Kadhal 3

Kadhal 3

வாரத்தின் இறுதி நாள் சித்தார்த்தின் வீட்டில் கலகலப்பிற்கு பஞ்சம் இல்லாத நாள்.

சித்தார்த்திற்கு ஓய்வு நாள் என்பதால் அவனது தம்பிகள் இருவரும் அவனோடு தங்கள் நேரத்தை செலவிட வேண்டும் என்பதற்காக அந்த ஒரு நாள் மாத்திரம் எந்த ஒரு வெளி வேலைக்கும் செல்ல மாட்டார்கள்.

அண்ணனோடு சேர்ந்து வீட்டை ஒரு வழியாக்கி விடுவர்.

இன்றும் அப்படியே சமையல் செய்யும் தங்கள் அன்னைக்கு உதவி செய்கிறோம் என்ற பெயரில் அவரை ஒரு வழியாக்கி கொண்டிருந்தனர் சித்தார்த் மற்றும் அவனது இரு கிளை வால்களான கார்த்திக் மற்றும் கண்ணன்.

“டேய்! கண்ணுங்களா! நீங்க எனக்கு உதவி செய்யலனாலும் பரவாயில்லை தயவுசெய்து இப்படி இம்சை பண்ணாதீங்கப்பா முடியல”

“அம்மா! என்ன வார்த்தை சொல்லிட்டீங்க? உங்களுக்காக எவ்வளவு கஷ்டப்பட்டு சமையலுக்கு உதவி செய்கிறோம் அதை போய் இப்படி சொல்லுறீங்களே! அய்யோ! இது என்ன கொடுமை!” கண்ணன் சித்தார்த்தின் தோளில் சாய்ந்து கொண்டு கவலையுடன் கூறுவதை போல கூறவும்

அவனது காதை பிடித்து கொண்ட யசோதா
“டேய்! படவா! ஓவரா நடிக்காதேடா! பாயாசத்துக்கு பால் கம்மியா இருக்குன்னு சோள மாவை கரைத்து போடலாமேன்னு சொல்லுறதும், ரசத்திற்கு காய்கறிகளை வெட்டிப் போடுறதும், சாம்பாரிற்கு முந்திரி, பிஸ்தா பருப்பு போட ஐடியா கொடுக்கறதும் தான் உங்க ஊர்ல உதவியா?” தனது மறு கையால் அங்கிருந்து நழுவி செல்ல போன சித்தார்த்தின் காதையும் பிடித்து கொண்டு கேட்க கண்ணனோ கண் இமைக்கும் நொடியில் அவரது பிடியில் இருந்து நழுவி ஓடி சென்றான்.

“ம்மா! நாங்க புதிதாக ஒரு விஷயம் சொல்லி இருக்கோம் அதை பாராட்டாமல் இப்படி பண்ணுறீங்களேம்மா! போங்க ம்மா!” சித்தார்த் சலித்து கொண்டே கூறுவது போல கூறவும்

“டேய்! டேய்! இந்த பச்சை பிள்ளை கணக்கா முகத்தை வைக்குறதை நிறுத்துடா இன்னைக்கு உன் பிரண்ட் வர்றா ரொம்ப நாள் கழித்து வர்ற பொண்ணுக்கு வாய்க்கு ருசியாக சமைத்து போடலாம்ன்னு பார்த்தா அண்ணனும், தம்பிங்களும் சேர்ந்து இப்படி அலப்பறை பண்ணுறீங்களேடா! இதெல்லாம் நியாயமா?” பதிலுக்கு புன்னகையோடு யசோதா கேட்க

அவனோ அவரது பின்னால் வந்து நின்று தன் இரு கைகளையும் அவரது தோளில் போட்டுக் கொண்டு
“அம்மா இன்னைக்கு நம்ம வீட்டுக்கு வரப் போறது நம்ம ஜெஸ்ஸி ம்மா அவ இந்த ருசி, அறுசுவை இதை எல்லாம் எதிர்பார்க்கவே மாட்டா அப்படி ஒரு நல்ல உள்ளம் எதை கொடுத்தாலும் சாப்பிடுவா அப்படி ஒரு தங்கமான பொண்ணு அது தான் நாங்க புதிதாக ட்ரை பண்ண டிஸ்ஸை எல்லாம் அவளுக்கு கொடுத்து டெஸ்ட் பண்ண பார்க்கிறோம் அது புரியாமல் நீங்க எமோசனல் ஆகிட்டீங்க” என்று கூறவும்

“அப்போ நான் உனக்கு பரிசோதனை எலியாடா பாவி?!” அவர்கள் சமையலறை வாயிலில் தன் இடுப்பில் கை வைத்த வண்ணம் சித்தார்த்தை கோபமாக முறைத்து கொண்டு நின்றாள் ஜெஸ்ஸி.

