kaalangalil aval vasantham 14(1)

kaalangalil aval vasantham 14(1)

ஸ்வேதாவின் வீட்டை அடைவதற்குள் ப்ரீத்தி பலவாறாக பேசி, அவனது கோப உச்சியை தன்னால் முடிந்தளவு குறைத்துக் கொண்டிருந்தாள், அதாவது குறைக்க முயன்று கொண்டிருந்தாள். ஆனால் அதற்கான பலன் தான் பூஜ்ஜியமாக இருந்தது.

அவன் கொஞ்சமும் இறங்கவில்லை. அவளது வார்த்தைகளை காது கொடுத்துக் கேட்கவுமில்லை.

“இப்ப நீங்க ஏதாவது செய்யப் போனா பெரிய பிரச்சனையாக சான்ஸ் இருக்கு ஷான். எத்தனையோ பேர் இந்த மொமென்ட்க்காக வெய்ட் பண்ணிட்டு இருக்காங்க. அதுக்கு நாமே வழி பண்ணி கொடுத்த மாதிரி ஆகிடும்… ப்ளீஸ் புரிஞ்சுக்கங்க…” மூச்சைப் பிடித்தபடி பேசிக் கொண்டிருந்தவளை அவன் கொஞ்சமும் கண்டுகொண்டால் தானே?

அவனது பார்வை முழுவதும் சாலையிலேயே இருந்தது. வாகனங்களுக்கு இடையில் புகுந்து, நெளிந்து, வளைந்து என்று பறந்து கொண்டிருக்க, மனம் முழுவதும் வன்மம் பரவிப் படர்ந்து கொண்டிருந்தது.

இந்த நிமிடம் அவள் கையில் கிடைத்தால், அவள் கதி அதோகதி தான் என்ற நிலை!

அவன் பதில் கூறாவிட்டாலும், அவள் கூறுவதைக் அவனது நிலையைப் பார்த்து, தயவாகக் கூறிக் கொண்டிருந்தாள். அவனிடம் எப்படி பேசுவது என்பதையும், எங்கு தொட்டால் அவன் எகிறுவான் என்பதையும், எங்கு தொட்டால் அவன் குளிர்வான் என்பதையும் அவள் அறிவாள். ஆனால் அவையெதுவும் இப்போது பலிக்கவில்லை!

ஸ்வேதாவின் வீட்டை அடையும் முன் சற்று தூரத்திலேயே கேட் மூடியிருப்பது தெரிய, ஹாரனை, ‘பாம்ம்ம்ம்ம்…’ என்று அலற விட்டான்.

மற்ற நாட்களில் வருவதற்கு முன் அந்த கேட் திறந்திருக்கும், அல்லது, அவனது காரை கண்டவுடன் அவசரமாக திறந்து விடுவார்கள். ஆனால் இன்று அவை எதுவுமில்லை!

தன்னந்தனியாக நின்றிருந்த அந்த வீடு தான் பலவற்றுக்கு சாட்சியாக இருந்திருக்கிறது. சினிமா, அரசியல், விளையாட்டு, வியாபாரம் என்று சுழன்றடிக்கும் பல புயல்களுக்கான அடித்தளம், அந்த வீட்டில் தான் இடப்பட்டது, இனியும் இடப்படும்!

ஆனால் இவையெல்லாம் தெரிந்துவிட்டால் விதிக்கென்ன மதிப்பு?

கழுதை குதிரையாவதும், குதிரை கழுதையாவதும் யார் கையில்?

அது யாராடும் நாடகம்?

கழுதைகளை குதிரையென்று சாட்சி கூறலாம். ஆனால் அவையாவும் கழுதை கத்தும் வரை தான்!

கழுதைகள் ஒருபோதும் கனைப்பதில்லை!

நமது உரையாடலும் கூட குதிரையுடனாக இருக்க வேண்டும். மாறாக அது கழுதையாக இருந்துவிட்டால், அதன் பொதியையும் நாம் சுமக்க நேரிட்டு விடலாம்!

இறுக்கமாக மூடியிருந்த அந்த கேட்டின் முன் காரை நிறுத்தியவன், ஹாரனடித்தான்!

