Kaadhal 1

Kaadhal 1

சென்னை உயர்நீதிமன்றம்

காலை வேளை அதுவும் வாரத்தின் முதல் நாள் என்பதால் என்னவோ சென்னை உயர்நீதிமன்ற வளாகம் பரபரப்பாக இயங்கிக் கொண்டிருந்தது.

ஒரு புறம் கறுப்பு, வெள்ளை உடை அணிந்த வழக்கறிஞர்கள் பலர் தங்கள் கட்சிக்காரர்களுடன் மும்முரமாக பேசி கொண்டு இருக்க மறுபுறம் தங்கள் உறவுகளை அந்த நீதிமன்ற வளாகத்திலாவது பார்த்து விட மாட்டோமா? என்ற ஏக்கத்துடன் ஒரு சிலர் நின்று கொண்டிருந்தனர்.

நீதிமன்ற கட்டிடத்தில் இருந்து வெளியேறி வரும் ஒவ்வொருவரும் ஒவ்வொரு முக பாவனைகளோடும், மன எண்ணங்களோடும் சென்று கொண்டிருக்க அந்த நேரம் பார்த்து ஒரு போலிஸ் ஜீப் அந்த நீதிமன்ற வளாகத்தினுள் உள் நுழைந்தது.

அந்த ஜீப்பை தொடர்ந்து கைதிகளை ஏற்றி வரும் ஒரு வாகனமும் வந்து நின்றது.

ஜீப்பை ஓட்டி வந்த கான்ஸ்டபிள் அதை நீதிமன்றத்தின் முன்னால் நிறுத்த அந்த ஜீப்பில் இருந்து இறங்கி நின்றான் சித்தார்த் இன்ஸ்பெக்டர் ஆஃப் போலிஸ்.

ஆறு அடி உயரத்தில் இருந்த சித்தார்த்
சற்று மெலிந்த தேகம் கொண்டவனாக இருந்தாலும் உடற்பயிற்சி செய்து அதை கட்டுக்கோப்பாகவே வைத்திருந்தான்.

முகத்தில் ஏனோ ஒரு கடுகடுப்போடு தவழ சுற்றிலும் திரும்பி பார்த்தவன்
“வெங்கட் போய் அவங்களை எல்லாம் கூட்டிட்டு வாங்க ஹியரிங் ஆரம்பிக்க நேரம் ஆச்சுன்னா அப்புறம் அந்த ஜட்ஜும்,ஏசியும் குய்யோ, மொய்யோன்னு கத்துவாங்க” என்று கூறவும்

ஜீப்பின் மற்றைய புறமாக நின்று கொண்டிருந்த கான்ஸ்டபிள்
“ஓகே ஸார்” என்று விட்டு தங்கள் பின்னால் நின்ற வண்டியில் இருந்த நபர்களை தன்னோடு அழைத்துக் கொண்டு வந்தார்.

“எல்லோரும் சரியா?” மீண்டும் ஒரு தடவை தன் கையில் இருந்த பைலையும், அந்த நபர்களையும் திரும்பி பார்த்தவன்

“சரி வாங்க போகலாம்” என்றவாறே முன்னோக்கி நடந்து சென்றான்.

கிட்டத்தட்ட ஒன்றரை மணிநேரத்திற்கு மேலாக ஏதோ ஒரு வழக்கு நடந்து கொண்டிருக்க நீதிமன்ற வாயிலின் வெளியிலேயே காத்து கொண்டு நின்ற சித்தார்த் தன் கையில் இருந்த கடிகாரத்தை பார்ப்பதும் அந்த வாயிலைப் பார்ப்பதுமாக நின்று கொண்டிருந்தான்.

“ப்ச்! எவ்வளவு நேரம்? வெங்கட் என்ன தான் நடக்குது உள்ளே? இவ்வளவு நேரமாக ஒரு கேஸைத் தான் பார்த்துட்டு இருக்காங்களா?” சலிப்போடு வாயிலின் அருகில் நின்று கொண்டு உள்ளே நடந்து கொண்டிருக்கும் வழக்கை வெகு ஆர்வமாக பார்த்து கொண்டிருந்த வெங்கட்டிடம் சித்தார்த் கேட்க

அவனை பார்த்து ஆமோதிப்பாக தலை அசைத்தவன்
“ஆமா ஸார்! நல்ல கேஸ் ஒண்ணு தான் இவ்வளவு நேரமாக வக்கீலும், ஜட்ஜும் கேள்வி கேட்க கேட்க அந்த பொண்ணு வாயே திறக்க மாட்டேங்குது தலையை குனிந்து அப்படியே கல்லு மாதிரி நிற்குது” ஏதோ அரிய வகை பொருள் ஒன்றை விவரிப்பது போல அவனுக்கு பதில் கூறினான்.