“வாம்மா ஜெஸ்ஸி எப்போ வந்த? நல்லா இருக்கியா?” யசோதா இயல்பாக புன்னகத்து கொண்டே கேட்கவும்

அவர் முன்னால் வந்து நின்ற ஜெஸ்ஸி
“இப்போ வரைக்கும் நல்லா தான் ஆன்ட்டி இருக்கேன் இனி உங்க பையனால எந்த ஆபத்தும் இல்லாமல் இருந்தால் சரி தான்” என்று கூறவும்

சிரித்துக் கொண்டே அவளது தலையை கலைத்து விட்ட சித்தார்த்
“அப்படி ஈஸியா உன்னை போக விட்டுடுவோமா? அம்மா நான் சொன்ன மெனு படி சமைங்க இன்னைக்கு ஜெஸ்ஸி ஒரு கை பார்த்துடுவா அப்படி அவ பார்க்கலேன்னா பார்க்க வைத்துடுவோம்” அவளது கையை பிடித்து அழைத்து கொண்டு அங்கிருந்து செல்ல போக அவசரமாக தன் கையை அவன் கையில் இருந்து உருவி எடுத்து கொண்டவள் யசோதாவின் பின்னால் வந்து ஒட்டிக் கொண்டாள்.

“ஆன்ட்டி இவன் போலீஸா? இல்ல ரௌடியா? இப்படி பேசுறான் வீட்டுக்கு சாப்பிட வரச்சொல்லிட்டு இப்படி விஷப் பரீட்சையில் என்னை சிக்க வைக்குறது சரி இல்லை ஆன்ட்டி”

“ஹைய்யோ! ஜெஸ்ஸி கண்ணா! இவன் பேச்சை கேட்டு பயப்படுற ஒரே ஆள் நீயாக தான் இருப்ப போல ரவுடிகளே இவனை பார்த்து பயப்பட மாட்டாங்க நீ வேற!” யசோதாவின் கூற்றில் ஜெஸ்ஸி தன் வாயை மூடிக்கொண்டு சிரித்துக் கொண்டே சித்தார்த்தை நிமிர்ந்து பார்த்தாள்.

“அம்மா! இதெல்லாம் டூ மச்!” ஜெஸ்ஸியை வம்பிழுக்கப் போய் இறுதியில் அது தனக்கே திரும்பி வருவதைப் பார்த்து சற்று கடுப்பாகி போய் நின்றான் சித்தார்த்.

“வீட்டுக்கு ரொம்ப நாள் கழித்து வந்த பொண்ணு ஜெஸ்ஸி ம்மா நீ அப்படி உனக்கு ஏதாவது பண்ண விடுவேன்னா சொல்லு”

“அது தானே என் ஆன்ட்டி இருக்கும் போது எனக்கு என்ன கவலை?

“போதும் உங்க இரண்டு பேர் பாச வெள்ளத்தில் வீடு மூழ்கிடப் போகுது” சித்தார்த் ஆற்றாமையுடன் கூறவும் பெண்கள் இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்து வாய் விட்டு சிரித்துக் கொண்டு நின்றனர்.

“அப்புறம் ஜெஸ்ஸி வீட்டில் அம்மா, அப்பா எல்லாம் எப்படி இருக்காங்க? வயது ஏறிட்டே போகுதே எப்போ கல்யாணம் பண்ணிக்கப் போற?” யசோதா இயல்பான பேச்சு வார்த்தைக்கு மாற

புன்னகையோடு அவரைப் பார்த்து கொண்டு நின்றவள்
“வீட்டில் அம்மா, அப்பா எல்லாம் ரொம்ப நல்லா இருக்காங்க ஆன்ட்டி அப்புறம் இப்போதைக்கு கல்யாணம் பண்ணுற ஐடியா இல்லை ஆன்ட்டி இன்னும் ஒரு வருஷம் போகட்டுமே என்ன அவசரம்?” தன் தோளை குலுக்கிக் கொண்டு கூறவும் அவரோ அவளை வியப்பாக பார்த்து கொண்டு நின்றார்.

“என்ன ஜெஸ்ஸி இப்படி சொல்லுற? அடுத்த வருடம் உனக்கு முப்பது வயது ஆகப்போகுதேம்மா இன்னும் இந்த நல்ல காரியத்தை தள்ளி போடலாமா?”

