Kadhal 13

Kadhal 13

சித்தார்த் தன் கையில் இருந்து தவறி விழுந்த டைரியை திரும்பி எடுக்கவேண்டுமே என்ற எண்ணம் சிறிதும் இன்றி தன் அதிர்ச்சியில் இருந்து மீண்டு வரமுடியாமல் சிலையென அமர்ந்திருந்தான்.

மேக்னாவை பற்றி ஒரு டைரியில் படித்ததற்கே தனக்கு இந்த நிலை என்றால் மீதி இருக்கும் டைரிகளை எல்லாம் படித்தால் என்ன ஆகுமோ என்ற அச்சத்துடன் சித்தார்த் தன் முன்னால் இருந்த பெட்டியை வெறித்துப் பார்த்து கொண்டு இருந்தான்.

கீழே விழுந்து கிடந்த டைரியை எடுத்து அந்த பெட்டிக்குள் போட்டு மூடியவன் அவசரமாக அந்த பெட்டியை தூக்கி கீழே வைத்து விட்டு தன் முன்னால் இருந்த பைல்களை எடுத்து புரட்ட அவன் மனமோ அதில் எதிலுமே ஒன்றவில்லை.

அவனது மனம் முழுவதும்
‘ஆழம் தெரியாமல் காலை விட்டு மாட்டிகிட்டியே சித்தார்த்!’ என புலம்பித் தள்ள அவனது தலையோ உள்ளிருந்து யாரோ மத்தளம் அடிப்பது போல விடாமல் வலித்துக் கொண்டு இருந்தது.

தன் கையில் இருந்த பைலை மேஜை மீது தூக்கி போட்டவன் தலையை இரு கைகளாலும் தாங்கிய வண்ணம் சிறிது நேரம் அமைதியாக அமர்ந்திருந்தான்.

‘இப்போ நான் என்ன செய்வது? மேக்னா பற்றி மேலும் தெரிந்துகொள்வதா? இல்லை இது எதுவும் வேணாம்னு விட்டு தள்ளுறதா? என்ன செய்வது? யோசி சித்தார்த் யோசி! என்ன செய்யலாம்னு யோசி’ தன் மனதிற்குள் மீண்டும் மீண்டும் பல தடவைகள் இதை கூறிக்கொண்டவன் பார்வையோ தன் காலடியில் இருந்த பெட்டியின் மீதே இருந்தது.

ஆர்வம் ஒரு புறம் தூண்ட, அச்சம் ஒரு புறம் தடுக்க என்ன செய்வது என்று புரியாமல் சித்தார்த் அமர்ந்திருக்க அந்த நேரம் அவனது தொலைபேசியும் ஒலிக்க ஆரம்பித்தது.

மேக்னா வழக்கமாக அவனை தொடர்பு கொள்ளும் எண்ணில் இருந்து அழைப்பு வரவே சித்தார்த்திற்கு உடலெல்லாம் வேர்த்துக் கொட்டத் தொடங்கியது.

‘இவ எதற்கு இந்த நேரத்தில் போன் பண்ணுறா? டைரியை படிச்சாச்சான்னு கேட்கப் போறாளோ? அய்யோ! ஒரு போலீஸ் ஆபிஸர் என்னைப் போய் இப்படி நடுங்க வைத்துட்டாளே! அழகான லவ் ஸ்டோரியா இருப்பான்னு நினைத்தா இப்படி டெரர் நிறைந்த திரில்லர் ஸ்டோரியா இருக்காலே! நான் இப்போ என்ன பண்ணுவேன்?’ அவனது போன் ஒரு முறை முழுமையாக அடித்து முடிந்தும் அவனுக்கு தைரியமாக அந்த அழைப்பை எடுத்து பேச முடியவில்லை.

சித்தார்த் அழைப்பை எடுக்காமல் இருக்கவே அவன் வேலையாக இருக்க கூடும் என்று எண்ணிக் கொண்ட மேக்னா
‘எல்லா டைரியையும் படித்து பார்த்துட்டு எனக்கு உதவி பண்ண முடிந்தால் சொல்லுங்க இன்ஸ்பெக்டர் ஸார்’ என்று குறுஞ்செய்தியை அனுப்ப

அதைப் படித்து பார்த்தவன் மனமோ
‘ஒரு வேளை இது தான் மேக்னா பண்ண முதலும், இறுதியுமான தப்பாக இருக்குமோ?’ என யோசித்து பார்க்க எதற்கும் எல்லா டைரிகளையும் படித்து பார்த்து விடலாம் என்று எண்ணியவன் மனதில் தைரியத்தை வரவழைத்துக் கொண்டு அடுத்த டைரியை கையில் எடுத்தான்.

