மேக்னா கொடுத்த டைரிகளில் இறுதியாக எஞ்சியுள்ள ஒரு டைரியை மட்டும் சித்தார்த் தன் கையில் வைத்துக் கொண்டு இருக்கையில் சாய்ந்து அமர்ந்தவாறே கண்களை மூடியிருந்தான்.

மேக்னா தனது அத்தை மகள் என்று தெரிந்த பின் அவனது மனதிற்குள் பெரும் சூறாவளி ஒன்று அடித்து ஓய்ந்திருந்தது.

ஆரம்பித்தில் அவளை பார்த்த போது அவளைப் பற்றி தெரிந்து கொள்ள வேண்டும் என்று தன் மனதிற்குள் எழுந்த ஈர்ப்பு ஒரு வேளை அவள் தனது உறவு என்பதனால் இருக்குமோ என்ற எண்ணம் அவனிற்குள் மெல்ல தலை தூக்க அவனது மனமோ
‘உனக்கு அத்தை ஒருவர் இருக்கும் விஷயமே இன்று காலையில் தானே தெரியும்! அப்படி இருக்கும் போது மேக்னாவை ஆரம்பித்தில் பார்த்த போது இந்த எண்ணம் உருவாக வாய்ப்பில்லையே!’ அவசரமாக அவனுக்கு உண்மை நிலையை எடுத்துரைக்க தவறவில்லை.

‘ஒருவேளை விட்டு போன உறவை கண்டுபிடித்து கொடுப்பதற்காக கடவுள் செய்த வேலையாக இருக்கக்கூடுமோ? அப்படி இருந்தாலும் மேக்னாவை இந்த நிலையிலா நான் சந்திக்க வேண்டும்? அவளது இந்த நிலையை பற்றி எப்படி நான் அம்மாவிடம் கூறுவது? அது மட்டுமில்லாமல் அப்பா ஏற்கனவே அத்தையை பற்றி பேச ஆரம்பித்தால் கோபப்படுவார் என்று அம்மா சொல்லி இருக்கிறார் இந்த நிலையில் மேக்னாவை பற்றி சொன்னால் அப்பா நிச்சயமாக அவள் இருக்கும் பக்கமே நம்மை செல்ல விட மாட்டார் இப்படி பல சிக்கலான சூழலில் என்னை சிக்க வைத்து விட்டாளே இந்த மேக்னா! எல்லாம் அவளால் தானே!’ சித்தார்த் தன் மனதிற்குள் மேக்னா மீது தான் தப்பு இருப்பதை போல நினைத்து தனக்குள் பேசி கொண்டிருக்க அவன் மனது ஏனோ தானாகவே தான் அவள் அவனைத் தேடி சென்றான் என்பதை நினைவு படுத்த மறந்தது.

‘இந்த ஒரு டைரியை மட்டும் படித்து முடித்தால் போதும் மேக்னா பற்றிய எல்லா விடயங்களும் எனக்கு தெரிந்து விடும் அதற்கு பிறகு அவளுக்கு உதவ செய்வதா? வேண்டாமா? என்று யோசிக்கலாம்’ தன் கையில் இருந்த டைரியை முன்னும் பின்னும் திருப்பி திருப்பி பார்த்துக் கொண்டவன் பெருமூச்சு ஒன்றை விட்டுக் கொண்டே அந்த இறுதி டைரியை பிரித்து படிக்கத் தொடங்கினான்.

***************************************

நர்மதாவை நீலகிரியில் ஒரு பாதுகாப்பான இடத்தில் விட்டு விட்டு மேக்னாவும் அவளுடன் இருந்த மற்ற இரு நபர்களும் சென்னையை நோக்கி திரும்பி வந்து கொண்டிருக்கையில் வள்ளியிடம் இருந்து அவளுக்கு அழைப்பு வந்து கொண்டே இருந்தது.