யாரும் திறக்கவில்லை. ஆனாலும் ஹாரனடிப்பதை ஷான் நிறுத்தவில்லை. ஒவ்வொரு முறை அந்த ஹாரனை அழுத்தும் போதும் அவனது கோபம் இன்னமும் அதிகமாகியது. ‘பாம்ம்ம்ம்ம்…’ என்ற அந்த ஹாரன் ஒலி, அமைதியான அந்த பிரதேசத்தை அதிர செய்தது.

கானத்துரின் ஒதுக்குப்புறமான பாஷ் ஏரியா என்பதால், ஆட்கள் நடமாட்டம் அறவே இல்லை. அதிலும் இரவு வேளை வேறு!

அந்த சுற்றுப்புறத்தைப் பார்க்கும் போது, ப்ரீத்திக்கு உள்ளுக்குள் கலக்கமாக இருந்தாலும், அதை அவளால் வெளிகாட்டிக் கொள்ளமுடியவில்லை. இதுபோன்ற இடத்தில், தனியாக ஷானை, அதுவும் இந்த நிலையில் விடுவதை அவளால் நினைத்துப் பார்க்கவே முடியவில்லை.

ஷானோடு ஒப்பிடும் போது அவளொன்றும் அத்தனை பலசாலி கிடையாது. ஆனாலும் அவனை தனியே விடக் கூடாது என்பதில் தெளிவாக இருந்தாள்!

திரும்பத் திரும்ப ஹாரனை அடித்தாலும், கதவு திறக்கப்படாமலிருக்க,

“ஸ்கவுண்ட்ரல்…” என்று ஸ்டியரிங் வீலைக் குத்தியவன், பின்னால் பார்த்தபடியே, சர்ர்ர்ர்ரென்று ரிவர்ஸ் எடுத்து, தூரத்திலிருந்து, முழு வேகத்தோடு வந்து, ஒரே வினாடியில் கேட்டை தூக்கியடித்தான்!

அவனருகில் அமர்ந்திருந்தவளோ, “பெருமாளே…” என்றபடி,  இரண்டு காதையும் இரண்டு கைகளால் மூடிக் கொண்டு, கண்களையும் இறுக்கமாக மூடிக்கொண்டிருந்தாள்.

அவன் தனது காரை கொண்டு அடித்த வேகத்துக்கு, இரும்பு கேட் படாரென்று உடைந்து, சற்றுத் தள்ளி விழுந்தது. காரின் முன்பகுதி வதங்கியது.

கேட் உடைபட்ட சப்தத்தில், மாயா வெளியே ஓடி வந்தார்!

அவன் வந்தது, ஹாரன் அடித்தது, காரை கொண்டு கேட்டை இடித்துத் தள்ளியது என்று எல்லாவற்றையும் பார்த்துக் கொண்டும், கேட்டுக் கொண்டும் தானிருந்தார். ஆனாலும், கொஞ்சம் கூட அலட்டிக் கொள்ளவில்லை.

என்ன நடந்தாலும் சமாளித்துத் தானாக வேண்டும். இதைவிட மோசமான சூழல்களை கடந்து வந்தவர் அவர்.

இதை எதிர்பார்த்திருந்தார், ஆனால் இவ்வளவு விரைவாக அல்ல!

இடித்த வேகத்தில், காரை மாயாவுக்கு முன் ‘க்க்ரீரீரீச்ச்’சிட்டபடி நிறுத்தினான்.

“என்ன ஷான்? ஏன் இப்படி பண்ற?” அவனைப் பார்த்து கத்தினார் மாயா. தெலுங்கு வாடை வீசியது அவரது பேச்சில்! உடன் இரண்டு பாதுகாவலர்கள். ஜிம் பாய்ஸ் போல இருந்தது அவர்களது தோற்றம். எப்போதும் இருப்பவர்களில்லை, இவர்கள் வேறு.

அவர்கள் இவனையும், காரினுள்ளே இருந்த ப்ரீத்தியும் பார்த்தப் பார்வையே வேறாக இருந்தது.

கதவைத் திறந்து கொண்டு வெளியே வந்த ஷான், கார் கதவை அறைந்து மூட, காரும் அந்த பிரதேசமும் அதிர்ந்து அடங்கியது.

டிஷர்ட்டை முழங்கை வரை இழுத்துவிட்டுக் கொண்டவன், வலது கையிலிருந்த காப்பை, இடத்து கையால் மேலே ஏற்றி விட்டுக் கொண்டான்.

முகத்தில் அனலடித்தது!

