஸ்டேட்டின் இந்தியர்கள். அவரும் நன்றாகவே தமிழ் பேசுவார். அமீனாவும் ஓரளவுக்குத் தமிழில் பேசுவார்.

அந்த எஸ்டேட்டிலேயே இருக்கும் தமிழ் பள்ளியில் படிக்கும் ரஹ்மான் தமிழர்களைப் போலவே அழகாய் தமிழ் பேசுவான். மலாய் பள்ளி மிக தொலைவில் இருக்க, மகனைத் தமிழ் பள்ளியிலேயே சேர்த்திருந்தார் அப்துல்லா. எல்லா தமிழ் பள்ளிகளிலும் மலாயும் ஆங்கிலமும் கற்பிக்கப் படுவதால் அலட்டிக் கொள்ளவில்லை அவர். மலாய் மாணவர்கள் பள்ளி முடிந்து மத போதனை வகுப்புக்கும் செல்வார்கள். ரஹ்மானுக்கு அப்படி ஒரு வசதி இந்த இடத்தில் அமையாததால் அமீனாவே பள்ளி முடிந்து வரும் மகனுக்கு இஸ்லாத்தைப் பற்றிப் போதிப்பார்.

“இன்னிக்கு என்ன குவே(பலகாரம் என சொல்லலாம்) செஞ்சிருக்க சாயாங்?(அன்பே என பொருள்படும். சாயாங் குடு என்றால் முத்தம் குடு எனவும் அர்த்தப்படுத்திக் கொள்ளலாம்)” என கேட்டவர் கொடி கம்பத்தில் இருந்த துண்டை எடுத்துக் கொண்டார் குளிக்க செல்ல.

“ரஹ்மானுக்குப் புடிச்ச குவே லாப்பில்(அவித்த இனிப்பு பலகாரம்) செஞ்சிருக்கேன். நீங்க குளிச்சிட்டு வரதுக்குள்ள சுட சுட தே ஓ(பால் இல்லாத தேநீர்) போட்டு வைக்கறேன்” என அடுப்படிக்கு விரைந்தார் அமீனா. என்னதான் காபி விற்று பிழைப்பைப் பார்த்தாலும் அவர்கள் வீட்டில் என்றுமே தேநீர்தான் விருப்ப பானம்.

அப்துல்லா காபி பயிரிடும் தோட்டத்துக்கு ஆள் அனுப்பி அவர்கள் பறித்து வைத்திருக்கும் காபி பழங்களை எடைப் போட்டு அதற்குரிய பணம் கொடுத்து வாங்கி வருவார். அப்படி கொண்டு வரும் பழங்களை இவருடைய கம்பெனியில் உரித்து, காய வைத்து, சேர்ப்பதை சேர்த்து அரைத்து, பாக்கேட் போட்டு கடைகளுக்கு அனுப்புவார்கள். இவர்களின் காபியை உள்ளூரிலும், அந்த மாநிலத்திலும் மட்டும்தான் விற்று வருகிறார் அப்துல்லா. வியாபாரம் நன்றாகப் போனாலும் பெரிய அளவில் எடுத்து செய்ய முயலவில்லை அவர். போதிய வருமானம், மனைவி, பையன் என நிம்மதியாக இருந்தார்.

அப்துல்லா மாலை வீடு வர ஆறு மணி ஆகிவிடும். மோட்டார் சைக்கிளை வீட்டுக்குப் பின்னால் நிறுத்தி விட்டு, அப்படியே வெளியே இருக்கும் குளியலறையில் குளித்து விட்டு வந்துவிடுவார். பத்து வயது ரஹ்மான் அந்த நேரத்துக்கு எல்லாம் பாடம் படித்து விட்டு எஸ்டேட்டில் இருக்கும் பையன்களுடன் விளையாடப் போய் விடுவான். மாலை நேரத்து தேநீர் வேளை மட்டும் கணவனுக்கும் மனைவிக்கும் மட்டுமேயானது. இருவரும் சிரித்துப் பேசியபடி ரசித்து ருசித்து தேநீர் அருந்துவார்கள்.    

