KAATRE-4

அறைக்குள் குறுக்கும் நெடுக்கும் நடந்து கொண்டிருந்த கவிகிருஷ்ணாவிற்கோ குற்றவுணர்வு மனம் முழுவதும் மேலோங்கி இருந்தது.

இது நாள் வரை தன் வாழ்வில் நடந்த எந்த ஒரு நிகழ்வையும் தன் அன்னையிடம் மறைத்து இருக்காதவன் இன்று முதன்முதலாக ஒரு பெரிய விடயத்தை மறைத்து இருக்கிறான்.

அதுவும் அவன் வாழ்க்கையில் மிகவும் முக்கியமான விடயம்.

எல்லா விடயங்களையும் தன் அன்னையிடம் சகஜமாக பகிர்ந்து கொள்ள முடிந்தவனுக்கு இந்த ஒரு விடயத்தை மனம் திறந்து சொல்ல முடியவில்லை.

அன்னையின் கேள்வியில் முகம் மாறிப் போனவன் உடனே தன் முகத்தை சரி செய்து கொண்டு
“ஹான்…வேலை தானே ரொம்ப நல்லா போச்சு ம்மா சீஃப் டாக்டர் எப்போவும் போல இன்னைக்கும் நிறைய விஷயங்கள் சொல்லிக் கொடுத்தார்” தன் தடுமாற்றத்தை மறைக்க முயன்றும் அவன் பேச்சே அவன் தடுமாற்றத்தை நன்கு வெளிச்சம் போட்டு காட்டியது.

“அப்படியா?” அன்னையின் பார்வையை நேரடியாக சந்திக்கத் தயங்கியவன் வாய்க்கு வந்த காரணங்களை எல்லாம் கூறி விட்டு வேகமாக படியேறி தன்னறைக்குள் நுழைந்து கதவை சாத்திக் கொண்டான்.

“எதற்காக நான் அம்மா கிட்ட இந்த விஷயத்தை மறைக்கணும்? மதி என்னைத் தெரியாமல் தானே அப்படி நடந்துகிட்டா அப்புறம் ஏன் எனக்கு இவ்வளவு தயக்கம்? அய்யோ ஒரே நாளில் என்னை இப்படி மாற்றிட்டாளே” புலம்பிக் கொண்டே குளியலறைக்குள் நுழைந்து கொண்டவன் அரை மணிநேரம் கழித்து மீண்டும் ஹாலுக்கு வந்து சேர்ந்தான்.

என்னதான் ஆளுக்கொரு வேலைகளில் அவரவர் ஈடுபட்டு கொண்டிருந்தாலும் இரவுணவை மட்டும் அந்த வீட்டில் உள்ள நால்வரும் ஒன்றாகவே சாப்பிடுவர்.

அது அவர்கள் வீட்டின் எழுதப்படாத விதியாக கடைப்பிடிக்க பட்டு வருகிறது.

கவிகிருஷ்ணா வருவதைப் பார்த்ததும் கௌசிக் மற்றும் காயத்ரி டைனிங் டேபிளில் வந்து அமர்ந்து கொள்ள வேதவல்லி அவர்கள் அனைவருக்கும் சாப்பாட்டை பரிமாறி விட்டு தானும் அமர்ந்து கொண்டார்.

எப்போதும் போல ஏதாவது பேசுவான் என்று கவிகிருஷ்ணாவை மூவரும் பார்த்து கொண்டிருக்க அவனோ தட்டை விட்டு தலையை நிமிர்த்தி பார்க்காமலேயே அமர்ந்திருந்தான்.

கவிகிருஷ்ணாவை வித்தியாசமாக வேதவல்லி பார்த்து கொண்டிருக்க கௌசிக்கும், காயத்ரியும் ஒருவரை ஒருவர் பார்த்து புருவம் உயர்த்தினர்.

