Kadhal 6

Kadhal 6

சித்தார்த் ஜெஸ்ஸியின் வீட்டின் முன்னால் தன் பைக்கில் அமர்ந்திருந்தவாறே யோசனையோடு அவளது முகத்தை பார்த்து கொண்டு இருந்தான்.

சிறிது நேரத்திற்கு முன்னர் ஜெஸ்ஸியின் தொலைபேசிக்கு வந்த அழைப்பே அவனது இந்த யோசனைக்கு காரணம்.

சித்தார்த் மற்றும் ஜெஸ்ஸி தாங்கள் மேக்னாவை பற்றி விசாரிப்பது வேறு யாருக்கும் தெரியாது என்று நினைத்து இருக்க ஏ.சி.பி மணிவேலிடம் இருந்து வந்த அழைப்பு அந்த எண்ணத்தை தவிடுபொடியாக்கி இருந்தது.

வீதியோரமாக நின்று அவர்கள் இருவரும் பேசிக் கொண்டு இருக்கையில் ஜெஸ்ஸியின் அதிர்ச்சியான தோற்றத்தை பார்த்து அவளது தொலைபேசியை வாங்கி பார்த்தவன் ஏ.சி.பி மணிவேல் என்ற பெயரை பார்த்ததும் சற்று குழப்பத்தோடும், யோசனையோடும் அந்த அழைப்பை எடுத்து ஸ்பீக்கரை ஆன் செய்து அவளைப் பேசுமாறு சைகை செய்தான்.

“ஹ..ஹலோ ஸார்! குட் ஈவ்னிங்”

“குட் ஈவ்னிங் ஜெஸ்ஸி! இப்போ நீங்க எங்க இருக்கீங்க?”

“ஸார் அது வந்து நான் வெளியே சித்…இல்லை அது வந்து என் பிரண்ட்டோட வெளியே இருக்கேன் ஸார் ஏன் ஸார்? ஏதாவது பிரச்சினையா?” ஜெஸ்ஸி தட்டுத்தடுமாறி தயக்கத்துடன் மணிவேலின் கேள்விக்கு பதில் கூறி முடித்தாள்.

“ஓஹ்! வெளியேனா எங்கே? சென்ட்ரல் ஜெயிலுக்கு முன்னாடியா?”

“ஸார்!” இம்முறை சித்தார்த்தும் தன்னை மறந்து அதிர்ச்சியில் சத்தம் போட பார்க்க ஜெஸ்ஸி அவசரமாக தன் கை கொண்டு அவன் வாயை மூடி இருந்தாள்.

அவன் அதிர்ச்சியாக அவளைப் பார்க்க அவனைப் பார்த்து வேண்டாம் என்று தலை அசைத்தவள்
“இல்லை ஸார் நீங்க ஏதோ தப்பாக நினைத்து பேசிட்டு இருக்கீங்க நான் என் பிரண்ட்டோட தான் வெளியே இருக்கேன்” மணிவேலிற்கு பதிலளிக்க

“இதோ பாரு ஜெஸ்ஸி அந்த மேக்னாவோட கேஸ் முடிஞ்ச விஷயம் திரும்ப திரும்ப அதை ஆராய்ந்து பார்க்க போய் வீணாக வம்பில் மாட்டிக்காதே உன் நல்லதுக்கு தான் சொல்லுறேன் இனி மறுபடியும் நீ அந்த மேக்னாவை பார்த்து பேசிட்டு இருந்ததா கேள்விப்பட்டா நடக்குறதே வேற ஜாக்கிரதை!” பதிலுக்கு அவரும் அவளை நன்றாக அதட்டி பேசி விட்டு அழைப்பை துண்டித்தார்.

“டேய் சித்! என்னடா இது?” ஜெஸ்ஸி குழப்பமாக சித்தார்த்தைப் பார்த்து கேட்க அவனோ அவளை விட பன்மடங்கு அதிர்ச்சியோடும், குழப்பத்தோடும் தன் கையில் இருந்த போனை வெறித்துப் பார்த்து கொண்டு இருந்தான்.

