Kaadhal Diary – 6

6b5638f3f443edf28211f2de2a2ed0b7

Kaadhal Diary – 6

ஸ்ரீதரின் நட்பு

தென்றலிடம் பேசிவிட்டு போனை வைத்த சஞ்சீவ் தன் வேலையில் கவனத்தை திருப்பினான். அடுத்த சிலமணிநேரத்தில் அவனின் செல்போன் மீண்டும் சிணுங்கியது. யாரென்ற கேள்வியோடு அவன் போனின் திரையைப் பார்க்க புதிய எண்ணில் இருந்து அழைப்பு வந்திருந்தது.

“ஹலோ” என்றான் சஞ்சீவ்.

“சஞ்சீவ் நான் தென்றலோட அண்ணன் கதிர் பேசறேன்” தன்னை அறிமுகபடுத்திக்கொண்டான்.

‘என்ன திடீர்ன்னு கூப்பிட்டு இருக்காரு. நம்ம லவ் மேட்டர் வீட்டிற்கு தெரிந்துவிட்டதோ?’ என்றவன் மனதிற்குள் நினைத்த மறுநொடி தென்றலின் நிலையை நினைத்து அவனின் உள்ளம் பதறியது.

தன்னை நிலைபடுத்திக்கொண்டு, “சொல்லுங்க” என்றான் குரலை சரி செய்தபடி.

“கொஞ்சம் வீடு வரை வர முடியுமா” என்றான் கதிர் காரணத்தை சொல்லாமல்.

அவன் எதற்கு அழைக்கிறான் என்ற உண்மை தெரியாதபோதும் ஓரளவு கணித்த சஞ்சீவ், “ம்ம் வருகிறேன்” என்றவன் ஆபீஸில் லீவ் சொல்லிவிட்டு தென்றலின் வீட்டிற்கு சென்றான்.

அவனின் நிறுவனத்திற்கும், தென்றலின் வீட்டிற்கும் இடைப்பட்ட தூரத்தில் இனியாவிடம் இந்த விஷயத்தை சொல்ல போனை  எடுத்தான்.

‘இனியா அங்கிருந்து எதுவும் நமக்கு ஹெல்ப் பண்ண முடியாது. அவளுக்கு கூப்பிட்டு ஏன் அவளை தேவை இல்லாமல் குழப்பணும்’ என்ற எண்ணத்துடன் அந்த முடிவைக் கைவிட்டு தென்றலின் வீட்டிற்கு சென்றான்.

இது எதுவும் அறியாமல் அறையின் உள்ளே அமர்ந்திருந்த தென்றல் மனதிற்குள் புலம்பிக் கொண்டிருந்தாள். நாம் கதையில் படிப்பது போல அல்லவே காதல். அது கதைக்கு மட்டும் சரிவரும். ஹீரோ கோடிஸ்வரன், ஹீரோயின் ஏழை என்று இருவரையும் மனதார ஏற்றுகொள்ளும் அவர்களின் குடும்பம் எல்லாம் திரையில் பார்க்கவும் கதையில் படிக்கவும் அழகாக இருக்கும்.

ஆனால் நிதர்சனம் வேறுதான். எந்தவொரு நடுத்தர குடும்பத்தினரும் காதல் திருமணத்திற்கு ஒப்புகொள்வதில்லை. மீறி அந்த திருமணம் நடந்தாலும் பின்நாளில் வரும் கஷ்டங்களை அந்த பெண் மட்டும் தனித்து நின்று சந்திக்க வேண்டும். ஜாதி, மதம், மொழி, கௌரவம் இந்த மாதிரி ஏராளமான கட்டுபாடுகள் இந்த காதலுக்கு விதிக்கபட்டுள்ளது.

இதெல்லாம் கடந்து தன் திருமணம் நடக்குமா என்ற சந்தேகத்துடன் அறைக்குள் அமர்ந்தவண்ணம் ஏதேதோ நினைத்து மனதளவில் சோர்ந்து போனாள் தென்றல்.

