jeevanathiyaaga_nee – 15

JN_pic-ff730a35

jeevanathiyaaga_nee – 15

ஜீவநதியாக நீ…  

அத்தியாயம் – 15

விடியற்காலையில் ரவியின் வீட்டில்,

                ரவி மகிழ்வாக மெத்தையில் புரண்டு படுத்தான். ‘இந்த ஜீவாவுக்கு வேலை கிடைக்கலை. டீ கிளாஸ் கழுவறான்னு நம்ம ஆளுங்க சொல்றாங்க. அதை நேரில் பார்க்கணும். அவனை அவமான படுத்தனும்’ சந்தோஷமாக மெத்தையில் புரண்டு படுத்தான்.

           அவன் அறைக்குள், அவன் அறையோடு ஒட்டியிருக்கும் கீதா அறையில் நடமாடும் சத்தம் கேட்க, காதல் கொண்ட அவன் மனம் அவளை பார்க்க துடித்தது. ‘நான் வேற என் கீத்துவை தேவை இல்லாமல் கடுப்பேத்திட்டேன். அவ அண்ணன் மேல இருக்கிற கோபத்தை அவ மேல காட்ட கூடாது. கீதா பேசாம இருந்தால் என்னவோ போல இருக்கு. அவள் தான் பகடைக்காய். ஆனால், அது ஜீவாவுக்கு மட்டும் தான். கீதா, எனக்கு மனைவி.’ காலையில்  தன்னக்குள் சத்திய பிரமாணம் எடுத்துக்கொண்டு, முகம் கழுவினான். அவள் இருக்கும் அறைக்கு சென்றான்.

அவனிருக்கும் அறையிலிருந்து அவளை பார்க்க, ‘என் காதல் மனைவி. யாருக்கும் தெரியாவிட்டாலும், எனக்கு தெரியுமே’ அவன் இதயம், ‘காதல்… காதல்…’ என்று துடிக்க, அவன் இதழ்களோ புன்னகையில் மடிந்தது.

“கீது குட் மார்னிங்…” அவன் சோபாவில் அமர்ந்து கூற, “…” அவள் எதுவும் பேசாமல் அவனை மேலும் கீழும் பார்த்தாள். ‘கீதா, இப்படி தான் காலையில் உருகுவான். வெளியில் போயிட்டு வந்து, அண்ணனை பார்த்திட்டு வந்தா குதிப்பான். நீ இவனை பார்த்து உருகிடாத’ அவள் தனக்கு தானே கூறிக்கொண்டு நீர் சொட்டிக் கொண்டிருந்த கூந்தலை துடைக்க ஆரம்பித்தாள்.

அன்றைய கார் சாவி பிரச்சனைக்கு பின், அவர்களுக்கு இடையில் சரியான பேச்சு வார்த்தை இல்லை. ரவிக்கு இந்த சூழல் சுத்தமாக பிடிக்கவில்லை.

“கீது…” அவன் அவளை இழுக்க, சோபாவில் அமர்ந்திருந்த அவன் மேல் சரிந்து விழுந்தாள். அவள் எழுந்து கொள்ள பிடிமானம் இல்லாமல் தடுமாற, அவன் அவளை வீணையாக ஏந்தினான். அவள் கைகள், அவன் தோளை பிடிமானமாக பிடித்து எழ முயற்சிக்க, அவன் கைகள், அவளை வீணை என கருதி ஆங்காங்கே மீட்டிட, “நான் எழுந்திருக்கணும்” அவள் குரல் இறுகியது.

“ம்… எழுந்துக்கோ. நான் என்ன வேண்டாமுன்னா சொல்றேன்?” அவன் தோளை குலுக்கி, கைகளை விரிக்க, அவள் எழுகையில் மீண்டும் சட்டென்று அவளை அவன் இழுக்க, அவள் அவன் மடியில் அமர்ந்தாள். அவன் கைகள் அவள் இடையை சுற்றி வளைத்து பிடித்தது. “நான் எழுந்திருக்கணும்” அவள் இப்பொழுது  இன்னும் அழுத்தமாக கூற, “இப்ப, நான் வேண்டாமுன்னு சொல்றேன்” அவன் கண்சிமிட்டி கூற,  அவன் அவளை முறைத்து பார்த்தாள்.