அந்த அழைப்புக்கான காரணம் அவளுக்கு தெரிந்து இருந்தாலும் அவளது உடலில் இருக்கும் தயக்கமும், அச்சமும் தன் குரல் மூலமாக அவருக்கு உண்மையை உணர்த்தி விடுமோ என்ற அச்சத்தில் அவரது அழைப்பை எடுக்க விடாமல் அவளை இழுத்துப் பிடித்து வைத்திருந்தது.

சென்னைக்கு வெகு அருகில் வந்ததும் சிறிது தைரியத்தை வரவழைத்துக் கொண்டு அவரது அழைப்பை மேக்னா எடுக்க மறுபுறம் பதட்டத்துடன் வள்ளியின் குரல் ஒலிக்க ஆரம்பித்தது.

“மேக்னா! எங்கே ம்மா போயிட்டா? உனக்கு எவ்வளவு நேரமாக போன் பண்ணிட்டே இருக்கேன் ஏன் ம்மா நீ எடுக்கல? நம்ம நர்மதாவை காணோம் மேக்னா ஸ்கூல் முடிந்து ரொம்ப நேரம் ஆச்சு இந்த பொண்ணு இன்னும் வீடு வந்து சேரல மறுபடியும் யாரும் வம்பு பண்ணிட்டாங்களோ அதுவும் தெரியல உங்க அப்பாவும் அவ பிரண்ட்ஸ் வீட்டுக்கு எல்லாம் போய் விசாரித்து பார்த்துட்டாரு யாருக்கும் தெரியலைன்னு சொல்லிட்டாங்க! எனக்கு ரொம்ப பயமாக இருக்கு ம்மா மேக்னா! நீ கொஞ்சம் சீக்கிரம் வீட்டுக்கு வாம்மா”

“அம்மா! அம்மா! ப்ளீஸ் கொஞ்சம் பதட்டப்படாமல் இருங்க நான் வீட்டுக்கு தான் வந்துட்டு இருக்கேன் நான் வந்து என்ன ஆச்சுன்னு பார்க்குறேன் அது வரைக்கும் ப்ளீஸ் கொஞ்சம் பதட்டப்படாமல் இருங்க ம்மா ப்ளீஸ்! ப்ளீஸ்!”

“நீ கொஞ்சம் சீக்கிரமாக வா மேக்னா!”

“இன்னும் ஐந்து நிமிஷத்தில் நான் வீட்டில் இருப்பேன் ம்மா நீங்க பதட்டப்படாமல் இருங்க நான் வந்துடுறேன் அப்பாவையும் கொஞ்சம் பார்த்துக்கோங்க ம்மா அவங்க ரொம்ப டென்ஷன் ஆகக் கூடாதுன்னு டாக்டர் சொல்லி இருக்காங்க இல்லையா? கொஞ்சம் பார்த்துக்கோங்க ம்மா நான் வந்துடுறேன்” தன்னால் முடிந்த மட்டும் தொலைபேசி வழியாக வள்ளியை ஆறுதல் படுத்தியவள் அடுத்து என்ன செய்வது என்று வேகமாக திட்டம் தீட்டத் தொடங்கினாள்.

வீட்டிற்கு செல்லும் வழியில் போலீஸ் ஸ்டேஷனுக்கு சென்று நர்மதா காணாமல் போனதாக கம்ப்ளெயிண்ட் செய்தவள் வள்ளி மற்றும் நடராஜனுடன் சேர்ந்து தங்களுக்கு தெரிந்த இடமெல்லாம் நர்மதாவைத் தேடும் பணியில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டாள்.

அவளுடனிருந்தோர் எல்லாம் உண்மையாகவே நர்மதா தொலைந்து போய் விட்டதாக எண்ணி இருக்க அவளுக்கு மாத்திரமே அந்த காணாமல் போன சம்பவத்தின் பின்னணி தெரிந்து இருந்தது.

வெளியாட்களுக்கு முக்கியமாக காவல் துறையினருக்கு தன் மேல் சந்தேகம் வராமல் பார்த்து கொண்டவள் அதை தொடர்ந்து கடைப்பிடித்து கொண்டும் வந்தாள்.

