தேன்மதி தன் முன்னால் நின்று கொண்டிருந்த கவிகிருஷ்ணாவையே பார்த்து கொண்டு இருக்க அவனோ அவள் பார்வையை உணராதவன் போல குனிந்து நின்று பார்த்து முடித்த மருத்துவ குறிப்புகளை மீண்டும் மீண்டும் பார்த்துக் கொண்டு நின்றான்.

அவளது ரசனை நிறைந்த பார்வை அவன் மனதை கொஞ்சம் கொஞ்சமாக அவளின் புறமாக இழுத்து கொண்டு இருப்பதை எவ்வளவு முயன்றும் அவனால் தடுக்க முடியவில்லை.

அவள் அவனை அவன் அடையாளத்தை வேறு ஒருவனாக எண்ணிக் கொண்டு தன்னை பார்த்து கொண்டு இருக்கிறாள் என்ற உண்மை அவனை ஏதோ செய்தது.

கையில் இருந்த பைலில் பார்வை முழுவதும் இருந்தாலும் நினைவு மொத்தமும் தேன்மதி வசமே இருந்தது.

விருத்தாசலத்தோடு நடந்து வந்து கொண்டிருந்த தேன்மதியின் உறவுகள் அவள் கட்டிலில் அமர்ந்து கொண்டு தன் முன்னால் மறுபக்கமாக நின்று கொண்டிருந்த நபரைப் பார்த்து கொண்டிருப்பதைப் பார்த்து கால்கள் பின்ன தடுமாறி நின்றனர்.

இனி பார்க்கவே முடியாதோ என்று எண்ணி அழுது கரைந்த சம்யுக்தா தன் மகளை பார்த்த நொடியே
“மதி!” என்று கூவலோடு அவளை நோக்கி ஓடி வந்தார்.

திடீரென்று கேட்ட குரலில் திடுக்கிட்டு திரும்பி பார்த்த தேன்மதி
“அம்மா!” என்று அதிர்ச்சி கலந்த சந்தோஷத்தோடு கட்டிலில் இருந்து பாய்ந்து இறங்கி அவரை ஒரே எட்டில் இறுக அணைத்துக் கொண்டாள்.

அன்னையும், மகளும் பேச வார்த்தைகள் இன்றி ஒருவரை ஒருவர் கண்ணீரால் நனைத்துக் கொண்டிருக்க சுரேந்திரன், நரசிம்மன் மற்றும் ஜானகி மெல்ல மெல்ல அவர்கள் அருகில் வந்து சேர்ந்தனர்.

அவர்கள் பாசப் பிணைப்பை பார்த்து விருத்தாசலம் கூட ஒரு கணம் மெய் சிலிர்த்து போய் நின்றார்.

தேன்மதியின் குடும்பத்தினரைப் பார்த்து கொண்டு இருந்த கவிகிருஷ்ணாவை மற்ற நபர்கள் யாரும் அங்கே கவனித்திருக்கவில்லை.

தேன்மதியையே பார்த்து கொண்டு நின்ற கவிகிருஷ்ணா அருகில் வந்த விருத்தாசலம்
“ஒரு வழியாக தேன்மதியோட சொந்த பந்தங்களை அவளுக்கு கண்டு பிடித்து கொடுத்தாச்சு” எனவும்

சுற்றிலும் ஒரு முறை தேடிப் பார்த்த கவிகிருஷ்ணா
“அந்த கவியரசன் எங்கே டாக்டர்?” என்று கேட்டான்.

“அட ஆமா நானும் மறந்தே போயிட்டேன்” என்றவாறே நரசிம்மன் அருகில் வந்த விருத்தாசலம்

“எக்ஸ்கியுஸ் மீ ஸார் மிஸ்டர். கவியரசன் வரலயா?” என கேட்கவும்

“அது…” என்றவாறே திரும்பியவர் அவர் அருகில் நின்ற கவிகிருஷ்ணாவை பார்த்து அதிர்ந்து போய் தன் நெஞ்சில் கை வைத்து கொண்டு நின்றார்.