“கீது, நான் என் மனசை மாத்திக்கிட்டேன்.” அவன் இடது கை அவளை எழவிடாமல் சுற்றி இருக்க, வலது கையால்  அவள் இதழ்களை நிமிண்டியபடி கூற, “நானும் அதைத்தான் சொல்ல வந்தேன். அடிக்கடி மனசு மாத்திக்கிறவங்க கிட்ட என்னால் பேச முடியாது” அவள் வேண்டா வெறுப்பாக அவன் மீது அமர்ந்தபடி முகத்தை திருப்பிக் கொண்டாள்.

“அன்னைக்கு என் கிட்ட சாவியை மறைத்து வைத்து விளையாட தானே நினைச்ச?” அவன் ரசனையோடு கேட்க, “…” அவளிடம் மௌனம். “கீது, நான் உன்கிட்ட நல்லா பேசினா, உனக்கு என்னை பிடிக்கும். ஆனால், உங்க அண்ணனை குறை சொன்னா பிடிக்காது. நான் சொல்றது சரி தானே?” அவன் காலைப்பொழுதின் இனிமையான மனதோடு அவளிடம் சமரசத்தில் இறங்கினான். பேச்சுவாக்கில் அவன்  பிடிமானம் தளர்ந்திருக்க,  அவள் சரேலென்று அவனிடமிருந்து விலகினாள்.

“உங்க கிட்ட விளையாட, நான் உங்கள் காதல் மனைவியா? இல்லை, நீங்க தான் என் காதல் கணவனா? என் அண்ணனை பழிவாங்க நீங்க என்னை கல்யாணம் பண்ணிருக்கீங்க?” அவள் கூற,அவன் எதுவும் பேசவில்லை. ‘நீ என் காதல் மனைவி’ என்று சொல்ல அவன் மனம் துடித்தது. ஆனால்… அவன் மௌனமாகவே இருந்தான். ‘எதை சரி செய்வது? ஜீவா ஒரு  பக்கம், தாரிணி ஒரு பக்கம், அவன் காதல் ஒரு பக்கம்… கீதாவோ அவன் மனதை தொடும் விதமாக முன்னே நின்று கொண்டிருந்தாள். அவன் சிந்தை பலவாறாக ஓட, “நான் வேலைக்கு போகலாம்னு இருக்கேன்” அவன் சிந்தனையை கலைத்தாள்.

“எதுக்கு? உனக்கு இங்க என்ன குறை? நீ எதுக்கு வேலைக்கு போகணும்?” அவன் அதிகாரமாக கேட்க, “குறை இருந்தா தான் வேலைக்கு போகணுமா?” அவள் கேள்வியும் அவன் தொனியிலே வந்தது. “இந்த பார் உனக்கு தேவையான எல்லாம் இங்க இருக்கு. நான் உன் கணவன், நீ என் மனைவி அந்த உரிமையில் நீ என்கிட்டே எதுவேணுமினாலும் கேட்கலாம்” அவன் பேசிக்கொண்டே போக, “அதாவது, நான் உங்க கிட்ட மனைவியா வேலைப் பார்க்குறேன். நீங்க அதுக்கு சம்பளமா, எனக்கு என்ன வேணும்ன்னாலும் வாங்கி கொடுப்பீங்க?” அவள் புருவத்தை உயர்த்தினாள்.

“கீதா” அவன் குரல் உயர, “பரஸ்பர அன்பு இல்லாத இடத்தில், எதுக்கு இந்த கவனிப்பு?” அவள் குரல் உறுதியாக வெளிவந்தது.

