Kaalangalil aval vasantham 11

நினைத்து நினைத்துப் பார்த்தால்

நெருங்கி அருகில் வருவேன்…

உன்னால் தானே நானே வாழ்கிறேன்…

உன்னில் இன்று என்னைப் பார்க்கிறேன்…

அலெக்ஸா மெல்லிய குரலில் பாடிக் கொண்டிருக்க, டைனிங் டேபிளில் தலையைப் பிடித்துக் கொண்டு அமர்ந்திருந்தாள் ஸ்வேதா. பார்வை எங்கோ பதிந்திருக்க, அவளது கண்களில் லேசான கண்ணீர் குளம்!

இது நாள் வரை அவளிடம் சஷாங்கன் கையை உயர்த்தியதில்லை. இருவருக்கும் வாக்குவாதங்கள் இருந்து கொண்டு தானிருக்கும். ஆனால் அனைத்தையும் தாண்டி இருவருக்குமான நெருக்கம் அத்தனையையும் முறியடித்து விடும்.

இன்று அந்த நெருக்கம் கூட அவனிடம் செல்லவில்லை என்ற காயம் மனதுக்குள் முள்ளாய் அழுத்தியது.

இத்தனை நாட்கள் பழகிய மனிதர்கள் போலில்லை இவன்!

வித்தியாசமானவன்!

அவளை முழுமையாக ஏற்றுக் கொண்டவன்!

ஆரம்பம் வேண்டுமானால் கவர்ச்சியில், மோகத்தில் அவளிடம் லயித்து இருந்தான் எனலாம்… ஆனால் இப்போதெல்லாம், அதை தாண்டிய அர்ப்பணிப்பை அவனிடம் கண்கூடாக கண்டுகொண்டிருந்தாள் ஸ்வேதா.

அவளது அனுபவம் சொல்லியது, அவன் உண்மையானவன் என்று!

அந்த உண்மைத்தன்மை அவனை விட்டு விலகி விடாதே என்றது!

கடமைக்காக காதலாகியவள் தான், ஆனால் இப்போது விட்டுவிட முடியாத பந்தத்தில் சிக்குண்டு தவித்தது அவளது மனது!

அவளது பயணத்தில் எத்தனையோ பேரோடு நெருக்கமாக இருந்திருக்கிறாள். வேறு வழியில்லாமல் சிலரோடு, இறுதி வரை வருவான் என்ற நம்பிக்கையில் சிலரோடு, வாய்ப்பு வேண்டுமே என்று சிலரோடு, வாய்ப்பை இழக்கக் கூடாதே என்று சிலரோடு, காலப்போக்கில் பணத்துக்காக சிலரோடு, அரசியல் பலத்துக்காக சிலரோடு என்று அந்த சிலர் என்பது கணக்கில்லை.

பதினாறு வயதில் ஆரம்பித்தது!

நடிக்க வேண்டும் என்பதும் முன்னணி நடிகையாக வேண்டும் என்பதும் அவளது விருப்பம், ஆனால் அது அவளது தாயின் கனவு, லட்சியம், பிடிவாதம், வெறி!

அவரது பிடிவாதமான லட்சியத்துக்காக முதன் முதலாக ஒரு தயாரிப்பாளரிடம் அனுப்பினாள் மாயா. ஆம் பெற்றவளே தான்!

மாயாவும் சினிமா நடிகையாக இருந்தவர் தான். கதாநாயகியாக இல்லாமல் சிறு வேடங்களில் நடித்து வந்தவருக்கு மகளை மிகப்பெரிய நடிகையாக்க வேண்டும் என்பது தான் லட்சியமானது!

ஸ்வேதா பிறந்து சில மாதங்களிலேயே, அவளது கணவன், விவாகரத்தை கோர, அதன் பின் வெகு வருடங்கள் அவருக்கு தனிமை தான் துணையானது!

