காம்யவனம் 6

 

காமாவின் கைகளில் அழகாக பொருந்தியபடி அவனோடு நீந்திச் சென்றாள் ரதி. காதலுக்கு இலக்கணம் வகுத்தவர்கள் இவர்கள் தான் என்பதில் ஐயம் ஏதும் இல்லை.

 மனதால் இணைந்து வெகு காலம் ஆகியும் இப்போது தான் அவர்களின் திருமணம் என்னும் வைபவம் முடிவாகி இருந்தது. ரதி அவனின் சபையில் ஒருத்தியான நாள் முதல் , அவளை கண்ட பொழுதிலிருந்தே இருவருக்கும் ஏற்பட்ட உணர்வு மனதை அப்போதே பரிமாற வைத்தது.

காதல் என்பது இரு மனங்களும் இணைவது அதுவும் எந்த வித தங்குதடையுமின்றி. இருவரும் எந்த வித உணர்வுகளையும் மறைக்காமல் வெளிப்படுத்தினார்கள்.

காமா ஒரு ஆணாக  தன்னுடைய விருப்பங்களை அவளிடம் தெரிவித்த போது , ரதியும் எந்தவித கூச்சமும் இல்லாமல் அவனிடம் தன்னுடைய ஆசைகளைப் பகிர்ந்து கொண்டாள்.

ஒரு பெண் எப்படி எல்லாம் உணர்கிறாள், அவளுடைய எதிர்ப்பார்ப்புகள், எந்த விதத்தில் காதல் செய்தால் அவளுக்குப் பிடிக்கும், அவளின் மனம் என அனைத்தையும் அறிந்து கொண்டான் காமா.

ரதியும் ஒரு ஆணின் தேவை என்ன, பெண்ணிடம் அவன் எப்போதெல்லாம் இன்பம் அடைகிறான் , எப்படி நடந்து கொண்டால் அவன் மனம் திறக்கிறான் என்பதை பூரணமாக உணர்ந்து கொண்டான்.

இருவரின் அன்பும் நாளுக்கு நாள் வளர்ந்து வந்தது. இவர்களின் காதலை அறிந்ததும் அனைவரும் கூடி அவர்களின் திருமணத்தை நிச்சயம் செய்தனர்.

இந்த இடைப்பட்ட காலத்தில் கண்ட இடமெல்லாம் காதல் செய்ய ஆரம்பித்தான் காமதேவன். ரதியை ஒரு நிமிடம் தனியே விட்டுவைக்க அவனுக்கு மனம் வரவில்லை.

இப்படி தோழிகளுடன் இருக்கும் போதும் , தனிமையில் அவள் உலவும் போதும் அவளைக் கள்ளத்தனமாக இழுத்துக் கொண்டு போய் காதல் செய்து அவளை திக்குமுக்காட வைப்பான்.

அவளும் அவனுக்கு சரி சமமாக காதல் மழையை பொழிவாள். அவன் இடையைத் தீண்டி அவளைத் தூக்கும் போது நாணத்தோடு கலந்து அவன் கைகளுக்குள் பொதிந்து போவாள்.

ஆசையும் காதலும் அவனிடமும் அவளிடமும் போட்டி போட்டுக் கொண்டு முன்னே வரும். தொலைவில் இருந்தாலும் அவர்களின் கண்களும் மனமும் எப்போதும் பேசிக் கொண்டு தான் இருக்கும்.

இவள் நினைப்பதை அவன் அறிவதும் அவன் பார்வையிலேயே அவன் மனதை அறிவதும் இருவருக்கும் வழக்கமாகிப் போனது.

இருவரின் இந்த உறவையும் காதலையும் கண்டு பொறாமை கொள்ளாதவர்கள் தேவ லோகத்தில் கூட இல்லை எனலாம்.

சிறிது தூரம் நீரில் நீந்தி மறுகரையை அடைந்ததும் இருவரும் வெளியே வந்து அந்த மணல் மேடையில் அமர்ந்தனர். அவளின் உடலோடு ஓட்டிப் போன ஈர உடை அவனை பித்தனாக்கியது.

கொள்ளை அழகுக்கு ரதி ஒருவளே சொந்தக்காரி. அந்த அழகை முழுமையாக புசித்துக் கொண்டிருந்தான் காமதேவன்.அவன் பார்வை சென்ற இடம் அவளுக்கு கூச்சத்தை அளித்தது. இருந்தாலும் வாய் திறந்து அவனிடம் பேசினாள்.