“நாம மேக்னாவை பார்த்ததும், பேசுனதும் ஏ.சி.பி க்கு எப்படி ஜெஸ்ஸி தெரிய முடியும்? அப்படியே தெரிந்து இருந்தாலும் எதற்காக அவர் இவ்வளவு மிரட்டி அந்த விஷயத்தை விடச் சொல்லணும்? எனக்கு என்னவோ இதில் மர்மமான நிறைய விஷயங்கள் இருக்குற மாதிரி இருக்கு” சித்தார்த்தின் கூற்றுக்கு ஆமோதிப்பாக தலை அசைத்தவள்

“எனக்கும் அப்படி தான் தோணுது சரி நீ முதல்ல வண்டியை இங்க இருந்து எடு வீட்டுக்கு போகலாம்” என்று கூற சித்தார்த் அவளை ஆச்சரியமாக பார்த்தான்.

“அப்போ மேக்னா!”

“இப்போதைக்கு அந்த டாபிக் வேண்டாம் வண்டியை எடு” சற்று கண்டிப்பாக அவனை பார்த்து கூறியவள் அவனுடைய பைக்கில் ஏறி அமர்ந்து கொண்டாள்.

ஜெஸ்ஸியின் வீடு வந்து சேரும் வரை இருவரும் ஒருவருக்கொருவர் பேசிக் கொள்ளவே இல்லை.

தன் வீட்டின் அருகில் வந்து சேர்ந்த பின்பும் அந்த குழப்பத்தில் இருந்து மீள முடியாமல் ஜெஸ்ஸி நிற்க சித்தார்த்தோ அடுத்து என்ன செய்வது என்று யோசித்து கொண்டு நின்றான்.

“சரி ஜெஸ்ஸி நீ உள்ளே போ! அப்புறம் இதை பற்றி நம்ம பேசலாம்”

“இல்லை சித்தார்த்! நம்ம இனி இதைப் பற்றி பேச வேண்டாம் அந்த வழக்கு மர்மமாக இருந்தால் அப்படியே இருந்துட்டு போகட்டும் அது தான் அந்த பொண்ணே இதைப் பற்றி பேச விருப்பமில்லைன்னு சொல்லுறா ஏ.சி ஸாரும் வார்ன் பண்ணுறாரு வேண்டாம் சித்தார்த் விட்டுடு”

“………..”

“என்னடா எதுவும் பேசாமல் இருக்க?”

“ஒண்ணும் இல்ல சரி ஜெஸ்ஸி இனி இதைப் பற்றி நான் உன் கிட்ட பேசல ஓகே வா? போ போய் ரெஸ்ட் எடு” என்றவாறே ஜெஸ்ஸியைப் பார்த்து ஒரு சிறு தலை அசைப்புடன் தன் பைக்கை எடுத்துக் கொண்டு புறப்பட்டான் சித்தார்த்.

அவனது பார்வை மொத்தமும் வீதியில் இருந்தாலும் அவனது கவனமோ அவனிடம் இருக்கவில்லை.

‘யாருக்கும் தெரியாமல் நானும், ஜெஸ்ஸியும் மேக்னாவை சந்தித்தது எப்படி ஏ.சி க்கு தெரியக்கூடும்? ஏ.சி நேரடியாக இந்த விஷயத்தில் தலையிடுறாருனா கண்டிப்பாக இதில் ஏதோ ஒரு குழப்பம் இருக்கு’
அவனது மனம் ஏனோ இந்த எண்ணத்தில் வெகு உறுதியாக நம்பிக்கை கொண்டு இருந்தது.

அந்த சிந்தனையோடே தன் வீட்டிற்கு வந்து சேர்ந்தவன் சாப்பிடுகிறேன் என்ற பெயரில் இரண்டு, மூன்று உணவுப் பருக்கைகளை கொறித்து விட்டு தன்னறைக்குள் வந்து அடைந்து கொண்டான்.