செழியன், சுப்பு இருவரும் மகனின் பேச்சிற்கு மறுப்பேச்சு பேசாமல் அமைதியாக இருந்தனர். தென்றல் அறையைவிட்டு வெளியே வராமல் இருப்பதைக் கவனித்த சுப்பு கணவனை நிமிர்ந்து பார்த்தார்.

‘பொறுமையா இரு’ என்று செழியனின் பார்வைக்கு கட்டுபட்டு அவரும் மௌனமாக  இருக்க வாசலில் பைக் வந்து நிற்கும் சத்தம்கேட்டு வாசலுக்கு விரைந்தான் கதிர்.

தென்றலின் வீட்டிற்கு தைரியமாக வந்துவிட்டபோதும் அவளின் பெற்றோர் இனி என்னனென்ன கேட்டு மனதைப் புண்படுத்த போகிறார்களோ என்ற சந்தேகத்துடன் வாசலில் தேங்கி நின்றான்.

“வாங்க சஞ்சீவ்” என்று வாசலுக்கு வந்து அழைத்த கதிர் முகத்திலிருந்து அவனால் எதையும் கண்டுபிடிக்க முடியவில்லை.

“ம்ம்” என்றவனை அழைத்துக்கொண்டு வீட்டிற்குள் நுழைந்த கதிர், “அப்பா இவன் என்னோட ஃப்ரெண்ட் சஞ்சீவ்..” என்றவன் பெற்றோருக்கு அறிமுகபடுத்திவிட்டு, “தென்றல் போய் எல்லோருக்கும் காபி கொண்டுவாம்மா” என்று அறையை நோக்கி குரல் கொடுத்தான்.

சஞ்சீவிற்கு என்ன நடக்கிறதென்று புரியாதபோதும் கதிர் காட்டிய இடத்தில் அமைதியாக அமர்ந்தான்.

“வாங்க தம்பி” என்ற செழியன், “என்ன படிச்சு இருக்கீங்க? அப்பா, அம்மா எல்லாம் எங்கே இருக்காங்க” என்று இயல்பாக விசாரித்தார்.

“அப்பா அவனுக்கு யாருமில்ல. ஆசரமத்தில் வளர்ந்து படிப்பை முடிச்சிட்டு இப்போ நல்ல கம்பெனியில் வேலையில் இருக்கான். நம்ம தென்றல் போட்டோ பார்த்தும் பிடிச்சிருக்குன்னு சொன்னான். உங்க விருப்பத்தைக் கேட்கலாம்னு நேரில் வர சொன்னேன்” என்று தந்தையை பேச இடம் கொடுக்காமல் பேசிய கதிர்,

“என்ன சஞ்சீவ் நான் சொல்வது சரிதானே” என்று கேட்க அவனுக்கு சத்தியமான அங்கே என்ன நடக்கிறதென்று புரியாமல் ஏதோ தலையை ஆட்டவேண்டுமென்று, “ம்ம்” என்றான்.

தன் மகனின் வேகமும், சஞ்சீவின் பதட்டம், மகளின் நடவடிக்கை அனைத்தையும் வைத்து நடந்தது என்னவென்று கணித்துவிட்ட செழியன், “உன்னோட தங்கை காதலிக்கிற பையனா?” என்றவர் ‘மகள்’ என்ற சொல்லாமல் விட்டதை கதிரும் கவனித்தான்.

“ஆமா அப்பா” என்றதும், “ஏன்டா ஊர் பேர் தெரியாதவனை உன் தங்கச்சி காதலிச்சா நீயும் சரின்னு சொல்லி அவனை கூட்டிட்டு வந்து எங்களுக்கே அறிமுகபடுத்தர” என்று மகனிடம் சண்டைக்கு போனார் சுப்புலட்சுமி.

அவரின் பேச்சில் உள்ளம் காயபட்ட சஞ்சீவ், “கதிர் உங்களிடம் நான் இதை எதிர்ப்பார்க்கல. என்னை கூப்பிட்டு வெச்சு அவமானபடுத்திர மாதிரி இருக்கு உங்க செயல்” என்றவன் அங்கிருந்து கிளம்ப நினைத்து எழுந்தான்.