“அப்போ சித்தார்த்திற்கும் என் வயது தானே அவனை மட்டும் ஏன் தனியா விட்டு இருக்கீங்க ஆன்ட்டி?” ஜெஸ்ஸியின் கேள்வியில் சித்தார்த் அதிர்ச்சியாக தன் அன்னையைப் பார்க்க அவரும் அதேநேரம் கவலையுடன் அவனையே பார்த்து கொண்டு நின்றார்.

“எனக்கு மட்டும் ஆசை இல்லாமலா? இவன் தான் எதற்கும் பிடி கொடுத்து பேச மாட்டேங்குறானே! அது தான் அவனோட பிரண்ட்ஸோட கல்யாணத்துக்கு போயாவது அவன் மனசு மாறுமான்னு பார்க்குறேன்” நீண்ட பெருமூச்சு ஒன்றை விட்டு கொண்டே யசோதா கூறவும்

‘அட கடவுளே! மறுபடியும் தொடங்கிட்டாங்களா? முடியலடா சாமி! கல்யாணம் பண்ணு கல்யாணம் பண்ணுனு பாடாய்ப்படுத்துறாங்களே! மனசுக்கு பிடித்த பொண்ணை பார்த்தா நான் கல்யாணம் பண்ணிக்க மாட்டேனா என்ன?’ மனதிற்குள் புலம்பிக் கொண்டு நின்ற சித்தார்த்தின் கண்களுக்குள் திடீரென்று மேக்னாவின் உருவம் வந்து மறைந்து சென்றது.

தன் மனவோட்டத்தை எண்ணி அதிர்ச்சியானவன் உடனே தன் முகத்தை சரி செய்து கொண்டு
“ம்மா! இப்போ எதற்கு பீல் ஆகுறீங்க? ஜெஸ்ஸியோட கல்யாணம் முடிந்த அடுத்த வாரமே நான் கல்யாணம் பண்ணிக்கிறேன் போதுமா?” என்று கேட்க

புன்னகையோடு அவனை நிமிர்ந்து பார்த்த யசோதா
“ஹப்பா! ஒரு வழியாக கல்யாணம் பண்ணிக்க என் பையனுக்கு மனது வந்துடுச்சுப்பா” என்று கூறவும்

அவரது தோளில் ஆதரவாக கை பதித்த ஜெஸ்ஸி
“கடைசியில் என்னை வைத்தே உங்க பையன் எல்லாம் டெஸ்ட் பண்ணி பார்த்துக்கிறான் ஆன்ட்டி” சிரித்துக் கொண்டே கூற அவளோடு இணைந்து யசோதாவும், சித்தார்த்தும் சிரிக்க தொடங்கினர்.

இப்படி கலகலப்பான பேச்சுகளோடும், சந்தோஷத்தோடும் அன்றைய பகல் பொழுது ஜெஸ்ஸிக்கு சித்தார்த்தின் வீட்டில் இனிதே கரைந்தது.

மாலை நேரம் ஜெஸ்ஸி தன் வீட்டிற்கு செல்வதற்காக புறப்பட தானும் துணையாக வருவதாக கூறி சித்தார்த் அவளோடு இணைந்து புறப்பட்டான்.

சித்தார்த் தங்கள் வீட்டில் இருந்து தள்ளி சுமார் ஒரு இரண்டு கிலோமீட்டர் தூரத்தில் இருந்த ஒரு காஃபி ஷாப்பின் முன்னால் தன் வண்டியை நிறுத்திவிட்டு ஜெஸ்ஸியின் புறம் திரும்பி
“கொஞ்சம் உன் கிட்ட பேசணும் ஜெஸ்ஸி காஃபி சாப்பிட்டுட்டே பேசலாம் வா” என்று விட்டு அந்த ஷாப்பிற்குள் நுழைந்து கொள்ள அவளோ குழப்பத்தோடு அவனை பின் தொடர்ந்து சென்றாள்.

இருவருக்கும் சேர்த்து காஃபி ஆர்டர் கொடுத்தவன் எதுவும் பேசாமல் சுற்றிலும் திரும்பி வேடிக்கை பார்த்துக் கொண்டு இருந்தான்.