அவனது மனதின் ஒரு புறம் இந்த விடயத்தை இதோடு விட்டு விடலாம் என்று அவனை உந்த கனவுகளை சுமந்து இருக்கும் இன்னொரு மனமோ இதைப் பற்றி ஆராய்ந்து பார்த்தே ஆக வேண்டும் என்று அவனை பாடாய்ப்படுத்திக் கொண்டு இருந்தது.

இரண்டு வகையான மனநிலைகளுக்கும் இடையில் சிக்கி கொண்டு சித்தார்த் இங்கே தன் உறக்கத்தை தொலைத்து விழித்து இருக்க மறுபுறம் மேக்னா சித்தார்த் வராமல் போனதற்கான காரணம் தெரியாமல் தவித்துக் கொண்டு இருந்தாள்.

எப்போதும், யாருக்காகவும், எதற்காகவும் இத்தனை தூரம் தவித்துப் போவதை அவள் விரும்புவதில்லை.

ஏனென்றால் அந்த தவிப்பு இறுதியில் அவளை வேறொரு ரூபத்திற்கு தள்ளி விட்டு விடும்.

இப்போதும் அப்படி எதுவும் நடந்து விடக்கூடாது என்ற மனநிலையோடு மேக்னா வெகு சிரமப்பட்டு தன் கண்களை மூட அந்த மூடிய விழிகளுக்குள் அவளது கடந்த கால கசப்பான நிகழ்வுகளே காட்சியாய் விரிந்தது.

இது நாள் வரை மலைப் பாங்கான பிரதேசத்தை மாத்திரமே பார்த்து வளர்ந்த மேக்னா சென்னையின் அமைப்பை பார்த்தே ஒரு கணம் வியந்து போனாள்.

பல அடுக்குமாடி கட்டங்களும், பெயருக்கு அங்கொன்றும் இங்கொன்றுமாக மரங்களும் கொண்டு இருந்த அந்த சூழலே அவளுக்கு முற்றிலும் புதிதாக இருந்தது.

புதிய இடம், புதிய மனிதர்கள் என அந்த சூழலுக்கு ஏற்ப தன்னை மாற்றிக் கொண்டவள் ஒரு சில மாதங்களில் அந்த இடத்தோடு முற்றிலும் ஒன்றிப் போய் இருந்தாள்.

அதிலும் அவள் கொண்டிருந்த ராணியுடனான ஒரு பாசப் பிணைப்பு அவளை பழைய நினைவுகளை பற்றி நினைத்து பார்க்கவும் விடவில்லை.

மேக்னா அவரை தன் தாய்க்கு இணையாக எண்ணி இருந்தாள்.

தன் கவலைகளை மறந்து சந்தோஷமாக வாழக் கூடிய ஒரு மனதிற்கு ஆறுதலான வாழ்க்கை அவளுக்கு கிடைத்து இருந்தாலும் அந்த வாழ்க்கையின் ஆயுட்காலம் நீடித்து நிலைக்கவில்லை.

அவளது அந்த சந்தோஷம் நிலை இல்லாமல் போனதற்கு காரணம் ப்ரியா.

மேக்னா சென்னை வந்து சேர்ந்து இரண்டு, மூன்று வருடங்கள் கடந்து இருந்த நிலையில் அந்த இல்லத்தில் அவளுக்கு கிடைத்த முதல் நட்பே ப்ரியா.

அவளும் மேக்னாவை போலவே சிறு வயதில் தன் தாய், தந்தையை இழந்தவள்.

அவர்கள் இருவரும் ஒரே வயதினராக இருந்ததால் என்னவோ இருவருக்கும் இடையே ஒரு புரிதலுடன் கூடிய நட்பு நிலவியது.

ஒன்றாக சாப்பிட்டு, ஒன்றாக விளையாடி, ஒன்றாக பாடசாலைக்கு சென்று வருவது என அவர்கள் இருவரும் எப்போதும் ஒன்றாகவே வலம் வருவர்.

ராணி கூட ஒரு சில தடவைகள் இவர்கள் இருவரது நட்பை பற்றி மற்றைய பிள்ளைகளுக்கு எடுத்துக் காட்டாக கூறுவதுண்டு.