“இதெல்லாம் நீங்க எதிர்பார்த்து வந்திருந்தாலும் நடக்காது சஞ்சீவ்” என்று புதிர் போட்ட கதிர், “அப்பா நீங்க சொல்லுங்க சஞ்சீவ் நிலையில் இனியா இருந்திருந்தா அவளை நீங்க ஏத்துகிட்டு இருந்திருப்பீங்க இல்ல. அதே நிலையில் இப்போ சஞ்சீவ் இருக்காரு உங்க முடிவை சொல்லுங்க” என்றான்.

சஞ்சீவ் குழப்பத்துடன் நின்றிருக்க கண்ட சுப்புவோ, “தம்பி மற்ற குடும்பம் மாதிரி நாங்க இல்ல. எங்க இனியாவை ஏழு வயதில் இருந்து வளர்த்தி இப்போ வெளிநாட்டிற்கு படிக்க அனுப்பியிருகோம். எங்களுக்கு பணத்தைவிட மனுஷனோட குணம் முக்கியம்..” என்ற சுப்பு எழுந்து சமையலறைக்குள் சென்று மறைந்தார்.

“என் மகளை நீங்க கண்கலங்காமல் வெச்சு பார்த்துகிட்ட அதுவே எங்களுக்கு போதும்.” என்றவர் புன்னகையுடன் சொல்ல சஞ்சீவ் மனதில் நிம்மதி பரவியது.

“இன்னும் ஏன் நிற்கிறீங்க சஞ்சீவ்?” கதிர் அவனை அமரவைத்து பேச சுப்பு எல்லோருக்கும் காபி கொண்டுவரவே, “நீங்க எடுத்துகோங்க தம்பி” என்றார்.

சற்று நேரம் சஞ்சீவி தனியாக அழைத்து வந்த கதிர் மெளனமாக தோட்டத்தை வேடிக்கைப் பார்த்தான். தனக்கு போன் வந்ததிலிருந்து இப்போது நடந்ததை எல்லாம் நினைத்து பார்த்த சஞ்சீவ், “கொஞ்ச நேரத்தில் என்னை புலம்ப வெச்சிட்டீங்க கதிர்” என்றான் சிரித்தபடி.

“உங்களை அவமானபடுத்தும் எண்ணத்துடன் நான் உங்களை வர சொல்லல. தென்றல் இப்போதான் எல்லாமே சொன்னா. நீங்க இனியாவோட நண்பன் என்றதும் இந்த பிரச்சனை சீக்கிரத்தில் முடிஞ்சிபோச்சு. நான் பேசியது உங்க மனசை காயபடுத்தி இருந்த மன்னிச்சியிருங்க.” என்றதும் கதிரின் குணம் சஞ்சீவிற்கு பிடித்துப்போனது.

அண்ணன் என்ற நிலையில் நின்று குடும்பத்திடம் கனிவாக எடுத்து சொன்னது மட்டும் இல்லாமல் தன் பேச்சில் மற்றவரின் உள்ளம் காயப்பட்டு இருக்குமோ என்ற சந்தேகத்தில் மன்னிப்பு கேட்கும் அவனின் குணம் சஞ்சீவ் மனதில் நல்லவொரு இடத்தை பிடித்தான் கதிர்.

“இதுக்கு எதுக்கு மன்னிப்பு கேட்கிறீங்க?” என்றவன், “என்னோட காதல் இவ்வளவு சீக்கிரம் கைசேரும் என்று நினைக்கல” என்றான் நிறைவுடன்.

கதிர் மெளனமாக புன்னகைக்க, “இனியா அடிக்கடி சொல்லுவா. இருக்கிறவங்க இல்லாதவங்களுக்கு கொடுத்து உதவினால் அவனும் பணக்காரன் ஆகிவிடுவான்னு. அவகிட்ட எப்படி அந்த குணம் வந்துச்சுன்னு அடிக்கடி யோசிப்பேன். இப்போ உங்களைப் பார்க்கும்போது புரியுது கதிர்” என்று சஞ்சீவ் தோளில் தட்டிகொடுத்தான் கதிர்.

