Jte-5

Jte-5

நாதன், தன் அதிர்ச்சியை மறைத்து, ஜீவனை “வாங்க ஜீவன் சார்” என்று வீட்டுக்குள் வரச்சொல்லி அழைப்பு விடுத்தார்.

“ம்ம்ம்” என்று, காலணிகளை வெளியே கலட்டி விட்டு வீட்டிற்குள் வந்தான் ஜீவன்.

உள்ளே வந்தவனின் கைகளில் ஒரு சிறு பை இருந்தது.

அந்தச் சிறிய வரவேற்பறையைப் பார்த்தான். பொருட்களின் தன்மை, அவர்களின் பொருளாதாரத்தைச் சொன்னது.

“உட்காருங்க ஜீவன் சார்” – இது நாதனின் உபசரிப்பு வசனம்.

அங்கே கிடந்த ஒரு நாற்காலியில் அமர்ந்தான். நாதன், பவானி படுத்து உறங்கிக் கொண்டிருக்கும், கட்டிலில் அமர்ந்து கொண்டார். ஜீவனின் பார்வைகள், பவானியைத் தொட்ட வண்ணமே இருந்தன.

அன்று பார்த்ததை விட, இன்று மிகவும் ஓய்ந்து போன நிலையில் இருந்தாள். கண்களைச் சுற்றி கருவளையம் வந்திருந்தது. உதடுகள் எல்லாம் வெடிப்புடன் இருந்தன. முடியெல்லாம் கலைந்து போய், சோர்வாய் தெரிந்தாள்.

ஜீவன் பார்வை சென்ற திசையில் பவானி இருந்ததால்… “ஜீவன் சார், எதுக்குக்காக வந்தீங்க??” என்று நாதன் கேட்டுவிட்டார் .

“பவானிக்கு என்னாச்சு?” – ஜீவன், மறுகேள்வியையே பதிலாய் தந்தான்.

ஜீவனுள் ஒரு சந்தேகம் வந்தது. மேலே கேட்டக் கேள்வியை, தான் உரிமையாகக் கேட்க முடியாது என்று தெரியும். சந்தேகம் என்னவென்றால், தான் இந்தக் கேள்வியை உதட்டிலிருந்து கேட்டோமா? இல்லை உள்ளத்திலிருந்து கேட்டோமா? என்று!

“அது.. அது…” என்று தயங்கினார்.

ஆனாலும் நான்கு நாள் பூட்டி வைத்த, மகளைப் பற்றிய மனதின் வலிகளை, யாரிடமாவது பகிர்ந்து கொள்ளலாம் என்று தோன்றியது. அது ஏன் இவராக இருக்கக் கூடாது?? என்ற கேள்வி நாதனுக்கு வந்தது!

“நாலு நாளா பவானி வாக்கிங் வரவே இல்லை. அதான் கேட்டேன். தப்பா எடுத்துக்காதீங்க சார்” – ஜீவன்.

“அவளுக்கு மனசு சரியில்ல சார்”

“இப்ப எப்படியிருக்கு? ஹாஸ்பிட்டல் போனீங்களா?”

“இல்ல ஜீவன் சார். மருந்து மாத்திரை கொடுத்ததுக்கு அப்புறம், இப்போ பரவாயில்லை சார்”

“ஓ…”

பவானிக்கு ‘என்ன பிரச்சனை?’ என்று கேட்போமா என ஜீவனும்,
பவானிக்கு ‘என்ன பிரச்சனை?’ என்று சொல்வோமா என நாதனும் தங்களுக்குள் கேள்வி கேட்டுக் கொண்டிருந்த தருணங்கள் – இவை.

“சார், பவானிக்கு என்ன பிரச்சனை? ” – ஒரு வேகத்தில் கேள்வி கேட்டான் ஜீவன்.

“அவளுக்கு பை போலார் டிசார்டர் (bipolar disorder) சார்” – அதே வேகத்தில் பதில் தந்தார் நாதன்.

ஜீவனுக்கு அதிர்ச்சி. ஏதோ சாதாரண மனநோய் என்று நினைத்தவனுக்கு, நோயின் பெயர் அச்சத்தை ஊட்டியது.

நாதனுக்கு அழுகை வந்தது.