அவன் ஏதாவது பேசுவான் என்று எதிர்பார்த்து காத்திருந்த ஜெஸ்ஸி அவனது இந்த மௌனத்தைப் பார்த்து தாளாமல் ஒரு கட்டத்தில் தன் பொறுமையை இழந்து
“டேய்! சித்தார்த் ஏதோ பேசணும்னு சொல்லி இங்க கூட்டிட்டு வந்துட்டு நீ என்னடா வேடிக்கை பார்த்துட்டு இருக்க? என்ன பார்த்தா எப்படி இருக்கு உனக்கு?” படபடப்புடன் கேட்க

“ஹேய்! ரிலாக்ஸ் ஜெஸ்ஸி! உன் கிட்ட எப்படி இந்த மேட்டரை கேட்குறதுனு தான் யோசிச்சுட்டு இருந்தேன் வேற ஒண்ணும் இல்லை” அவளது கையில் தட்டி கொடுத்த படியே கூறினான் சித்தார்த்.

“என்ன விஷயம் சொல்லு”

“எனக்கு ஒரு கேஸைப் பற்றி டீடெய்ல்ஸ் வேணும்”

“கேஸா? நான் இங்க வந்ததற்கு அப்புறம் ஒரே ஒரு கேஸ் தானே டீல் பண்ணேன் அப்படி இருக்கும் போது எந்த கேஸ் பற்றி நீ டீடெய்ல்ஸ் எதிர்பார்க்குற?”

“அந்த ஒரு கேஸோட டீடெய்ல்ஸ் தான்”

“வாட்?” குழப்பத்தோடும், அதிர்ச்சியோடும் சித்தார்த்தை நோக்கினாள் ஜெஸ்ஸி.

“ஆமா ஜெஸ்ஸி எனக்கு அந்த மேக்னா கேஸை பற்றி டீடெய்ல்ஸ் வேணும்”

“அந்த கேஸ் தான் முடிஞ்சுடுச்சே அப்புறம் எதற்கு நீ இவ்வளவு ஆர்வமாக இருக்க?”

“அது முடிஞ்ச கேஸ் இல்லை ஜெஸ்ஸி வலுக்கட்டாயமாக முடிக்கப்பட்ட கேஸ் மாதிரி தான் எனக்கு தோணுது”

“உனக்கு என்ன லூஸா சித்தார்த்? அந்த பொண்ணே தான் செய்த தப்பை ஏத்துக்கிட்டா நீ தேவையில்லாமல் ஏதேதோ பேசுற”

“ஜெஸ்ஸி நான் ஏன் இந்த கேஸ் பற்றி இவ்வளவு ஆர்வமாக இருக்கேன்னு உனக்கு அப்புறமாக சொல்லுறேன் இப்போ எனக்கு அந்த கேஸைப் பற்றி முழுமையாக டீடெய்ல்ஸ் எல்லாம் சொல்லு ப்ளீஸ்” சித்தார்த்தின் கெஞ்சலில் அதற்கு மேலும் மறுத்து பேச முடியாமல் அந்த கேஸைப் பற்றி கூற தொடங்கினாள் ஜெஸ்ஸி.

மத்திய சிறைச்சாலை – பெண்கள் பிரிவு

வாரத்தின் இறுதி நாள் என்பதால் என்னவோ தங்கள் உறவுகளை பார்க்கவென பல பேர் அந்த சிறைச்சாலைக்கு முன்பாக ஒன்று கூடி இருந்தனர்.

எல்லோரும் கண்ணீரோடும், தவிப்போடும் தங்கள் உறவினர்களை பார்த்து கொண்டு நிற்க மேக்னா மாத்திரம் தனது அறைக்குள் ‘தி டார்க் வோர்ல்ட்’ என்னும் ஆங்கில நாவலை படித்த வண்ணம் அமர்ந்திருந்தாள்.

அந்த நாவலின் தலைப்பு போலவே அவளது உலகமும் அவளது தாய், தந்தையின் இழப்பிற்கு பின்னர் இருண்டு போனது.

அவளது கண்கள் இரண்டும் அந்த புத்தகத்தின் மீது நிலைத்து இருந்தாலும் மனமோ அவளது பழைய நினைவுகளையே அசை போட்டு கொண்டிருந்தது.

அன்று மயக்கத்தில் பள்ளத்தாக்கில் இருந்து உருண்டு வீழ்ந்தவள் இரண்டு, மூன்று நாட்களின் பின்னரே கண் விழித்தாள்.

அதுவும் அந்த பகுதியால் நடந்து சென்ற மலைவாழ் மக்களின் உதவியால் நடந்தது.