இதற்கிடையில் இந்த விஷயம் தனபாலனுக்கும் தெரிந்து இருக்க அவளை தனியாக அழைத்து பேசியவர்
“தொழிலுக்காக சொந்த தங்கச்சியையே இல்லை இல்லை வளர்ப்பு தங்கச்சியையே ஊரு விட்டு ஊரு கடத்தி இருக்க உன் கிட்ட கொஞ்சம் ஜாக்கிரதையாக தான் இருக்கணும்” நக்கல் கலந்த தொனியில் கூற

தன் கைகளை கட்டிக் கொண்டு அவரை கூர்மையாக பார்த்தவள்
“எனக்கு ஒரு விஷயம் தேவையென்று தெரிந்தால் அதை எந்த எல்லைக்கு போய் என்றாலும் கொண்டு வருவேன் அதேமாதிரி எனக்கு ஒரு விஷயம் தடையாக இருந்தால் அதை என் வழியில் இருந்து அகற்ற என்ன வேணும்னாலும் பண்ணுவேன் அதில் சொந்தமோ, நட்போ ஏன் கடமையோ எதுவும் எனக்கு அவசியமில்லை அதைப் பற்றி எனக்கு அக்கறையும் இல்லை” என்றவாறே அவரை மேலிருந்து கீழாக அலட்சியமாக பார்த்து விட்டு அந்த இடத்தில் இருந்து அகன்று செல்ல அவருக்கோ அவளது பார்வையில் உடல் சிலிர்த்து போனது.

”என்ன மாதிரியான பார்வை இது? எனக்கு கீழே வேலை பார்க்கத் தொடங்கி இத்தனை மாதத்தில் இவ கிட்ட இருந்து இப்படி ஒரு மாற்றத்தை நான் பார்க்கலயே! ஒரு வேளை நான் தான் இவளை ஆரம்பித்தில் சரியாக கவனிக்காமல் விட்டு விட்டேனோ?” மேக்னாவின் ஒரு கூர்மையான பார்வைக்கே தனபாலனின் உள்ளம் பல குழப்பங்களால் சூழ்ந்து தறிகெட்டு ஓட ஆரம்பித்தது.

மேக்னா தனது அலுவலகத்தில் சேர்ந்ததற்கு பிறகு நடந்த ஒவ்வொரு விடயங்களையும் மீட்டிப் பார்த்தவர் ஆரம்பித்தில் தனது கட்சி மற்றும் அரசாங்கத்திற்கு எதிராக தான் சேர்ந்த வேலைகள் இருந்த நிலைக்கும் இப்போது இருக்கும் நிலைக்கும் இடையிலான வித்தியாசத்தை பார்த்து ஒரு கணம் உறைந்து போனார்.

”எதிரியை கூடவே வைக்கணும்னு சொல்லி பெரிய தப்பு பண்ணிட்டேனா?” தாமதமாக தோன்றிய ஞானோதயத்தில் தனபாலன் குழம்பி போய் நிற்க

அவரது குழப்பமான முகத்தையும், தடுமாற்றத்தையும் மறைவாக நின்று பார்த்து கொண்டு நின்ற மேக்னா தன் மனதிற்குள்
‘தனபாலனுக்கு இப்போ தான் உண்மை தெரிய ஆரம்பிக்குது போல! அப்போ இனி தான் நான் என் வேலையை ஆரம்பிக்கணும் முதலில் நர்மதாவை நீலகிரியில் இருந்து வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும்’ என்று எண்ணிக் கொண்டே அங்கிருந்து தன் மற்றைய வேலைகளை கவனிக்கத் தொடங்கினாள்.

மறுபுறம் வள்ளி மற்றும் நடராஜன் நர்மதா இல்லாமல் போனதை எண்ணி நாளுக்கு நாள் மனதிற்குள்ளேயே வருந்த ஆரம்பித்து இருக்க அவர்களது வருத்தம் மேக்னாவிற்கு புரியாமல் இல்லை.