அப்போதெல்லாம் அவர் பணத்துக்காக பட்ட கஷ்டங்கள் அனைத்து பார்த்து வளர்ந்தவள் ஸ்வேதா. பணத்துக்காக கஷ்டபட்டாலும், அவளை மிகப்பெரிய பள்ளியில் தான் படிக்க வைத்தார். பணக்காரர்கள் மட்டுமே படிக்கக் கூடிய அந்த பள்ளியில், தான் மட்டும் தனித்துத் தெரிவதாகப் படும் ஸ்வேதாவுக்கு.

ஆனாலும் நுனி நாக்கு ஆங்கிலமும், நாசூக்கான பழக்க வழக்கங்களும் அவளது சொத்தானது. அதோடு, வசதியான வீட்டு பிள்ளைகளின் நட்பும்!

மாயாவுக்கு சைலேஷுடன் தொடர்பு ஏற்பட்ட போது, ஸ்வேதா ஒன்பதாம் வகுப்பிலிருந்தாள். அதன் பின் அவர்களது வாழ்க்கை தரம் ஓரளவு மாறியது!

மாயா எப்படிப்பட்டவராக இருந்தாலும் சைலேஷுக்கு உண்மையாக இருந்தார். அவரது அத்தனை முயற்சிகளுக்கும் ஒத்துழைத்தார். அதனால் தான் இப்போது வரை இருவரும் ஒன்றாகவே பயணிக்கின்றனர்.

ஸ்வேதாவை நடிக்க வைக்கும் முயற்சியையும் சைலேஷ் தான் எடுத்தார். மாயாவுக்கு, அவள் நடிகையாக வேண்டும் என்ற ஆசையிருந்தாலும், அவள் வளர வளர தன்னை போல அவளும் சீரழிந்து விடக் கூடாது என்ற எண்ணமும் இருந்தது. ஆனால் அதை மேல் தட்டில் தள்ளி, சினிமா கனவினை எடை மிகுந்த கீழ் தட்டாக்கியது சைலேஷ் தான்!

அவருக்கு இந்த துறையில் காண்டாக்ட்ஸ் அதிகம். அதோடு மாயாவின் துணை!

சிரமமே இல்லாமல் முதல் பட வாய்ப்பைப் பெற்றாள் ஸ்வேதா.

ஆனால் அதற்காக அவள் கொடுத்த விலை அதிகம்!

மிகப்பெரிய பட்ஜெக்டில் தயாரான அந்த படத்தில் நடிக்க, மிகப்பெரிய நடிகைகளே போட்டியிட்டுக் கொண்டிருந்த போது, புது முகம், அதுவும் பதினாறே வயதான அவளுக்கு வாய்ப்பு கிடைத்ததென்பது அவள் கொடுத்த விலைக்காக தான்!

இப்போது போல டிக்டாக், மியுசிகலி, யூடியுப் என்றெல்லாம் எதுவும் கிடையாது. இதில் ஹிட் அடித்தவர்களுக்கு இப்போது வேண்டுமானால் எளிதாக சினிமா கதவு திறக்கலாம். ஆனால் அப்போது அப்படியில்லை.

வாய்ப்பு என்பது தயாரிப்பாளர், இயக்குனர், ஹீரோ இவர்களாகப் பார்த்து மனது வைத்துக் கொடுத்தால் தான் உண்டு!

அந்த நேரத்தில், ஆளை அடித்துப் போடும் அழகோடு வந்த புதிய முகத்தை கோலிவுட், டாலிவுட், பாலிவுட் என அனைத்து வுட்களும் தங்கத் தட்டில் ஏந்திக் கொண்டது.

முதல் படமே தமிழில் உச்ச நடிகருடன் ஜோடி! அடுத்த படத்தில் மலையாள உச்ச நடிகர், அதற்கடுத்து தெலுங்கு என்று அதன் பின் நிற்க நேரமில்லை!