சிலநிமிடம் அங்கே மௌனம் நிலவியது.

“என்னோட பாயிண்ட் ஆஃப் வியூவில் அது சரிதான். பாசத்தை பகிர்ந்து கொடுத்து துவண்டு போகும்போது தோள் சாய்த்து ஆறுதல் சொல்லு தவறு செய்யும்போது தட்டிகேட்டு நல்வழியில் நடத்தும் தோழமையும், நமக்கு செய்ய நினைப்பதை அடுத்தவருக்கும் செய்து பார்க்க நல்ல மனசும் இருந்துட்டா இங்கே ஏற்றத்தாழ்விற்கு இடமிருக்காதே” என்றவனின் கருத்தை சஞ்சீவ் ஒத்துகொள்ள வேண்டியிருந்தது. 

தென்றலுக்கு நடப்பவை அனைத்தும் பிரம்மிப்பாக இருந்தது. தன் காதலுக்கு இவ்வளவு சீக்கிரம் சரியென்று சொல்வார்கள் என்று அவள் கனவிலும் நினைக்கவில்லை. அவளின் படிப்பு முடிந்தும் திருமணம் என்ற அண்ணனின் தோள் சாய்ந்த தென்றல், “தேங்க்ஸ் அண்ணா” என்றாள்.

“என்னோட தங்கச்சிக்கு இதை கூட செய்யாமல் இருப்பேனா” என்று புன்னகையோடு கூறிய கதிர், “இனியாவிடம் நீ இந்த விஷயத்தை சொல்லாதே தென்றல். அடுத்த மாசம் நான் அமெரிக்கா போகும்போது நேரில் சொல்லிகிறேன்” என்றதும் அவளும் சரியென்று தலையசைத்தாள்.

அன்று முதல் நாள் கல்லூரிக் சென்ற இனியாவோ, ‘என்னடா தலையும் புரியல வாழும் புரியல’ என்று கடுப்புடன் நினைத்தாள்.

அவளின் அருகே இருந்த ஒருவன், “என்ன கிளாஸ் புரியலையா?” என்று கேட்க அவளும் ஒப்புதலாக தலையசைத்தாள்.

“இது முதல் நாள்தானே. எல்லாம் போக போக புரியும்” என்று புன்னகைக்க அவளும் மென்னகையுடன் அவனை நிமிர்ந்து பார்த்தாள். கிட்டதட்ட சஞ்சயை கண்டது போலவே இருந்தான் தோற்றத்தில்..

அதன்பிறகு இருவரும் பரஸ்பர விசாரணைக்கு பிறகே தெரிந்தது. ஸ்ரீதர் கனடாவை சேர்ந்தவன். அவனின் படிப்பிற்காக உறவுகளை விட்டுவிட்டு இங்கே வந்து சேர்ந்திருக்கிறான் என்று!

அன்றைய வகுப்புகள் முடிந்து வெளியே வரும்போது வாசலில் காருடன் நின்ற அர்ஜூனைப் பார்த்த ஸ்ரீதர், “இவரு யார்” என்று இனியாவிடம் கேட்டவனின் பார்வை அவனின் மீதே நிலைக்க, “என்னோட அண்ணா” என்று அவனை அறிமுகம் செய்து வைத்தாள்.

முதல் நாள் கல்லூரி முடிந்து வந்ததில் இருந்தே அன்று நடந்த அனைத்தையும் சொல்லி புலம்பியவளை பார்த்து மற்ற நால்வரும் சிரிக்க, “என்னை நல்ல காமெடி பண்ணி சிரிங்க” என்று சொல்லிவிட்டு அவளின் பிளாட்டிற்கு சென்றாள்.

அன்றைய சமையலை முடித்துவிட்டு படிக்க அமரும் நேரத்தில் செல்போன் சிணுங்கியது. அதில் தெரிந்த குடும்பத்தின் முகங்களைப் பார்த்தும் அவளின் கண்கள் தானாகவே கலங்கியது.