“நீ இப்ப என்ன தான் சொல்ல வர்ற?” அவன் கேள்வியாக நிறுத்த, “அன்பு இல்லாத இடத்தில் கடமையேன்னு மனைவியா வாழற இடத்தில், வேலைக்கு போகாமல்  தெண்டமா சாப்பிடுறது என் சுயமரியாதைக்கும், என் தன்மானத்துக்கும் இழுக்கா இருக்கு” அவள் கூற, அவன் பெருங்குரலில் சிரித்தான்.

“உனக்கு என் மேல் அன்பு இருக்குனு நான் நிருபித்தா?” அவன் கேட்க, “எல்லா ஜீவராசிகளிடமும் அன்பு செலுத்தற பரந்த மனம் எனக்கு உண்டுன்னு அர்த்தம்” அவள் கெத்தாக கூற,  அவள் பேச்சை ரசித்து அவன் சிரித்தான். “அந்த அன்பு, ஒரு மனைவியா உங்கள் மேல் எனக்கு வரவே வராது. என் இதயம்,கணவனுக்கான பாதையை அடைத்து தான் வைத்திருக்கும்” அவள் சவாலாகவே கூறினாள். “அந்த பாதையை நான் என் மந்திரசாவியால் திறந்துவிட்டால்?” அவன் அவளிடம் சவால் விட்டான். ‘அந்த மந்திர சாவி என் அண்ணன்… உங்களால் ஒரு நாளும் முடியாது’ அவள் முகத்தில் ஏளன புன்னகை வந்தமர்ந்து.

“திறந்திட்டா?” அவன் ஒற்றை விரலால் அவள் முகத்தை அவன் பக்கம் திருப்பி புருவம் உயர்த்தி அழுத்தமாக கேட்க, “பார்க்கலாம்… நான் இப்ப வேலைக்கு போகணும்” அவள் தன் பிடியில் நிற்க, “உங்க அண்ணனுக்கே வேலை கிடைக்கலை. டீ கிளாஸ் கழுவறான். உனக்கு என்ன வேலை கிடைக்கும்?” அவன் கேலியாக கேட்க, அவளின் மொத்த நிமிர்வும் அடங்கி, அவள் முகம் வாடியது. “இதுக்கே வாடினா எப்படி கீதா. உன் அண்ணன் வேலையிலும் தோத்து, வாழ்க்கையிலும் தோத்து பிச்சைக்காரனா அலைவான்” அவன் கூற,

“இவ்வளவு பெரிய மெட்ராஸில் என் அண்ணன் போற இடமெல்லாம் உங்களுக்கு தெரிஞ்சி தான் இருக்கணும்னு அவசியமில்லை. என் அண்ணனுக்கு வேலை கிடைக்கும். எல்லாத்தையும் நீங்க தட்டிவிட முடியாது. நீங்க என்ன அவ்வளவு பெரிய ஆளா?” அவள் வருத்தத்தோடு இருந்தாலும், நிமிர்வாக கூறினாள். “ஐயோ, கீது. உங்க அண்ணன் வேலையை தட்டிவிடறதுக்கு எனக்கு யாரையும் தெரிய வேண்டாம். நான் அவ்வளவு பெரிய ஆளுமில்லை. ஆனால், என் ஆளை வைத்து அவன் போற வேலையை மட்டும் தான் தெரிஞ்சிப்பேன். மத்தபடி, உங்க அண்ணனை பத்தி ஊரில் விசாரிக்க சொன்னால் போதும். அவன் வேலை போயிடுது. உன் அண்ணன் பகைத்து வைத்திருக்கிற ஆள் எல்லாம் அப்படி…” அவன் கேலி போலவே உண்மை நிலையை கூறினான்.