மேக்னாவை வள்ளி மற்றும் நடராஜன் தங்கள் சொந்த மகளாகவே எண்ணி இருக்க புதியதோர் வாழ்க்கை பயணத்தை எதிர்பார்த்தவள் மனதிற்குள் எழுந்த பலவிதமான ஆசைகளுடன் அவர்களுடன் இணைந்து புறப்பட்டாள்.

நடராஜனிற்கு உடல் நலம் முழுமையாக தேறி இருக்க மேக்னாவும் ஹாஸ்டலில் இருந்த தன் உடமைகளை எல்லாம் எடுத்துக்கொண்டு அவர்களது வீட்டை நோக்கி புறப்பட்டாள்.

பாரிஸ் கார்னர் என்று அழைக்கப்படும் அந்த பகுதியில் தான் வள்ளி மற்றும் நடராஜன் வசித்து வந்தனர்.

பாரிஸ் கார்னர் எப்போதும், எந்நேரமும் ஆட்களால் நிறைந்து போய் தான் இருக்கும்.

வாகனங்களின் சத்தமும், ஆட்களின் சத்தமும் அந்த பிரதேசத்தை நிறைத்து இருந்தாலும் நடராஜனது வீடு சற்று ஆள் நடமாட்டம் அற்ற ஒரு தெருவில் தான் இருந்தது.

இரண்டு, மூன்று பெட்டிக் கடைகளும் ஒரு சில மளிகை கடைகளுமே அந்த தெருவில் இருந்தது.

பிரதான வீதியில் இருந்து நான்கு, ஐந்து வீடுகள் தள்ளி இருந்த அந்த வீட்டின் முன் நின்ற ஒன்றிரண்டு மரங்களோ கவனிப்பாரற்று வாடி வதங்கி நின்றது.

அக்கம்பக்கத்தில் உள்ளவர்கள் மேக்னாவை விசித்திரமாக பார்க்க இயல்பாக அவர்களை எல்லாம் பார்த்து புன்னகைத்து கொண்டவள் வள்ளியின் கையை பிடித்து கொண்டே அவர்கள் வீட்டிற்குள் தன் முதல் அடியை எடுத்து வைத்தாள்.

‘மனதில் பல ஆசைகளுடனும், கனவுகளுடனும் எனது முதல் அடியை எடுத்து வைத்த நொடியே என் வாழ்க்கையின் திருப்பு முனை ஆரம்பித்ததோ? என்னவோ? எனக்கு அது தாமதமாக தான் புரிந்தது அடுத்த வாரம் நர்மதாவை அந்த கயவர்களின் பிடியில் பார்த்தததன் பின்னர்’ மேக்னா எழுதி இருந்த கூற்றை படித்து பார்த்த சித்தார்த்

‘அப்போ நர்மதாவும் அவங்க இரத்த உறவு இல்லை போல!’ என்றெண்ணிக் கொண்டு அடுத்த வரியை படிக்கத் தொடங்கினான்.

வள்ளி மற்றும் நடராஜனுடன் ஒரு இயல்பான வாழ்க்கை வாழ ஆரம்பித்து இருந்த மேக்னா அந்த நற்செய்தியை ராணியிடம் பகிர்ந்து கொள்ளவும் மறக்கவில்லை.

மேக்னாவை தனியாக சென்னையில் விட்டு விட்டு வந்ததில் இருந்து மனம் நிலையில்லாது இருந்தவர் இப்போது இந்த செய்தி கிடைத்த பின்னரே வெகு நிம்மதியாக உணர்ந்தார்.

வள்ளி மற்றும் நடராஜனும் ராணியிடம் மேக்னா தொலைபேசியில் பேசும் சமயங்களில் சிறு நேரம் பேசிக் கொள்வர்.

மேக்னா எப்போதும் போல தனது வேலை தேடும் பணியை தொடங்கி இருக்க அவளுக்கு தான் வேலை கிடைத்த பாடில்லை.

வள்ளி மற்றும் நடராஜனுடன் வந்து வசிக்க தொடங்கி சரியாக ஒரு வாரம் கழித்து இருந்த நிலையில் தான் மேக்னா நர்மதாவை சந்தித்தாள்.

வழக்கம் போல கம்பெனி ஒன்றிற்கு நேர்முகத்தேர்வுக்கு சென்று விட்டு வீடு திரும்பி சென்று கொண்டிருந்தவள் ஒரு தெருவில் நான்கு, ஐந்து வாலிபர்கள் ஒரு சிறு பெண்ணிடம் வம்பிழுப்பதைப் பார்த்து விட்டு கோபமாக அந்த இடத்திற்கு விரைந்து சென்றாள்.

எங்கே எந்த தவறு நடந்தாலும் அதை பார்த்து விட்டு பார்த்தும், பார்க்காமல் சென்றால் அது மேக்னா இல்லையே.

