K3

K3

                                                   காம்யவனம் 3

 

நால்வரையும் அங்கிருந்தவர்கள் புதிதாகப் பார்க்க, அந்த உடுக்கை அடிப்பவர் கடற்கரையைப் பார்த்து தலையசைத்தார். அவர் சொல்லவருவதைப் புரிந்து கொண்ட கடற்கரை கூட்டத்தின் முன்னே வந்து நின்றார்.

அனைவரும் அவரையே பார்க்க,

“நாம போன மாச பூஜை செஞ்சப்ப, நான் சாமி கிட்ட உத்தரவு கேட்டது உங்க எல்லாருக்கும் தெரிஞ்சிருக்கும். புதுசா நாலு பேர் நம்ம காட்டுல வந்து தங்க அனுமதி கேட்டு இருந்தேன்.

நம்ம ஐயாவும் உடுக்கை அடிச்சு, உடனே பரிபூரண சம்மதம் வந்திருக்குன்னு சொன்னாரு. அந்த நாலு பேர் தான் இவங்க. இன்னிக்குத் தான் நம்ம காட்டுக்கு வந்தாங்க. அவங்களப் பத்தி அவங்களே சொல்லுவாங்க. நான் உத்தரவு வாங்கிக்கறேனுங்க” சொல்லிவிட்டு மீண்டும் பழைய இடத்தில் சென்று நின்று கொண்டார்.

ஊரில் இருக்கும் அனைவரின் பார்வையும் அவர்களின் புறம் தான் இருந்தது. உடுக்கை அடிப்பவர் நிறுத்தாமல் உடுக்கை அடித்தபடி அங்கே போடப் பட்டிருந்த எதிரெதிர் பலகையில் ஒன்றின் மீது வந்து அமர்ந்தார்.

மீண்டும் கடற்கரையோடம் கண் ஜாடை காட்ட,

கடற்கரை இவர்களைப் பார்த்து , “ஒவ்வொருத்தரா அவருக்கு எதிர்ல இருக்கற பலகைல போய் உட்காருங்க” என்றார்.

நால்வரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொள்ள, முதலில் சென்றது தேவா.

பழங்கள், மலர்கள் என பலவற்றை கூடையில் வைத்து அங்கே சாம்பராணியின் மனம் கமழ்ந்து அந்த இடைத்தை தெய்வீகமாக திகழச் செய்து கொண்டிருக்க, அந்தப் பலகையில் வந்து அமர்ந்தான் தேவா.

உடுக்கை அடிப்பவரைப் பார்த்தான். கடா மீசை, வெற்றிலைப் போட்டு சிவந்த வாய் , நல்ல பெரிய கண், தலையிலிருந்து கழுத்து வரை முடி நீளமாகத் தொங்கியது. வயதானாலும் அவருடைய கட்டான உடல் அவரது ஆரோக்கியத்தை வெளிப்படுத்தியது.

தன்னுடைய முரட்டுக் கைகளால் உடுக்கை அடித்தபடி தேவாவை உற்று நோக்கினார்.

பிறகு என்ன நினைத்தாரோ , கூட்டத்தில் நின்று கொண்டிருந்த மற்ற மூவரையும் கூட வந்து அமரச் சொன்னார்.

அவர்களும் வந்து அமர்ந்தவுடன், உடுக்கையை கீழே வைத்தார். அங்கே நிசப்தம் நிலவியது. அனைவரும் அவர்களின் பேச்சுவார்த்தையை கேட்கத் தயாராயினர்.

நீண்ட மூச்சை இழுத்து விட்டவர். “ உங்க முழு பேர் சொல்லுங்க “ என்றார்.

“தேவநாதன்”

“குருகிரிஷ்ணன்”

“மகதிபிரியா”

“மாயாவதி”

நால்வரின் பெயரைக் கேட்டவுடன் உடுக்கை அடிப்பவர் கூட்டத்தில் இருந்தவர்களை அர்த்தப் பார்வை பார்க்க, அனைவரும் ஆச்சரியத்தோடும் ஒரு பயத்தோடும் அந்நால்வரையும் கண்டனர்.

மீண்டும் தொடர்ந்தார்.

“நீங்க இங்க வந்ததோட நோக்கம்?” உணர்ச்சியே இல்லாமல் கேட்டார்.

