Jte-8

Jte-8

 

 

மற்றொரு நாளின் விடியல்…

மலைப்பிரதேசத்தின் நிலை…

ஏற்கனவே நான்கு நாட்கள் நடைப் பயிற்சி இல்லாதது மற்றும் இன்றும் ஜீவனைக் காண முடியாதது என்ற காரணங்களால் பவானி மனநிலை மனஅழுத்தம் கொண்டது.

ஜீவன் வாங்கித் தந்திருந்த நூல் வேலைப்பாட்டிற்கானப் பொருட்களை எடுத்து வைத்துக் கொண்டு, அமர்ந்து விட்டாள்.

பாலா, பல்லவி இருவரும் ஒரு வித்தியாசமானப் பார்வையை வீசிவிட்டுக் கிளம்பினார்கள்.

நிரம்ப நாட்களுக்குப் பின்னர் செய்வதாலோ அல்லது உளநோயின் மனஅழுத்தத்தின் ஒரு பகுதியான கவனமின்மை காரணமோ, சரியான முறையில் பூக்கள் வரவில்லை.

நூலைப் பிரித்தாள். திரும்பவும் தைத்துப் பார்த்தாள். இந்த முறையும் பூக்கள் சரியில்லை. மறுமுறை முயற்சிக்கலாம் என்று, நூலைப் பிரித்துத் தைத்துப் பார்த்தாள்.

இம்முறையும் பவானிக்குத் திருப்தியில்லை.

இதுவே திரும்பத் திரும்ப நடந்தது. அதன் விளைவாக, தன்னால் முடியும் என்ற நம்பிக்கையை இழக்க ஆரம்பித்தாள்.

அனைத்தையும் தூக்கி வைத்துவிட்டு, சமயலைறயில் இருந்த தந்தையிடம் சென்றாள்.

“அப்பா”

“சொல்லும்மா பவானி”

“ஏதாவது ஹெல்ப் பண்ணவா?”

“வேண்டாம். அப்பா பார்த்துக்குவேன். நீ ஏதோ பண்ணிக்கிட்டு இருந்தியே, அதைப் போய் பண்ணும்மா”

“அது சரியாவே வர மாட்டிக்குப்பா. அதான் ஒருமாதிரி இருக்கு. எனக்கு கொஞ்சம் ஹெல்ப் பண்ணுங்கப்பா”

“அப்போ விட்ரும்மா. அப்பாவுக்கு வேலை இருக்கு பாரு. பேசாம ரெஸ்ட் எடு பவானி” என்று சொல்லி, பவானியை அனுப்பி விட்டார்.

வெளியே வந்தவள் கட்டிலில் அமர்ந்து யோசிக்க ஆரம்பித்தாள். தான் யாருக்குமே பிரயோஜனம் இல்லாமல் வாழ்கிறோமோ?? தனக்கு யாரும் உதவ மாட்டார்களோ?? என்ற எண்ணங்கள் மேலோங்கி இருந்தது.

இதுவும் உளநோயின் தன்மையே! தனக்கு யாரும் உதவ மாட்டார்கள் என்ற எண்ணம் வருவது…

இருந்தும் ஜீவனின் ‘உன்னால முடியும்’ என்ற வார்த்தை மனதில் நிறுத்தி, திரும்பவும் நூல் வேலையை ஆரம்பித்தாள்.

மனப்பிரதேசத்தின் நிலை…

தனிமையில் இருக்கின்றேன் என்ற பேர்வழியில், பவானி நீங்கிய பொழுதுகளில் ஏங்கிய மனதை என்ன செய்ய? என்று தெரியாமல் திண்டாடினார் ஜீவன் சார்!!.

இரண்டு நாட்களுக்குப் பின்…

வாடைக்காற்று வானிலையில், மலைப்பிரதேசம் குளிர் பிரதேசமாக மாறியிருந்தது. பவானியின் வீட்டில் பாலாவும் நாதனும் பேசிக் கொண்டிருந்தனர்.

“பாலா, இன்னைக்கு பவானியை கவுன்சிலிங் கூட்டிட்டுப் போகணும்” – நாதன்.

“நானும் நினைச்சேன்ப்பா. இடையில அந்த நாலு நாளும் ரொம்ப மோசமா இருந்தால பவானி?”

“ஆமா பாலா. இந்த ரெண்டு நாள்கூட கொஞ்சம் கவனமில்லாம இருக்கிறா. அதான் கேட்கிறேன்… ”

பாலாவுக்கு, நாதன் கேட்பது புரிந்தது. தன் சட்டைப் பையிலிருந்து ஒரு எழுநூறு ரூபாய் எடுத்து நீட்டினான்.

நாதன் வாங்கிக் கொண்டார்.

“இவ்வளவுதான் இருக்குப்பா. மருந்து மாத்திரையெல்லாம் பாதிப் பாதியா வாங்கிக்கோங்க. மிச்சத்தை அப்புறமா வாங்கித் தரேன்”

“இல்லைடா. பார்ட் டைம் வேலைக்குப் போனதுல கொஞ்ச பணம் இருக்கு”

“வேலைக்குப் போகக் கூடாதுன்னு சொன்னா கேட்கிறீங்களா?”

“விடுப்பா. நம்ம பவானிக்காகத்தான”

“உங்க உடம்பையும் பார்த்துக்கோங்க. மாத்திரை சரியா சாப்பிடறீங்களா?

“சாப்பிடறேன்டா”

“அப்புறம் அப்பா, அப்படியே மதன் வீட்டுக்கும் போயிட்டு வந்துருங்க”

“ஏன்டா?”

“மலை அடிவாரம் வரைக்கும் போறவங்க, மதன் வீட்டுக்குப் போகலைன்னா நல்லா இருக்காது”

மலையின் அடிவாரத்தில்தான், மருத்துவமனையும், மதன் வீடும் அமைந்துள்ளது.

“ம்ம்ம், சரிடா” என்று தேவையானப் பொருட்களை எடுத்து வைக்க ஆரம்பித்தார்.