தென்றலிடம் தொடங்கிய பேச்சில் அடுத்தடுத்து போன் கைமாறிவிட நேரம் சென்றதே தெரியாமல் பேசிவிட்டு அதன்பிறகு அன்று நடத்திய பாடத்தை படித்துவிட்டு சோபாவில் படுத்து உறங்கிவிட்டாள். நாட்கள் ரெக்கைகட்டி பறந்தது.

என்னதான் அவளை சுற்றி அர்ஜூன், ஷர்மியின் குடும்பம் இருந்தபோதும் அவளின் நினைவுகள் அனைத்தும் அவனையே சுற்றி வந்தது. இந்த இடைபட்ட நாளில் ஸ்ரீதருடன் அவளின் நட்பு வலுபெற அவன் அந்த இடத்தை எல்லாம் சுற்றிக் காட்டினான்.

அவளுக்கு அந்த நாட்டின் பழக்க வழக்கங்களை சொல்லி தந்தான். அவள் கொண்டு வரும் இந்திய உணவுகளை ரசித்து சாப்பிடுவான். இருவரும் அங்கே ஒரு ஷாப்பில் பார்ட் டைம் ஜாப் சேர்ந்தனர். இனியாவிடம் இப்போது நிறைய மாற்றங்களை கண்கூட உணர்ந்தான் அர்ஜூன்.

முதலில் ஆண்கள் என்றாலே ஒதுங்கும் பெண் இப்போது நிமிர்வுடன் பேசினாள். அவர்கள் வாங்கி கொடுத்த உடைகளில் கண்ணியத்தை தக்க வைப்பது போன்ற உடைகளை தேர்வு செய்து அணிந்தாள். முதலில் விளையாட்டு பெண்ணாக இருந்தவள் இப்போது கொஞ்சம் வயதிற்கு ஏற்ற பக்குவத்துடன் வலம்வர தொடங்கினாள்.

அந்த நாட்டு கலாச்சாரம் பார்த்து அவளுக்கு தலைதான் சுற்றியது. பதினைந்து வயது பையன் டேட்டிங் போகிறான். பிள்ளைகள் படிக்கும் வயதில் கிளப், குடி சுற்றுவதைப் பார்த்து அவள் சிலநேரம் தன்னையும் அறியாமல் ஸ்ரீதருடன் சண்டை போடுவாள்.

அதற்கு அவன் தரும் விளக்கத்தில், ‘இவனிடம் ஏன்தான் கேட்டோமோ’ என்று என்னும் அளவிற்கு மனதளவில் நொந்து போவாள். அன்றும் இது பற்றிய ஒரு சண்டையில் இருவருக்கும் வாக்குவாதம் நடந்தது.

“இனியா லிசன் டூ மீ. பாம்பு தின்கின்ற ஊருக்கு போன நடுதுண்டு என்னோடது என்று உட்காரனும். தவளை திக்கும் ஊருக்கு போனா அதோட வாய் எனக்கு என்று சாப்பிடனும். அந்த மாதிரிதான் எல்லாமே. நீ சொன்னதும் இங்கே எல்லாம் மாற போறது கிடையாது” என்றான் எரிச்சலோடு.

“கருமம் கருமம் நினைக்கவே வாந்தி வருது. இவன் பாரு அருவருப்பே இல்லாமல் பேசறான்” என்று தலையில் அடித்துக்கொண்டு சாப்பிட்ட டிப்பன் பாக்சை எடுத்துகொண்டு அவள் கைகழுவ சென்றாள். அப்போது அவளின் செல்போன் சிணுங்கியது.

திரையில் தெரிந்த கதிரின் புகைப்படம் பார்த்ததும், “இது யாரு இனியா போனில்” என்றவன் போனை எடுத்து இயல்பாக காதிற்கு கொடுத்தான்.

“இனியா என்ன பண்ற” என்று கம்பீரமான குரல் அவனின் மனத்தைக் கவர்ந்தது.