“எங்க சேனல்ல இந்தக் காட்டை பத்தி காட்டனும் ” தேவா தான் பதில் தந்தான்.

 

“நிச்சியமா அது தானா?” அழுத்தம் கொடுத்து அந்த உடுக்கை அடிப்பவர் கேட்க,

நெற்றியைச் சுருக்கியவன் , “ஆ…ஆமா! ஏன் ?” என்றான்.

“சரி பார்ப்போம்” என்றவர் வேறு எதுவும் சொல்லாமல் உடுக்கை அடித்து பாட்டுப் பாடினார்.

அந்தப் பாடலுக்கு சுற்றி இருந்த பெண்கள் கை தட்டி தாளம் போட்டுக் கொண்டிருக்க, ஒரு பெண் மட்டும் முன்னால் இருக்கும் பூக்கோலத்தில் விளக்கை ஏற்றினாள்.

பாட்டு முடிந்தது.

அந்தப் பாடலில் இவர்களும் மெய் மறந்து போய்விட்டனர். ஒரு வித மயக்கத்தை அந்த விளக்கில் இருந்து வந்த தீபத்தின் வாசனை உண்டாக்கியது. மகுடிக்கு ஆடும் பாம்பைப் போல இவர்கள் மயங்கிக் கிடந்தனர்.

மனம் புத்தி அனைத்தும் லேசாக , எதையும் சிந்திக்கும் திறன் இல்லாமல் ஒரு நிர்மலமான நிலை.

கடற்கரையின் மகள் ஒரு ஆசனத்தைக் கொண்டு வந்தாள்.

“இதுல வந்து உக்காந்து நீங்க எதுக்கு வந்திருக்கீங்கனு சொல்லுங்க” உத்தரவிட்டார்.

நால்வரும் குழம்பினர். “இப்போ தான சொன்னோம்”  என மகதி கேட்க,

 

“அது நீங்க சொல்ல நினச்சு சொன்னது. இப்போ சொல்லப் போறது தான் உங்களுக்கு மட்டுமே உங்க மனசுக்கு மட்டுமே தெரிஞ்ச உண்மை. நீங்க இந்த காட்ல இருக்கணும்னா, இந்த காட்டுக்கும் இங்க இருக்கறவங்களுக்கும் உண்மையா இருக்கணும். வாங்க” உடுக்கை அடிப்பவரின் குரல் சற்று கடுமையாக ஒலித்தது.

 

“அப்படி என்ன உண்மைய தெரிஞ்சுக்க போறாங்கன்னு பாக்கறேன்!”  என்று சொல்லிக்கொண்டே முதலில் குரு அந்த பலகையில் அமர,

 

சட்டென அவனது மூளை மனது எல்லாம் ஒரு நொடி சுத்தப் பட்டது போல ஆனது. கேள்வி கேட்டதும் எது நடந்ததோ அதை மட்டும் வெளிப்படையாகச் சொல்லும் குழந்தையின் உள்ளம் கொண்டவன் போல மாறினான்.

அவன் மனநிலை மாறுவது கூட தெரியாத படி இருந்தான் குரு.

“தம்பி இந்த இடத்துக்கு எதுக்காக வந்தீங்க?” மீண்டும் அவர் கேட்க,

 

“இந்த காடு ஒரு அதிசயிக்க காடு, பல மர்மங்கள் இருக்குன்னு ஒரு தகவல் வந்தது. அப்போ இந்தக் காட்டை பத்தி நிறைய ரிசெர்ச் பண்ணோம். ஒரு புத்தகத்தோட ஏதோ ரெண்டு பக்கத்துல மட்டும் இந்தக் காட்டை பத்தின குறிப்பு இருக்குனு தெரிஞ்சுது. அது பஞ்சபூதம் ங்கிற ஒருத்தர் கிட்ட இருக்குனு கண்டுபிடிச்சு அவர் கிட்ட வேலைக்கு சேந்தோம்.

 அந்த பேப்பர அவர் கிட்டேந்து வாங்க அவர் கூட சேந்து நம்பிக்கையா உழைச்சோம். இப்போ அந்த பேப்பர் எங்க கிட்ட   இருக்கு.