புதருக்குள் விழுந்து கிடந்த மேக்னாவை பார்த்ததும் பதறி போய் அவளை தூக்கியவர்கள் அருகில் இருந்த ஒரு பெட்டி கடையின் அருகில் அவளை கொண்டு சென்று முதல் வேலையாக அவளது மயக்கத்தை தெளிய வைத்தனர்.

தன்னை சுற்றி இருந்த புதியவர்களைப் பார்த்து மேக்னா பயத்தில் திரு திருவென விழிக்க அங்கிருந்தவர்களில் வயதான ஒருவர் அவள் முன்னால் வந்து நின்று
“பாப்பா! யாரும்மா நீ? உன் பேர் என்ன? நீ எப்படி இங்க வந்த?” என்று கேட்க அவளோ பதில் எதுவும் பேசாமல் அச்சத்துடன் அவரை பார்த்து கொண்டு இருந்தாள்.

“சொல்லும்மா நீ எப்படி இங்க வந்த?”

“எனக்கு பசிக்குது தாத்தா” மேக்னாவின் கூற்றில் அங்கிருந்த அனைவருமே பரிதாபமாக அவளை பார்த்தனர்.

அவளது அந்த தோற்றத்தை பார்த்த பின்னர்
அந்த வயதான நபர் எதைப்பற்றியும் யோசிக்காமல் உடனே அந்த கடையில் இருந்து சில உணவு பொருட்களை வாங்கி அவளிடம் கொடுக்க வேக வேகமாக அதை சாப்பிட்டவள்
“தாங்க்ஸ் தாத்தா” என கண்கள் கலங்க கூறினாள்.

“இப்போ சொல்லும்மா நீ யாரு? உன் அம்மா, அப்பா எல்லாம் எங்கே இருக்காங்க?” தன் பெற்றோரைப் பற்றி கேட்டதுமே கண்களில் கண்ணீர் வடிய சற்று தள்ளி இருந்த ஒரு மலை உச்சியை திரும்பி பார்த்தவள் அந்த மலையை நோக்கி தன் கையை காட்டினாள்.

“அந்த மலையில் தான் உன் வீடு இருக்கா? நாங்க வேணும்னா உன்னை அங்க கூட்டிட்டு போய் விடட்டுமா?” அந்த கூட்டத்தில் இருந்த ஒரு பெண் அவளிடம் கேட்க

“இல்லை எங்க வீடு நீலகிரியில் இருக்கு நானும், என் அம்மாவும், அப்பாவும் காரில் வந்துட்டு இருக்கும் போது கார் அங்கே இருக்குற பள்ளத்தில் விழுந்துடுச்சு” திக்கித் திணறி ஒரு வழியாக அவள் கூறி முடிக்கவும் சுற்றி நின்றவர்களோ பதட்டத்துடன் அந்த இடத்தை நோக்கி விரைந்து ஓடிச்சென்றனர்.

அந்த மலைப்பகுதிக்கு வேறு மாற்று பாதைகள் இல்லாததால் அந்த இடத்தை ஐந்து கிலோமீட்டர் பிரதான பாதையில் சென்றே அடைய முடியும்.

வீதியில் சென்ற ஒரு சில வாகனங்களில் உதவி கேட்டு சிலர் அந்த இடத்தை வந்து சேர, இன்னும் சிலரோ நடந்து வந்து அந்த இடத்தை அடைந்தனர்.

ஒரு பள்ளமான பகுதியில் சாம்பலாகி கிடந்த கார் பாகங்களையும், உடற் சிதைவுகளையும் அச்சத்துடன் ஒருவரை ஒருவர் பார்த்து கொண்டு நிற்க கூட்டத்தில் இருந்த ஒரு நபர் உடனடியாக போலிஸிற்கு தகவலை தெரிவித்து இருந்தார்.

மறுபுறம் மேக்னாவோ இது எதைப்பற்றியும் சிந்தனை இன்றி கால்கள் போன போக்கில் வீதியின் மறுபுறமாக நடந்து சென்று கொண்டிருந்தாள்.

இரண்டு, மூன்று மணிநேரம் விடாமல் நடந்து கொண்டிருந்தவள் இறுதியாக வந்து சேர்ந்த இடம் ஊட்டி பேருந்து நிலையம்.

எங்கே செல்கிறோம்? எதற்காக செல்கிறோம்? என்று எதுவுமே தெரியாமல் அந்த இடத்திற்கு வந்து சேர்ந்து இருந்தாள் மேக்னா.

சுற்றிலும் திரும்பி பார்த்தவளுக்கு அடுத்து என்ன செய்வது என்றே தெரியவில்லை.