“நாதன் சார், இது.. இது.. இந்த மாதிரி பவானிக்கு… எப்போ இருந்து?”

“சரியா தெரியலை ஜீவன் சார். ஆனா எங்களுக்குத் தெரிய வந்தது, கல்யாணத்துக்கு அப்புறம்தான்”

“அப்போ, அதுக்கு முன்னாடி பவானி நார்மலா இருந்தாளா?”

“சரியா சொல்லத் தெரியலை. ஆனா, காலேஜ் படிக்கும்போதே கொஞ்சம் வித்தியாசம இருந்தா”

“வித்தியாசமானா… எப்படி சார்?”

“சரியா பேச மாட்டா… தனியா போய் உட்கார்ந்துக்குவா… நல்லா படிச்சப் பொண்ணு சார், பவானி… தீடீர்னு சரியா படிக்கலை… அதான் ஆரம்பம்னு நினைக்கிறேன்”

“ஏன் அப்படி நடந்துக்கிட்டான்னு, தெரியுமா?”

“சார், பவானியோட அம்மா, பல்லவி பிறந்ததும் இறந்துட்டாங்க. அப்போ என்னோட கவனமெல்லாம் பல்லவிய வளர்க்கிறதுலே இருந்தது.”

“புரியல சார். இதுக்கும், பவானிக்கு இப்படி ஆனதுக்கும் என்ன சம்பந்தம்? ”

“சார், அந்தச் சமயத்தில, பவானிக்கு கொஞ்சம் விவரம் தெரிய ஆரம்பிச்சது. அதனால நான் வேற யார்கிட்டயும் உதவி கேட்கல. அவளே வீட்டு வேலையெல்லாம் பார்த்துட்டு… சமைச்சிக் கொடுத்துட்டு… ஸ்கூலுக்குப் போவா. இப்படி அவ சின்ன வயசிலருந்தே வேலை பார்க்க ஆரம்பிச்சிட்டா”

“அதுக்கும் பிரச்சனைக்கும் என்ன சம்பந்தம்?”

“அவ்வளவு சின்ன வயசிலயே வீட்டுப் பொறுப்பைக் கொடுத்தது… அப்புறம் நான் பல்லவிய மட்டும் கவனிச்சு, பவானிய கவனிக்காமல் போனது… இதெல்லாம்தான் பவானி அப்படி இருக்கிறதுக்கு காரணம்னு, நானா நினைச்சிகிட்டேன். அதான் கல்யாணம் பண்ணி வைக்கலாம்னு முடிவு பண்ணேன்”

“கல்யாணம் பண்ணா பிரச்சனை எப்படி சார் சரியாகும்? நீங்க பவானிய ஹாஸ்பிட்டல்ல கூட்டிட்டுப் போயிருக்கனும் ” – ஒரு கோபத்துடன் கேட்டு விட்டான் ஜீவன்.

தனக்கென தனி உலகம் அமைத்து வாழ்கையில், தனக்காக நிறைய இடங்களில் கோபம் வந்திருக்கிறது. ஆனால் இதுவே முதல் முறை, சக உயிருக்காக கோபம் கொள்வது. எனினும் அது சரியா என்று தெரியாததால் கீழே உள்ள கேள்வி கேட்டான்.

“சாரி சார். தப்பா கேட்டிருந்தா?”

“நீங்க சொல்றது கரெக்ட். அவளை அப்பவே சரியா கவனிச்சிருக்கனும். நான் வேறுமாதிரி நினைச்சேன்”

“என்னென்னு?”

“இல்லை சார், கல்யாணம் பண்ணிப் புருஷன்னு ஒருத்தன் வந்து, அவளைக் கவனிச்சிக்கிட்டா… அவ சரியாயிடுவான்னு நம்பித்தான் கல்யாணம் பண்ணி வச்சோம். ஆனா மதன்… ”

“ஏன் நாதன் சார், மதன் வீடு எப்படி?? அடிக்கடி பவானி சொல்றால அங்க போக மாட்டேன்னு. அதான்… ”

“மதனுக்கு ரெண்டு தங்கச்சி சார். அவங்களும் படிச்சி முடிச்சிட்டு வீட்ல இருந்தாங்க. பவானிய விட வயசில பெரியவங்க. சரி நம்ம பொண்ண நல்லா பாத்துப்பாங்கன்னு நம்பிக் கொடுத்தோம்”

“அவங்க சரியா பார்த்துக்கலையா?”