“உங்களுக்கும் என் அண்ணனுக்கும் தாரிணி விஷயத்துக்கு முன்னாடியே வேற பிரச்சனை இருந்ததா?” அவள் கேட்க, அவன் முகம் இறுகியது. அவன் முஷ்டியில் நரம்புகள் புடைத்தன.  அவன் சோபாவில் சாய்ந்து அமர்ந்து பின்னே சாய்ந்து தன்னை நிதானப்படுத்திக் கொண்டான்.

சில நிமிடங்களில், “கீதா, நீ ஜீவாவுக்கு தங்கைங்கிறதை மறந்திரு.” அவன் குரல் நிதானமாக ஒலித்தாலும், அழுத்தமாக ஒலித்தது. “நம்ம தொழில் நம்ம ஊரில் இருந்தாலும், பெரும்பாலும் மெட்ராசில் தான். தாரிணி செய்து வைத்த வேலையில் இனி ஊர்  பக்கம் அம்மா, அப்பா வரமாட்டேன்னு சொல்லிட்டாங்க. நான் மட்டும் தான் சிலவற்றை பார்க்க அங்க போவேன். நாம இனி மெட்ராசில் தான் இருப்போம். உங்க அப்பா, அம்மா கிட்டயும் சொல்லியாச்சு. அவங்களும் இங்கயே இருக்கலாமுன்னு முடிவு பண்ணிட்டாங்க.” அவன் சம்பந்தமில்லாமல் பேசிக்கொண்டே போக, “நான் கேட்ட கேள்விக்கு பதில்?” கீதா கூர்மையாக கேட்டாள்.

அவள் முகம் நிமிர்த்தி, “உனக்கு தேவை இல்லைன்னு அர்த்தம் கீது” என்றான் கனிவான புன்னகையோடு. “இந்த வார கடைசியில் உங்க அம்மா, அப்பாவை பார்க்க போவோம். அவங்களுக்கும் உன்னை பார்க்கணும்னு இருக்குமில்லை?” அவன் தன்மையாக கூறினான். உடற்பயிற்சி செய்ய வெளியே செல்ல எத்தனித்தவன் மீண்டும் உள்ளே நுழைந்து, சிந்தனை படர்ந்த அவள் புருவங்களை நீவிவிட்டான்.

“நம்ம தொழில் பத்தி எதுக்கு சொன்னேன் அப்படினா, நம்ம கம்பெனியில் உனக்கு…” அவன் ஆரம்பிக்க, “எனக்கு உங்க கம்பனியில் வேலை வேண்டாம்.” அவள் பட்டென்று கூற, “நீ இப்படித்தான் சொல்லுவன்னு எனக்கு தெரியும். இருந்தாலும், உன் கிட்ட கேட்கணும்னு எனக்கு தோணுச்சு. நாங்க தாரிணிக்கு சுதந்திரம் கொடுத்ததே இல்லை. ஒருவேளை அதனால் தான் தாரிணி எங்களை விட்டு போய்ட்டாளான்னு எனக்கு இப்ப அடிக்கடி தோணுது.” அவன் கர்வம் சர்வமும் அடங்கி அவன் குரலில் வருத்தம் இருந்தது.

அவன் வருத்தத்தில் அவள் மனம் இளகத்தான் செய்தது. “நீ உனக்கு விருப்பப்பட்ட வேலையை தேடிக்கோ. ஆனால், உன் பாதுகாப்பை உறுதி செய்துட்டு தான் நான் அனுப்புவேன்” அவன் கூற, அவள் சந்தோஷமாக தலை அசைத்தாள்.

விலகி செல்ல எத்தனித்த அவன் கைகளைப்  பற்றி நிறுத்தினாள் கீதா. தன் மனைவியின் உரிமையான பிடியில், அவன் நெகிழ்ந்து அவளை பார்த்தான். “எங்க அண்ணன் கூட என்ன பிரச்சனைன்னு சொல்லவே இல்லையே?” அவள் தன்மையாக கேட்க, “நான் சொல்றதாவே இல்லையே” அவனும் தன்மையாகவே கூறிவிட்டு, அவள் கன்னத்தை செல்லமாக தட்டி, அவள் எதிர்பார்க்காத நேரத்தில் அங்கு இதழ் பதித்து கண்சிமிட்டி சென்றான் ரவி.