“ஏன்? உன் மேல ஏத்தனுமா?” மாயாவை ஒரு பொருட்டாகக் கூட மதிக்கவில்லை அவன்.

“என்னாச்சு ஷான்? ஏன்மா இவ்வளவு கோபம்?” ஒன்றுமறியாதவரைப் போல அவர் கேட்க,

“வேணாம் மாயா… என்ன ஷான், கின்ன ஷான்னு கொஞ்சிட்டு இருந்த, அவளுக்கு பதிலா உன்னைப் போட்டுத் தள்ளிட்டு போயிட்டே இருப்பேன்…?” அடித்தொண்டையில் கத்தினான்!

“என்ன விஷயம்ன்னு சொல்லாம குதிச்சா என்னமா பண்றது? கேட்டைஎல்லாம் வேற உடைச்சு வெச்சுருக்க. வேற யாரவதா இருந்தா போலீஸ் கம்ப்ளைன்ட் கொடுக்கலாம். ஆனா உடைச்சது நீயா போய்ட்ட…” சலித்துக் கொண்டார் அவர்!

“இந்த நடிப்பெல்லாம் இங்க வேண்டாம்… உன் பொண்ணை வர சொல்லு…”

“பாப்பா வீட்ல இல்லமா… வெளிய போயிருக்கா…” கூலாக மாயா கூற, சட்டென்று அவரை நெருங்கியவன், வலது கையால் அவரது கழுத்தைப் பிடித்து நெரித்தான் .

“இப்ப அவளை வர சொல்றியா, இல்லையா?” அவனது கோபத்தைக் கண்டபோது மாயாவுக்கு உள்ளுக்குள் பயமாகத்தான் இருந்தது.

“நிஜமாவே இல்ல கண்ணா. பாப்பா வீட்ல இல்ல…”

“பொய் சொல்ற மாயா. மரியாதையா அவளை வர சொல்லு…” அவளது கழுத்தை இறுக்க, மாயாவுக்கு தொண்டை அடைத்தது.

“என்ன சொன்னா நீ நம்புவ கண்ணா?” தன்னைத்தானே சாமாளித்துக் கொண்டு அவர் கேட்க, உடனிருந்த பாதுகாவலர்கள் அவரை நோக்கி அவசரமாக வந்தனர். ஆனால் அவர்களை வர வேண்டாம் என்று சைகை செய்தார் மாயா!

காருக்குள் அமர்ந்திருந்த ப்ரீத்திக்கு, ஒவ்வொரு நொடியும் திக் திக்கென்று இருந்தது. அவசரமாக இறங்கியவள், சஷாங்கனின் கையைப் பற்றிக் கொண்டு, “பாஸ்…” அவனை அமைதிப் படுத்த முயன்றாள்.

மாயாவை சட்டென தள்ளி விட்டவன், பங்களாவின் உள்ளே போக முயன்றான்.

அவனை தடுக்கும் விதமாக, அணைக்கட்டி நிற்க முடியன்றார் மாயா.

மகள் இப்போதிருக்கும் நிலைமையில், ஷானை பார்ப்பது சரியாக இருக்காது என்பதை உணர்ந்து கொண்டார் அவர். முடிந்தளவு சந்திப்பை தடுக்க வேண்டும் என்பதுதான் அவரது நோக்கம்.

ஆனால் அதையெல்லாம் ஷான் கண்டுகொண்டால் தானே? ஒரே நொடியில் மாயாவை தள்ளிவிட்டபடி உள்ளே போக, பாதுகாவலர்களுக்கு கண்ணைக் காட்டினார் மாயா, அவன் பின்னே போக சொல்லி! அவரது கண்ணசைவை கண்டு கொண்டாள் ப்ரீத்தி.

அவசரமாக ஷான் பின்னால் போனாள், மனதுக்குள் ஆயிரம் வேண்டுதலை வைத்தபடி!

வேக நடையிட்டு, மாடிப்படிகளில் தாவி ஏறியவன், அவளது அறையை அடைந்தான். உள்ளுக்குள் செல்லவே கூசியது.

எத்தனை காதல் விளையாட்டுகள்?

எத்தனை எத்தனை அன்பு பரிமாற்றங்கள்?

அத்தனையும் போலியா?

எப்படி அவளால் இப்படியொரு நாடகத்தை நிகழ்த்த முடிந்தது?