இருந்தாலும் நர்மதாவைப் பற்றி மாத்திரம் அவர்களிடம் கூறலாம் என்று எண்ணியவள் ஒரு விடயத்தைப் பற்றி கூற ஆரம்பித்து அதன் பிறகு தன்னை பற்றி எல்லா உண்மைகளையும் கூற வேண்டி வருமோ என்ற அச்சத்தில் அந்த முயற்சியையும் கை விட்டு இருந்தாள்.

தனபாலன் ஒரு புறம் தன் தொழிலையும், அரசியல் பதவியையும் காப்பாற்றிக் கொள்ள வேண்டும் என்ற நிலையில் மூழ்கி இருக்க மறுபுறம் மேக்னாவோ அவரது சாம்ராஜ்யத்தையும், அவரையும் கூண்டோடு அழிக்க வேண்டும் என்ற எண்ணத்தோடு அதற்கு ஏற்ற நாளை எதிர்பார்த்து காத்திருந்தாள்.

இதற்கிடையில் வள்ளி மற்றும் நடராஜன் மேக்னாவின் நடவடிக்கைகளில் சிறிது மாற்றம் இருப்பதை போல தோன்றவே அதைப் பற்றி அவளிடம் பேச சரியான தருணத்தை எதிர்பார்த்துக் காத்திருந்தனர்.

அன்று வழக்கம் போல மேக்னா தனது வேலை முடிந்து வீட்டிற்கு வந்த நேரம் வள்ளியும், நடராஜனும் வீட்டுத் திண்ணையில் அமர்ந்து ஏதோ மும்முரமாக பேசிக் கொண்டிருந்தனர்.

“என்ன ஏதோ பலமான கலந்துரையாடல் நடக்குது போல!” புன்னகையுடன் கேட்டு கொண்டே வந்தவளைப் பார்த்து சட்டென்று அவர்கள் இருவரும் அமைதியாகிப் போகவும்

“என்ன சத்தத்தையே காணோம்?” மேக்னா கேள்வியாக அவர்களை நோக்க அவர்கள் இருவரும் சிறிது தயக்கத்துடன் ஒருவரை ஒருவர் திரும்பி பார்த்துக் கொண்டனர்.

“அம்மா! அப்பா! என்ன ஆச்சு?” வள்ளி மற்றும் நடராஜனுக்கு நடுவில் அமர்ந்து கொண்டவாறே மேக்னா அவர்களை பார்க்க அவர்கள் இருவரிடம் இருந்து அவளது கேள்விகளுக்கு எந்த பதிலும் வரவில்லை.

அவர்கள் இருவரையும் சற்று குழப்பத்துடன் பார்த்தவள் வள்ளியின் புறம் திரும்பி
“அம்மா! என்னம்மா ஆச்சு?” என்றவாறே அவரது தோளில் கை வைக்கப் போக அவரோ சற்று விலகி அமர்ந்து கொண்டு தன் தலையை குனிந்து கொண்டார்.

அவரது அந்த ஒதுக்கம் அவள் மனதிற்குள் ஒருவிதமான அச்ச உணர்வை ஏற்படுத்த நடராஜன் புறம் திரும்பியவள் கண்களால் என்னவென்று கேட்க அவரும் பதில் எதுவும் பேசாமல் தன் தலையை குனிந்து கொண்டார்.

“அம்மா! அப்பா! உங்க இரண்டு பேருக்கும் என்ன ஆச்சு? எதற்கு இப்படி இரண்டு பேரும் அமைதியாக இருக்கீங்க? நான் ஏதாவது தப்பு பண்ணிட்டேன்னா அதையாவது சொல்லுங்க” கெஞ்சலாக கேட்ட படி தன் கரத்தை பற்றி கொண்டவளை நிமிர்ந்து பார்த்த நடராஜன் தன் சட்டைப் பாக்கெட்டில் இருந்து ஒரு கவரை எடுத்து அவளின் புறம் நீட்டினார்.