அழகு மட்டுமல்ல, அந்த அழகை ஆயுதமாக்கும் வித்தையும் ஸ்வேதாவுக்கு கைவந்திருந்தது. ஆனால் அவள் காலூன்றும் வரை பட்ட பாட்டை யாராலும் தாள முடியாது.

எத்தனையோ வகையான மனிதர்களை கண்டு விட்டாள் அவள். சமூகத்தின் அத்தனை கசடான பக்கங்களையும் பார்த்து விட்டாள். அதில் ஒரு சிலர் ரசிகர்களாக இருப்பார்கள். அவளை அணுஅணுவாக ரசித்து விரும்பி இருப்பார்கள். ஆனால் ஒரு சிலரோ சைக்கோக்களை போன்றும் படுத்தி எடுத்திருக்கிறார்கள். அந்த காயங்களை மறக்கக் கூட முடியாது. நினைத்தால் கூட உடல் நடுங்கும்! ஒரு சிலரோ பூக்களால் அபிஷேகம் செய்திருக்கிறார்கள். ஒருசிலர் கரன்சியால்… ஒவ்வொன்றும் ஒரு விதம்!

சமூகத்தில் மிகப் பெரிய அந்தஸ்தில் இருக்கும் பெரும்பாலான மனிதர்களின் ரகசிய பக்கங்களின் நாயகி இவள்!

அப்படிப்பட்ட அந்த பயணத்தில் இப்போது மனதில் நிற்பவர்கள் வெகு சிலர் மட்டும் தான் என்பது அவள் மட்டுமே அறிந்த உண்மை…

அத்தனை பேரையும் தாண்டி, இப்போது அவளுக்கு முன் விஸ்வரூபமாய் நிற்பது சஷாங்கன் மட்டும் தான்!

அவனை நினைக்கும் போதே அவளது கண்களில் கண்ணீர் தேங்கியது!

இப்படி ஒருவன் அவளிடம் காதலைக் கொட்டுகிறான் என்பதே அவளைப் பொறுத்தவரை அதிசயம்!

அப்படிப்பட்டவனை காயப்படுத்த வேண்டும் என்பதே அவளால் முழு மனதோடு செய்ய முடியாத விஷயம் தான்.

ஆனாலும் காயப்படுத்துகிறாள்!

அவனைக் காயப்படுத்தும் போதெல்லாம் அவனை விட அதிகமாக காயப்பட்டும் போய்விடுகிறாள்! அன்றைக்கும் அவள் வேண்டுமென்றேதான் காயப்படுத்தினாள். வலுச் சண்டையிட்டாள். அவளுக்குள் சிறு நப்பாசை, கன்னாபின்னாவென காயப்படுத்தினாள், அவளது உறவே வேண்டாமென போய் விட மாட்டானா என்று!

அப்படி போனாலும் அவளால் தாள முடியாது, இருந்தாலும் தாள முடியாது!

இருந்து அவளிடம் வதைபடவா காதல்?

இத்தனை நாட்களில் அவளது பழைய வாழ்க்கையை கொஞ்சமும் திரும்பி பாராதவனை இன்று அதை பேச வைத்தது, அவளது வதை தானே!

ப்ரீத்தி அவனது உயிர்தோழி என்பதை அவள் அறிவாள். ஆனாலும் பேசக் கூடாததை எல்லாம் பேசி வதைத்தாள்!

அந்த வார்த்தைகள் அல்லவா அவனை நோகடித்தது! அப்படியொரு காதல் அவனுக்குத் தேவையா?

பதில் தெரியாமல் பெருமூச்சு விட்டாள்!

செல்பேசி அழைத்தது!

எடுத்துப் பார்த்தாள்! மாயா தான் அழைத்திருந்தார்!