இப்படி தன் கடந்த காலத்தை மறந்து அந்த சிறு பிள்ளைகள் இருவரும் சந்தோஷமாக இருந்த வேளை ஒரு நாள் திடீரென்று ப்ரியா அந்த ஆசிரமத்தில் இருந்து இல்லாமல் போனாள்.

இரவு நேரம் வீட்டுப் பாடங்களை முடித்து விட்டு சிறிது நேரம் ப்ரியாவுடன் பேசி விட்டு தூங்கச் சென்ற மேக்னா அடுத்த நாள் காலை தன் தோழியைக் காண அவளது அறைக்குச் செல்ல அவளோ அங்கு இருக்கவில்லை.

ஆசிரமம் முழுவதும் ப்ரியாவைத் தேடியவள் அவளை காணாமல் போகவே பதட்டத்துடன் ராணியிடம் வந்து இதைப் பற்றி முறையிட்டாள்.

சிறிது நேரம் பதில் எதுவும் பேசாமல் அவளை பார்த்து கொண்டு நின்றவர் புன்னகையோடு அவள் முன்னால் வந்து நின்று
“அவ அவங்க சொந்தக்காரங்க வந்து கூப்பிடவும் அவங்க கூடவே போயிட்டாடா மேக்னா இனி இங்கே வர மாட்டா நீ அவளை பற்றி கவலைப்படாமல் உன் படிப்பில் கவனம் செலுத்து சரியா?” என அவளது தலையை வருடிக் கொடுத்தவாறே கேட்கவும்

சற்று சிந்தனையோடு அவரது முகத்தை பார்த்து கொண்டு நின்றவள் கண்கள் கலங்க
“அப்போ இனி ப்ரியா என்னை பார்க்கவும் வர மாட்டாளா?” என்று கேட்க அவரோ பதில் பேச முடியாமல் தலை குனிந்த வண்ணம் நின்றார்.

“சொல்லுங்க ம்மா ப்ரியா வர மாட்டாளா?”

“இல்லை மேக்னா வர மாட்டா” அவளது முகம் பார்க்காமல் வேறு எங்கோ பார்த்த வண்ணம் பதில் கூறினார் ராணி.

“அப்போ நா…நான் அவ பெஸ்ட் பிரண்ட் இல்லையா? என்னை விட்டுட்டு அவ போ…போக மாட்டேன்னு சொன்னது எல்லாம் பொய்யா ம்மா?” கண்களில் நீர் தாரை தாரையாக வடிய கேட்ட மேக்னாவை தன்னோடு சேர்த்து அணைத்துக் கொண்டவர்

“நீ இப்படி எல்லாம் அழக் கூடாது மேக்னா என்னால நீ அழறதை பார்க்க முடியாது ப்ரியா இல்லைன்னா என்ன இன்னும் இங்க எவ்வளவு பேர் இருக்காங்க? நீ அவங்க எல்லார் கூடவும் பேசும்மா இப்படி எல்லாம் அழாதே!” என்று கூறவும் கோபமாக அவரது அணைப்பில் இருந்து விலகி நின்றவள் அழுது கொண்டே அந்த இடத்தில் இருந்து ஓடிச்சென்றாள்.

“மேக்னா! நில்லும்மா! மேக்னா!” ராணி அவளின் பின்னாலேயே அவளை அழைத்து கொண்டு செல்ல அவளோ வேகமாக தனக்கென ஒதுக்கப்பட்ட அறைக்குள் வந்து அடைந்து கொண்டாள்.

தன் தாய், தந்தையின் இறப்பை கண் முன்னால் பார்த்து எந்தளவிற்கு அவள் வேதனை கொண்டாலோ அதை விடப் பன்மடங்கு வேதனை இப்போது அவளை சூழ்ந்து கொண்டது.

அழுதழுது கண்களும், முகமும் சிவந்து போக அந்த அறைக்குள்ளேயே அடைந்து கிடந்தவள் அன்றைய நாள் முழுவதும் ஒரு சிறு துளி உணவேனும் சாப்பிடவில்லை.