பயத்தில் கண்களில் இருந்து கண்ணீர் தாரை தாரையாக வடிய நடுங்கி கொண்டிருந்த அந்த பெண்ணின் அருகில் வந்தவள்
“என்னம்மா ஏதாவது பிரச்சனையா?” என்று கேட்க

அந்த பெண்ணிடம் வம்பிழுத்துக் கொண்டிருந்த நபர்களில் ஒருவன்
“ஹலோ! மேடம் இது எங்களுக்குள்ள நடக்குற விஷயம் நீங்க வீணாக இதில் தலையிடாமல் போங்க” எனவும் அவர்கள் எல்லோரையும் ஒரு முறை ஏற இறங்கப் பார்த்தவள் எதுவும் பேசாமல் அந்த பெண்ணின் கை பிடித்து அழைத்துக் கொண்டு அங்கிருந்து செல்ல முயன்றாள்.

அதற்குள் அவசரமாக அவள் முன்னால் வந்து நின்ற இன்னொருவன்
“மேடம்! வெயிட்! வெயிட்! யாரு நீங்க? உங்க பாட்டுக்கு வந்தீங்க அந்த பொண்ணைக் கூட்டிட்டு போறீங்க? அந்த பொண்ணு என்ன உங்களுக்கு சொந்தமா?” கேள்வியாக அவளை நோக்க

“ஓஹ்! அப்போ என் சொந்தக்காரப் பொண்ணா இருந்தா எதுவும் பண்ணமாட்டிங்க வேறு யாருமா இருந்தா என்ன வேணும்னாலும் பண்ணுவீங்க அப்படி தானே?” பதிலுக்கு அவளும் கோபமாக அவர்களைப் பார்த்து கொண்டு நின்றாள்.

“அக்கா எனக்கு பயமாக இருக்குக்கா!” இத்தனை நேரம் அமைதியாக கண்ணீர் வடித்துக் கொண்டு நின்ற அந்த சிறு பெண் தனக்கு ஒருவர் ஆதரவாக இருக்கிறார் என்று தெரிந்து கொண்டதால் என்னவோ மேக்னாவின் கரத்தை இறுகப் பற்றி கொண்டு மெதுவாக அவளது காதில் கூறினாள்.

“நீ பயப்படாதே ம்மா! இந்த மாதிரி தெருவுக்கு தெரு சில ஜென்மங்கள் இருக்கும் தான் அதை எல்லாம் பார்த்து நம்ம பயப்படக் கூடாது இவ்வளவு கேவலமாக நடந்துக்கிறோமேன்னு அவங்க தான் பயப்படணும்” என்றவாறே மேக்னா அந்த பெண்ணை அழைத்து கொண்டு செல்லப் போக

“ஏய்! முதல்ல அந்த பொண்ணை மரியாதையாக இங்கே விட்டுட்டுப் போ!” என்றவாறு இன்னொரு நபர் அவளது கையை பிடிக்க அத்தனை நேரம் அவள் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்த அவளது கோபம் கரை கடந்து அதன் வேலையை காட்ட ஆரம்பித்தது.

தன்னை சுற்றி நின்ற ஐந்து நபர்களையும் தனியாளாக நின்று அடித்து துவம்சம் செய்தவளைப் பார்த்து அந்த சிறு பெண் கூட நடுங்கிப் போய் தான் நின்றாள்.

மேக்னாவின் உடல் தோற்றத்தை பார்த்து அவளால் தங்களை என்ன செய்து விட முடியும் என எண்ணி இருந்த அந்த நபர்கள் கூட அவளது அடிகளைத் தாங்கிக் கொள்ள முடியாமல் அலற அவளோ அதை எதையும் கவனிக்கும் மனநிலையில் இல்லை.

“அக்கா! வேண்டாம் க்கா! வாங்க க்கா! போயிடலாம் அவங்களுக்கு எதுவும் ஆனா உங்களுக்கு பிரச்சினை வந்துடும் வாங்க க்கா! போகலாம்” அந்த சிறு பெண் தன் கையை பிடித்து தடுக்கும் வரை அவர்களை விடாமல் அடித்தவள்

“இன்னொரு தடவை இப்படி பொண்ணுங்க கிட்ட வம்பிழுக்கிறதைப் பார்த்தேன் தொலைச்சிடுவேன்” எச்சரிப்பது போல அவர்களை பார்த்து கூறி விட்டு அந்த பெண்ணையும் தன்னோடு அழைத்துக் கொண்டு அங்கிருந்து சென்றாள்.

கோபமாக அந்த இடத்தில் இருந்து சென்றவள் தன் பையில் இருந்த கவர் ஒன்று விழுந்ததையும் கவனிக்காமல் செல்ல அவளிடம் அடி வாங்கியவர்களோ வலியால் முனகியபடி விழுந்து கிடந்தனர்.