“என்ன ஆச்சு ஸார்?” பதட்டத்துடன் நரசிம்மன் அருகில் கவிகிருஷ்ணா வரவும் சுற்றி நின்ற அனைவரும் அந்த சத்தத்தில் அவர்களை திரும்பி பார்த்தனர்.

ஜானகி அப்போது தான் அங்கு நின்ற கவிகிருஷ்ணாவை பார்த்தார்.

அவனைக் கண்ட அடுத்த நொடியே “கவி!” என்று அலறியவர் அப்படியே மயங்கி சரிந்தார்.

அவசரமாக அவரை தன் கைகளில் ஏந்தி கொண்ட கவிகிருஷ்ணா உடனடியாக அவருக்கு சிகிச்சைகளை வழங்க ஆரம்பிக்க அங்கு நின்ற சுரேந்திரன் மற்றும் சம்யுக்தா கூட அதிர்ச்சியில் வாயடைத்துப் போய் நின்றனர்.

“அம்மா என்ன ஆச்சு ம்மா உங்களுக்கு? எதற்காக கவியைப் பார்த்து எல்லோரும் இப்படி ஷாக் ஆகுறீங்க?” குழப்பமாக கேட்ட தேன்மதியை அதிர்ச்சியாக பார்த்தவர்கள் விருத்தாசலத்தை கேள்வியாக நோக்கினர்.

அவர்கள் பார்வையை உணர்ந்து கொண்ட விருத்தாசலம்
“தேன்மதி நீங்க இங்கேயே இருங்க நான் உங்க அம்மா, அப்பா கிட்ட ஒரு சின்ன விஷயம் பேசிட்டு வர்றேன்” என்று விட்டு

சுரேந்திரன் புறம் திரும்பி
“நீங்க மூணு பேரும் கொஞ்சம் வாங்க” என்றவாறே முன்னால் நடந்து சென்றார்.

ஜானகி வைக்கப்பட்டிருந்த அறையின் முன்னால் வந்து நின்ற விருத்தாசலம் அவர்கள் மூவரையும் அங்கிருந்த இருக்கையில் அமரும்படி கூறி விட்டு ஜானகி வைக்கப்பட்டிருந்த அறைக்குள் நுழைந்து கொண்டார்.

சிறிது நேரத்தில் கவிகிருஷ்ணாவோடு விருத்தாசலம் அந்த அறையில் இருந்து வெளியேறி வர அவர்கள் மூவரும் சற்று முன் அடைந்த அதே அதிர்ச்சியோடு எழுந்து நின்றனர்.

“இது?” நரசிம்மன் கேள்வியாக கண்கள் கலங்க கவிகிருஷ்ணாவை நோக்கி கை காட்ட

அவர்களை பார்த்து அமைதியாக நின்ற கவிகிருஷ்ணா அவர் முன்னால் வந்து நின்று
“ஐ யம் கவிகிருஷ்ணா இந்த ஹாஸ்பிடல்ல நியூரோ சர்ஜனாக வேர்க் பண்ணுறேன் உங்க பொண்ணு தேன்மதியையும் நான் தான் பார்த்துட்டு இருக்கேன்” என்று கூற

“கவிகிருஷ்ணா” என அதிர்ச்சியாக மூவரும் ஒருவரை ஒருவர் திரும்பி பார்த்துக் கொண்டனர்.

“இது எப்படி சாத்தியம்? நீங்க எங்க கவியரசன் மாதிரியே இருக்கீங்க!” என்றவாறே தன் பர்ஸில் இருந்த போட்டோ ஒன்றை சுரேந்திரன் கவிகிருஷ்ணாவிடம் காட்ட அதை பார்த்தவனின் விழிகள் ஆச்சரியத்தில் விரிந்தது.

தன்னை போல எந்த மாற்றமும் இல்லாமல் இருந்த அந்த புகைப்படத்தை பார்த்தவனுக்கோ அதிர்ச்சியில் பேச நா எழவில்லை.

அந்த நேரம் பார்த்து சரியாக வேதவல்லியும் அந்த இடத்திற்கு வந்து சேர்ந்தார்.