குளித்து விட்டு வீட்டில் அணிந்துக் கொள்ளும் லுங்கியோடு வந்து சாப்பாட்டு அறையின் தரையில் அமர்ந்தார் அப்துல்லா. சாப்பாட்டு மேசை இருந்தாலும் இவர்கள் மூவரும் தரையில் அமர்ந்துதான் உணவு உண்ணுவார்கள். பீங்கான் ஜக்கில் தேநீர் வார்த்துக் கொண்டு வந்து கணவரின் முன்னால் வைத்தார் அமீனா. தட்டில் குவேயையும் போட்டு எடுத்து வந்தவர், கணவர் அருகே அமர்ந்துக் கொண்டார்.

“பையன் சாப்பிட்டுட்டானா?” என கேட்டப்படியே ஒன்றை எடுத்து மனைவிக்கு ஊட்டி விட்டார் அப்துல்லா.

மெல்ல பலகாரத்தை மென்று விழுங்கிய அமீனா,

“அதெல்லாம் சுட சுட பானையில இருந்து அவிச்சு எடுத்ததுமே தட்டைத் தூக்கிட்டு வந்துட்டான். அவனும் சாப்பிட்டுட்டு அவனோட விளையாட்டுத் தோழனுங்களுக்கும் வேணும்னு டப்பால போட்டு எடுத்துட்டுப் போயிருக்கான்” என்றார்.

பள்ளியில் ரஹ்மானோடு படிக்கும் தமிழ் பையன்கள்தான் அவனது விளையாட்டுத் தோழர்கள். வெயிலோடு உறவாடி வளர்வதால் மஞ்சள் மேனி நிறம் கருத்து இவனும் பார்ப்பதற்கு தமிழர்கள் போல் தான் இருப்பான்.  

“சாயாங், மல்லி தோட்டத்துல இன்னிக்கு எவ்வளவு கலேக்‌ஷன் வந்தது?”

வீட்டின் அருகிலேயே இருக்கும் அந்த தோட்டத்தை அமீனாத்தான் கவனித்துக் கொள்கிறார். வேலைக்கு என எஸ்டேட்டில் இருந்து இரண்டு பெண்கள் வருவார்கள். காலை ஏழு மணிக்கு மேல் தான் பூக்களை பறிக்கவே ஆரம்பிப்பார்கள். சூரியன் தன் கதிர்களை பரப்ப ஆரம்பிக்கும் அந்த நேரம் தான் எந்த மொட்டுக்கள் பறிப்பதற்கு உகந்தது என நன்றாக தெரியும். பால் அல்லது வெள்ளை நிறத்தில் காட்சியளிக்கும் கொஞ்சம் பெரிய மொட்டாய் இருப்பதைப் பறித்து, அளந்து அதை வாங்க வரும் பூக்கடை ஆட்களிடம் விற்பார்கள்.

பூப்பறிக்க வரும் பெண்களே தோட்டத்தில் களை எடுப்பது, பூச்சி மருந்து அடிப்பது என இதர வேலைகளையும் செய்து விடுவார்கள். காலையில் கணவன், மகனைக் கிளப்பி அனுப்பி விட்டு அமீனா தோட்டத்துக்கு வந்து விடுவார். இங்கே சூரியன் உச்சிக்கு வரும் நேரம் வேலையை முடித்துக் கிளம்புவார். அதன் பிறகு மத்தியான சமையல், தையல் என நேரம் ஓடும் இவருக்கு.(நான் மல்லிகைத் தோட்டத்துல வேலை செஞ்சிருக்கேன் என்னோட பதினாலு வயசுல. சின்னதா ஒரு டின் இருக்கும்(பால் டின்), நாம பறிச்ச பூக்களை அதுல அளந்து ஒரு டின்னுக்கு இவ்ளோ காசுன்னு குடுப்பாங்க. ஒரு நாளைக்கு ரெண்டு வெள்ளி கிடைக்கும். மாலை ஸ்கூல்னால, காலைல இந்த வேலைக்குப் போய்ட்டு அப்புறம் கிளம்பி ஸ்கூலுக்குப் போவேன்.)    