“எப்படிச் சொல்லறது சார். மதனோட அம்மாவும், எல்லோரும் நினைக்கிற மாதிரி, வீட்டு மருமக எல்லா வேலையும் பார்க்கணும்னு நினைச்சாங்க. ஆனா அவங்களுக்கு அந்தமாதிரி மருமகளா பவானியால இருக்க முடியல. அவளோட மன அழுத்தம், அவங்க நினைக்கிற மாதிரி அவளை இருக்க விடல. அதுதான் உண்மை”

“ப்ச்.. பவானி கல்யாணம் எப்போ சார் நடந்திச்சு??”

“ஒன்பது மாசத்துக்கு முன்னாடி சார். அவ காலேஜ் முடிச்ச அடுத்த மாசத்துல கல்யாணம் நடந்தது. அப்ப நாங்க அதுக்குத் தயாரா இல்ல. கடன் கொஞ்சம் வாங்கிதான் கல்யாணம் பண்ணோம்”

“ஏன் சார், பவானிக்கு கல்யாணம் பிடிக்கலையா??” – ‘எதற்கு தான் இந்தக் கேள்வி கேட்கிறோம்?’ என்று தெரியாமல் கேட்டான் ஜீவன்.

கைகளை விரித்தார், நாதன்.

‘கல்யாணம் பிடிக்கலையோ’ என்று ஜீவனும்…
‘கல்யாணம் பிடிக்கலைன்னா சொல்லியிருக்காலாமே’ என்று நாதனும் நினைத்ததால் வந்த மௌனங்கள் நிரம்பிய தருணங்கள் – இவை.

“அப்புறம் என்னாச்சு?” – ஜீவன்.

“மதன் வீட்லருந்து தினமும் போஃன் பண்ணுவாங்க சார்.”

“ஏன்?? எதுக்காக புரியல??” என்று ஒரு வேகத்துடன் கேட்டான்.

‘தன்னிடம் எதற்கிந்த வேகம்? அவளின் பிரச்சனையை அறிந்து கொள்ள நினைக்கின்றோமா?? இல்லை புரிந்து கொள்ள நினைக்கின்றோமா??’ என்ற மனநிலையில் இருந்தான், ஜீவன்.

“பவானி இங்க இருந்ததவிட, அங்கே போய் ரொம்ப மோசமாயிட்டா சார். அடிக்கடி தனியா இருக்கனும்னு நினைச்சு, எங்கயாவது போயிருவா சார். மதன்தான் தேடிப்போய் கூட்டிட்டு வருவாரு”

“….”

“எந்த வேலையும் பார்க்காம, சும்மாவே இருந்திருப்பா போல. சில நேரம் தேவையே இல்லாம சிரிச்சுப் பேசுவா போல… ”

“….. ”

“நைட்டு சரியாய் தூங்கமாட்ட சார். தினமும் அப்படித்தான். ஆனா காலைல பாருங்க, எந்த களைப்பும் முகத்தில தெரியாது ”

‘உலகமே தூங்கும் போது நாம் மட்டும் விழித்திருப்பது நரகம்’ என்று ஜீவனின் உள்ளத்தில் உதித்தது.

“எதுலயுமே நம்பிக்கை இல்லாம, பிடிப்பே இல்லாம… பயத்தோட இருப்பா சார்” – நாதன்.

‘இதனால்தான் தனியா வாக்கிங் போக பயந்திருப்பாளோ?’ என்று எண்ணியவன் “தெரியும்” என்றான்

“இதோ இப்ப நாலு நாள் இருந்ததுல.. அதேமாதிரி எரிச்சல் வந்து கத்திக்கிட்டே இருந்திருப்பா போல”

‘தன்னிடம் கத்திவிட்டுச் சென்றதுக்கு இதுதான் காரணமா??’ என்று எண்ணியவன் “தெரியும்” என்றான்

“ஏன் ஜீவன் சார், உங்ககிட்ட ஏதும் கோபப்பட்டாளா? நீங்க தெரியும்னு சொல்றீங்க”

“இல்லை சார். என்கிட்ட நல்லாதான் பேசுவா” என்று அவளின் குறைகளை மறைக்க ஆரம்பித்தான்.

