kaamyavanam10

                                     காம்யவனம் 10

 

 மயில்தோகை மெத்தையில் சாய்ந்தபடி கதை கேட்க ஆரம்பித்தவள், மெல்ல மெல்ல அந்தக் கதையுள் ஊன்றி எப்போது அவன் அருகில் அமர்ந்து கொண்டாள் என தெரியாது.

அவனும் கதை சொல்லியபடியே அவளது பாதங்களை தன் மேல் கிடத்திக் கொண்டு, அதை இதமாகப் பிடித்து விட்டான். கதையில் மெய் மறந்தவள், இந்த இதத்தில் கவனம் செலுத்தவில்லை.

கதை முடிந்தது, கண்ணில் வழிந்த கண்ணீரில் அவளின் உள்ளுணர்வு வெளிப்பட்டது. ஆனால் அந்த ரதி , தான் தான் என்பது விளங்கவில்லை.

அவளது கண்ணீர் கன்னத்தை தாண்டும் முன்பே பிரத்யும்னன் அதைக் கண்டு துடைத்து விட்டான். அவனது ஸ்பரிசத்தில் உயிர்பெற்று அவனைக் கண்டாள்.

கண் இமைகளை தட்டி விழித்தவள், தனது கால்கள் அவன்மேல் கிடத்தியிருப்பதைக் கண்டு பதறி, சட்டென எடுக்க முயன்றாள். அவனோ அதை விடாமல் பற்றிக் கொண்டான்.

“மாயா! நான் பிடித்துவிடுகிறேன். வெகுதூரம் அலைந்து என்னைக் காண வந்தாய்” எனக் கூற,

“இல்ல விடுங்க” வலுக்கட்டாயமாக கால்களை இழுத்துக் கொண்டாள்.

அவள் கலங்கியதை நினைத்து அவளுக்கு ஆறுதல் கூற,

“நீ அழும் அளவிற்கு இனி நம் வாழ்வு இருக்காது. இனி எல்லாம் சுகம் சுகம் மட்டுமே!” என அவளது கன்னங்களைப் பற்றினான்.

அவனது திடீர் தீண்டல் அவளுக்கு பயத்தை அளித்தது. அந்த மெத்தையிலிருந்து எழுந்து கொண்டாள். அவனும் உடனே எழுந்து,

“மாயா..” என யோசனையாக அவளைப் பார்க்க,

“நீங்க சொல்றத வெச்சுப் பார்த்தா நான் தான் உங்க மாயான்னு சொல்றீங்களா?” முகத்தைத் திருப்பிக் கொண்டு நின்றாள்.

அவன் சத்தமாகச் சிரித்தான். அவளுக்கு ஏனோ அது இம்முறை ரசிக்கவில்லை. அவளுக்கு தான் ரதி என ஒரு துளி கூட தோன்றவில்லை.

அவளுக்கு இன்னும் தன்னுடைய சுயரூபம் தெரியவில்லை என்பது பிரத்யும்னனுக்கு நன்றாகவே தெரியும். இருந்தும் தான் ஏதோ அவளை மயக்க நினைத்து இப்படி கதை கூறுவதாக அவள் நினைத்தது தான் அவனுக்குச் சிரிப்பை வரவைத்தது.

“நீ என்னுடைய மாயா என்பதில் எனக்கு ஒரு சிட்டிகை அளவு கூட ஐயமில்லை. உனக்கு அது இன்னும் புரியவில்லை. அவ்வளவுதான். அதை உனக்கு உணர்த்தத்தான் நான் இருக்கிறேனே! இப்போதே செய்கிறேன்.” அவளின் கையைப் பிடித்தான்.

அதற்குள் எங்கோ மகதியும் மற்றவர்களும் அவளை அழைப்பது போல அவளுக்குக் கேட்டது.

“என்னோட ப்ரெண்ட்ஸ் என்ன தேடறாங்க போலிருக்கு. நான் போகணும்.” அவனது கைகை விட மனமில்லாமல் வாய் மட்டும் பேசியது.

“சரி. போய் வா. நாளை நாம் மீண்டும் சந்திப்போமா! அல்லது இரவு நதிக்கரையில்..” என அவன் நிறுத்த,

“எனக்கு கொஞ்சம் யோசிக்கணும். நானே வரேன்.” மொட்டையாக முடித்தாள்.