இருவரும் மல்லிகை தோட்டத்தைப் பற்றியும் காபி கம்பேனியைப் பற்றியும் பேசிக் கொண்டே மாலை தேநீர் அருந்தினார்கள். பேசிக் கொண்டே சுவரில் இருந்த கடிகாரத்தைப் பார்த்தார் அப்துல்லா. மாலை மணி ஆறு முப்பதை காட்டியது அது. கரேக்டாக அவர் மகனின் சலாம் கேட்டது வாசலில். மகனின் சலாமிற்கு பதில் கொடுத்த பெற்றவர்களின் முகத்தில் மெல்லிய புன்னகை. எங்கு விளையாடப் போனாலும் மாலை ஆறு முப்பதுக்குள் வீட்டிற்கு வந்து விட வேண்டும் எனும் பெற்றவர்களின் கட்டளையை தவறியதேயில்லை அவன்.

அது வரை கணவருடன் உரையாடிக் கொண்டிருந்த அமீனா, பட்டென எழுந்துக் கொண்டார். ரூமுக்குப் போய் மகனின் துண்டையும் அவன் அணிந்துக் கொள்ள உடைகளையும் எடுத்துக் கொண்டவர், குளியலறை நோக்கிப் போனார். இனி மகனை குளிக்க வைத்து துவட்டி முடித்து தான் வருவாள் மனைவி என அறிந்து வைத்திருக்கும் அப்துல்லா குடித்த கிளாஸ்களை கழுவி வைக்க கிச்சனுக்குப் போனார்.

“நானே குளிக்கறேன் ஈபூ!”(மலாயில் அம்மா. எமாக் எனவும் அழைப்பார்கள்) என சிணுங்கினான் சின்னவன்.

“நீ நல்லா தேய்ச்சு குளிக்க மாட்ட! முதுகு பின்னாடிலாம் நனைஞ்சே இருக்காது பல சமயம்” என்றவர் அவனது சட்டையைக் கழட்டினார்.

ஜட்டியை மட்டும் கலட்ட விடமாட்டான் ரஹ்மான். அமீனாவுக்கு சிரிப்பாய் வரும் மகனின் கூச்சத்தைப் பார்த்து. சவர்க்காரம் போட்டு நன்றாக தேய்த்து, தொட்டியில் இருக்கும் பச்சைத் தண்ணீரை மொண்டு நன்றாக குளிப்பாட்டி விட்டார் தன் ஒற்றை வாரிசை.

“சீக்கிரம் வா ரஹ்மான்” என மகனுக்கு தனிமைக் கொடுத்து விட்டுப் போனார் அமீனா.

உடம்பைத் துவட்டிக் கொண்டு, தாய் எடுத்துக் கொடுத்த உடைகளை அணிந்துக் கொண்டான் ரஹ்மான். கைப்பாட்டுக்கு வேலைகளை செய்ய வாய் அதன் பாட்டுக்கு விளையாடும் போது நண்பர்கள் பாடிய பாடலை முணுமுணுத்துக் கொண்டிருந்தது.

“வருது வருது அட விலகு விலகு

வேங்கை வெளியே வருது!

வேங்கை நான் தான்

சீறும் நாள்தான்”

மகன் குளித்து விட்டு மக்ரிப் தொழுகைக்கு கை, கால், காது பின்புறம் எல்லாம் கழுவி விட்டு வர, அதே போல அமீனாவும் அப்துல்லாவும் தொழுகைக்கு ஆயத்தமானார்கள். வீட்டுத் தலைவராய் அப்துல்லா முன்னால் நின்று வழி நடத்த, அவரைப் பின் தொடர்ந்து தொழுகையை முடித்தனர் மனைவியும் மகனும். அந்த வீட்டில் மக்ரிப் தொழுகை மட்டும் குடும்பமாய் செய்ய வேண்டும் என்பது எழுதப்படாத சட்டமாகும்.