அவன் சொன்னதைக் கேட்டு கண்களை ஒரு முறை இறுக மூடித் திறந்து கொண்டவன்
“எல்லாம் நேரம்! வாயைத் திறக்கலேனா இவ்வளவு நேரம் இழுத்தடிப்பாங்களா? இரண்டு வாரமாக இவங்க எல்லோரையும் கூட்டிட்டு வர்றதும் நேரம் இல்லைன்னு அடுத்த வாரம் ஹியரிங்கை தள்ளி போடுறதுமாக தான் அந்த ஜட்ஜ் இருக்காரு இன்னைக்கு மட்டும் இவர் இந்த கேஸை எல்லாம் பார்க்கல இந்த கோர்ட்டும் வேணாம் ஜட்ஜும் வேணாம்னு போயிடுவேன்” கோபமாக தனக்குள் முணுமுணுத்துக் கொண்டு நின்றான்.

“ஸார் அடுத்தது நம்ம கேஸ் தான் கூப்பிடுறாங்க வாங்க” வெங்கட் சித்தார்த்தைப் பார்த்து கூறவும்

‘யப்பா! சாமி! ஒரு வழியாக கூப்பிட்டுட்டாங்க’ என மனதிற்குள்
நினைத்து கொண்டவன்

“ம்ம்ம்ம்ம் போங்க போங்க” என தன் முன்னால் நின்றவர்களை வழக்கு நடக்கும் இடத்திற்கு அழைத்துச் சென்றான்.

சித்தார்த் முப்பது நிரம்பிய இளம் போலிஸ் ஆபிஸர்.

சிறு வயது முதலே போலீஸ் திரைப்படங்களை பார்த்து பார்த்து அதில் வருவது போலவே தானும் போலீஸாக வர வேண்டும் என்று ஆசைப்பட்டு போலீஸ் வேலையில் இணைந்து கொண்டவன்.

திரைப்படங்களில் காட்டியவற்றைப் போல ஒரு பெரிய வில்லன் இருப்பான் அவனை பிடித்து தண்டனை வாங்கி கொடுத்து பெரிய பதவிகளை பெறலாம் என்று ஆசையோடு வேலையில் சேர்ந்து கொண்டவன் நாட்கள் போகப்போகவே நிதர்சனத்தை உணர்ந்து கொண்டான்.

திரைப்படங்களில் காட்டுவதைப் போல இங்கு ஒரு வில்லன் இல்லை இந்த சமூகத்தில் இருக்கும் பெரும்பாலானோர் வில்லன்களாக தான் இருக்கின்றனர் என்ற உண்மை நாளடைவில் தான் அவனுக்கு புரிந்தது.

ஆரம்பத்தில் அவனிடம் சிக்கிய குற்றவாளிகள் சிறுவர்களின் சைக்கிள் திருடியவர்கள், பள்ளி குழந்தைகளிடம் குடி போதையில் மிட்டாய் பறித்து சாப்பிட்டவர்கள்.

இதை எல்லாம் பார்த்து தன் ஆசையையும் ஒரு தரம் எண்ணி பார்த்து கொள்பவன்
‘ஆரம்பத்திலேயே பெரிய மாஸ் ஓபனிங் எதிர்பார்த்தது என் தப்பு தான்’ என தன்னை தானே தேற்றி கொள்வான்.

ஆசையாக சேர்ந்த வேலை அதை விட்டு செல்ல அவனுக்கு மனமில்லை.

என்றாவது ஒருநாள் தன் மனதில் இருக்கும் ஆசையை போல ஒரு வீரதீர செயலை செய்வேன் என்ற நம்பிக்கையுடன் ஐந்து வருடங்களாக காத்து இருக்கிறான் சித்தார்த்.

சப் இன்ஸ்பெக்டராக வேலையில் சேர்ந்து ஒரு வருடத்திற்கு முன்னர் தான் இன்ஸ்பெக்டராக பதவி உயர்வு பெற்றான்.