“உனக்கு அந்த உரிமை உண்டு. சரி நான் வருகிறேன்.” பிரத்யு கிளம்பினான்.

“இது என்ன, என்னை வேற இடத்துக்குக் கொண்டு வந்துட்டு இப்போ கிளம்புனா நான் எப்படி போறது?” பொய்க் கோபத்தில் முறைத்தாள்.

அவன் சிரித்துவிட்டு, தன் கைகளால் சொடுக்கு போட, மீண்டும் பழைய இடமாக மாறியது.

“கிளம்பு மாயா” சொல்லிக்கொண்டே அவன் சென்றான்.

அவன் செல்வது ஏனோ அவள் மனதில் சிறு வலி ஏற்படுத்தியது. ‘எத்தனை காலமா காதலுக்காகக் காத்திருகான். என்ன கொடுமை இது.’ அவனுக்காக வருந்தினாள்.

அதற்குள் அவளது நண்பர்கள் அவளிடம் வர,

“மாயா, இங்க என்ன பண்ற?” மகதி குளித்துவிட்டிருந்தாள்.

குருவும் தேவாவும் அவளைப் பார்க்கும் விதமே இப்போது மாறி இருந்தது.

“இங்க தான் இந்த இடத்தை எல்லாம் பாத்துட்டு இருந்தேன் மகி. நீங்க ரெண்டு பேரும் எப்போ வந்தீங்க? பஞ்சபூதம் சார் கிட்ட பேசிட்டீங்களா?” அவர்களது பார்வையை உணர்ந்தே கேட்க,

குரு அவளுக்கு பதில் தந்தான்.

“பஞ்சபூதம் கிட்டயும் பேசிட்டோம். அந்த பூசாரி கிட்டயும் பேசிட்டோம்.” உளறினான்.

தேவா அவனது கையைப் பிடித்து அழுத்தி பின்பு பேச்சை மாற்றினான்.

ஆனால் மாயாவிற்கு உள்ளே ஏதோ உணர்த்தியது.

“சரி வாங்க வீட்டுக்குப் போய் பேசிக்கலாம்.” அனைவரையும் கிளப்பினான் தேவா.

இதில் எதுவும் புரியாமல் சகஜமாக இருந்தது மகதி மட்டுமே. மற்ற மூவருக்கும் சிந்தனை மாயவைப் பற்றியே இருந்தது.

மகதி ஏதோ வளவளத்துக் கொண்டே வர, மற்றவர்கள் ஒப்புக்கு ஏதோ பதில் தந்தனர்.

அவர்களது வீடும் வந்தது. அப்போது அந்த வழியே கடற்கரையின் மகள் வர,

“ஹே பொண்ணு!” தேவா அழைத்தான். மற்றவர்களும் நின்றனர்.

அந்தப் பெண் அருகில் வர, தேவா இவர்களைப் பார்த்து,

“நீங்க எல்லாம் உள்ள போங்க, நான் சில பொருள் இங்க கிடைக்குமான்னு கேட்டுட்டு வரேன்.” என அவர்களை துரத்தினான்.

அவர்களும் சென்று விட,

அந்தப் பெண் அவன் என்ன கேட்கப் போகிறான் எனப் பார்த்துக் கொண்டு நின்றாள்.

“பொண்ணு, எனக்கு ஒரு உதவி செய்றியா?” அவள் உயாத்திற்கு மண்டியிட்டுக் கேட்டான்.

“என்னங்க?” அடக்கமாக நின்றாள்.

“உங்க அப்பா, நாங்க ஊர்லேந்து வந்தப்ப எங்க மேல ஒரு தண்ணி தெளிச்சாறு. அது என்ன தண்ணி ? எனக்கு அது வேணும். தர முடியுமா?” பதுவிசாக வினவ,

“அதுவா, வீட்டுல தான் கெடக்கும். கொண்டரவா?”

“குடுக்குரியா?” அவளைப் போன்ற ராகத்தில் சொன்னான்.

தலையாட்டிக் கொண்டே அங்கிருந்து சென்றாள் அவள். அடுத்த ஐந்து நிமிடத்தில் ஒரு மர குடுவை கொண்டு வந்தாள்.