அதற்கு பிறகு இரவு உணவு வேலையைப் பார்க்க அமீனா சென்று விட, மகனை அருகே அமர்த்தி திருக்குர்ஆன் படிக்க சொல்லிக் கொடுத்தார் அப்துல்லா. இஷா தொழுகை நேரம் வரை மகனுக்கு படித்துக் கொடுப்பார் அவர். அதன் பிறகு இவர்கள் இருவர் மட்டும் தொழுகையை முடித்துக் கொண்டு குடும்பமாய் சாப்பிட அமர்வார்கள்.

மகனை அருகே அமர்த்தி முதல் பிடியை அவனுக்கு ஊட்டி விடுவார் அப்துல்லா. அதன் பிறகுதான் அவர் சாப்பிட ஆரம்பிப்பார். அதில் ஒரு மனத்திருப்தி அவருக்கு. இரவு உணவு எப்பொழுதுமே சாதம்தான் அவர்கள் வீட்டில். பொரித்தக் கோழி என்றால் ரஹ்மானுக்கு மிகவும் இஸ்டம் என்பதால் வாரத்தில் நான்கு நாட்களுக்கு அதை கட்டாயம் செய்து வைப்பார் அமீனா. மகனின் விருப்பமே பெற்றவர்களின் விருப்பமாய் மாறிப் போனது அவ்வீட்டில்.

சாப்பிட்டு முடித்ததும், அப்துல்லா பாத்திரங்களைத் தேய்த்துத் தர ரஹ்மான் அதை துடைத்து அழகாய் அதன் இடத்தில் அடுக்கி வைப்பான். பகலில் அம்மா மகன் நேரமென்றால், அந்தப் பொழுது அப்பாவும் மகனுக்கும் உரியதாகும். பள்ளியில் நடந்த விஷயங்களை தகப்பனிடம் பகிர்ந்துக் கொள்வான் ரஹ்மான்.

“இன்னைக்கு தமிழ் கிளாஸ்ல குறள் சொல்லிக் கொடுத்தாங்க ஆயா(இப்படித்தான் தகப்பனை அழைப்பார்கள். பாப்பா எனவும் அழைப்பார்கள்).

‘அன்பின் வழியது உயிர்நிலை அஃதிலார்க்கு

என்புதோல் போர்த்த உடம்பு’” என சொல்லியவனின் ழகர உச்சரிப்பு அவ்வளவு அழகாக இருந்தது.

“அப்படின்னா என்னய்யா அர்த்தம்?”

“டீச்சர் சொன்னாங்க, அன்பு கொடுக்கறவங்க, அன்பு செய்யறவங்களுக்கு உள்ளதுதான் உயிர் உள்ள உடம்பாம். மத்தவங்களுக்கு வெறும் எலும்பைத் தோலால் போர்த்திய உடம்பு மட்டும்தானாம்”

“இது டீச்சர் சொன்ன விளக்கம்! ரஹ்மான் செல்லத்துக்கு என்ன புரிஞ்சது இந்த விளக்கத்த கேட்டு?”

“மத்தவங்ககிட்ட அன்பா இருந்தா நல்லா ஆரோக்கியமா உசுரோட இருக்கலாம்! இல்லைனா இளைச்சுப் போய் எலும்பா(எலும்பா, எலும்பி என்பது ஒல்லியாய் இருப்பவர்களை இங்கே அழைக்கும் விதம்) ஆகிடுவாங்களாம்.”

மகனின் விளக்கத்தைக் கேட்டு சிரிப்புப் பொத்துக் கொண்டு வந்தது அப்துல்லாவுக்கு.

“எல்லா உயிர்களிடமும் அன்பு செய்யனும்னு ஆயா சொல்லிக் குடுத்தேன்ல, அதைதான் இந்தக் குறளும் சொல்லுது. அன்பு இருக்கும் இடத்துல ஆண்டவன் இருப்பான். அது இல்லாத இடத்துல ஆகாதவன் இருப்பான். ஆகாதவன்னா யாரு ரஹ்மான்?”