அந்த இடத்தில் இருந்து வந்த பின்பும் அந்த பெண்ணின் நடுக்கம் குறையாமல் இருக்க அவளது கையை பிடித்து ஆதரவாக அழுத்தி கொடுத்த மேக்னா
“எதற்கு ம்மா இவ்வளவு பயம்? நம்ம பயம் தான் நம்ம பலவீனம் அடுத்தவங்க பலமும் கூட எப்போதும், எதற்காகவும் நம்ம பலவீனத்தை அடுத்தவங்க பலமாக மாற்ற விடக்கூடாது முதல்ல கொஞ்ச நேரம் இப்படி உட்காரும்மா” வீதியோரமாக இருந்த ஒரு பேருந்து நிறுத்தத்தில் அந்த பெண்ணை அமரச் செய்தவள் தானும் அந்த பெண்ணின் அருகில் அமர்ந்து கொண்டாள்.

“சரி என்னைப் பற்றி முதலில் சொல்லுறேன் அப்புறம் உன்னை பற்றி கேட்டுக்கிறேன் சரியா?”
மேக்னா அந்த பெண்ணின் பயம் நிறைந்த மனநிலையை மாற்ற எண்ணி இயல்பாக பேச்சை கொடுத்தாள்.

“என் பேரு மேக்னா பி.காம் படித்து முடிச்சுட்டு ஒரு வேலைக்காக கம்பெனி கம்பெனியாக அலைந்து திரியுறேன் என் வீடு பாரிஸ் கார்னரில் இருக்கு உனக்கு அந்த இடம் தெரியுமா?”

“இல்லை க்கா”

“அப்படியா? சரி பரவாயில்லை நான் உன்னை கூட்டிட்டு போய் காட்டுறேன் அப்புறம் எனக்கு ரொம்ப பாசமான அம்மா, அப்பா எல்லாம் இருக்காங்க ராணி அம்மா, வள்ளி அம்மா அப்புறம் அப்பா நடராஜன்”

“இரண்டு அம்மாவா?” அந்த சிறு பெண் கேள்வியாக அவளை நோக்க

புன்னகைத்து கொண்டே அந்த பெண்ணின் தலையை செல்லமாக கலைத்து விட்டவள்
“என்னை வளர்த்த அம்மா தான் அவங்க இரண்டு பேரும்” என்று கூற

“அப்போ அக்கா உங்களுக்கு?” அந்த பெண் கவலையுடன் சிறிது முகம் வாட அவளை நோக்கினாள்.

“கடவுள் ஒரு வழியை அடைத்தால் இன்னொரு வழியை திறப்பாருன்னு சொல்லுவாங்க இல்லை? அது மாதிரி தான் இதுவும் சரி அதெல்லாம் இருக்கட்டும் உன் பேரு என்ன நீ அதை சொல்லு” தன் மன வாட்டத்தை மறைக்க மேக்னா தற்காலிகமாக பேச்சை வேறு பக்கம் நகர்த்தினாள்.

“நர்மதா அக்கா!”

“அப்பா, அம்மா?”

“அப்பா சின்ன வயதிலேயே இறந்துட்டாங்க இரண்டு மாதத்திற்கு முன்னாடி ஒரு ஆக்சிடெண்டில் அம்மாவும் இறந்துட்டாங்க”

“ஓஹ்! அப்போ இவ்வளவு நாளா எங்கே ம்மா இருந்த? இங்கே எப்படி வந்த?

“என் அம்மாவோட தங்கச்சி தான் இரண்டு மாதமாக அவங்க வீட்ல வைத்து பார்த்து ஸ்கூலிற்கு அனுப்பி வைத்தாங்க க்கா அவங்களுக்கு என்னைப் பார்த்துக்க விருப்பமே இல்லை எப்போதும் திட்டிட்டே தான் இருப்பாங்க நேற்று அவங்க வீட்ல ஆயிரம் ரூபா பணம் திருட்டு போயிடுச்சு அதை நான் தான் எடுத்தேன்னு சொல்லி என்னை அடித்து வீட்டில் இருந்து வெளியே அனுப்பிட்டாங்க க்கா நீங்க என்னைப் பார்த்த அந்த தெருவில் தான் ராத்திரி முழுவதும் இருந்தேன் காலையில் பசிக்கவும் எழுந்து இந்த பக்கமாக நடந்து வந்தேன் அப்போ தான் இந்த பசங்க வம்பிழுக்க ஆரம்பித்தாங்க”
தன் சிறு வயது அனுபவங்களையும் ஒரு முறை எண்ணி பார்த்தவள் தன்னை போன்று, நர்மதாவைப் போன்று இன்னும் எத்தனை பேர் இப்படி அநாதரவாக தெருவில் நிற்கின்றார்களோ என எண்ணி கலங்கிப் போய் அமர்ந்திருந்தாள்.