“ம்ம்ம், இதுவே கொஞ்ச நாள்கழிச்சு நடந்திருந்தா கூட, மதன் புரிஞ்சிருக்க முடியும்னு நினைக்கிறேன். புதுசா கல்யாணம் பண்ண பொண்ணு இந்த மாதிரி நடந்துக்கிட்டா… அவர் என்ன பண்ணுவாரு? அவருக்கு இது பெரிய குறையா தெரிஞ்சது”

“…. ”

“இதெல்லாம் ஒருத்தர் புரிஞ்சுக்கிட்டு வாழறது கஷ்டம் சார். மதனுக்கோ, அவங்க வீட்ல இருக்கிற மத்தவங்களுக்கோ பவானியைப் புரிஞ்சிக்க முடியல சார்”

“…. ”

“அவ அங்க இருந்தப்போதான், மன உளைச்சலோட உச்சகட்டதில்ல இருந்திருக்கா”

“அந்த டைம், அவங்க வீட்ல சரியா கவனிக்கலையா?”

“அவளை நல்லா புரிஞ்சிக்கிட்ட என்னாலேயே சிலசமயம் கவனிக்கிறது, சமாளிக்கிறதெல்லாம் கஷ்டம் சார். புரிஞ்சிக்காதவங்க… என்ன பண்ணுவாங்க?? அவங்க கோபத்தையெல்லாம் இவகிட்ட காமிச்சிருக்காங்க. திட்றதும்.. அடிக்கிறதும்… இதுக்கா சார் என் பொண்ண கல்யாணம் பண்ணிக் கொடுத்தேன்? ” என்று கோபமும், வருத்தமும் கலந்து வந்தன நாதனின் குரலில்.

“ப்ச்”

“அதான் கடைசில பவானி அப்படி பண்ணிக்கிட்டா”

“பவானி என்ன பண்ணா?” என்று பட்டென்று கேட்டான், ஜீவன்.

“திடீர்னு ஒரு நாள் மதன் போஃன் பண்ணி, பவானிய ஹாஸ்பிட்டல்ல அட்மிட் பண்ணியிருக்கேன், வாங்கன்னு கூப்பிட்டாரு”

“ஹாஸ்பிட்டல்லா?? ஏன்?” என்று அதிர்ந்தான்.

“ஹாஸ்பிட்டல் போன பிறகுதான் தெரிஞ்சது. பவானி தற்கொலை பண்ண டிரை பண்ணியிருக்கான்னு”

“தற்கொலையா? பவானியா??” என்று சொன்னவனின் மனப்பிரதேசம் பூகம்பத்தைச் சந்தித்தது.

“கல்யாணம் பண்ணி வச்சா, பவானி நல்லா இருப்பான்னு நினைச்சேன். ஆனா, ஹாஸ்ப்பிட்டல்ல அவளை அப்படிப் பார்க்கிறப்ப எனக்கு எப்படி இருந்திருக்கும்??”

“… ”

“அப்புறம் டாக்டர்ஸ் ஸ்கேன் பண்ணச் சொன்னாங்க. பவானியோட ரிசல்ட் சொல்லியிருச்சி சார். அவளுக்குப்…”

“பைபோலார் டிசார்டர்னு சொன்னாங்களா? ”

“ஆமா”

“நாதன் சார், டாக்டர் என்ன காரணம் சொன்னாங்க”

“மூளைல கெமிக்கல் இம்பேலன்ஸ்.. அப்படி… இப்படின்னு… ”

” ஓ”

“ஜீவன் சார் இதெல்லாம் கூட நான் தாங்கிக்குவேன். ஆனா…”

“சொல்லுங்க சார்?”

“என் பொண்ணு, மன அழுத்தம் அதிகமானதுனால செஞ்சதெல்லாம், மதனும் அவங்க அம்மாவும் எல்லார் முன்னாடியும் சொல்லி, அவளை அசிங்கப்படுத்திப் பார்க்கிறது… அதையே சொல்லிக் காட்டி விவாகரத்து கேட்கிறது… இந்த ரெண்டையும் நான் மன்னிக்கவே மாட்டேன்.” என்று உணர்ச்சி வசப்பட்டார்.