“இதே பவானி, மதன் வீட்டுக்குப் போய்ட்டா, இந்தச் செலவு நமக்கு இருக்காது” என சலித்துக் கொண்டே சொல்லிவிட்டுச் சென்றான் பாலா.

பெற்ற பிள்ளையையும் கட்டிய மனைவியையும் பிரிந்து இருப்பதால் வந்த வார்த்தைகள் என்றாலும், பெற்றவரால் அதைச் சாதாரணமாகக் கடந்து செல்ல முடியவில்லை.

இவர்கள் உரையாடல் அத்தனையும், பவானி எந்தவித உணர்ச்சியும் காட்டாமல் கேட்டிருந்தாள்.

வீட்டைப் பூட்டிவிட்டு, பவானியும் நாதனும் கிளம்பினார்கள்.

*******

மலைப் பிரதேசத்தின் அடிவாரத்தை அடைய ஜீப் வசதி உண்டு. அதில் ஒன்றில், பவானியும் நாதனும் ஏறி அமர்ந்தனர்.

ஜீப்பின் சன்னலோர எதிர்காற்றாய் பனிக்காற்று வர, மலைப்பிரதேசச் சாலை வளைவுகளில் பயணம் தொடங்கியது.

“அப்பா”

“என்னம்மா?”

“மதன் வீட்டுக்குப் போகக் கூடாது”

“சரிம்மா”

“ஆனா, பாலண்ணா சொன்னாருல ‘மதன் வீட்டுக்குப் போகணும்னு’. நீங்களும் சரின்னு சொன்னீங்க”

“அதெல்லாம் யோசிக்காத பவானி. அப்பா அப்படிச் செய்யவே மாட்டேன்”

“ம்ம்ம், சரிப்பா” என்று சொன்னவள் நாதனின் தோள்களில் சாய்ந்து கொண்டாள்.

“பவானி என்ன யோசிக்கிற?”

“அப்… அப்பா என்னால யாருக்குமே யூஸில்லையோ??”

“பவானிம்மா?? அப்படியெல்லாம் நினைக்கக் கூடாதுன்னு டாக்டர் சொல்லியிருக்காங்கள?”

“ம்ம்” என்று சொல்லி மேலும் வாகாக சாய்ந்து கொண்டாள்.

“பவானி அழறியாமா?”

“இல்லைப்பா. ஜீவன் சார் அழவே கூடாதுன்னு சொல்லியிருக்காங்க” என்று சொல்லிக் கண்மூடி நிம்மதியாகத் தூங்கினாள்.

நாதனின் நிம்மதி, பனிக்காற்றோடு பறந்து போனது.

******

மலை அடிவாரத்தில் நடத்தப்பட்டு வருகின்ற, புற நோயாளிகளுக்கான மருத்துவமனை அது.

ஒரே ஒரு தளம் கொண்ட, சின்னக் கட்டிடம். அந்தத் தளத்தில் நீளமான நடைக்கூடத்தில் வரிசையாக நாற்காலிகள் இருந்தன.

பத்து பதினைந்து ஆட்கள் மட்டுமே இருந்தனர்.

பவானியின் மனநல மருத்துவர், இங்கு வருவது இது போன்ற பிரத்யேக தேதிகளில் மட்டுமே. ஆதலால் அந்தத் தினங்களில் நாதன் பவானியை அழைத்துக்கொண்டு வருவார்.

இதே மருத்துவரின் சொந்த மருத்துவ மனையில்தான் பவானி பித்து நிலையில் இருக்கும் பொழுது, ஒரு மாதம் சிகிச்சை அளிக்கப்பட்டது.

அதன் பின்னர் பவானிக்கு இதுபோல
ஆலோசனைகள், ஒரு குறிப்பிட்டக் கால இடைவெளியில் தேவைப்படும்.

இது போன்ற ஆலோசனைகளை, பவானியின் மனநல மருத்துவர், இந்த மருத்துவமனையில் கொடுத்து வருகிறார். இங்கே கட்டணம் கொஞ்சம் குறைவு என்பதால், நாதன் வழமையாக இங்கேயே, பவானியை அழைத்து வருவார்.

மருத்துவர் அறையின் வெளியே தந்தையும் மகளும் அமர்ந்து கொண்டு மருத்துவர் வருகைக்காக காத்திருந்தனர்.

பவானியின் முகத்தில் இன்னும் ‘தான் எதற்கும் உபயோகம் இல்லை’ என்ற எண்ணம் தெரிந்தது.

இருப்பினும் சுற்றிலும் நடக்கின்ற நிகழ்வுகளைப் பார்த்துக் கொண்டிருந்தாள்.

அந்த நடைக்கூடத்தின் மற்றொரு பகுதியில், ஜீவன் இருந்ததைத் தற்செயலாகக் கவனித்தாள். பெரிய இடைவெளி இல்லை என்பதால், ஜீவனின் இடது கையில் போடப்பட்டக் கட்டுத் தெரிந்தது. ‘என்னாச்சு?’ என்று பதறியவாறே எழுந்தாள்

“என்னம்மா?” – நாதன்.

“ஜீவன் சார் அங்கே இருக்கார். போய் பார்த்திட்டு வந்திடுறேன்”

“வேண்டாம் பவானி. இப்போ டாக்டர் வந்திடுவாங்க”

“இல்லைப்பா” என்று ஆரம்பிக்கும் போதே…

“என்ன இல்லைப்பா??” என்ற குரல் வந்தது.

நாதனும் பவானியும் பின்னால் திரும்பிப் பார்த்தனர். பவானியின் மருத்துவர்தான், “என்ன பவானி, எப்படி இருக்கீங்க?” என்று கேட்டுச் சிரித்துக் கொண்டு இருந்தார்.

பவானியின் மருத்துவர், நாதனை விட பத்து வருடங்கள் அதிக வயதில் இருப்பவர். நல்ல அனுபவம் நிறைந்த மனநல மருத்துவர்!