“நீங்க மட்டும் சரியான நேரத்தில் அந்த இடத்திற்கு வரலேன்னா எனக்கு என்ன நடந்து இருக்கும்னே தெரியலக்கா” மீண்டும் நர்மதாவின் கண்கள் கலங்க ஆரம்பிக்க தன் தோளோடு அவளை அணைத்து கொண்ட மேக்னா

“ப்ச்! அழக்கூடாது நர்மதா நம்மளை இன்னைக்கு தாழ்வாக பார்க்குறவங்க முன்னாடி தான் நம்ம தைரியமாக வாழ்ந்து வாழ்க்கையில் ஏதாவது சாதிக்கணும் அதற்கு என்ன பண்ணணும்னு யோசிக்காமல் அதை விட்டுட்டு இப்படி இருந்து கண்ணை கசக்கலாமா?” அவளது கண்களை துடைத்து விட்டபடியே அவளைப் பார்த்து கேட்டாள்.

“எனக்கு என்ன பண்ணணும்னே தெரியலை அக்கா ஸ்கூலிற்கும் இனி போக முடியாதே!”

“யாரு சொன்னா? அதெல்லாம் நீ போவ ஆமா நீ என்ன கிளாஸ் படிக்குற?”

“எட்டாவது க்கா”

“சரி இன்னையில் இருந்து உனக்கு யாரும் இல்லைன்னு இல்லை உனக்கு அம்மா, அப்பா ஒரு அக்கா இருக்கோம்”

“அக்கா!” நர்மதா ஆச்சரியமாக மேக்னாவை நோக்க அவளை பார்த்து புன்னகைத்து கொண்டவள் ஆமோதிப்பாக தலை அசைத்தாள்.

“ஆனா அக்கா!”

“என்னம்மா திடீர்னு வந்து பேசிட்டு இப்போ கூடவே கூட்டிட்டு போறேன்னு சொல்லவும் பயப்படுறியா?”

“…….”

“புரியுது ம்மா நானும் உன்னை மாதிரி இருந்து தான் வந்தேன் நானும் ஆரம்பத்தில் சட்டுன்னு யாரையும் நம்பமாட்டேன் அதனால நீ என்ன மனநிலையில் இருப்பேன்னு எனக்கு தெரியும் நர்மதா நீ பசிக்குதுன்னு சொன்ன இல்லையா? முதலில் போய் சாப்பிடலாம் அப்புறமாக என்ன பண்ணுறதுன்னு பார்ப்போம் சரியா? வா இப்போ போகலாம்” தனக்கு உதவி செய்தவர் தன்னை எந்த கெடுதலிலும் சிக்க வைக்க மாட்டார் என்று நம்பியதால் என்னவோ நர்மதா மேக்னாவை பின் தொடர்ந்து சென்றாள்.

தன் வீட்டிற்கு அவளை அழைத்து சென்றவள் வள்ளி மற்றும் நடராஜனிடம் அவளைப் பற்றி மேலோட்டமாக கூறி இருக்க அவர்களும் மனம் வருந்தி அவளை நன்றாக உபசரித்தனர்.

தாய், தந்தை மற்றும் உடன்பிறந்தோர் அன்பிற்காக வெகு நாட்களாக ஏங்கி இருந்த நர்மதா ஒரு சில மணி நேரம் கிடைத்த அவர்களது அன்பில் வெகுவாக மனம் இளகிப் போனாள்.

தங்கள் வீட்டில் இருந்த நேரமே ராணியிடம் தொடர்பு கொண்டு நர்மதா பற்றி மேக்னா கூறி இருக்க அவரும் தான் இருக்கும் இடத்திற்கு அவளை அனுப்பி வைக்குமாறு கூறி இருந்தார்.

நர்மதாவிற்கு பாதுகாப்பான ஒரு வதிவிடம் கிடைத்த திருப்தியோடு அந்த செய்தியை மேக்னா எல்லோரிடமும் பகிர்ந்து கொள்ள நர்மதா மாத்திரம் அதை கேட்டு முகம் வாடிப் போனாள்.

“என்னாச்சு நர்மதா?” நர்மதாவின் முக வாட்டத்தைப் பார்த்து மனம் தாளாமல் வள்ளி அவள் தோளில் கை வைத்து கேட்க அவளோ எதுவும் இல்லை என கூறி விட்டு தலை குனிந்து கொண்டாள்.

“சரி ம்மா நாளைக்கு காலையில் ராணி ம்மா ஆளு அனுப்புறேன்னு சொன்னாங்க அது வரை நர்மதா?”

“இங்கேயே இருக்கட்டும் மேக்னா சின்ன பொண்ணை வேறு எங்கேயும் அனுப்ப முடியாதே! ராத்திரி மட்டும் தானே இருக்கட்டும்” நடராஜன் கூறியதை கேட்ட மேக்னா தயக்கத்துடன் நர்மதா என்ன சொல்லுவாளோ என்று எண்ணி அவளைத் திரும்பி பார்க்க அவள் முகத்திலோ அளவில்லா மகிழ்ச்சி தாண்டவமாடியது.