நினைக்கும் போதே அவனுக்குள் கொதித்தது!

வந்த வேகத்தில் கதவில் கையை வைக்க, அது திறந்து கொண்டது.

உணர்வுகளளற்ற ஜடமாக கையை கட்டியபடி கவுச்சில் அமர்ந்திருந்தாள் ஸ்வேதா.

உள்ளே நுழைந்தவனின் முதல் பார்வையிலேயே அவள் பட, அவனது கோபம் இன்னமும் அதிகமானது!

நேராக அவளிடம் அவன் போக, அறைக்கு வெளியே அதே பதட்டத்தோடு நின்று கொண்டாள், ப்ரீத்தி! கீழே நின்றிருந்த பாதுகாவலர்களையும், மேலே அவர்களை நோக்கி வந்த மாயாவையும் கண்ட போது, உள்ளுக்கு நடுக்கமாக இருந்தாலும், என்ன வந்துவிடும்? பார்த்துக் கொள்ளலாம் என்ற எண்ணம் தான்!

“ஏன் இப்படி பண்ண?” நேரான கேள்வி தான்!

ஆனால் பதிலில்லை!

கைகளை கட்டிக் கொண்டு, எங்கேயோ வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தாள் ஸ்வேதா!

“சொல்லுடி… ஏன் இப்படிப் பண்ண?” அவளை நோக்கி கத்தினான் ஷான்!

“என்ன பண்ணேன்?” மெல்லிய குரலில் கேட்டவளை வெட்டிப் போடும் ஆத்திரம் அவனுக்கு!

“என்கிட்டவே உன்னோட நடிப்ப காட்டறியா ஸ்வேதா?” என்றவன், அவளுக்கு அருகில் வந்து கழுத்தைப் பிடித்து இறுக்கினான்!

அவனது இறுக்கம், அவளுக்கு பயத்தை தரவில்லை. மாறாக, மிக மிக நிம்மதியாக இருந்தது.

இறந்துவிட்டால் கூட நிம்மதிதான் என்று விசித்திரமாக தோன்றியது. ரவியிடமிருந்து, மாயாவிடமிருந்து, சைலேஷிடமிருந்து ஒரேடியாக விடுதலை!

அந்த உணர்வில் அவளது உதடுகள் சிரிப்பில் மெலிதாக வளைந்தது.

எந்த பதிலையும் கூறாமல் திண்ணக்கமாக அமர்ந்திருப்பவளை கண்டபோது, அவனது கோபம் இன்னுமின்னும் அதிகரித்தது. அவளது கழுத்திலிருந்து கையை எடுத்துக் கொண்டான். தன்னைத் தானே அமைதி படுத்திக் கொள்ள முயன்று, அறையில் நீள அகலத்தை அளக்கத் துவங்கினான். அவனது அமைதியின்மை, ஸ்வேதாவின் மனதை கிழித்துக் கொண்டிருந்தது. ஆனால் அவளால் வெளிகாட்டிக் கொள்ள முடியவில்லை. அறைக்கு வெளியே நின்றிருந்த மாயாவை பார்த்தாள்.

இன்னும் என்னை வைத்து எத்தனை விளையாட்டுகளை நடத்துவாய் என்று பார்வையால் அவரை கேட்டாள் ஸ்வேதா. அவருக்கு அவளது கேள்வி புரிந்தாலும், கண்களால், அவளை உருட்டி மிரட்டி ‘எதையும் பேசாதே’ என்றார்.

அருகிலேயே கைகளை கட்டியபடி சுவற்றில் சாய்ந்து நின்றிருந்த ப்ரீத்தியை பார்த்தாள் ஸ்வேதா. ப்ரீத்தியின் கண்கள் சிவந்திருந்தது. ஆனால் அவளது உறுதி, ஸ்வேதாவை அசைத்துப் பார்த்தது.

“நான் ‘கே’வா?” அவளை நெருங்கி நின்று, கண்களைப் பார்த்து ஷான் கேட்க,

“எஸ்…” என்றாள் தலைகுனிந்தபடி!

“என்னைப் பார்த்து சொல்லு…”

பெரிய மூச்சொன்றை உள்ளே இழுத்தபடி, நிமிர்ந்து அவனைப் பார்த்தவள்,

“எஸ்…” என்று உறுதியாகக் கூற, அவளைப் பளாரென அறைந்தான்!