அதற்கு காரணம் அவர்கள் ஸ்டேஷனில் இதற்கு முன்னர் இருந்த இன்ஸ்பெக்டரை ஊர் கலவரத்தின் போது நான்கு, ஐந்து பேர் சேர்ந்து தாக்கி இருந்தனர்.

அந்த தாக்குதலின் பின்னர் அந்த இன்ஸ்பெக்டர் வேறு ஊருக்கு மாற்றல் வாங்கி சென்று விட அந்த இடம் சித்தார்த்திற்கு கிடைத்து இருந்தது.

ஒரு நடுத்தர குடும்பப் பின்னணியில் இருந்து வந்தவன் தான் சித்தார்த்.

சித்தார்த்தின் தந்தை தாமோதரன் மளிகை கடை வைத்து நடத்தி வருகிறார்.

ஆரம்பத்தில் ஒரு சிறு பெட்டிக் கடையாக ஆரம்பத்த அவரது தொழில் இப்போது ஒரு பெரிய மளிகை கடையில் வந்து நிற்கிறது.

சித்தார்த்தின் அன்னை யசோதா கவர்மெண்ட் ஸ்கூல் ஒன்றில் ஆசிரியராக பணி புரிந்து தற்போது ஓய்வு பெற்றவர்.

சித்தார்த்திற்கு ஒரு தங்கை மற்றும் இரண்டு தம்பிகள்.

சித்தார்த்தின் தங்கை ஸ்ருதி பி.ஏ பட்டதாரி தற்போது திருமணம் முடித்து இரண்டு வயது குழந்தையான பூஜாவின் அன்னை.

தன் கணவர் சிவாவின் குடும்பத்தினருடன் கோயம்புத்தூரில் வசித்து வருகிறாள்.

சித்தார்த்தின் தம்பிகளில் ஒருவன் கண்ணன் மற்றொருவன் கார்த்திக்.

கண்ணன் பி.இ இரண்டாம் வருடம் படித்து கொண்டிருக்க கார்த்திக் ப்ளஸ் டூ படித்து கொண்டிருக்கிறான்.

சித்தார்த்தின் குடும்பம் சற்று பெரிதாக இருந்தாலும் அவர்கள் எல்லோருக்கும் இடையில் எப்போதும் ஒரு புரிந்துணர்வுடன் கூடிய ஒரு பாசம் இருக்கும்.

தங்கள் பிள்ளைகளின் கல்வி சம்பந்தமான எந்த ஆசைகளுக்கும் தாமோதரனோ, யசோதாவோ தடையாக இருந்ததில்லை.

சித்தார்த் பற்றிய அறிமுகம் முடிந்த அதேநேரம் சித்தார்த் அழைத்து வந்த நபர்களின் வழக்கு விசாரணையும் முடிந்து இருந்தது.
“வெங்கட் போய் ஜீப்பை எடுத்துட்டு வாங்க” வெங்கட்டின் புறம் திரும்பி கூறியவன்

தன்னருகில் நின்ற இன்னொரு கான்ஸ்டபிளிடம்
“இவங்களை எல்லாம் அவங்க வந்த வண்டியில் ஏற்றுங்க” என்று கூறவும் அவனைப் பார்த்து ஆமோதிப்பாக தலை அசைத்து விட்டு அந்த கான்ஸ்டபிள் அங்கிருந்த நபர்களை எல்லாம் அழைத்து கொண்டு சென்றார்.

வெங்கட் ஜீப்பை எடுத்து கொண்டு வந்ததும் அதில் ஏறப் போனவன்
“டேய்! சித்தார்த்!” தன் பின்னால் கேட்ட பெண் குரலில்

“டேயா! எவ அவ?” என்றவாறே திரும்ப அங்கே முகம் நிறைந்த புன்னகையோடு காக்கி உடையில் ஒரு இளம் பெண் நின்று கொண்டிருந்தாள்.

அந்த பெண்ணைப் பார்த்ததும் அத்தனை நேரமாக தன் முகத்தில் இருந்த கடுகடுப்பு மறைய அவள் முன்னால் வந்து நின்றவன்
“ஹேய்! ஜெஸ்ஸி! எப்படி இருக்க?” புன்னகையோடு அவளை பார்த்து வினவினான்.