அட்டென்ட் செய்து காதில் வைத்து, “சொல்லு மா…” என்று கூற,

“என்னாச்சு பேபி? வாய்ஸ் ஒரு மாதிரியா இருக்கு?” அக்கறையாக கேட்க,

“ம்ம்ம்.. நத்திங்…” என்று பெருமூச்சு விட்டவள், “நீ சொல்லு…” என்று கூற, மாயா மௌனமானார்!

“பேசறதுன்னா பேசு. இல்லைன்னா வை…” அவளுக்கிருந்த கோபத்தில் மாயா கையில் கிடைத்தால் சின்னாபின்னப் படுத்தும் ஆத்திரம் தலைக்கேறியது! அவரால் தானே அத்தனையும்!

அழுதே அவளை கரைத்து விடுவார்! அதன் பின் வேறு வழியில்லாமல் அனைத்துக்கும் தலையாட்டி பொம்மையாய் போக வேண்டி இருக்கும்!

“நமக்கு ரவியோட தயவு ரொம்ப அவசியம் பேபி…”

“அவனைக் கொண்டு போய் உடைப்புல போடு. அவனைப் பத்தி பேசினா நான் மனுஷியா இருக்க மாட்டேன்…”

கொதித்தாள் ஸ்வேதா. ரவியை கொல்லும் ஆத்திரம்!

“ரிலாக்ஸ் பேபி… இப்ப வேலை முடிஞ்சுதா இல்லையா?”

“முடியலைன்னா விட்டுட போறியா?” குத்தலாக ஸ்வேதா கேட்க,

“ரவி விட மாட்டான் பேபி…” என்றவரின் குரலில் சற்றும் ஈரமில்லை. கொஞ்சம் இறங்கி போனாலும் ஸ்வேதாவை கட்டுக்குள் வைக்க முடியாது என்பது அவருக்குத் தெரியும்.

“ப்ளீஸ் மா. என்னை நிம்மதியா விட்டுடேன்… கெஞ்சி கேக்கறேன்… இதுக்கும் மேல என்னை போர்ஸ் பண்ணாதம்மா…”

“இன்னும் கொஞ்ச நாள் தான் பேபிம்மா… இந்த ப்ராஜக்ட்ட சக்சஸ் பண்ணிட்டா நமக்கு வர்ற ஷேரை நினைச்சு பாரு…”

சஷாங்கன் இவருக்கு ப்ராஜக்ட்டா? கோபத்தில் வார்த்தைகளை விடத் தோன்றியது. ஆனாலும் அவளால் முடியாது. எப்படி பேசினாலும், என்ன பேசினாலும், மாயா செய்ய நினைப்பதை செய்ய வைக்காமல் ஓய மாட்டார்.

“அது உனக்கு வர்றது. உன்னோட ஹஸ்பன்ட்க்கு வர்றது…” ஒட்டாமல் கூற, மாயா பல்லைக் கடித்துக் கொண்டு,

“எனக்குன்னா அது உனக்கில்லையா பேபிம்மா!” என்று கேட்டார்.

“எனக்கு வேண்டாம். உன்னோட எதுவுமே எனக்கு வேண்டாம். ஷான் என்னை ரொம்ப லவ் பண்றான். அவனை மட்டும் எனக்கு விட்டுக் கொடும்மா. நான் சம்பாரிச்ச எதுவுமே எனக்கு வேண்டாம்… உங்க கண்ல படாம நான் போய்க்கறேன்…” கிட்டத்தட்ட கெஞ்சல் தான். ஆனால் அவர் ஒப்புக் கொள்ள மாட்டார். அதுவும் அவளுக்குத் தெரியும்.

பெண்ணை வைத்து சம்பாரித்துக் கொண்டிருப்பவர்களுக்கு தெரியாதா, அந்த பெண்ணை எப்படி மடக்க வேண்டும் என்று!

“அவனை விட ஆயிரம் பங்கு பணக்காரனை உனக்கு நான் கல்யாணம் பண்ணி வைக்கறேன் பேபிம்மா…”

“இல்ல எனக்கு ஷான் தான் வேணும். வேற யாரும் வேண்டாம்…” பிடிவாதமாக கூறியவளின் கண்களில் கண்ணீர் வெள்ளம்.