“இந்தாங்க..இது தான் அந்த தண்ணி. நான் வாரேன்.” பாட்டு போல பேசிவிட்டுச் சென்றாள்.

அவளின் அந்தப் பேச்சு தேவாவிடம் புன்னைகை வரவைத்தது.

பிறகு அந்தத் தண்ணீரை எடுத்துக் கொண்டு உள்ளே சென்றான். மாயாவும் மகதியும் பழங்களை சாலட் போல வெட்டி தேனை அதன் மீது ஊற்றிக் கொண்டிருந்தனர்.

எப்படி மாயாவின் மீது அவளுக்குத் தெரியாமல் இதை தெளித்துப் பார்ப்பது என்று யோசித்தவன், ஒரு விளையாட்டுப் போல அனைவர் மீதும் தெளித்து விளையாடி அப்படியே அவள் மீதும் தெளித்துப் பார்க்க திட்டமிட்டான்.

அவன் கையில் இருந்த நீரைக் கண்டதும் குரு அது என்னவென்று புரிந்து கொண்டான்.

குரு கண்களால் அவனிடம் ‘அப்படியா?’ என்று கேட்க, லேசாகத் தலையாட்டினான் தேவா.

இருவரும் முன்பே அவள் தான் ரதியா என்பதை சோதித்துப் பார்க்க திட்டம் போட்டிருந்தனர். அதனைகுருவும் புரிந்து கொண்டு அவனோடு சேர்ந்து விளையாட தயாரானான்.

தேவா சிறிது நீரைக் கையில் எடுத்துக் கொண்டு குருவை நோக்கி கை ஓங்கிக் கொண்டு வந்தான்.

“டேய் தேவா! நோ… மீ வெரி பாவம். நாட் மீ டா” என குதூகலக் குரலில் கத்தி எழுந்து தப்பிக்க, அதைக் கண்ட மகதியும் மாயாவும் கூட உற்சாகமானார்கள்.

பழங்களை ஓரமாக வைத்துவிட்டு அவர்களும் வர,

“ஹே மாயா, மகதி  அவன பிடிங்க” என ஒரு முறை அந்நீரை அவன் மேல் தெளிக்க , குரு கீழே குனிந்து தப்பித்தான்.

“நில்லு டா” என மாயா அவனை ஒரு புறம் தடுக்க, மறுபுறம்

“எங்க ஓடற” என மகதி அணை கட்டினாள். இருவரும் அவன் தப்பிக்காமல் பார்த்துக் கொள்ள, இடையில் புகுந்தான் தேவா.

“நோ…நோ….”என முகத்தை மறைத்துக் கொண்டான் குரு. மாயா அவனது கையைப் பிடித்து விலக்க.

தேவா அவன் முகத்தில் ‘பச்’ என நீரை அடித்தான்.

“மவனே! உன்ன விடமாட்டேன்” இப்போது குரு எழுந்து கொண்டான். தேவா விடமிருந்து அந்த குடுவையை பிடுங்கினான்.

இப்போது அவன் முறையானது.

“உங்க யாரையும் விடமாட்டேன். ஒருத்தராவது எனக்கு சப்போர்ட் பண்ணீங்களா ? எருமைகளா..வாங்க எல்லாரும்” சரமாரியாக நீரை அனைவர் மீதும் தெளித்தான்.

மகதி , தேவா வின் மீது தண்ணீர் பட , இருவரும் முகத்தை மூடிக் கொண்டு ஓட, அடுத்து சிறிது நீரை எடுத்து மாயாவின் மீது தெளித்தான்.

ஆச்சரியத்தில் அவன் கண்கள் விரிந்தது.

மாயாவாகிய அவளுக்குமே அது ஆச்சரியம் தான்.

தேவா அருகில் வந்தான். சூடாக இருக்கும் இஸ்திரிப் பெட்டி நீரை புஸ் என உள்ளிழுப்பது போல, அந்த நீர் மாயாவின் உடலுக்குள் தஞ்சமானது.

பிரத்யும்னன் அவளிடம் சொன்ன கதையில் இந்த நிகழ்வும் இருந்ததே! ஆனால் அவள் இதை எதிர்ப்பார்க்கவில்லை. அவன் கதை சொன்னபோது அவனுக்காக வருந்தினாள் தான். ஆனால் தான் தான் ரதி என்ற எண்ணம் அவளுக்கு தோன்றவில்லை.