 

 அதுலயும் ரொம்ப தகவல் இல்லை. ஆனா ஓரளவு இந்தக் காட்டை பத்தி தெரிஞ்சுது. அதை முழுசா தெரிஞ்சு இங்க இருக்கற புதையலை வெச்சு நாங்க பெரிய பணக்காரங்களா ஆகணும். அது தான் எங்க லட்சியம். பணக்காரன்னா கொஞ்ச நஞ்சம் இல்லை, அள்ள அள்ள குறையாத அளவு , இந்த உலகத்தையே விலைக்கு வாங்கற அளவு. அதுக்காக தான் இங்க வந்தோம். ” கண்கள் பளிச்சிட அவன் கூறுவதை ஸ்தம்பித்துப் போய் பார்த்துக் கொண்டிருந்தனர் அவனது நண்பர்கள்.

 

“என்ன இவன் புட்டு புட்டு வைக்கறான்” மகதி பயந்துவிட்டாள்.

“அது அவனை பொறுத்தவரை உண்மை அதுனால தான் அப்படி சொல்றான்” தேவா சொல்ல,

 

இப்போது வேறு விதமாகப் பார்த்தாள் மகதி.

 

“என்ன தம்பி இது போதுமா? இப்போ நீங்களே உண்மையா சொல்றீங்களா ? இல்லை ஒவ்வொருத்தரா சொல்ல வைக்கட்டுமா?” உடுக்கை அடிப்பவர் கர்ஜித்தார்.

 

“தேவையில்லை ஐயா. நானே சொல்லிடறேன்” தேவா பணிவாக பேசினான்.

“ம்ம்ம் .. நீங்க சொல்லப்போறது வெளில யாருக்கும் தெரியாது. இங்க இருக்கறவங்களே அதை பெருசா எடுத்துக்க மாட்டாங்க. ஆனா இங்க வசிக்க நீங்க உண்மை சொல்லி கடவுள் அருளை வாங்கி தான் தீரணும். நீங்க பணம் காசுக்கு ஆசைப் பட்டு வந்திருந்தாலும் எங்களுக்கு கவலை இல்லை. இங்கிருந்து அது உங்களுக்கு கிடைச்சா அதை தாராளமா கொண்டு போகலாம். சொல்லுங்க” என்றார்.

 

மாயாவை ஒரு முறை பார்த்தவன், தங்களை பற்றி சொல்ல ஆரம்பித்தான்.

 

“நாங்க நாலு பேரும் சின்ன வயசுலேந்து ப்ரெண்ட்ஸ். ஒரே ஸ்கூல் காலேஜ்ல படிச்சோம். நாங்க நெறைய காட்டுக்கெல்லாம் போய் அங்கிருக்கற சில அறிய வகை தாவரங்கள் , மரங்கள் இதப் பத்தி எல்லாம் தகவல் சேகரிச்சு தருவோம். அது தான் எங்க வேலை.

அப்படி ஒரு நாள் நாங்க ஒரு காட்டுல குடிசை போட்டு இருந்தப்ப திடீருன்னு ஒரு தாத்தா அங்க வந்தாரு. அவர் எங்கிருந்து வந்தாருன்னு தெரியாது.

ஆனா அவரு மாயாவ பாத்து , “ஜென்மம் கடைத்தேற வழிய பாரு!” அப்டீன்னு சொன்னாரு.

அதுக்கு என்ன அர்த்தம்ன்னு அவரையே கேட்க, அவர் இந்தக் காட்டை பத்தி சொல்லி இங்க தான் மாயாவுக்கு வாழ்கையின் அர்த்தம் புரியும், அவ இங்க வரலன்னா அவ வாழ்க்கைல பல துன்பங்களை அனுபவிப்பான்னு சொல்லிட்டு அந்த காட்டுக்குள்ள எங்கயோ போய் மறந்சுட்டாரு.” தேவா சற்று சங்கடமாக உணர, மாயாவே தொடர்ந்தாள்.

“அத அப்போ நான் பெருசா எடுத்துக்கல. ஆனா அவர பாத்த பிறகு, என் வாழ்க்கைல பல பிரச்சனைகள் , பல சிக்கல்கள் வர ஆரம்பிச்சது.