அவளது முக மாற்றத்தை எல்லாம் மனதிற்குள் எண்ணி பார்த்து புன்னகைத்து கொண்டவள் வள்ளிக்கு வீட்டு வேலைகளை செய்யும் தன் பணியை ஆரம்பித்தாள்.

இயல்பாக பேசிக் கொண்டே மேக்னா வேலைகளை பார்க்கத் தொடங்க வள்ளி மற்றும் நடராஜனும் அவளுடன் இணைந்து அளவளாவிக் கொண்டு வேலைகளை செய்து கொண்டிருந்தனர்.

தான் இத்தனை நாட்களாக இருந்த இடத்திற்கும் இப்போது இருக்கும் இடத்திற்கும் வெகுவாக வித்தியாசம் இருப்பதை பார்த்து மலைத்துப் போன நர்மதா மேக்னாவை எண்ணி வியந்து போனாள்.

காலையில் தனக்காக அத்தனை நபர்களை அடித்து துவம்சம் செய்ததும் இவளும் வேறு வேறோ என்று கூட அவளுக்கு சிறு சந்தேகம் எழாமல் இல்லை.

வெகு நாட்களுக்குப் பின்னர் மனம் நிம்மதியாக உணர அந்த புதிய இடத்தில் நர்மதா சந்தோசமாக கண்ணயர்ந்தாள்.

மறுபுறம் என்னவென்று தெரியாத உணர்வில் மேக்னா தவித்து கொண்டிருக்க அவளது மனமோ ஏதோ ஒரு தவறான செயல் நடக்க காத்திருக்கிறது என அவளை எச்சரித்துக் கொண்டே இருந்தது.

இரவு வெகு நேரமாகியும் தூக்கம் வராமல் தவித்து கொண்டிருந்தவள் தன் அறையில் இருந்த ஜன்னலை திறந்து விட்டு அதனருகில் அமர்ந்த வண்ணம் இரவு வானை சிறிது நேரம் பார்த்து கொண்டு இருந்தாள்.

அடுத்து என்ன செய்வது என்று தெரியாமல் தன் வாழ்க்கையை எண்ணி கவலையுடன் அமர்ந்திருந்தவள் தன்னை மறந்து அப்படியே உறங்கியும் போனாள்.

காலையில் பேச்சு சத்தமும், சிரிப்பு சத்தமும் நிறைந்து இருக்க அந்த சத்தம் கேட்டு தூக்கம் கலைந்து எழுந்து அமர்ந்த மேக்னா அப்போதுதான் தான் இருந்த நிலையிலேயே உறங்கி இருப்பதை உணர்ந்தாள்.

வீட்டின் முற்றத்தில் விடாமல் கேட்டு கொண்டிருந்த பேச்சு சத்தம் கேட்டு தன்னறைக்குள் இருந்து வெளியே வந்தவள் அங்கே வள்ளியுடன் சகஜமாக பேசிக் கொண்டிருந்த நர்மதாவைப் பார்த்து புன்னகைத்து கொண்டே அவர்கள் அருகில் வந்து அமர்ந்து கொண்டாள்.

“என்ன நர்மதா மேடம் இப்போ தான் வாய்ப்பூட்டு திறக்க சாவி கிடைத்ததோ?” நர்மதாவின் தோளில் தன் தோளால் இடித்துக் கொண்டே மேக்னா கேட்க

புன்னகையுடன் அவளைத் திரும்பி பார்த்தவள்
“அது இரண்டு நாளாக கொஞ்சம் சாப்பிடாததால் அமைதியாக இருக்க வேண்டியதாக போச்சு ஆனா நேற்று அம்மா சாப்பாட்டை சாப்பிட்ட பிறகு பழைய சக்தி வந்தாச்சுலே” கண்ணடித்துக் கொண்டே கூற

“அடிப்பாவி! அம்மா இவ நம்மளையே மிஞ்சிடுவா போல!” பதிலுக்கு அவளும் புன்னகைத்து கொண்டாள்.

“உனக்கு ஏற்ற ஆளு தான்!” வள்ளி சிரித்துக் கொண்டே கூற

“அம்மா!” போலியாக அவரை முறைத்து பார்த்தவள் நர்மதாவின் புறம் திரும்பி

“நீயும் அம்மா கூட கூட்டணியா?” என்று கேட்க

“அய்யோ! அக்கா! நான் அப்படி சொல்லுவேனா?” அவசரமாக மறுப்பாக தலை அசைத்தவள்

“அம்மா தான் என் கூட கூட்டணி” என்று விட்டு சிரிக்க அவளது சிரிப்பை பார்த்து மேக்னாவும், வள்ளியும் மனம் நிறைந்து போய் இருந்தனர்.