“காமா..”

“ரதி..!?”

“திருமணத்திற்கு இன்னும் சிறிது நாட்களே உள்ளது. இப்படி அங்கும் இங்கும் சந்திப்பதால் அனைவரின் பேச்சுக்கும் ஆளாவோம்.” அவளைத் தீண்டிக் கொண்டிருந்த அவன் கைகளைத் தடவிக் கொடுத்துக் கொண்டு அவள் சொல்ல,

“என்ன பேசுவார்கள்?” அவனும் அவளின் இடையைத்  தீண்டிய கைகளை மெல்ல மேலே செலுத்த அவளின் வாய் முனக ஆரம்பித்தது.

கண்கள் மூடி சிறிது நேர தடுமாற்றத்தின் பின் அவனைக் கண்டாள்.

“பேசு ரதி.. என்ன சொல்வார்கள் எல்லோரும்?” அப்பாவியாய் முகத்தை வைத்துக் கொண்டு அவளைச் சீண்டினான்.

“இந்தக் காமனுக்கு எல்லாவற்றிலும் அவசரம் என்று பேசுவார்கள்” அவனது ஈரம் வடிந்த தலை முடியை கோதியபடி அவன் செயலை சுட்டிக்காட்ட,

“அப்படியே பேசட்டும். எனக்கு அவசரம் தான். நீ மட்டும் இப்போதே சம்மதம் தெரிவித்தால்…. “என அவள் மீது படர்ந்தான்.

“வேண்டாம் காமா…” குரல் உள்ளே சென்றது அவளுக்கு.

“என்ன உன் உதடுகள் வேண்டாம் என்கிறது..மனம் வேறு ஒன்று சொல்கிறதே!” என அவள் இதயத்தின் மீது காதை வைத்துக் கேட்க,

அவனது முகத்தை பிடித்து நிமிர்த்தி, “என்ன சொல்கிறதாம்?” என உதட்டை சுழித்தாள்.

“இப்போதே ரதி மன்மதனின் காதலுக்கு பரிசாக ஒரு பிள்ளை வேண்டும் என்கிறது” சிரிக்காமல் அவளிடம் சொல்ல,

“ச்சி..இல்லை “என அவனை தன் மேலிருந்து தள்ளினாள்.

அவன் அவளது கரத்தைப் பிடித்து இழுத்து தன் மேல் விழ வைத்தான். அவளின் மென்மையான உடல் அவன் மீது மலர் கொத்தாக விழ , ஈர உடல்கள் சூடு பிடிக்க ஆரம்பித்தது…

மெல்ல அவளின் இதழ்களை வருடி வன்மையாக அதை முத்தமிட்டான். அந்த வன்மையினை ரசித்து அவளும் அதற்கு ஒத்துழைத்தாள். அவர்களின் காதல் அங்கிருந்த காற்றில் கலந்து அந்த இடமெங்கும் பரவியது.

சிறு துளி பெரு வெள்ளம் என்பது போல, ஒரு சிறிய முத்தம் அன்று அவர்களை வெகு தூரம் இட்டுச் சென்றது.

 

“காமா… நிஜமாகவே நீ திருமணத்திற்கு முன் அவசரப் படுகிறாய்” ரதி தடுக்க,

“நமக்கு இப்போது திருமணம் நடந்திருந்தால் தடை விதிக்க மாட்டாய் அல்லவா?!” எதையோ மனதில் வைத்து அவன் கேட்டான்.

“நிச்சயமாக காமா. என்ன தடை எனக்கு? நானும் உன்னுடன் சேரும் தருணத்தை ஒவ்வொரு நொடியும் எதிர்ப்பார்த்துத் தான் காத்திருக்கிறேன்.” ரதியின் கண்களில் காதல் மின்னியது.

அவளின் கை பிடித்து எழுந்தான்.

“என்ன செய்கிறாய்?” ரதி கேட்க,

“என்னோடு வா..” என சிறிது தூரம் நடந்தான்.

அடர்ந்த காடு , நீண்ட நெடிய மரங்களுக்கு நடுவில் அவளோடு நின்றான். நேரம் ஆக ஆக கதிரவன் மறைந்து சந்திரன் தோன்ற ஆரம்பித்தான்.