“பேய், பிசாசு, சைத்தான்”

“அதேதான்! இது மூனும் நமக்கு வெளிய இல்ல! நம்ம மனசுக்குள்ளத்தான் இருக்கு! இது நம்மள மீறி வெளி வராம இருக்கனும்னா நமக்கு சுத்தமான மனசு வேணும், அன்பான செயல்பாடுகள் வேணும், நேர்மையான இறைநெறி வேணும்” என மகனுக்கு அழகாய் எடுத்துரைத்தார் அப்துல்லா.

அதன் பிறகு அமர்ந்து வீட்டுப் பாடங்களை செய்த ரஹ்மான், நண்பர்களுடன் விளையாடிய களைப்பில் புத்தகத்தின் மேலேயே கவிழ்ந்து தூங்கி போனான்.

“அபாங், ரஹ்மான் தூங்கிட்டான்! தூக்கிட்டுப் போய் படுக்க வைங்க” என தொலைக்காட்சியில் செய்திகளைப் பார்த்துக் கொண்டிருந்த கணவரை அழைத்தார் அமீனா.

ஆவென வாயைப் பிளந்துக் கொண்டு தூங்கும் மகனைப் பார்த்து சிரிப்பு வந்தது அப்துல்லாவுக்கு.

“உன் மகன் என்ன இன்னும் கைக்குழந்தையா சாயாங்! இவன தூக்கினா என் இடுப்பு உடஞ்சிடாதா? இடுப்பு உடஞ்சிட்டா உன்னை எப்படி சந்தோஷமா வச்சிக்கிறது?” என குறும்பாய் கேட்டார் அவர்.

“பேச்ச பாரு பேச்ச!” என கணவரின் கையிலேயே ஒரு அடி போட்டார் அமீனா.

புன்னகையுடன் மகனை எழுப்பி, கைத்தாங்கலாய் பாத்ரூம் அழைத்து சென்று, அவனது ரூமில் படுக்க வைத்தார் அப்துல்லா. அவனுக்கு என ஒற்றைக் கட்டில் வாங்கிப் போட்டிருந்தார். மகன் உடம்பு நோகாமல் இருக்க இலவம் பஞ்சு மெத்தையும் வாங்கிப் போட்டிருந்தார். ரஹ்மானின் நெற்றியில் முத்தம் வைத்தவர் அவனுக்காக தூங்கும் முன் படிக்கும் டுவா(இங்கே டோஹா என்பார்கள்) படித்து விட்டு வந்தார்.

கணவனும் மனைவியுமாய் சற்று நேரம் தொலைக்காட்சி பார்த்து விட்டுப் படுக்கப் போனார்கள். மகனுக்கு எல்லா வசதியும் செய்து கொடுத்தவர்கள், அவர்களுக்கு படுக்க மெலிதான மெத்தை மட்டும் தரையில் போட்டு வைத்திருந்தார்கள்.

“இவன நல்லபடி வளர்க்கனும் அமீனா! நல்லா படிக்க வச்சா மட்டும் போதாது, நம்ம மதம் சொன்ன நன்னெறிகள கடைப்பிடிக்கற நல்ல இஸ்லாமியனா வளர்க்கனும்”

“கண்டிப்பா வளர்க்கலாமுங்க” என்ற மனைவியை அணைத்துக் கொண்டார் அப்துல்லா.

இது அழகான குடும்பம்! அப்துல்லாவின் அன்பான குடும்பம்!

 

(ஜீவன் துடிக்கும்…)

 

(போன எபிக்கு லைக், கமேண்ட் போட்ட அனைவருக்கும் எனது நன்றி. வெளிய ரொம்ப போகாம, போனாலும் முகக்கவசம் அணிந்து பத்திரமா இருங்க. டேக் கேர் டியர்ஸ். லவ் யூ ஆல்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!