ராணி பலமுறை வந்து கதவைத் தட்டியும் திறக்காமல் இருந்தவள் சிறிது நேரத்தில் அப்படியே உறங்கிப் போனாள்.

நன்றாக ஆழ்ந்து உறங்கிக் கொண்டிருந்த மேக்னா நள்ளிரவு நேரம் ஒரு அழு குரல் சத்தம் கேட்டு மெல்ல எழுந்தமர்ந்து சுற்றிலும் திரும்பி பார்த்தாள்.

அவள் இருக்கும் அறையானது அந்த ஆசிரமத்தின் பின் பக்க வாயிலை சற்று ஒட்டினாற் போன்ற பகுதி.

பகல் முழுவதும் ப்ரியாவை நினைத்து அழுது கொண்டே இருந்தவள் அந்த அறையின் ஜன்னலை அடைக்க மறந்து இருக்க இப்போது அந்த அழு குரல் சத்தம் கேட்டு மெல்ல அந்த ஜன்னலினூடாக வெளியே எட்டிப் பார்த்தாள்.

அந்த பின் பக்க வாயிலை ஒட்டி சிறிது தூரம் தள்ளி ராணி பதட்டத்துடன் தன் கையை பிசைந்து கொண்டு நிற்க அவரருகில் ஒரு நபர் ஏதோ பேசிக் கொண்டு நின்றார்.

அவர்கள் இருவரும் சற்று இருளான பிரதேசத்தில் பேசிக் கொண்டு நின்றதால் மேக்னாவிற்கு ராணியின் தோற்றம் மாத்திரம் தெரிந்ததே தவிர அந்த நபரது முகத் தோற்றம் சரியாக தென்படவில்லை.

இந்த நேரத்தில் அவர்கள் என்ன பேசுவார்கள் என்று எண்ணிக் கொண்டு மேக்னா அவர்களை பார்த்து கொண்டு நிற்க ஒரு சில நிமிடங்கள் கழித்து இன்னும் இரண்டு நபர்களோ அவர்களை நோக்கி அரை குறை மயக்கத்தோடு அழுது கொண்டிருந்த ப்ரியாவை இழுத்து கொண்டு வந்து நின்றனர்.

“ப்ரியா!” அதிர்ச்சியோடு மேக்னாவின் உதடுகள் ப்ரியாவின் பெயரை உச்சரிக்க அவள் கண்களோ தான் காணும் காட்சியை நம்ப முடியாமல் தன் தோழியின் முகத்திலேயே நிலை குத்தி நின்றது.

ராணி சுற்றிலும் ஒரு தடவை திரும்பி பார்த்து விட்டு அவர்களை போகுமாறு சைகை செய்ய அவர்களும் ப்ரியாவை தங்களுடன் அழைத்து கொண்டு சென்றனர்.

‘ப்ரியாவை அம்மா எங்கே அனுப்புறாங்க? காலையில் என் கிட்ட ப்ரியா இங்கே இல்லைன்னு தானே சொன்னாங்க!’ மேக்னாவின் மனதின் ஒரு புறமோ முன்னுக்குப்பின் முரணாக நடந்த சம்பவங்களை எண்ணி குழப்பம் கொள்ள மறுமனமோ ப்ரியா அங்கிருந்து செல்வதை பார்க்க முடியாமல் அந்த இடத்தை நோக்கி அவளைச் செல்ல தூண்டியது.

அவசரமாக அந்த அறையின் கதவை திறந்து கொண்டவள்
“ப்ரியா!” என கத்தி கொண்டே அந்த இடத்தை நோக்கி விரைந்து ஓடிச்சென்றாள்.

யாரும் அந்த இடத்தில் இல்லை என்று எண்ணிக் கொண்டு நின்ற ராணி மேக்னாவின் குரல் கேட்டு அதிர்ச்சியாக திரும்பி பார்க்க அவளோ மூச்சிறைக்க அவரை நோக்கி ஓடி வந்து கொண்டிருந்தாள்.