“என்ன இது?” சிறு குழப்பத்துடன் அதை வாங்கிக் கொண்டு பிரித்து பார்த்தவள் கண்களோ அதிர்ச்சியில் ஒரு கணம் அந்த காகிதத்திலேயே நிலை குத்தி நின்றது.

அந்த காகிதத்தில் நீலகிரியில் ஒரு ஆசிரமத்தில் நர்மதாவை சேர்த்ததற்கான
கட்டணம் அறவிடப்பட்டது பற்றி எழுதப்பட்டிருக்க அதை அவள் தன் அறையிலேயே மறந்து வைத்து விட்டு சென்று இருந்தது இப்போது தான் அவளுக்கு நினைவுக்கு வந்தது.

“அம்மா! இது…உங்க…எப்படி?”

“உன் ரூமை அன்னைக்கு ஒரு நாள் சுத்தம் பண்ணும் போது உன் மேஜையில் இருந்த புத்தகத்தில் இருந்து விழுந்தது” வள்ளி வேறு எங்கோ பார்த்த வண்ணம் அவளது தடுமாற்றத்துடன் கூடிய கேள்விக்கு பதிலளிக்க அவளது மனமோ எதுவோ நடக்க கூடாது நடக்க இருக்கிறது என்பது போல அவளை எச்சரிக்க ஆரம்பித்தது.

“அம்மா! அது…நான்…”

“ஏன்? ஏன் மேக்னா இப்படி பண்ண? நர்மதா நம்ம எல்லோரையும் நம்பி தானே வந்தா அவளை உனக்கு இந்த வீட்டில் வைத்து இருக்க விருப்பமில்லைன்னா அன்னைக்கு ஆரம்பித்திலேயே அவளை ஆசிரமத்திற்கு அனுப்பி இருக்கலாமே? இத்தனை நாள் பாசத்திற்கு ஏங்கி இருந்த எங்களையும், அவளையும் பழக வைத்து விட்டு இப்படி திடீர்னு எங்களைப் பிரிச்சுட்டியே!

ஏன் மேக்னா? ஏன்? அன்னைக்கு நர்மதாவை காணோம்னு சொன்னப்போ கூட எதுவுமே தெரியாத மாதிரி நடந்துகிட்டியே எதற்காக இதெல்லாம் பண்ண? அந்த குழந்தை மனதில் குடும்பம்னு ஒரு ஆசையை காட்டிட்டு இப்படி அனாதை ஆக்கிட்டியே மேக்னா!” நடராஜன் ஆதங்கமாக பேச ஆரம்பித்து வருத்தத்துடன் முடிக்க மேக்னாவின் மனதிற்குள்ளோ குற்றவுணர்ச்சி எழ ஆரம்பித்தது.

“உனக்கு நர்மதா என்ன விஷயத்தில் கெடுதல் பண்ணா மேக்னா? திடீர்னு அந்த பொண்ணை ஆசிரமத்தில் விடுற அளவுக்கு என்ன நடந்தது? அதுவும் எங்க கிட்ட கூட சொல்ல முடியாத அளவுக்கு என்ன ஆச்சு?” தன் கேள்விக்கு என்ன பதில் சொல்வது எனப் புரியாமல் கையை பிசைந்து கொண்டு அமர்ந்திருந்தவள் முகத்தை பற்றி தன் புறம் திருப்பிய வள்ளி

“எதற்காக இந்த நாடகம் மேக்னா? உண்மையை சொல்லு” சற்று அதட்டலான குரலில் கேட்க அவள் கண்களோ சட்டென்று கலங்கி போனது.

“அம்…அம்மா நா…நான் வேணும்…ன்னு எல்லாம் பண்ணல ம்மா” திக்கித்திணறி பேசியவளை முறைத்து பார்த்தவர்

“எதற்காக நர்மதாவிற்கு இந்த வேலையை பண்ண சொல்லு?” என்று கேட்க

அவளோ மறுப்பாக தலை அசைத்து விட்டு
“அதை மட்டும் கேட்க வேணாம்மா ப்ளீஸ்! நர்மதா எனக்கு தங்கச்சி அவளை அப்படி நான் கைவிட மாட்டேன்ம்மா என்னை நம்புங்க” என்று கெஞ்சலாக கூறவும் வள்ளி கோபமாக அங்கிருந்து எழுந்து கொண்டார்.