அந்த நிலவின் குளிரால் லேசாக உடல் நடுங்க அங்கே இருந்த மரக் குச்சிகளை வைத்து தீ மூட்டினான்.

ரதி குளிர் காய நெருப்பின் அருகில் அமர்ந்தாள்.

அவனும் அருகில் அமர்ந்தான். அவள் கை நீட்டி நெருப்பில் காட்டி கன்னத்தில் வைத்துக் கொள்ள, மீண்டும் கை நீட்டும் போது, அவளது கையைப் பற்றினான்.

“ரதி..இந்த நிமிடத்தில் இருந்து நீ என் மனைவி. உன்னை நான் இப்போது காந்தர்வமணம் செய்து கொள்ளப் போகிறேன்.” யோசிக்காமல் தன் கையில் இருக்கும் மோதிரத்தை கழட்டி அவளின் விரலில் அணிவித்தான்.

நொடிப் பொழுதில் நடந்துவிட்டது திருமணம்.

 

ரதி தன் கையில் இருக்கும் காமாவின் மோதிரத்தை பூரிப்புடன் பார்க்க, அங்கிருந்த நெருப்பை அவளுடன் சேர்ந்து சுற்றி வந்தான்.

“காமா..” ரதி அழகாக விளிக்க,

“அந்த சந்திரன் சாட்சி ..இந்த அக்னியும் சாட்சி நீ என் மனைவி” எனக் கூறி அவளை அணைத்துக் கொண்டான்.

“ஆமாம்..நீங்கள் என் கணவர் இந்த நொடி முதல் நான் உங்கள் மனைவி.” ரதியும் அவனை மேலும்  இறுக்கி அணைத்துக்கொண்டாள்.

அந்த நேரமே அவர்கள் வாழ்வின் பொன்னான நேரம். குளிர் காற்றும் நிலவும் அவர்களின் இறுக்கத்தை மேலும் வலுப்படுத்த,

ரதி கூறிய ஒரு காரணமும் காணாமல் போனது. ஈர உடைகள் ஒத்துழைக்க, ரதியின் பார்வையும் , காமாவின் வேகமும் அன்று அவர்களின் சங்கமத்திற்கு தூண்டுகோலாகியது.

காமாவின் அவசரம் அவனை அன்றே அவனைத் தந்தை ஆக்கியது. ரதியின் வயிற்றில் விதை விதைத்தான்.

மிகவும் மகிழ்ச்சியாக இன்பத்தை அனுபவித்த நேரம் அவர்களுக்கு அதுவே கடைசி என்று தெரியாமல் போனது.

அன்று இரவு அங்கேயே இருவரும் கழித்தனர். காமாவின் அருகில் அவன் மார்மீது சாய்ந்து கண்ணுறங்கினாள் ரதி.

நிம்மதியான உறக்கம் இருவருக்கும். அதிகாலை நேரம் துவங்க ஆரம்பித்தது.

அந்த இடமே அதிரும்படி ஓர் சப்தம் கேட்க, இருவரும் திடுக்கிட்டு எழுந்தனர். புயல் காற்று சூறாவளியாக மாறி அந்த இடத்தைச் சுற்றியது. இருவரும் தடுமாறி நிற்க, சட்டென காற்று காணாமல் போனது. ஒரு பெரு வெளிச்சம் தோன்றியது.

நான்கு முகங்கள் கொண்ட பிரம்மா வெளிச்சத்தில் இருந்து வெளி வந்தார்.அவர் முகத்தில் கலவரம் தேங்கி இருந்தது.

அவரைக் கண்டதும் இருவரும் வணங்கினர்.

“வணக்கம் பிரம்மதேவரே!” காமா அவரின் பாதம் பணிந்தான்.

“மன்மதா..உன்னைத் தான் வெகு நேரமாக தேடிக் கொண்டிருக்கிறேன்” அவர் குரலில் ஒரு பதட்டம் இருந்தது.

“என்னையா.? என்ன விஷயம் பெருமானே! சொல்லுங்கள் ஆணையை ஏற்கக் காத்திருக்கிறேன்” என்றான் தயாராக.

ரதியும் விஷயம் என்னவென்று அறிய ஆவலாக இருந்தாள்.

பிரம்மா விஷயத்தைக் கூறினார். வெகு நாட்களாக சிவன் யோகநிஷ்டையில் ஆழ்ந்து விட்டார். சதியின் பிரிவு அவரை அந்நிலைக்குத் தள்ளி இருந்தது.