‘ரவியை எந்த கணக்கில் சேர்ப்பது? அண்ணனுக்கும், ரவிக்கும் இடையில் என்ன நடந்திருக்கும்?’ கீதா கம்பிர நடையோடு செல்லும் கணவனை யோசனையாக பார்த்தாள்.

***

அதே காலை வேளையில் ஜீவா வீட்டில்!

               ஜீவா தாரிணி இருவரிடம் மௌனம். ‘நான் ஏதாவது சொல்லிட்டா, என்கிட்டே பேசமாட்டானா ஜீவா? நான் அப்படி என்ன தப்பா சொல்லிட்டேன். அவன் என்னை வேலை பார்க்க கூடாதுன்னு சொன்னான். நானும் என் பக்க நியாயத்தை கேட்டேன். இதுக்கெல்லாம் இப்படி மூஞ்சியை தூக்கி வச்சிக்கிட்டு இருந்தா, நான் பொறுப்பாக முடியாது.” தாரிணி டம் டம் என்று பாத்திரத்தை உருட்டினாள்.

 அவள் பாத்திரத்தை உருட்டும் சத்தத்தில் அவன் கோபம் விர்ரென்று ஏறியது. “உங்க அப்பா வீடு மாதிரி இது பணக்கார வீடு கிடையாது. நீ பாத்திரத்தை உருட்ட” அவன் கோபமாக கத்தினான். அவன் வார்த்தையில் வெகுண்டு, அவள் மீண்டும் பாத்திரத்தை “டம்…” என்று வைக்க, “ஏய், இப்படி பாத்திரத்தை உடைக்கணும்னு நினைச்சா, உங்க அப்பன் வீட்டுக்கே…” அவன் கூற ஆரம்பித்த வாக்கியத்தின் வீரியம் அறிந்தவன் சட்டென்று நிறுத்திக் கொண்டான்.

“ஏன் நிறுத்திட்ட? முடி ஜீவா வாக்கியத்தை” அவன் முன் கோபமாக நின்றாள் தாரிணி. ஜீவா முகத்தை திருப்பிக்கொள்ள, “வாக்கியத்தை முடின்னு சொல்றேனில்லை” அவன் முகத்தை தன் பக்கம் திருப்பினாள். அவன் அவள் கைகளை தட்டிவிட்டு, ஜன்னல் பக்கமாக சென்று வெளியே பார்க்க, “ஆஹா, காதலிச்சு கல்யாணம் பண்ண பொண்டாட்டி முகத்தை பார்க்க பிடிக்கலை. இன்னும் நமக்கு கல்யாணமாகி முழுசா ஒரு மாசம் ஆகலை?” அவள் இப்பொழுது வெடித்தாள்.

“நான் அப்படி சொல்லலை தாரிணி” அவன் ஜன்னல் வழியாக வெளியே பார்த்துக்கொண்டே சொன்னான். “சொல்லலை ஜீவா, செய்கையில் காட்டுற” அவள் கோபிக்க, “நீ தான் தாரிணி கோபத்தை கிளப்புற” அவன் சிடுசிடுக்க, “இல்லை ஜீவா. நான் பேசினாலே உன் கோபம் கிளம்புது” அவளும்  சிடுசிடுக்க, அவன் குளியலறையில் நுழைந்து கொண்டு கதவை படாரென்று அடைத்தான். அவள் முகத்தில் அடித்தது போல் உணர்ந்த தாரிணியின் கண்கள் கலங்கியது.