“கிருஷ்ணா நீ என்ன இங்க இருக்க? இன்னைக்கு தேன்மதியோட அம்மா, அப்பா வர்றேன்னு சொன்ன அங்க தேன்மதி
மட்டும் தனியாக இருக்கா இங்க நீ என்ன பண்ணுற?” என்றவாறே அவனருகில் வந்தவர் அப்போது தான் அங்கு நின்ற புதியவர்களைப் பார்த்து கேள்வியாக கவிகிருஷ்ணாவை நோக்கினார்.

தன் கையில் இருந்த புகைப்படத்தை பார்த்து கொண்டே தன் அன்னையின் கேள்வியை உள் வாங்கிக் கொண்டவன்
“இவங்க தான் தேன்மதியோட அம்மா, அப்பா” என்று கூறவும்

“ஓஹ்! வணக்கம் மா” என்று அவர்களை பார்த்து புன்னகத்தவர் கவிகிருஷ்ணா கையில் இருந்த புகைப்படத்தை திரும்பி பார்த்தார்.

“என்ன கண்ணா உன் போட்டோவை இவ்வளவு நேரமாக எதற்காக பார்த்துட்டு இருக்க?” என்ற வேதவல்லியின் கேள்வியில் அவரை திரும்பி பார்த்தவன்

“இது என் போட்டோ இல்லை தேன்மதியோட மாமா பையன் கவியரசனோட போட்டோ” என்று கூறவும்

“என்ன?” என்று அதிர்ச்சியாக அவன் கையில் இருந்த புகைப்படத்தை வாங்கி பார்த்தவர்

“இது எப்படி? இது எப்படி சாத்தியம்?” என்றவாறே அங்கிருந்தவர்களை கேள்வியாக நோக்கினார்.

“அது தான் எங்களுக்கும் புரியல ஒரே மாதிரி தோற்றத்தை கொண்டவங்க ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்களாக தான் இருக்க பார்த்திருக்கோம் ஆனா இங்க மொத்தமாக எல்லாம் குழப்பமாக இருக்கு இதற்கு முதல் நாங்க உங்களை பார்த்தது கூட இல்லை ஆனால் என் பையன் மாதிரியே உங்க பையன் எப்படி இது எல்லாம்?” குழப்பமாக கேட்ட நரசிம்மன் முன்னால் வந்து நின்ற விருத்தாசலம்

“இங்க நீங்க இவ்வளவு குழப்பமடைய தேவையில்லை ஒரே மாதிரி தோற்றத்தை கொண்டவங்க ஒரு குடும்பத்தைச் சேர்ந்தவங்களாக தான் இருக்கணும்னு இல்ல கடவுள் சித்தம்னு ஒண்ணு இருக்கு அதோடு உலகத்தில் ஒரே மாதிரி ஏழு பேர் இருப்பாங்களாம்” என விருத்தாசலம் கூறிய பின்பும் நரசிம்மன் மற்றும் வேதவல்லியின் முகத்தில் இருந்த குழப்ப ரேகைகள் மறையவில்லை.

“உங்களுக்கு இன்னும் குழப்பமாக இருந்தால் வேணும்னா ஒரு டீ.என்.ஏ டெஸ்ட் பண்ணி பாருங்க உங்க குழப்பம் எல்லாம் சரியாகிவிடும்” எனவும் சுரேந்திரன், நரசிம்மன், சம்யுக்தா மற்றும் வேதவல்லி அதிர்ச்சியாக ஒரு சேர கவிகிருஷ்ணாவை நோக்கினர்.

“நான் தப்பாக எந்த அர்த்தத்திலும் இதை சொல்லல ஒரு வேளை சின்ன வயதில் குழந்தை மாறி இருக்கலாமோனு கூட நீங்க நினைக்கலாம் இல்லையா அதனால தான் சொல்றேன் அது மட்டும் இல்லாமல் டீ.என்.ஏ டெஸ்ட் இப்போ சகஜமாக மெடிக்கலில் நடக்குறது தானே உங்க சந்தேகத்தை தீர்க்க ஒரு வழியாக தான் இதை நான் சொன்னேனே தவிர வேறு வகையில் உங்களை எல்லாம் கஷ்டப்படுத்தி பார்க்கணும்னு இல்லை” என்று விருத்தாசலம் விளக்கம் அளித்த பின்பே அங்கிருந்தவர்கள் முகத்தில் சிறு நம்பிக்கை தென்பட்டது.