“அப்புறம் ஹாஸ்பிட்டல்ல என்ன…”

“அன்னைக்கு மதனுக்கும் பாலாவுக்கு பெரிய சண்டை சார். மதன் ஹாஸ்பிட்டல்ல அட்மிட் பண்ணிட்டு மட்டும் போயிட்டாரு. அதுக்கப்புறம் பார்த்ததெல்லாம் பாலாதான் சார்”

“பாலாவா?? ”

“சும்மா சொல்லக்கூடாது சார்… பாலா, என் மருமக, பல்லவி மூனு பேரும் போட்டிப் போட்டுக் கவனிச்சாங்க”

“ஓ..”

“அந்த ஒரு மாசம் முழுசும் ஹாஸ்பிட்டலதான் இருந்தோம். அவ்ளோ செலவையும் பாலா சமாளிச்சான் சார். தங்கச்சிக்காக கடன் வாங்கினான். பவானியைச் சரியாக்கி வீட்ல கொண்டு வந்து உட்கார வச்சதே அவன்தான்”

“நல்ல அண்ணன்”

“வீட்டுக்கு வந்தப்புறமும், என் மருமக நல்லா கவனிச்சா சார்… பல்லவி கூட முடிஞ்ச அளவு உதவினா… ஆனா, அந்தக் கவனிப்பும், உதவியும் ஆயுள் முழுசும் கொடுக்கணும்கிறப்போ, எல்லோரும் பின்வாங்க ஆரம்பிச்சாங்க… அவங்க மனசு அதுக்கு ஒத்துக்கல”

“பாலாவோட வொய்ப் வேலை பார்க்கிறாங்களா?

“ஏன் கேட்கறீங்க??”

“இல்லை வீட்ல இல்லையே.. அதான்”

“என் மருமக, அவளோட அம்மா வீட்ல இருக்கா சார்”

“அவங்க வீடு எங்க??”

“இங்கதான் சார், ஒரு நாலு வரிசைத் தள்ளி இருக்கு. என் மருமகளோட அம்மாவுக்கும் அப்பாவுக்கும் பவானி இங்க இருக்கிறது பிடிக்கல”

“அவங்களுக்கு ஏன் பிடிக்கலை?”

“பவானிக்கு இப்படி அடிக்கடி ஆயிடும்ல சார். அப்போ இவ இப்படி கத்தின்னா, அவங்க பேரப்பையன் பயப்புடுவானாம். அதோட, இனிமே பவானிய கவனிக்க மருமகளுக்கு நேரம் கிடைக்காதாம்”

“அவங்க சொல்றது கரெக்ட்தான”

“அது கரெக்ட் சார். அதுக்காக, பவானி மதன் வீட்டுக்கு அனுப்பினாதான், அவ இங்க வருவேன்னு சொல்றது.. தப்பு சார்”

“ஓ”

“முதல்ல, அவன் மனைவி பேசிறத பாலா கண்டுக்கல. ஆனா இப்போ, கடன் ரொம்ப அதிகமாயிருச்சி… அதுமட்டுமில்ல அவனுக்குன்னு ஒரு வாழ்க்கை வந்திருச்சு… அவன் பொண்டாட்டி, அவன் பையன்னு வாழ நினைக்கிறான்.”

“பாலா வொய்ப் உங்ககூட பேச மாட்டாங்களா?. ”

“நல்லா பேசுவா சார். இப்பவும் லீவ் நாளுன்னா பல்லவிய, பாலாவ என்னைய வீட்டுக்கு சாப்பிடக் கூப்பிடவா! ”

“அப்புறம் என்ன நாதன் சார்?”

“பவானிம்மா?? அவளைக் கூப்பிட மாட்டாங்களே! அவளைத் தனியா விட்டுட்டு நான் எப்படி சார் போவேன்?? ”

“…..”

“பாலா நல்லவன்தான். ஆனா அதுக்காக அவன் பேசிறதெல்லாம் நியாயமில்லை. அவனுக்கு ஒரு ஆசை… மதன் கூட சேர்ந்து பவானி சந்தோஷமா வாழணும்னு. ஆனா மதனுக்கும் அதே மாதிரி ஆசை இருக்கணும்ல சார்”

“ப்ச், முதல்ல பவானிக்கு அந்த மாதிரி வாழ விருப்பம் இருக்கணும்”

‘பவானி விருப்பதைப் பற்றி யோசிக்க நான் யார்?’ என்ற கேள்வி வந்ததால் ஜீவனும்,
‘இவர் என்ன சொல்ல வருகிறார்?’ என்று நினைத்தால் நாதனும், அமைதியாக இருந்த தருணங்கள் – இவை.