சதி தேவி பார்வதியாக அவதாரம் எடுத்து சிவனைத் தேடி வந்து பலகாலம் ஆகியும் சிவபெருமான் கண் திறப்பதாக இல்லை.

அவர் மனதில் பார்வதியின் எண்ணம் துளியும் எழவில்லை. ஆகையால் மன்மதன் ஒருவனால் மட்டும் தான் அவர் மனதில் காதல் உணர்வை ஏற்ப்படுத்த முடியும் என்று பிரம்மா வந்திருந்தார்.

“நீ தான் அவரைத் தவத்தில் இருந்து கலைத்து , பார்வதியின் மேல் காதல் கொள்ளச் செய்ய வேண்டும். நாங்கள் எவ்வளவோ வழியில் முயன்று விட்டோம். பலனில்லை. நீ தான் காதல் மூலம்  இதைச் செய்ய வேண்டும்.” என்று பிரம்மா கேட்டார்.

கடவுள் கேட்டு மறுக்கும் நிலையில் அவன் இல்லை. அதே சமயம் இத்தகு உயரிய செயலைச் செய்ய தான் புண்ணியம் செய்திருக்க வேண்டும் என்று தான் எண்ணினான்.

“அப்படியே செய்கிறேன் பிரம்ம தேவரே! கவலை வேண்டாம். அகில உலகங்களுக்கும் தாய் தந்தையான சிவபார்வதி இணைவுக்கு நான் என் உயிரையும் தரத் தயாராக இருக்கிறேன்.” என அவனது சம்மதத்தை தெரிவித்தான்.

அதே நேரம் ரதி மனம் ஒரூ நிலையில் இல்லை. பிரம்ம தேவர் மறைந்த பிறகு,

“காமா.. இதை நீ செய்யத் தான் வேண்டுமா?” கண்களில் கலக்கம் தெரிந்தது.

“என்ன ரதி இப்படிக் கேட்கிறாய்?” அவளின் தோளைப் பிடித்து கேட்க,

“சிவபெருமான் பல யுகங்களாக யோகநிஷ்டையில் இருக்கிறார். நீ அவரின் தவத்தைக் கலைத்தால், அவரின் பார்வை முதலில் உன் மீது தான் படும். நீண்ட காலம் கண் திறக்காமல் அவர் இப்போது கண் திறந்தால், கண்ணில் படும் முதல் நபர் எரிந்து சாம்பலாவது உறுதி. அதை நீ மறந்துவிட்டாயா?!” ரதி அவனுக்கு நினைவு படுத்தினாள்.

“ஆமாம் ரதி. அதை நான் மறந்துவிட்டேன். நீ ஒன்றும் கவலைப் படாதே. அவரின் எதிரில் நின்று நான் இதைச் செய்ய மாட்டேன். அவரின் அசைவு தெரிந்தவுடனேயே நான் மறைந்து விடுகிறேன்.நீயும் அங்கேயே இரு.” என தைரியம் கூறி , அவளையும் அழைத்துச் சென்றான்.

மன்மதனின் வாகனம் கிளி. அந்தக் கிளியின் மேல் ஏறி இருவரும் சிவபெருமான் இருக்கும் இடைத்தை அடைந்தனர். பனிமலையின் நடுவில் சிவன் அமர்ந்து தவத்தில் இருந்தார்.

மன்மதன் தன்னுடைய கரும்பு வில்லைக் கையில் எடுத்தான். அதில் நாண் இருக்கும் பகுதியில் ரீங்காரமிடும் தேனீக்கள் இருந்தது.

தன்னுடை ஐந்துமலர் கொண்ட அம்பை கையில் எடுத்தான்.

நீலத் தாமரை, அசோகம், மாம் பூ, முல்லை, நீலோத்பலம ஆகிய மலர்களைத் தொடுத்து அதனை சிவபெருமான் மீது எய்தான்.

ஆனால் அவன் நினைத்தது போல சிவன் அசையும் முன்பு அவனால் தப்பிக்க முடியவில்லை. மலர்கணை தன மீது பட்டதும் சிவன் கோபத்தில்  முதலில் திறந்தது தனது நெற்றிக் கண்ணை.