யோசிக்க அவளுக்கு நிறைய இருந்தது. ஆனால் இந்தச் சம்பவம் அவளை திடுக்கிட வைத்தது.

‘நான் தான் அவனின் மாயா வா?!’ ஏற்றுக்கொள்ளவும் முடியவில்லை.

தேவாவும் குருவும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொள்ள, அவர்கள் இவளை வித்தியாசமாக நினைக்கிறார்களோ என்று தான் மாயா யோசித்தாள்.

அவர்களுக்கும் அனைத்தும் தெரியும் என்பது இவளுக்கு இன்னும் புரியவில்லை. அவர்களும் மாயாவிற்கு இந்தக் கதை தெரியாது என்று தான் நினைத்தனர்.

இப்போது தன்னையே பார்த்துக் கொண்டிருப்பவர்களுக்கு என்ன கூறுவது என்று யோசிக்க, அதற்குள் தேவாவே

“மாயா..கொஞ்சம் பேசணும். என்கூட வரியா?” தேவா சற்று சீரியசாக கேட்க,

என்னவாக இருக்கும் என்று ஒரு நொடி சிந்தித்தவள், “சரி” என்றாள்.

“மகி நீ வா, நாம சாலட் சாப்டுவோம்” என வெளியில் ஓடிவிட்டு உள்ளே வந்த மகதியை அழைத்தான் குரு.

தேவாவும் மாயாவும் வெளியே சிறிது தூரம் நடந்தனர். மாயா அமைதியாகவே வர, தேவாவும் எப்படி ஆரம்பிப்பது என்று திணறினான்.

மாயாவும் பிரத்யும்னனை சந்தித்ததையோ அல்லது அவன் கூறிய இந்தக் கதையையோ அவனிடம் சொல்ல பிரியப்படாமல் வந்தாள். சாதாரணமாக நடந்துகொள்ள நினைத்து,

“என்ன விஷயம் தேவா?” ஓரிடத்தில் நின்றாள், அதற்குமேல் நடக்க முடியாது என்பது போல்.

“மாயா..அது..எப்படி சொல்றதுன்னு..எப்படி ஆரம்பிக்கறதுன்னு தெரியல” திணறினான்.

“என்ன தயக்கம் தேவ். அதுவும் என்கிட்ட!” அவனது கையைப் பிடித்துக் கேட்க, தேவாவின் கண்கள் கலங்கின. அவன் முகத்தைக் கண்டவள் பதறிப் போனாள்.

இத்தனை ஆண்டுகளில் அவன் கண்கலங்கி அவள் பார்த்ததே இல்லை. தனக்கு எத்தனை கஷ்டம் வந்த போதும் அவளுடன் துணையாக அவளுக்கு தெம்பூட்டி இருக்கிறானே தவிர , அவளுக்கு மு அவன் எப்போதும் அழுததில்லை. ஆனால் இன்று.. தன் உயிர் நம்பன் கண்களில் நீரைப் பார்க்க அவளுக்குத் தாங்கவில்லை.

“தேவா என்ன ஆச்சு டா? எதுக்கு இப்போ கண் கலங்கற?”

“நீ என்னை விட்டு வேற எங்கயோ போய்ட்ட மாதிரி இருக்கு மாயா! என் தோழியா எப்பவும் நீ கூட இருக்கணும். உனக்குத்  துணையா பக்கபலமா நான் எப்போதும் இருக்கணும்னு நெனச்சேன்.ஆனா..” கண்கள் சிவந்து அவளைக் கண்டான்.

“நீ என்ன சொல்ற தேவா? இப்போ என்ன நடந்துச்சு?” அவனை கண்டு வேதனையுற்றாள்.

“காரணம் இருக்கு மாயா. இந்தக் காட்டோட கதை உனக்குத் தெரியாது. அதைக் கேட்டா நீ எப்படி ரியாக்ட் பண்ணுவன்னு எனக்கு தெரியல. ஆனா சில விஷயங்களை நம்பித் தானே ஆகணும்.” அவன் இப்படிக் கூறியதும் ஸ்தம்பித்துப் போனாள் மாயா.