“இல்லை. முதல் நாள், பவானி சொன்னால ‘மதன் வீட்டுக்குப் போக மாட்டேன்னு’ அதை வச்சிக் கேட்டேன்.” – ஜீவன்.

“ஓ! புரிஞ்சிக்காதவன் கூட எப்படி சார் போய் வாழ முடியும்”

“கரெக்ட்”

“மதனுக்கு கொஞ்சமாவது பவானி மேல அன்பு இருந்தா… அவளைப் புரிஞ்சிக்க முயற்சி செஞ்சிருப்பாருல. முதல்ல இல்லைனாலும், இதுதான் பிரச்சனைன்னு தெரிஞ்சதுக்கு அப்புறமாவது… நான் சொல்றது கரெக்ட்தான சார்??”

“ரொம்ப கரெக்ட் சார்”

“அவனுக்கு என் பொண்ணு மேல பாசமே இல்ல சார். அப்படிப்பட்டவன் வீட்டுக்கு, என் பொண்ண நான் எப்படி அனுப்புவேன்… சொல்லுங்க சார்??”

“… ”

“ஒருநாளும் அனுப்ப மாட்டேன். இந்த பாலாதான் எப்ப பாரு ‘மதன் வீட்டுக்கு போ.. போன்னு’ சொல்லிகிட்டே இருக்கிறான்.”

“… ”

“சார் என் பொண்ணு திடீர்னு நிறைய சாப்பிடுவா… சில நாளு சாப்பிடவே மாட்டா… நாலு நாளைக்கு அப்புறமா இன்னைக்குத்தான் தூங்கிறா. மதன் வீட்டுக்குப் போனா? இப்படி இருக்க விடுவாங்களா?? சொல்லுங்க சார் ??”

“… ”

“என் பொண்ணப் பத்தி எனக்குதான் தெரியும். நான் இருக்கிற வரைக்கும் எவனும் பார்க்க வேண்டாம். நானே பார்த்துக்குவேன். எனக்கு அந்த தைரியம் இருக்கு”

“நல்ல முடிவு சார்”

“ஆனா, நான் போனப் பிறகு யார் பார்த்துக்குவான்னு?? நினைக்கிறப்ப அந்த தைரியம் போயிடுது சார்”

இந்த இடத்தில தான் ஏதோ சொல்ல வேண்டும் என்று ஜீவனுக்குத் தோன்றியது. ஆனால் என்ன சொல்ல? எப்படிச் சொல்ல? ஏன் சொல்ல வேண்டும்? என்று தெரியவில்லை.

“ரொம்பக் கஷ்டம் சார். ஏதோ நோய் வந்திச்சு, கவனிச்சிட்டு விட்டோம்னு போக முடியாது சார்” – நாதன்.

“புரியுது”

“இந்த மாதிரி மன அழுத்தம் அடிக்கடி வரும். இதோ இப்ப எரிச்சலா இருந்த பாருங்க அந்த மாதிரி.. நிறைய இருக்கு.”

“ஆமா, அன்னைக்கு கத்தவும் செஞ்சா”

“உங்களுக்கு எப்படித் தெரியும்?”

“இல்ல வாக்கிங் போறப்ப கொஞ்சம் அப்படித்தான் இருந்தா”

“அப்போ இல்லைன்னு சொன்னீங்க?”

“அது.. அது…”

மதனைப் போலில்லாமல், தன் மகளின் குறைகளை மேடை போட்டுச் சொல்ல மறுக்கிறாரே இவர்! ஏன்? என்று நாதனுக்குத் தோன்றியது.

“உங்ககிட்ட எதுவும் கோபப்பட்டு பேசலையே. கத்தினாலும் மனசுல வச்சிக்காதீங்க சார். ஏன்னா? அவ நார்மல் ஆயிட்டானா, இதெல்லாம் நியாபகம் இருக்காது” – நாதன்.