தீப்பொறி பறக்க அடுத்த கணமே காமன் காணாமல் போனான். சாம்பல் மட்டுமே எஞ்சியது. இதனைக் கண்ணால் பார்த்துக் கொண்டிருந்த ரதி, அதிர்ச்சியில் கத்தினாள்.

இதயமே பிளந்துவிடும் போல் ஆனது ரதிக்கு. அலறி அடித்துக் கொண்டு அந்த சாம்பலைக் கையில் எடுத்தாள்.

வாய்க்கு வந்ததை எல்லாம் புலம்பினாள். “இனி எப்போது உன்னைக் காண்பேன்” என்று கதறினாள். உடனே சிவபெருமான் முன்பு சென்றாள்.

“பெருமானே! இது என்ன நியாயம்? தங்களுக்கும் பார்வதி தேவிக்கும் உதவ வந்தது ஒரு குற்றமா? மற்றவர்கள் இவரை ஏவி விட்டு இப்போது அவர்கள் தப்பிக் கொண்டார்கள். நேற்று தான் என்னை காந்தர்வ மனம் செய்துகொண்டு ஒன்றினைந்தோம். அதற்குள் எனக்கு விதவைக் கோலமா! இதை என்னால் தாங்க முடியவில்லை.

எனக்கு நீதி வேண்டும். இல்லையென்றால் அனைவரையும் சபிப்பேன்” என்று ஆக்ரோஷமாக அலறினாள்.

சிவன் அவளுக்கு பொறுமையாக எடுத்துரைத்தார்.

“ரதி! யோகநிஷ்டையில் இருப்பவரின்  தவத்தை யார் கலைக்கிரார்களோ அவர்கள் இறப்பது உறுதி. இதை நீ அறியாதவள் இல்லை.

ஆனாலும் காமத்தால் என்னை அவன் ஆட்படுத்த முயன்றதால் , உருவமில்லாத காமத்தைப் போல அவனும் உருவமில்லாதவன் ஆவான். உன் கண்களுக்கு மட்டும் அவன் புலப்படுவான்.” என்று அருளினார்.

அதிலும் மனம் ஒப்பாத ரதி,

“இல்லை சுவாமி, உருவமில்லாத அவருக்கு நான் பிள்ளை பெற்றால், தேவையில்லாத பழிக்கு நான் ஆளாவேன். அதற்கு நான் தயாராக இல்லை. என் கணவர் எனக்கு மீண்டும் உருவத்தோடு வேண்டும்” என விடாப்படியாக  நின்றாள்.

“ரதி, இது தான் விதி. அவனுக்கு உருவம் கிடைக்க இன்னும் பல யுகங்கள் உள்ளது. பகவான் விஷ்ணு கிருஷ்ணாவதாரம் எடுக்கும்  போது காமன் அவருக்கு மகனாகப் பிறப்பான். அப்போது தான் அவன் உருவம் அவனுக்கு கிடைக்கும். அதுவரை இது தான் நிலைமை.” எனக் கூறிவிட,

வேறு வழியின்றி திரும்பி வந்தாள்.

யார் கண்ணுக்கும் தெரியாத காமன், ரதியின் கண்களுக்கு மட்டும் தெரிந்தான்.

“ரதி, நீ கவலைப் படாதே! நான் இங்கேயே தான் இருக்கிறேன்” என காமன் ஆறுதல் சொன்னாலும்,

“இல்லை சுவாமி, நீங்கள் இருப்பதை நான் மட்டுமே உணர முடியும். இந்த உலகிற்கு நீங்கள் இருப்பது தெரியாது. நேற்று நமக்குள் நடந்த விஷயம் யாரும் அறியாத ஒன்று. அப்படி இருக்க நம் பிள்ளை பிறந்தால் அவனையும் என்னையும் எல்லோரும் தவறாகப் பேசுவர். அதனால் நீங்கள் எப்போது உருவம் கொள்கிறீர்களோ அப்போது தான் நானும் ஜனனம் எடுப்பேன். எனக்கு இந்த வாழ்வு தேவை இல்லை.” என அழுது புலம்பினாள்.

அவளைத் தேற்றும் வழி தெரியாமல் அவன் தவிக்க,

அதற்குள் அங்கேயே அக்னி எழுப்பி அதற்குத் தன்னை இரையாகிக் கொண்டாள் ரதி.

காமதேவன் அந்த உலகமே அதிரும்படி அழுது கதறினான்.

 

error: Content is protected !!