“ம்ம்ம்… ஜீவன் சாரைப் பார்க்கணும்” – பவானி.

“எங்க இருக்காங்க??”

“அங்கே இருக்காங்க” என்று ஜீவன் இருக்கும் திசை நோக்கிக் கை காட்டினாள்.

“பவானி, டாக்டர் வந்தாச்சு. பேசாம இரு” – இது நாதனின் வசனம்.

“ஏற்கனவே சொல்லியிருக்கேன்ல நாதன். பவானியை ரெஸ்ட்ரிக்ட் பண்ணாதீங்கன்னு.” – மருத்துவர்.

“டாக்டர் அது வந்து…” – நாதன்.

“விடுங்க. பவானி நீங்க போயிட்டு வாங்க. நான் வெயிட் பண்றேன்”

“ம்ம்ம், தேங்க்ஸ் டாக்டர்” என்று சொல்லிவிட்டு விரைவாக நடக்க ஆரம்பித்தாள்.

மருத்துவரும் நாதனும்…

“சொல்லுங்க நாதன், பவானி எப்படி இருக்காங்க??”

“இந்த ரெண்டு நாளா, கொஞ்சம் கவனமில்லாம இருக்கிறா டாக்டர். அப்புறம் வர்றப்போ ‘நான் யாருக்கும் யூசில்லய்யா’ அப்படின்னு கேட்டா??”

“ஓகோ! சரி, நான் பேசுறேன்.” என்று சொல்லிவிட்டு, பவானி சென்ற திசையில் ‘என்ன நடக்கிறது?’ என்று பார்க்க ஆரம்பித்தார்.

ஜீவனும் பவானியும்…

ஜீவன் அருகில் சென்றவள், ஜீவன் அமர்ந்திருக்கும் நாற்காலிக்கு இரு நாற்காலிகள் தள்ளி அமர்ந்தாள்.

“ஜீவன் சார்” – ஏழாம் சுவையாய் ஒலித்தது பவானியின் குரல்.

அழைப்புக் கேட்டுத் திரும்பியவன், பவானியைப் பார்த்ததும் ஒரு ஸ்நேகப் புன்னகைத் தந்தான்.

“என்ன பவானி? இங்க வந்திருக்க?”

“அது.. அது.. உங்களுக்குக் கையில என்னாச்சு?” என்று ஜீவன் இடது கையில் இருந்த, கட்டினைப் பார்த்துக் கேட்டாள்.

“ப்ச்… அது ஒண்ணுமில்லை பவானி. உடைஞ்ச மரம் குத்திருச்சி”

“ஏன் இப்படி? பார்த்துப் போங்கன்னு சொன்னேன்ல” என்று பவானி விழிநீர் விட்டாள்.

“நானும்தான் சொன்னேன், அழக் கூடாதுன்னு, கேட்கிறீயா??” என்று தன் கண்களால், அவள் கண்ணீரைச் சுட்டிக்காட்டினான்.

“அது..ம்..அது..” எனத் தடுமாறியவள், “எனக்காகத்தான அழக்கூடாதுன்னு சொன்னீங்க..” என்றாள்.

“ப்ச், புரியல”

புடவை முந்தானை கொண்டு விழுந்த விழிநீரைத் துடைத்துக் கொண்டே, “இது… இது.. உங்களுக்காக” என்ற வாக்கியம் சொல்லி, ஜீவனை விழ வைத்தாள்.

தனக்காக அழுவதற்கு ஒரு ஜோடிக் கண்கள் இருக்கின்றன என்று ஜீவன் நினைப்பதால் அமைதி பேசியத் தருணங்கள் – இவை.

“பவானி ரிலாக்ஸாக ஒரு ஜோக் சொல்லலாமா?”

“இல்லை. இல்லை ஜீவன் சார்… நான் ரிலாக்ஸ்தான்”

திரும்பவும் ஜீவனின் புன்னகை!!

நடைக்கூடத்தின் கடிகார முட்கள் பயணிக்கும் ஓசை கேட்கும் அசத்தம் நிறைந்த தருணங்கள் – இவை.

“ஜீவன் சார்”

“சொல்லு”

“பார்த்து இருக்கனும். சரியா?”

“ம்ம்ம்”

“சரி, கட்டுப் போட்டாச்சே?? இன்னும் இங்கேயே ஏன் இருக்கீங்க?”

“தலை சுத்திற மாதிரி இருக்கு, பவானி. அதான் கொஞ்ச நேரம் உட்கார்ந்திட்டு போலாம்னு”

“ஓ”

“பவானி, எனக்கு ஒரு ஹெல்ப் பண்ண முடியுமா?”

“என்ன ஹெல்ப்??”

“இதுல இருக்கிற மருந்தை கொஞ்சம் வாங்கிட்டு வந்து தர்றியா” என்று ஒரு மருந்துச்சீட்டை, அவளிடம் நீட்டினான்.

“நானா??” என்று ஐயம் கொண்டு கேட்டு, அதனை வாங்க மறுத்தாள்.

“ப்ச்… நீதான்ம்மா”

தானும் ஒருவருக்கு உதவ முடியும் என்கின்ற உற்சாகத்துடன் பவானி இருப்பதால், உரையாடல் உறைந்த தருணங்கள் – இவை.

“பவானி”

“ம்ம்ம், ஜீவன் சார், கொடுங்க”

“இந்தா?” என்று சில நூறு ரூபாய் நோட்டுக்களையும், மருந்துச்சீட்டையும் நீட்டினான்.

பவானி வாங்கிக்கொண்டாள்.

“பவானி, ஹாஸ்பிட்டல் வாசல்ல இறங்கி, லெப்ட்ல நடந்தா, மூணாவது கடை… அங்கே கேட்டுப்பாரு”

“ம்ம்”

“அங்கே இல்லைன்னா வந்திடனும். வேற எங்கேயும் போகக் கூடாது. சேஃப் இல்லை. நான் வேற இடத்தில வாங்கிப்பேன்”

“ஏன்? எங்க அப்பாவுக்குப் பதில் சொல்லணுமா??”