தங்கள் வீட்டிற்கு திரும்பி செல்வதற்கு கூட அவளுக்கு வழி தெரிந்து இருக்கவில்லை.

மெல்ல மெல்ல வானம் இருள் சாயத் தொடங்க குளிர் காற்றும் அந்த இடத்தை சூழ்ந்து கொள்ள ஆரம்பித்து இருந்தது.

குளிரில் அவளது உடல் நடுங்கத்
தொடங்க தன்கால்களையும், கைகளையும் இறுக கட்டி கொண்டு அங்கிருந்த சிமெண்ட் பெஞ்சில் அமர்ந்து கொண்டவள் உதடுகளோ
“சுந்தரி ம்மா! சுந்தரி ம்மா!” என்று முணுமுணுத்துக் கொண்டு இருந்தது.

“பாப்பா! யாரும்மா நீ?” தன் முன்னால் திடீரென்று கேட்ட குரலில் திடுக்கிட்டு எழுந்து அமர்ந்த மேக்னா அச்சத்துடன் அந்த பெஞ்சின் ஓரம் சுருண்டு கொண்டாள்.

அந்த இடத்தில் அவளையும், அந்த நபரையும் தவிர வேறு யாரும் இருக்கவில்லை.

நரைத்த தலையுடன், புன்னகை முகமாக, கையில் ஒரு பையை வைத்து கொண்டு நின்ற அந்த நபரை பார்த்ததும் மேக்னாவிற்கு ஏனோ மனதிற்குள் அச்சவுணர்வு அதிகரித்தது.

“நீ…நீங்க யாரு?” அச்சத்துடன் மேக்னா வினவவும்

புன்னகையோடு அவளருகில் அமர்ந்து கொண்டவர்
“என் பேரு பழனி இந்த பஸ் ஸ்டாண்டில் அதோ அந்த பெட்டி கடை வைத்து இருக்கேன்” சற்று தள்ளி இருந்த ஒரு கடையை சுட்டிக் காட்டியவாறே கூறினார்.

“நீ யாரு பாப்பா? இங்கே தனியா என்ன பண்ணுற?”

“……”

“பயப்படாமல் சொல்லும்மா உன் அம்மா, அப்பா எங்கே? பஸ்ஸில் இருந்து தவறுதலாக இறங்கிட்டியா?”

“இல்லை”

“அப்போ எப்படி இந்த இடத்திற்கு வந்த?”

“நடந்து வந்தேன்”

“சரி உன் வீடு எங்கே இருக்குன்னு சொல்லு நான் கொண்டு போய் விடுறேன்”

“என் வீடு நீலகிரி ஹையர் செகன்ட்டரி ஸ்கூலிற்கு பக்கத்தில் இருக்கு”

“நீலகிரியா?” யோசனையோடு தன் தாடையை நீவி கொண்டு நின்றார் பழனி.

“உன் அம்மா அப்பா எல்லாம் எங்கே ம்மா?”

“அவங்க வந்த கார் அங்கே பள்ளத்தில் விழுந்துடுச்சு” மேக்னா கையை காட்டிய புறம் திரும்பி பார்த்தவர்

‘கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி செய்தியில் காட்டிய ஆக்சிடெண்ட் இந்த பொண்ணோட அம்மா, அப்பாவோடது தான் போல’ என தன் மனதிற்குள் எண்ணிக் கொண்டு

“சரி நீ வாம்மா நான் உன்னை ஒரு இடத்திற்கு கொண்டு போய் விடுறேன் இங்கே தனியா இருக்காதே!” என்று அவளின் புறம் திரும்பி கூற அவளோ தயக்கத்துடன் அவரைப் பார்த்து கொண்டு இருந்தாள்.

“பயப்படாதேம்மா! நான் உன்னை எதுவும் பண்ண மாட்டேன் நான் உன்னை கொண்டு போய் விடப்போற இடத்தில் எல்லோரும் பொண்ணுங்க தான் இருப்பாங்க பயப்படாமல் வாம்மா! வா” மேக்னாவின் கையை பிடித்து இழுக்காத குறையாக அந்த நபர் அவளை அந்த இடத்தில் இருந்து அழைத்து கொண்டு சென்றார்.

சிறிது தூரம் பிரதான வீதியில் நடந்து சென்றவர்கள் அதன் பிறகு ஒரு சரிவான பாதையில் நடந்து சென்றனர்.