சஷாங்கனை மட்டும் இவர்கள் விட்டுக் கொடுத்தால் போதுமே என்று தான் மனம் துடித்தது!

“பைத்தியம் மாதிரி பேசாத பேபி. புத்திசாலித்தனமா பிழைக்கற வழியப் பாரு. இதெல்லாம் ரவிக்கு தெரிஞ்சா நம்மளை உயிரோட விட்டு வைக்க மாட்டான்…”

“மை ஃபூட்… இனிமே ரவி சொல்றதை நான் கேட்க முடியாது. என்ன வேண்ணா பண்ணிக்கங்க. இனிமே நீங்க ஷானை டிஸ்டர்ப் பண்ண நான் விட மாட்டேன்…” என்றவளின் குரலில் ரவுத்திரம் ஏறியிருந்தது.

என்ன வந்தாலும் பார்த்துக் கொள்ளலாம் என்று அவள் முடிவு செய்து விட்டவள், பேசியை அணைத்து தூக்கி எறிந்தாள்.

முகத்தை அழுத்தமாக துடைத்தவள், ஆழ்ந்து மூச்சை இழுத்து விட்டாள். மனம் சற்று லேசானது போல தோன்றியது. சஷாங்கனின் நிலையை நினைத்துப் பார்க்கும் போது சற்று பயமாக கூட இருந்தது.

அது அப்படிப்பட்ட போதை வஸ்து. போதை வஸ்து என்பதைத் தாண்டி, மூளையின் செயல்பாடுகளை முற்றிலும் பாதிக்கக் கூடும் என்று அவளுக்கு தெரிந்த மருத்துவர் கூறியிருந்தார்.

உடலுக்குள் கலந்தவுடன் அது வேலையை காட்டாது. கொஞ்சம் கொஞ்சமாகத்தான் அது தன் வேலையை காட்டும்.

இந்த நேரத்திற்கு, அவனை பாதிக்க ஆரம்பித்திருக்கக் கூடும் என்பதை உணர்ந்தவளுக்கு கண்களில் கண்ணீர் பெருகியது.

தன்னுடைய கையாலேயே தன்னவனின் வாழ்க்கையை முடிக்க வேண்டுமா? இது எவ்வளவு கோரமான முடிவு. அதை அவனுக்கு எழுத இந்த ரவி எதற்காக துடிக்க வேண்டும்?

காரணம் அனைத்தையும் அவள் அறிவாள். ஆனால் அவளால் அதை ஜீரணிக்க முடியவில்லை.

கடமைக்காக, நடிப்புத் தொழிலின் ஒரு பகுதியாகத்தான் அவள் ஷானை காதலிக்க ஆரம்பித்தது. ஆனால் அவளால் நடிக்க முடியவில்லை. ஒன்றிவிட்டாள் என்பதுதான் நிஜம்!

அவனை பிடித்தது, அவனது குணத்தை பிடித்தது, அவனது செயல்கள் அனைத்தையும் பிடித்தது, அவன் நெற்றியை தேய்த்து விட்டபடி சிரிப்பது கூட பிடித்தது. எல்லாவற்றையும் விட, அவளது ஷானாக அவளோடு ஒன்றி இருப்பது மிக மிக பிடித்தது.

இனி அவனுக்காக பார்த்து, அவனுக்காக மட்டுமே பேசி, அவனுக்காக மட்டுமே சிரித்து, அவனுக்காக மட்டுமே வாழ வேண்டும்.

அவன் மட்டும் போதும் அவளுக்கு!

அவனோடு குடும்பமாக வாழும் நாளை எண்ணியபடி, துள்ளி குதித்த படி, டைனிங் டேபிள் மேல் இருந்த ஆப்பிளை நறுக்க ஆரம்பித்தாள்.