ஜீவன் புரியாமல் பார்த்தான்.

ஜீவன் சார், அன்றைய நடைப்பயிற்சி நாளில், பவானியின் பாதுகாப்பு பற்றி நீங்கள் சொன்னதுதான். – நியாபகம் வைத்திருக்கும் நாம்.

இப்போது புரிந்துவிட்டது போல புன்னகை புரிந்தார் ஜீவன் சார்!!

“உங்க அப்பாகிட்ட கேட்டுட்டுப் போய் வாங்கிட்டு வா பவானி” – ஜீவன்.

பவானி கேட்டுக் கொண்டதன் பேரில் ‘நாதன் சார்’, ‘உங்க அப்பாவாக’ மாறியிருக்கிறது. உங்களுக்குள் நிதமும் நிகழும் மாற்றத்தைக் கவனிக்கிறோம் ஜீவன் சார்! – நாம்.

“சரி, ஜீவன் சார்” என்று நேராகத் தந்தையை நோக்கிச் சென்றாள்.

“என்ன பவானி?” – நாதன்.

“அப்பா, ஜீவன் சாருக்கு மெடிசின் மட்டும் வாங்கிக் கொடுத்திட்டு வந்திடறேன்”

“பவானி டாக்டர் வந்துட்டாங்கள, அதனால நீ போக வேண்டாம். அப்பா போய் வாங்கிட்டு வரேன்”

‘இந்த வேலையாவது செய்கிறேனே, அப்பா’ என்று கெஞ்ச வேண்டும் போல் இருந்தது, பவானிக்கு.

“இல்லை நாதன். பவானி போகட்டும். நான் வெயிட் பண்றேன். நீங்க போங்க பவானி” – இதுவரை நிகழ்ந்தவற்றை தூரத்தில் இருந்துக் கவனித்த மருத்துவர்.

பவானி சென்றுவிட்டாள்.

“நாதன், நீங்க வாங்க. உங்ககிட்ட கொஞ்சம் பேசணும்” என்று நாதனை அழைத்துவிட்டு, மருத்துவர் அறைக்குள் சென்றார்.

*****

வெளியே குளிர் அதிகமாக இருந்தது. புடவை முந்தானையைத் தோளைச் சுற்றிப் போட்டுக் கொண்டாள். எட்டு மாதங்கள் கழித்துத் தனியாகச் சென்று ஒரு வேலை செய்யப் போகிறாள்.

ஜீவன் சொன்ன மாதிரியே இடது புறமாக இறங்கி, சாலையில் நடக்க ஆரம்பித்தாள்.

ஜீவனின் கைக்கடிகாரத்தின் வினாடி முட்கள் பதினைந்து முறை நகன்ற பிறகு…

ஜீவன் இருக்கும் இடத்திற்கு வந்தாள். இம்முறை ஒரு நாற்காலி இடைவெளி விட்டு அமர்ந்தாள். ஒரு கையில் மருந்துப்பை, மற்றொரு கையில் சாப்பாட்டுப் பொட்டலம் இருந்தது.

“இந்தாங்க” என்று சாப்பாட்டுப் பொட்டலத்தை நீட்டினாள்.

“என்னது பவானி? மருந்துதான வாங்கிட்டு வரச் சொன்னேன்” என்று கோபம் கொண்டான்.

ஜீவன் பேசிக் கொண்டிருக்கும் போதே பொட்டலத்தைப் பிரித்தாள்.

“பேசாமச் சாப்பிடுங்க. தலை சுத்துதுன்னு சொன்னீங்கள. அதான்”

“ப்ச். சீரியசா சொல்றேன் பவானி, எனக்கு பசிக்கவே இல்லை” என்று எரிச்சலுடன் சொன்னான்.

“ப்ளீஸ், எனக்காக சாப்பிடுங்க” என்று அக்கறையாகச் சொல்லி, பிரித்தப் பொட்டலத்தை, அன்புடன் ஜீவன் முன் நீட்டினாள்.

இதற்கு முன்பு சாப்பிட்ட தருணங்கள் எல்லாம், ஜீவனின் கண் முன் வந்து போனது. கண்கள் கலங்கின.

“ம்ம்ம் சாப்பிடுங்க” – பவானி.

அந்த அன்பிற்காகவா?
அந்த அக்கறைக்காகவா??
இல்லை…
அவளிற்காகவேவா?
இவற்றில் ஒன்றிற்கு அடிமையாகிப் போய், சாப்பாட்டை அள்ளினான் ஜீவன்.

ஒரு நாற்காலி இடைவெளி விட்டு இருந்ததால், சாரியாக எட்டவில்லை. எனவே ஜீவன் எழுந்து, எவ்வித இடைவெளியும் இல்லாமல், பவானி அருகில் அமர்ந்து கொண்டு, சாப்பிட ஆரம்பித்தான்.

அன்றைய தினம் ‘சாப்பிடறப்ப அன்பு, அக்கறைன்னு எக்ஸ்ட்ரா பிட்டிங் எதுக்கு’ என்று கேட்ட ஜீவன் சார், இன்றைய தினம் பவானியின் அன்பு அக்கறைக்காகச் சாப்பிட்டார். – இது நாம்.

அவன் சாப்பிட்டு முடித்ததும்…

“இதுல இருக்கிற பெயின் கில்லர் போடுங்க” என்று மருந்துப்பையை நீட்டினாள்.

அப்படியே செய்தான்.

பின் பவானி “இது மிச்சக் காசு” என்று உள்ளங்கையில் சில்லறை வைத்து நீட்டினாள்.

இன்றும், ஒரு முழு வினாடி ‘என்ன செய்ய’ என்று யோசித்தான்.

கொஞ்சம் ஏமாற்றத்துடன் பவானி, உள்ளங்கையை மூடிக் கொண்டாள். பவானியின் அந்தச் செய்கையைப் பார்த்த ஜீவன், அவளது கரத்தைப் பிடித்து, ஒவ்வொரு விரலாக திறந்து உள்ளங்கையிலிருந்து சில்லறையை அள்ளினான்.