“சரி ம்மா நான் போய் குளித்து ரெடி ஆகிட்டு வர்றேன் நர்மதாவைக் கூட்டிட்டு போக ராணி ம்மா ஆளு அனுப்புறேன்னு சொன்னாங்க இல்லை நீயும் ரெடி ஆகு நர்மதா” என்று விட்டு மேக்னா எழுந்து கொள்ள அதை கேட்ட நர்மதாவோ முகம் வாட அமர்ந்திருந்தாள்.

அவளது முக வாட்டத்தை தாளாமல்
“என்னாச்சு நர்மதா?” என்றவாறே வள்ளி அவள் தோளில் கை வைக்க

சிறு கேவலுடன் அவரை அணைத்து கொண்டவள்
“நா…நான் இங்கே…இங்கேயே இருக்கட்டும்மாம்மா? எனக்கு அம்மா, அப்பா, அக்கா எல்லோரும் வேணும்” அழுகையினூடு தேம்பி தேம்பி கூற மேக்னாவோ இதழ்கள் விரிய அவளை மறுபுறம் வந்து அணைத்துக் கொண்டாள்.

“நர்மதா! உனக்கு எத்தனை தடவை சொல்லுறது? அழக்கூடாது ம்மா கண்ணைத் துடை இப்போ என்ன? நீ இங்கேயே இருக்கணும் அது தானே அதை சொன்னா சரி தானே அதை விட்டுட்டு எதற்கு அழற?” மேக்னாவின் கேள்வியில் தன் அழுகையை நிறுத்திவிட்டு அவளை ஆச்சரியமாக பார்த்தவள்

“உண்மையாகவா அக்கா?” என்று கேட்க

அத்தனை நேரமாக அவர்கள் பேசுவதை அமைதியாக கேட்டு கொண்டிருந்த நடராஜனும்
“எங்களுக்கு இப்போ இருந்து நர்மதா, மேக்னான்னு இரண்டு பொண்ணுங்க வரப்போறாங்க இல்லையா வள்ளி?” எனக் கேட்க

“அக்கா!” என்று ஆரவாரத்துடன் நர்மதா அவளை அணைத்துக் கொண்டாள்.

தாங்கள் பெற்று வளர்த்த தங்கள் ஒரே மகள் தங்களை விட்டு சென்ற பின்னர் இனி தங்களுக்கு இந்த வாழ்க்கையில் எதுவுமே இல்லை என்று எண்ணி இருக்க கடவுள் இரண்டு குழந்தைகளை தங்களுக்கு பரிசாக தந்ததாக எண்ணி அந்த பெரியவர்கள் இருவரும் அகமகிழ்ந்து போயினர்.

சந்தோஷம் என்பது அந்த குடும்பத்திற்கே நிலையில்லாததால் என்னவோ அடுத்த கட்ட சோதனை அந்த கணமே அவர்களுக்கு ஆரம்பித்தது.

எல்லோரும் சந்தோசமான மனநிலையில் லயித்து இருக்க அந்த நேரம் பார்த்து அவர்கள் வீட்டு வாயில் கதவும் தட்டப்பட்டது.

“யாருப்பா?” மேக்னாவின் கேள்வியில் வாயிலை நோக்கி நடந்து சென்ற நடராஜன் அங்கே நின்று கொண்டிருந்த காவல் அதிகாரியை பார்த்து அதிர்ந்து போய் நிற்க

தனது கேள்விக்கு பதில் சொல்லாமல் நிற்பவரைப் பார்த்து குழப்பத்துடன்
“யாருப்பா? என்ன ஆச்சு?” என்றவாறு மேக்னாவும் அந்த இடத்திற்கு வந்து சேர்ந்தாள்.

“போலீஸா!?” அதிர்ச்சியாக நடராஜனையும், அந்த காவல் அதிகாரியையும் திரும்பி பார்த்த மேக்னா

“எ…என்…என்ன விஷயம் ஸார்?” என்று கேட்க

“இங்கே மேக்னா யாரு?” அந்த அதிகாரி கேள்வியாக அவர்களை நோக்கினார்.

“நா…நான் தான்!”

“ஓஹ்! உங்க மேல ஒரு கம்ப்ளெயிண்ட் இருக்கு கொஞ்சம் ஸ்டேஷனுக்கு வாங்க”

“கம்ப்ளெயிண்டா? என்ன ஸார் சொல்லுறீங்க? என் பொண்ணு என்ன தப்பு பண்ணா?” நடராஜன் பதட்டத்துடன் வினவ

“தப்பா? உங்க பொண்ணு நேற்று காலையில் நடு ரோட்டில் வைத்து ஐந்து பசங்களை அடித்து துவம்சம் பண்ணி இருக்காங்க அதில் ஒருவன் இந்த ஏரியா எம்.எல்.ஏவின் தம்பி அவர் தான் கம்ப்ளெயிண்ட் பண்ணி இருக்காரு உங்க வீட்டை தேடி வர்றதுக்கே ஒரு நாள் ஆயிடுச்சு சரி சரி சீக்கிரம் வாம்மா” அந்த காவல் அதிகாரி மேக்னாவை ஆராய்ச்சியாகப் பார்த்து கொண்டே கூறினார்.