“எனக்கு என்ன கோர்ட்டும், ஸ்டேஷனுமா வாழ்க்கை அமோகமாக போகுது! ஆமா நீ எப்படி இருக்க? பார்த்து எவ்வளவு நாளாச்சு! கடைசியாக ட்ரெயினிங் முடிந்து வர்றப்போ மீட் பண்ணது இத்தனை வருஷம் கழித்து இங்க மீட் பண்ணி இருக்கோம்”

“ஆமா ஆமா! அந்த ட்ரெயினிங் டைமை மறக்க முடியுமா? அது சரி நீ எப்போ சென்னைக்கு டிரான்ஸ்பர் ஆகுன? சென்னைக்கு வந்ததும் என்னை கான்டக்ட் பண்ண உனக்கு தோணல தானே?”

“அப்படி இல்லை டா போன மாதம் தான் டிரான்ஸ்பரில் வந்தேன் என் நேரம் வந்ததும் ஒரு கொலை கேஸில் தான் முழிச்சேன் அந்த கேஸ் விஷயமாக ஓடி திரிந்ததில் சரியாக சாப்பிட முடியல, தூங்க முடியல ஒரே தலை இடி ஏன்டா இந்த வேலைக்கு வந்தோம்னு இருக்கு”

“எனக்கு வேலையில் ஜாயின் பண்ணி அடுத்த வாரமே அந்த பீல் வந்தாச்சு” சித்தார்த் சலிப்புடன் கூற

“என்னடா சொல்லுற? நீ தானே ட்ரெயினிங் டைம் அடிக்கடி சொல்லுவ நான் மட்டும் போலிஸ் ஆகணும் சென்னையை ஒட்டுமொத்தமாக என் கன்ட்ரோலுக்கு கொண்டு வருவேன் அதை பண்ணுவேன், இதை பண்ணுவேன்னு பெரிய டயலாக் எல்லாம் விடுவ இப்போ என்ன ஆச்சு?” ஜெஸ்ஸி சிரித்துக் கொண்டே அவனது தோளில் தட்டி கேட்டாள்.

அவளைப் பார்த்து சோர்வோடு தன் தலையில் கை வைத்து கொண்டவன்
“அட போம்மா! நானே தினம் தினம் விஜயகாந்த் படத்தை பார்த்து பார்த்து ஓவரா கற்பனை பண்ணிட்டேன்னு கவலையில் இருக்கேன் நீ வேற” என்று கூறவும்
அவளோ அவனை பார்த்து சிரித்துக் கொண்டு நின்றாள்.

“சிரி நல்லா சிரி ஒரு நாள் இல்லை ஒரு நாள் இந்த ஊரே என்னை பற்றி பெருமைப்பட்டு பேசும் அப்போ உன்னை கவனிச்சுக்கிறேன் எனக்கு தனியா அவார்டு பங்சன் எல்லாம் வைப்பாங்க அப்போ நினைத்து பார்ப்ப நம்ம பிரண்ட்டை நாமே கலாய்ச்சோமேன்னு” அந்த வசனத்தை கூறும் போது அவனுக்கே சிரிப்பு வந்தது.

“டேய்! டேய்! போதும் டா என்னால சிரிச்சு முடியல நீ இன்னும் இந்த காமெடி பண்ணுற பழக்கத்தை விடல தான் போல”

“காமெடியா? ஏன் சொல்ல மாட்ட?”

“அது சரி இப்போ எங்க கிளம்பிட்ட வந்த வேலை ஆச்சா?”

“வேறெங்க கூட்டிட்டு வந்தவங்களை எல்லாம் சென்ட்ரல் ஜெயிலில் கொண்டு போய் இறக்கி விட்டுட்டு ஸ்டேஷனுக்கு போக வேண்டியது தான் நீ வந்த வேலை முடிந்ததா?”

“ஆமா டா சாமி வழக்கு விசாரணைன்னு சொல்லி ஒன்றரை மணி நேரமாக வைத்து வாங்கிட்டாங்க தப்பிச்சோம் பிழைச்சோம்னு ஓடி வந்து இருக்கேன்”

“ஓஹ்! அப்போ அந்த ஒன்றரை மணி நேரமாக நடந்த கேஸ் உங்களோடது தானா?”