கவிகிருஷ்ணா சாப்பிட்டு விட்டு எழுந்து கொள்ள தன் அன்னையின் அருகில் வந்து அமர்ந்து கொண்ட கௌசிக்
“அம்மா அண்ணா என்ன ஒரு மாதிரியாக இருக்காங்க? நீங்க ஏதாவது திட்டுனீங்களா?”
என்று கேட்கவும்

அவனைப் பார்த்து தோளை குலுக்கிய வேதவல்லி
“என்ன நடக்குதுனே தெரியலடா கண்ணா வரும் போது நல்ல சந்தோஷமாக தான் வந்தான் வழக்கம் போல வேலை எப்படி போச்சுன்னு கேட்டேன் அப்புறம் அவன் பார்வையும் சரி இல்லை பதிலும் சரி இல்லை நடவடிக்கையும் சரி இல்லை எப்படியும் என் கிட்ட சொல்லாமல் அவனால எதுவும் பண்ண முடியாது எப்படியோ என் கிட்ட வருவான் தானே அப்போ பார்த்துக்கலாம் நீங்க சாப்பிட்டுட்டு போய் தூங்குங்க” என்று விட்டு சென்று விட கௌசிக் மற்றும் காயத்ரி மறுபேச்சின்றி சாப்பிட்டு விட்டு எழுந்து கொண்டனர்.

அறைக்குள் வந்து அமர்ந்த கவிகிருஷ்ணாவின் மனம் ஒரு நிலையில் இல்லை.

பல்வேறு குழப்பங்கள் மனதை சூழ்ந்து கொள்ள தன் போனை எடுத்து தனக்கு பிடித்த பாடலை ஓட விட்டவன் கட்டிலில் சாய்ந்து கண் மூடி அமர்ந்தான்.

லேசாக திறந்திருந்த ஜன்னல் வழியே வந்த காற்று அவன் மேனியை தழுவி செல்ல மறுபுறமோ தேன்மதி ஜன்னல் வழியே வான் நிலவை ரசித்து கொண்டிருந்தாள்.

மலை ஒன்றில் தேன்மதி தன்னந்தனியாக நடந்து சென்று கொண்டு இருக்க சட்டென்று ஒரு கரம் அவள் கரத்தை பற்றி இழுத்து கொண்டு சென்றது.

பயத்தில் வாய் திறந்து கத்தப்போனவளை அடுத்த நொடி அந்த கரம் விட்டு விட நிலைதடுமாறி மலையில் இருந்து உருண்டு வீழ்ந்தாள் தேன்மதி.

“கவி…” என கத்திக் கொண்டு எழுந்து அமர்ந்தவள் முகமெங்கும் முத்து முத்தாக வியர்வைத் துளிகள் பூத்து இருந்தது.

அச்சத்தோடு சுற்றிலும் பார்த்தவள் தனக்கு எதுவும் ஆகவில்லை என்பதை உணர்ந்த பின்பே நிம்மதியாக மூச்சு விட்டுக் கொண்டாள்.

ஏன் தனக்கு இப்படி புகையிலும், மலையில் நடப்பது போன்றும், விழுவது போன்றும் கனவு வருகிறது என்பதை யோசித்து பார்த்தவள் அதற்கான பதில் இல்லாமல் போகவே சுவற்றில் இருந்த கடிகாரத்தில் திரும்பி நேரத்தைப் பார்த்தாள்.

மணி ஐந்து முப்பதை நெருங்கிக் கொண்டிருந்தது.

மெல்ல கட்டிலில் இருந்து இறங்கிய தேன்மதி மெதுவாக நடந்து சென்று அங்கிருந்த ஜன்னலை திறந்தாள்.

காலை நேரத்து பனிக்காற்று அவளது முகம் மோத மனமோ படபடவென அடித்துக் கொண்டது.

சட்டென்று ஏற்பட்ட அந்த மாற்றத்தில் கண்களை மூடிக் கொண்டு தன் நெஞ்சில் கை வைத்தவள் அவளையும் அறியாமல்
“கவி என்னை விட்டு போயிடாதேடா ப்ளீஸ்” என்றாள்.

“என்ன கண்ணு இந்த நேரத்தில் இங்கே நிற்குற?” அவளை அந்த வைத்தியசாலையில் சேர்த்ததாக சொன்ன அந்த பாட்டி தேன்மதியின் தோள் தொட்டு வினவ சட்டென்று தன் கண்களை திறந்து கொண்டவள் குழப்பமாக அவரைப் பார்த்தார்.