அச்சத்தோடு இருட்டில் அந்த நபரின் பிடியில் தட்டுத்தடுமாறி நடந்து சென்ற மேக்னா சற்று தூரத்தில் வெளிச்சம் தென்பட்ட பின்னரே சற்று நிம்மதியாக உணர்ந்தாள்.

‘இந்த தாத்தா நல்லவர் தான் போல!’ மனதிற்குள் மேக்னா பழனியைப் பற்றி நல்ல படியாக எண்ணி இருக்க அவர் அழைத்து சென்ற இடமோ அந்த எண்ணத்தை நிலைகுலைய செய்வது போல இருந்தது.

பெண்கள் பலர் ஆண்களோடு மிகவும் நெருக்கமாக இணைந்து அந்த இடத்தில் நடந்து கொண்டிருக்க வேறு சில ஆண்களோ அவளை விசித்திரமாக பார்த்து கொண்டு நின்றனர்.

மேக்னாவின் மனதிற்கு ஏனோ அந்த இடம் அவ்வளவு சரியாக படவில்லை.

அந்த இடத்தில் சற்று தள்ளி இருந்த ஒரு இரட்டை மாடி வீட்டுக்குள் அழைத்து சென்றவர் அங்கு நின்று கொண்டிருந்த ஒரு பெண்ணிடம்
“ஜமுனா கிட்ட ஒரு புது ஆள் கொண்டு வந்துருக்கேன்னு சொல்லி வரச் சொல்லு” என்று கூற

அந்த பெண்ணோ
“பாப்பா ரொம்ப சின்ன பொண்ணா இருக்கே! சரி வருமா?” என அவளை மேலும் கீழும் பார்த்து கேட்டுக் கொண்டு அங்கிருந்து நடந்து சென்றாள்.

“தாத்தா எனக்கு பயமாக இருக்கு என்னை பஸ் ஸ்டாண்டிலேயே விட்டுடுங்க” மேக்னா கண்கள் கலங்க அவரை பார்த்து கூற

பதிலுக்கு அவரோ புன்னகையோடு
“பயப்படாதே பாப்பா! ஒண்ணும் ஆகாது” என்று கூறிக் கொண்டிருக்கையில்

“என்னய்யா பழனி! ரொம்ப நாளைக்கு அப்புறம் இந்த பக்கம் வந்து இருக்க?” என்றவாறே அவர்கள் முன்னால் வந்து நின்றார் ஒரு பெண்.

அடர் சிகப்பு நிற சேலை அணிந்து அந்த நிறத்திற்கேற்றார் போல ஆபரணங்களும், உதட்டு சாயமும் இட்டு புன்னகையோடு வந்து நின்ற அந்த பெண்ணிற்கு எப்படியும் வயது நாற்பது இருக்கும் என்பது அவளது தோற்றத்திலேயே புலப்பட்டது.

“ஜமுனா எப்படி இருக்க?” தன் பற்கள் அனைத்தும் வெளியே தெரியும் படி சிரித்துக் கொண்ட பழனி கேட்க

“ரொம்ப பல்லை இளிக்காதே! சகிக்கல” என்று கூறிய ஜமுனா

“ஆமா என்ன விஷயமாக இந்த பக்கம் வந்த?” பழனியின் அருகில் பயத்தில் கை, கால்கள் நடுங்க நின்று கொண்டிருந்த மேக்னாவை ஆராய்ச்சியாக பார்த்து கொண்டே வினவினார்.

“இது நமக்கு வேண்டப்பட்ட பொண்ணு தான் அம்மா, அப்பா ஒரு ஆக்சிடெண்டில் இறந்துட்டாங்க வழி தவறி இங்க வந்துட்டா போறதுக்கு வேற இடம் இல்லை அது தான் இங்கே கூட்டிட்டு வந்தேன் இங்கே உன் கூட ஏதாவது….” அந்த வசனத்தை பழனி முடிப்பதற்குள் ஜமுனாவின் கரம் அவரது கன்னத்தை பதம் பார்த்து இருந்தது.

“ஜமுனா!” அதிர்ச்சியாக பழனி ஜமுனாவை பார்க்க

அவரோ
“நீ எல்லாம் ஒரு மனுஷனா? இந்த சின்ன பொண்ணை இந்த இடத்திற்கு கூட்டிட்டு வந்து இருக்கியே உனக்கு மனசாட்சி இருக்கா? நாங்களே இந்த இடத்திற்கு வந்து எங்க வாழ்க்கையை தொலைச்சுட்டு இருக்கோம் நீ மறுபடியும் ஒரு பொண்ணு வாழ்க்கையை அழிக்க வழி சொல்லுறியா?” கோபத்துடன் மீண்டும் அறைவதற்கு கையை உயர்த்தி விட்டு

“ச்சே!” என்றவாறே முகத்தை சுளித்துக் கொண்டு தன் கையை பணித்துக் கொண்டார்.