“ஆமா பா ஆமா! கிட்டத்தட்ட ஒரு மாசமாக இந்த கேஸ் நடக்குது இன்னைக்கு தான் பைனல் அந்த பொண்ணு ஆரம்பத்திலேயே வாயைத் திறந்து ஏதாவது சொல்லி இருந்தா இந்த ஒரு மாசமாக அலைச்சலே இருந்து இருக்காது எனக்குன்னு சென்னைக்கு வந்ததும் வந்த முதல் கேஸ் அய்யோ! அய்யோ!” தன் கையில் இருந்த பைலால் தன் தலையில் அடித்துக் கொண்டே ஜெஸ்ஸி கூறவும்

“அப்படி என்ன கேஸ்?” ஏனோ அந்த விடயத்தை பற்றி அறிந்து கொள்ள அவன் மனம் ஆர்வத்தை தூண்ட அவளிடம் அதை பற்றி கேட்டான்.

“ஒரு மாதத்திற்கு முன்னாடி சென்னையில் பாரிஸ் கோர்னர் ஏரியாவில் ஒரு இரட்டை கொலை நடந்தது தெரியுமா?”

“ஆமா ஒரு பொண்ணு அவ அம்மா, அப்பாவை”

“ஹ்ம்ம்ம்ம்! அந்த கேஸ் தான் நான் பி1 நோர்த் ஸ்டேஷனில் தான் ஜாயின் பண்ணி இருக்கேன் அந்த ஏரியாவில் நடந்த கொலையினால் நான் தான் அதை விசாரணை பண்ணேன்”

“அப்படியா? நானும் அந்த கொலையை பற்றி கேள்வி பட்டேன் தான் ஆனா சரியாக எதுவும் தெரியல அது சரி உண்மையாகவே அந்த பொண்ணு தான் கொலை பண்ணாளா?”

“அதெல்லாம் இருக்கட்டும் நீ ஏன் இவ்வளவு ஆர்வமாக இருக்க?” சித்தார்த்தின் முகத்தில் தெரிந்த ஆர்வத்தை பார்த்து வியப்பாக கேட்டாள் ஜெஸ்ஸி.

“என் ஏரியாவில் இப்படி எதுவும் நடக்க மாட்டேங்குதே! அது தான் வேற ஏரியாவில் இப்படி நடக்கும் விஷயத்தை எல்லாம் ஆர்வமாக கேட்கிறேன்”

“அடப்பாவி!”

“சரி சரி நீ நான் கேட்டதற்கு பதில் சொல்லு உண்மையாகவே அந்த பொண்ணு தான் கொலை பண்ணாளா?” சித்தார்த்தின் கேள்விக்கு ஜெஸ்ஸி ஆமோதிப்பாக தலை அசைத்தாள்.

“என்ன?” அதிர்ச்சியில் தன்னை மறந்து அவன் சத்தமாக கேட்க

அவளோ
“உஸ்ஸ்! இது கோர்ட் டா! எதற்கு டா இப்படி கத்துற? கொலை பண்ண அந்த பொண்ணே சாதாரணமாக நான் தான் பண்ணேன்னு ஒத்துக்கிட்டா நீ என்னடானா இவ்வளவு ஷாக் ஆகுற?” என அவனை அமைதிப்படுத்திய வண்ணம் கூறினாள்.

“இல்லை கொஞ்சம் எமோசனல் ஆகிட்டேன் அவ்வளவு தான் பாரேன் ஜெஸ்ஸி பெற்ற அம்மா, அப்பாவை கொலை பண்ணுற அளவுக்கு காலம் மாறிடுச்சு போல”

“ஸாரி பாஸ் ஒரு சின்ன திருத்தம் பெற்ற அம்மா, அப்பா இல்லை வளர்த்த அம்மா, அப்பா”

“அது தான் கொலை பண்ணி இருக்கா போல!”

“அது தெரியல அவ எதற்காக கொலை பண்ணா என்ன பிரச்சினை எதுவும் அவ சொல்ல நான் தான் கொலை பண்ணேன்னு ஒரு பதிலை மட்டும் தான் அவ சொல்லுவா இனி கொலை பண்ணவங்களே அதை ஏற்றுக்கிட்டா சட்டம் அதன் கடமையை தானே செய்யும்” ஜெஸ்ஸி தன் தோளைக் குலுக்கிக் கொண்டே கூறினாள்.