என்ன சொல்லவதென்று தெரியா நிலையில்! – நாம்.

அக்கணம், ஒரு இளம் வயதுப் பெண் ஜீவன், பவானி இருவரையும் பார்த்துக்கொண்டே கடந்து சென்றாள்.

பவானியும், தன் கண் பார்வையிலிருந்து மறையும் வரை அப்பெண்ணை பபா ர்த்தாள்.

“என்னாச்சு பவானி?” – ஜீவன்.

திரும்பி ஜீவனைப் பார்த்தவள் முகத்தில் பயம் தெரிந்தது.

“ப்ச், பவானி, யாரந்தப் பொண்ணு?”

“மதனோட தங்கிச்சி”

“ஓ! மதனுக்கும் அவர் தங்கச்சிக்கும் ஒரே மாதிரி பேஸ்கட்… இல்லையா??”

ஏன் இப்படி ஜீவன் சார்? – இது நாமும் பவானியும்.

“ப்ச், எதுக்கு இப்படிப் பார்க்கிற பவானி? ” – ஜீவன்.

“அவங்க மதன்கிட்ட சொல்வாங்க. அதான் பயமா இருக்கு சார்”

“பயப்படாத, நான் பார்த்துக்கிறேன்”

“ம்ம்ம்”

தங்களைப் பற்றிய விடயம் மதனின் காதுகளுக்குப் செல்லப் போகிறது, ‘என்ன முடிவெடுக்க??’ என்று ஜீவன் யோசிப்பதால், வார்த்தைகள் இல்லா தருணங்கள் – இவை.

“ஜீவன் சார்”

“சொல்லு”

“இங்கதான் மதன் வீடு இருக்குது. ”

“அதுக்கென்ன? ”

“அதனால ஹாஸ்பிட்டல்ல டாக்டரைப் பார்த்திட்டு வரும்போது, மதனோட வீட்டுக்குப் போயிட்டு வரணும்னு பாலாண்ணா சொன்னாரு”

“யார் சொன்னாலும் போகாத” – அடுத்த நொடியே பதில் வந்தது.

“ம்ம்ம்”

“பவானி, யார் சொல்லியும் எதுவும் செய்யாத, உனக்குத் தோணுச்சுன்னா மட்டும் செய்யணும்”

இதை எந்த அர்த்தத்தில் எடுத்துக் கொள்வது – நாம்.

“என்ன சொல்ல வர்றீங்க ஜீவன் சார்? எனக்கு எப்படி அப்படித் தோணும்?” என்று கோபமாகச் சொல்லி, பவானி எழுந்து நடக்க ஆரம்பித்தாள்.

தவறான வார்த்தைக் கோர்ப்பு என்று ஜீவனுக்குப் புரிந்துவிட்டது. எனவே கீழ் கண்ட எதிர்வினைப் புரிந்தான்.

“பவானி, நான் அந்த அர்த்தத்தில சொல்லல?” என்று சொல்லியவாறே பின்னேயே போனான்.

பவானி நிற்கவில்லை.

“பவானி..பவானி..”

“எப்படி உங்களால அப்படிச் சொல்ல முடிஞ்சது? ” என்று தன் கண்களைச் சுருக்கிக் கோபத்தைக் காட்டினாள்.

“இல்லை பவானி. உனக்குப் பிடிச்ச மாதிரி இருன்னு சொல்ல வந்தேன். அவ்ளோதான்”

சமாதானம் அடையாமல், மறுபடியும் பவானி கோபம் கொண்டு நடக்க ஆரம்பித்தாள்.

இப்படியே ஜீவன் கெஞ்சிக் கொண்டு, பவானி கோபம் கொண்டு, இருவரும் மனநல மருத்துவர் இருக்கும் அறைக்கு வந்திருந்தனர்.

ஜீவனுக்கு ‘எப்படிச் சமாதானப் படுத்த என்று தெரியாததால்’ , “பவானிம்மா” என்று நாதன் கூப்பிடுவது போல் கூப்பிட்டான்.

ஜீவன் கூப்பிட்டதும், நாதன் அறைக் கதவைத் திறந்து கொண்டு வெளியே வந்ததும், கடிகாரத்தின் ஒரே நொடியில் நடந்தது.

அதாவது ‘பவானிம்மா’ என்ற ஜீவன் அழைப்பு, நாதனுக்கும் கேட்டது.

நாதனைப் பார்த்த ஜீவன், “சுத்தம்” என அடிக்குரலில் சொல்லித் தலையைத் திருப்பிக் கொண்டான்.

ஜீவன் சார்! தலையைக் கொஞ்சம் திருப்பிப் பாருங்கள். அப்பொழுதான் பெண்ணைப் பெற்றவர் எப்படி முறைக்கிறார் என்று தெரியும். – நாம்.

“அப்பா”

“பவானி… எவ்வளவு நேரம்மா? டாக்டர் வெயிட் பண்றாங்க தெரியும்ல?” என்று கனிவாய் கடிந்தார் நாதன்.

“இல்லைப்பா. ஜீவன் சாரோட கையில அடிபட்டிருக்கு. அதான்…”

பட்டென்று நாதன், “தேவையில்லாத வேலைப் பார்த்தா, இப்படித்தான் நடக்கும்” என்று சொல்லி ஜீவனை அர்த்தமாகப் பார்த்தார்.

ஜீவனும், நாதனை ஆழமாகப் பார்த்தான்.

“என்னப்பா சொல்றீங்க? ” – பவானி.

“நான் பொதுவா சொன்னேன் பவானி” – நாதன்.

“பவானி” – ஜீவன்.

“சொல்லுங்க சார்”

“எது தேவை?? எது தேவையில்லை? அப்படின்னு எனக்கே தெரியும்” என்று சொல்லி, நாதனை அர்த்தமாகப் பார்த்தான்.

நாதன் ஜீவனை ஆழமாகப் பார்த்தார்.