காலிங் பெல் அடித்தது.

மனம் ஒரு முடிவு செய்து விட்டதில், ஆனந்தம் பொங்க, எதைப் பற்றியும் யோசிக்காமல் கதவைத் திறக்க, திறந்த கதவைத் தள்ளியபடி உள்ளே நுழைந்தார்கள், அவளது பாதுகாவலர்கள்!

மொத்தமாக நான்கு பேர். எப்போதும் அவளுக்கு பாதுகாப்பாக இருப்பார்கள். ஆனால் இங்கு வரும் போதெல்லாம் அவர்களை அழைத்துக் கொள்வதில்லையே என்று நினைத்தபடி,

“வாட் இஸ் திஸ் சைமன்? என்னோட பர்மிஷன் இல்லாம…” என்றுக் கொதிக்க, உள்ளே நுழைந்தான், ரவி!

“என்ன பேபி? என்ன டவுட் உனக்கு?” என்று சின்ன புன்னகையோடு உள்ளே வந்தவனைப் பார்த்து,

“நீயா?” என்று முகம் சுளித்தாள் ஸ்வேதா.

“வேற யார எதிர்பார்த்துட்டு இருந்த?” என்று கேட்டவாறே, அந்த டைனிங் டேபிளில் அமர்ந்தவன், அங்கிருந்த ஆப்பிளை எடுத்து கத்தியால் வெட்ட ஆரம்பித்தான், அவனது பார்வை அவளது பளீரென்ற தொடை மேல் படர்ந்திருந்தது.

அவனது கேள்வியை காதில் வாங்கினாலும், பதில் கூறாமல் மௌனம் காத்தாள் ஸ்வேதா. என்ன பதில் கூறினாலும் அதற்கும் ஒரு நக்கலான கேள்வியை கேட்பான். அதனாலேயே அவள் பெரும்பாலும் அவனுக்கு பதில் கொடுப்பதில்லை.

பேச்சுவார்த்தை யாவும் மாயாவின் மூலம் மட்டுமே!

எப்போதுமே ரவியை பிடிக்காது அவளுக்கு!

ஒரு நேரத்தில் அவனுடன் உறவு இருந்தது உண்மை! ஆனால் அவளை கை பொம்மையாக ஆட்டிப் படைக்க விரும்புபவனின் உறவை அவள் விரும்பவில்லை. ஆனால் மாயா அவனிடம் அட்டையாக ஒட்டிக் கொண்டார், அவன் மூலமாக கிடைக்கும் நன்மைகளை எண்ணி!

“சொல்லு பேபி… யாரை எதிர்பார்த்துட்டு இருந்த? சஷாங்கையா?” அவனது கேள்வியில் எள்ளல் வழிந்தது.

அதற்கும் அவள் பதில் கொடுக்கவில்லை. ஆனால் அவனது பார்வை அவளை உறுத்தியது. கால் மேல் காலிட்டுக் கொண்டு, அவளது பளீரென்ற பிரதேசத்தை கொஞ்சம் மறைக்க முயன்றாள். அதுவும் அவனது பார்வைக்கு இரையானது!

“என்ன விஷயம்ன்னு சொல்லிட்டு கிளம்பு ரவி…”

கறாராக கூறியவளை, கிண்டலாகப் பார்த்தவன்,

“ஷான் இப்ப ஹாஸ்பிடல்ல அட்மிட் ஆகிருக்கான். அது தெரியுமா?” என்று புருவத்தை ஏற்றி இறக்க, அவளது உதடுகள் துடிக்க ஆரம்பித்தது. மூக்கு சிவந்து விடைத்தது. கண்ணீர் கண்களை விட்டு இறங்கியே தீருவேன் என்று அடம் பிடித்தது!

ஆக இவளது கையாலேயே காதலனின் வாழ்க்கையை முடிக்கப் போகிறாள்!