“ப்ச். இதை நீங்க சொல்ல வேண்டிய அவசியமேயில்லை. நீங்க ஸ்டார்ங்கா இருங்க சார்”

“ம்ம்… எரிச்சல் மட்டுமில்ல சார்… அழுகை, சிரிப்பு, பயம்… எல்லாம் உண்டு… சில சமயம் நம்பிக்கை இல்லாம இருப்பா… ஆனா இது எதுவுமே இல்லாம, ஒரு சில நேரம் ரொம்ப அமைதியா இருப்பா சார். எந்த உணர்ச்சியையும் முகத்தில காட்ட மாட்ட. அதுதான் என்னால தாங்கவே முடியாது”

“கவலைப் படாதீங்க, சரியாயிடும்”

“ஐயோ சார். இது சரியாகாது. நம்ம கொடுக்கிற கவனிப்பில, இந்த மனச் சோர்வு வருது பார்த்தீங்களா… அதை வேணா குறைக்கலாம்”

“ம்ம்ம்”

“ஆனா இவனுங்க எங்க ஜீவன் சார் கவனிக்கிறாங்க ??”

“இவனுங்க யாரு??”

“அதான் மதனும் பாலாவும்”

“ஓ”

“என்னைக்காவது, அவ அழுகிறப்போ ஏன் அழறன்னு? கேட்டிருக்காங்களா?”

நான் கேட்டேனே. முதல் முறையாக அவளைப் பார்த்துக் கேட்ட கேள்வியே அதுதானே! – இது நம் ஜீவன் சாரின் மனப்பிரதேசம்.

“என்னைக்காவது, பவானி.. இது உன் வாழ்க்கை. நீயே முடிவெடுன்னு சொல்லியிருக்காங்களா??”

நான் சொல்லியிருக்கேனே! உன் வாழ்வின் முடிவினைத் தெளிவானப் பிறகு நீயே எடு என்று!! – இது நம் ஜீவன் சாரின் மனப்பிரதேசம்.

“அட அத விடுங்க சார் … ‘நீ எப்படி இருக்கன்னு?’ விசாரிச்சங்களா?”

நான் விசாரித்தேனே! எத்தனை கேலிகளோடு அவளிடம் கேள்விகள் கேட்டேன்!! – இது நம் ஜீவன் சாரின் மனப்பிரதேசம்.

“அதே மாதிரிதான், பவானியும் யார்கிட்டயும் போயி நல்லா இருக்கீங்களான்னு கேட்க மாட்டா”

என்னிடம் கேட்டாளே!

தனது உலகத்தில் தனியே நின்று கொண்டு புரியாமல் உபயோகித்த வார்த்தைகள் எல்லாம்… அவள் உலகத்தில் புழக்கத்தில் இல்லாத வார்த்தைகள் என்று புரிந்தது. – இதுவும் நம் ஜீவன் சாரின் மனப்பிரதேசம்.

“எதுவுமே இல்ல. இவன் டிவோர்ஸ் கொடுக்காதன்னு சொல்றதும். அவன் டிவோர்ஸ் கொடுன்னு கேட்கறதும்… அவளுக்கு எப்படி இருக்கும்??” – நாதன்.

“இங்க ‘அவன்னா’ மதனா சார்??” – ஜீவன்.

“ஆமா ஜீவன் சார். என் பொண்ண கஷ்டப்படுத்திறவனுக்கு நான் ஏன் மரியாதை கொடுக்கனும்”

“நீங்க சூப்பர் சார்”

“இவனுங்கதான் இப்படின்னா?? சுத்தி இருக்கிறவங்க… அதைவிட மோசம்.”

“ஏன்? அவங்க என்ன பண்ணாங்க?”

“பவானி, இப்படி இருக்கிறது பார்த்து, யாருமே பேசுறதே இல்லை. வள்ளிம்மா… இன்னும் கொஞ்சம் பேர் பேசுவாங்க ”

தன்னைப் போலவே சமுதாயத்தால் புறக்கணிக்கப்படும் ஜீவன் இவள். – இது ஜீவன் சாரின் மனச்சுமை.