“புரியலை ஜீவன் சார்” – பவானி.

“ப்ச், நானும் பொதுவா சொன்னேன் பவானி ” – ஜீவன்.

“பவானி, நீ வாம்மா” என்று நாதன் பவானியை உள்ளே அழைத்தார்.

“வரேன் ஜீவன் சார்” என்று விடைபெற்று, அறைக்குள் தந்தையும் மகளும் நுழைந்தனர்.

மருத்துவ அறைக்குள்…

“வாங்க பவானி” – மருத்துவர்.

நாதனும் பவானியும் மருத்துவர் முன்னே வந்து அமர்ந்தனர்.

“எப்படி இருக்கீங்க?” – மருத்துவர்.

“ம்ம்ம், நல்லா இருக்கேன்” – பவானி.

“குட்”

“அப்பா, அந்த பேக் தாங்க” என்று தந்தையிடமிருந்த பையை வாங்கி, அதிலிருந்து, செய்தித்தாள் ஒன்று சுற்றப்பட்டப் பொருளை எடுத்து, மருத்துவரிடம் நீட்டினாள்.

“என்னது பவானி?” – நாதன்.

“என்னது பவானி? இவ்வளவு லேசா இருக்கு” – இது பொருளை பெற்றுக் கொண்ட மருத்துவர்.

“அதை ஓப்பன் பண்ணிப் பாருங்க டாக்டர். உங்களுக்குத்தான்”- பவானி.

பிரித்துப் பார்த்தார். ஒரு சிறு வெள்ளைக் கைக்குட்டை ஓரத்தில் சிறிய பூவேலைப்பாடு. அத்தனை நேர்த்தியாக இல்லையென்றாலும், எட்டு மாதங்கள் கழித்து, பவானியின் முயற்சி.

“நாதன்?? பவானிக்கு கவனமில்லை, தன்னால எந்த பிரோயோஜனமும் இல்லைன்னு பீல் பண்றான்னு சொன்னீங்க. இப்ப பாருங்க, பவானி எனக்காக எவவ்ளவு அழகான கிப்ட் கொண்டு வந்திருக்கான்னு”

“பிடிசிருக்கா டாக்டர்? அழகா இருக்கா?? ” – பவானி.

“ரொம்ப அழகா இருக்கு”

“பர்ஸ்ட் எதுவும் சரியாய் வராதப்போ, அப்பா சொன்ன மாதிரிதான் பீல் பண்ணேன்.”

“ஓ! அப்புறம் எப்படி?”

“ஜீவன் சார் சொல்லியிருந்தாங்க, உன்னால முடியும்னு. அதான் செய்ய முடிஞ்சது”

நாதன் சந்தோஷமும் சங்கடமும் சரிவிகிதத்தில் உணர்ந்தார்.
சந்தோசம் மகளின் முயற்சி.
சங்கடம் முயற்சிக்குக் காரணன்.

“சூப்பர் பவானி. அப்புறம், ஜீவன் சார் யாரு?”

“ஜீவன் சார் யாருன்னா?? யாருன்னா ??” என்று யோசித்தவள்… “ஜீவன் சார்தான்” என்று முடித்துவிட்டாள்.

“ஓகே ஓகே… பவானி இதே மாதிரி எனக்கு இன்னும் வேணும். என்னோட பேரப் பிள்ளைங்களுக்கு ஸ்கூலுக்கு கொடுத்து விடறதுக்கு. பவானியால செய்ய முடியுமா??”

“ம்ம்ம்… ட்ரை பண்றேன் டாக்டர்.”

“பட் அதுக்கு நான் பணம் தருவேன். வாங்கிக்கனும். இது பவானியோட சின்ன பிசினஸ் மாதிரி. ம்ம் சரியா??”

“சரி டாக்டர்”

“எவ்வளவு பவானி சொல்வீங்க, ஒரு கர்சீப் ரேட்??”

“அது ஜீவன் சாருக்குத்தான் தெரியும். நான் அவர்கிட்ட கேட்டுச் சொல்றேன்”

“ஓகே. கேட்டுச் சொல்லுங்க”

“டாக்டர் இப்பெல்லாம் வாக்கிங் கூட போறேன்”

“ரியலி. பவானிகிட்ட பயங்கர இம்ப்ரூவ்மென்ட். ஆனா, இப்பதான் நான் சொன்னதைக் கேட்கத் தோணிச்சா?”

“நீங்க சொன்னதால இல்லை டாக்டர். ஜீவன் சார் சொன்னாங்க. அதான்.. ” என்று உண்மையச் சொன்னாள்.

“பவானி, இப்படிப் பேசக் கூடாது” – நாதன்.

“நாதன், நீங்க கொஞ்சம் வெளியே இருங்க” – மருத்துவர்.

நாதன் யோசித்தார்.

“ப்ளீஸ், நான் பவானிகிட்ட தனியா பேசணும்”

நாதன் வெளியே சென்றுவிட்டார்.

“அப்புறம், பவானி நைட் ஸ்லீப் எப்படி இருக்கு?”

“தூக்கமே வரமாட்டிக்குது டாக்டர். அப்போதான்… அப்போதான்… ஒரு மாதிரி… ஒரு மாதிரி…” என்று திணறினாள்.

“பவானி ரிலாக்ஸ்..ரிலாக்ஸ்”

சட்டென்று “நான் ரிலாக்ஸாகனும்னா ஜீவன் சார் ஜோக்கெல்லாம் சொல்வாரு” என்றாள்.

“ஓ!”

இப்படியே பேச்சு வார்த்தைக்களும் ஆலோசனைகளும் தொடர்ந்தது.

“பவானி நீங்க வெளியே போயிட்டு, அப்பாவை உள்ளே அனுப்புங்க” – மருத்துவர்.

“ம்ம்” என்று வெளியே சென்றாள்.

நாதனும் டாக்டரும் மருத்துவ அறையில்…

“சொல்லுங்க டாக்டர்”

“நீங்கதான் சொல்லணும்”

நாதன் அமைதியானார்.