“நான் இனியா இல்ல. அவளோட காதலன் ஸ்ரீதர் பேசறேன்” என்று அவன் விளையாட்டாக சொல்லிவிட்டு நிமிர அவனின் கன்னத்தில் பளார் என்று ஒரு அரை விழுக விக்கித்துப்போய் நிமிர்ந்து பார்த்தான்.

அதே நேரத்தில் மறுபக்கத்தில் அரை விழுந்த சத்தம்கேட்டு, “ஏய் இனியா உனக்கு கை ரொம்ப நீளுது. ஒருத்தரை அடிக்க உனக்கு என்ன உரிமை இருக்கு” என்று கதிர் போட்ட சத்தம்கேட்டு அவனின் கையிலிருந்து போனைப் பிடுங்கி,

“என்னோட நண்பனை அடிக்க எனக்கு எல்லா உரிமையும் இருக்கு. அதில் தலையிட நீங்க யாரு முதலில் போனை வைங்க” என்றாள் கோபத்துடன்.

மறுநிமிஷம் போன் கட்டாகிவிட எதிரே இருந்த ஸ்ரீதரை முறைத்தபடி சிலநொடி நின்றாள். அவளுக்கு வந்த கோபத்தில் முகமெல்லாம் சிவந்துவிட மேல் மூச்சு கீழ் மூச்சு வாங்க நின்றவளை நிமிர்ந்து பார்க்க அவனுக்கு தோணவில்லை.

அவன் போனை எடுக்கும்போது வந்துவிட்ட இனியா அவன் என்ன பேசுகிறான் என்ற எதிர்ப்பார்ப்போடு அமைதியாக இருக்க, ‘காதலன்’ என்றதும் அவளையும் அறியாமல் அடித்துவிட்டாள். அதே நேரத்தில் கதிரையும் கேட்க கூடாத வார்த்தையைக் கேட்டுவிட்டாள்.

நொடி பொழுதில் நடந்து முடிந்த இந்த நிகழ்வு. அங்கே அமைதி நிலவிட அதை முதலில் கலைத்தான் ஸ்ரீதர்.

“சாரி” என்றபிறகும் அவள் அமைதியாக இருந்தாள்.

அவளின் மௌனம் அவனை என்னவோ செய்ய, “இனியா ப்ளீஸ் என்னோட பேசு” என்றான்.

இனியாவின் அந்த கோபம் அவனுக்கு புதிது. இங்கே வந்த நாளில் இருந்து புன்னகை முகமாகவே இருந்தவள் இன்று இப்படி பேசாமல் இருப்பதை பார்க்க அவளால் முடியவில்லை.

அதற்குள் அர்ஜூன் வந்துவிட அவனுடன் வழக்கம்போல வீட்டிற்கு கிளம்பிவிட அவள் காரில் ஏறியதும் அவனுக்கு ஒரு குறுந்தகவலை அனுப்பினாள். ஸ்ரீதர் தன்னுடைய தவறை உணர இவள் கூறிய வார்த்தையில் காயம்பட்ட மனதை தேற்றகூட ஆளின்றி தனிமையில் வானத்தை வெறித்தான் கதிர்.

 “என் மனதில் என்றும் நீயே.

கோபத்தில் சொல்லும் வார்த்தைகள்

பிரிவிற்கு காரணம் ஆகுமோ

என்ற தவிப்பு என்னுள்ளே

உன்னை பிரிந்திருக்கும்

நாட்களைவிட இன்றைய நாள்

பயம் அதிகமாக இருக்கிறது..

நீ எடுத்த முடிவு

என்னை  உன்னிடமிருந்து ஒரே

அடியாக பிரித்துவிடுமோ என்று!” அதைப் பார்த்த கதிரின் கண்கள் தானாக கலங்கியது. சிறிய பேச்சில் இருமனம் இங்கே தனிமையில் தவிக்க பிரிவிற்கு வழி வகுக்குமோ ஸ்ரீதரின் இந்த வருகை!

error: Content is protected !!