“பவானியும் யார்கிட்டயும் பேச மாட்டா. பேசறதென்ன… இந்த எட்டு மாசமா, என் பொண்ணு சிரிச்சே நான் பார்த்தது இல்லை சார் ”

பவானியை, தான் இருமுறை சிரிக்க வைக்க முயன்று தோற்றுப் போனது நினைவில் வந்தது. அடுத்த முறை ஜெயம் உண்டாக வேண்டும் இந்த ஜீவனுக்கு! – இது ஜீவனின் ஆசை.

“ஐயோ ஜீவன் சார். என் மனசிலருந்த வேதனையெல்லாம் உங்ககிட்ட சொல்லி, உங்களைத் தொந்தரவு பண்ணிட்டேன்”

“அப்படி இல்லை நாதன் சார்”

“உங்களைப் பத்தி எதுவுமே சொல்ல மாட்டிக்கீங்க. எந்த ஊரு? அம்மா அப்பா பத்தி?? ”

ஜீவனிடம் நிசப்தம்!

“சொல்ல விருப்பம் இல்லைன்னா விட்ருங்க ” – நாதன்.

“விருப்பம் இல்லை சார்”

“சரி.. சரி.. அப்புறம் ஜீவன் சார், நீங்க எதுக்கு வந்தீங்க”

“அது.. அது… பவானிக்கு இதெல்லாம் வாங்கினேன். அதான் கொடுத்திட்டு போகலாம்னு வந்தேன்” என்று தான் கொண்டு வந்த பையினை எடுத்து நாதனிடம் கொடுத்தான்.

நாதன், அதைத் திறந்து பார்த்தார். உள்ளே, வெண்ணிற கைகுட்டைகள், எம்பிராய்டரி வேலைக்கான பொருட்கள் மற்றும் வண்ண வண்ண நூல்கள் இருந்தன.

“பவானி சொன்னா… இந்த வொர்க் பண்றது பிடிக்கும்னு. அதான் வாங்கிட்டு வந்தேன்” என்றான் ஜீவன்.

“ஓ! பவானி வாங்கிட்டு வரச் சொன்னாளா?? ”

“இல்லை நானே… நானேதான்”

‘பன்னிரெண்டு ரூபாயே கேட்டவன், இதை விடவா போகிறான்’ என்று நினைத்துக் கீழே உள்ள வசனத்தைச் சொன்னார்.

“சரி சார். இருங்க பணம் எடுத்திட்டு வரேன்” – நாதன்.

“இல்லை… பணம் வேண்டாம்”

“சார், எங்க வீட்டோட நிலைமை, உங்களுக்குத் தெரிஞ்சிருக்கும். பவானி சொல்லியிருப்பா. அதுக்காக பணம் கொடுக்காம இருந்தா நல்லா இருக்காது”

“இல்லை நாதன் சார். விட்டிருங்க”

“சார், நிறைய வாங்கியிருக்கீங்க. அவ்ளோ பணம் கொடுக்க முடியாது. என்னால முடிஞ்சதைத் தரேன். வாங்கிக்கோங்க” என்று உள்ளறை சென்றார்.

“ப்ச்” என்று சொன்னவன், நாதன் சென்று விட்டுத் திரும்ப வரும்வரை பவானியைப் பார்த்திருந்தான்.

நாதன் உள்ளறை சென்று, ஒரு முந்நூறு ரூபாய் கொண்டு வந்து நீட்டினார்.

வாங்க மறுத்தான்.

“புரிஞ்சிக்கோங்க சார்” – நாதன்.

“நீங்க புரிஞ்சிக்கோங்க சார்”

“என்ன புரியனும்? ”

“அது… அது” என்று தன் தன்மை இதுவல்லவே என்பதால் திணறித் தடுமாறினான்.

“சொல்லுங்க ஜீவன் சார்”

“நாதன் சார், அது நான் பவானிக்காக வாங்கினது” என்று சொல்லி, தன் தனிமையில் இருந்து கொஞ்சம் தடம்மாறினார்.

ஜீவன் சென்று விட்டான்.

“????” – இது அதிச்சியுடன் நிற்கின்ற, நாதன்.

“!!!!” – இது ஆச்சிரியங்களுடன் நிற்கின்ற, நாம்.

‘யாரிவன்? தன்னைப் பற்றி எதுவுமே சொல்ல மறுக்கும் மனிதன்!’ – நாதன்.

இன்னும் அவருக்கு அதிர்ச்சி உண்டு.

error: Content is protected !!