‘நான் பேசியது தப்பாவே இருந்தாலும், ஜீவா இப்படித்தான் கோபப்படணுமா? வேலை இல்லை. பணம் இல்லை. ஒருவேளை ஜீவாவுக்கு நான் பாரமா தெரியறனோ?’ தாரிணியின் மனதில் சந்தேகம் கிளம்ப, அவள் உடல் நடுங்கியது. சுவரோடு சாய்ந்து அமர்ந்தாள். ‘எனக்கு எல்லாம் ஜீவா தானே? என் கிட்ட ஜீவா இப்படி கோபப்பட்டா நான் பண்ணுவேன்?’ அவள் கண்கள் கலங்க அவள் அதை துடைத்துக் கொண்டாள்.

‘சின்ன விஷயம். வேலைக்கு போக வேண்டாமுன்னு சொன்னேன். இதில் எதுக்கு தாரிணிக்கு இவ்வளவு முரட்டு பிடிவாதம். எல்லாத்துக்கும், இவ கிட்ட நான் காரணகாரியம் விளக்கணுமா? சொன்னால் கேட்க மாட்டாளா? ஒன்னுமத்த விஷயத்துக்கு இப்படித்தான் மூஞ்சியை தூக்கி வச்சிப்பாளா? மனுஷனுக்கு வெளிய போனாலும் நிம்மதி இல்லை. வீட்டுக்கு வந்தாலும் நிம்மதி இல்லை.’ அவன் பல எண்ணங்களோடு குளியலை முடித்து கொண்டு வந்து சட்டையை போட்டுக்கொண்டு கிளம்பினான்.

‘என்ன இது சாப்பிடாம கிளம்புறாங்க. வர ராத்திரி ஆகும். வெளிய சாப்பிட கூட பெருசா காசில்லை.’ அவள் அனைத்தையும் மறந்து, “ஜீவா சாப்பிட்டு கிளம்பு” என்றாள் உணர்ச்சி துடைத்த குரலில். “எனக்கு வேண்டாம்…” அவன் முறுக்கி கொள்ள, இவளுக்கும் கோபம் ஏறியது.

‘ஜீவா கோபப்படுவான். அது ஊரறிந்த விஷயம். நானும் கோபப்படக்கூடாது’ தன் பொறுமையை இழுத்து பிடித்து பேச ஆரம்பித்தாள். “நானும் நீ வர்ற வரைக்கும் சாப்பிடாமலே இருப்பேன் ஜீவா” அவள் அழுத்தமான குரலில் கூற, ‘மீண்டும் பிடிவாதம்’ அவன் அவளை இப்பொழுது ஆழமாக பார்த்தான்.

அவன் அவளை பார்த்ததும், அவன் பார்வையில் கோபம் இருந்தாலும் அதையும் தாண்டி தெரிந்த ஏதோவொன்றில் கட்டுண்டு, “நான் பேசியது தப்புன்னு நீ  மன்னிப்பு கேட்கணும்முன்னு நினைச்சா, நான் மன்னிப்பு கேட்குறேன் ஜீவா. சாப்பிட்டுட்டு போ” இப்பொழுது அவன் முன் கண்களில் நீர் கோர்க்க வழி மறித்து நின்றாள்.

அவள் விழிகள் அவன் விழிகளை தொட்டு, அவன் மனதை தொட்டது. அவள் கண்கள் தேக்கி வைத்திருந்த நீர்த்துளியில் அவன் கோபம் கரைந்து போனது. “உன்னை மன்னிப்பு கேட்க வைக்குற நோக்கமும் எனக்கு கிடையாது. அந்த அளவுக்கு எனக்கு ஈகோவும் கிடையாது” அவன் சாப்பிட அமர்ந்தான்.

அவள் காலையில் வடித்த சாதத்தின் கஞ்சியை பச்சை மிளகாய், உப்பு கரைத்து கொடுத்து, மதியத்துக்கு சாதமும் கொடுத்தாள். “நீ மதியம் சாப்பிடுறதே இல்லை ஜீவா. அது தான் காலையில் கஞ்சி வச்சிட்டேன். ராத்திரி இட்லி, தோசைன்னு ஏதவது டிபன் பண்ணறேன்.” அவள் கூற, அவன் எதுவும் பேசவில்லை தலையசைத்துக் கொண்டான்.