அந்த குற்ற உணர்வின் கனத்தை தாளமுடியாமல் விசுக்கென்று எழுந்து கொண்டாள், வெடிக்கும் அழுகையை எப்படியாவது கட்டுப் படுத்திக் கொள்ள!

“உட்கார் பேப்…” அலட்டிக் கொள்ளாமல் பேசியவனை வெட்டிப் போடும் ஆத்திரம் வந்தது!

அவளது உணர்வுகளை கூடுமானவரை வெளிகாட்டிக் கொள்ளாமல் அமர்ந்தாள். இப்போது இவனிடம் காட்டுவது, அபாயத்தை அதிகரிக்கும்!

“மாயா கிட்ட அவன் மட்டும் போதும்ன்னு சொன்னாயாம்?” எள்ளலாக கேட்க, மூச்சை இழுத்து விட்டவள்,

“எஸ்…” என்றாள், தைரியத்தை இழுத்துப் பிடித்தபடி!

“அதுக்கு உனக்கென்ன அருகதை இருக்கு பேபி?” குரலை உயர்த்தாமல் அவன் கேட்க,

“ஷான் என்னை லவ் பண்றார்! அது போதும் எனக்கு!”

“அது தானே எனக்கு ட்ரம்ப் கார்ட்… அதுக்கு எதுக்கு நீ வசனம் பேசற?”

“என்னை விட்டுடு ரவி. எனக்கு இந்த லைப் வேணாம். எதுவும் வேணாம். நான் சஷாங்கை மேரேஜ் பண்ணிக்கணும். எனக்குன்னு குடும்பம் வேணும்..” ஒவ்வொரு வார்த்தையும் கவனமாக யோசித்துக் கோர்த்து பேசினாள். இவனிடம் ஒரு வார்த்தை தவறானாலும், உயிரே போய்விடும் என்பதை அறிவாள்!

“எங்கிருந்தாலும் வாழ்கன்னு நான் பாடத்தான் இவ்வளவு பெரிய ப்ளானை எக்சிகியூட் பண்ணேனா?” சிரித்தான் ரவி.

“ப்ளீஸ் ரவி. ஐ பெக் யூ…” என்றவளுக்கு கண்ணீர் மளுக்கென்று கொட்டியது.

“புலி வாலை பிடிச்ச கதை தெரியுமா பேபி?”

“ப்ளீஸ் ரவி…” என்றவளுக்கு அழுகை வெடித்தது.

“நான் ஹேப்பி மூட்ல இருக்கேன் பேபி. என்னோட ஹேப்பினசை உன்னோட கொண்டாடணும்ன்னு வந்திருக்கேன். என்னோட மூட ஸ்பாயில் பண்ணாத…” என்றவனது பார்வை, அவளது கவர்ச்சி பிரதேசங்களை அள்ளி விழுங்கிக் கொண்டிருக்க, அவளுக்கு திக்கென்று இருந்தது.

உண்மையில் ஷானோடு பழகவாரம்பித்த பின், அவள் அவனுக்கு மட்டுமே உண்மையாக இருந்தாள். இனி அவனுக்கு மட்டுமே உண்மையாக இருக்க வேண்டும் என்று உறுதி கொண்டிருந்தாள். அவனைத் தவிர வேறு ஒருவருக்கு தன்னுடைய வாழ்க்கையில் இடமில்லை என்பதை உறுதி செய்திருந்தவளை, அவனது பார்வை வெட்டிக் கூறு போட்டுத் தின்று கொண்டிருந்தது.

“நோ…” என்று இவள் பட்டென எழுந்து கொள்ள, அவளது பாதுகாவலர்கள் வெளியேறினர்!

உண்மையில் அவர்கள் ரவியின் ஆட்கள்!

அவளை தன்னுடைய கட்டுப்பாட்டிலேயே வைத்திருக்க வேண்டும் என்பதற்காக அவனால் நியமிக்கப் பட்டவர்கள் தான் அவர்கள்!