வேகமாக ஓடி வந்தவள் அவரைத் தாண்டி செல்லப் போக அவசரமாக அவளது கையை பிடித்து தடுத்தவர்
“மேக்னா! இந்த நேரத்தில் நீ எங்கே பண்ணுற? இந்த பக்கம் எல்லாம் உங்களை வரக்கூடாதுன்னு சொல்லி இருக்கேன் இல்லையா?” சிறு கண்டிப்போடு கேட்க அவளோ கோபமாக அவரது கையில் இருந்து தன் கையை உருவி எடுத்துக் கொண்டாள்.

“மேக்னா!”

“என் கூடப் பேசாதீங்க! காலையில் ப்ரியா அவ சொந்தக்காரங்க கூட போயிட்டாங்கன்னு என் கிட்ட நீங்க பொய் தானே சொன்னீங்க” கண்கள் கலங்க கேட்ட மேக்னாவை தன்னோடு அவர் அணைத்துக் கொள்ளப் போக அவளோ அவரது கைகளுக்கு எட்டாமல் சிறிது தூரம் விலகி நின்றாள்.

“மேக்னா! இங்க பாரும்மா!” கோபத்துடனும், ஆற்றாமையுடனும் கண்கள் கலங்க முகம் திருப்பி நின்றவள் முகத்தை தன் புறமாக திருப்பியவர்

“ப்ரியா பாதுகாப்பான ஒரு இடத்திற்கு தான் போய் இருக்கா நீ கோபப்படுற அளவுக்கு நான் எதுவும் பண்ணல டா” சற்று கெஞ்சலாக கூறவும்

குழப்பமாக அவரை நிமிர்ந்து பார்த்தவள்
“அப்போ ப்ரியா இருக்குற இடத்திற்கு என்னை கூட்டிட்டு போங்க” என்று கூறவும் அவரோ பதில் எதுவும் பேசாமல் தலை குனிந்து நின்றார்.

“கூட்டிட்டு போங்க ம்மா ப்ளீஸ்!” கெஞ்சலாக கேட்ட மேக்னாவை பார்த்து மறுப்பாக தலை அசைத்தவர்

“அது மட்டும் முடியாது மேக்னா இனி இந்த இடத்திற்கு நீ வரக்கூடாது அந்த பாவி தனபாலன் கண்ணில் நீ படக்கூடாது நான் உன் நல்லதுக்காக தான் சொல்லுறேன் புரிஞ்சுக்கோம்மா நீ என் பொண்ணு மாதிரி உன்னை அந்த பாழுங்கிணற்றுக்குள் நான் தள்ளி விட மாட்டேன்” என்று கூறவும் அவளோ அவர் கூறியதன் அர்த்தம் புரியாமல் திரு திருவென விழித்துக் கொண்டு நின்றாள்.

அவளது குழப்பமான முகத்தை பார்த்து புன்னகத்து கொண்ட ராணி
“உனக்கு இப்போ எதுவும் புரியாமல் இருக்குறதே நல்லது மேக்னா இனி என்னை கேட்காமல் இங்கே எல்லாம் வரக்கூடாது இப்போ நீ உன் ரூமுக்கு போ” என்றவாறே அவளை அவளது அறைக்குள் விட்டு விட்டு செல்ல அவளோ இன்னும் தன்னை சுற்றி என்ன நடக்கிறது என்று புரியாமல் தவிப்போடு நின்று கொண்டிருந்தாள்.

திறந்து கிடந்த தன் அறை ஜன்னலின் அருகில் சென்று நின்ற மேக்னாவின் கண்களோ அந்த பின் பக்க வாயிலையே வெறித்துப் பார்த்து கொண்டு இருந்தது.

அதன் பிறகு வந்த நாட்கள் முழுவதும் மேக்னா யாரிடமும் பேசாமல் தன்னறைக்குள் ஒரு மூலையிலேயே ஒடுங்கி போய் இருந்தாள்.

ராணியும், மற்ற பிள்ளைகளும் பலமுறை அவளிடம் பேச முயன்றும் அவள் யாரிடமும் எதுவும் பேச முனையவில்லை.

இப்படியாக ஒரு வாரம் கடந்து இருந்த நிலையில் மறுபடியும் மேக்னாவிற்கு அந்த அழுகுரல் சத்தம் கேட்டது.