“இப்போ டெஸ்ட்க்கு அனுப்புனா எப்படியும் ரிசல்ட் வர்றதுக்கு இரண்டு, மூன்று நாள் ஆகும்” என விருத்தாசலம் கூற சரியென்று தலை அசைத்த கவிகிருஷ்ணாவிற்கும், நரசிம்மனுக்கும் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டது.

சிறிது நேரத்தில் எல்லோரும் ஒரு நடுநிலை மனநிலைக்கு வந்து சேர அதன் பிறகு விருத்தாசலம் தேன்மதி பற்றி அவளது குடும்பத்தினரிடம் விலாவாரியாக கூறினார்.

தன் மகளுக்கு இப்படி ஒரு நிலையா? என்றெண்ணி சுரேந்திரன் தலையில் கை வைத்து கொள்ள நரசிம்மன் அவரை தோளோடு அணைத்துக் கொண்டார்.

“நான் அப்போ இருந்து கேட்குறேன் யாருமே சொல்ல மாட்டேங்குறீங்க கவியரசன் வரலயா?” விருத்தாசலம் சுற்றிலும் தேடிப் பார்த்து கொண்டே கேட்க

கவலையுடன் கண்களை மூடி திறந்து கொண்ட நரசிம்மன்
“அவன் வரமாட்டான்” என்று கூறினார்.

“ஏன் ஏதாவது பிரச்சினையா?” கவிகிருஷ்ணா சற்று பதட்டத்துடன் கேட்கவும்

அவனைக் கண்கள் கலங்க பார்த்த சுரேந்திரன்
“அவன் திரும்பி வரவே முடியாத இடத்திற்கு போய்ட்டான்” என்றவாறே மேல் நோக்கி கை காட்ட

“வாட்?” என அதிர்ச்சியாக விருத்தாசலமும், கவிகிருஷ்ணாவும் அவரை நோக்கினர்.

“தேன்மதிக்கும், கவியரசனுக்கும் கல்யாணம் முடிந்து ஒரு மாதம் எங்க கூட தான் சென்னையில் இருந்தாங்க எங்களை விட்டு எங்கேயும் போக மாட்டோம்னு எந்த இடத்திற்கும் அவங்க போகல அப்புறம் இரண்டு பேரும் கொஞ்ச நாள் வெளியூர் போய் வரட்டும்னு நாங்க தான் கட்டாயப்படுத்தி ஊட்டிக்கு அனுப்பி வைத்தோம் கடைசியில் கொஞ்ச நாள் கழித்து கவியரசனோட உயிரில்லாத உடல் மட்டும் தான் வந்து சேர்ந்தது தேன்மதி பற்றி தகவல் கிடைக்கல,ஊட்டியில் எல்லா போலீஸ்லேயும் கம்ப்ளெயிண்ட் கொடுத்துட்டு எல்லோர் மன மாற்றத்திற்காகவும் லண்டன் போயிட்டோம்” சுரேந்திரன் கூறிய விடயங்கள் எல்லாவற்றையும் கேட்டு கவிகிருஷ்ணா அதிர்ந்து போய் நின்றான்.

‘ஏன் எனக்கு கொஞ்ச நாளாகவே இவ்வளவு அதிர்ச்சியை அள்ளி அள்ளி தர்ற கடவுளே?! கவியரசன் வந்துடுவான்னு நினைத்தால் இப்படி ஒரு இடியை தலையில் இறக்கிட்ட என்னை மாதிரி சாயலில் அவன் இருக்கலாம்னு நினைத்தால் என்னை போட்டோகாப்பி பண்ண மாதிரி அவனை வைத்திருக்க இப்போ எப்படி தேன்மதியை குணப்படுத்த முடியும்?’ மனதிற்குள் சாரமாரியாக கடவுளிடம் கவிகிருஷ்ணா சண்டையிட்டுக் கொண்டிருக்க கடவுளோ

‘இன்னும் உனக்கு எவ்வளவு இருக்கு!’ என்று புன்னகையோடு அவனை பார்த்து சிரித்துக் கொண்டிருந்தார்.