“ஜீவா, அந்த முனை வீட்டு அக்கா வீட்டில் மட்டும் தான் டெலிபோன் இருக்கு. நான் அவங்க நம்பர் வாங்கி வச்சேன். நீ எதாவது அவசரமுன்னா இந்த நம்பருக்கு கூப்பிட்டு சொல்லு. நானும் பயப்படமா நிம்மதியா இருப்பேன்.” அவன் சட்டை பைக்குள், அவன் தொலைபேசி எண்ணை எழுதிய காகிதத்தை எட்டி வைத்தாள். அவள் அவனை நெருங்க, அவள் இதழ்கள் அவன் கன்னங்களை  தீண்டி சென்றது. அவன் அருகாமை, அவன் சுவாசம் சற்று முன் அவளுள் எழுந்த கலக்கத்தை விரட்ட, “லவ் யூ ஜீவா…” அவள் கண்கள் கலங்கியது.

அவன் தன் கண்களை இறுக மூடித்திறந்து அவளை இடையோடு அணைத்துக் கொண்டான். “அழாத தாரிணி. என் மனசு தாங்கலை” அவன் குரல் மென்மையாக ஒலித்தது. “ஏதோ, கோபப்பட்டுட்டேன் தாரிணி. சாரி” என்றான் இறங்கிய குரலில். ஓர் இரவின் விலகலை கூட தாங்க முடியாமல், அவன் சமாதானம் பேசியதும் அவள் உடைந்து அழுதாள்.

 “நாம அவசர பட்டு கல்யாணம் பண்ணிக்கிட்டது நிஜம் தான். ஆனால், உன்னை அழ வைக்கவோ, கஷ்டப்படுத்தவோ நான் கல்யாணம் செய்யலை தாரிணி. நம்ம பயணம் வெகுதூரம் போகணும். அதுவும் வெற்றிகரமாக. நான் உன் நல்லதுக்கு தான் சொல்றேன்னு நீ புரிஞ்சிகிட்டா போதும்.” அவன் பேசிமுடிக்க,

“லவ் யூயூ ஜீவா…” அவள் அவன் இரு கன்னத்திலும் இதழ் பதிக்க, “சாரி தாரிணி…” அவன் அவள் நெற்றியில் இதழ் பதித்து கிளம்பினான். அவன் சொல்லாத காதலை, அவள் சொன்னாள். அவள் கேட்காத மன்னிப்பை அவன் கேட்டான். அன்பு அனுசரணை மட்டும் தான் வாழ்க்கை என்று தெரிந்த அந்த இளம் ஜோடி சிறப்பாகவே சிறகை விரிக்க தாயாராக இருந்தனர். ஆயிரம் பிரச்சனைகள் வந்தாலும், ‘எங்கள் காதல் எங்களை வாழ வைக்கும்’ இருவரும் ஒரு சேர நம்பினர்.

அன்று ஜீவாவிற்கு ஒரு வேலை கிடைத்தது. செய்தியறிந்த ரவி மிகவும் மகிழ்ச்சி அடைந்தான். ‘எத்தனை முறை தான், நானும் உன் வேலையை தட்டிவிட்டு ஒரே விளையாட்டு விளையாடுவது. எனக்கு சலிப்பு தட்டிருச்சு. இந்த முறை, நீ வேலைக்கு போகணும் ஜீவா. என் விளையாட்டு கொஞ்சம் வேற மாதிரி இருக்கும் இந்த தடவை.’ ஜீவா சந்தோஷமாக அவன் வீட்டிற்கு செல்ல, ரவி பெரு மகிழ்ச்சியில் அவன் அலுவலகத்தில் கொக்கரித்தான்.

நதி பாயும்…                  

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!