“ஒரு மாதமாக எத்தனையோ தரம் எப்படி எல்லாமோ விசாரித்து பார்த்தோம் எதற்கும் பதில் பேச மாட்டா கடைசியில் நாம ஒண்ணும் பண்ண முடியாமல் ஓய்ந்து போய் இருக்கும் போது நான் தான் கொலை பண்ணேன் எனக்கு தண்டனை கொடுங்கன்னு சொல்லுவா”

“இதில் ஏதோ மர்மம் இருக்குற மாதிரி இல்லையா ஜெஸ்ஸி? எதற்கும் பதில் சொல்லாமல் ஒரே வசனத்தை திரும்ப திரும்ப சொல்லுறான்னா வேற ஏதாவது பிரச்சினை இருக்குமோ?”

“நீ படம் பார்த்து பார்த்து ஓவரா யோசிக்குற சித்தார்த் அது எல்லாம் விசாரித்து பார்த்தாச்சு ஒரு வாரமாக பிரச்சினை போயிட்டு இருந்து இருக்கு சம்பவம் நடந்த அன்னைக்கு வாய்த் தகராறு முற்றிப் போய் தான் கொலை பண்ணதாக அக்கம் பக்கம் எல்லோரும் சொல்லுறாங்க இனி அந்த பொண்ணே செய்த தப்பை ஏற்றுக்கிட்டா நாம என்ன பண்ண முடியும்? நானும் ஆரம்பத்தில் அந்த பொண்ணு தப்பு பண்ணி இருக்க மாட்டான்னு தான் நினைத்தேன் ஆனா நாம நினைத்தது ஒண்ணு நடக்குறது ஒண்ணா இருக்கு”

“இந்த காலத்தில் யாரு எது பண்ணுவாங்கன்னே தெரியல” சித்தார்த்தின் கூற்றுக்கு ஆமோதிப்பாக தலை அசைத்தாள் ஜெஸ்ஸி.

“சரி ஜெஸ்ஸி நான் கிளம்புறேன் என் நம்பர் இருக்கு தானே அப்புறம் பேசலாம்” என்று விட்டு சித்தார்த் செல்ல போக

அவன் முன்னால் அவசரமாக வந்து நின்ற ஜெஸ்ஸி
“டேய்! சித்! உன் நம்பர் அழிந்து போச்சுடா போன் புதுசா மாற்றும் போது நிறைய நம்பர் அழிந்து போச்சு” தன் முகத்தை பாவமாக வைத்து கொண்டு கூறவும்

அவளது தலையில் செல்லமாக கொட்டியவன்
“சரி நோட் பண்ணிக்கோ” என்று விட்டு தன் தொலைபேசி எண்களை அவளிடம் கூறினான்.

“தாங்க்ஸ் டா” என்றவாறே அவனைப் பார்த்து புன்னகத்தவள்

அவன் பின்னால் தன் கண்களை காட்டி
“அதோ வர்றா அந்த பொண்ணு தான் நான் இவ்வளவு நேரமாக சொன்ன பொண்ணு” என்று கூற அவனும் அவள் காட்டிய புறம் திரும்பி பார்த்தான்.

பல நாட்களாக சாப்பிடாதவள் போல நல்ல மெல்லிய தேகம் பலமாக காற்றடித்தாலே விழுந்து விடுவாளோ என்பது போல இருந்தது அவளது தோற்றம்.

பல நாட்கள் தூக்கத்தை தொலைத்ததால் என்னவோ கண்கள் இரண்டையும் கருவளையம் சூழ்ந்து இருந்தது.

நல்ல வெண்ணிற தேகம் என்பதால் அந்த கரு வளையம் நன்றாக அவளது முகத்தில் வேறு பிரித்து தெரிந்தது.

அவளது கண்கள் இரண்டும் வேறு எங்கோ வெறித்துப் பார்த்து கொண்டிருக்க அவளது கால்களோ அதன் பாட்டிற்கு நடந்து வந்து கொண்டிருந்தது.

அவளது சிந்தனை எதுவும் அவளிடம் இல்லை என்பது அவள் நடந்த வந்து கொண்டிருந்த நிலையிலேயே நன்கு புரிந்தது.

அந்த பெண்ணைப் பார்த்ததுமே சித்தார்த்தின் மனதில் அவளைப் பற்றி தெரிந்து கொள்ள வேண்டும் என்று ஆவல் எழுந்தது.

“அந்த பொண்ணு பேரு என்ன ஜெஸ்ஸி?” சித்தார்த்தின் கேள்விக்கு அந்த பெண்ணைப் பார்த்துக் கொண்டே பதில் கூறினாள் ஜெஸ்ஸி.

“மேக்னா!”…….

error: Content is protected !!