“இந்த எட்டு மாசமா, பவானியைப் பார்க்கிறேன். பர்ஸ்ட் டைம், அவங்களா முன்வந்து நிறைய விஷயம் பேசுறாங்க. நிறைய கேட்டுத் தெரிஞ்சிக்கிட்டாங்க. ரொம்ப நல்ல முன்னேற்றம்”

இன்னும் அமைதியாக இருந்தார், நாதன்.

“காரணம் ஜீவன் சார். கரெக்டா?”

“ம்ம்ம். அவரை மாதிரியே மதனும், பாலாவும் இருந்தா, நல்லா இருக்கும்”

“நாம நினைக்கிறவங்கதான் நமக்குப் பிடிச்சமாதிரி இருக்கணும்னு நினைக்காதீங்க. நமக்குப் பிடிச்ச மாதிரி இருக்கிறவங்களை நினைக்க முடியாட்டியும், மதிக்க ஆரம்பிங்க”

“எனக்கும் கவுன்சலிங் பண்றீங்களா டாக்டர்?” என்று சிரித்தார்.

“போறதைப் பார்த்தா, பவானியை விட்டுட்டு உங்க எல்லாருக்கும்தான் கவுன்சிலிங் கொடுக்கணும் போல”

மேலும் நாதன் சிரித்துக் கொண்டார்.

“வேற ஏதாவது பவானி பத்திச் சொல்லனுமா?” – மருத்துவர்.

“ஓரு நாலு நாள் ரொம்பக் கோபமா இருந்தா.. அப்புறம் ரெண்டு மூணு தடவ விடாம அழுதா, டாக்டர்”

“ம்ம்ம்… இதெல்லாம் இருக்கத்தான் செய்யும். அந்தச் சமயத்தில பவானி கண்ட்ரோல்ல இருக்காங்களா?? அதாவது சமாளிக்க முடியுதா??”

“சமாளிக்க முடியுது டாக்டர்”

“அப்போ ஓகேதான். சமாளிக்க முடியலைன்னா சொல்லுங்க”

“சரி டாக்டர்”

“ம்ம்ம் அப்புறம், அவங்க மனசுக்கு எது பிடிக்குதோ அதைப் பண்ணட்டும். நீங்க எதையும் போர்ஸ் பண்ணாதீங்க”

“ம்ம்ம்”

“மருந்து மாத்திரைக் கூட போர்ஸ் பண்ணிக் கொடுக்காதீங்க’

“சரி டாக்டர்”

“இந்தத் தடவைக் கொஞ்சம் வேற மெடிசின் எழுதறேன். இனிமே இதைக் கொடுங்க” என்று ஒரு தாளில் எழுத ஆரம்பித்தார்.

“சரி டாக்டர்”

“வேற ஏதாவது கேட்கணுமா?”

“ஏன் டாக்டர் பவானிக்கு இப்படி?”

ஒவ்வொரு முறை வரும் போதும், நாதனின் மனக்குமுறல் கேட்டிடும் கேள்வி இது.

“நாதன், ஏற்கனவே சொல்லிட்டேன். இது மூளையில கெமிக்கல் இம்பேலன்ஸ் ஆனதால வந்திருக்கு. பிளஸ் சின்ன வயசில இருந்து குடும்பத்தைப் பார்த்துக்கிட்டதால வந்த ஸ்ட்ரெஸும் ஒரு காரணம்.”

‘ஏன்? என் பெண்ணுக்கு இப்படி?’ என்று நாதனின் முகத்தோற்றம் சொன்னது.

“நீங்க திரும்பத் திரும்ப அதையே யோசிக்காதீங்க. சரியா? எப்படிப் பவானியைப் பார்த்துக்கலாம்னு மட்டும் யோசிங்க. வேற ஏதாவது?”

“இது சரியாகாதா டாக்டர்?”

“நீங்களே இப்படிக் கேட்கலாமா? ம்ம்ம், கடைசி வரைக்கும் இதேமாதிரி மெயின்டெயின் பண்ணிக்கலாம். வேற??”

“இன்னொரு கேள்வி இருக்கு டாக்டர்” என்று தயங்கினார்.

“சொல்லுங்க”

“ஜீவன் சார் மேல, ஏன் பவானிக்கு இவ்வளவு..” என்று நிறுத்தி விட்டார்.

மருத்துவருக்குப் புரிந்தது.

“இங்க பாருங்க. எனக்கு ஜீவன் சார் யாரு? என்ன? எதுவும் தெரியாது. ஆனா, பவானிக்கு அவர் மேல ஒரு நம்பிக்கை இருக்கு”

“அதான் ஏன் டாக்டர்?”

“ஏன்னா? அவளைச் சுத்தி இருக்கிற நீங்கதான் காரணம்.”

“நாங்களா?”

“யெஸ். எனக்கு பாலா பத்தி தெரியும். மதன் பத்தியும் தெரியும். ரெண்டு பேருமே பவானியோட நோய் பத்திச் சொல்லியே, கஷ்டப்படுத்துறாங்க ”

“ஆனா நான் அப்படியில்லையே”

“கண்டிப்பா. பட் நீங்க பவானியைக் கவனிச்சிக்கிற விதம், அன்பா பேசுற விதம்… அவங்களுக்கு தன்னோட நோயை நியாபகப் படுத்தலாம்.”

“புரியல டாக்டர்”

“எப்படிச் சொல்றது நாதன்? ஜீவன் அப்படிங்கிற கேரக்டர் பவானிகிட்ட இருக்கிற நோயைப் பத்திப் பேசுறது கிடையாது போல. ஜெனெரலா பேசுறார். அவளுக்குப் பிடிச்சது என்னன்னு கேட்டு, அதைப் பண்ண வச்சிட்டார். வீட்டுக்குள்ளே இருந்த பொண்ண வாக்கிங் கூட்டிட்டுப் போறாரு. அவ மேல நம்பிக்கை வச்சி, ஹெல்ப் கேட்கிறார். அதுதான் அவளுக்கு வேணும்…”

“ம்ம்ம்…புரியுது.”