என் அம்மா அப்பா பிரிஞ்சு போய்ட்டாங்க. நான் ஆச படற சின்ன சின்ன விஷயம் கூட கிடைக்காது. வேலைல பிரச்சன, சுத்தி இருக்கரவங்களால பிரச்சன. பண பிரச்சனை. கைல இருந்த காசு எல்லாம் மொத்தமா கரைஞ்சு போய் வீட்டு வாடகை கூட குடுக்க முடியாத அளவு வந்துட்டேன். அதுனால பல பேரோட வக்கர பார்வைக்கு ஆளானேன். காசுக்கு பதில்லா என்னையே கேட்டாங்க. எல்லாத்தையும் சமாளிக்க முடியாம தவிச்சேன். என்னால என் ப்ரெண்ட்ஸ் கூட கஷ்டம் அனுபவிச்சாங்க.

இது எல்லாமே அந்த தாத்தாவ பார்த்த பிறகு தான். அதுனால அவர் சொன்ன மாதிரி இந்த காட்டை பத்தி தேட ஆரம்பிச்சோம்.

மகதிக்கும் குருவுக்கும் அந்த தாத்தா சொன்னத பத்தி சொல்லாம புதையல்ன்னு ஒரு பேரைச் சொல்லி கூட்டிட்டு வந்தோம். நாங்க எல்லாரும் காசுக்காக கஷ்டப் பட்டோம். அதுனால அந்த மாதிரி சொல்லவேண்டியதா போச்சு.” மாயா முடித்தாள்.

“உன்னோட இந்தக் கஷ்டம் எல்லாம் தற்காலிகமானது தான். உனக்கே அது புரியும்” உடுக்கைக் காரர் மனதில் தோன்றியது.

மாயவை அந்த ஆசனத்தில் அமரச் சொன்னார். குரு வை இறக்கிவிட்டு அவள் அங்கு அமரச் செல்ல,

“நீ அதுல உக்காந்ததும் கண்ணை மூடி பத்மாசனத்தில் உக்காரணும். யாருக்கும் எந்த பதிலும் வேண்டாம். உன்னோட மனக்கண் முன்னாடி என்ன வருதோ அந்த நினைவுகளோட பயணிக்கணும்.” சொல்லி அனுப்பினார்.

அவளும் எந்த சிந்தனையும் இல்லாமல் அதில் அமர்ந்தாள். கண்ணை மூடிக் கொண்டாள்.

ஒரு ஐந்து நிமிடம் தான் இத்தனை நாள் பட்ட கஷ்டம் , பெற்றோர் என கஷ்டமான கால கட்டங்கள் கண் முன் தோன்றி அவள் அனுபவித்த கஷ்டங்களை கிளறியது. மூச்சு முட்டும் அளவு கஷ்டங்களைத் தாங்கி இருந்தாள்.

கண்களில் கண்ணீர் கோடுகள் வழிந்தது. தாங்க முடியாத வேதனை அப்போது தான் அனுபவித்தாள். அழுகையின் ஊடே விம்மல் வந்தது. அவளது நண்பர்களால் பார்க்க முடியவில்லை.

“மாயா” என அலறினான் தேவா.

“தம்பி! உணர்ச்சிவசப் படாதீங்க. எல்லாம் சரி ஆகும்” கடற்கரை அவன் தோளில் கை வைத்தார்.

“என்ன நடக்குது அவளுக்கு. அவளுக்கு கஷ்டம் வந்தப்ப கூட இப்படி அழுததில்ல. இப்போ அவ இப்படி கதறத எங்களால பாக்க முடியல!” மகதியின் கண்களிலும் கண்ணீர்.

“அவங்களோட இந்தக் கஷ்டம் இன்னியோட முடிஞ்சிது. இனிமே ஒவ்வொரு நாளும் சொல்ல முடியாத அளவு சந்தோஷம் வரப் போகுது. அதுனால கவலைப் படாதீங்க” அவளையும் தேற்றினார் கடற்கரை.

“எல்லாரையும்  வீட்டுக்குப் போகச் சொல்லு” உடுக்கைக்காரர் சொல்ல,

கூட்டமே கலைந்து சென்றது. இவர்கள் மூவர் மட்டும் இருக்க, அவர்களையும் கிளம்பச் சொன்னார்.

தேவா தான் இருப்பதாச் சொல்லி குருவையும் மகதியையும் அனுப்பி வைத்தான்.

அனைவரும் சென்று விட்டனர். கடற்கரை தேவா உடுக்கை அடிப்பவர் மட்டும் மாயாவின் அருகில் இருந்தனர்.

ஒரு வழியாக மாயா அழுது ஓய்ந்திருந்தாள். முகம் சிவந்து அமர்ந்திருந்தாள்.