சிறிது நேரத்தில் ஜானகியும் மயக்கத்தில் இருந்து எழுந்து விட எல்லோரும் அவரை பார்க்க சென்றனர்.

கவிகிருஷ்ணாவைப் பார்த்து ஜானகி கண்ணீர் வடிக்க அவரருகில் வந்து நின்ற வேதவல்லி அவர் கண்களை துடைத்து விட்டார்.

“உங்களுடைய இழப்பிற்கு என்னால எப்படி ஆறுதல் சொல்லுறதுனு தெரியல கடவுளோட விளையாட்டு என் பையனும், உங்க பையனும் ஒரே மாதிரி இருக்காங்க நீங்க எதற்காகவும் கவலைப்பட வேண்டாம் உங்க பையனைப் பார்க்கணும்னு உங்களுக்கு தோணும் போது எல்லாம் நீங்க கிருஷ்ணா கூட தாராளமாக பேசுங்க” என்ற வேதவல்லியின் கைகளை கண்ணீர் மல்க பற்றி கொண்டவர் கவிகிருஷ்ணாவை பார்த்து தன்னருகில் வருமாறு சைகை செய்தார்.

ஜானகி அருகில் வந்து கவிகிருஷ்ணா அமர்ந்து கொள்ள கைகள் நடுங்க அவன் முகத்தை வருடிக் கொடுத்தவர் அதற்கு மேல் தாக்குப் பிடிக்க முடியாமல் அவன் மீதே சாய்ந்து கதறி அழத் தொடங்கினார்.

“அம்மா ப்ளீஸ் அழாதீங்க” என்ற கவிகிருஷ்ணாவின் வார்த்தையில் கண்களில் வடிந்த கண்ணீர் சட்டென்று நிற்க தன் தலை நிமிர்ந்து பார்த்தவர் புன்னகையோடு அவன் உச்சி முகர்ந்தார்.

எல்லோரும் ஆளுக்கொரு மனநிலையில் உள்ளே அமர்ந்திருக்க இத்தனை நேரமாக தன்னை ஏன் இவர்கள் பார்க்க வரவில்லை என்ற யோசனையோடு எழுந்து நடந்து வந்த தேன்மதி ஜானகி வைக்கப்பட்டிருந்த அறை வாயிலில் தயங்கி நின்றாள்.

உள்ளே செல்லலாமா? வேண்டாமா? என்று யோசனையோடு தேன்மதி நின்று கொண்டிருக்க அறைக்குள் உள்ளே நின்ற சம்யுக்தா
“அப்போ தேன்மதி கிட்ட இந்த விஷயத்தை எல்லாம் எப்படி சொல்ல முடியும்? கவியரசன் இப்போ இல்லை என்ற உண்மையை அவ எப்படி தாங்கிக்குவா?” என்று கேள்வியாக சுரேந்திரனிடம் மெல்லிய குரலில் கலக்கத்துடன் கேட்டார்.

கவிகிருஷ்ணா அருகில் இருந்த ஜானகி நரசிம்மன் புறம் திரும்பி
“நம்ம எப்படியாவது தேன்மதி கிட்ட இப்போ கவியரசன் நம்ம கூட இல்லை என்ற உண்மையை சொல்லியே ஆகணும் அவன் இனி வரப்போறது இல்லை என்ற உண்மையை அவள் உணர்ந்து கொள்ளனுமே!” என்று கவலையுடன் கூற

“என்ன? கவி வரமாட்டானா? அப்போ இங்க இருக்குறது என் கவி இல்லையா? ஏன் ஆளாளுக்கு இப்படி கவியை மாற்றி சொல்லுறாங்க? அத்தை கூட இப்படி சொல்லுறாங்க இதற்கு எனக்கு பதில் தெரிந்தே ஆகணும்” அதிர்ச்சியாக தனக்குள்ளேயே கேட்டுக் கொண்ட தேன்மதி கோபமாக அந்த அறைக் கதவை திறந்து கொண்டு உள் நுழைந்தாள்…..

JF. Husna,
B.Sc in Health Promotion,
Rajarata University Of Sri Lanka.

error: Content is protected !!