“அம்மா ப்ளீஸ்! இப்படி என் மேல் கோபப்பட வேணாம்மா ப்ளீஸ் நீங்க என் மேல கோபப்பட்டால் நான் எங்கேம்மா போய் சொல்லுவேன்?” கண்ணீர் மல்க மேக்னா அவர் கைகளை பற்றி கொள்ள

அவளின் புறம் திரும்பி அவளை கூர்மையாக பார்த்தவர்
“உன்னை மாதிரி தானே அவளும் பாசத்திற்காக ஏங்கி இருப்பா! அவளுக்கு இப்படி ஒரு வேலையை செய்ய உனக்கு எப்படி மனசு வந்தது?” கேள்வியாக அவளை நோக்க அவரது கேள்வியில் சட்டென்று அவளது கண்ணீர் தடைப்பட்டு நின்றது.

“என்ன இருந்தாலும் அவ உன் கூட பிறந்த தங்கச்சி இல்லை தானே? சொந்த பந்தம் கூட இருந்தால் தானே அதோட அருமை புரியும் யாருமே இல்லாமல் அனாதை…”

“அம்மா!”

“வள்ளி!” வள்ளியின் பேச்சை தாளாமல் மேக்னாவுடன் சேர்ந்து நடராஜனும் சத்தமிட்டு கத்தி விட அவர்கள் இருவரது சத்தத்திலும் அவர் தூக்கி வாரிப் போட திடுக்கிட்டு போய் நின்றார்.

“என்ன பேச்சு வள்ளி இது?” சற்று கண்டிப்பாக நடராஜன் வள்ளியை பார்க்க

அவரோ
“நான் ஒண்ணும் இல்லாத விஷயத்தை சொல்லலயே! என்னதான் நாம பாம்பை நம்ம கூடவே வைத்து நம்ம பிள்ளை மாதிரி பார்த்துகிட்டாலும் அதோட குணத்தை அது காட்டத் தான் செய்யும்” என்று விட்டு அங்கிருந்து சென்று விட அதற்கு மேல் அங்கே நிற்க முடியாமல் மேக்னா தன்னறைக்குள் வந்து அடைந்து கொண்டாள்.

சுற்றிலும் இருந்த அக்கம்பக்கத்தினர் கூட வள்ளி அவளை அப்படி பேசியதைப் பார்த்து இருக்க அவளுக்கோ அந்த ஒவ்வொரு நொடியும் முள்ளின் மேல் நிற்பதைப் போல அத்தனை தூரம் அவஸ்தையாக இருந்தது.

அவர் இறுதியாக பேசிய வார்த்தைகள் மீண்டும் மீண்டும் அவளது காதில் எதிரொலிப்பதைப் போல இருக்கவே தன் காதுகள் இரண்டையும் இறுக தன் கைகளால் கொண்டவள்
“நோ!” என்று சத்தமிட்டவாறே முழங்காலிட்டு அமர்ந்து கொண்டாள்.

‘என்ன மாதிரியான வார்த்தைகள் அது? நான் நான் பாம்பா? நான் அந்தளவிற்கு கொடூரமானவளா? நர்மதாவோட பாதுகாப்பிற்கு தானே நான் அப்படி பண்ணுணேன் ஏன் என்னை அவங்க தப்பாக நினைத்து இருக்காங்க? நான் தப்பானவ இல்லை! நான் தப்பானவ இல்லை!’ மேக்னா தனக்குள் ஊமையாக கண்ணீர் வடிக்க

அவள் மனமோ சிறிது நேரத்திற்கு பின்
‘இது எல்லாவற்றிற்கும் காரணம் அந்த தனபாலன் தானே! என் ப்ரியாவையும், ராணி அம்மாவையும் என் கிட்ட இருந்து பிரித்து என்னை அனாதை ஆக்கினான் இப்போ அவன் கிட்ட வேலை பார்க்குறதால என் தங்கச்சி, அம்மா, அப்பா எல்லோரையும் என்னை தப்பானவளாக பார்க்க வைத்து விட்டான் இது எல்லாமே அவனால் தான்! எல்லாம் அவனால் தான்!’ என்று தன்னை, தான் செய்த வேலைகளை மறந்து வேறு ஒரு பாதையில் சிந்திக்க ஆரம்பித்தது.