“பாஸ்…” என்று பதறியபடி உள்ளே வரப் பார்த்தாள் ப்ரீத்தி. அவனிருக்கும் நிலையில் என்ன செய்வானோ என்ற பயம்!

ப்ரீத்தியை பார்க்கும் போது, ஸ்வேதாவின் உணர்வுகள் கொந்தளிக்க ஆரம்பித்தது.

“இது எனக்கும் ஷானுக்கும் நடுவுல நடக்கற பிரச்சனை. இதுல நீ எதுக்கு உள்ள வர்ற? கெட் அவுட்…” ப்ரீத்தியை பார்த்து ஸ்வேதா கத்த, முன்னெடுத்து வைத்த காலை பின்னால் இழுத்துக் கொண்டாள்!

“உனக்கும் எனக்கும் நடக்கற பிரச்சனையா? அது என்ன?” ஏளனமாக கேட்டவனை நிமிர்ந்து பார்க்கவில்லை.

சஷாங்கன் மேல் காதல் கொண்ட மனதால் ப்ரீத்தியை அவனோடு சேர்த்து பார்க்க முடியவில்லை. ஆனால் ரவியின் மிரட்டலால், ஷானை பற்றி தேசிய தொலைகாட்சியில் அவ்வாறு பேசிவிட்ட குற்ற உணர்வு, அவளது மனதை அழுத்தியது. இனி அவளால் சஷாங்கனை சேரவே முடியாது என்ற உண்மையும் அவளை அறைய, அவளால் அந்த நிலையையும் தாள முடியவில்லை.

மெளனமாக கீழ்நோக்கி அமர்ந்திருந்தவளை பார்த்து,

“ஏன் இப்படி பண்ண ஸ்வேதா?” அடித் தொண்டையில் அவளை நோக்கி கத்தியவனை உணர்வுகளற்ற பார்வை பார்த்தாள்.

அவளது மனதுக்குள் இருப்பதையெல்லாம் அவனிடம் கூறும் வரம் அவளுக்குக் கிடைக்காது! வெளிப்படையாக கூறிவிட்டால், என்ன வேண்டுமானாலும் நடந்து விடும், அவளது உயிரும் கூட போய் விடலாம்!

அந்த அச்சமும் அவளை வாட்டியது… ஏனென்றால் ஒவ்வொரு நாளும் ரவியிடம் அவள் பட்ட துன்பம் அப்படி!

ஸ்வேதா தனக்கு பதிலளிக்காமல் புறக்கணிப்பதாக பட்டது ஷானுக்கு! அது அவனை இன்னுமின்னும் தூண்டிவிட்டது.

“இப்ப பேசப் போறியா இல்லையா? யூ ஸ்கவுண்ட்ரல்..” என்று அவன் மீண்டும் கத்த, விசுக்கென்று நிமிர்ந்து பார்த்தாள்.

‘தான் துரோகியா?’ அவனது ‘ஸ்கவுண்ட்ரலில்’ அதிர்ந்தது மனது! ‘ஆமாம், துரோகியே தான். இதை விட மோசமான துரோகம் என்ன இருக்கக் கூடும்? விரும்பியவனுக்கு துரோகத்தை மட்டுமே பரிசளித்தவள் அவள்!

ஆனால் இன்னும் இந்த தளைகளில் கட்டுண்டு கிடக்கத்தான் வேண்டுமா? இவ்வளவு ஆகிய பின்னும் அப்படி உயிர் வாழத்தான் வேண்டுமா? தன்னை பொம்மையாக ஆட்டுவிக்கும் ரவியை வெறுத்தாள்! மாயாவை வெறுத்தாள்! சைலேஷை வெறுத்தாள்! அவளது தொழிலை வெறுத்தாள்! புகழை வெறுத்தாள்! பணத்தை வெறுத்தாள்! கடைசியாக தன்னையே வெறுத்தாள்!

மனதுக்குள் தீர்மானமும், வாழ்க்கையின் எல்லையையும் கண்டபின், உறுதியாக அவனை நிமிர்ந்து பார்த்து,

“எஸ்… நான் அப்படிதான் சொன்னேன்…” என்றாள் அவனை நேராகப் பார்த்தபடி!

“ஏன்?” கத்தினான் ஷான்!

 

error: Content is protected !!