“என்னமா உடம்புக்கு எதுவும் முடியலயா? நான் வேணும்னா நர்ஸ் அம்மாவை வர சொல்லவா?” என்று அவர் கேட்கவும்

இல்லை என தலை அசைத்தவள்
“நீங்க என் கிட்ட வரும் போது நான் ஏதோ சொன்னேன் பாட்டி என்ன சொன்னேன்னு ஞாபகம் இல்லை நீங்க நான் என்ன சொன்னேன்னு கவனித்தீங்களா பாட்டி?” எனவும்

அவளை பாவமாக பார்த்தவர்
“இல்லையே கண்ணு” எனத் தலை அசைத்தார்.

“என் உடம்புக்கு என்ன ஆச்சுனே புரியல ஏதேதோ பேசுறேன் ஏதேதோ பண்ணுறேன் தலையில் அடிபட்டு பைத்தியம் ஆகிட்டேனோ தெரியல” சற்று சத்தமாகவே புலம்பியவளின் வாயில் கை வைத்து வேண்டாம் என்று தலை அசைத்தவர்

“அப்படி எல்லாம் சொல்லக்கூடாது கண்ணு உனக்கு எதுவும் ஆகல இந்த டாக்டர் ரொம்ப ராசியானவர் இங்க வந்து கொஞ்ச நாளிலேயே நிறைய பேரைக் குணமாக்கி இருக்கார் நீ எதுக்கும் கவலைப்படாதேமா உன்னையும் சீக்கிரமாக குணப்படுத்திடுவாரு” எனவும்

அவரை பார்த்து அழகாக புன்னகத்தவள்
“எனக்கு தெரியும் என்னோட கவியைப் பற்றி எனக்கு ஒண்ணுனா சும்மா விட்டுடுவானா?” என்றாள் சற்று பெருமை கலந்த குரலில்.

“பாப்பா நான் ஒண்ணு சொன்னா தப்பாக எடுத்துக்கமாட்டியே!”

“அய்யோ! பாட்டி நீங்க எனக்கு எவ்வளவு பெரிய உதவி பண்ணி இருக்கீங்க உங்களைப் போய் நான் தப்பாக நினைப்பேனா? அது மட்டுமில்லாம நீங்க எனக்கு பண்ண உதவிக்கு நான் உங்களுக்கு ஒரு நன்றி கூட சொல்லலயே” அவரது கை பற்றி கண் கலங்கியவளை பார்த்து புன்னகத்தவர்

அவளது கண்களை துடைத்து விட்டுக் கொண்டே
“நன்றி எல்லாம் சொல்லி என்னை மூணாவது மனுஷியாக ஆக்காதே கண்ணு நீயும் எனக்கு ஒரு பேத்தி மாதிரி தான் முதல்ல இப்படி வந்து உட்கார்ந்து நான் சொல்லப்போறதை கேளு சரியா?” என்றவாறு அங்கிருந்த கதிரையில் தேன்மதியை அமரச் செய்தார்.

“உனக்கு டாக்டர் தம்பியை எப்படி தெரியும் கண்ணு?”

“அய்யோ பாட்டி! அவன் டாக்டரே இல்ல நாங்க இரண்டு பேரும் ஒண்ணா தான் எம்.பி.ஏ படிச்சோம் அவனும், நானும் சொந்தமாக ஒரு கம்பெனி ஆரம்பிக்கறதா வேற திட்டம் போட்டோம் ஆனா இப்போ இங்க அவன் டாக்டர் மாதிரி சுத்துறான் அது தான் எனக்கு புரியல எப்படி இது ஆச்சு?”

“நான் சொல்லப்போற விஷயம் கண்டிப்பாக உனக்கு கோபத்தை தரும்னு தெரியும் கண்ணு ஆனா கோபப்படாமல் கேளு சரியா?”

“சரி சொல்லுங்க”