அவளது மனதிற்குள் எழுந்த கலவையான அந்த உணர்வு இறுதியாக பழி வாங்கும் எண்ணத்தில் வந்து நிற்க அவளோ இத்தனை நாட்களாக தான் தனபாலன் பற்றி சேகரித்த தகவல்களை எல்லாம் எடுத்து சேர்த்து வைத்து அலசிப் பார்க்கத் தொடங்கினாள்.

கோபத்தில் தான் செய்யப் போகும் காரியம் சரியா? தவறா? என்றெல்லாம் அவளுக்கு யோசிக்க தோன்றவில்லை.

தனபாலனைப் பழி வாங்க வேண்டும் என்ற அந்த ஒரு எண்ணமே அவள் மனம், சிந்தனை எங்கும் வியாபித்து இருந்தது.

ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் தனபாலன் தன் பதுக்கல், கடத்தல் பொருட்களை எல்லாம் பார்க்க அவரது அலுவலகத்தில் இருந்து சற்று தள்ளி ஒதுக்குப்புறமாக இருக்கும் ஒரு பழைய கட்டடத்திற்கு செல்வது வழக்கம்.

போலீசாருக்கு அந்த இடம் பற்றி தகவல் தெரிந்து இருந்தாலும் அவரது அரசியல் செல்வாக்கினால் அந்த இடத்தைப் பற்றி வெளி உலகிற்கு தெரியாமல் மறைத்து வைத்திருந்தார் தனபாலன்.

அந்த இடத்தில் எப்படியும் ஞாயிற்றுக்கிழமை முழுவதும் தனபாலனும், அவரது ஆட்களும் ஒன்று கூடி இருப்பது வழமை அதனால் மேக்னாவிற்கு ஞாயிற்றுக்கிழமைகளில் விடுமுறையும் கூட.

அந்த வார ஞாயிற்றுக்கிழமைக்கு இன்னும் மூன்று நாட்களே இருக்க தனபாலனுக்கு இறுதியாக ஒரு முடிவு கட்ட வேண்டும் என்று எண்ணிக் கொண்டவள் அடுத்து என்ன செய்வது என்று திட்டம் தீட்டத் தொடங்கினாள்.

இதற்கிடையில் வள்ளி வேறு அடிக்கடி நர்மதாவை சென்று அழைத்து வரச்சொல்லி மேக்னாவை நச்சரித்து கொண்டே இருக்க அதை தன் காதிலேயே வாங்கி கொள்ளாதது போல இருந்தவள் தன் மனதிற்குள்
‘ஐ யம் ஸாரி ம்மா! என்னால நீங்க சொல்றதை செய்ய முடியாது நான் இறுதியாக ஒரே ஒரு விஷயம் பண்ண வேண்டியது இருக்கு அதை முடித்து விட்டு வந்த நான் செய்த தப்பை எல்லாம் சொல்லி உங்களையும், நர்மதாவையும் சேர்த்து வைத்து விட்டு போலீஸில் சரண்டர் ஆகிடுவேன்’ என்று எண்ணிக் கொண்டே ஞாயிற்றுக்கிழமைக்காக காத்திருக்கத் தொடங்கினாள்.

இங்கே மேக்னா தன் மனதிற்குள் ஒரு திட்டத்தோடு காத்திருக்க மறுபுறம் கடவுளோ அவள் முற்றிலும் எதிர்பாராத ஒரு திருப்பத்தை அவளுக்கு நடத்திக் காட்ட வெகு ஆர்வத்துடன் காத்திருந்தார்……..

error: Content is protected !!