“இது ஒரு வகையில டாக் தெரபி. அவர் பேசிறது, பவானியை மாத்துது”

“….. ”

“சந்தோசமா இருங்க நாதன். ஏன்னா? பவானிகிட்ட கொஞ்சம் சேஞ்ச் வந்திருக்கு”

நாதன் முகத்தில் சந்தோசம் தெரியவில்லை.

“இங்க பாருங்க நாதன், சப்போஸ் உங்களுக்கு ஏதாவது காரணத்தால, அவரைப் பிடிக்கலைன்னா??… ஏன்னா பவானி மேரீடு வேற.. ம்ம்ம் எப்படிச் சொல்ல??” என்று யோசித்தார்.

“என்ன டாக்டர்? ”

“ஓகே… உங்களுக்கு அவரைப் பிடிக்கலைன்னா…. ஆரம்பத்திலே ஸ்டாப் பண்ணிருங்க. இப்ப விட்டுட்டு அப்புறமா தடுக்க நினைச்சா?? அது பவானியைத்தான் பாதிக்கும்” என்று சொல்லி முடித்துவிட்டார் மருத்துவர்.

“சரி” என்று சொல்லி மருத்துச் சீட்டை வாங்கிக் கொண்டு கிளம்பினார்.

*****

மருத்துவமனை வெளியே தந்தையும் மகளும் வந்தனர். குளிர் காற்று மறைந்து மழைக்கான காற்று வீசியது. அந்த மதிய வேலையிலும், மழை மேகங்களால் மாலை வேளைப் போல் காட்சியளித்தது.

சற்று தூரம் இருவரும் நடக்கும் போதே, தூவானம் தூவ ஆரம்பித்தது. குடை விரித்துக் கொண்டு, நடக்க ஆரம்பித்தனர்.

“பவானி” என்ற குரல், மழைக் கம்பிகளைத் தாண்டிக், குடைக் கம்பிகளுக்குள் கேட்டது.

இருவரும் திரும்பினார்கள்.
ஜீவன்தான் அழைத்திருந்தான்.
ஜீவன் ஓடி வந்து, அவர்கள் அருகே நின்றான்.

“பவானி, என்னோட ஜீப்ல போலாமா? மழை வர்றமாதிரி இருக்கு” – கேள்வி பவானிக்கு, பார்வை நாதனுக்கு என்றவாறு ஜீவன்.

“நீங்க எப்படி டிரைவ் பண்ணுவீங்க?” – பவானி.

“டிரைவர் அரேஞ்ச் பண்ணிருக்கேன் பவானி.” – ஜீவன்.

“அப்பா போலாமா??” – பவானி.

“வேண்டாம் பவானி. ஒரு டெஸ்ட் எடுக்கணும். கொஞ்சம் லேட்டாகும். அவர் தனியாவே போகட்டும்” என்று அந்தத் ‘தனியாவே’ வார்த்தையில் அழுத்தம் கொடுத்தார், நாதன்.

“நீங்க போங்க ஜீவன் சார். நானும் அப்பாவும் டெஸ்ட் எடுத்திட்டு அப்புறம் வரோம்” – பவானி.

“சரி பவானி. ஆனா நாளைக்கு வாக்கிங் போகலாம். சரியா?” – ஜீவன்.

“நாளைக்கு வேண்டாம். நீங்க ரெஸ்ட் எடுங்க”

“ப்ச்”

“அதுக்கு அடுத்த நாள் போகலாம். சரியா??”

“சரி”

“பவானி, வாம்மா போலாம்” என்று நாதன் திரும்பி நடந்தார்.

“போய்ட்டு வரேன் ஜீவன் சார்” என்று பவானியும் தந்தையுடன் நடந்தாள்.

தன் ரகசிய அதிசயம் செல்வதைப் பார்த்துக் கொண்டே நின்றான், ஜீவன்.

குடைப் பிடித்து நடந்து செல்கையில்…

“என்ன டெஸ்ட் எடுக்கணும்ப்பா?”

“…”

“அப்பா, என்ன டெஸ்ட் சொல்லுங்கப்பா?”

“பேசாம வா பவானி” என்று மகளின் கையை இறுக்கமாகப் பிடித்து நடக்க ஆரம்பித்தார்.

நிறைய கேள்விகளைத் தனக்குள்ளே கேட்டுக் கொண்டார் நாதன். அவை பின்வருவன….

பவானியின் திருமண பந்தத்தை ஒட்ட வைக்கும் முயற்ச்சியில் இருக்கும் பாலாவை மீறி, தான் எந்த மாதிரி ஒரு புது வாழ்வை பவானிக்கு ஏற்படுத்திக் கொடுக்க முடியுமா?

பவானியைப் பார்த்துகொள்ளும் ஒரு பொறுப்பான இடத்தில, ஜீவனைப் போன்ற ஒருவனை எப்படி இருத்திப் பார்க்க முடியும்??

ஜீவனைப் பற்றிய உண்மைகள், பவானிக்குத் தெரிய வரும்போது, எப்படி உணர்வாள்??

எல்லாவற்றையும் விட, இதெல்லாம் தன்னால் சமாளிக்க முடியுமா??

ஏற்கனவே பவானியைப் பற்றிய கவலையுடன், இந்த விடையில்லா, விடை எழுத விரும்பா வினாக்களும் சேர்ந்து, மேலும் நாதன் மனத்தைக் கலங்கச் செய்தது.

கடைசியில் ‘பேசாமல் பாலாவிடம் சொல்லிவிடலாம். அதுதான் நல்லது’ என்று முடிவெடுத்தார்.

ஆகமொத்தத்தில், இன்றைய நாளின் நிகழ்வுகள் நாளைய நாளில், பாலா மற்றும் மதனின் செவிகளுக்குச் சென்றடையப் போகின்றது என்று பதற்றம் கொள்வோமாக!!

error: Content is protected !!