“என்ன பத்தினியாட்டம் சீன போடற?” என்றவன், பெருங்குரலில் சிரிக்க, அவனது சிரிப்பைக் கண்டவளுக்கு கொலைவெறி!

“உனக்கு ஷானோட சொத்து தானே வேணும்? ஒரு பொட்டு விடாம எழுதி கொடுக்க சொல்றேன் ரவி. என்னை விட்டுடு. எங்களை விட்டுடு…” என்றவளுக்கு கால்கள் இப்போது நடுங்கவாரம்பித்து!

“அவனோட சொத்தா?” என்றவன் ஹஹஹா என்று பெரிதாக சிரிக்க, அவனது சிரிப்பை பயத்தோடு பார்த்தாள் ஸ்வேதா!

“அந்த சொத்தெல்லாம் ஜுஜுபி. அதுக்கு போயா நான் போட்டி போடுவேன்? ரப்பிஷ்…” என்றவனின் குரலில் அத்தனை நக்கல்!

“ரவி… வேண்டாம்…” என்று ஒற்றை விரலை நீட்டி எச்சரித்தவளின் கழுத்தில் சட்டென கத்தியை வைத்தான்! அதுவரை ஆப்பிளை நறுக்கிக் கொண்டிருந்த கத்தி அது!

“என்ன சொல்ற?”

“ப்ளீஸ் விட்டுடு…” அவளுக்கு பயத்தில் உதறலெடுத்தது!

“இன்னைக்கு மண்டே… வியாழக்கிழமை நான் சொன்னது நடந்தாகனும். நடக்கலைன்னா…” என்று நிறுத்தியவன், “என்ன நடக்கும்ன்னு உனக்கே தெரியும்…” என்று முடிக்க, பதில் பேச முடியாமல் அழுகையில் வெடித்தாள் ஸ்வேதா!

“அதுக்கு நான் செத்தே போய்டறேன் ரவி…” என்றவளை உறுத்து விழித்தவன், கத்தியை டைனிங் டேபிளின் மேல் வைத்து விட்டு, பொறுமையாக சட்டையை இழுத்து விட்டுக் கொண்டு, பளாரென அவளை அறைந்தான்!

பேயறை அது!

அவன் அறைந்ததில் சுருண்டவள், சுற்றி கீழே விழுந்தாள்!

மயக்கம் வரும் போல இருந்தது!

இப்படியொரு வாழ்க்கை வாழ சபித்த இயற்கையை இவளும் சபித்தாள்!

இப்படியொரு வாழ்க்கை தேவையா?

மனசாட்சி கேட்டாலும், இறப்பதை நினைத்தால் பயமாகவும் இருந்தது.

தற்கொலை செய்து கொள்ளவும் துணிவு தேவை. வாழ துணிவில்லாத கோழைகளின் முடிவு என்று சொல்வார்கள். ஆனால் அந்த முடிவை எடுக்க எவ்வளவு தைரியம் வேண்டுமென்று ஸ்வேதாவை கேட்க வேண்டும். ஏனென்றால், தற்கொலை செய்து கொள்ள துணிவில்லாமல் தான் அவள் வாழ்ந்து கொண்டிருந்தது.

அப்படிப்பட்ட வாழ்க்கையில் நம்பிக்கை நட்சத்திரமாக வந்தவன் தான் சஷாங்கன். ஆனால் அவனது வாழ்க்கையை அவளின் கைக் கொண்டு முடிக்க வேண்டுமா?

எழ முடியாமல் விழுந்திருந்தவளை அள்ளி எடுத்தவன், அவளது படுக்கையறை நோக்கிப் போனான்!

பலவீனமான அவளது மறுப்புகள் எல்லாம் காற்றில் கரைந்தன!

Written by

Ardent reader, kirukkufying something, want to travel with characters around me.

error: Content is protected !!