அப்போது அந்தக் குரல் அவள் காதுகளை தீண்டியது.

“மாயா…..”

உள்ளத்தில் ஒரு சிலிர்ப்பு உண்டானது.

“என்கூட இருக்கறவரைக்கும் உன்ன எந்தக் கஷ்டமும் படவிடமாட்டேன். நீ தான் என்னோட மொத்த சந்தோஷத்துக்கும் அதிபதி. என் வாழ்வின் ஒரே காதலி.” அன்று காட்டுக்குள் தன்னை ஏந்திக் கொண்டவனின் குரல்.

“யார் நீ?” மாயா கண்மூடிய படியே கேட்டாள்.

“உனக்கு வேண்டியவன். உன்னுடையவன்.” குரலிலேயே அவளைக் கவர்ந்தான்.

“ என்ன உள்ளற. உன் முகத்த காட்டு” எரிச்சலாக கத்த,

அவளது மனக்கண் முன் தோன்றினான் அந்தக் குரலுக்குச் சொந்தக் காரன்.

அவளை எங்கு தூகிக் கொண்டானோ அந்த இடம் அவளது கண் முன் விரிந்தது. நீலமும் பச்சையுமாக அந்த இடம் கண் முன் தெரிய, மயிலும் மானும் குயிலும் சத்தம் செய்ய , அருவியின் சப்தம் இப்போது அவள் காதுகளில் ஒலித்தது.

அன்று நடந்த அதே சம்பவங்கள் நடந்தது. குளத்தின் நீரை குடிக்கச் சென்றவள் , இம்முறை அருந்தாமலே நின்றாள்.

“மாயா” அவளது தோளைத் தொட்டான்.

சிலிர்த்துத் திரும்பினாள்.

கண் முன்னே நின்றான். “அப்பப்பா….. !”

‘அழகனா இவன்! இல்லை. பேரழகன். இல்லை அதற்கும் மேல் சொல்லவேண்டும். ஐயோ வார்த்தை இல்லை தமிழில்.

ஆறரை அடி இருப்பானா! தோள்களா இல்லை தேக்கு மரமா! மார்பழகை வர்ணிக்க கவிஞர்களுக்கு கற்பனை சக்தி இருக்குமா! சந்தேகம் தான்.

கட்டான உடல். கழுத்தைத் தாண்டி அவன் முகத்தை ஏறிட்டுப் பார்க்க அவளால் முடியவில்லை. வெட்கம் தலை தூக்கியது.

இருந்தாலும் அவனைக் காணும் ஆர்வம் அவளது வெட்கத்தை உடைத்துப் பார்க்கச் செய்தது.

கண்டாள். அப்படி ஒரு முகத்தைப் பார்க்க என்ன தவம் செய்தேனோ என்று தான் எண்ணத் தோன்றியது.

காற்றில் ஆடும் அடர்ந்த கூந்தல். பரந்த நெற்றி. அழகிய புருவங்களுக்கு இடையில் பிறை நிலா போன்ற வெள்ளை நிற திலகம் தீட்டி இருந்தான். கூறிய கண்கள். இவளைப் போன்றே கரு நிற விழி இல்லாமல் சாம்பல் நிறமும் காவி நிறமும் கலந்த நிறத்தில் காண்பவரை கவர்ந்தது. அதில் ஒளி பிரகாசித்தது.

கூறிய நீளமான மூக்கு. உதடுகளை அவள் காணும் சமயம் அதில் புன்சிரிப்பு. சொக்கித் தான் போனாள்.

மேல் ஆடை இல்லாமல் இடையில் மட்டும் வெண்பட்டு ஆடை உடுத்தி இருந்தான். தேவ லோக மன்மதன் போல காட்சி அளித்தான்.

பார்க்கப் பார்க்கத் தெவிட்டவில்லை அவளுக்கு. அவனது கைகளில் தான் இருந்ததை நினைத்துப் பார்த்து மகிழ்ந்தாள்.

“மாயா …” அவன் அழைத்தான்.

“உ..உங்க பேர் என்ன?” கண்களில் ஆர்வம் பொங்க அவள் கேட்டாள்.

அவளைத் தன் பக்கம் இழுத்தான். கண்ணோடு கண் பார்த்து தன் பெயரை உச்சரித்தான்.

“பிரத்யும்னன்”

 

 

 

 

 

error: Content is protected !!