“இல்லை ஜமுனா நீ தப்பாக புரிஞ்சுகிட்ட இங்கே ஏதாவது சமையல் வேலை, கூட்டிப் பெருக்குற வேலை இருந்தால் கொடுன்னு தான் கேட்க வந்தேன்” பழனி தயக்கத்துடன் கூறவும் அலட்சியமாக அவரை திரும்பி பார்த்த ஜமுனா அவரது காலோடு ஒன்றிக் கொண்டு நின்ற மேக்னாவின் முன்னால் மண்டியிட்டு அமர்ந்து கொண்டார்.

“உன் பேரு என்னம்மா?”

“மே..மேக்னா” தன் முன்னால் நின்ற நபர் வாங்கிய அறையைப் பார்த்து பயந்து போய் நின்ற மேக்னா இப்போது தான் அவர் கேட்கும் கேள்விகளுக்கு பதில் சொல்லாவிட்டால் தன்னையும் அடித்து விடுவாரோ என்ற பயத்தில் தயங்கி தயங்கி தன் பெயரை கூறினாள்.

“உனக்கு எங்க போகணும் சொல்லு?”

“என் வீட்டுக்கு போகணும்”

“உங்க வீடு எங்க இருக்கு?”

“……”

“சொல்லும்மா உன் வீடு எங்கே இருக்கு?”

“நீலகிரி ஹையர் செகண்ட்டரி ஸ்கூலிற்கு பக்கத்தில் இருக்கு” மேக்னா பதில் சொல்வதற்கு முன்னர் ஜமுனாவின் கேள்விக்கு தானே பதில் கூறினார் பழனி.

பெருமூச்சு ஒன்றை விட்டு கொண்டே எழுந்து நின்று கொண்ட ஜமுனா
“பார்க்க கொஞ்சம் வசதியான வீட்டு பொண்ணு மாதிரி தான் இருக்கா நல்ல வேளை தங்க நகை எதுவும் போடாமல் இருக்கா இல்லைன்னே எப்பவோ இந்த பொண்ணை நடுத்தெருவில் நிற்க வைத்து இருப்பானுங்க

யோவ் பழனி! நாங்க பண்ணுற தொழில் தப்பானது தான் என்ன காரணத்திற்காக நாங்க இதை பண்ணுறோம்னு எங்களுக்கு மட்டும் தான் தெரியும் எல்லாம் தெரிஞ்சும் இன்னொரு பெண்ணை இந்த பாழுங்கிணற்றுக்குள் நான் இழுக்க மாட்டேன் நீ ஒழுங்கு மரியாதையா இந்த பொண்ணை அவ வீட்டில் கொண்டு போய் விடுற இடையில் ஏதாவது பண்ணலாம்னு நினைச்ச அந்த இடத்திலேயே உன் கதையை முடிச்சுடுவேன் ஜாக்கிரதை” என்று கூற

பழனி அவசரமாக இடம் புறமாக தன் தலையை அசைத்து
“அய்யோ அப்படி எல்லாம் எதுவும் ஆகாது ஜமுனா நான் கொண்டு போய் விடுறேன்” என்றவாறே மேக்னாவை அங்கிருந்து அழைத்து கொண்டு சென்றார்.

மேக்னாவிற்கு அங்கே நடப்பது எதுவும் சரியாக புரியாவிட்டாலும் அந்த பெண் தனக்கு ஏதோ உதவி செய்து இருக்கிறார் என்பது மட்டும் நன்றாக புரிந்தது.

“மேக்னா! ஏய் மேக்னா!” சிறைச்சாலை வார்டனின் குரல் கேட்டு தன் சிந்தனை கலைந்து கையில் இருந்த புத்தகத்தை மூடி வைத்தவள் கேள்வியாக அவரை நோக்கினாள்.

“உன்னை பார்க்க ஆள் வந்து இருக்காங்க எழுந்திரிச்சு வா”

“என்னையா?” ஆச்சரியமாக கேட்டு கொண்டே எழுந்து நின்றவள்

‘என்னைப் பார்க்க யாரு வந்து இருப்பாங்க?’ என்ற யோசனையோடு அவரை பின் தொடர்ந்து சென்றாள்…..

error: Content is protected !!