“என்ன மேக்னா இது எல்லாம்?” நடராஜன் கவலையுடன் மேக்னாவை பார்க்க

“நீங்க எதற்கும் பயப்பட வேண்டாம்பா நான் போயிட்டு வர்றேன் அம்மாவையும், நர்மதாவையும் பார்த்துக்கோங்க” என்றவள்

“போகலாம் ஸார்” என்று விட்டு அந்த காவல் அதிகாரியை பின் தொடர்ந்து சென்றாள்.

தங்கள் வீட்டில் இருந்து சிறிது தூரம் நடந்து சென்ற பின்னர்
“இன்ஸ்பெக்டர் ஸார்” தயக்கத்துடன் அந்த காவல் அதிகாரியை மேக்னா அழைக்க

“என்ன?” அவர் கேள்வியாக அவளை நோக்கினார்.

“அந்த எம்.எல்.ஏ பேரு என்ன ஸார்? அவர் எங்கே இருப்பாரு?”

“எதற்கு?”

“என் மேல கம்ப்ளெயிண்ட் பண்ண ஆளோட பேரு, ஊரைக் கூட நான் தெரிந்து கொள்ள கூடாதா ஸார்?” மேக்னாவின் கேள்வியில் அவளை ஏற இறங்கப் பார்த்தவர்

“எம்.எல்.ஏ தனபாலன்” என்று கூற அந்த பெயரை கேட்டதுமே அவளது சப்த நாடிகளும் நடுங்கி போனது.

‘தனபாலன்’ அந்த பெயரை மீண்டும் தனக்குள் ஒரு முறை கூறி கொண்டவள் மனமோ தங்கள் ஆசிரமத்தில் நடந்த பழைய நினைவுகளை எல்லாம் எண்ணி பார்த்து வேக வேகமாக அடுத்த கட்ட நடவடிக்கைகளை திட்டம் போடத் தொடங்கியது.

‘யாரை சந்திக்க கூடாதுன்னு இருந்தேனோ அந்த ஆளு தம்பியையே அடித்து இருக்கேனா? இப்போ என்ன பண்ணுறது?’ அவசரமாக தனக்குள் சிந்தித்தவள்

“அவ…அவர் இப்போ எங்கே ஸார் இருப்பாரு?” தயக்கத்துடன் தன் முன்னால் சென்ற காவல் அதிகாரியைப் பார்த்து வினவ

அவரோ
“எதற்கு?” கேள்வியாக அவளை நோக்கினார்.

“இல்லை அவங்க கிட்ட பேசி கம்ப்ளெயிண்டை வாபஸ்…”

“யாரு? நீ பேசி அந்த கம்ப்ளெயிண்டை எம்.எல்.ஏவை வாபஸ் வாங்க வைக்கப் போறியா?” கேலியாக சிரித்துக் கொண்டே அவர் அவளை பார்த்து கேட்க

அவளோ
“ப்ளீஸ் ஸார்!” கண்கள் கலங்க அவரைப் பார்த்து கொண்டு நின்றாள்.

அவளது கலங்கிய முகத்தை பார்த்து அவர் பரிதாபம் கொண்டதாலோ என்னவோ சிறிது தயக்கத்துடன் சுற்றிலும் ஒரு தடவை பார்த்தவர்
“அவர் ரொம்ப பெரிய ஆளு ம்மா நீ போய் பேசி அந்த ஆளு கேட்கப் போறதும் இல்லை அதோடு நீ அடித்தது அந்த ஆளு தம்பியை வேற சும்மா விடுவானா அந்த ஆளு? இப்போ எங்கே எந்த கட்டப்பஞ்சாயத்து நடத்திட்டு இருப்பான்னே தெரியாது அந்த ஆளு ஆபிஸில் தான் போய் பார்க்கணும் அதெல்லாம் அவ்வளவு இலேசான வேலை இல்லை ம்மா” என்றவாறே முன்னால் நடந்து செல்ல அவளோ அவர் கூறியதை கேட்டு சிறு புன்முறுவலுடன் அந்த இடத்திலேயே நின்றாள்.

“வண்டியில் ஏறும்மா” மேக்னா தன் பின்னால் நிற்பதாக எண்ணிக் கொண்டு அந்த காவல் அதிகாரி கூற சிறிது நேரம் அந்த இடத்தில் எந்த சத்தமும் வரவில்லை.

மேக்னா வண்டியில் ஏறியதற்கான எந்த மாற்றமும் இல்லாமல் இருக்கவே குழப்பம் கொண்டவர் அவள் நின்ற இடத்தை திரும்பி பார்க்க அந்த இடமோ வெற்றிடமாக மாறி இருந்தது……

error: Content is protected !!