“டாக்டர் தம்பியை எனக்கு சின்ன வயதிலிருந்தே தெரியும் அவங்க அப்பா இறந்ததுக்கு அப்புறம் வேதவல்லி அம்மா டாக்டர் தம்பியையும், அவங்க மற்ற இரண்டு பசங்களையும் கூட்டிட்டு வந்து இங்க ரொம்ப கஷ்டப்பட்டு தனியாக நின்று வளர்த்தாங்க என் வீடு அவங்க வீட்டை தாண்டி தான் இருக்கு நான் வீடு வீடாக போய் சுத்தம் பண்ணிக் கொடுக்குறதைப் பார்த்து வேதவல்லி அம்மா தான் எனக்கு இந்த ஆஸ்பத்திரியில் வேலை எடுத்து கொடுத்தாங்க டாக்டர் தம்பி இங்க ஊட்டியில் தான் படிச்சாங்க இப்போ நான்கு, ஐந்து வருஷத்துக்கு முன்னாடி தான் மேல படிக்குறதுக்காக பாரின் போயிட்டு வந்தாங்க அதற்கு முன்னாடி தம்பி அவங்க அம்மாவை விட்டோ, இந்த ஊட்டியை விட்டோ பிரிந்து போனதே இல்லை அது மட்டுமில்லாம ஒரு தடவை கூட உன்னை நான் இங்கே பார்த்ததே இல்லையேமா அப்புறம் எப்படி உனக்கு டாக்டர் தம்பியை தெரிந்திருக்க முடியும்?”

“அப்போ நான் பொய் சொல்லுறேன்னு சொல்லுறீங்களா?”

“அய்யய்யோ! அப்படி இல்லை கண்ணு” அவசரமாக மறுத்து சொன்னவரைப் பார்த்து விரக்தியாக புன்னகைத்தவள்

“சின்ன வயதிலிருந்தே ஒன்றாக கை பிடித்து எனக்கு வழி காட்டி தந்த என் கவியோட முகத்தை நான் எப்படி மறக்க முடியும்? இது என் கவியரசன் தான் அதில் எந்த மாற்றமும் இல்லை”
உறுதியாக தேன்மதி கூறவும் அதற்கு மேல் அவரால் மறுத்து பேச முடியவில்லை.

“டாக்டர் தம்பியோட பேரு கவிகிருஷ்ணா கண்ணு” புன்னகையோடு சொன்னவரை அதிர்ச்சி கலந்த குழப்பத்தோடு பார்த்தவள் தலையை பிடித்து கொண்டு அமர்ந்தாள்.

“அய்யய்யோ! என்ன ஆச்சு கண்ணு? நான் பேசி உனக்கு வருத்தத்தை வரவைச்சுட்டேனா? நான் இப்போவே போய் நர்ஸ் அம்மாவை வரச்சொல்லுறேன்” வேகமாக செல்லப் போனவரை கை பிடித்து தடுத்து வேண்டாம் என்று தலை அசைத்தவள்

“ஒண்ணும் இல்லை பாட்டி சும்மா யோசித்து பார்த்தேன் அவ்வளவு தான் நீங்க உங்க வேலைகளை கவனிங்க நான் கொஞ்ச நேரம் தூங்கி எழும்புறேன்” என்று விட்டு கட்டிலில் சென்று படுத்துக் கொள்ள அந்த பாட்டியோ பெருமூச்சு ஒன்றை விட்டு கொண்டு தன்
வேலைகளை கவனிக்க நகர்ந்து சென்றார்.

நேற்று தேன்மதிக்கு அளித்த சிகிச்சைக்குப் பின் அவளது தலையில் வலி ஏற்படுவது குறைந்து இருக்க மனதில் உள்ள யோசனைகளோ பரந்து வியாபித்து இருந்தது.

எந்த கேள்விக்கும் சரியான ஒரு பதிலை அவளால் கண்டுபிடிக்க முடியவில்லை.

“அந்த பாட்டி சொல்லுவது உண்மை என்றால் அப்போ என்னோட கவி எங்கே? என்னோட அம்மா, அப்பா எங்கே? இப்படி என்னை தேடி வராமல் அவங்க இருக்க மாட்டாங்களே! நான் கவி கூட இருக்கேன்னு ஒரு வேளை வராமல் இருக்காங்களா? ஆமா அப்படி தான் இருக்கும் பாட்டி தான் ஏதோ புரியாமல் பேசுறாங்க இது என் கவி தான் நான் தான் சும்மா போட்டு என் மனசை குழப்பிக்கிறேன்” தானாக ஒரு முடிவை எடுத்துக் கொண்டவள் சந்தோஷமாக கண் மூடி தூங்க மறுபுறம் தேன்மதியினது புகைப்படம் வெறுமையாகவும், கவியினது உருவப்படத்திற்கு பெரிய மாலை போடப்பட்டும் இருக்க அந்த படத்தின் முன்னால் நான்கு நபர்கள் சோகமே மறு உருவமாக அமர்ந்திருந்தனர்……