அந்த சத்தம் கேட்டு திடுக்கிட்டு தன் தூக்கத்தில் இருந்து எழுந்தவள் அவசரமாக தன் அறையில் இருந்த ஜன்னலை திறந்து பார்த்தாள்.

இப்போதும் அன்று போல ராணி ஒரு ஆடவனுடன் பேசிக் கொண்டிருக்க வேறு இரு நபர்கள் இன்னொரு பெண் பிள்ளையை தங்களுடன் இழுத்து கொண்டு சென்றனர்.

மறுபடியும் இதே போன்ற நிகழ்வுகள் அடிக்கடி அங்கே நடப்பதை பார்த்து மேக்னா முற்றிலும் கலங்கிப் போனாள்.

அங்கு நடப்பது எதுவும் சரி இல்லை என்று அவளுக்கு புரிந்தாலும் அந்த நிகழ்வுகளின் பின்னணி என்னவென்று அவளுக்கு புரியவில்லை.

தான் அந்த ஆசிரமத்திற்கு வந்த புதிதில் எப்படி யாரிடமும் ஒன்றாமல் விலகி இருந்தாலோ அப்படியான ஒரு நிலைக்கு மீண்டும் தன்னை மாற்றிக் கொண்டாள் மேக்னா.

அவள் என்ன தான் எல்லோரையும் தவிர்த்து தூரம் விலகி போக நினைத்தாலும் விதியோ மறுபடியும் தனபாலன் என்பவனின் ரூபத்தில் அவளை ஆக்கிரமிக்க காத்திருந்தது.

தனபாலன் சென்னையில் பல கட்டப்பஞ்சாயத்துகளை நடத்தும் ஒரு முக்கிய அரசியல் புள்ளி.

அந்த ஆசிரமத்தில் நடக்கும் மர்மமான இரவு நேர சம்பவங்களுக்கு ஒரு காரண கர்த்தாவும் கூட.

அவனது கண்களில் மேக்னா பட்டது அவளது கெட்ட நேரமோ இல்லை நல்ல நேரமோ இன்று வரை மேக்னாவிற்கு அது புரியாத புதிரே.

தனபாலனை முதன்முதலாக சந்தித்த நேரம் மேக்னா அறிந்திருக்கவில்லை இது வரை காலமும் நேர்கோட்டில் சென்ற தன் வாழ்க்கை இனி ஒரு கரடுமுரடான பாதையில் பயணிக்க காத்திருக்கிறது என்பது.

தன்னுடைய கல்லூரி படிப்பை முடித்து ஒரு வேலையில் சேரும் வரை ஆசிரமமும், கல்லூரியுமே தன் உலகம் என வாழ்ந்து வந்த மேக்னா அதன் பிறகே தன்னை சுற்றி உள்ள உலகத்தை, அதன் நிதர்சனத்தை உணர்ந்து கொண்டாள்.

தன்னுடைய கசப்பான, மறக்க நினைக்கும் கடந்த கால நிகழ்வுகளில் மூழ்கி இருந்தவள் காலையில் சிறைச்சாலையில் ஒலிக்கும் அவர்களது வழமையான மணி ஓசை கேட்டு தன் படுக்கையில் இருந்து எழுந்து அமர்ந்தவாறே சுற்றிலும் திரும்பி பார்த்தாள்.

சூரிய வெளிச்சம் அப்போது தான் மெல்ல மெல்ல அந்த இடத்தை நிறைத்துக் கொள்ள ஆரம்பித்து இருந்தது.

வழக்கம் போல தன் காலைக்கடன்களை முடிப்பதற்காக மேக்னா தன் சிறை அறையில் இருந்து வெளியேற மறுபுறம் சித்தார்த் அவசர அவசரமாக தயாராகி தன் பைக்கை எடுத்துக் கொண்டு யசோதாவின் அழைப்பையும் கவனிக்காதவனாக வேகமாக தன் வீட்டில் இருந்து புறப்பட்டு சென்றான்……

error: Content is protected !!